பவித்ரா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 16, 2018
பார்வையிட்டோர்: 6,727 
 
 

குடும்பம் எப்படி நடத்துவதென்று புரியவில்லை. பவித்ரா இப்படி உரண்டாய்ப் பிடிவாதம் பிடிப்பாளென்று கதிரவன் கனவிலும் நினைக்கவில்லை.

தனியே துவண்டு அமர்ந்தான்.

ஒருமாத காலமாக வீட்டில் ஓயாத போர். வாக்குவாதம், சண்டை.

”நீங்க அலுவலகத்துல அந்தரங்க காரியதரிசியை வைச்சிருக்கீங்க.” என்று ஆரம்பித்து ஒரு நாள் திடீர் பழி.

ஆடிப்போனான்.

”இல்லே. யார் சொன்னா ?” பதறினான்.

”எனக்குத் தெரியும்.”

”நீ வீட்ல இருக்கே. நான் அலுவலகத்துல இருக்கேன். உனக்கு எதுவும் தெரியாது. வீணா பழியைப் போடாதே !”

”சரி போடலை. நீங்க தினைக்கும் எதுக்கு மல்லிப்பூ வாங்கிப் போறீங்க ?”

”என் மேசைக்குப் பின்னால இருக்கிற சாமிப்படத்துக்குப் போட.”

”இல்லே. அவளுக்கு.”

”அறிவுகெட்ட முண்டம்.!” அவனுக்குக் கோபம் கொப்பளித்தது.

”நானில்லே. நீங்க.” முறைத்தாள்.

”திமிரா ?”

”நீங்க திமிரெடுத்து அலையும்போது நான் பேசலாம்.!” அவ்வளவுதான் அவனுக்குள் மிருகம் துடித்தது. கை நீண்டு படீர் அவள் கன்னத்தில் பதிந்தது.

அந்த தாக்கத்தின் வேகம் வேறொருத்தியாய் இருந்தால் அப்படியே சுண்டிருப்பாள். இவள் கொஞ்சமும் அசராமல் அதிராமல் நின்றாள்.

”காட்டுமிராண்டி !” பல்லைக் கடித்து வலியைப் பொறுத்தாள்.

”அடுத்துப் பேசினால் பேத்துடுவேன் !”

”ஆண் திமிர்.” கோபமாய்க் கத்திவிட்டு அறைக்குள் நுழைந்தாள். அன்றிலிருந்து அவளிடம் பேச்சு மூச்சு இல்லை.

கோபம். எத்தனை நாட்களுக்குத்தான் ஆக்கி வைத்ததை தின்று விட்டு இருவரும் பேசா பொம்மைகளாய் நடமாடுவது.?!

ஆத்திரத்தில் ஆணுக்கு ஆண் கை நீளுவது கடினம். காரணம், திருப்பித் தாக்குவான் எண்ணம். ஆனால் பெண் விசயத்தில் நேர்மாறு. அவன் அடக்குமுறை குணமும், பெண் திருப்பித் தாக்க மாட்டாள் என்கிற இளக்காரமும்தான் சட்டென்று கைகநீட்டல். கதிவரனுக்குத் தன் தவறு புரிய….

மூன்றாம் நாள் இரவு பத்து மணிக்கு மேல் பக்கத்தில் பதுமையாய்ப் படுத்துக்கிடந்தவளை, ”ப…வீ !” மெல்ல தெட்டான்.

”ச்சூ!” வெடுக்கென்று அவன் கையை உதறித் தள்ளினாள்.

அதுவே அவனுக்கு உஷ்ணத்தை ஏற்ற…. ”ஏய்ய்…!” போட்டான்.

”உப்புப் போட்டு சோறு தின்னா சொரணை இருக்கனும். எதுக்கும் தொடக்கூடாது பேசக்கூடாது.”

இது தீயில் மேலும் பெட்ரோல் தெளிப்பு. தன்மானத்தில் வேறு குருதி.

‘அதுக்குன்னு நெனைச்சா இப்படி கொட்றே ? எனக்கும் இருக்குடி ரோசம்!’ – இவன் வைராக்கியம் வைத்து திரும்பிப் படுத்தான்.

ஒருநாள் இரண்டு நாள்….. ஒருவாரம்.

ஆணின் வைராக்கியத்தைவிட பெண்ணின் வைராக்கியம் பலம்! என்பதை பவித்ரா ஒரு வாரம் கடந்தும் பலமாய் நிரூபிக்க……இவன் பைத்தியமாகிப் போக….

”ஏய் ! உன் மனசுல என்னத்தான்டி நினைச்சிக்கிட்டிருக்கே ?” இரவு பக்கத்தில் படுத்திருந்தவளைக் கோபமாகப் புரட்டினான்.

”ஒன்னும் நெனைக்கலை. யாரும் அடுத்தவளைத் தொட்டக்கையால என்னைத் தொடக்கூடாது.”

”மறுபடியும் இல்லாததைச் சொல்லாதே !”

”இல்லாததைச் சொல்லலை. எனக்கு ஆள் நடப்புத் தெரியும். தினம் பொண்டாட்டி தேவையாய் இருக்கிற ஆள்…. இல்லாமலே இருக்கிறார்ன்னா என்ன அர்த்தம். ?”

”ஏய் ! வீணா இல்லாததைச் சொல்லி என் கோபத்தைக் கிளப்பாதே !”

”இதோ பாருங்க. நமக்குள்ளே வம்பு வேணாம். தாலி கட்டின தோசத்துக்கு நான் சமைச்சுப் போடுறேன். மத்தப்படி நமக்குள் எந்தவித உறவும் வேணாம். மீறினா நான் அம்மா வீட்டுக்குக் கிளம்புறேன்.” அவள் தடாலடி அடித்தாள்.

தாம்பத்தியம் மட்டுமே கணவன் மனைவிக்குள் இருக்கும் கோபதாபம், பிணக்கு தீர்க்கும் அருமருந்து. அதுவே இல்லாமல் போனால்……சீக்கு.!

”என்னடா வீடு கலகலப்பு இல்லாம புருசன் பொண்டாட்டி மொகம் வாட்டமா இருக்கு.?” இரண்டு நாட்களுக்குப் பின் விருந்தாளியாக வந்த அம்மா கேட்டுவிட்டாள். நோயைக் கண்டுபிடித்துவிட்டாள்.

”அதுவா ! வீட்டுக்கார நாய் வேலைக்கார நாயாய் ஆகிடுச்சு !” எல்லாவற்றையும் ஒரே வார்க்கியத்தில் அடக்கி கொட்டினான்.

வாழ்ந்து முடித்தவளுக்கு வார்த்தைகளின் அர்த்தங்கள் புரிந்து விட்டது. அதிர்ந்து பார்த்தாள்.

”நீ எதுவும் கேட்க வேணம். வீணாய் மாமியார் மருமகள் சண்டை வரும். வீண் மனகசப்பாகும். இது புருசன் பொண்டாட்டி பிரச்சனை. நாங்க தீர்த்துக்கிறோம்.” தாயை அடக்கினான்.

இவன் பேச்சு அவள் வாயை அடக்கியது. ஆனால் வயிறு அடங்கவில்லை.

”வேணும்டா வேணும்.! பொண்ணு பார்த்து வந்ததும் கட்டினா நான் இவளைத்தான் கட்டிப்பேன். பொண்ணு வீட்டுல செலவு, செய்கால் குறைவுன்னு தட்டிவிட்டால் திருமணமே வேணாம் நான் சன்னியாசியாய்ப் போவேன்னு கட்டிக்கிட்டதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.” சபித்துவிட்டுச் சென்றாள்.

தொடர்ந்து மௌனச் சூழல். புகை மூட்டம் கலையவில்லை.

பேசாமல், சிரிக்காமல், ஒருத்தர் முகத்தில் விழிக்காமல்…..என்ன வாழ்க்கை? எப்படி வாழ ?…….வெகு நேர சிந்தனைக்குப் பிறகு கதிரவன் மனசுக்குள் பளிச்.

சூட்கேசை எடுத்து பேண்ட் சட்டைகளை வெகு சிரத்தையாய் அடுக்கி மூடி…..

”பவித்ரா!” கூடத்திலிருப்பவளிடம் வந்தான்.

அவள் பேசவில்லை.

தாய்க்குப் பின் தாரம் கேள்விப் பட்டிருப்பே. ஆனா தாரத்திற்குப் பின் யார்ன்னு யாருக்கும் தெரியாது. எனக்கு……மனைவிக்குப் பின் மாமியார். நான் கோவிச்சுக்கிட்டு என் அம்மா வீட்டுக்குப் போனால் உனக்கு வருத்தம், வீண் கலவரம், சங்கடம். நான் உன் அம்மா வீட்டுக்குப் போறேன். நீ கோபம் மாறி வா. இல்லே அங்கே நியாயம் சொல்லி மீட்டு வா. வர்றேன்.” நகர்ந்தான்.

பவித்ரா சட்டென்று அவன் கையை இறுக்கப் பிடித்து நிறுத்தியது. முகம் பம்மியது..

”நான் தப்பு செய்யலைடா.” இவன் தழைந்து….தழுதழுக்க….

”தெ….தெரியும். தினம் சட்டையில அடிச்ச பூ வாசனைதான் முதல் எதிரி. அந்த கோபம், மௌனம்….உங்களுக்கு நான் வைச்ச பரிசோதனை. நீங்க எனக்கான சுத்தமான ராமன். தப்புக்கு மன்னிச்சுக்கோங்க…..” கணவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் துடைத்தாள்.

நிறைவுடன் கதிரவன் மனைவியின் தலையை வாஞ்சையாய் வருடினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *