நெருப்பு வேர்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 20, 2022
பார்வையிட்டோர்: 4,378 
 

நங்கூரமிட்ட கப்பலாக நகராமல் நிற்கிற பஸ், நிம்மதியை பங்கம் பண்ணியது. மகளைப் பார்க்கப் போகிற பேரார்வத்தில் சொக்கிக்கிடந்த இதயம் சக்கையாகப் பிழியப்பட்டது போல் அதிருப்தி அடைந்தது. ‘நம்பக்கிட்ட கடன் வாங்குன அந்தாளு பரமசெவமும், அவெம் பொஞ்சாதியும் தீய வெச்சுத் தற்கொலை பண்ணியிருக்கலேன்னா, ஒரே மக வெண்ணிலாவப் பிரிஞ்சு… ஜெயிலுக்குப்போயி… நம்ப பொழப்பு இப்டி நாறிப்போயிருக்காதே…’ வலுத்த விரக்தியுடன் அலுத்துக்கொண்ட ராசேந்தின் அடுத்த கணமே வேகமாக ஏறிய டிரைவர் பேருந்தை ஸ்டார்ட் பண்ணவும் புத்துயிர் பெற்றான். ‘இந்த ஒலகமே என்னை வெறுத்தாலும், வேண்டான்னாலும், ஏ மக வெண்ணிலா என்னை வெறுக்க மாட்டா. அவ ஏ மேல உசுரையே வெச்சிருப்பா. அது போதும்.’

கந்துவட்டி சட்டத்தில் கைதாகி, ஆறு மாதங்களாக தொடர்ந்து சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டு கடந்த வாரம் ஜாமீனில் விடுதலையாகி வெளியில் வந்திருந்த ராசேந்திரன், தனது மகள் வெண்ணிலா இருக்குமிடம் தெரியாமல் ஏக்கமும் தவிப்புமாக அலைந்தான். நெருங்கிய உறவினன் சன்னாசி, “ராசேந்திரா… இன்னிக்குக் காலையில பாளையத்துக்கு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். கல்யாணம் முடிஞ்சு அந்த ஊரு தெரு வழியா நடந்து வந்திட்டிருந்தப்போ, அங்க மகேஸ்வரி சொந்தக்காரரு பால்பாண்டி வெச்சு நடத்திட்டு வர்ற அநாத ஆஸ்ரமத்துக்குள்ளாற ஒன்னோட மகளும், சம்சாரம் மகேஸ்வரியும் ஒக்காந்திருந்ததப் பாத்தேன்டா…” என்று சொல்லியிருந்தான்.

போதாதா? உடனே புறப்பட்டுவிட்டான். மனைவி மகேஸ்வரியை எண்ணிக் குமுறுவதும், மகள் வெண்ணிலாவை நினைத்து உருகுவதுமான இருவேறு மனநிலையில் பயணப்பட்டான். ‘எந்த நேரமும் ‘அப்பா… அப்பா’னு அட்டைப்பூச்சியா ஒட்டிக்கெடந்த புள்ளைய, சண்டாளி மகேஸ்வரி என்னத்தச் சொல்லி அழைச்சிட்டுப்போயி அநாத ஆசிரமத்துல இருந்துக்கிட்டாளோ..? ஏம் புள்ள என்னப் பாத்துட்டா, அப்புறம் மகேஸ்வரிகிட்ட ஒரு நிமிஷம் இருக்க மாட்டா. ஏங்கிட்ட ஓடிவந்துருவா…’ வெண்ணிலா என்ற பெயருக்கும் அந்தக் குழந்தைக்கும் அத்தனைப் பொருத்தமாயிருக்கும். ‘மொழு… மொழு’வென்ற சிவந்த தேகம். எந்நேரமும் றெக்கை கட்டியதுபோல சுபாவம். நான்கு வயசுதான் ஆகிறதென்றாலும் வயசுக்கு மீறிய தெளிவு அவளிடமிருந்தது.

தினமும் தூங்கப் போகும்போது ‘ஏதாச்சும் கதை சொல்லுங்கப்பா. அப்போதான் நான் தூங்குவேன்’ என்று செல்லமாக நச்சரிப்பாள். அவனும் ஏதாவது ஒரு கதையைச் சொல்லி அவளை உறங்க வைப்பான். ‘எந்த வழியிலாவது சம்பாதிச்சு நிச்சயமா உன்னை கோடீஸ்வரன் வீட்டுப் புள்ள கணக்கா நா வளப்பேன்டா செல்லம்..!’ என்றும் அடிக்கடி சொல்லுவான்.பி.ஏ. முடித்துவிட்டு சிறிதுகாலம் நல்ல வேலை எதுவும் கிடைக்காமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்த ராசேந்திரன், அந்த ஊரின் கோயில் பூசாரி குருநாதன் வைத்திருந்த ஃைபனான்ஸ் கடையில் கணக்கெழுதுகிற வேலையில் மாதம் நாலாயிரம் ரூபாய்க்கு சேர்ந்தான். கிடைத்த ஊதியம் அன்றாடத் தேவைகளுக்குக்கூடப் போதவில்லை.

இந்நிலையில், அவனது அப்பா தனது குறைந்தளவிலான பூர்வீக நிலம் ஒன்றை விலைக்கு விற்றார். அதில் ராசேந்திரனுக்கு பங்காக ரூபாய் இரண்டு லட்சம் கிடைத்தது. வேண்டிய ஒருவருக்கு ஐந்து சதவீத வட்டிக்கு அதைக் கொடுத்தான்.‘கந்துவட்டித் தொழிலு சரிப்படுமா? இது பாவச் செயலாச்சே. ரூவாய வெச்சு வேற ஏதாச்சும் தொழில் பண்ணலாங்க…’ என்ற மகேஸ்வரியை அவன் பொருட்படுத்தவில்லை. ‘அஞ்சுக்கும் பத்துக்கும் நேர்மையா ஒழச்சு கல்லாகட்ட முடியுமா? காபித்தண்ணிக்குக்கூட நாக்கு வழிக்கவேண்டியதுதான். நாய் வித்த காசு குரைக்கவா போகுது?’ இரண்டு லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் வட்டிப் பணம். அடுத்த ஒரு வருடத்தில் அந்த இரண்டு லட்சமும் கைக்கு வர கிராமத்தின் முச்சந்தியில் சிறியதாக கடை ஒன்றை வாடகைக்குப் பிடித்து மகள் பெயரில் ஃபைனான்ஸ் கம்பெனி தொடங்கினான்.

அடுத்த சில வருடங்களில் அவனே எதிர்பாராத வகையில் ஊரின் முக்கியப் புள்ளியானான். சொந்தமாக பெரிய கான்கிரீட் வீடு கட்டி குடியேறினான். நானோ கார், ஸ்கூட்டி, வீட்டுக்கு ஏசி என வசதிகள் பெருகின. ரன் வட்டி, மீட்டர் வட்டி என தொழிலை விரிவுபடுத்தினான். அதிக வட்டி பற்றி யாராவது கேட்டால், ‘பட்டணங்கள்ல இதவிடப் பலமடங்கு வாங்குறாய்ங்கே. அவுங்ககிட்டயெல்லாம் இப்டிக் கேக்க முடியுமா? ஒங்க பப்புதான் வேகுமா?’ என்று எகிறுவான்.இந்நிலையில்தான் அப்படிஒரு கொடுந் துயரம் நடந்தது. மேற்குத் தெரு விவசாயி, ராசேந்திரனிடம் ரூபாய் ஐம்பதாயிரம் கடன் வாங்கி பசு மாடு ஒன்றை வாங்கினான். கறவைத் தொழில் செய்ய விரும்பியவனுக்கு நஷ்டமே ஏற்பட்டது. வட்டி கட்ட முடியவில்லை. வட்டி குட்டி போட்டு குட்டி போட்டு இரண்டு லட்சமாக கடன் உயர்ந்து நின்றது.

அப்பணத்தைத் திருப்பிக் கேட்டு அடியாட்களுடன் சென்றான். ‘அம்பதாயிரத்துக்கு இரண்டு லட்சம் கேட்டா எப்படி..?’ என விவசாயி கேட்க, தன்னை ஏமாற்றி விட்டதாக போலீசிடம் ராசேந்திரன் புகார் கொடுக்க… காவலர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்க… ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் தன் மனைவியுடன் ராசேந்திரனின் வீட்டுக்கு வந்த அந்த விவசாயி, யாருமே எதிர்பாராத தருணத்தில் தன் மீதும் தன் மனைவி மீதும் மண்ணெணெய் ஊற்றி பற்ற வைத்து சாம்பலானான். தற்கொலை செய்து கொண்டவர்களின் உறவினர்கள், ஊர்க்காரர்கள் என எல்லோரும் திரண்டுபோய் ராசேந்திரனின் வீட்டை முற்றுகையிட்டு ‘படுபாவி… நீ நாசமாப் போக… கந்துவட்டிங்கிற பேர்ல பகல் கொள்ளக்காரனா ரூவாயக் கறந்து, ஃபைனான்ஸ் நடத்தி, ரெண்டு உசுரக் கொன்னுபோட்டீயேடா… ஆலமரங் கணக்கா பொழைக்க வேண்டியவங்கள வாழமரங்கணக்கா சாய்ச்சிட்டீயேடா பாவி..!’ என்று மண்ணை வாரித் தூற்றினர்.கூனிக் குறுகி தன் மகள் வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு யாரிடமும் எதுவும் சொல்லாமல் எங்கோ சென்றுவிட்டாள் மகேஸ்வரி. சிலநாட்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்திய ராசேந்திரன் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தான். சிறை வாழ்க்கையை அனுபவித்தான். இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறான்.

பாளையம் பேருந்து நிலையத்தில் ‘கிறீச்’சிட்டவாறு முரட்டு உறுமலுடன் பேருந்து நிற்க, முதல் ஆளாக ராசேந்திரன் இறங்கினான். ஆட்டோவில் ஏறி, “கருணை ஆதரவற்றோர் விடுதிக்கு போ…” என பரபரத்தான். கால்மணிநேரப் பயணம்தான். ஆனால், யுகமாகக் கழிந்தது. ஆதரவற்றோர் இல்லத்தின் அகன்ற இரும்புக் கதவுகளில் ஒன்று மட்டும் திறந்தவாறிருக்க, வேகமாய் ஓடி அதற்கருகில் நின்று எட்டிப் பார்த்தான் ராசேந்திரன்.விறகாய்க் கிடந்த மனசுக்குள் சட்டென முளைத்தது உற்சாகச் சிறகு. விடுதியின் வராந்தாவில் மற்ற குழந்தைகளுடன் வெண்ணிலாவும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

அருகில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தது அவன் மனைவி மகேஸ்வரிதான். ராசேந்திரனுக்கு கண்களில் நீர் முட்டியது. “அம்மாடி… ஏஞ்செல்லம்… வெண்ணிலா… அப்பா வந்திருக்கேன்டா… இதோ… பாரேன்!” தனது இரண்டு கைகளையும் முன்னுக்கு நீட்டியபடி அழைத்தான். செவிட்டிலறைந்த அதிர்வுடன் திடுக்கிட்டுத் திரும்பி அவனைப் பார்த்த வெண்ணிலாவின் உதடுகள் துடித்தன. “அய்யோ… யம்மா… மா… தீ… தீ…” அலறியபடி மகேஸ்வரியைக் கட்டிக் கொண்டாள்.”அம்மா… வா உள்ள போவம். எனக்கு பயமா இருக்கு…” ராசேந்திரன் உறைந்து போய் அப்படியே நின்றான். அவனை வெறித்துப் பார்த்துவிட்டு தன் மகளை அணைத்தபடி விடுதிக்குள் சென்று மறைந்தாள் மகேஸ்வரி.

– Dec 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *