கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 27, 2024
பார்வையிட்டோர்: 2,867 
 
 

“என்னங்க!”

“என்ன?”

“ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கும் லேப்டாப்பை வச்சுக்கிட்டு மாரடிக்கிறீங்க?”

“முக்கியமான ஆஃபிஸ் வேலை டி! டிஸ்டர்ப் பண்ணாதே”.  லேப்டாப்பிலிருந்து முகம்
திருப்பாமல் பதில் சொன்னான் ரமேஷ்.

“ஆமா… ஆஃபிஸ்ல இருக்கறபோது கதை பேசி கூத்தடிக்கறது, இங்க வீட்டுல  வந்து ஆஃபிஸ் வேலை செய்யவேண்டியது…”

“அநாவசிய பேச்சு வேண்டாம். உனக்கு  என்ன வேணும்?”

“வீட்டைப் புத்தியும் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கிட்டா என்னன்னு கேட்கிறேன்!”

“நான் எதுல அக்கறை எடுத்துக்கல்ல சொல்லு?”

“உங்கப் பிள்ளையாண்டான் டென்த் போயிருக்கான் தெரியுமோல்லியோ?”

“இதச் சொல்றதுக்குதான் இவ்வளவு பில்டப்பா?”

“இங்க்லீஷ், தமிழ், சயின்ஸ்,  சோஷியல்.. ஏன் இந்தியில் கூட நிறைய மார்க் எடுத்திருக்கான். ஆனால் கணக்குல மட்டும் நாற்பது மேல் வாங்கல்லை.”

“சரி. பாஸ் மார்க் வாங்கியிருக்கான்ல. அது போதாதா?”

“எப்படி போதும்?  நாளைக்கே ப்ளஸ் ஒன்லயும், பிளஸ் டூ விலேயும் இந்தமாதிரி மார்க் எடுத்தா எந்தக் காலேஜ்ல சீட் தருவாங்க?”

“சரி.என்ன பண்ணனுங்குற?”

“கணக்குப் பாடத்துக்கு மட்டும் டியூஷன் வைங்க!”

“மாதாந்திர செவவுகளே மென்னியப் பிடிக்கறது.  இந்த அழகுல டியூஷன் வேறயா ? அதெல்லாம் கட்டுப்படி ஆகாது”

“இப்படிச் சொன்னா எப்படி? பையனோட படிப்புக்காக ஏதாவது செலவை  குறைச்சுப்போம்.”

“எதைக் குறைப்பே? வீட்டு வாடகையைக் குறைப்பையா; குறைச்சா உடனே நம்மள காலி பண்ணச் சொல்லுவார் வீட்டுக்காரர். பால், அரிசி, புரொவிஷன், கரெண்ட் பில், இந்தச் செலவெல்லாம் குறைச்சுக்க முடியாது. காய்கறி விலை வேற நாளுக்கு நாள் விஷம் போல ஏறிக்கிட்டிருக்கு. மாதா மாதம் எக்ஸ்ட்ரா பணம்தான் செலவாகிறது.  எதையும் குறைக்க முடியாது” தீர்த்துச் சொன்னான் ரமேஷ்.

“மனசு இருந்தா மார்க்கமுண்டு! திட்டம் போட்டு செஞ்சால் ஒரு தெளிவான வழி கிடைக்கும்.”

“அட கடவுளே!” என்று சலித்துக் கொண்டவன், “சரி, உன் பிள்ளைக்கு நீயே கணக்கு
டியூஷன் எடு.”

“நானா, விளையாடறீங்களா?  நீங்க பார்த்துக்கிட்டுத்தானே இருக்கீங்க. ஃப்ரீயாவா இருக்கேன்? வீட்டு வேலையே மூச்சுத் திணறுது. இந்த அழகுல நான்  எப்படிங்க பிள்ளைக்கு கணக்கு சொல்லித்தர்றது?” சொன்னவள் பார்வையில் முறைப்பும் கோபமும் இருந்தது.

“நீ தானே சொன்னே, மனசு இருந்தா மார்க்கமுண்டுன்னு! அதன்படி நடந்துக்கிட்டா செலவு எதையும்  குறைக்காமல்  இருக்கலாம். உன் பிள்ளையாண்டானும் கணக்கில இம்ப்ரூவ்மெண்ட் ஆயி நல்ல மார்க் எடுப்பான். என்ன சரியா?”

“அப்போ பிள்ளையாண்டானுக்கு டியூஷன் வைக்க மாட்டீங்க?”

அதேநேரம் அவர்களின் மகன் அரவிந்த் அம்மாவின் வாக்குவாதத்தைக் கேட்டபடி   அங்கு வந்தான். “அம்மா..பாவம் அப்பா! இப்படிப் போட்டு டார்ச்சர் பண்றியே?”  என கேட்டான்.

“வாடா வா. என்ன அப்பாவுக்கு சப்போர்ட்டா?” என செல்லமாகக் கடிந்துகொண்ட  அகல்யா, “டேய்.. உன்னோட நல்லதுக்குதான் சொல்றேன்.  நீ இப்படியே கணக்குல மார்க் எடுத்துக்கிட்டிருந்தா உனக்கு எந்தக் காலேஜிலேயும் சீட் கிடைக்காது!” என்று எச்சரிக்கை செய்தாள்.

“அடப்போம்மா! நான் மட்டுமா கணக்குல வீக்? தாத்தா, கொள்ளுத்தாத்தா, எள்ளுத்
தாத்தா இவங்கள்ளாம் கூட கணக்குல வீக்குன்னு கேள்வி! அவங்கள்ளாம் படிச்சி முடிச்சு கெளரவமா வேலைக்குப் போய் சம்பாதிக்கல்லையா…இது ஒரு பரம்பரை டிஃபக்ட்டுன்னு எடுத்துக்க வேண்டியதுதான்!”

“ஆமாண்டா! ஷூகர், பி.பி., கொலஸ்ட்ரால் பாரு பரம்பரையில வர…சரி, உன்னோட ஐடியாதான் என்ன?”

‘ம்’ உதட்டில் தன் இரு விரல்களை வைத்தபடி யோசனை செய்தவன், “உன்னால் முடியாதுங்ற. அப்போ, அப்பாவே  சொல்லிக் கொடுக்கட்டும்” என்றான்.

க்ளுக் கென்று சிரித்த அகல்யா, ”  அரவிந்தா! உனக்குத் தெரியுமா? உங்கப்பாவும்  கணக்குல வீக். மூணு தரம் கோட்டடிச்சு நாலாவது அட்டெம்ட்டுலதான் பாஸ் பண்ணினார்”

“அப்படியா! நல்லதாப் போச்சு. அப்பாவுக்கு, நாலு வருஷம் கணக்குப் பாடம் படிச்ச எக்ஸ்பீரியன்ஸ்  இருக்குல்ல! அது ஒண்ணே போதுமே! அதை வச்சி ஒப்பேத்திக்கிறேன்”   எனக் கூலாக கூறிவிட்டு அரவிந்த் நைசாக இடத்தை காலி செய்தான். 

அகல்யா தன் புருஷன் முகத்தைப் பார்த்தாள்.

அதில் வண்டி வண்டியாக அசடு வழிந்து ஓடிக் கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *