படிப்படி – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2023
பார்வையிட்டோர்: 3,704 
 
 

(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருச்சியிலிருந்து போட்டித் தேர்வுக்குப் படிப்பதற்காகப் பை நிறைய வாங்கி வந்த தலைகாணி சைஸ் புத்தகங்களுடன் திருவெறும்பூரில் இறங்கினாள் ஹேமா.

வீட்டுக்குப் போகும் வழியில் எறும்பீஸ்வரர் மலைக் கோவில் முகப்பிலிருந்த விநாயகர் கோவிலுக்கு முன் கண்மூடிப் பிரார்த்தித்துக் கொண்டு நின்றாள்.

ஒரு முதியவர் தன் பேரனிடம், “அந்த போர்டுல என்னடா எழுதி இருக்கு…?” என்று கேட்டார்.

“அ…டு…த்…த….ச…து…ர்..த்..தி…” என்று எழுத்துக்கூட்டிப் படித்து, “அடுத்த சதுர்த்தி எண்ணிக்குனு எழுதிப் போட்டிருக்கு தாத்தா…” என்றான்.

அந்தப் படிக்காத முதியவரை நினைத்து வருத்தப்பட்டாள் ஹேமா. ஷாப்பர் பைகளில் நிறைந்திருந்த புத்தகங்களின் கனம் கைகளை அழுத்த, ‘இத்தனைப் புத்தகங்களையும் இன்னும் ஒரு மாதத்திற்குள் படித்து உள்வாங்கி தேர்வில் வெற்றி பெற்றுத் தன் மெடிசின் கனவை நிறைவேற்ற முடியுமா?’ என்கிற பயம் ஹேமாவின் மனதை அழுத்த மனம் சோர்ந்தது ஹேமாவிற்கு.

மலையை அண்ணாந்துப் பார்த்து மலைத்து நிற்கும் பேரனைப் பார்த்தார் அந்த பெரியவர்.

“எலே பேராண்டி. என்னடா மலையைக்கண்டு மலைச்சிப் போய் நிக்கிறியா?…”

பேரனின் அமைதி தாத்தாவின் கருத்தை ஏற்பதை போல இருந்தது. “சோர்ந்து அமர்ந்தவன் எழும் முன்னே, நடந்தவன் நெடுந்தூரம் போவான்…”னு சொல்வாங்கடா பேராண்டி. நம்மால முடியாதுன்னு நினைக்காம பளிச்சுன்னு முதல் அடியை எடுத்து முதல் படீல வைச்சி ஏறத் தொடங்கு. உச்சிக்குப் போயிருவே…!”

தாத்தா இயல்பாகச் சொன்னது பேரனுக்குத்தான் என்றாலும், தனக்கும் சொல்வதாகப்பட்டது ஹேமாவிற்கு. தாத்தாவின் வாழ்க்கைப் படிப்பை நினைத்து வியந்தாள் ஹேமா.

– ஆகஸ்ட், 2023, கதிர்’ஸ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *