பர்ஸனல் ஸ்பேஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 19, 2023
பார்வையிட்டோர்: 2,469 
 
 

“காலைல எழுந்த உடனே facebook ஆ? நல்லா வெளங்கிடும் குடும்பம்” காப்பியை எடுத்துக்கொண்டு வந்த வனஜா எரிந்து விழுந்தாள்.

“எழுந்தோமா எதாச்சும் வீட்டு வேலை செஞ்சோமா, பொண்டாட்டிக்கு ஒத்தாசையா இருந்தோமான்னு இல்லாத எப்பப்பாரு இதக் கட்டிக்கிட்டு அழவேண்டியது. இல்ல, தெரியாமத்தான் கேக்கறேன்.. நீங்களும் இந்த குடும்பத்துக்குத் தலைவர் தானே? வீட்டுல என்ன நடக்குதுன்னு வெவரம் தெரியுமா? பிள்ளைங்க என்ன மார்க் வாங்கறாங்கன்னு தெரியுமா? இல்ல, அவங்க எந்த கிளாஸ் படிக்கறாங்கன்னாவது தெரியுமா? எப்பப்பாரு இதுவேவா? ஒரு முடிவே இல்லையா?” பேசி முடிக்கும்போது வனஜாவின் முகம் சிவந்திருந்தது. கண்களில் நீர் கோர்த்து விட்டது.

“இப்ப என்ன நடந்திச்சுன்னு இப்படி கோபப் படற? நான் என்ன செய்யல நம்ம குடும்பத்துக்கு? ஒவ்வொருத்தருக்கும் பார்த்துபார்த்து செய்யலியா? கேட்டதெல்லாம் வாங்கித்தரலியா? வருஷா வருஷம் லீவுக்கு வெளில கூட்டிக்கிட்டு போகலியா? லாஸ்ட் ரெண்டு வருஷமா வெளிநாடு வேற போனோம். என்ன பன்னால நான்? எனக்குன்னு கொஞ்சம் பர்ஸனல் ஸ்பேஸ் எடுத்துக்கிட்டா தப்பா?” என்று பதிலுக்கு இரைந்தான் சிவராமன்.

வனஜா அழத்துவங்கினாள். அவள் அழுவதைப் பார்த்து சிவராமன் கோபம் தணிந்தான்.

“வனி! செல்லம்! சாரிடா! அழாதே! சரி நான் facebook பாக்கல. என்ன ஹெல்ப் செய்யணும் சொல்லு. காய் நறுக்கித்தரவா? வெளில போய் ஏதும் வாங்கி வரணுமா? என்ன வேணும் சொல்லு.”

“ஒண்ணும் வேணாம் போங்க” என்று ஊடினாள் வனஜா.

ஒரு பத்து நிமிடம் பிடித்தது சிவராமனுக்கு அவளை சமாதானம் செய்ய. நார்மலான வனஜா சொன்னதைக் கேட்டு சிவராமனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“என் கோயம்புத்தூர் சித்தப்பா இருக்காரில்ல.. அவர் பொண்ணுக்கு அதான் என் கடைசி தங்கச்சிக்கு வர்ற பதினஞ்சு கல்யாணம். பத்திரிகை வந்திருக்கு. போன்லேயும் பேசறேன்னு சொல்லியிருக்கார். நாம அவசியம் போகணும். இன்னிக்கே டிக்கட் புக் செஞ்சுடறீங்களா?”

“என்னது பதினஞ்சாம் தேதியா?” சிவராமன் நெற்றி சுருங்கியது.

“ஏன் அன்னிக்கு வேற என்ன விசேஷம்? எதாச்சும் ஆபீஸ் மீட்டிங் இருக்கா?”

“இல்லை அன்னிக்கு என்னோட ****** க்ரூப் மீட்டிங் ஒண்ணு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. சென்னைலதான். அதுக்குக் கண்டிப்பாப் போகணும்னு…”

வனஜா முகம் மீண்டும் சிவந்தது. கோவத்தில். “என் தங்கச்சிக் கல்யாணத்தை விட உங்க facebook க்ரூப் மீட்டிங் பெரிசா போச்சா? நான் பிள்ளைங்கள கூப்பிட்டுக்கிட்டு தனியா போய்க்கறேன்” என்று விருட்டென்று அங்கிருந்து போனாள் .

அடுத்த ஒரு மணி நேரம் அங்கே ஒரு அமைதி நிலவியது. எதுவும் பேசாமல் சிவராமன் வங்கிக்குக் கிளம்பினான். வழக்கமாக லஞ்ச் கையில் கொண்டுவந்து தரும் வனஜா, அன்றைக்கு டைனிங் டேபிள் மேல் வைத்துவிட்டு சென்றுவிட்டாள்

சிவராமனும் எதுவும் பேசாமல் கிளம்பிப்போனான்.

அன்றைக்கு வங்கிக்கு ரிட்டயர்டு ஏஜிஎம் வந்திருந்தார். டெபிட் கார்டு மாற்றிக்கொள்ள. சிவராமன் அவரை வரவேற்று அவர் வேலையை செய்து கொடுத்தான். பிறகு காப்பி வந்தது. குடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள். “ரிட்டயர்டு வாழ்க்கை ஜாலிய போகுதா ஜி?” என்றான் சிவராமன்.

ஏஜிஎம் முகம் சட்டென்று வாடியது. “அத ஏன் கேக்கற சிவா..ஆபீஸ், ப்ரமோஷன்னு ஓடியோடி வேலை செஞ்சேன். குடும்பத்தை கவனிக்கல. வேண்டியது எல்லாம் செஞ்சிருக்கேன்னு என்ன நானே சமாதானம் செஞ்சுக்குவேன். ஆனா அவங்களுக்கு வேண்டியது நான் என்னுடைய டைம்னு புரிஞ்சுக்கல. ரெண்டு பையன்களும் யுஎஸ் செட்டில்டு. வாவான்னு அம்மாவைக் கூப்பிட்டு வச்சுக்கறாங்க. என்னையும் கூப்பிட்டாங்க. எனக்கு அங்க குளிர் ஒத்துக்கல. ஆனா என் மனைவி கொறஞ்சது ஆறு மாசம் யுஎஸ்-லதான் இருக்கா. நான் இங்க தனியா. இப்பத்தான் குடும்பத்தோட அருமை புரியுது” என்று முடித்தார். சொல்லி முடிக்கையில் அவன் கண்கள் கலங்கி விட்டது. சிவராமன் கண்களும்தான்.

அன்று மாலை வீடு திரும்பிய சிவராமன் வனஜாவின் வாடிய முகத்தைப் பார்த்தான். அவன் கேட்காமலேயே காப்பி எடுத்து வந்தாள். காப்பியை வாங்கிக்கொண்டவன் அவள் கையில் ஒரு கவரைக் கொடுத்தான்.

கண்களில் கேள்விக்குறியோடு அதை வாங்கி உள்ளே இருந்த பேப்பரை எடுத்தப் பிரித்துப் படித்த வனஜாவின் முகம் மலர்ந்தது.

அவர்கள் நால்வரும் கோவை போவதற்கான டிக்கட்.

“கோவம் போச்சா வனி?”

“ம்ம்ம்ம்” என்றாள் வனஜா. சிவா அவளை இறுக்கி அணைத்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *