(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4
அத்தியாயம்-1
‘இந்த உலகத்தில் எத்தனையோ கோடி ஆண்களிலிருக்க இவனைப் போய் ஏன் காதலித்துத் தொலைத்தேன்…’ என்று ஒரு லட்சத்து பதினான்காம் முறையாக வருத்தப்பட்டு ஓய்ந்தாள் சாருலதா…
அவள் கண்களில் அவளையுமறியாமல் துளிர்த்து விட்ட விழி நீரை உணர்ந்தவள், அவசரமாய் தன்னை யாரும் பார்த்துவிட்டார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே விழிகளில் அரும்பியிருந்த கண்ணீர்த் துளிகளை கைக்குட்டையால் ஒற்றிக்கொடுத்தாள்.
‘நானா அழுகிறேன்… சே…’ அவளுக்குத் தன்மீதே கோபம் வந்தது..
அழுகை என்றாலே பிடிக்காதவள் வேண்டாமென்று ஒன்றை விலக்கி வைத்துவிட்டால், இறுதி மூச்சுவரை அதைத் திரும்பிக்கூடப் பார்க்காதவள். கடைசி வரை போராடாமல் தோல்வியை ஒப்புக்கொள்ளாதவள், இன்று தோற்றுப்போன மனநிலையுடன் கண்கலங்கி உட்கார்ந்திருக்கிறாள்.
யாருக்காக…? தன் போக்கில் உலகை எதிர்கொள்ளும் முரட்டு சுபாவமுடைய… தீயைப் போல சுட்டுக் கொண்டிருக்கும் குணமுடைய ஒருவனுக்காக…
என்ன செய்வது… சாருலதா அவனைக் காதலித்துத் தொலைத்து விட்டாளே… உலகோடு ஒட்டாத இயல்புடைய அவன்மேல் உயிரை வைத்துவிட்டாளே…
‘காதல் என்பது எவ்வளவு பெரிய தைரியசாலியையும், கோழையாக்கிவிடும் தன்மையுடையது’ என்பதைத் தாமதமாகப் புரிந்து கொண்டு தவித்தாள் சாருலதா…
‘திரும்பி வர முடியாத ஒருவழிப் பாதையில் பயணித்துவிட்டோமோ’ என்று பரிதவித்தாள். ‘தன் புத்திசாலித்தனம் எங்கே தொலைந்து போனது’ என்று தேடிப்பார்க்க இயலாமல், முட்டாளாகி மூலையில் சரிந்து அமர்ந்து முகம் மூடிக்கொண்டாள்…
இத்தனை துன்பத்தையும் அவளுக்கு அளித்த தனஞ்ஜெயன் தன் போக்கில் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“உனக்கும்… சாருலதாவிற்கும் எதுவும் மனஸ்தாபமா…?” அவன் எதிரில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணன் வினவினான்.
“ஒருதாபமும் இல்லை… நீ முதலில் கொட்டிக் கொள்ளும் வேலையைக் கவனி…”
“உனக்கு ஒருதாபமும் இருக்காது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்… நீ ஒரு அதிசயப் பிறவி… உன்னையும் ஒருத்தி மாய்ந்து… மாய்ந்து காதலிக்கிறாளே… அவளை ஏண்டா அழ வைக்கிறாய்…?”
“எனக்கு அப்படி ஒரு நேர்த்திக் கடன் இருக்குடா… போதுமா… நீ சாப்பிடத்தானே என்கூட வந்தாய்…? வந்த வேலையை மட்டும் பாரு… தேவையில்லாமல் என் பெர்ஸனல் மேட்டரில் மூக்கை நுழைக்காதே… எனக்கு அது பிடிக்காது…”
“உனக்கு எதுதாண்டா பிடிக்கும்? ‘அட்லீஸ்ட் அந்தச் சாருலதாப் பெண்ணையாவது பிடித்திருக்கிறதே’ என்று சந்தோசப்பட்டேன். இப்போது அதற்கும் வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறாய்…?”
“அது ஏண்டா… அடுத்தவனின் அந்தரங்கத்தைத் தெரிந்து கொள்ள அத்தனை பேரும் ஆளாய்ப் பறக்கறீங்க…?”
“நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்… நான் இந்தச் சென்னையில் கால் பதித்த நாள் முதலாய்… ஆறு வருடங்களாய் உன்னுடன் ஒரே அபார்ட்மென்டில் குடியிருக்கிறேன்… ஒரே ஆஃபீஸில் ஒன்றாக வேலை செய்கிறேன். என் சுக… துக்கத்தை வாடகையோடு… உன்னுடன் ஷேர் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.”
“ஒன் மினிட் கிருஷ்… நான் வாடகையை மட்டும்தான் இதுவரை உன்னுடன் ஷேர் பண்ணிக் கொண்டிருக் கிறேன்… என் சுக.. துக்கத்தை என்றைக்குமே மற்றவங்ககிட்ட ஷேர் பண்ணிக் கொண்டதில்லை…”
“டேய்… நான் உன் நண்பன் டா…’
“நான் மட்டும் உன்னை என் எதிரியின்னா சொன்னேன்…?”
“என்னைக்கூட ஏண்டா பிரித்துப் பார்க்கிறாய்…?”
“இந்த உலகத்தில் நான் தனியாகத்தான் பிறந்து வந்தேன்… தனியாகத் தான் போகப் போகிறேன்… இதில் ஊடே வரும் எதுவும் நிரந்தரமில்லை…”
“இடையில் வாழும் காலத்தில் இந்த உலகோடு இசைந்து வாழ்ந்தாதான் என்னடா…?”
“எனக்கு அவசியமில்லை…!”
“சாருலதாவைப் போன்ற ஒரு புத்திசாலிப் பெண் உன்னை உயிருக்குயிராய் காதலிக்கிறாள்… நீ அவளைப்பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருடா தனா…”
“அவள் என்னைக் காதலித்தால்… அதற்காக… நான்… நானாக இல்லாமல் மாற வேண்டுமா? என்னைக் காதலின்னு நான் அவளிடம்போய் கேட்டேனா…? அவளாக என்னைக் காதலித்தால்… அதற்கு நான் பொறுப்பாக முடியாது…?”
“இது ஒரு பேச்சாடா தனா…?’
“எனக்கு இப்படித்தான் பேச வரும்…”
“மாற்றிக்கொள்…”
“அது என்ன தேவைக்கு…?”
“உனக்காக இல்லாவிட்டாலும்… சாருலதாவிற்காக வாவது மாறு…”
“அவள் என்ன பெரிய இவளா…?”
“உன் காதலிடா…”
“இது என்னடா பெரிய துன்பமாகப் போய்விட்டது… சும்மா நொய் நொய்யென்று – சதா பேசிக் கொண்டேயிருக்கிறாள்… அதற்கு நான் பொறுமையாக ‘ஊம்’ வேறு போடவேண்டுமாம்…”
“அதிலென்னடா உனக்குக் கஷ்டம்?”
“என் கஷ்டம் உனக்கெப்படிப் புரியப் போகுது… ஒரு மனிதனுக்கு ஆயிரம் வேலை இருக்கும். இருக்கும். அதை யெல்லாம் விட்டுவிட்டு… இவள் வாயைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா…?”
தனஞ்ஜெயன் எரிச்சலுடன் கேட்கவும்… கிருஷ்ணனுக்கு சிரிப்பு வந்து விட்டது.
“ஏண்டா… உலகத்தில் ஆயிரம் பிரச்சினைகள்… குற்றம்… குறைகள் இருக்கு… உன் பிரச்சினை இதுதானா…?”
“உனக்கென்னடா மச்சான்… ஈஸியாய் ஈஸியாய் சொல்லி விட்டாய்… என் தலைவேதனை எனக்குத்தான் தெரியும்… நான் பாட்டுக்கு ஜாலியாய் இருந்தேன்டா… மகராசி வந்தாள்… உன்னைக் காதலிக்கிறேன்டான்னு சொன்னாள்… எந்த நேரத்தில் அவள் காதலைச் சொன்னாளோ… அந்த நொடியிலிருந்து என் சுதந்திரம் போய்விட்டது…”
“இப்படி ஒரு சிறையில் மாட்ட முடியவில்லையேன்னு எனக்கு ஏக்கமாய் இருக்கு… உனக்கு இது கொடுமையாய் இருக்கு… எல்லாம் நேரம்டா…”
“ஏன்… இவ்வளவு சொல்கிறவன்… நீ போய் அவளைக் காதலிக்க வேண்டியதுதானே…”
“சொன்னேனே.. என் காதலை அவளிடம் சொன்னேனே… அவள் சிரித்துக் கொண்டே மறுத்து விட்டாளே…”
தனஞ்ஜெயனின் மனதில் தென்றலடித்தது… அவனுக்கும் அது தெரியும்… யாருக்கும் வளைந்து கொடுக்காமல்… நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையுமாக இருக்கும் சாருலதா… தன்னிடம் மட்டும்தான் மண்டியிடுகிறாள் என்பது…
ஆனால்… அதையும் மீறி அவர்கள் இருவருக்கும் இடையே சமீபகாலமாய் அனலடிக்கும் வாக்குவாதங்கள் தோன்றிக் கொண்டிருந்தன…. அலையடிக்கும் கடலாய் சிலசமயம் அவள் கொந்தளித்தாள்… சில சமயம் அவன் அவளைத் தூக்கியெறிந்தான்…
எல்லாச் சமயங்களிலும், அவன் உடைந்து விடாமல் நிலைத்து நிற்க… சாருலதா மனம் உடைந்தாள்… தன் திடம் குலைந்து சரிந்தாள்…
அவள் படும் வேதனையைச் தனஞ்ஜெயன் புரிந்து கொண்டானோ… இல்லையோ… கிருஷ்ணன் புரிந்து கொண்டான். அவள் மேல் மனதிற்குள் இரக்கம் சுரக்க… அவள் சார்பாய் தனஞ்ஜெயனிடம் பரிந்து பேசினான்.
எவருக்கும் கட்டுப்படாத இயல்புடைய தனஞ் ஜெயன்… சில சமயம் அவனுக்குப் பதில் சொல்வான்… சில சமயம்… ‘நீ யார் என் விசயத்தில் தலையிட…’ என்று மூக்கை உடைப்பான்.
சாருலதாவின் சோர்ந்த முகத்தை தன் நினைவில் கொண்டுவந்து நிறுத்தி… தன்னைத் தேற்றிக்கொண்டு, கிருஷ்ணன்… விடாமல் தன் முயற்சியைத் தொடர்வான்…
அன்றும் அது போலத்தான்… தொடர்ந்து ஒரு வாரமாக தனஞ்ஜெயன்… சாருலதாவிடம் முகம் கொடுத்துப் பேசாமல் போர் முரசு கொட்டிவிட… சாருலதா அதிகமாக மனம் உடைந்தாள்… அவளது கண்ணீர் முகத்தைக் காணச் சகிக்காமல் கிருஷ்ணன், தனஞ்ஜெயனிடம் பேச ஆரம்பித்திருந்தான்…
“அவள் என்னைக் காதலிக்கிறாள் என்பதற்காக நான் அவளுடைய அடிமை போல அவள் என்னை ட்ரீட் பண்ணக்கூடாதுடா கிருஷ்…”
“எனக்கு என்னவோ வேறு மாதிரி தோன்றுகிறது…”
“எப்படி…?”
“அவள் உன்னைக் காதலிக்கிறாள் என்பதற்காக நீ அவளை உன் அடிமையாக நினைக்கிறாய்…”
“உளறாதே…”
“இதுதான் உண்மை… உன் மனச்சாட்சியைக் கேட்டுப் பார்… நான் சொல்வதுதான் உண்மையென்று அது சொல்லும்.”
“அவள் என்னைக் கார்னர் பண்ணுவது சரியா…?”
“எதை வைத்து நீ இப்படிச் சொல்கிறாய்…? தனா! உனக்கே தெரியும்… அவள் புத்திசாலி… அதிகம் யோசிப்பவள்… அவளுக்குப் பிடிக்காத எதையும் கோடி ரூபாய் கொடுத்தாலும் செய்ய மாட்டாள்… யாருக்கும் பணியாதவள்… உன் அன்பிற்குப் பணிகிறாள்… அதை நீ எளிதாய் எடை போடாதே…”
“நீ அவளைப் பற்றி அதிகம் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை…”
“பொறாமை…? ம்ம்… இது காதலில் இருக்க வேண்டிய ஒன்று. தனா… உன்னைவிட நான் வசதியானவன். அவள் மட்டும் என் காதலை ஏற்றுக் கொண்டிருந்தால்… ஒரு மகாராணிபோல் அவளை வாழ வைத்திருப்பேன். ஆனால்… அவள் என்னைப் புறக்கணித்தாள். உன்னை விரும்பினாள். நீ அவளை உன் காலடியில் பட்டத் தூசியாக நினைக்கிறாய். இது சரியில்லை அவ்வளவுதான் நான் சொல்லுவேன்…”
“ஏண்டா… ஞாயிற்றுக் கிழமைகூட மனிதனை நிம்மதியாக இருக்க விடமாட்டியா…? மற்ற நாள்களில் அவள் என உயிரை எடுக்கிறாள்… ஞாயிற்றுக் கிழமையில்… நீ என் உயிரை எடுக்கிறாய். நீங்கள் இரண்டு பேரும் ஒரு முடிவோடுதான் இருக்கிறீங்களா…?”
தனஞ்ஜெயன் கோபத்துடன் பாதிச் சாப்பாட்டில் எழுந்து கொள்ளப் போனான்… அவன் கை பிடித்து அமர வைத்தான் கிருஷ்ணன்.
“என் மேலிருக்கும் கோபத்தை என்மீது காண்பி… சாப்பாட்டின் மேல் காண்பிக்காதே… இந்தச் சாப்பாட்டிற்காகத்தான் நாம் இத்தனை பாடுபடுகிறோம்… சாப்பிடு…”
“தெரியுதில்லையா… நாள் முழுவதும் உழைக்கிற மனுசனை ஒரு வாய் சாப்பிடக்கூட விடாமல் அவள் வந்து உயிரை எடுத்தால் எனக்கு கோவம் வருமா… வராதா…?”
“ஓ… லன்ச் டயத்தில் சாருலதா உன்னிடம் பேச வந்தாளா…?”
“ஆமாம்… ‘சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்… அப்புறமாய் வா… பேசலா’மென்று சொன்னால்.. முகத்தை மூன்று முழநீளத்திற்குத் தூக்கி வைத்துக் கொள்கிறாள்… மனுசனுக்கு எப்படி இருக்கும்?”
“அவள் சாப்பிட்டுவிட்டாளான்னு கேட்டியா…?”
“அதெல்லாம் கொட்டிக் கொள்ளாமல்தான் என்னிடம் பேச வந்தாள்… இவளும் சாப்பிடமாட்டாள்… என்னையும் சாப்பிட விடமாட்டாள்…”
“அவள் சாப்பிடாமல் உன்னிடம் பேச ஓடி வந்திருக்கிறாள். அது புரியாமல் நீ அவளைத் திட்டியிருக்கிறாய்… இதில் கோபம் வராதான்னு கேள்வி வேறு கேட்கிறாய். கவனி… தனா… இதற்கு எனக்குக் கோபம் வராது… உனக்குத்தான் வரும்.”
“நீ நினைப்பது போல் ஆட என்னால் முடியாது…”
“எப்படியோ போ… ஒன்றை மட்டும் சொல்கிறேன் கேட்டுக்கொள்… சாருலதா, பெண் சிங்கம். யாருக்கும் கட்டுப்படாத அந்தச் சிங்கத்தை கட்டுப்படுத்தும் ரிங்மாஸ்டர் நீ ஒருவன்தான்… உன் கையிலிருக்கும் ‘காதல்’ என்ற சாட்டைக்கு அவள் அடிபணிகிறாள்… அதை நீ அவளது பலவீனமாய் நினைத்து விடாதே…”
கிருஷ்ணன் சொன்ன வார்த்தைகளில் பொதிந்திருந்த உண்மையை அறியாதவனல்லன் தனஞ்ஜெயன்… அவன் அதை நன்கு அறிவான்.
அத்தியாயம்-2
சாருலதா புத்திசாலிப் பெண் என்று அனைவராலும் அறியப்பட்டவள்… அந்த அலுவலகத்தில் அவளுக்கென்று ஒரு தனிமரியாதை இருந்தது… அபத்தமான எதையும் சிறு புன்னகையுடன் உடனே அடையாளம் கண்டுகொள்வாள். தான், இனம் கண்டுகொண்டதை சம்பந்தப்பட்டவர்க்கு உடனே உணர்த்தியும் விடுவாள்…
“இது அதிகப்படியான வார்த்தை டேனியல்… இதை அவாய்ட் பண்ணிவிட்டு வேலையை மட்டும் பார்க்க டிரை பண்ணுங்களேன்….”
இதுதான் சாருலதா… கடுமையான வார்த்தைப் பிரயோகம் இல்லாமலேயே கடுமை காட்ட அவளுக்குத் தெரியும். ஒரு சிறு பார்வைகூட அவளை எளிதாகப் பார்த்துவிட முடியாது. கூர்மையான நேர் பார்வையோடு… விழிகளோடு விழி பார்ப்பாள்… எதிரே நிற்பவன் பதறிப் போய் தன் பார்வையைத் திருப்பிக் கொள்ளும்வரை… சாருலதா, தன் பார்வையை விலக்கிக் கொள்ளவே மாட்டாள்…
கிருஷ்ணனுக்கு சாருலதாவை மிகவும் பிடிக்கும்… ‘அவள் வேலையில் சேர்ந்திருந்த இந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் ஆஃபீஸே பூஞ்சோலையாகக் கண்ணுக்குத் தோன்றுகிறது’ என்று அடிக்கடி தனஞ்ஜெயனிடம் சொல்லுவான் அவன்…
“எனக்கு ஒன்றும் அப்படித் தோன்றவில்லையே… ஆறு வருடமாய் பார்க்கும் அதே ஆஃபீஸ்தான் என் கண்ணுக்குத் தெரிகிறது… இதைப் போய் பூஞ்சோலைன்னு எந்த மடையனாவது சொல்வானா?”
“இந்த மடையன் சொல்வான்…”
“உனக்கு மறை கழண்டு விட்டதுன்னு நான் சொல்லுவேன்…”
“நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்… அவள் பேச்சும்… பார்வையும்… சிரிப்பும்… ச்ச.. ச்ச்.. ச்ச்…”
“ஏண்டா இப்போது ரோட்டில் போகும் நாயைக் கூப்பிடுகிறாய்…?”
தனஞ்ஜெயன் எரிச்சலுடன் வாசல் பக்கம் எட்டிப் பார்க்க… காதல் கற்பனைக் குதிரையின் வேகம் தடைபட்டவனாய் அவனைவிட அதிக எரிச்சல்பட்டான் கிருஷ்ணன்…
“மனுசனாடா நீ… ஒரு மனிதன் ரசித்து ‘ச்ச்… ச்ச்…’ சொல்லுவதற்கும்… நாயைக் கூப்பிடுவதற்கும் வித்தியாசமே தெரியாதா உனக்கு…?”
“என்ன வித்தியாசம்…? பெரிய வெங்காய வித்தி யாசம்… இரண்டுக்குமே ‘ச்ச்… ச்ச்’ போட்டால் நான் எந்த ‘ச்ச்’ன்னு கண்டேன்… எனக்கு எல்லாமும் ஒன்றுதான்…”
“உன்னிடம் போய் நான் என் காதலைப் பற்றிச் சொல்ல வந்தேன் பார்… என் புத்தியைச் சொல்ல வேண்டும்…”
“இல்லாத ஒன்றை பற்றி நீயெல்லாம் பேசக்கூடாது… மனுசனை நிம்மதியாய் தூங்கவிடு… சும்மா காதோரம் தொணதொணன்னு பேசிக்கிட்டே இருந்தே… மகனே… கல்லைத் தூக்கிப் போட்டு உன் கதையை முடித்து விடுவேன்…”
கிருஷ்ணன், சாருலதாவைப் பற்றி தனஞ்ஜெயனிடம் புலம்பிய போதெல்லாம்… தன்னை நிம்மதியாய் வேலை பார்க்க விடாமல் தொந்தரவு செய்கிறானென்றுதான் தனஞ்ஜெயன் கோபப்பட்டிருக்கிறானே தவிர… கனவில் கூட சாருலதாவைப் பற்றி அவன் யோசிச்சதில்லை… கல்லையும்… மண்ணையும் பார்ப்பது போல் அவளிடமும் ஒரு பார்வையை வீசிவிட்டு அவன் போக்கில் போய் விடுவான்.
கிருஷ்ணனின் காதல் முற்றிப் போய் தூக்கத்தில் பினாத்துகிற அளவிற்கு வந்தபோது… தனஞ்ஜெயன் அவன் மேல் எரிந்து விழுந்தான்.
“இந்த எழவெடுத்த காதலை அவள் கிட்ட சொல்லித் தொலைக்க வேண்டியதுதானேடா… நீயும் தூங்காமல் என்னையும் தூங்கவிடாமல் ரோதனை பண்ணி, என் உயிரை ஏண்டா எடுத்துத் தொலைக்கிறாய்…?”
“தினமும் அவளிடம் சொல்லத்தான் நினைக்கிறேன்டா…”
“இது என்னவோ பழைய சினிமாப்பட டைட்டில் போல இருக்கே…”
“நீ வேறு ஏண்டா… நேரம் காலம் தெரியாமல் எக்குத்தப்பாய் கேள்வி கேட்டு வைக்கிறாய்…?”
“சரிவிடு… சொல்ல நினைத்தவன்… சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே…”
“எப்படிடா சொல்வது…?”
இப்படிக் கேட்டவனை வினோதப் பிறவியைப் பார்ப்பதுபோல் விசித்திரமாகப் பார்த்தான் தனஞ்ஜெயன்… ‘இவனுக்கு என்ன ஆகிவிட்டது…’ என்று அவனுக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது.
“ஏண்டா… வாயால்தான் சொல்லவேண்டும்… இவ்வளவு நேரமும் உன் திருவாயை மூடாமல் என்னிடம் கதை அளந்தாயில்லையா… அந்தக் கதையைப் போய் அப்படியே அவளிடம் அளக்கவேண்டும்…”
“நேற்றுக்கூட அப்படித்தாண்டா நினைத்தேன்…”
“நினைத்ததை முடித்திருக்க வேண்டியதுதானே…?”
“இல்லைடா மச்சான்… ரெட்ரோஸை கையில் கொடுத்து என் காதலைச் சொல்லணும்னு ரொம்ப நாளாய் ஒரு நினைவு…”
“இது வேறா… ம்ஹும்… எங்கேயிருந்துடா இப்படி அபத்தமாக யோசிப்பீங்க… ரெட்ரோஸ் காதலின் அடையாளமா? நான் அதை ‘டேன்ஜரஸ் சிக்னல்’ன்னு இல்ல நினைத்துக் கொண்டிருந்தேன்…”
“காதலின் மகத்துவம் தெரியாமல் பேசாதே…”
“ஓகே… நான் பேசவில்லை…. நீதான் பேசேன்…”
“ரெட்ரோஸும் வாங்கிக் கொண்டு போனேன்டா…”
“அப்புறம் ஏண்டா சொல்லவில்லை…?”
“வாங்கும்போது நல்லாத்தாண்டா இருந்தது…”
“எதுடா…?”
“அந்த ரெட்ரோஸ்தான்…”
“உன்னை… அப்புறம் என்னதாண்டா ஆனது?”
“அவகிட்டப் போய் ரோஸை எடுத்தால் காம்பு மட்டும்தான் கையில் வருது…”
“பூவோட இதழ்கள் எங்கே போச்சு…?”
“உதிர்ந்து போச்சு…”
“ஹா… ஹா… நீ இந்த ஜென்மத்தில் உன் காதலை அவகிட்ட சொல்லமாட்ட… ஹா… ஹா…”
“சிரிக்காதேடா மச்சான்…”
“ஏன்… நான் சிரித்தால் உனக்குப் பிடிக்காதா… அவள் சிரித்தால்தான் உனக்குப் பிடிக்குமா?”
“ஹைய்யோ… சொல்லவே மறந்து விட்டேன் தனா… முந்தாநாள் பக்கத்து சீட் கலா ஏதோ ஜோக் சொன்னாள்ன்னு அவள் சிரித்தாள் பாரு… அன்றைக்கு பூராவும் எனக்கு ஜில்லுன்னு இருந்துச்சுடா…”
“அடைமழை விடாமல் பெய்தால் உனக்கு மட்டுமா ஜில்லுன்னு இருக்கும்…? ஊருக்கே ஜில்லுன்னு தான் இருக்கும்…”
தனஞ்ஜெயனின் கிண்டலைக் கவனிக்காமல் கிருஷ்ணன் தன் டைரியில் ஒரு பேப்பரைக் கிழித்து வைத்துக் கொண்டு… விட்டத்தை வெறித்துப் பார்த்துக் பேனாவால் தாடையில் ஒரு தட்டு கொண்டு.. தட்டுவதும்… பின் அவசரமாய்க் குனிந்து எழுதுவதுமாக இருந்தான்.
‘இவன் என்ன செய்கிறான்…?’ தனஞ்ஜெயன் யோசனையுடன் அவன் அருகே போய் பேப்பரைப் பார்த்தான்.
‘வானில் ஒரு வெண்ணிலா… மண்ணில் ஒரு பெண்நிலா… அது வேறு யாருமல்ல… நீயேதான்…’ என்று எழுதியிருந்தது.
“என்னடா இது…?”
“பார்த்தால் தெரியவில்லை. க..வி..தை… கவிதை…”
“கவிதையா…?’
விளக்கெண்ணெய் குடித்துவிட்டவனைப் போல, முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு தனஞ்ஜெயன் கேட்டான். அதைக் கவனிக்காமல்… வைரமுத்து போல முகத்தைப் பெருமையாக வைத்துக் கொண்டு, கிருஷ்ணன் பதில் சொன்னான்…
“கவிதைதான்… எப்படி… நல்லாயிருக்கா…?”
“உனக்கு எதற்குடா இந்த வேண்டாத வேலை…?”
“சாருலதாவிற்கு கவிதை பிடிக்கும்டா…”
“அடக் கன்றாவியே… “
“அவள் நல்லாக் கவிதை எழுதுவாள் தெரியுமா?”
“அதைத் தெரிந்துகொண்டு நான் என்ன பண்ணப் போகிறேன்?”
“அதனால்தான் அவளைக் கவிதையிலேயே கவர் பண்ணலாமுன்னு, நானும் இந்தக் கவிதையை எழுதினேன். படிக்கிறேன்… கேட்கிறாயா…?”
“நீ இப்போது என்னிடம் அடிவாங்கத்தான் போகிறாய்… நம் ஆறு வருட ஃபிரண்ட்ஷிப்… உன் அரைகுறை கவிதையால் பிய்ந்து போக வேண்டுமா…? நீயே ஒரு முடிவிற்கு வா…”
“அந்த அபார்ட்மென்டில் தனஞ்ஜெயன்தான் முதலில் அட்வான்ஸ் கொடுத்து குடி வந்திருந்தான். ரொம்பவும் கெஞ்சிக் கேட்டு.. கிருஷ்ணன் அவனுடன் தங்க வந்தான்… இப்போது அவன் வெளியே போவென்று சொல்லி விட்டால்… இவ்வளவு வசதியோடு வேறு ஒரு அபார்ட்மென்ட கிடைப்பது சென்னையில் கஷ்டமான விசயம் என்பதால்… தன் கவிதை சொல்லும் ஆசையை உடனடியாக கைவிட்டான் கிருஷ்ணன்.
ஆனால் ‘விடிய விடியத் தூங்காமல் விளக்கை எரிய விட்டுக் கொண்டு கவிதை எழுதுகிறேன் பேர்வழி யென்று’ சுற்றிலும் காகிதப் பந்துகளை சுருட்டி வீசிக் கொண்டு. கிருஷ்ணன் பண்ணிய அலம்பல் தாங்காதவனாய், தனஞ்ஜெயன் மறுநாள் மதிய உணவு நேரத்தின் போது சாருலதாவின் இருக்கைக்குச் சென்று… அவள் எதிரே அமர்ந்தான்… அவள் ஆச்சரியமாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்…. அவள் பார்வையில் கேள்வி இருந்தது.
“இங்கே பாருங்க… மிஸ் சாருலதா…”
“பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் மிஸ்டர் தனஞ்ஜெயன்…”
“உங்களால் எனக்கு ராத்தூக்கம் போய்விட்டது…” சாருலதாவிற்கு தூக்கி வாரிப்போட்டது…
‘இவன் என்ன இப்படி வந்து நேரடியாய் பேசுகிறான். இவன் இப்படியெல்லாம் பெண்களிடம் வழியும் ரகம் இல்லையே…’
“என்னங்க… நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்… நீங்க பதில் பேசாமல் என் முகத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீங்க… என் முகத்தில் அப்படி என்னதான் இருக்கு…?”
அவன் எரிச்சலுடன் கேட்ட விதத்தில்… அவளுக்கு அவனது முகத்தைப் பார்க்கத் தோன்றிவிட்டது… காந்தம் போன்ற அவனுடைய கண்களை நேருக்கு நேராய் பார்த்தவளின் உடலில் ஓர் அதிர்வு ஏற்பட்டது… மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற புதுவகையான ஒரு உணர்வை அவள் அனுபவித்தாள்… அவனது ஊடுருவும் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் முதன்முறையாக அவள் விழி தாழ்த்தினாள்.
‘என்னடா இது…? நான் கிருஷ்ணனுடைய காதலைச் சொல்ல வந்தால்… இவள் என்னை இப்படி ஒரு பார்வை பார்க்கிறாள்…’
தனஞ்ஜெயன் தாடையைத் தடவிக்கொண்டான்… எதிரில் அமர்ந்திருக்கும் பெண்… ஏதோ வகையில் அவனைப் பாதிப்பதை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது…
‘சேச்சே… இவள் கிருஷ்ணனின் காதலி…!’
தனக்குள் உருப் போட்டுக்கொண்டே… தனஞ்ஜெயன் அவளை நிமிர்ந்து பார்க்க… அதே நேரம் அவளும் அவனைப் பார்த்தாள்.
– தொடரும்…
– நீயின்றி நானில்லை (நாவல்), முதற் பதிப்பு: ஜூலை 2011, திருமகள் நிலையம், சென்னை.