பரமேஸ்வரியின் குடிசை

3
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 16,494 
 
 

நான், முகுந்தன், ரவி மூவரும் பன்னிரெண்டாம் வகுப்பில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் வாங்கினோம் என்று முதலிலேயே சொல்லிவிட்டுத் தொடங்கினால் எங்களைப் பற்றிய நல்ல அபிப்ராயம் ஏற்படும் என்று நினைக்கிறேன். காரணம் தலை போகிற தவறு இல்லையென்றாலும், “படிக்கிற வயசுல இப்படியெல்லாம் பண்ணலாமா’ என்று கேட்டுவிடக் கூடாது என்பதால்தான். அப்படி என்ன செய்துவிட்டோம் என்கிறீர்களா? “ஒரு மரத்துக் கள் உடம்புக்கு நல்லது’ என்று பள்ளியின் வாட்ச்மேன் சொல்லப்போக, குடித்தால்தான் என்னவென்று பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது பரமேஸ்வரி அக்காவின் குடிசைக்குப் போனதுதான் அந்தத் தவறு.

பரமேஸ்வரியின் குடிசை

தார் ரோட்டிலிருந்து ஏழெட்டு வயல் வரப்புகளைக் கடந்ததும் நீண்ட அகலமான கொட்டப்பாக்கம் திடல் படுத்திருக்கும். அங்குதான் பரமேஸ்வரி அக்காவின் குடிசை இருந்தது. அந்தத் திடலுடன் கைகுலுக்குவது போல், கிராமம் என்றோ தெரு என்றோ சொல்ல முடியாத, ஒரு வடிவமைப்பு இல்லாத பகுதியில் ஏகப்பட்ட குடிசை வீடுகள். ரோட்டிலிருந்து இந்தப் பகுதிகளுக்குச் செல்வதற்கு மண்ணால் அமைந்த பாதை. வயல்களுக்கு நடுவே இருந்தது இந்தக் குட்டிப் பிரதேசம். இரவில் மக்களைக் காவல் காப்பது போல் நூற்றுக்கணக்கான பனை மரங்கள். பாளை சீவிய மரங்களிலிருந்து கலயங்களில் விழுந்துகொண்டிருந்தன கள் சொட்டுகள்.

எதிர்காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. இப்போது நாங்கள் மூவரும் கீழ்வேளுரிலிருந்து ரயிலடி வழியே சைக்கிளில் சென்றுகொண்டிருந்தோம். எனது சைக்கிளில் முகுந்தன் உட்கார்ந்திருக்க, ரவி அவனுடைய சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். கொட்டப்பாக்கம் திடலிலிருந்து மூன்று, நான்கு கிலோ மீட்டருக்குள் எங்களின் வீடு இருக்கின்றன. இப்போது பள்ளி விட்டதும் நேராக பரமேஸ்வரியின் குடிசைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். முகுந்தனுக்கு ஏற்கெனவே கள் குடித்த பழக்கம் இருந்தது. எனக்கும், ரவிக்கும் இல்லை. வாட்ச்மேனோடு முகுந்தனும்கூட எங்களைத் தூண்டிவிட்டான். அதுமட்டுமின்றி ரவி எங்களோடு படிக்கும் லதாவை ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருந்தான்.

வகுப்பில் உட்கார்ந்திருக்கும்போது அவள் அடுத்த பெஞ்ச்சில் இருந்த மகேஸ்வரியைப் பார்த்துச் சிரித்தாலும் தன்னைத்தான் பார்த்துச் சிரிக்கிறாள் என்பான். இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும் அவசரத்தில் பெஞ்சுக்கு இடையிலிருந்து வந்தவள் இவன் மீது லேசாக மோதியதுகூட தன் மீதிருந்த பிரியத்தால்தான் என்றான். இன்றும் அதுபோல ஒரு விஷயம் நடந்தது என்றான். பள்ளியின் நுழைவாயிலிலிருந்து அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லதா, அவனுடன் சேர்ந்து வருவதற்காக செருப்பைச் சரி செய்வதுபோல் கீழே குனிந்தாளாம். இவன் பக்கத்தில் வந்ததும் சேர்ந்து நடந்தாளாம். லேசாக இவனைப் பார்த்துச் சிரித்தாளாம்.

ரவி இவ்வாறு கூறியபோது “செருப்பைக் கழட்டி அடிக்கிறதுக்காக கீழ குனிஞ்சாளோன்னு நினைச்சேன்’ என்றான் முகுந்தன். லதா மற்ற பெண்களைப் போல் இல்லை. மாம்பழ சிவப்பில் நல்ல அழகாக இருந்தாள். நன்றாகப் படித்தாள். யாருடனும் அதிகம் பேச மாட்டாள். அந்த வயிற்றெரிச்சலில் முகுந்தன் இவ்வாறு சொன்னான். லதா அன்று காலையில் ஏற்படுத்திய பரவசத்தில்தான் ரவியும் இன்று கள் குடிக்க எங்களோடு வந்துகொண்டிருந்தான். நாங்களும் எதிர்காற்றில் சைக்கிளை மிதித்து கொட்டப்பாக்கம் திடலடியைச் சேர்வதற்கான வயல் வரப்புகளுக்கு முன்னால் வந்துவிட்டோம்.

ஆனாலும் திடீரென ஒரு தயக்கம். “”நமக்கு தெரிஞ்சவங்க யாராவது திடல்ல இருந்தா என்னடா பண்றது? நம்ம அப்பாகிட்ட சொல்லிடுவாங்களே..”என்றான் ரவி. “”அப்படியே இல்லாட்டினாலும் குடிச்சுட்டுப் போனா மட்டும் கள்ளு வாசனை வராதா? வீட்டுல உதைக்க மாட்டாங்களா” என்று நானும் பயத்துடனே சொன்னேன். “”ஸ்பெஷல் கிளாஸ்னு சொல்லிட்டு வீட்டுக்கு லேட்டா போய்டலாம். இப்ப சைக்கிளைக் கொஞ்சம் முன்னாடியே நிறுத்திட்டு போவோம்டா. யாராவது இருக்கிற மாதிரி தெரிஞ்சிதுன்னா திரும்பி ஓடிவந்துடுவோம்” என்றான் முகுந்தன்.

சரியென்றபடி தூங்குகின்ற வெறிநாயைப் பயத்துடன் கடப்பது போல் மெல்ல திடலை நெருங்கினோம். சற்றே உயரமான வரப்பின் மறைவிலிருந்து பரமேஸ்வரியின் குடிசையைப் பார்த்தோம். நல்ல வேளையாக எங்கள் மூவருக்கும் தெரிந்தவர்கள் யாரும் அங்கே இல்லை. “அப்பாடா!’ என்ற பெருமூச்சோடு குடிசையை நெருங்கினோம். முகுந்தனுக்கு ஏற்கெனவே இங்கு வந்து பழக்கமிருந்த நிலையில் நானும், ரவியும் அப்போதுதான் அந்த இடத்தைக் கண்டோம். பனை ஓலைகளால் வேயப்பட்டிருந்தது பரமேஸ்வரியின் குடிசை.

பெரிய பானைக்கு முன்னால் பலகையில் உட்கார்ந்திருந்தது பரமேஸ்வரி அக்கா. நல்ல கட்டுமஸ்தான உடல் வாகு. மாநிறம் என்றாலும் களையான வட்ட முகம். இரண்டு இரண்டு பேராக பிளாஸ்டிக் கப்புகளில் கள்ளுடன் திடலில் ஆங்காங்கே உட்கார்ந்திருந்தனர். தன்னருகே நின்றுகொண்டிருந்த லுங்கி கட்டிய ஓர் ஆளுக்கு பிளாஸ்டிக் குடத்திலிருந்து கள் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தது பரமேஸ்வரி அக்கா. நாங்கள் வந்ததை ஏதேச்சையாகத் திரும்புகையில் பார்த்துவிட்டது.

பள்ளி யூனிஃபார்ம். மூன்று பேருக்கும் அப்போதுதான் மீசை முடிகள் வெளியில் எட்டிப் பார்த்திருந்தன. எங்களைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி, “”என்னப்பா வேணும்?” என்றது. முகுந்தன்தான் வாய் திறந்தான். ‘”கள்ளு குடிக்க வந்திருக்கோம்” என்றான். “”அங்கேயே நின்னா எப்படி? இங்கே வாங்க தர்றேன்” என்றது. நாங்களும் அருகில் சென்றோம். “”இங்கே பாருடா…

பள்ளிக்கூடம் படிக்கிற பசங்ககூட வீணா போயிட்டானுங்க” என்று மப்பு ஏறிய யாரோ ஒருவர் சொன்னார். “”கள்ளுதானே… உடம்புக்கு நல்லதுதான்” என்று எங்களுக்கு சப்போர்ட்டாக யாரோ வேறு ஒருவர்.

“”இன்னைக்குக் கள்ளு குடிக்கச் சொல்லும். நாளைக்கு சாராயம் குடிக்க சொல்லும்” என்று மீண்டும் அந்த நபர் சொல்ல “”உங்க வேலையைப் பார்த்துட்டு குடிங்கப்பா.. ஏதோ சின்ன பசங்க ஆசைப்பட்டு வந்திருக்கானுங்க. எவ்வளவுப்பா வேணும்” என்றது பரமேஸ்வரி அக்கா.

“”ஆளுக்கு ஒரு லிட்டர் கொடுங்க” என்றான் முகுந்தன்.

மூன்று பிளாஸ்டிக் கப்புகளில் வரிசையாக ஊற்றிக் கொடுத்தது. முன்னரே மொத்த காசையும் முகுந்தனிடம் கொடுத்திருந்தோம். பரமேஸ்வரி அக்காவிடம் கொடுத்தவன் “”வாங்கடா அங்க ஓரமா உட்கார்ந்து குடிச்சிட்டு சீக்கிரம் போயிடுவோம்” என்றான்.

ஓரத்தில் இருந்த கருவேல மரத்திற்குக் கீழ் மூவரும் சென்றோம். அந்த மரத்திற்கு அருகிலேயே ஒருவர் உட்கார்ந்திருந்தார். காரமான பொட்டுக்கடலை, பட்டாணி சுண்டல், ரத்தப் பொரியல், கோழி ஈரல் என்று வைத்திருந்தார். அவரைத் தாண்டி இன்னொரு அம்மா சிறிய பாத்திரத்தில் தோசை அடுக்கி வைத்திருந்தது. அதற்கேற்றாற் போல் சிவப்பு நிறத்தில் காரமான சட்னி. சிலர் கள்ளுக்கு உகந்த மாதிரி வாங்கிச் சென்றனர்.

“”இருங்கடா ஏதாவது வாங்கிட்டு வர்றேன்” என்ற முகுந்தன் பட்டாணி சுண்டல் வாங்கி வந்தான்.

“மடக் மடக்’கென கப்பில் வாயை வைத்து உறிஞ்சத் தொடங்கினான். எனக்கும், ரவிக்கும் வாயின் அருகே கொண்டு சென்றபோது ஒரு மாதிரியாக இருந்தது. நுங்கு வாசனை வந்தது. “குடிச்சிட்டா ஒண்ணும் தெரியாது’ என்றான் முகுந்தன் பட்டாணி சுண்டலைத் தின்றபடி. நாங்களும் மெல்ல உறிஞ்சத் தொடங்கினோம். அதற்குள் முகுந்தன் குடித்து முடித்திருந்தான். சுண்டலும் தீர்ந்துவிட, எங்களுக்காக மீண்டும் போய் சுண்டல் வாங்கி வந்தான். அவன் நடந்து சென்றபோது மிதப்பில் கால்கள் கொஞ்சம் பின்னுவது போல் இருந்தன.

நாங்களும் சுண்டலைத் தின்றபடி குடித்து முடித்தோம். ஒரு மாதிரியாக இருந்தது. “”என் ஆளு ரொம்ப அழகா இருக்கால்ல” என்று லதாவின் நினைவுகளில் ரவி மூழ்கத் தொடங்கினான். “”அவ என்னை லவ் பண்றாளா மாப்ள…?” என்றான் சந்தேகத்துடன். என்னைப் பார்த்துக் கண்ணடித்த முகுந்தன் “”இல்ல மாப்ள அவ என்னைத்தான் லவ் பண்றா” என்றான். “”டேய் முகுந்தா சும்மா இருடா. எதுக்குடா அவனை வெறுப்பேத்துற?” என்றேன். “”அவன் அப்படித்தான் மாப்ள…” என்றபடி ரவி எழுந்தபோது நாங்களும் எழுந்தோம். தள்ளாட்டம் கண்டது. போதையிலும் திடல் முழுவதையும் நோட்டமிட்டோம். நல்லவேளையாக எங்களுக்குத் தெரிந்தவர்கள் யாருமில்லை. ஆனால் பரமேஸ்வரி அக்கா வியாபாரத்துக்கிடையிலும் எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தது.

அதன் உதட்டோரங்களில் எங்களின் சேட்டைகளைப் பார்த்து ஒரு நக்கலான சிரிப்பு. “”பிளாஸ்டிக் கப்ப இங்கே கொண்டு வந்து கொடுத்திட்டுப் போங்கப்பா” என்றது. “”இன்னும் கொஞ்சம் கள்ளு குடிக்கலாமா” என்று முகுந்தன் சொல்ல, எங்களுக்கும் ஆசை இருந்தது. ஆனால் கூட்டிக் கழித்துப் பார்த்தபோது காசு ரொம்பவும் குறைவாக இருக்க அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தோம்.

மூன்று பிளாஸ்டிக் கப்புகளையும் பரமேஸ்வரி அக்காவிடம் கொடுக்கச் சென்றான் முகுந்தன். கப்புகளை வாங்கியபடி, “”நீங்களெல்லாம் எந்த ஊருப்பா?” என்று பொதுவாகக் கேட்டது பரமேஸ்வரி. அவரவர்களின் ஊரைச் சொன்னோம். “”பார்த்துப் போங்கப்பா” என்றது. பிளாஸ்டிக் கப்புகளைக் கொடுத்துவிட்டு எங்களருகே வந்த முகுந்தன் “”போதை ஏற ஏற லதாவோட நினைப்பு அதிகமாகுது மாப்ள” என்றான்.

“”ஏன்டா என் ஆளையே வம்புக்கு இழுக்குறீங்க” என்று டென்ஷனனானான் ரவி. “”அப்படியில்ல மாப்ள. சும்மா ஜாலிக்காகத்தானே” என்று அவனை நான் சமாதானப்படுத்த, போதை தந்த குஷியில் ஒரு வரப்பை ஓடிவந்து தாண்ட நினைத்த முகுந்தன் கால் இடறி பொத்தென்று கீழே விழுந்தான். ரவிக்கு அது சந்தோஷத்தைத் தர குபுக்கென்று சிரித்தான். நல்ல வேளையாக முகுந்தன் அந்த சமயத்தில் கோபப்படவில்லை. ஒருவழியாக நிறுத்தியிருந்த சைக்கிளின் அருகே வந்தோம்.

சைக்கிளின் ஸ்டாண்டை எடுத்துவிட்டு ஓட்ட எத்தனித்த போது எனக்கும், ரவிக்கும் கால்கள் இடறின. முகுந்தன் எனது சைக்கிளை வாங்கிக் கொஞ்சம் திடமாக ஓட்டத் தொடங்கினான். நான் பின்னால் ஏறிக் கொள்ள, ரவி ஒருவழியாக சுதாரித்து சைக்கிளில் ஏறினான். “”இப்படியே ஸ்கூல் கிரெüண்டுக்குப் போய்டுவோம் மாப்ள. அங்கே உட்கார்ந்துட்டு கொஞ்ச நேரம் கழிச்சுப் போகலாம்” என்றேன். அவன் சொன்னபடி தட்டுத் தடுமாறி பள்ளியின் மைதானத்திற்கு வந்தோம்.

லேசாக இருட்டத் தொடங்கியது. விளையாட்டை முடித்துக் கொண்டு எல்லோரும் வீட்டுக்குச் சென்றுவிட, நாங்கள் மூவர் மட்டுமே! ஒருவருக்கொருவர் வாயை ஊதச் சொல்லி கள் வாசம் பெரும்பாலும் குறைந்து நாங்கள் வீட்டுக்குச் செல்லும்போது இரவு 9 மணியாகியிருந்தது. ஸ்பெஷல் கிளாஸ் என்று பொய் சொல்லிவிட்டு யாரிடமும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு நைஸôகத் திண்ணையில் வந்து படுத்துக்கொண்டேன்.

பரமேஸ்வரி அக்காவின் குடிசைக்கு நாங்கள் சென்றதன் முதல் அனுபவம் இப்படியாக அமைந்த நிலையில், அதன்பின் எங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மிகவும் அழுத்தமானவை. பரமேஸ்வரி அக்கா விதவை என்பது பிறகுதான் சண்முகம் அண்ணன் சொல்லி எங்களுக்குத் தெரிந்தது. பரமேஸ்வரி அக்கா குத்தகை எடுத்த மரங்களிலிருந்து சண்முகம் அண்ணன்தான் கூலிக்குக் கலயம் கட்டிக் கள்ளெடுத்துக் கொடுத்தது.

சுரக்குடுக்கையைக் கட்டிக்கொண்டு மரத்தில் ஏறுவதைப் பார்க்க எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். பரமேஸ்வரியக்கா சண்முகத்தை அண்ணன் என்றுதான் கூப்பிடும். அவரின் வீடும் அதே கொட்டப்பாக்கம் திடலில்தான் இருந்தது. பரமேஸ்வரி அக்காவுக்கு ஒரு மகள் இருந்தாள்.

இவையெல்லாம் முதல் முறைக்குப் பிறகு அடுத்தடுத்து நாங்கள் சென்ற நாள்களில் எங்களுக்குத் தெரிந்தவை. பள்ளி மைதானத்தில் நாங்கள் படுத்திருந்த அந்த நாளைக்குப் பிறகு ஒருவாரம் கழித்து நாங்கள் மீண்டும் பரமேஸ்வரியின் குடிசைக்குச் சென்றோம். வழக்கம்போல்தான்…. சைக்கிளை அதே இடத்தில் நிறுத்திவிட்டு, ஒவ்வொரு வரப்பாகக் கடந்தோம்.

தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று ஒரு வரப்பின் மறைவிலிருந்து பார்த்தபோது எங்களுக்குப் பகீரென்றது. எங்களின் உடற்கல்வி ஆசிரியர் குடிசைக்குச்சற்று தள்ளி தனது நண்பர் ஒருவருடன் உட்கார்ந்தபடி கள்ளை உறிஞ்சிக்கொண்டிருந்தார். “எடுடா சாமி ஓட்டம்’ என்றபடி ஒரே ஓட்டமாக ஓடி சைக்கிளில் ஏறிப் பறந்துவிட்டோம்.

அதன்பின் இரண்டு நாட்கள் கழித்து ஞாயிறு விடுமுறை தினத்தில் மாலை சென்றபோது எங்களுக்குத் தெரிந்தவர்கள் யாருமில்லை. எங்களைப் பார்த்து சிநேகத்துடன் புன்னகைத்த பரமேஸ்வரி அக்கா “”என்னப்பா எப்படியிருக்கீங்க?” என்றது. “”பார்த்தா தெரியிலையா” என்றான் முகுந்தன். “”உங்க மூணு பேருலேயே இவன் கொஞ்சம் மோசமான ஆளா இருப்பான் போலருக்கே….” என்றது. அன்று ரவிதான் எல்லோருக்கும் வாங்கித் தந்தான்.

கூட்டம் அதிகமில்லை. சண்முகம் அண்ணன் கள் இறக்கிக்கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றிருக்க வேண்டும். பரமேஸ்வரி அக்காவின் மகள் குடிசையின் வாசலில் உட்கார்ந்து தலை வாரிக்கொண்டிருந்தாள். நீல சட்டையும், வெளிர் மஞ்சள் நிறத்தில் பாவாடையும் கட்டியிருந்தாள். நாங்கள் குடிசைக்குச் சற்று தள்ளியே உட்கார்ந்திருந்ததால் அவள் இப்போது உள்ளே சென்றிருந்தாள். வழக்கம்போல் இந்த முறையும் முகுந்தன்தான் பரமேஸ்வரி அக்காவிடமிருந்து வாங்கிக்கொண்டு எங்களருகே வந்தான்.

காரமான பொட்டுக்கடலையும் கூடவே… ரவிக்கு என்ன தோன்றியதோ… இரண்டு மூச்சுகளில் கடகடவென குடித்து முடித்தான். “”மாப்ள நான் அவள உயிருக்கு உயிரா லவ் பண்றேன் மாப்ள” என்றான். “”இவன் தொல்லை தாங்க முடிய மாட்டேங்குதுடா…. இவனோட சோகக் கதையைச் சொல்லியே நம்ம போதைய இறக்கிடுறான்” என்றான் முகுந்தன். “”விடுறா பாவம்டா….” என்றேன். “”இன்னைக்கு அவன் செலவு பண்றானே அப்படித்தான் சொல்லுவ” என்று முகுந்தன் சொல்ல, போதை ஏறிய ரவி, “”காசாடா முக்கியம் இந்தாங்கடா…” என்று பையிலிருந்து சில ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொடுத்தான். அதை வாங்கிக்கொண்ட முகுந்தன், “”நீ எதுக்கும் கவலைப்படாதே மாப்ள. லதா உனக்குத்தான்” என்றபடி மூன்று கப்புகளில் மீண்டும் கள் வாங்கி வந்தான்.

ஆனால் அப்போதுதான் எங்களுக்குக் கெட்ட நேரமும் ஆரம்பமானது. குடித்து முடித்து போதை ஏறிய எங்களால் அதன் பிறகு ஓரடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. என்ன பேசினோம், என்ன நடந்தது எதுவும் புரியவில்லை. காலையில் விடிந்துபார்த்தபோது பரமேஸ்வரி அக்காவின் குடிசைக்குள் படுத்திருந்ததுதான் தெரிந்தது. “”மல்லிகா, அண்ணன்களுக்குக் குடிக்கத் தண்ணி கொண்டு வந்து கொடு. அடப்பாவிங்களா.. நானும் நேத்து சரியா கவனிக்காம விட்டுட்டேன்.

ஆரம்பத்திலேயே இவ்வளவு கள்ளு குடிச்சா உடம்பு தாங்குமாடா” என்று பரமேஸ்வரி அக்கா சொல்ல மூவரும் எழுந்து நின்று கண்களைக் கசக்கினோம். நடந்ததை நினைத்து பகீரென்றது. இரண்டு சைக்கிள்களும் வெளியே இருந்தன. ராத்திரி ஏன் வரலைன்னு கேட்டா வீட்டுல என்ன பதில் சொல்றது? நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருந்தது. ரவி மீது கோபம் கோபமாக இருந்தது. மல்லிகா கொண்டு வந்து கொடுத்த தண்ணீரில் முகம் கழுவிவிட்டு, பரமேஸ்வரி அக்கா கொடுத்த சூடான டீயைக் குடித்தோம். “”ராத்திரி சாப்புடலைல… இருங்க இட்லி வாங்கிட்டு வரச் சொல்றேன்” என்றது. “”நீங்க வேறக்கா.

வீட்டுக்கு எப்படி போறதுன்னு முழிச்சிட்டிருக்கோம்” என்றபடி சைக்கிளை எடுத்துக்கொண்டு அவரவர்களின் வீட்டுக்கு வந்தோம். வேறென்ன வழி… “”நைட்டு படிச்சுட்டு ஸ்கூல்லயே படுத்துட்டோம்” என்றதை மூன்று வீட்டிலும் நம்பியபோதுதான் எங்களுக்கு மீண்டும் உயிரே வந்தது. பரமேஸ்வரி அக்காவிடம் மற்றொரு நாள் இதைச் சொன்ன போது விழுந்து விழுந்து சிரித்தது. “”ஒழுங்கா படிங்கடா… ஏண்டா இப்படி வீணாப் போறிங்க” என்றது. “”அதெல்லால் இருக்கட்டும்… ஆளுக்கு ஒவ்வொரு லிட்டர் கொடுக்கா” என்றான் முகுந்தன். “”அதுக்கு மேல கொடுக்க மாட்டேண்டா” என்றபடி காசை வாங்கிக்கொண்டு ஊற்றிக் கொடுத்தது. அன்று மாலை இருள் மங்கிய நேரத்தில் நாங்கள் வரப்புகளை லேசான போதையில் கடந்தபோது போதையில் இரண்டு பேர் பரமேஸ்வரி அக்காவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அதைக் கேட்ட எங்களுக்கு சுருக்கென்றது.

ஆண்டுத் தேர்வு நெருங்கிய நிலையில் பரமேஸ்வரி அக்காவின் குடிசைக்குப் போகாத நாங்கள், சில நாட்கள் கழித்து சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பரமேஸ்வரி அக்காவைப் பார்த்தோம். நல்ல வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. வியர்வை வழிய, தலையில் சும்மாடு கட்டிக் கொண்டு தார் டின்னுடன் ரோலருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தது. புதிதாக அங்கே ரோடு போட்டுக்கொண்டிருந்தார்கள். பரமேஸ்வரி அக்கா கறுத்துப் போயிருந்தது.

சைக்கிளைத் தள்ளிக்கொண்டே அருகில் சென்ற நாங்கள் “”எப்படிக்கா இருக்கீங்க..?” என்றோம். எங்களைப் பார்த்து ஆச்சரியத்தில் “”டேய் பசங்களா எப்படிடா இருக்கீங்க?” என்றபடி தார் டின்னை கீழே வைத்துவிட்டு அருகில் வந்தது. “”நல்லாயிருக்கீங்களா” என்றோம். “”நல்லாயிருக்கேன் நீங்க எப்படிடா இருக்கீங்க” என்றது. பன்னிரண்டாம் வகுப்பில் ஆயிரம் மார்க்கிற்கு மேல் எடுத்ததை சொன்னோம். “”அடப்பாவி… கள்ளு குடிச்சிட்டு எப்படிடா ஆயிரம் மார்க்குக்கு மேல எடுத்தீங்க” என்று ஆச்சரியப்பட்டது. வலுக்கட்டாயமாக அருகிலிருந்த டீக்கடைக்குக் கூப்பிட்டது. “”வேண்டாங்க்கா…” என்றோம்.

“”கள்ளு கொடுத்தாதான் குடிப்பீங்களா” என்றபடி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது. “”உன் ஆளு எப்படி இருக்கு?” என்று ரவியிடம் கேட்க, “”அவள் பறந்து போனாளே” என்று பாடிக் காண்பித்தான்.. “”தொலையிது போ…படிக்கிற வயசுல உங்களுக்கு எதுக்குடா இதெல்லாம். ஒழுங்கா படிங்கடா” என்று டீக்குக் காசு கொடுத்த பரமேஸ்வரி அக்காவிடம், “”ஏன்க்கா… இப்பவெல்லாம் கள்ளு விக்கிறது கிடையாதா? ஏன் இப்படி வெய்யில்ல நின்னுகிட்டு இளைச்சு கறுத்துப் போயி கஷ்டப்படுறீங்க” என்றான் முகுந்தன்.

“”பொண்ணு பெரிய மனுஷியாயிட்டாடா… நான் எந்தத் தப்பும் செய்யாமலேயே என்னைப் பத்தி தப்புத் தப்பாப் பேசுறாங்க… நாளைக்கு என் பொண்ணையும் அப்படித்தானே பேசுவாங்க… இப்பவெல்லாம் என் குடிசைக்கு எந்த ஆம்பளையும் வராததுனால பிரச்னையே இல்ல” என்று பரமேஸ்வரி அக்கா சொன்ன போது கண்கள் கலங்கியிருந்தன. “”இவ்வளவு நேரம் என்னம்மா பண்ற” என்று கட்சி வேட்டி கட்டிய காண்ட்ராக்டர் சத்தம் போட்டார். “”இதோ வந்துட்டங்கய்யா” என்று பதறியபடி ஓடிக்கொண்டிருந்தது பரமேஸ்வரி அக்கா.

– அக்டோபர் 2011

Print Friendly, PDF & Email

3 thoughts on “பரமேஸ்வரியின் குடிசை

  1. கதைக்கு இன்னும் சற்று மெனக்கெட்டு இருக்கலாம் என்றுதான் தோன்றியது. கள் விற்கக்கூடிய ஒரு விதவைப் பெண் தன்னுடைய மகள் வயதுக்கு வந்த பின்பு எவ்வித இடையூறும் இருக்கக் கூடாது என்பதற்காக கூலி வேலை செய்து பிழைப்பதாக கூறுகிறது. நற்கருத்து.

    ஆனால் அந்த நற்கருத்தினை கூறுவதற்காக எதற்காக மூன்றாவது தரப்பு மாணவர்களை இந்த கதைக்குள் கொண்டு வர வேண்டும். அதுவும் அவர்கள் கள் குடிக்க கூடிய ஒரு கேடு கெட்டவர்களாக.. வீட்டில் பொய்களைச் சொல்லக்கூடியவர்களாக காட்டி இருப்பது கொடுமை. கள் குடித்துக் கொண்டு வரக்கூடிய சிறகர்களை இனம் காணக்கூடிய அளவிற்கு கூட அவர்களுடைய பெற்றோர்கள் இல்லை என்பது கதையின் பெரிய பொய்யை நம்மை நம்ப வைக்க சொல்லி வற்புறுத்துகிறது. உண்மையில் எந்த பெற்றோராவது இப்படி இருப்பார்களா?

    மாலை வீட்டிற்கு செல்லாமல் மறுநாள் வீட்டிற்கு செல்லக்கூடிய அவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லை என்று கதை சொல்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காணாமல் பதறி அங்கும் இங்கும் தேடி அலைந்திருக்க மாட்டார்களா என்ன?.

    இந்த கருத்தினை சொல்வதற்கு கதையின் நாயகியான விதவைப் பெண்ணை தேர்ந்தெடுத்து இருந்திருக்கலாம். அல்லது அந்த நாயகியின் பெண்ணை கதைக்கான கருவாக தேர்ந்தெடுத்து இருக்கலாம். அவர்களுடைய பாதையில் இருக்கக்கூடிய முட்கள் குறித்தும் இந்த கதையில் அலசப்பட்டிருக்கலாம்.

    சிறுகதை ஆசிரியர் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு ரசிகனாக ஒரு எழுத்தாளராக இந்த கதையில் இருக்கக்கூடியவைகள் குறித்தான விமர்சனம் மட்டுமே இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *