இயந்திரமயமான, அவசரமான இவ்வுலகத்தில் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் நம்மையறியாமல்தான் நிகழ்கின்றன. அநேகமான நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் திராணி நம் கைகளில் இல்லை.
இந்திராணியும் சிவராஜாவும் கிராமத்தில் பிறந்து, கிராமத்தில் வளர்ந்து படித்து ஆளானவர்களாக இருந்த போதும் கிராமத்தில் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இரண்டுபேருமே கொழும்பில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் போதுதான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் அவர்கள் தமது குடும்ப வாழ்வை கொழும்பில் நடத்த வேண்டியிருந்ததால் கொழும்புக்கருகாமையிலேயே வாடகைக்கு வீடொன்றை எடுத்து அதில் குடியேறினார்கள். வேலைக்குப் போகவும், வேறு போக்குவரத்துக்குமென சிவா மோட்டார் சைக்கிள் ஒன்றையும் வங்கிக் கடன் அடிப்படையில் வாங்கிக் கொண்டான்.
அவர்கள் கொழும்பில் குடும்பமாக வாழத் தொடங்கிய போது சிவாக்கிருந்த மிகப்பெரிய கவலை அவனது 80 வயதான தந்தையை கிராமத்தில் தனியாக வசிக்க விட்டுவிட்டு வந்தமையாகும். சிவா பல தடவைகள் தனது தந்தையை கொழும்புக்கு வந்து தம்முடன் தங்கும்படி வற்புறுத்தினான். என்றபோதும் கிராமத்தில் தன் இளமைக்கால கனவுகளுடன், தானே கட்டிய வீட்டைவிட்டு பிரிந்துசெல்ல தந்தை மறுப்புக் கூறி வந்தார்.
எனினும் சனி, ஞாயிறு கிழமைகளில் சிவா கிராமத்துக்குச் சென்று தன் தந்தையை பார்த்து வர தவறமாட்டான். ஒவ்வொரு முறையும் தந்தையிடம் விடை பெற்றுச் செல்லும் போது அவரை தம்முடன் வந்துவிடும் படி வற்புறுத்துவான்.
“”அப்பா… நீங்கள் இங்கே தனியாக வசிப்பதால் ஒருபயனும் இல்லை. உடம்புக்கு ஏதாவது ஆனால் எங்களினால் உடனடியாக வந்து பார்க்கவும் முடியாது. இந்திராணியும் உங்களை அங்கே கூட்டிவந்து விடும்படி வற்புறுத்துகிறாள். அதைப்பற்றி யோசியுங்கள்… தந்தையும் தனயனின் கூற்றை பலமுறை யோசித்துப் பார்த்தார். ஒரு விடுமுறையில் சிவாவும், இந்திராணியும் கிராமத்துக்குச் சென்றபோது அவர்களுடன் கொழும்புக்கு வர சம்மதம் தெரிவித்தார்.
இந்திராணி சிவாவின் தந்தையை தன் தந்தை போலவே கவனித்துக் கொண்டாள். ஆனால், இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் இந்திராணியின் வேலைப்பளு மிக அதிகமாகக் காணப்பட்டது. அன்றும் அப்படித்தான் காலையில் இருந்தே பரபரப்பாக இருந்தார்கள்.
“”இந்திரா, அப்பாவுக்கு சாப்பாடு, மருந்து எல்லாம் எடுத்துவைத்து விட்டாயா?” சிவா கேட்டான்.
“”இல்லை சிவா… எழுந்திருக்க நேரமாகிவிட்டது. பாண் ஏதாவது வாங்கிக் கொண்டுவாங்க…”
“”சரி…சரி… நீ ரெடியாகு…” சிவா தன் பைக்கை உதைத்து அதனை உயிர்ப்பித்து கடைக்குப் போகத் தயாரானான். அவர்களின் காலைக்கலவரம் ஆரம்பமானது. வேலைக்குப் போகும் அவசரம். பகல் சாப்பாடு சமைக்க வேணும்.
ஒருவாறு அவர்கள் தயாராகி தந்தைக்கு பாண் இரண்டு துண்டு பட்டர் தடவி மேசையில் வைத்துவிட்டு சாப்பிடுமாறும், மருந்து குடிக்குமாறும் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்கள்.
ஓய்வு நாட்களில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சிவாவின் தந்தை நேரம் வந்ததும், பசி இல்லாதிருந்த போதும் வேளைக்கு மருந்து குடிக்க வேண்டுமென்பதால் எழுந்து சென்று மேசை முன் அமர்ந்து ஒரு துண்டு பாணை பிய்த்து வாயில் போட்டார்.
வயது போனகாலத்தில் இப்போதைய கரடுமுரடான காய்ந்த பாணை கடித்து சப்பி விழுங்குவது கூட கடினமான செயலாக இருந்தது. அவர் மெதுமெதுவாகவே சப்பி சுவைத்து பாண் துண்டை முழுங்கியபோதும். அது தொண்டையில் சென்று இறுகிக்கொண்டது. அவர் செருமி பாண் துண்டை வெளியே துப்பப்பார்த்தார். முடியவில்லை. மெதுவாக எழுந்து நீர்குடிப்பதற்கு முயற்சி செய்தபோது கண்கள் இருண்டு கொண்டுவந்தன. அவர் தட்டுத்தடுமாறி கீழே தடார் என்று விழுந்தார். அவருக்கு உதவ அங்கு யாரும் இருக்கவில்லை.
அன்றுமாலை இலேசாக இருளடைந்து கொண்டு வந்தபோதே சிவாவும் இந்திராணியும் வீடு திரும்பினர். சிவா முதல் வேலையாக தன் தந்தையைத்தான் தேடிச் சென்றான். அவன் முன்னறையில் கண்ட காட்சி அவனை பேச்சுமூச்சு அற்றவனாக்கியது. அவன் தந்தை அசைவற்று நிலத்தில் விழுந்து கிடந்தார். அவர் இறந்து போய் பல மணித்தியாலயங்கள் கடந்து போயிருந்தன.
பிள்ளைகள் தம் வயது முதிர்ந்த தாய், தந்தையர் மீது எவ்வளவுதான் பாசம் கொட்டிக் கவனித்தாலும் அவர்களின் இயலாமையைப் புரிந்துகொள்வதில்லை. பெரியோர்கள் வயதடைய வயதடைய சிறு குழந்தைகள் போல பலவீனமடைகிறார்கள். அவர்களின் உணவில் கூட குழந்தைகளுக்கு எவ்வாறு கவனித்து உணவூட்டுகிறோமோ அந்த அளவுக்குக் கவனம் தேவை. இந்த சிறுவிடயத்தில் உதாசினமாக இருந்ததால் சிவா தன் அன்பான தந்தையை இழந்தான்.