அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6
அத்தியாயம்-3
சொல்லாலே சுட்டவனே…
நீயின்றி நானில்லை…
தனஞ்ஜெயன் நட்பை ஆராதிக்கிறானோ இல்லையோ… அவமரியாதை செய்ய மாட்டான்…கிருஷ்ணன் சாருலதாவின் மீது பைத்தியமாக இருப்பதை அவளிடம் சொல்லத்தான் அவன் வந்தான். ஆனால், வந்த இடத்தில் சாருலதாவின் புது விதமான பார்வையைச் சந்தித்ததும் அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
‘அடக் கஷ்டகாலமே… பட்சி இப்படி என்னைப் பருகுவது போல் பார்த்து வைத்தால் நான் கிருஷ்ணனுடைய காதலைச் சொல்வது எப்படி…? கொஞ்சமாவது இவளுக்கு நியாய… அநியாயம் தெரிகிறதா… அவன்தான் இவள் நடந்து வரும் பாதையில் பூப்போட்டுக் கொண்டு இருக்கிறானே… இந்தப் பார்வையை அவன் பக்கம் வீசினால், அவன் பிழைத்துக் கொள்வான்… அதை விட்டுவிட்டு… என்னைப்போய்… மொச்சைக் கொட்டை கண்ணை விரித்துக் கொண்டு பார்க்காவிட்டால்தான் என்ன…!’
அவன் எச்சரிக்கையுடன் பார்வையைத் திருப்பிக் கொள்ளவும்… சாருலதாவும் பார்வையைத் தழைத்துக் கொண்டாள்…
‘எழுந்து போய் விடலாமா…’ என்று யோசித்த தனஞ்ஜெயன் உடனடியாக அந்த எண்ணத்தைக் கைவிட்டான்…
வந்த வேலையை முடிக்காமல் ஒரு பெண்ணின் அவன் எழுந்து போவதா…? கண்ணிற்கு பயந்து முன்வைத்த காலை பின்வைக்காத தனஞ்ஜெயன் – ஒரு பெண்ணின் பார்வைக்கு அஞ்சி புறமுதுகு காட்டுவதா…?’
‘ஊஹும்… இன்றைக்கு இவளிடம் கிருஷ்ணனின் காதலைச் சொல்லாமல் போகக்கூடாது…’ தனஞ்ஜெயன் தனக்குள் உறுதியை வரவழைத்துக் கொண்டு, அவளை ஏறிட்டுப் பார்த்தான்…
“நான் சொல்ல சொல்ல வந்தது முக்கியமான விசயம் சாருலதா…”
“ஆமாம்… ராத்தூக்கம் கெடுவது முக்கியமான விசயம்தான்.”
‘இவள் என்ன… என்னைக் கிண்டல் செய்கிறாளா…?’ அவனுக்கு சுர்ரென்று கோபம் வந்தது…
அவளுடைய பார்வையால் இளகியிருந்த அவனது சுபாவம் பழையபடி இரும்பு நிலைக்கு மாறியது..
“விடிய… விடியத் தூங்காமல் விழித்திருந்தால் அது உடலையும் பாதிக்கும். மனதையும் பாதிக்கும் என்பது ஐந்தறிவு உள்ள விலங்குகளுக்கும் தெரியும்… ஆறறிவு உள்ள உங்களுக்கு நிச்சயம் தெரியாமல் இருக்காது…”
சாருலதாவின் கண்கள் அவன் சொல்வதில் இருந்த கேலியைப் புரிந்து கொண்டு மின்னின… இப்படி ஒரு அறிவார்ந்த நையாண்டிப் பேச்சு அவனிடம் இருப்பதை அவள் அந்த அலுவலகத்தில் வந்து சேர்ந்த நாள் முதலாய் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள்… இன்றுதான் முதன்முதலாக நேரடியாக அவன் அவளிடமே நையாண்டிப் பேச்சை பிரயோகிப்பதைக் கேட்கிறாள்.
“ஸோ… இப்போது நான் தெரியாதுன்னு உங்களுக்குப் பதில் சொன்னால் எனக்கு ஆறறிவு இல்லையென்று அர்த்தமாகிவிடும். இல்லையா மிஸ்டர் தனஞ்ஜெயன்…?”
‘இவள் புத்திசாலி…’ தனஞ்ஜெயனின் இதழ்கள் வளைந்து சிறு குறுநகையை வெளியிட்டன.
‘பெண்களில் புத்திசாலிகள் கிடையாது’ என்பது அவனது அபிப்பிராயம். அதை நன்றாக அறிந்து வைத்திருந்த – அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்கள் குலம்… அவனோடு அவசியமாகக்கூட பேச்சு வைத்துக் கொள்வதில்லை…
“புரிந்து கொண்டுவிட்டீங்களே… பரவாயில்லை. உங்கள் மண்டையிலும் கொஞ்சம் மசாலா இருக்கத்தான் செய்கிறது…”
‘எவ்வளவு தைரியமிருந்தால்’ தேடி வந்து, முன்னால் அமர்ந்து அவனாக பேச்சை வளர்த்துக்கொண்டு, அவளை மட்டம் தட்டுவான்’ எனறு கோபம் வருவதற்குப் பதிலாக அவனது அந்த தைரியத்தை ரசித்து… அவன் மேல் ஓர் ஆர்வம்தான் சாருலதாவிற்கு வந்து தொலைத்தது…
அவள் கண்களில் சிரிப்போடு அவனைப் பார்த்தாள்… “தன்னைப் போல் பிறரையும் நினைன்னு ஏசு சொல்லிவிட்டார் என்பதற்காக… உங்களைப் போல் என்னையும் நினைத்துவிட்டால் எப்படி…? என மண்டையில் மசாலா இருக்கத்தான் செய்கிறது. ஆமாம்… உங்கள் மண்டையில் என்ன இருக்கிறது…? களிமண்ணா… இல்லை செம்மண்ணா…?”
‘இதைப்பாருடா… பட்சி இந்தப் போடு போடுவதை…’ தனஞ்ஜெயன் உண்மையிலேயே அவளை உற்றுப் பார்த்து வைத்தான்.
அவன் பார்த்தப் பார்வையில் சாருலதா முகம் சிவந்தாள்… அந்த முகச் சிவப்பை கண்டவனின் மனதில் கிருஷ்ணனின் முகம் வந்து தொலைக்க… அவன் அதைக் கண்டும் காணாதவன் போல் பேச்சைத் தொடர்ந்தான்… “ஏன் மேடம்… வீடு… கீடு கட்டிக் கொண்டிருக்கிறீங்களா…?”
“எதற்குக் கேட்கறீங்க…?”
“என் தலையில் இருக்கும் மண்ணின் மேல் இத்தனை ஆர்வமாய் இருக்கீங்களே அதனால் கேட்டேன்…”
“நீங்கள் மசாலாவின் மேல் அவ்வளவு ஆர்வமாக இருக்கும் போது… நான் மண்ணின் மேல் ஆர்வமாய் இருக்கக்கூடாதா?”
“பதிலுக்குப் பதில்… ம்ம்…?”
“யெஸ்…”
“இந்தப் புத்திசாலித்தனத்தை மற்றவங்க மனசைப் புரிந்துகொள்வதில் கொஞ்சம் காட்டினால்தான் என்ன…?”
“யார் மனசை நான் புரிந்து கொள்ளணும்னு நீங்க எதிர்பார்க்கறீங்க…? உங்கள் மனசையா…?”
சாருலதா நேரடியாய் கேட்க… தனஞ்ஜெயனுக்கு தூக்கிவாரிப் போட்டது…
“பொறுங்கம்மா… அவசரப்பட்டு வார்த்தையைச் சிதறவிடாதீங்க. அப்புறம் அதை அள்ள முடியாது…”
“அட… நீங்கள்கூட இப்படியெல்லாம் பேசுவீங்களா…?”
“என்னம்மா செய்வது? பேச வேண்டிய நேரம் வந்தால் பேசித்தானே ஆகவேண்டும்…?”
“இது அந்த மாதிரியான நேரம் போல…?”
“ஆமாம்…”
“ஓகே… நீங்கள் பேச வந்ததைப் பேசுங்கள்…” அவள் அனுமதி வழங்குபவள் போல் முகத்தை கித்தாய்ப்பாய் வைத்துக் கொண்டு சொல்லவும்… தனஞ்ஜெயனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
‘இவளுக்கு இருக்கிற திமிரைப் பார்… எனக்கு இவள் பெர்மிசன் கொடுக்கிறாளாமா? எல்லாம் இந்தக் கிருஷ்ணனைச் சொல்ல வேண்டும்… அவன் புலம்பும் புலம்பலைத் தாங்க முடியாமல் அல்லவா – இவளிடம் வந்து பேசித் தொலைக்க வேண்டியிருக்கிறது…’
அவன் அவளை முறைத்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தான்… சாருலதாவிற்கு அவனது அந்தக் கோபப் பார்வை மிகவும் பிடித்திருந்தது. ‘அவள் அதை ரசித்துப் பார்க்க ஆரம்பிக்க… தனஞ்ஜெயனுக்குச் சொல்ல வந்ததை எப்படிச் சொல்ல?’ என்று ஒரே யோசனையாகப் போய்விட்டது..
‘என்னை இப்படிப் பார்க்காதேன்னு நேரடியாய் சொல்லி விடலாமா…’ என்று யோசித்தவன்…’ நான் எப்படிப் பார்த்தேன் என்று அவள் கேட்டு வைத்தால்… என்ன பதிலைச் சொல்வது…!’ என்ற நினைவில் அவசரமாய் அந்த யோசனையை அழித்தான்.
“என் மனதை நீங்கள் புரிந்து கொண்டு ஆகப்போவது ஒன்றுமில்லை மிஸ் சார்ரூலதா…”
“அதை நீங்களாக முடிவு பண்ணினால் எப்படி மிஸ்டர் தனஞ்ஞ்ஜெயன்…”
அவன் வேண்டுமென்றே… ‘ரூ’ போட்டு அவள் பெயரை நீட்டி முழக்க… அவள் பதிலுக்கு… ‘ஞ்’ அழுத்தம் கொடுத்து அவன் பெயரை அழுத்தமாக உச்சரித்து… தன்னை யாரென்று மீண்டும் அவனுக்கு நிரூபித்தாள்.
அவளுடன் பேசுவது இவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்கக்கூடும் என்பதை அன்றுவரை அறியாத தனஞ்ஜெயன், அவளது பேச்சினால் வசீகரிக்கப்பட்டான். அவன் இதழ்களில் இப்போது வெளிப்படையாய், அவளது பேச்சை ரசிக்கும் சிரிப்பு உதயமாக… சாருலதா ஆர்வமாய் அவனது அந்தச் சிரிப்பை ரசித்துப் பார்த்தாள்.
“என்ன அப்படிப் பார்க்கறீங்க… இந்த சிடுமூஞ்சிக்குக் கூட இப்படி சிரிக்கத் தெரியுமான்னு நினைத்துப் பார்க்கறீங்களா…?”
“அட… எப்படிங்க… நான் மனதில் நினைத்ததை கரெக்டாய் கண்டுபிடித்தீங்க…”
“இதற்குப் போய் வெத்தலையில் மைதடவி ஜோசியமா பார்த்து விட்டு வரணும்…? உங்களை மாதிரிப் பெண்கள் இப்படித்தான் நினைப்பீங்க…”
“என்னை மாதிரிப் பெண்கள், இப்படித்தான் நினைப்போமென்று, என்ன கணக்கில் நீங்கள் உறுதியாகச் சொல்லுறீங்க?”
“உங்களிடம் சிரித்துப் பேசினால் ‘வழிசல் பேர்வழி’ன்னு பட்டம் கட்டுவீங்க… சிரிக்காமல் பேசினால் சிடுமூஞ்சி’ன்னு பெயர் வைப்பீங்க…”
அவனது மிகச் சரியான மதிப்பீட்டைக் கொண்டு சாருலதாவிற்கு சிரிப்புடன் ஆச்சரியமும் சேர்ந்து வந்தது. ‘இவன் எப்படி பெண்களின் பேச்சினது போக்கைச் சரியாக கணித்து வைத்திருக்கிறான்…’
அவன் சொல்வது உண்மையென்று அவளது மனச் சாட்சி எச்சரித்ததால் சாருலதா புன்னகையுடன் பதில் கூறாமல் அவனையே பார்த்தாள்.
