பாட்டியின் பெட்டி

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 13, 2013
பார்வையிட்டோர்: 9,645 
 
 

இந்த அறுபதாவது வயதில் தனியே நின்று ஒரு வீட்டை ஒழித்துக் காலி செய்து கொடுப்பது என்பது கடினமான காரியம் தான். நான் பிறந்து வளர்ந்த கிராமத்து வீட்டைத்தான் இப்போது காலி செய்து கொண்டிருக்கிறேன். அதை விற்பதா? இல்லை வாடகைக்கு விடுவதா என்பன போன்ற விஷயங்கள் இன்னும் தீர்மானிக்கப் படாத நிலையிலிருந்தன. போன மாசம் தன்னுடைய தொண்ணூறாவது வயது வரை அப்பா இந்த வீட்டில் தான் இருந்தார் அம்மாவோடு. இப்போது அம்மா தனியாகி விட்டாள் மேலும் அவளுக்கும் வயதாகிவிட்டதல்லாவா? அதனால் எங்களோடு சென்னை வர சம்மதிது விட்டாள்.

எல்லாப் பாத்திரங்களையும் விற்க ஏற்பாடு செய்தாயிற்று(செம்பு, பித்தளை). எனக்கு ஒன்றிரண்டையாவது வைத்துக் கொள்ள ஆசைதான். என்ன செய்ய? நகரத்துக் கூடுகளில் இவைகளுக்கு இடமிருப்பதில்லையே. கடையம் கிராமத்துக்கும் எனக்குமான தொடர்பு நான் கல்லூரி படிக்க சென்னை வந்ததோடு முடிந்து போனது. அதற்குப் பிறகு நான் லீவுக்கு கடையம் செல்லும்போதெல்லாம் ஒரு விருந்தாளியாகத் தான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் இந்த அக்கிரகாரத்து வீடு எனக்கு எப்போதும் ஏதோ ஒரு புதையலையோ ரகசியத்தையோத் தனக்குள் அடக்கி வைத்திருப்பது போலவே தோன்றும். அதிலும் அந்தப் பாவுள்! அது எனக்கு ஒரு புதையல் களஞ்சியமாகவே தோன்றியிருக்கிறது அந்த வயதில்.இப்போது ஸ்டோர் ரூம் என்று அழைக்கப் படுகிற அறையைத்தான் எங்கள் ஊரில் பாவுள் என்பார்கள்.

அதில் தான் வருஷத்துக்குத் தேவையான புளி , எண்ணெய் ,பருப்பு வகைகள் முதலியன பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும். அந்தந்த சீசனில் கிடைப்பவற்றை வாங்கி பக்குவப்படுத்தி , பத்திரப் படுத்தி வைத்துக் கொள்வது வாழ்க்கை முறையாக இருந்தது அப்போது. இப்போது பொருட்கள் மலிந்து விட்டன. எந்த சீசனிலும் எதுவும் கிடைக்கும். எல்லாம் பணம்.உங்களிடம் நிறையப் பணமிருந்தால் செப்டம்பர் மாதத்தில் மார்க்கெட்டில் மாங்காய் வாங்கலாம். யதா சௌஹர்யம் ததாஸ்து.

சிறு வயதில் எனக்கு அந்தப் பாவுளுக்குள் நுழைவது என்பது கிட்டத்தட்ட ஒரு அதிசய சுரங்கத்தில் நுழைவது மாதிரி. ஏனென்றால் நினைத்த போதெல்லாம் உள்ளே போக முடியாத படி கதவு பூட்டி சாவி அம்மாவிடம் இருக்கும். அவளுக்கு ஏதாவது எடுத்துத்தர வேண்டுமானால் தான் இடுப்பிலிருந்த சாவியை எடுத்து , போய் எடுத்து வா என்ற கட்டளை பிறக்கும்.அந்த நொடிக்காகவே நான் காத்திருப்பேன். கதவைத் திறந்து உள்ளே நுழையும் போதே மஞ்சள், கருப்பட்டி, மண்ணெண்ணெய் என்று எல்லாம் கலந்து ஒரு வாசனை வீசும். எதிர்பார்க்காத ஏதோ ஒன்று நடக்கும் போது மனது அடித்துக் கொள்ளுமே அது மாதிரி திக் திக் என்று அடித்துக் கொள்ளும். அம்மா சொன்ன சாமானை உடனே எடுக்காமல் , எல்லாவற்றையும் துழாவிப் பார்ப்பேன். என்னென்னவோ கிடைக்கும். பழைய பட்டன்கள், காலர் மட்டும் தனியாக, உடைந்த மண் பொம்மை, பளபளவென்று ஜிகினா, பழைய பத்திரிகை என்று கதம்பமாக இருக்கும். ஏதாவது ஒரு பொருளை டிராயர் பாக்கெட்டில் போட்டுக் கொண்ட பிறகே சாமானை எடுத்து வருவேன்.

பாவுளைத் திறந்தேன். சிறு வயதில் நான் அனுபவித்த அதே வாசனை இன்னும் இருந்தது. எண்ணெய் , புளி வைக்கும் சாடிகள் காலியாக இருந்தன. இத்தனை சாமனையும் எப்படி ஏறக்கட்டப் போகிறோம் என்று மலைப்பாக இருந்தது. மடித்து வைத்த ஜமக்காளங்களுக்குக் கீழே ஒரு டிரங்குப் பெட்டி இருந்தது. இது வரை நான் அதைப் பார்த்ததாக ஞாபகமில்லை. அதை இழுத்தேன். மூடியில் சரஸ்வதி அம்மாள் என்று பெயர் பொறித்திருந்தது. அதைப் படித்ததும் இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட ஞாபகம் வராத என் அத்தைப் பாட்டியான சரஸ்வதியின் நினைவு வந்தது.

“பாட்டியோட பெட்டியா இது? என்ன வெச்சிருப்பா? பகவத் கீதையும் , சில புடவைகளும் இருக்கும் என்று அலட்சியமாகத் திறந்தவனுக்கு அதிர்ச்சி. நீட்டாக பைண்டு செய்யப்பட்ட மஞ்சரி. பொன்னியின் செல்வன் (5 பாகங்களும்), சிவகாமியின் சபதம் பொன்ற புத்தகங்கள்.பாட்டி இவ்வளவு இலக்கிய ஆர்வம் உள்ளவளா? என்று என்னுள் எழுந்த ஆச்சரியத்துடன் மேலும் வேறு என்ன இருக்கிறது என்று பார்த்தேன். ஒரு ஸ்படிக மாலை.ஒரு படிக்கும் கண்ணாடி, இவை எல்லாவற்றிற்கும் கீழே வீணாய்ப் போனவளின் டயரி என்று பெரிதாக எழுதப் பட்ட ஒரு நோட்டு.எனக்கு வியப்புக்கு மேல் வியப்பு. அத்தைப் பாட்டி டைரி வேறு எழுதினாளா? அது என்ன வீணாய்ப் போனவள்?ஆர்வம் தாங்காமல் அதை மட்டும் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தேன்.

அத்தைப் பாட்டி. அதாவது என் தாத்தாவின் சகோதரி , என் தகப்பனாரின் அத்தை. அதனால் எங்களுக்கெல்லாம் அத்தைப் பாட்டி. சரஸ்வதிப் பாட்டிக்கு 5 வயதில் கல்யாணம் , 7 வயதில் விதவைப் பட்டம். கணவனின் முகமே தெரியாத அந்தப் பெண்ணிற்கு என்னென்ன கொடுமைகள் நேர்ந்திருக்கும் என்பது தான் உங்களுக்கே தெரிந்திருக்குமே? தலை மழித்தல் , வெள்ளைப் புடவை , அபசகுனம் என்ற பெயர் இத்யாதி இத்யாதி. ஆனால் என் தாத்தாவுக்கு வாழ்க்கையில் எந்த சுகத்தையுமே அனுபவிக்காத தன் சகோதரி மீது அலாதியான பாசம். அதனால் எங்களுடனே தான் இருந்தாள்.

சின்ன வயதில் எப்படி இருந்திருப்பாளோ நான் பார்க்கும் போது வயதாகி விட்டது. நல்ல சிவப்பாக உயரமாக , ஒல்லிக்குச்சியாக இருப்பாள். உணவு விஷயங்களில் ரொம்ப கறார். இரண்டு வேளை தான் சாப்பாடு. கூடுமானவரை உடல் நலக் குறைவு வராமல் பார்த்துக் கொள்ளுவாள். உடல் நலத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பாள். அதற்காக மற்றவர்கள் அவளைக் கேலி செய்வார்கள். “எதுக்கு நீ உடம்பை பேணறே? ” என்று. அப்போது அதன் அர்த்தம் புரியவில்லை. இப்போது அந்த வார்த்தைகள் நஞ்சில் தோய்ந்தவையாகப் படுகிறது. ஆனால் பாட்டி அதிகம் பேசவே மாட்டாள். தான் எதிரே வந்தால் அபசகுனம் என்ற பேச்சைக் கேட்க வேண்டி வருமோவெனப் பயந்ததாலோ என்னவோ எங்கள் வீட்டுத் திண்ணையைத் தாண்டி வெளியில் எங்கும் போனதில்லை. பேப்பர் படிப்பதென்றால் அலாதி ஆவல். காலை பதினோரு மணி வாக்கில் எங்கள் வீட்டுத் திண்ணையில் பாட்டிகள் மாநாடு கூடும்போது அத்தைப் பாட்டி தமிழ் தினசரியை வைத்து வாசித்துக் கொண்டிருப்பாள்.அரசியல் நிலவரங்களையெல்லாம் அலசுவாள்.

அதற்காக அவள் மிக அதிகமாக கேவலமாக விமர்சிக்கப் பட்டிருக்கிறாள். “வீணாப் போனவளுக்கு என்ன பேப்பர் வேண்டியிருக்கு? படிச்சு என்னத்தை செய்யப்போறா? ராமா , கிருஷ்ணான்னு சொன்னாலும் அடுத்த ஜென்மத்துலயாவது நல்லபடியா வாழ்க்கை அமையும்” போன்ற நெஞ்சைக் கீறும் சொற்களைக் கேட்டும் கேட்காதது போல் இருந்து விடுவாள். அவற்றையெல்லாம் தான் எழுதிருப்பாளோ?அப்படி என்னதான் எழுதியிருப்பாள் டயரியில்? வீட்டில் நடந்த சண்டைகள் , அவளைப் புண்படுத்திய தருணங்கள் இவைகளைப் பதிவு செய்திருப்பாள் வேறென்ன?

சாமான்களை எடுத்துப் போக ஆட்கள் வருவதற்கு இன்னும் நேரமிருந்தது. கூடத்தில் சுவரில் சாய்ந்து கொண்டு படிக்க ஆரம்பித்தேன். தேதி வாரியாகப் பிரித்து எழுதாமல் ஒரு கதை போல் பக்கம் பக்கமாக எழுதியிருந்தாள். பல இடங்களில் தண்ணீர் பட்டு எழுத்துக்கள் அழிந்திருந்தன. அது கண்ணீராகவும் இருக்கலாம். முதல் நாற்பது பக்கங்களில் முக்கால் வாசி வீட்டு வரவு செலவுக் கணக்கு. அவளுடைய வயலிலிருந்து வரும் வருமானத்தை எல்லாம் யாருக்கு? எதற்கு செலவு செய்தாள் என்று விவரமாக எழுதியிருந்தாள்.

அவளுடைய அந்த லிஸ்டில் டெலிஃபொன் நிறுவனத்தின் G.M ஆக இருந்து ஓய்வு பெற்ற எங்கள் வயல் சம்சாரியின் மகன் முருகேசன் பெயரும் இருந்தது. முருகன் படிக்க பாட்டியா உதவினாள்? யாருக்குமே தெரியாதே? ஏன் முருகனுக்கே தெரியுமோ என்னவோ? என் ஆச்சரியம் தொடர்ந்தது , அப்போது எங்கள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த இசக்கியின் மகள் டீச்சர் டிரைனிங் படிக்கவும் உதவியிருக்கிறாள். என்னுடைய கல்லூரிச் செலவு , என் அக்காவின் திருமணம் இவற்றுக்காக தன் நகைகளை விற்றும் , கணிசமான பணத்தை செலவழித்திருக்கிறாள்.

கல்வியின் மீது எவ்வளவு ஆர்வம் இருந்தால் இத்தகைய மனம் வரும்? அந்தக் காலத்திலேயே எல்லா சாதியினரையும் ஒன்றாகப் பார்த்திருக்கிறாளே? “உன்னை முழுக்கத் தெரிஞ்சிக்காமப் போயிட்டேனே பாட்டி?” என்று வாய் விட்டு புலம்பினேன். நான் பாட்டியுடன் இருந்த சந்தர்ப்பங்களில் எப்போதாவது யாராவது பாட்டியிடம் இனிமையாகப் பேசிக் கேட்டதாக எனக்கு ஞாபகமில்லை. ஏன் என் அம்மாவே கூட அந்த “வீணாப் போனவள்” என்றே தான் குறிப்பிட்டதாக நினைவு.

டயரியை மேலும் படித்தேன். தன்னைப் பற்றி மற்றவர்கள் கடுமையாகப் பேசியதையும் , பெண்கள் இவள் அழகைக் கண்டு பொறாமை கொண்டு , அவளைத் தெருவில் எங்காவது பார்த்தாலே மற்ற ஆண்களைக் கவர்வதற்காகவே அவள் வெளியே வருவதாகப் பேசியதை கண்ணீரில் தொய்த்து எழுதியிருந்தாள். “ஒஹோ! அதனாலதான் நீ வெளியில வரதையே நிப்பாட்டினியோ? ” என்று அவளிடம் நேரில் பேசுவது போல்க் கேட்டேன். மேலும் அவளுடைய உணர்வுகள் , ஆசைகள் , ரசனைகள் ஆகியவற்றைப் பற்றியும் நிறைய எழுதியிருந்தாள். கண்டிப்பாக நிறைவாறாத நிறைவேற முடியாத கனவு என்று தன்னை ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப் பட்டதை எழுதியிருந்தாள். அந்த மனதில் தான் எத்தனை ஆசைகள் , எத்தனை கவித்துவமான ரசனைகள்? எனக்கு கண்களில் இருந்து நீர் வந்து கொண்டே இருந்தது.அவளை அப்படி ஆக்கிய கடவுளின் மீதும் சமூகத்தின் மீதும் எனக்கு கோபமாக வந்தது.

பக்கங்கள் செல்லச்செல்ல அவள் மனது பக்குவப்பட்டதாகத் தெரிந்தது. யாரையும் திட்டவில்லை , யார் மீதும் வெறுப்பை உமிழவில்லை. வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொண்ட விதம் அதில் தெரிந்தாலும் சில இடங்களில் அவளையும் மீறி தன் மனக் காயங்களை அதில் கொட்டியிருந்தாள். பாட்டி மிகவும் வருந்தி எழுதியிருந்தது தன்னை மேற்கொண்டு படிக்க அநுமதிக்காததைக் குறித்துத்தான். டாக்டர் தொழிலின் மீது அவளுக்கு அப்படி ஒரு ஆசை மரியாதை. “பாட்டி உன்னைப் படிக்க வெச்சிருந்தா நீ எவ்ளோ பெரிய டாக்டராயிருப்பே? ” என்று மீண்டும் அவளோடு பேசினேன் மனத்தளவில்.

அவளை பாதித்த எல்லா சம்பவங்களையும் அப்படியே நேரில் பார்ப்பது போல் எழுதியிருந்தாள். எல்லாவற்றையும் சொல்ல முடியாது ஆகையால் மாதிரிக்கு ஒன்று. கொடுக்கிறேன் ” எப்பவும் போல இன்னிக்கு லட்சுமி, கல்யாணி , ஆனந்தம் எல்லாரும் திண்ணையில ஒக்காந்து பேசிண்டிருந்தா . ஸ்ரீ ஜெயந்தி வரப்போறதோல்லியோ அதுக்கு யார்யார் ஆத்திலே என்னென்ன பட்சணம் பண்ணப் போறான்னு பேசிண்டிருந்தா. தினம் தான் இருக்கவே இருக்கே சமைக்கறதும் சாப்படறதும் . அதைப் பத்தியே என்ன பேச்சு வேண்டியிருக்குன்னு நான் வேற பேசலாமேன்னு நேருவ பத்திப் பேச்செடுத்தேன். நான் என்னவோ சொல்லக் கூடாததைச் சொல்லிட்டா மாதிரி எல்லாரும் அலறினா. பொம்மனாட்டிகளுக்கு எதுக்கு இதெல்லாம்? அதுவும் வீணாப் போன ஒனக்கு இதெல்லாம் அனாவசியம்” னுட்டா. எனக்கு பதிலுக்கு ஏதாவது பேசணும்னு தோணித்து. ஆனா என்ன பேச? அப்படியே பேசிட்டாலும் நாளைப்பின்ன இவா மொகத்தைப் பாக்க வேண்டாமோ? அதான் பேசாமே இருந்துட்டேன். அப்றமா சாவகாசமா யோசிச்சுப் பாத்தேன். அவாள்ளாம் புருஷன் கொழந்தை குட்டின்னு இருக்கப்பட்டவா. அவாளுக்கு அதுதான் மனசப் பூரா ஆக்ரமிச்சுண்டு இருக்கும். அதான் அவா அப்படிப் பேசறா. எனக்கென்ன? நான் வீணாப் போனவள் , மத்த விஷயங்களைப் பத்தி யோசிச்சிண்டு இருக்கேன். ஆனா வீணாப் போனவள்ங்கற அந்த வார்த்தை தான் என்னைக் குத்தறது. புருஷனோட வாழாட்டா பொம்மனாட்டி வீணாப் போனவளா? அவ பிறவிக்கு வேற அர்த்தமோ உபயோகமோ இருக்கக் கூடாதா? எப்படியாவது என் வாழ்க்கை வீண் இல்லை , நானும் வீணாப் போனவள் இல்லைன்னு நிரூபிச்சாப் போறும் எனக்கு. வேற ஒண்ணும் வேண்டாம்”.

டயரி அந்த இடத்தில் நின்று போயிருந்தது. அதற்குப் பிறகு அவள் எதுவுமே எழுதவில்லை. கடைசிப் பக்கத்தில் மட்டும் “நான் காலமான பிறகு என் உடம்பை யாரும் வீணாய்ப் போனதுன்னு சொல்ல மாட்டா” என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்தாள் . அதைப் பார்த்ததும் தான் பாட்டியின் மரணதினம் எனக்கு மடை திறந்த வெள்ளம் போல் நினைவு வந்தது. நான் அப்போது சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். தந்தி வந்ததும் உடனே புறப்பட்டுக் கடையம் போனேன். அங்கே உடலை எடுக்காமல் என் அப்பா யார் யாரிடமோ சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். திருநெல்வேலியிலிருந்து மருத்துவக் கல்லூரி வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. சில டாக்டர்களும் , நர்ஸுகளும் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.

ஒன்றும் புரியாமல் நின்றவனிடம் அப்பாதான் விஷயத்தைச் சொன்னார். தன் உடல் உறுப்புக்கள் அத்தனையும் கண்கள் உட்பட திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு தானமாகக் கொடுத்து விட்டாளாம் அத்தை. அதை உயிலிலேயே எழுதியிருக்கிறாள். அவர்கள் எடுத்துக் கொண்டது போக மிச்ச உடலை மட்டுமே தகனம் செய்யவேண்டும் என்று எழுதி ரெஜிஸ்டர் செய்துமிருக்கிறாள். அவற்றை எடுத்துப் போக தான் அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அக்கிரஹாரத்து பிற்போக்கு வாதிகள் இதை இந்து தர்மத்துக்கு எதிரானது என்றும் , ஒரு விதவையின் ஆசைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லையென்றும் , அவளை ஒழுங்காக எரித்தால் தான் அவள் கைலாசத்துக்குப் போவாள் என்று பிதற்றிக் கொண்டிருந்தனர்.

பெண்கள் பாட்டியின் துணிச்சலை ஒரு குரூர வியப்போடு பேசினர். யாருக்குமே பாட்டியின் நற்செயலும், நல்ல மனமும் புரியவில்லை. ஆனால் தெய்வாதீனமாக என் அப்பா உறுதியாக இருந்துவிட்டார். “எங்க அத்தை எதுக்கும் ஆசைப் பட்டு நான் பாத்ததுமில்லை, கேட்டதுமில்லை. இது ஒண்ணு தான் அவ ஆசைப் பட்டது. செத்த பிறகு கூட அவ ஆசைய நிறவேத்தலைன்னா நான் மனுஷனே இல்லை. தயவு செய்து என்னை யாரும் தடுக்காதீங்கோ!” என்று சொல்லிவிட்டு ஆக வேண்டியதைக் கவனித்தார்.அந்த நேரத்தில் எனக்கு அப்பா ஏன் ஊர்க்காரர்களை பகைத்துக் கொள்கிறார் என்று தான் தோன்றியது.

இப்போது அது நினைவுக்கு வந்து கண் நிறைந்தது. அப்பா நல்லவேளை நீங்க உங்க முடிவுல உறுதியா இருந்தேள் , இல்லேன்னா பாட்டியோட ஆத்மா உங்களை மன்னிச்சிருக்கவே மன்னிச்சிருக்காது என்று என் மனம் அப்பாவைப் பாராட்டியது. “நீ வீணாப் போனவ இல்லை பாட்டி. உன் மனசு, ஒன் ஒடம்பு எல்லாமே ,மனுஷாளோட நல்லதுக்குத் தான் பயன் பட்டுருக்கு பாட்டி. உன் ஆசை நிறைவேறிடுத்து ” என்று என்னையறியாமல் புலம்பினேன். டயரியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. கொல்லையில் பாட்டி வைத்த மாமரம் மட்டும் சில பூக்களை உதிர்த்துக் கொண்டிருந்தது.

– கலைமகள் 2011 தீபாவளி மலர்

இயற் பெயர்: ஸ்ரீஜா வெங்கடேஷ். படிப்பு : M.A ஆங்கில இலக்கியம். சொந்த ஊர்: நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி. தற்போது வசிப்பது சென்னையில். கணவர்: திரு.வெங்கடேஷ். தமிழ் நாடகங்கள்: 1997 முதல் 2007 வரை ஒரிஸ்ஸா புவனேஸ்வரில் வாசம். அந்த வருடங்களில் மொத்தம் ஆறு தமிழ் நாடகங்கள் எழுதி இயக்கிய அனுபவம் உண்டு. அதில் இரு நாடகங்கள் ஒரிஸ்ஸாவின் அப்போதைய ஆளுநர் திரு M . M . இராஜேந்திரன்…மேலும் படிக்க...

1 thought on “பாட்டியின் பெட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *