பாட்டியும் பேரனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 18, 2015
பார்வையிட்டோர்: 21,541 
 
 

யத்கிஞ்ச ப்ராஹ்மணோத்தமம்

’ப்ராஹ்மண-பந்து’

[‘யத்கிஞ்ச ப்ராஹ்மணோத்தமம்’ என்பது அந்தணர்கள் தம் குலதர்மமாகப்பட்ட, வள்ளுவர் குறிக்கும் அறுதொழில்களையும், இந்த நாளிலும் தம்மால் இயன்ற அளவு செய்து வருவது அவர்களுக்கு உத்தமாக அமையும் என்பதாகும்.]

“பாட்டி பாட்டீ, நோக்கு நான் ஹெல்ப் பண்ணறேன்”, என்றான் ஆறு வயதுப் பேரன். “நீதான் நேக்கு சொல்லிக்கொடுத்திருக்கையே!”

பாட்டியின் கையை பேரன் பிடித்துக்கொள்ள, இருவரும் சேர்ந்து ஹாலில் உயரே மூங்கில் கொடியில் உலர்த்தியிருந்த பாட்டியின் மடிப்புடவையை லாவகமாக ஒரு நீண்ட மூங்கில் கழியால் மேலே படாமல் எடுத்துவிட, பாட்டி, “இனி நான் பாத்துக்கிரேண்டா கண்ணா!”, என்றாள். அம்மா முகவாய்க்கட்டையை ஒருதரம் தன் தோளில் இடித்தவாறே கிச்சனுக்குள் சென்றாள். அப்பா வழக்கம்போல் சோஃபாவில் உட்கார்ந்தபடி பேப்பரில் மூழ்கியிருந்தார்.

பாட்டி மடியாக ஸ்நானம் பண்ணியவுடன், பேரனும் ஸ்நானம்பண்ணிவிட்டு ரெடியாக, இருவரும் அந்த சின்ன பூஜை அறைக்குள் சென்றனர்.

“பாட்டி, இன்னிக்கு ஞாயித்துக்கிழமை. அதனால, நான் ஸந்த்யா வந்தனம் பண்ணறதை நீ கூட இருந்து பார்க்கணும்”. “ஆட்டும்டா கண்ணா”, என்றாள் பாட்டி. பேரனின் ஸந்தியில் பாட்டி சிற்சில உச்சரிப்பு திருத்தங்கள் செய்தபோது, “எப்படி பாட்டி உனக்கு இதெல்லாம் தெரியும்? தாத்தா வாத்யாரா இருந்தார்னு சொல்வியே, அவர் உனக்கு சொல்லிக்கொடுத்தாரா?” என்றான் பேரன். “நானும் நாளைக்குத் தாத்தா மாதிரி ஆவேன், அதுதான் நேக்குப்பிடிக்கும்”.

பின்னர், பாட்டி ஷ்லோகங்கள் சொல்ல, பேரன் அவற்றை அழகாகத் திருப்பிச் சொல்ல பூஜையறை களைகட்டியது. இதற்குள் அப்பாவும் குளித்துவிட–அம்மா காலையிலேயே வழக்கம்போல் பாட்டியைத் திட்டியபடி குளித்துவிட்டிருந்தாள்–பாட்டியும் பேரனும் தரையில் உட்காந்துகொண்டு சாப்பிட்டனர். அதன்பின், அம்மாவும் அப்பாவும் டைனிங் டேபிளில் அமர்ந்து அரட்டையடித்தாவாறே சாப்பிட்டு முடிக்க, பேரன் அதுவரை பாட்டியிடம் கதைகள் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, அம்மாவின் “போதும் கதை கேட்டது, போய் ஹோம்வர்க் பண்ணு” குரல் ஒலிக்க, படிக்கச் சென்றான்.

மாலை அம்மாவும் அப்பாவும் ஷாப்பிங் சென்றுவிட, பாட்டியும் பேரனும் கோவிலுக்குப் போனார்கள். பாட்டி பேரனை வழக்கம்போல் ஒவ்வொரு ஸந்நிதியாக அழைத்துப்போய், அந்தந்த ஸ்வாமிகளுக்குரிய ஷ்லோகங்களையும் கதைகளையும் சொன்னாள். தீபாராதனை பார்த்துவிட்டு ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு, பேரன் கையில் விபூதி-குங்குமம் ஈரமாகக் கொண்டுவந்தபோது அப்பா-அம்மா இன்னும் வீடு திரும்பவில்லை என்று தெரிந்தது. பாட்டி தன் ஜபமாலையை உருட்டத்தொடங்க, பேரன் கொஞ்சநேரம் பாட்டியிடம் கதைகேட்டுவிட்டு, ஸ்கூல் பாடங்களை உரக்கப் படிக்க ஆரம்பித்தான்.

அம்மா பாட்டியைக் கரித்துக்கொட்டுவது வழக்கம்தான் என்றாலும் ஒரு நாள் இரவு மென்குரலில் அப்பாவிடம் தீர்மானமாகச் சொன்னாள்:

