ரவி தூரத்தில் வருவது தெரிந்ததுமே, டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த சுப்ரமணியம் பாதியிலேரே எழுந்து மகனை சந்தோஷமாய் வரவேற்றார்.
“என்னப்பா… எப்படி இருக்க…?’ ரவி கேட்டான்.
“நல்லா இருக்கேன்டா… நீ எப்படி இருக்க…? ராதா எப்படி இருக்கா…? குழந்தை விவேக் எப்படி இருக்கான்?’
சுப்ரமணியன் பாசத்துடன் கேட்டார்.
“….ம்… எல்லாரும் நல்லா இருக்காங்க…’ சொன்ன ரவி,
“அப்பா… மருந்து மாத்திரையெல்லாம் இருக்கா…?’ என்று கரிசனத்துடன் கேட்டான்.
“இன்னும் பத்து நாளைக்கு இருக்குடா… நீ கவலைப்படாத…
ம்… இப்ப ராதா உன்கிட்ட சண்டை போடாம இருக்காளா…?’
கவலையுடன் கேட்டார்.
“ம்… இப்ப பிரச்னை ஒண்ணுமில்லப்பா…’ தலையைக் குனிந்து சொன்ன ரவி, “அப்பா… நான் வரட்டுமா…? நிறைய வேலை இருக்கு…’ சொல்லிவிட்டு விடை பெற்றான்.
“ஒரு நிமிஷம் இருடா…’ சொன்ன சுப்ரமணியம் வாசல்வரை வந்து மகனை வழி அனுப்பினார்!
“கடவுளே! அவனையாவது அவன் பிள்ளை முதியோர் இல்லத்துல சேர்க்காம இருக்கணும்…’
சுப்ரமணியம் கண்ணீர் விட்டபடி பிரார்த்தித்தார்.
– சித்ரா பாலசுப்ரமணியன் (மார்ச் 2011)