“என்ன… பதிலைக் காணோம்…”
“உண்மையைச் சொன்னால் எப்படிப் பதில் சொல்வது?”
தனஞ்ஜெயன் அவளைச் சட்டென்று நிமிர்ந்து பார்த்தான்… உள்ளதை உள்ளபடி ஒப்புக்கொண்டு வெளிப்படையாய் பேசும் பெண்ணொருத்தியை, முதன் முதலாய் கண்டுவிட்ட உணர்வு அவனது பார்வையில் தெரிந்தது.
“ஆச்சரியம்தான்…”
“என்ன ஆச்சரியத்தைக் கண்டுவிட்டீங்க…?”
“உள்ளதை உள்ளபடி ஒரு பெண் ஒப்புக் கொள்வது ஆச்சரியம்தான்…”
“இதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை தனஞ்ஜெயன்… பெண்கள் உள்ளதை உள்ளபடி ஒப்புக் கொள்பவர்கள்… அந்த மனோதைரியம் எங்களிடம் உண்டு… மனதை மறைத்துப் பேசுவது ஆண்களுக்குத் தான் கை வந்த கலை…”
“இதைப்பாருடா… இப்படி ஒரு வியாக்கியானத்தை இப்போதுதான் நான் கேட்கிறேன்… ‘கடலின் ஆழத்தைக் கண்டுபிடித்து விடலாம்… பெண்களின் மன ஆழத்தைக் கண்டு பிடித்துவிட முடியாது’ன்னு நிறையப் பேர் சொல்லித்தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்…”
“உண்மைதான் தனஞ்ஜெயன்… நாங்கள் ஆழமானவர்கள்… எங்கள் அன்பு ஆழமானதாக இருக்கும்… ஆண்களைப் போல் மேம்போக்காக இருக்காது, ஆமாம்… இந்த ஆண்கள் ஏன் பெண்ணின் மன ஆழத்தைக் கண்டுபிடிக்க… இவ்வளவு ஆர்வமாய் அலைகிறீங்க…? எந்தப் பெண்ணாவது ஆணின் மன ஆழத்தைக் கண்டு பிடிக்கணும்னு நினைத்து இருக்கிறாளா…? நினைக்கவே மாட்டாள்…”
“இது என்ன புதுக்கதை…? ஏன் நினைப்பதில்லை…?”
“ஏன்னா… ஆணின் மன ஆழத்தில் இருக்கும் தூசி, தும்புகளை அறிந்துவிட்டால் அவளுக்கு வாழ்வே வெறுத்துவிடும்…”
“என்ன ஒரு உயர்ந்த அபிப்பிராயம்… உங்கள் பார்வையில் ஆண்கள் எல்லாரும் ஏமாற்றுப் பிறவிகள்… அப்படித்தானே…?”
“இல்லை… பெண்கள்… ஆண்களைவிட மிக… மிக… மிகக் குறைவாய் ஏமாற்றுகிறார்கள்…”
இந்தப் பதிலும் தனஞ்ஜெயனைக் கவர்ந்து தொலைத்தது. இவள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறாள் என்பதை அவன் மனம் உணர்ந்தது… அவளிடம் பேச வந்ததை… பேச வேண்டுமே என்று அவன் மனம் லேசாக வலித்துத் தொலைத்தது.
அத்தியாயம்-4
நிழலாக வந்தவனே…
நீயின்றி நானில்லை…
தனஞ்ஜெயன் சிந்தனை ரேகைகள் முகத்தில் படிய சாருலதாவின் முகத்தைத் தயக்கத்துடன் பார்த்தான். ‘இதுவரை, இவ்வளவு நேரம் வேறு எந்தப் பெண்ணின் அருகிலும், அவன் உட்கார்ந்து பேசியதில்லை’ என்ற உண்மை அவன் மனதைச் சுட்டது.
முதன்முதலாய்… அவன் வாழ்க்கையிலேயே செய்யாத ஒன்றை, அவள் செய்ய வைத்தாள்… அடங்கி ஓரிடத்தில் அமராத அவனை… அவள் முன்னால்… அரை மணிக்கும் மேலாக அமர வைத்தாள்… பெண்குலத்தை மதித்துப் பேசியிராதவனின் மனக்கதவைத் தட்டித் திறக்க வைத்து… அலுவலகப் பெண் குலத்திடம் சிறப்புப் பட்டப்பெயர் வாங்கியிருந்தவனை சிரிக்க வைத்தாள்.
‘இத்தனையும் செய்தவளிடம் எப்படி… என் நண்பன் உன்னைக் காதலிக்கிறான். நீ அவனுடைய காதலை ஏற்றுக்கொள், என்று சொல்வது’ தனஞ்ஜெயன்… முதன்முதலாய் மனம் தவித்தான்…
“சாருலதா… நான் பேச வந்த விசயமே வேறு…”
“அதனால் என்ன…? முதன் முதலாய் என்னிடம் பேச வந்திருக்கிறீங்க… பேச வந்ததை மட்டுமே பேசணும்ன்னு கட்டாயம் ஒன்றுமில்லையே… மனதில் பட்டதைப் பேசுவதற்கு பெயர்தானே பேச்சு…”
‘ஊஹும்… இவளிடம் தொடர்ந்து பேசினால், இவள் பேச்சாலேயே என்னைக் கட்டிப் போட்டுவிடுவாள்…’
சாருலதாவை அபாயகரமான ஆயுதம் போல் எண்ணி, தன்னைத் தயார்படுத்திக் கொண்டான் தனஞ்ஜெயன்.
அவள் முகத்தைப் பார்க்காமல்… தன் விரல்களைப் பார்த்துக்கொண்டு… சிரித்த முகத்துடன் கூற ஆரம்பித்தான…
“என் ஃபிரண்ட் கிருஷ்ணனைத் தெரியுமில்லையா…?”
“இந்த ஆஃபீஸில் நம்முடன் வேலை செய்கிறவர் தானே… ‘கூட வேலை பார்க்கிறவர்’ என்ற முறையில் தெரியும்…”
அவனது தீவிரமான முகபாவனையைக் கண்டதுமே… சாருலதா சுதாரித்துக் கொண்டாள். கவனமாக வார்த்தைகளைக் கோத்து அவனுக்குப் பதில் சொன்னாள்.
“ஆனால்… அவன் மனதில் உங்கள் மேல் ஒரு எண்ணம் இருக்கிறது… ஈர்ப்பு இருக்கிறது…”
“புரியவில்லை…”
“அவன் உங்களைக் காதலிப்பதாய் சொல்கிறான்…” இதைச் சொல்லும் போது தனஞ்ஜெயன்… ஜன்னல் பக்கம் முகம் திருப்பிக் கொண்டான்… அதைக் கவனித்த சாருலதாவின் மனதில் மெல்லிய சாரல் அடித்தது…
“ஈஸிட்…? எத்தனை நாளாக… இதைச் சொல்கிறார்…?”
“இரண்டு வருடங்களாக…”
“நான் இந்த ஆஃபீஸிற்கு வேலைக்குச் சேர்ந்தே இரண்டு வருடங்கள்தானே ஆகின்றன…”
“உங்களைக் கண்ட நாள் முதலாய் காதலாம்…”
“ஓஹோ… இதற்கும்… உங்களின் ராத்தூக்கம் கெடுவதற்கும் என்ன சம்பந்தம்?”
“அவனும் தூங்கித் தொலைக்காமல்… என்னையும் தூங்கவிடாமல்… ராத்திரி முழுவதும்… காதோரமாய்… ஓட்டைப் பானைக்குள் நண்டை விட்டது போல…சும்மா லொடலொடன்னு காதல் பேச்சைப் பேசிக் கொண்டிருந் தால்… ஒரு மனிதனின் ராத்தூக்கம் கெடுமா… கெடாதா…?”
“ஏன்… உங்களுக்கு மத்தவங்க பேசினால் தூக்கம் வராதா…? பேசப் பிடிக்காதா…? இல்லை பேச்சே பிடிக்காதா…?”
“என்னைப் பார்த்தால் செவிட்டூமை மாதிரியா தெரிகிறது? இவ்வளவு நேரமும் உங்களுடன் பேசிக் கொண்டிருந்தது யார்? உங்க பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தது யார்…?”
“நான் பேசினால் கேட்கலாம். அவர் பேசினால் கேட்கக்கூடாதா?”
“எனக்கு அந்தப் பாகுபாடெல்லாம் கிடையாதுங்க… நீங்கள் ரம்பம் போட்டாலும் நான் இப்படித்தான் சொல்வேன்…”
“அதுதான் எனக்குத் தெரியுமே… பாரபட்சமில்லாமல் முகத்தில் அடித்தது போல் பேச உங்களை மிஞ்ச யாராலும் முடியாதே…”
“கிண்டலா…?”
“நான் பாராட்டுதலாக இல்லை சொன்னேன்…?”
“இது பாராட்டா?”
“பின்னே இல்லையா…?”
“ஹலோ… நான் கிராமத்துக்காரன்… இந்தக் கேலிப் பேச்சு… கிண்டல் பேச்செல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுவது போல் அத்துபடியான விசயம்… நான் பேச ஆரம்பித்தால் நீங்க தாங்க மாட்டிங்க…”
“பேசுங்கன்னுதானே நானும் சொல்கிறேன்… கேட்க நான் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன்….”
“ஆனால் பேச… நான் தயாராக இல்லை… நீங்க முதலில் என் பிரச்சினைக்கு வாங்க…”
“என்னதான் உங்க பிரச்சினை…?”
“அவன் விடியவிடிய என் காதுக்குள் ஓதிக் கொண்டிருந்தால் என் ராத்தூக்கம் கெடுமா… கெடாதா…? இதைத்தானே அப்போதிலிருந்து நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்…”
“கட்டாயம் கெடும்…?”
“அதனால்தான் உங்களிடம் இதைச் சொல்ல வந்தேன்…”
“உங்கள் ராத்தூக்கத்தைக் காப்பாற்ற நான் என்ன செய்ய வேண்டும்…?”
இதைக் கேட்ட சாருலதாவின் முகத்தில் என்ன இருக்கிறது என்று ஆராய்பவன் போல் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் தனஞ்ஜெயன்.
‘இவள்… என்ன… என்னைக் கேலி செய்கிறாளா…?’
“சொல்லுங்கள் தனஞ்ஜெயன்… நான் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீங்க…?”
“எதையோ செய்துவிட்டுப் போங்க… அவனும் நீங்களும்… மரத்தைச் சுற்றி வந்து காதல் டூயட் பாடினாலும் சரி… இல்லை… வானத்தை அண்ணாந்து பார்த்து… பிதற்றலாய் நான்கு வரிகளை எழுதி… கவிதைன்னு பெயரைச் சொன்னாலும் சரி… கல்யாணம் பண்ணிக் கொண்டு இந்த நாட்டின் மக்கள் தொகையை டெவலெப் பண்ணினாலும் சரி… ஆளை விட்டுவிட்டு எங்கேயாவது… கண்காணாமல் தொலைந்தால்… அதுவே எனக்குப் போதும். பொழுது விடிந்து… பொழுது போகும் வரை… அவன் பேசும் புராணத்தைக் கேட்கும் கொடுமையிலிருந்து என்னைக் காப்பாற்றினால் போதும்…”
“உங்களை காப்பாற்றுவதற்காக… எனக்கு விருப்பமில்லாததை நான் எப்படிச் செய்ய முடியும் தனஞ்ஜெயன்? இதை வேறு யார் சொன்னாலும் பரவாயில்லை… உங்கள் வாயால்… நீங்கள் இதைச் சொல்லக்கூடாது…”
“அவன் உங்களைக் காதலிக்கிறதாய் சொல்கிறான்ம்மா…”
“யாரிடம் சொன்னார்…? என்னிடமா? இல்லையே… இரண்டு வருடமாய் என்னைக் காதலிப்பதாய் உங்களிடம் சொல்லி… உங்களின் ராத்தூக்கத்தைக் கெடுப்பவர்… என்னிடம் ஒரு வார்த்தைகூட இதைப் பற்றிச் சொல்லவில்லையே…”
“அதனால் என்ன..?”
“இது என்ன தனஞ்ஜெயன்… இவ்வளவு எளிதாக சொல்லிட்டீங்க… என விருப்பம் என்னனனு தெரியாமல்… இரண்டு வருடமாய் எப்படி அவர் என்னைக் காதலிப்பதாய் சொல்லலாம்…? இது என்னைப் பாதிக்கும் விசயமில்லையா…?”
“காதல் தவறான விசயமில்லைம்மா…”
“நானும் அப்படிச் சொல்லவில்லை… ஆனால்… காதல் தானாக வரவேண்டும்… ஒருவரின் வற்புறுத்தலால் வரக்கூடாது..”
“அவன் அழகானவன்… வசதியானவன்… உங்கள் மேல் அதிகமான அன்பை வைத்திருக்கிறான்…”
“இந்த நாட்டை ஆளும் ராஜாவாகக்கூட அவர் இருந்து விட்டுப் போகட்டுமே… என் மனதிற்கு அவரைப் பிடிக்க வேண்டாமா…?”
“உங்களுக்கு யாரைத்தான் பிடிக்கும்…” எரிச்சலுடன் தனஞ்ஜெயன் கேட்க…
“உங்களை மட்டும்தான் எனக்குப் பிடிக்கும்…” என்று அவள் பட்டென்று பதில் சொல்லிவிட்டாள்.
“என்னது…?” தனஞ்ஜெயன் திகைத்துப் போய் அமர்ந்துவிட்டான்.
‘இதற்காகத்தான் காதல் தூது விடும் வேலையை நண்பர்களை நம்பி யாரும் விடுவதில்லை போல…’ என்று எண்ணியவனின் மனதில்… கிருஷ்ணனும் தனஞ்ஜெயனை நம்பி… தூது போகச் சொல்லவில்லை என்ற உண்மை உறைத்தது…
“என்னம்மா… இப்படி ஒரு கல்லைத் தூக்கி என் தலையில் டமால்ன்னு போடுறீங்க…?”
“நான் காதலைச் சொல்வது… உங்களுக்கு கல்லைத் தூக்கிப் போடுவது போல இருக்கா…?”
“கிருஷ்ணன் என் நண்பன் சாருலதா…”
“இருக்கட்டுமே…”
“அவன் உங்களைக் காதலிக்கிறான்…”
“ஆனால்… நான் உங்களைத்தானே காதலிக்கிறேன். இன்னும் சொல்லப்போனால்… உங்களைத்தான் என்னால் காதலிக்க முடியும்.”
“ஏன்..?”
“ஏனென்றால்… என் மனதிற்கு உங்களை மட்டும்தான் ரொம்ப… ரொம்பப் பிடித்திருக்கிறது…”
“அவனிடம் உங்களுக்குப் பிடிக்காத குணங்கள் என்று எதுவும் இல்லை சாருலதா… இன்னும் சொல்லப் போனால் நானாவது குடிப்பேன்… அவனிடம் அந்தப் பழக்கம் கிடையாது… உங்களிடம் இதைச் சொல்வதற் எனக்குப் கென்ன… பெண்களைக் கண்டாலே பிடிக்காதுங்க… ஆனால், அவன் அப்படியில்லை… பெண்களை ஆராதிப்பவன்…”
இப்படி யோசிப்பவனை ஆழமாய் நேர்ப்பார்வை பார்த்தாள் சாருலதா.
“ஏன் உங்களுக்குப் பெண்களைக் கண்டால் பிடிக்காது…?”
“காரணம் தெரியாது…”
“உங்கள் அம்மாவை உங்களுக்குப் பிடிக்காதா?”
“யாருக்குத்தான் அம்மாவைப் பிடிக்காமலிருக்கும்..”
“உங்களுடைய அம்மாவும் பெண்தானே…”
தனஞ்ஜெயன் அவளை எரிச்சலுடன் பார்த்தான்.
“இதிலிருந்து நீங்கள் சொல்ல வருவது என்னவோ?”
சாருலதா நிமிர்ந்து அமர்ந்துகொண்டு, அவன் முகத்தை தீர்க்கமாகப் பார்த்தாள்.
– தொடரும்…
– நீயின்றி நானில்லை (நாவல்), முதற் பதிப்பு: ஜூலை 2011, திருமகள் நிலையம், சென்னை.