“இதப்பாருங்கோ, இதுக்கு ஏதாவது வழி பண்ணியே ஆகணும். என்னால இப்படி கஷ்டப்பட முடியாது. இந்தப்பிள்ளையும் உங்கம்மாவையே சுத்திச்சுத்தி வரது, நானும் தாத்தா மாதிரி வேத வாத்யாராவேன்னு இப்பவே பெருமையா சொல்லிக்கறது. தான் கண்ணைமூடறதுக்குள்ள பேரனுக்குப் பூணல் போடனும்னு சொன்னா உங்கம்மா. நீங்களும் சரின்னு ஆறு வயசுலேயே போட்டுவெச்சேள். இப்ப இந்தப்பிள்ளை நம்பளையே அலக்ஷியம் பண்ணறது. ஏம்மா உனக்கு பாட்டி மாதிரி ஸ்தோத்ரம்லாம் தெரியலே, நீ ஏன் பூஜை பண்றதில்ல, அப்பா ஏன் ஸந்திகூடப் பண்ணமாட்டேன்றா-ன்னு கேள்விவேற. அப்படியே தாத்தாவை உரிச்சு வெச்சிருக்கு. எல்லாம் அந்தக்கிழம் பண்றவேல. நாம் ரெண்டுபேரும் ஒடியாடி ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கறதால கிழம் சொகுசா அனுபவிக்கிறது. இல்லேன்னா என்னிக்கோ ஓல்டேஜ் ஹோம்ல சேர்த்திருங்கோன்னு சொல்லியிருப்பேன்.”

“இவ்வளவுநாள் தள்ளினே. அம்மாக்கு வயசு எண்பதைத்தாண்டியாச்சு. வியாதி-வெக்கை இல்லேனால்லும் எவ்ளோ வீக்கா இருக்கா பாரு. எதோ ஒரு ஸங்கல்பத்ல மற்றவாளுக்கு சுமையா இருக்கக்கூடாதுன்னு தன் கார்யத்த தானே பார்த்துக்கறா. அந்த அளவுக்கு உனக்கும் எனக்கும் வசதிதானே? நம்ப சம்பாத்யத்ல குழந்தையை எஞ்ஜினீரிங், சீ.ஏ.ன்னு படிக்கவெக்க முடியாதுதான். நடக்க நடக்க பார்த்துப்பமே.”

அவர்கள் அதிர்ஷ்டமோ என்னவோ பாட்டி அடுத்த வாரமே ஒருநாள் ராத்ரித் தூக்கத்திலேயே தன் உடலை நீத்தாள். இவர்களுக்கு ஒரு சொல்லமுடியாத ரிலீஃப். பேரனால்தான் தாங்கமுடியவில்லை.

பாட்டியின் படுக்கையில் தலையணை அடியில் அப்பா-அம்மா ஒரு கவரைப் பார்த்தார்கள். பிரித்தபோது அதில் இரண்டு லக்ஷம் ரூபாய்க்கு அப்பா பேரில் ஒரு செக் இருந்தது. கூடவே ஒரு சின்னக்கடுதாசி, ஒரு மாதம் முந்தய தேதியிட்டு. “ப்ரிய புத்ர, ஸ்னுஷா! உங்களுக்கு அதிக ஷ்ரமமாக, பாரமாக இல்லாமல் ஷீக்ரமே கண்ணைமூடிவிடவேணுமின்னுதான் அனுதினமும் பகவானைப் ப்ரார்த்தனை பண்ணினேன். உங்கப்பா ஆசீர்வாதத்தால் அது விரைவில் நிறைவேறும்னு நினைக்கிறேன். உங்கப்பா சேமிப்புடன் நான் சிறுகச்சிறுக சேர்த்து வைத்திருந்த இந்தப் பணத்தையும், லாக்கரில் உள்ள என் பத்துப்பவுன் நகைகளையும் நீங்கள் இஷ்டம்போல் உபயோகித்துக்கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன். என் பேரனை,–அவன் விரும்பினால் மட்டுமே–அவனது ஏழாவது வயதில் ஒரு வேதபாடஷாலையில் சேர்த்து அவன் (தன் தாத்தா போல) தொடர்ந்து வேத அத்யயனம் பண்ண நீங்கள் அனுமதிக்கவேண்டும். செய்வீர்கள் என்று நம்புகிறேன்.”

பேரனுக்குப் பாட்டியின் பணமோ கடிதமோபற்றி ஒன்றும் தெரியாது. பாட்டியின் அந்திம காரியங்கள் முடிந்ததும் அப்பாவின் முன்னிலையில் அம்மா ஒரு நாள் மாலை பேரனிடம் சொன்னாள்: “கண்ணா, கவலைப்படாதே. உனக்கு நாங்கள் இருக்கிறோம்.”

“போம்மா, எனக்கு பாட்டிதான் வேணும். உனக்கு அவா மாதிரி கதை சொல்லத்தெரியுமா? நாலு ஷ்லோகம் சொல்லித்தரத் தெரியுமா? கோவிலுக்கு கூடவந்து எனக்கு சொல்லிக்கொடுக்க முடியுமா? யாருக்கு வேணும் நீயும் இந்த ஸ்கூல்லயும் சொல்லித்தற நர்சரி ரைம், அலைஸ் இன் வொண்டர்லாண்ட், மடில்டா கதைலாம்?”

“அதுதாண்டா இனிமே நமக்கு லைஃப் கண்ணா! நீ நல்லாப்படிச்சு, எஞ்ஜினீரிங் காலேஜ் சேர்ந்து கம்ப்யூட்டர் எஞ்ஜினீயர் ஆகணும். அப்போதான் எங்களமாதிரி இல்லாம, கைநிறைய சம்பாதிக்கலாம். உன்கூடப்படிக்கற ஜனனியோட அண்ணா மாதிரி ஃபாரின் போகலாம், புரிஞ்சுதா?” என்றனர் அம்மாவும் அப்பாவும் கோரஸாக.

“அதெல்லாம் முடியாது. நான் தாத்தா மாதிரி வேத பாடசாலைல படிச்சு வேதம்தான் சொல்வேன். அதுல உங்களுக்கென்ன கஷ்டம்?” என்றான் பேரன்.

“கிழம் தப்பாம ஒரு வாரிசை உருவாக்கிட்டுத்தான் போயிருக்கு”, என்றாள் அம்மா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *