பாட்டியின் ஆதங்கம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2022
பார்வையிட்டோர்: 1,659 
 

(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குஞ்சுவின் பாட்டி இறந்துபோனபொழுது அவனுக்கு வயசு ஐந்துதான். அன்றைய நினைவு அவன் மனத்தில் நன்றாகப் பதிந்திருந்தது.

அன்று காலையில் அவன் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போதே ஆகாயம் மூடம் போட்டுக் கொண்டு, மழை பிசுபிசுவென்று தூறிக்கொண்டிருந்தது. வாசலில் சென்று பார்த்தான்; தெருவெல்லாம் ஒரே ஜலம். இரவெல்லாம் மழை பெய்ததால் எதைப்பார்த்தாலும், நன்றாகக் குளிப்பாட்டி விடப்பட்ட குழந்தைபோல இருந்தது. மிக அவசரமாக உள்ளே ஓடிவந்து செல்லத்தை எழுப்பி வாசலுக்குக் கூட்டிக்கொண்டு போனான்.

பாட்டி அவன் தகப்பானரைப் பெற்றவள். தொண்டு கிழவி. அவள் இறந்துபோவதை எதிர்பார்த்துக்கொண்டு அவளுடைய சந்ததிகள் அருகேயே இருந்தார்கள். பாட்டிக்கு நல்ல பழைய காலத்துச் சரீரம் வைரம்போல புலன்கள் ஒவ்வொன்றாகத்தான் மெள்ள மெள்ள அடங்கிக்கொண்டு வந்தன. தேகமும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பலஹீனம் அடைந்துகொண்டு வந்தது. இரண்டு தரம் பிராணன் போய் விடுமென்று நினைத்து, குஞ்சுவின் தகப்பனார் தம் தங்கைக்குத் தந்தி அடித்தார். ஆனால் இரண்டு தடவையும் பாட்டி பிழைத்துக்கொண்டு விட்டாள். உடம்பு மிகவும் மெலிந்து அவள் உட்காரக்கூடச் சக்தியற்றுப் போய்விட்டதை உத்தேசித்து அவனுடைய அத்தை அங்கேயே இருந்து விட்டாள். அவளுடைய பெண் செல்லத்திற்கு அப்பொழுது நான்கு வயசு.

செல்லமும் குஞ்சுவும் கொஞ்சநேரம் மும்முரமாகக் காகிதக் கப்பல்கள் செய்து தண்ணீரில் விட்டார்கள். அந்த விளையாட்டு அலுத்துப்போன வுடன் தண்ணீரிலிருந்து தத்திக் தத்தி வந்த சின்னத்தவளைக் குஞ்சு களைப் பிடித்துக் காலி மத்தாப்புப் பெட்டிகளில் போட்டு மூடி வைத்துக் கொண்டார்கள். திண்ணை ஓரத்தில் போய் கால்களைத் தொங்கவிட்டுக் கொண்டு உட்கார்ந்து மௌனமாக மழையைக் கவளித்தார்கள்.

அத்தை வந்து இருவரையும் இழுத்துக்கொண்டு போய்ப் பாட்டியின் படுக்கையண்டை உட்கார வைத்தாள்.

‘அம்மா, அம்மா! இதோ பாரு, குழந்தைகள் வந்திருக்கு’ என்று பாட்டியின் காதண்டை உரக்கச் சொன்னாள்.

பாட்டி மெதுவாகக் கண் திறந்து பார்த்தாள். சுற்றி எல்லோரும் உட்கார்ந்திருப்பதைக் கண்டாள்.

‘இன்னிக்கி-தாங்காது- ஏண்டாப்பா! இன்னிக்கு ஏகாதசிதானே? இன்னிக்கி ராத்திரி வரையிம் தாங்குமோ என்னவோ? நாளெக்கி துவாதசி தகனம் – கொடுத்து வச்சிருக்கணும்!… அடியே, ஜானகி, இங்கே கிட்ட வா…’

குஞ்சுவின் தாய் கிட்டப் போனாள்.

‘என்னவோ, இந்தாத்துவே-தொட்டில் கட்டிப் பார்ப்பேனான்னு இருந்தேன்! பெரியவா செஞ்ச புண்ணியம் – ஒன் வயது தெறந்து – கொழந்தெ பொறந்தான்! அவர் அப்படியே திரும்பி வந்துட்டார்! இன்னும் – ஆத்து நெறைய, கொழந்தெகளைப் பெத்துண்டு – பெரியவா பேரெச் சொல்லிக்கிண்டு – நன்னாயிருங்கோ!…’

‘அப்பா, அடே! ஜானகி கெட்டிக்காரிதான்; குடித்தனத்துக்கு ஏத்தவதான்; ஆனா செட்டா, நாளு, கெழமையே விட்டுடாமே… பேசக்கூடச் சீவன் இல்லே…’

பாட்டி, மெதுவாக, மெலிந்த குரலில் பேசினாள். அவளுடைய பஞ்சடைந்த கண்களில் ஜலத்துனிகள் இரண்டு தென்பட்டன. உயிரே இல்லாத அவளுடைய கைகள் கூடக் கொஞ்சம் அசைந்தன.

‘அம்மா, அதெல்லாம் நன்னா நடக்கும். நீ ஒண்ணுக்கும் கவலைப் படாதே! நிம்மதியா இரு’ என்று குஞ்சுவின் தகப்பனார் காதண்டை சொன்னார்.

சாக வேண்டிய கிழவிதான். ஆனாலும் அவர் கண்களிலும் ஜலம் நிறைந்தது.

பாட்டியின் வாழ்க்கை ‘ஆதங்கம்’ சாகப்போகிற அன்றும் அவனை விட்டபாடில்லை.

‘எல்லோரும் சட்டுனு சமச்சுச் சாப்பிட்டுடுங்கோ நாளக்கி-ரொம்ப நாழியாகும் -செத்தக் கழிச்சு-மெள்ள என்னெப் பிடிச்சு- ரேழியிலே கொண்டு போட்டுடுங்கோ அவ்வளவுதான்’ என்று சொல்லி நிறுத்திக் கொண்டாள். மூச்சு வாங்கிற்று.

அம்மா, அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ எதற்கு மனசைச் சிரமப்படுத்திக்கொள்கிறாய்?’ என்று பிள்ளை சமாதானப்படுத்தினார். ‘நீங்க -அப்புறம்-சிரமப்பட வாண்டாம்னு சொல்றேன்; ஒங்களுக்குத் தோணுது, ஜானகி, நீ சேவெ, எனக்குத் தெரியும்; ஆனா, எம் மனசு கேக்கல்லெ, சொல்றேன். அவன் அப்பாவி – வாயெத்தெறந்து ஒண்ணும் சொல்லமாட்டான். கேக்கமாட்டான். அவன் மனசறிஞ்சு எல்லாம் சேசுக்கொடு. பசி தாங்காது அவனுக்கு’ என்று பாட்டி மறுபடியும் திணறித் திணறிப் பேசினாள்.

‘அடே ராமு, கொழந்தை செல்லத்தெ குஞ்சுவுக்கு வாங்கிண்டுடு! ஒன் தங்கெக்கு ஆம்படையான் சரியில்லை. அவளெப் பாத்துக்கோ, ஓங்கப்பாவுக்கு அவ மேலே உசிரு..’

சிரமம் மேலிட்டுப் பாட்டி கண்ணை மூடிக்கொண்டு கிடந்தாள். அதன் பிறகு செல்லமும் குஞ்சுவும் சிறிதுநேரம் நிர்ப்பந்தத்தின் மேல் பாட்டியண்டை உட்கார்ந்திருந்தார்கள். அங்கே அவர்கள் ரணிக்கும் படியாக ஒன்றும் காணவில்லை. சாவின் தலைமாட்டில் குழந்தைக்கு என்ன விளையாட்டு ஓடும் என்பதல்ல. சாவின் அண்டையில், அதன் பக்கத்தில் தான் உலகத்தின் விளையாட்டை நடந்துகொண்டிருக்கிறது. முற்றத்தின் ஓரமாய்ப் போய் உட்கார்ந்து கொண்டு மத்தாப்புப் பெட்டியை மெள்ளத் திறந்து ஆளுக்கொரு தவளைக் குஞ்சை வெளியே எடுத்துவிட்டார்கள். இரண்டும் முற்றத்தில் குதித்துச் சாக்கடைக்குள் போய்ப் பதுங்கிக் கொண்டன. ஒன்று செல்லம்; மற்றொன்று குஞ்சு. அப்படியாக அவர்கள் நினைப்பு.

சிருஷ்டி யென்னும் மத்தாப்புப் பெட்டியிலிருந்து இரண்டு ஜீவன்கள் உயிர்பெற்று வெளியே வந்து வாழ்க்கை முற்றத்தில் குதித்தோடின.

இங்கெ வாங்கோம்மா! பாட்டி கூப்படறா-அப்பிச்சி தருவா!’ என்று அத்தை மறுபடியும் கூப்பிட்டாள். அது அவர்கள் காதில் ஏறவில்லை. பாட்டி அப்பிச்சி கொடுக்கமாட்டாள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதுதானே அவர்களுக்கு அப்பொழுது வாழ்க்கையில் தெரிய வேண்டிய விஷயம்! வாசல் திண்ணைக்குப் போய்விட்டார்கள்.

‘பாத்தி – ஆண்டாம் -ஊம்!’ என்றாள் செல்லம் தலையை ஆட்டிக் கொண்டு. தான் சொன்னதை அவன் ஆதரிக்க வேண்டுமென்று அந்தச் சின்ன ஸ்திரீ தன் கையை அவன் தோளில் போட்டாள்.

குஞ்சு அதற்கு மசியவில்லை, நேரிடையான பதில் சொல்லவில்லை அவன்.

‘பாட்டி போப்போறானே!’ என்றான்.

வீட்டில் எல்லோரும் ‘பாட்டி போவதை’ப் பற்றிப் பேசிக் கொண்டிருந்திலிருந்து குஞ்சு கிரகித்த சாராம்சம் இது.

‘நானும் போப்போறேன்!’ என்று செல்வம் உதடுகளைப் பிதுக்கிக் கொண்டு சொன்னாள். அவள் தொனியில் திடீரென்று ஓர் ஆவல் தோன்றிற்று.

‘போப்படாதே!” என்று குஞ்சு சட்டென்று சொன்னான்.

செல்லம் தோளில் இருந்த கையை எடுத்து ஓங்கினாள்.

தாய், அத்தை பேசிக் கொண்டிருக்கும்போது குஞ்சு, ‘பாட்டியோடே நானும் போறேம்மா?’ என்றதற்குத் தாய் ‘சீ, பீடே, அப்படியெல்லாம் சொல்லப்படாது!’ என்று அதட்டியிருந்தாள். குஞ்சு அதைச் செல்லத்திடம் பிரயோகம் செய்தான்.

‘சீ.பீடே, அப்படியெல்லாம் சொல்லப்படாது!’ என்று தாய் சொன்ன குரலில் சொன்னான்.

‘சீ’ என்று பதில் சொல்லி, செல்லம் முகத்தைச் சாய்த்துச் சுளித்துக் காட்டினாள்.

குஞ்சு அதற்கு என்ன மாதிரிப் பதில் அளித்திருப்பனோ? அதற்குள் உள்ளே எல்லோரும் உரக்க அழும் சத்தம் கேட்டது. இரண்டு குழைந்தைகளும் கூடத்திற்கு ஓடினார்கள்.

– மணிக்கொடி. 15.08.1958

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *