பசியும் பண்பும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 17, 2024
பார்வையிட்டோர்: 8,786 
 
 

பசி வயிற்றைக்கிள்ளும் போதெல்லாம் பைக்கை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு செல்ல மனம் சொல்லும். இரண்டு கிலோமீட்டர் தள்ளி உள்ள ஒரு சைவ ஹோட்டலுக்குள் நுழைவது வழக்கம். வாரத்தில் இரண்டு முறையாவது செல்வதால் சர்வர்களுக்கு நான் நல்ல அறிமுகம்.

ஒரு நாள் நான் ஆர்டர் செய்யவே இல்லை. ரவா ரோஸ்ட் எனது முன் வைக்கப்பட்டது. கூடுதலாக சட்னி வைக்கப்பட்டிருந்தது. “அடுத்தது காஃபி தானே சார்” எனக்கேட்ட சர்வரைப்பார்த்து, “அதையும் ஆர்டர் பண்ணாமயே கொடுத்திட வேண்டியது தானே…? ” என்றேன் சிரித்துக்கொண்டே. நான்  அடிக்கடி ரவா தோதையும்,  காஃபியும் சாப்பிடுவதால் சர்வருக்கும் மனப்பாடம் ஆகியிருக்க வேண்டும்.

எனக்கு மிகவும் பிடித்தது புரோட்டா தான். சிறு வயது முதல் அதற்கு நான் அடிமை. இரண்டு புரோட்டா, ஒரு ஆம்லேட் சாப்பிட தொன்னூறுகளில் பத்து ரூபாய் இருந்தால் போதும். வயிறும், மனமும் நிறைந்து போகும். தற்போது ஐம்பத்தாறு வயது ஓடி விட்டது. மகனின் பிடிவாதத்தால் ஆஸ்பத்திரியில் மாஸ்டர் ஹெல்த் செக்கப் சென்ற வாரம் செய்த போது சுகர் இருப்பதாகவும், அதற்கு தினமும் மாத்திரை போடுவதோடு வாழைப்பழம், இனிப்பு பலகாரம், அரிசி, மைதா உணவு கண்டிப்பாக சேர்க்கக்கூடாது என டாக்டர் சொன்ன பின் வீட்டில் நிறைய கட்டுப்பாடுகள்.

நாக்கிற்கு பிடிக்கும் ருசியான உணவுகளை வயிறு ஏற்றுக்கொண்டாலும் உடல் நோயை உருவாக்கி டெபாசிட் செய்து விடுகிறது. சிறு வயதில் நிறைய உழைப்பு இருந்தது. சாப்பிடும் உணவால் சேரும் சத்து எனும் சர்க்கரை தினமும் சேமிக்காமல் செலவாகிவிடும். தற்போது நடக்க கூட சோம்பேறித்தனம். ஒரு இட்லியளவு சத்து கூட செலவாவதில்லை. மூன்று சட்னி செய்வதால் நான்கு இட்லி, ஒரு தோசையை வயிற்றில் போட்டு விட்டு காலில் பாத வலியால் அவதிப்படுகிறேன்.

உறவுகளைத்தவிர எனது பண்பான பழக்கத்தால் நிறைய நண்பர்கள். அவர்களது நண்பர்களின், உறவுகளின் திருமணத்துக்கு கூட பத்திரிக்கை வைத்து அழைத்துச்சென்று மணமக்களை ஆசீர்வதிக்கச்சொல்வதால் மண்டபத்தில் பேசிக்கொண்டே சாப்பிடும் ஐம்பது வகையான உணவு வகைகளுக்கும் வயிறு மறுக்காமல் இடம் கொடுத்து விடுகிறது. நான்கு திருமணங்களுக்கு தொடர்ந்து போய்விட்டால் ஒரு வாரம் உடம்பு படுத்தி எடுத்து விடுகிறது. புளி ஏப்பம் நிற்காமல் வந்து கொண்டே இருக்கிறது. எனது மனைவியோ வீட்டுச்சாப்பாட்டில் ஒரு வேளை கட்டாயமாக பட்டினி போட்டு விடுகிறாள். அவளுக்குத்தெரியாமல் அந்த ஒரு வேளையை எப்படியாவது வேறு வழியில் வயிற்றுக்கு கொடுத்து விடுகிறேன்.

வாழ்வதற்க்காக உண்பதா? உண்பதற்க்காக வாழ்வதா? என முன்பு என்னைக்கேட்டிருந்தால் உண்பதற்க்காகத்தான் வாழ வேண்டும் என்பேன். அந்த அளவிற்கு உணவின் மீது வெறியே இருந்தது. விருந்தில் நான் அதிகமாக சாப்பிடுவதை பிறர் தவறாக நினைப்பார்களென கருதி வீட்டிற்கு வந்து ஒருமுறை சாப்பிட்ட நாட்களும் உள்ளன.

உறவுகளின் விருந்துக்கு சென்று விட்டாலே நானும், நண்பன் மனோகரனும் சமையலுக்குள் போகாமல் இருந்ததில்லை. எங்களைக்கண்டாலே சமையல் கலைஞர்களுக்கு உதறல் எடுத்து விடும். குற்றம் கண்டு பிடிப்பதிலேயே குறியாக இருப்போம். அதனால் விருந்து சிறப்பாக அமைந்து விடும். இதற்காகவே பலரும் முதல் பத்திரிக்கையை எங்களுக்கு வைப்பதோடு, ‘கொஞ்சம் சமையலை பாத்துக்கங்க’ என சொல்லி விட்டும் செல்வர்.

சுவையான உணவுக்காக பல கிலோமீட்டர் பயணம் செய்யவும் தயங்க மாட்டோம். “சுந்தரனும், மனோகரனும் கொறை சொல்லாம போக மாட்டாங்க” என்று நண்பர் மனோகரனையும் என்னையும் கண்டாலே ஹோட்டல் முதலாளிகளும் பயப்படுவர். அதனால் உணவில் மேம்பட்டிருந்தார்களே தவிர சோடை போய்விடவில்லை.

இப்படியே உணவில் நாட்டம் அதிகரிக்க,அதிகரிக்க பூர்வீக காட்டை விற்று சொந்தமாக ஹோட்டலே தொடங்கி விட்டேன். என்னுடைய ஹோட்டலிலேயே கூட்டம் அதிகமாக வர ஆரம்பிக்க பரம்பரையாக ஹோட்டல் நடத்தியவர்கள் கடைகளைக்காலி செய்யும் நிலை எனக்கு வருத்தமாக இருந்தாலும் விளையாட்டில் எத்தனை பேர் ஓடினாலும் ஒருவரால் மட்டுமே முதலாவதாக வர முடியும் என்பது போல தொழிலிலும் போட்டி, பொறாமையாகாமல் இருக்க தெய்வத்தை வேண்டிக்கொள்வேன்.

சில வெளியூர் ஹோட்டல் முதலாளிகளே சர்வராக எனது கடையில் வேலைக்கு சேர்ந்து உணவின் ருசியின் ரகசியத்தை கற்றுக்கொண்டு போனது எனக்கு பெருமையாக இருந்தது. 

நான் சிறுவயதாக இருக்கும் போது அப்பாவின் வருமானம் என்னுடன பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு பசியார சோறு போடவே போதாது. சாப்பாடு செய்ய குருணை அரிசி இருக்கும். சாம்பார் செய்ய எதுவும் இருக்காது. அம்மா கல்லு உப்பை கல்லில் நொறுக்கி தேங்காய் எண்ணை ஊற்றி பிசைந்து சாப்பிடச்சொல்லுவாள். எங்கள் வீட்டிலிருந்து நான்காவது வீட்டில் இரவு சாம்பார் மீதமாகும். அங்கே போசி எடுத்துச்சென்று வாங்கி வந்து அம்மாவுக்குத்தெரியாமல் சாப்பிடுவேன். சில சமையம் பிரையாணி கிடைக்கும். அது போல இன்று சிலர் இருக்கக்கூடும் என்பதை யோசித்து எனது ஹோட்டலில் சாம்பார் யார் வந்து கேட்டாலும் குறைந்த விலைக்கு விற்க ஏற்பாடு செய்திருந்தேன். இரவு கூட்டம் நிரம்பி வழியும். அப்போது ஒரு வயதான பெண்ணிடம் சர்வர் காசில்லாமல் சாம்பார் கேட்டதற்கு சண்டை போட்டுக்கொண்டிருந்தார். அப்பெண்ணின் முகத்தைப்பார்த்தேன். எனக்கு சிறுவயதில் சாம்பார் ஊற்றிய தேவகியம்மாள். அதிர்ந்து போனேன்.

சர்வரைத்தனியாக அழைத்து தேவகியம்மாள்  தினமும் அவர்கள் கேட்கும் உணவை, சாம்பாரை பணம் வாங்காமல் இலவசமாக கொடுக்குமாறு கூறினேன். ஆனால் ஹோட்டல் என்னுடையது என மட்டும் கூறி விட வேண்டாம் எனக்கூறி விட்டேன். வசதியாக வாழ்ந்து வந்த நிலையில் கடைசி மகனின் ஊதாரித்தனத்தால் மற்ற மகன்கள் அவனுக்கு சொத்து பிரித்துக்கொடுக்க, வாங்கிய சொத்தை விற்று அழித்ததோடு நகரத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள வாடகை வீட்டில் மகனுடன் வசிக்கும் நிலையில் பசிக்கு உணவில்லாத சூழ்நிலை. பெற்றோர் எப்பொழுதும் கெட்டுப்போன குழந்தைகளுடன் தான் வறுமையை விரும்பியும் வாழ்வர்.

தினமும் ஹோட்டலிலிருந்து இலவசமாக உணவு கொடுக்க ஆரம்பத்ததிலிருந்து தேவகியம்மாள் தன் வீட்டிலிருந்து உணவு வாங்க வரும் போது துடைப்பத்தை எடுத்துக்கொண்டு வருவதும், ஹோட்டலின் முன் உள்ள குப்பைகளைப்பெருக்கி விட்டு உணவைப்பெற்றுச்செல்வதும் தொடர்கதையானது.

நடை தளர்ந்து போன காலத்திலும் இலவசமாக எதையும் ஒருவரிடம் பெறக்கூடாது என நினைக்கும் நல்ல பண்பு மிக்க தேவகியம்மாளின் செயல்பாடுகள், சிறுவயதில் உழைக்கும் திறன் இருந்தும் உழைக்காமல் அவரிடம், சாம்பாரும், சில சமயம் சாப்பாடும் வாங்கி சாப்பிட்டதை நினைத்து, ஒரு நாள் அவரை நேரில் பார்க்க நேர்ந்த போது அடையாளம் தெரியக்கூடாது என நான் தலை குனிந்ததை விட,  எனது சிறுவயது நிலையை நினைத்து தலை குனிய நேர்ந்தது என்பதே உண்மை!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *