மவளே,மவளே என்று அந்த வார்டிலிருந்து முனகிக் கொண்டிருந்தார் பஞ்சு. உண்மையில் பஞ்சு பிரம்மச்சாரி.வயது அறுபதுக்கும் மேல்.அப்புறம் எப்படி மவளே என்று பாதி பிரக்கனையில் அழைக்கிறார் என்று கேட்கிறீர்களா.
அவர் கணவன் ஆகின்ற யோக்கிதை இல்லை என்று மறுத்த சமூகம் தான் அவர் தனிமரமாய் நிற்பதற்கு காரணம்.
அவர் வேலை பார்த்த கடை முதலாளிகள் எல்லாம் உடல் உபத்திரவத்தால் படுக்கையில் கிடக்கும் போது ஒரு எட்டு வந்துப் பார்க்கவில்லை.
கடைசியாக பஞ்சு வேலை பார்த்த கடை முதலாளியின் பெயர் சங்கரலிங்கம். வங்கியில் பணம் கட்டுவது,கடன் வசூல் செய்வது வரவு செலவு இத்தனையும் பஞ்சு ஒருவரே செய்து வந்தார்.
சங்கரலிங்கத்தின் ஒரே மகள் தான் காமாட்சி. ராசாத்தி என்று தான் அழைப்பார்கள் அவளை.சின்ன எஜமானியம்மா என்ற தோரணை அவளிடம் கொஞ்சமும் இல்லை.
மயில் போன்று துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த அந்தப் பெண் கொஞ்ச நாட்களாய் பெட்டிப் பாம்பாய் அடங்கிக் கிடந்தாள்.சங்கரலிங்கம் கொஞ்ச நாளாய் எல்லோர் மீதும் எரிந்து விழுந்தார்.
காமாட்சி காதல் வலையில் சிக்கியிருப்பது அவள் சொல்லித்தான் தெரிய வந்தது.கண்ணீரும் கம்பலையுமாக அவள் நின்ற கோலத்தைப் பார்த்து மவளே அழாதே மவளே நான் சேர்த்து வைக்கிறேன் மவளே என் வாக்குறுதி அளித்தார் பஞ்சு.
தன்னால் அந்த வீட்டில் இருக்க முடியாது என்று கட்டின சேலையோடு வந்து நின்ற காமாட்சிக்கு அடைக்கலம் தந்தார் பஞ்சு.
பல இடையூறுகளுக்கு மத்தியில் தனியொரு ஆளாக எல்லா இடைஞ்சல்களையும் எதிர்கொண்டு காமாட்சிக்கு கல்யாணம் பண்ணி வைத்தார்.
தான் ஒத்த கட்ட என்று அவருக்கு இதுவரை தோணவேயில்லை.எந்த வம்பு தும்பு வந்தாலும் காமாட்சியின் ஓட்டு இவர் கட்சிக்குத்தான்.திருமணம் நடந்திருந்தால் காமாட்சி வயதில் பெண் இருக்கும் இவருக்கு.தந்தையாகாமல் காமாட்சிக்கு தாயுமானவனாகிப் போனார்.அப்பு அப்பு என காமாட்சி அவரை விளிக்கும் போது மெய்சிலிர்த்துப் போகும் அவருக்கு.
என்ன தான் சொல்லுங்கள் பொம்மலாட்ட பொம்மைகள் தான் நாமெல்லாம்.நாம் இஷ்டப்பட்டதை செய்ய முடிகின்றதா இங்கே.நூலை அசைத்து ஆட்டுவிக்கிறவனுக்கு நாமெல்லாம் கொசு போல, பேரண்டத்தில் நாமெல்லாம் சிறு தூசு.பணம் ஒருவரை எவ்வாறெல்லாம் மாற்றிவிடுகிறது.சின்னஞ் சிறுசுகள் உள்ளத்தில் என்ன ஆசை இருக்கும் என்று அந்த வயதை கடந்து வந்தவர்களுக்கு தெரியாதா என்ன.
தங்களுடைய சமூகம் என்ற கூட்டுக்குள் அவர்களை அடைத்து வைத்து அவர்களுடைய ஆசையை நிராசையாக்கி விருப்பத்தை வேறோடு அறுக்கிறார்கள்.இரத்தத் திமிரில் இல்லாததை எல்லாம் பண்ணித் தொலைத்து கடைசியில் கங்கையில் முங்கினால் பாவம் தொலையுமா?
நிமிடத்துக்கு நூறு முறை சிவ சிவ என்று சொல்பவர்கள்,அவனுடைய படைப்பை நேசிக்க கற்கவில்லை.தனக்கான கடவுள் யார் இருக்கிறார் இங்கே.தங்களுக்குள் வலை பின்னிக் கொண்டு அதைத் தாண்டிப் போக எத்தனித்தால் விழுங்கிவிடுவேன் என்பது எவ்வகையில் நியாயம்.
வண்ணத்துப்பூச்சி தனது தோட்டத்தைத் தாண்டக் கூடாது என்றால் எவ்வகையில் நியாயம் ஆகும்.கூட்டுப் புழுவுக்கு சிறகு முளைப்பதே சுதந்திரமாய் பறப்பதற்குத் தானே.தன்னைச் சுற்றி வேலி அமைத்து விருப்பப்பட்டாலும் தாண்டக் கூடாது என்பது, தன் பூந்தோட்டத்தில் உள்ள பூக்களின் மணம் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி செல்லக்கூடாது என்பது எவ்வளவு அறிவீனம்.
உங்கள் அகந்தையைப் போய் குப்பையில் போடுங்கள்.விடலைப் பசங்க என்றால் விட்டுவிடச் சொல்லலாம் காதலை.உங்களது ஈகோவுக்காக அவளது வாழ்க்கையை யார் பலி கேட்கச் சொன்னது.உங்களிடம் எதாவது எதிர்பார்த்தாலா அவள்,அவர்கள் வேண்டி நின்றதெல்லாம் உங்கள் ஆசிர்வாதத்தினை அது கூட தரமுடியாது அல்லவா உங்களால்.
பிரசவத்துக்கு தாய் வீட்டுக்கு காமாட்சியை அழைத்து வந்திருந்தாள் இந்த கதி அவளுக்கு ஏற்பட்டு இருக்குமா.போகையில் என்ன எடுத்துச் செல்ல போகிறீர்கள்.காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே.
இரு ஜீவன்களும் வருங்காலத்தைப் பற்றி கோட்டை அல்லவா கட்டியிருக்கும்.இப்படி கருக வைத்து விட்டீர்களே.விதி என்ன செய்யும் விதி,மதி கெட்ட மூடர்கள் செய்த சதி தான் இது.
அடுப்பில் எரிவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கிக் கொண்ட காமாட்சியையும் அவள் கணவனையும் கரிக்கட்டையாக பார்த்துவிட்டு வந்து படுத்தவர் தான் பஞ்சு மவளே,மவளே என்று சொல்லிய வாய் இரண்டு வாரமாக மூடவே இல்லை.