பதிஎழு அறியாப் பழந்தமிழ் மக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 10,564 
 
 

லவுனியா வெட்டவெளிச் சிறையில் இருபது பேருடன் எட்டடிக் குச்சுக்குள் இரவு முழுமையும் முடங்கிக் கிடிந்த அந்தத் தாய், பசியால் அலறி அலறி ஓய்ந்து போன குழந்தையை நெஞ்சில் அணைத்தவாறு வெளியில் வந்தாள்.

விடிந்தும் விடியாத நேரம். காலைப் பனியும் ஊதல் காற்றும் ஈரல் குலையை நடுங்க வைத்துக் கொண்டிருந்தன. என்றாலும் அந்தத் தாயின் உடல் வியர்வையில் நனைந்து தோய்ந்திருந்தது. ஆயாசத்தோடு ஆங்கொரு மண்மேட்டில் அமர்ந்து கால்களைப் பரக்க நீட்டிக்கொண்ட அவள், நெஞ்சுத் துணியை ஒதுக்கி, குழந்தைக்குப் பாலூட்ட முயன்றாள்.

பசியின் வேகம்! சூப்-சூப் என்று வேகமாய்ச் சப்பிய குழந்தை மேலும் வீறிட்டு அலறியது. குழந்தையைத் திருப்பி, அடுத்த பக்க மார்பில் அணைத்தாள். சப்பிப் பார்த்த குழந்தை மீண்டும் அலறியது.

“ஏன் இப்படி?” தன்னைத் தானே கேட்டுக் கொண்ட தாய், தன் விரல் கொண்டே பீச்சிப் பார்த்தாள். மார்க்கண்ணில் இருந்து பால் வரவில்லை. மாறாக, தண்ணீர் போன்ற ஒரு திரவம் மட்டுமே கசிந்தது.

“ஐயோ! மவளே! இப்ப என்ன பண்ணுவேன்!” மடார் மடார் என்று தலையில் அடித்துக் கொண்ட அவள் விக்கித்து நின்றாள். கடந்த மே பதினெட்டாம் நாள் தொட்டு அவளின் எண்ணங்கள் சதிராடத் தொடங்கின.

அன்றும் இப்படித்தான். இதே காலை நேரம்.

பதினாறு வயசும் பெண்பிள்ளையையும் பதினான்கு வயசுப் பையனையும் பக்கத்துலே போட்டு, கைக்குழந்தையை மார்போடு அணைச்சுப் பதுங்கு குழிக்குள்ளே விழுந்து கிடந்தேன். பக்கத்துப் பள்ளத்துலே மாமியும் வீட்டுக்காரரும் படுத்திருந்தாங்க.

சிங்களத்தானும் இந்தியக்காரனும் பாய்ச்சிய குண்டுங்க எங்கள் தலைக்குமேலே எமனோட பாசக்கயிறு மாதிரி பறந்துக்கிட்டு இருந்துச்சு.

குண்டடி பட்டு ஆங்காங்கே மக்கள் போடுற ஓலமும் கூச்சலும் கேட்டுக்கிட்டுத்தான் இருந்துச்சு. பக்கத்துக் குழியிலே படுத்திருந்த மாமியும் அலறுனாங்க. ஆனால் எழுந்து என்னன்னு கேட்கவோ பார்க்கவோ அவ்வளவு பயம்! மனசு அடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

ஈழத்து மண்ணுலே இனி தமிழனே இல்லேன்னு நினைச்சானுகளோ என்னவோ! வெடிச் சத்தம் சட்டுன்னு நின்னுடுச்சு.

“மாமி அலறுனாங்களே!” உள்ளம் பதற மெல்ல மேலே ஏறி, அடுத்த பள்ளத்தைப் பார்த்தேன்.

அங்கே இரத்த வெள்ளத்துல கணவர் கிடக்க, அவரு நெஞ்சு மேலே மாமி மயங்கிக் கிடந்தாங்க.

ஒரு கணம் உயிரற்றுப் போன நான், நெஞ்சைத் திடப்படுத்திக்கிட்டு, அக்கம் பக்கத்தைப் பார்த்தேன். ஊரே எரிந்து வெந்து புகைந்து கொண்டிருந்தது.

அந்த நேரத்துலே,

“அப்பாவிப் பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டி வெள்ளைக் கொடியேந்தி சமாதானம் பேசச்சென்ற தளபதி நடேசன் குழுவையே பகைவரின் படை, சுட்டுக் கொன்று ஹிட்லரையும் இடி அமீனையும் மிஞ்சி விட்டதாம். எனவே, என் உயிர் மக்கள், கொஞ்சமும் யோசிக்காது தயங்காது எங்களை விட்டு ஒதுங்கிச் செல்லுங்கள். ஈழத்தின் அதிபராகத் தளபதியாக மீண்டும் உங்களைக் காண்பேன்” என்று நம்ம தன்மானத் தளபதி பிரபாகரன் கட்டளை இட்டிருக்கின்றார். அவரின் கட்டளையை நாம் நிறைவேற்றுவோம்” என்ற தகவல் கரும்புகையினூடே வேகமாய்ப் பரவிக் கொண்டிருந்தது.

சந்திலும் பொந்திலும் பள்ளத்திலும் மேட்டிலுமாய் ஆங்காங்கே பிணமாக் கிடந்தவங்களை எடுத்துப் போடவோ கால்போயி கைபோயி குற்றுயிராக் கிடப்பவங்களுக்கு உதவி செய்யவோ வசதியுமில்லை நேரமுமில்லை. அடுத்த குண்டுங்க பறந்து வருவதுக்குள்ளே தப்பிப் போயிடனுங்கிற அச்சத்துலே அவரசத்துலே முடிஞ்சவரை மூட்டை முடிச்சுகளையும் முதியவங்க- குழந்தைகளையும் இழுத்துக்கிட்டு கண்ணீரோடு ஓட்டமும் நடையுமா ஓடிக்கிட்டிருந்தாங்க மக்கள்.

மாமியை இழுத்து வெளியில் போட்டு, மயக்கத்தைத் தெளிவிச்சேன். ஏற்கெனவே மாமிக்கு முடுக்குவாதம். நடக்க இயலாது. “மகன் கிடக்கிற குழிக்குள்ளேயே என்னையும் போட்டிட்டு நீங்க தப்பிப் போயிடுங்க” என்று குழிக்குள்ளே விழப்போனாள் மாமி. அவளைத் தடுத்துச் சமாதானப் படுத்திவிட்டு, பிள்ளைங்க ரெண்டையும் பார்த்தேன்.

“அப்பாவை இங்கே விட்டிட்டு நாம ஏன்ம்மா போகணும். நாமலும் இங்கேயே செத்துப்போயிடுவோம்மா” என்று என்னைக் கட்டிப் பிடித்துக் கதறிட்டாங்க பிள்ளைங்க. கைக்குழந்தை ஒரு பக்கம் அலறிக்கிட்டிருந்துச்சு!

“நாம ரெண்டு பேரும் வாத்தியார் ஆகிச் சம்பாதிக்கிறது போதாது. நம்ம புள்ளைங்க டாக்டராகி கை நிறையச் சம்பாதிக்கணும் தயா” என்று அடிக்கடி சொல்விங்களே ஐயா! இப்ப எங்களை இப்படி அநாதையாக்கிட்டு நீங்க மட்டும் இங்கே நிம்மதியாய் படுத்துட்டிங்களே! இனி நாங்க என்னய்யா பண்ணுவோம்!

ஏய் வேல்முருகா! உன் வேல் எங்கே ஐயா போச்சு? இங்கே உனக்கு எத்தனை எத்தனை கோயில் கட்டி கும்மிட்டு வந்தோம். இப்ப உனக்கு விளக்குப் போடக்கூட இங்கே நாதி இல்லையே! முருகா! நீ என்ன பண்ணப் போறே?” வாய் விட்டு அழுது அழுது புரண்டு ஓஞ்சுபோனேன் நான்.

“பதிஎழு அறியாப் பழந்தமிழ் மக்கள்” என்று இலக்கியத்துலே எழுதிவச்சிருக்காங்க. அந்த மக்கள் இன்று சொந்த மண்ணிலேயே அகதிகளா ஓட வேண்டியாச்சே! என்று எண்ணி எண்ணி நொந்து போன நான் மெல்ல எழுந்துட்டேன்.

முக்கியமான பொருள்களை மட்டும் எடுத்து இரண்டு மூட்டையாக் கட்டுனேன். ஒரு மூட்டையை மகள் தன் தலையிலே வச்சுக்கிட்டாள். இன்னொரு மூட்டையை என் தோளுலே மாட்டிக்கிட்டு, கைக்குழந்தையை எடுத்துக்கிட்டேன்.

மாமிக்குப் பூஞ்சை உடம்பு. பாட்டியைத் தூக்கி, தோளில் போட்டுக் கொண்டான் தங்க மகன். மனசு பின்னுக்கு இழுக்க, கால்கள் முன்னுக்கு இழுக்க கண்ணீர் கடலாப் பெருக, ஊரோடு நாங்களும் ஓடிக்கிட்டிருந்தோம்.

இதமான காலைவெயில் மாறி, தலைக்கு மேலே சுட்டெரிக்கின்ற வெயில் ஏறிக்கிட்டு இருந்துச்சு. தார் போட்ட சாலை. பாதங்கள் ரணமாகிப் போச்சு.

தாகம் – பசி – நடக்க இயலாமை, தலைச்சுமையோடு மனச்சுமை. அத்தனை வருத்தத்தையும் சுமந்தவாறு நாங்கள் நடந்து கொண்டே இருந்தோம்.

இராணுவ வண்டிகளின் உறுமல் கேட்டுச்சு. அடுத்து எமதூதர்கள் மாதிரி சிங்களப்படை எங்களை வழிமறிச்சு, சற்றி வளைச்சிருச்சு!

“அனைவரும் நின்ற நின்ற இடத்திலேயே முழங்காலிட்டுக் குந்துங்கள். உத்தரவு இன்றி எவரும் சாலையை விட்டு நகரக்கூடாது. தப்பி ஓட நினைத்தால் சுட்டுக் கொல்லப்படுவீர்கள். கவனம்! கவனம்!

இப்பொழுது உங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்ய எங்களின் அதிகாரிகள் உங்களிடம் வருகின்றார்கள். அவர்களிடம் உங்கள் உண்மை விவரங்களைச் சொல்ல வேண்டும். பொய்யான விவரம் என்பது கண்டுபிடிக்கப்பட்டால் தண்டிக்கப் படுவீர்கள்” என்ற அறிவிப்பு நெருப்புத் துண்டுகளாக ஒலி பெருக்கியில் வந்துச்சு.

விதியே என்று பலர் முழங்காலிட, பலர் சப்பளிக்க அமர்ந்துட்டாங்க. சிலர் கால்களைப் பரக்க நீட்டி ஆயாசத்தோடு படுத்தே விட்டாங்க.

“தண்ணி! தண்ணி”! “பசி! பசி”! – “ஐயையோ! வலிதாங்க முடியலியே”!- “அப்பா, அம்மா மயக்கம் போட்டிட்டாங்கப்பா”!- “குழந்தைக்குக் காய்ச்சல் கொதிக்குதே யாராவது மருந்து வச்சிருந்தால் கொடுங்களேன்” இப்படிப் பலதரப்பட்ட ஓலங்கள் அங்கே எழுந்துக்கிட்டே இருந்துச்சு. என்றாலும் சிங்களத்தான் படைங்க அதைக் கண்டு கொள்ளவே இல்லை. மாறாகக் கூச்சல் எழுப்புவர்களுக்கு அடியும் உதையும் வசவும் அங்கே மருந்தாக் கிடைச்சுக்கிட்டு இருந்துச்சு.

இந்த நிலைமையிலே மக்கள் பதிவு என்ற நடவடிக்கை முடிய பொழுது மேற்கே சாஞ்சு போச்சு.

சுமார் அஞ்சு மணிநேரம் இப்படிக் காஞ்சு கிடந்த எங்களுக்கு எழுந்து நடக்கும்படி உத்தரவு வந்துச்சு. மரத்துப்போன கால்கள் சட்டென எழுந்திருக்க இயலவில்லை. புள்ளைங்க ரெண்டும் எழுந்துட்டாங்க. நானும் எப்படியோ எழுந்துட்டேன். படுத்து கிடந்த மாமி இன்னும் படுத்தே கிடந்தாங்க.

மகன், மாமியைத் தட்டி எழுப்பினான். அசையாமல் கிடந்தாள் மாமி. மல்லுக்கட்டி மாமியைத் தூக்கி நிறுத்தினான் மகன். மாமி மீண்டும் சரிந்து விழுந்தாள்.

நெஞ்சு பட படக்க, மாமியைத் தொட்டு , முகத்தைத் தூக்கிப் பார்த்தேன். மாமி, தன் மகனைத்தேடி எப்பவோ போய்டாங்கங்கறது தெரிஞ்சுச்சு.

“மாமி!” தலையில் அடித்துக் கொண்டேன் பிள்ளைங்களும் அலறிட்டாங்க. மூணு பேரும் மாமியைக் கட்டிப் பிடிச்சுக் கதறிக்கிட்டு இருந்தோம்.

படுகளத்துலே ஒப்பாரியான்னு மக்கள் கூட்டம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. இன்னொரு பக்கம் சிங்களத்தான், ஓடு ஓடுன்னு ஓடிக்கிட்டு இருந்தான்.

இதயத்தை இரும்பாக்கிக் கொண்ட நாங்க, கடைசியா மாமிக்கு ஒரு கும்பிட போட்டுவிட்டு நடந்துட்டோம்.

கரு கருன்னு இருட்டிய நேரம். முகாம்னு சொல்ற இந்த வெட்ட வெளிச்சிறையிலே எங்களை எல்லாம் போட்டு அடைச்சுட்டான் சிங்களத்தான். முகாமைச் சுற்றி வேலிகூட முறையாப் போட்டு முடிக்கலை. முள்ளுக்கம்பிச் சுருள்களைப் பிரிச்சும் பிரிக்காமலும் சும்மா ஆங்காங்கே பரப்பிப் போட்டிருந்துச்சு. வேலிக் கம்பங்கள் போன்று வரிசையா ஏந்திய துப்பாக்கியுடன் சிங்களப்படை நின்னுக்கிட்டு இருந்துச்சு.

விளக்குப் போட்டுக்கிட்டு கூடாரம் அடிக்கிற வேலை அவசர அவசரமா ஆங்காங்கே நடந்துக்கிட்டு இருந்துச்சு.

“இருட்டில் தப்பி ஓடி விடலாம் என்று எவரும் வேலிப் பக்கம் போய்விடாதீர்கள். வேலியில் மின்சாரம் பாய்ச்சப்பட்டிருக்கின்றது. விரைவில் உங்களுக்கான கூடாரம் தயாராகி விடும். அதுவரை நீங்கள் எல்லாம் இந்த வெட்ட வெளியில்தான் தங்க வேண்டும்.

தண்ணீர் வண்டி, கஞ்சிவண்டி எல்லாம் இன்னும் சற்று நேரத்தில் வந்து சேரும். வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்”. என்ற தகவல் ஒலிபெருக்கியில் வந்து கொண்டே இருந்துச்சு.

இருபத்து நாலு மணி நேரத்துக்கு முன்பு சொந்த ஊருலே வாயிலே தண்ணி பட்டதுதான்!

சொத்துச் சுகம், சொந்தங்கள், உரிமைகள் அத்தனையும் இழந்துட்டு எவன் கையிலே சிக்கிவிடக் கூடாது என்று நினைச்சுப் போராடுனோமோ இப்ப, அவன் சிறைக்குள்ளேயே இப்படி விழுந்து கிடக்க ஆயிடுச்சேன்னு நினைச்சு நினைச்சு உயிரோடு செத்துக்கிட்டிருந்தாங்க மக்கள். ஆனாலும் குழந்தைகளையும் நோயாளிகளையும் காப்பாற்றி ஆகணுமே என்கிற கட்டாயம் மக்களைக் கஞ்சிக்கும் தண்ணிக்கும் காவடி எடுக்க வச்சிடுச்சு.

இருட்டுலே வெளிச்சம் போட்டுக்கிட்டு தண்ணியும் கஞ்சியும் வந்துச்சு. எல்லாமே மொட நாற்றம்! இருந்தாலும் உயிர் பிழைக்கணுமே என்ற வெறியிலே தொண்டையை நனைச்சுக்கிட்டோம் நாங்க.

வானமே கூரையா- மண்மேடே பஞ்சணையா ஆங்காங்கே சுருண்டு கிடந்தோம். வாழ்ந்திருந்த வாழ்வை நினைச்சு நினைச்சு, ஏங்கி ஏங்கி கனத்த நெஞ்சோடு பகைவனின் பாசறைக்குள் பலி ஆடுக மாதிரி நாளைக் கடத்திக் கிட்டு இருந்தோம்.

“கழிவறைப் பக்கம் போயிட்டு, அப்படியே குளிச்சிட்டு வந்துடுறோம்மா” என்று சொல்லிவிட்டுப் போன பொண்ணும் புள்ளையும் போன வேகத்துல திரும்பி வந்துட்டாங்க.

“கழிவறைப் பக்கம் போகவே முடியலைம்மா! அப்படி நாறிக்கிடக்குது! சுற்றிலும் நல்ல அடைப்புக் கூட இல்ல. குளிக்கப் போனால், அங்கே ஐநூறு லிட்டர் தண்ணித் தொட்டியிலே ஆயிரம் பேரு குளிக்கணுமாம். அதுவும் ஆணும் பெண்ணும் ஒண்ணாத்தான் குளிக்கணுமாம் எப்படிம்மா முடியும்?

அப்பாவும் பாட்டியும் போன மாதிரி நாமலும் போயிருக்கணும். இங்கே வந்ததே ரொம்ப ரொம்பத் தப்பும்மா!” என்று சொல்லி அழுதிட்டாங்க பிள்ளைங்க.

எல்லாம் நம்ம தலைவிதின்னு எங்களை நாங்களே நொந்து கொண்டு, மலையே விழுந்தாலும் தலையே சுமன்னு வாயில்லாப் பூச்சிகளா வெட்ட வெளியிலே வெளியே தெருவுக்குப் போகமுடியாமல்- குளிக்காமல் விழுந்து கிடந்தோம்.

நாலஞ்சு நாளுலே குடிசைங்க எழும்பிடுச்சு. எட்டுக்கு எட்டுங்கிற குடிசையிலே, குடிசைக்கு இருபது பேருன்னு எங்களைக் குடியேற்றிட்டான் சிங்களத்தான். எப்படியோ நாங்களும் குண்டுச் சட்டிக்குள்ளே குதிரை ஓட்டிக்கிட்டு இருந்தோம்.

ஒரு நாளு, திமு திமுன்னு நாலஞ்சு வெள்ளை வேனுங்க முகாம்குள்ளே நுழைஞ்சுச்சு. முகாம்லே இருந்த ஏராளமான கர்ப்பிணிப் பெண்களை அலற அலற அள்ளிப்போட்டிக்கிட்டு, அந்த வேனுங்க பறந்துடுச்சு.

“புள்ளத்தாச்சிகளை ஏன் இப்படிக் கொண்டு போறானுக?” யாரோ கேட்டாங்க.

“இவுங்களுக்கு எல்லாம் கட்டாயக் கருக்கலைப்புச் செய்யப் போறான்களாம்” விசயம் தெரிஞ்ச இன்னொரு குரல் மெல்லக் கிசு கிசுத்தது.

“ஆக, ஈழத் தமிழனத்தையே கருவறுக்கணும்னு முடிவு பண்ணிட்டான் சிங்களத்தான்” மக்கள் கூட்டம் பெருமூச்சு விட்டது.

நேற்று, காலைக் கஞ்சிக்காக எல்லாரும் தொண்ணாந்து கிட்டிருந்தோம். திடீர் என்று கூருபோட்ட ஏழெட்டு ராணுவ வண்டிங்க வந்துச்சு. முகாமுக்குள்ளே புகுந்த சிங்களப்படை, துப்பாக்கி முனையிலே இளம்பையன்களையும் பெண்களையும் கடத்தி வண்டியிலே ஏற்ற ஆரம்பிச்சிடுச்சு!

மக்களாலே குய்யோ முறையோன்ணு கூக்குரல் போடத்தான் முடிஞ்சுச்சு. தட்டிக் கேட்கச் சரியான ஆளே இல்லை. அப்படித்தான் நான் பெத்த புள்ளைங்களையும் கதறக் கதற இழுத்துக்கிட்டுப் போயிட்டானுங்க பாவிங்க!

“இவுங்க சின்னப்புள்ளைங்க ஐயா! விட்டிடுங்கன்னு காலுலே விழுந்தேன். என்னை ஏறி மிதிச்சிட்டுப் போயிட்டானுங்க எரிஞ்சு போவானுங்க.

எல்லாமே போச்சு! இனி இருந்தா என்ன செத்தா என்னன்னு, கையிலே இன்னொரு பச்சை உசிரு இருக்குங்கிறதை மறந்துட்டு அப்ப இருந்து இப்ப வரை வாயிலே பச்சைத் தண்ணி கூடப் படாமல் இருந்துட்டேன். அப்புறம் மாருலே எங்கிட்டு இருந்து பால் சுரக்கும்!. நான் ஒரு பாவி! பிள்ளைக்கு இப்ப ஏதாவது பண்ணனுமே! சிந்தனை அறுந்து தெளிவு பிறந்தது அந்தத் தாய்க்கு.

மடியில் கிடந்த குழந்தையைப் பார்த்தாள். அமைதியாய்க் கிடந்தது அது. தூக்கி நிமிர்த்தினாள். துவண்டு விழுந்தது. நெஞ்சம் படபடக்க மூச்சில் கை வைத்தாள். அங்கே மூச்சே வரவில்லை!

அந்தத் தாயால் அழமுடியவில்லை. கண்மூடிக் கிடந்த குழந்தையின் முகத்தையே இமைக்காது பார்த்திருந்தாள் அவள்.

கனத்த காலணியின் சத்தம் எழுந்தது. வெற்றிமிடுக்கோடு சிங்களத்தான் ஒருவன் வந்து கொண்டிருந்தான். குழந்தையைப் படீர் என்று சிங்களத்தான் முகத்தில் வீசியடித்த அந்தத்தாய் அப்படியே சரிந்து விழுந்தாள்.

– அக்டோபர் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *