நிலவு இருந்த வானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 3,238 
 

யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு முன்னால் நிரை நிரையாக உயர்ந்து வளர்ந்திருக்கும் மலை வேம்புகளின் கிளைகளில் காகங்களின் கரைவு காதைக் குடைந்து கொண்டிருந்தது.

வீதிக்கு இடப்புறமாக ஆஸ்பத்திரி மதிலுடன் அண்டி அமைக்கப்பட்டிருந்த நடை மேடையில் பிரயாணிகள் போக்கு வரவு செய்து கொண்டிருந்தனர். கறுத்து உருகிப் பரந்திருந்த தார் வீதியில் காகங்கள் எச்சம் போட்டு வெண்புள்ளி அடித்திருந்தன.

நடைபாதையின் புற மேடையில் வழியை மறித்துத் தன்னுடைய குழந்தையைத் தரையிலே பிறந்த மேனியோடு வளர்த்தியிருந்தாள் கமலி. காய்ந்து கறுத்திருந்த சூரியக்கதிர்கள் ஒளிபாய்ச்சிக் கொண்டிருந்தன. மதிய வேளையின் தகிப்பைத் தான் தாங்கிக் கொண்டாலும், தன் சிசு தாங்கமாட்டாதே என்ற தவிப்பில் மேற்சட்டையின்றிப் போர்த்தியிருந்த தாவணியால் நெஞ்சை இறுக்கி, அதில் மீதங்கண்டு, பிள்ளையின் முகத்திலும், உடம்பிலும் வெய்யிற் படாமற் பாதுகாத்துக் கொண்டாள் அவள்.

உணர்ச்சி மலையின் ளிவு உள்ளிருந்தே அவளைக் கரித்தது. வெளியே கோடை வெய்யிலின் கொதிப்பு உடம்பைத் தகித்தது. இரண்டு வெம்மைச் சுடர்களுக்கும் மத்தியில் வெளியே அலறாத ஊனக் குரலில் உள்ளே மறைந்து, மறைந்து புலம்பிக் கொண்டிருந்தது நெஞ்சம்.

வாயிலிருந்தும் பேசாத பொண்ணுருவில் வந்து, உறவு என்ற பாசக்கடலில் ஒரு கணநேரந் திளைத்து, விளைந்த சிறுமலரின் வாட்டத்தைக் காணச் சகிக்காத அந்தப் பெண்ணின் கண்களடியில் பாய்ந்த இரண்டு சொட்டுக் கண்ணீர்த் துளிகள் கன்னமேடைகளில் வீழ்ந்து தெறித்தன.

மத்தியான வேளை ஆஸ்பத்திரிக்குப் போவோர் வருவோருைைடய நடமாட்டம் வீதியையும், மேடையையும் நிறைத்தது.

அவளுடைய அந்த நிலைக்கு உரியதான காரணத்தை அவர்களில் ஒருவராவது எண்ணியதாகவோ கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை. சுயநலம் என்ற கோட்டைக்குள்ளே துரும்பைக் கூட உள்ளே விடாமல் இறுகப் பூட்டடியிருந்தனர் நெஞ்சக் கதவுகளை. அவர்களுக்குத் தங்களைப்பற்றிய கவலையைத் தவிர உலகைப் பற்றி, தம்முள்ள மனித உருவங்களாக எலும்புந் தோலுமாக, மனிதனே தனக்கென்று வகுத்து கடைசியில் அவனையே கருவறுக்கும் மானத்தைக் கூடக் காக்க முடியாமல் தவிக்கும் பெண்ணைப் பற்றியும், அருகதையற்ற அவளை நம்பி வந்த குழந்தையைப் பற்றியும் கவலைப்பட யார் இருக்கப் போகிறார்கள்?

அவள் நிதானமாகக் கண்களில் வழிந்த நீரை விரல்களினால் சுண்டி எறிந்துவிட்டு , ஏதோ அமைதி பெற்றுவிட்டவள் போல் நிலையான சிலையானாள்.

சினிமாத் தியேட்டருக்கு அருகில் அவள் மனநுகர்வில், மாலைமயக்கத்தில், பெண்கள் – ஆண்கள் பெருமைப்பட்டு, வெறுமனே கிடக்கும் அவளுடைய தகரத்தையும், பசியால் வாடும் அந்த இரண்டு சீறுமை வயிறுகளையும் நிரப்பியிருப்பார்கள்.

அவள் ஆஸ்பத்திரிக்கு அருகில் வந்திருந்ததன் மர்மம் அல்லது சூக்குமம் இந்த மண்ணவர்களுக்குத் தெரியவே தெரியாது. தெரிய வந்தாலும் நாங்கள் பெற்றவர்களை இழந்து, பெற்றவற்றை இழந்து தவிக்கையிலே, பிச்சை போடுவகற்கு என்ன செய்வது என ஆறி, மானசிகமாகத் தர்மசிந்தையராகி மறைந்திருப்பார்கள்.

“ஐ…யோ பாவம்.”

கடவுளுக்கு ஏன் இந்த அநியாயமாம்? பெண்ணாகப் பிறந்தவள் மானங்கெட்டு இந்தச் சனப் புழக்கத்தின் மத்தியில் இருக்கிற இருப்பு உலகம்!”

“அவளுக்கு என்ன! புருஷனைக் கொண்டிருப்பாள். அல்லது பத்துப் பேருக்குப் பத்தினியாயிருப்பாள். இந்தக் கலியுகத்திலை பெம்பிளை பிச்சை எடுத்தால் இதுகளிலை ஒண்டை அவள் செய்திருக்க வேணும்.”

“சும்மா பழிசுமத்தாதையணை. உனக்கு ஊரிலையுஞ்சரி எங்கையுஞ் சரி உந்த வசை வைக்கிற குணம் மட்டும் போகாது. நீ மருந்துக்கு வந்தா மருந்தை வாங்கியண்டு பேசாமல் போவன். வஸ்ஸும் வெளிக்கிடப் போகுது.”

பழி சொன்னவைளுக்குப் பதில் சொல்லிய படி அவளுடன் நடந்து கொண்டிருந்தாள். அவர்களில் ஒருவராவது கமலிக்கு ஒரு காசு கூடப்போட எண்ணவில்லை. ஏக்கத்தை விழிகளிற் சாய்த்து, தனக்குப் புதிதாகக் கிடைத்த வசை மொழியை நெஞ்சக்கடலில் கட்டி எறிந்து விட்டு தரையில் கிடந்த புதல்வனைப் பார்த்தாள்.

அவனோ , தாயின் முகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டு உள்ளிழுக்கும் வயிற்றின் மேல் கைபதித்தபடி கூசுகின்ற வானத்தில் கண்களைப் புதைத்திருந்தான்.

‘நீ செய்ததையா இவர்கள் சொல்கிறார்கள்,’ என்பது போலப் பட்டது அவனுடைய பார்வையும், அந்த இனம்புரியாத அலட்சியமும். கமலியால் குழந்தையின் அந்தப் பார்வைக்கு அப்படித்தான் கற்பிதஞ்செய்யமுடியும்.

அவளைப் பொறுத்தவரையில் மனச்சாட்சி என்பது மனிதனால் கற்பிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. எத்தனையோ விபரீதச் செய்கைகளைச் செய்து விட்டு வெள்ளாடைக்குள் மறைந்து புனிதாத்துமாக்கள் என்ற பெயரை இலவசமாக அடைகின்ற ஆயிரக் கணக்கான பெரியவர்களை அவள் கண்கூடாகக் கண்டிருக்கிறாள். பேசத் தெரியாத தன்னுடைய மகனின் பொருளற்ற பார்வைக்குத் தன்னையும் உணராத மன உந்துதல் புது விளக்கம் கொடுத்தது.

‘ம்’ என்ற ஒலியைத் தொடர்ந்து அவளின் முன்னிலையில் வைக்கப்பட்டிருந்த பழைய கவ் அன் கேற் பேணியை நோக்கிக் கவிந்த கை ஒரு காசுக் குற்றியுடன் பதிந்தது.

பலமாக வீசிக் கொண்டிருந்த காற்றில் அடிக்கடி சிலிம்பிக் கொண்டிருந்த முந்தானையை அசையாமல் பிடித்தபடி இருந்த கையை நகர்த்திப் பேணியைத் தூக்கி அந்த தர்மத்தை ஏற்றுக் கொண்டாள் கமலி.

‘டங்’ என்ற ஒலியுடன் விழுந்த பத்துச் சத நாணயம் அந்தப் பேணிக்குள் வேறு ஒன்றும் இல்லை என்று பறை சாற்றிவிட்டு அடங்கியது.

அந்தக் கணத்தில் புதுவரவில் மகிழ்ந்து சற்றுத் தன்னை மறந்த கமலியின் மார்பகங்களை மூடியிருந்த தாவணிச் சேலை ஆபாசக் காட்சி ஒன்றை வீதியின் நடுவில் இடைவெளியில் தங்கள் கார்களை நிறுத்தி விட்டு என்ஜின் பக்கமாச் சாய்ந்து வேடிக்கை பார்த்தபடி நின்ற சில இளசுகளுக்குக் கண்விருந்து அளிக்க எத்தனித்த மாத்திரத்தே அவள் மறுபடியுங் தானாகி லபக்’ கென்று தன் மேற்புறத்தை இழுத்து மூடிக் கொண்டாள்.

ஆரம்பமே சேற்றிலும் சரியிலும் தொடங்கியிருப்பின் கமலிக்கு வாழ்வு கசந்திருக்காது. தெளிந்த நீரோடையில் துள்ளும் மீனாகிக் குழந்தையாய்க் குமரியாய் வளர்ந்த அவள், வளர்த்தவர்கள் வாழ்க்கைத் துணை ஒன்றை அவளுக்குத் தேடித் தந்து வாழவைத்த வேளை கிடைத்த சுகம் முழுவதும் கிடைக்காததால் துணைக்குத் துணைதேடியது அவனின் தவறாமோ? அல்லது அவளுக்குத் துணையாக வந்த துணையின் இயலாமை ஒரு பொல்லாப்பு ஆகுமா? அந்த இருவருக்கும் தான் தெரியும்!

உருண்டு திரண்டு வசீரமான இருந்த கமலியின் அங்கங்கள் கண்கள் படைத்தவர்களுக்கு இனிப்பாக இருந்தால், அது அவள் செய்த குற்றமல்ல. ஆனால், காட்சியோடு மாத்திரம் கண்டவர்கள் நின்றிருந்தால் அவள் அன்றும் அமைதியாக இருந்திருப்பாள்.

தன்னுடைய அழகைத்தானே தெரியாமல் இருந்த அவளுக்கு அவளின் பெருமையை எடுத்துணர்த்திய அந்த ரஸிகனுக்கு அவள் ஒரு நாள் ‘நன்றி’ செலுத்தியது என்னவோ உண்மைதான். அதற்தகாக அவளுடைய வாழ்வு இன்று இப்படிப் போகவேண்டும் என்றோ, போகும் என்றோ இதுவரை யாரும் எண்ணவில்லை.

அடிக்கடி காற்றில் அலைப்புண்ட அங்கவஸ்திரம் அருகே நின்ற கார்ச்சாரதியின் இல்லாமையைச் சிறிது நிரப்பத்தான் செய்தது. தன் உணர்வில் இன்பங்கண்டு தனியே தவித்த அவனுக்கு ரிஸ்ஸு’ போட்ட பண்டந்தான் இனிக்கும் என்பதில்லை. அவன் தன்னுடைய ‘பாக்கெட்டில் விரல்களை நுழைத்து வெளியே வந்து பணச்சுருள்களில் பத்து ரூபாவை வெளியே எடுத்தபடி அவளை நோக்கி அச்சநடை போட்டான்.

ஒருநாள் கமலி தவறியதற்கு அவளுடைய புருஷனைத்தான் காரணஞ் சொன்னாள். முழுமைக்காக ஏங்கிய அவள் மூன்று ஆண்டுகாலமாக முத்துவதற்கு ஒரு குஞ்சு இல்லாமல் கடவுளிடம் போகாமல் தன்னுடைய கடையில் வேலை பார்த்தவனிடம் போனாள். கடவுளிடம் பெற்ற பிள்ளைவரத்துக்குத் தூய்மைக் கிரீடஞ்சூட்டும் அந்தக் குருடுகள், மனிதனிடம் பெற்றதற்கு மாசு கற்பித்தது கமலியின் தத்துவத்தில் ‘பட்டிக்காட்டு மரபாகவே இருந்து.

“நீ என்னை பிள்ளை இந்த முடிவுக்கு வந்த நீ? கடவுளேயெண்டு கட்டும் காலாய் ‘ இருக்கிறே, ஆரேன் எண்டாலும் என்ன, உன்னைப் பார்க்கக் கூடிய ஒருத்தனைப் பாத்தண்டு சும்மா இருந்து விட்டுப் போட்டு இப்படி வெக்கம் இல்லாமல், வந்து றவுணுக்கை பிச்சை எடுக்கறியே. இந்தா.”

சொல்லிக் கொண்டே ஒரு நாணயக் குற்றியை உருட்டிவிட்டாள் ஒருத்தி. கமலியின் இதழ்களின் கோடியில் சிறுகக் சிறுகக் குறுகி வெளிப்பட்ட வரட்டு முறுவல் அவளுக்கு பதில் கொடுத்து மறைந்தது.

‘என்னட்டை என்ன இருக்கெண்டு நானே நம்பிக்கையோடை அறிஞ்சிருக்கிறன். ஏதோ புதிசாக இந்த மனுஷி சொல்லிப் போட்ட நினைப்பிலை போகுது. என்னுடைய சபதம்……..? நான் மறுபடியும் வாழ ஆசைப்பட்டுத்தானே இஞ்சை வந்திருக்கிறான்.”

கமலி முதல் முறையாக நினைக்கத் தொடங்கினாள். அவளுடைய முகத்தில் நம்பிக்கை வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்தது. அதனைப் பிரதிபலித்து நெடு மூச்சு ஒன்று துன்பக் களையுடன் வெளியே புறப்பட்டது.

“சேச்சே! இந்தப் பட்டணம் வரவர மெத்த மோசம் , பெம்பிள்ளயைளின்ரை துணிச்சல்..அப்பப்பா ! இந்த ஊரிலை இருந்தா நம்மடை மானமும் போயிடும்…”

பதினெட்டு அங்குலத்துடன் தன்னுடைய முழுப்பாரத்தையும் தாங்கியபடி கொடிக்கம்பத்தில் சுற்றி வைத்த சேலை போன்ற தோற்றத்துடன், முழங்கையில் ‘அல மலக்காக’ ஆடிக் கொண்டிருந்த கறுப்பு நிற அழகுப்பையுடனே நின்ற ஒருத்தி அரற்றிக் கொண்டாள்.

“இந்தா உன்னைத்தானே! உனக்கு அப்படி ஒரு பிளவுஸ்’ வாங்கக் காசு கிடைக்கல்லியா.”

“நீ சும்மாயிரடி ரூபா!”

“ஆரெண்டால் என்ன எப்படியாவது போகட்டும். நீ வா நாமள் போவம்?” ரூபாவுடன் கூடிவந்த மற்றவள் கூறியபடி அவளை இழுத்தாள்.

“ஏன் தாயே முதலிலை நீ ஒரு சட்டையை வடிவாகத் தையன். அதுக்குப் பிறகு என்னைச் சொல்லு. நான்தான் வசதியே இல்லாமல் தைக்கவில்லை. உனக்கும் உன்ரை பகட்டுக்கும் என்ன வந்தது?”

கமலிக்கும் பேசத் தெரியும் என்பதை அவள் காட்ட நினைத்த போது, ‘டாங், டாங் ‘ என்று மணி ஓசை போல் பேணிக்குள் கிடந்தவை கமலியைப் பார்த்து சிரித்தன.

கமலி இந்தப் பிச்சைத் தொழிலை ஆரம்பித்து மூன்று நாட்கள் தான் முடிந்திருந்தன. ஆனால் அந்த மூன்று நாட்களிலும் அவளுக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்திருந்தன. வெறும் வார்த்தை அபிஷேகங்களும், வீண்வார்த்தைமாரிகளும், பேச்சற்ற தர்மங்களும்……

புரியாத உலகத்தை ஓரளவு வெளிவாரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் பிச்சை எடுப்பது தான் ஒரு வழி. வெள்ளைக்கும் கறுப்புக்கும் வித்தியாசம் கண்ணளவில் மட்டுமல்ல, மனத்தளவிலும் உண்டு என்பது தெரியவரும்.

கமலி ஆரம்பத்தில் பிச்சையை ஒரு பிஸினஸ்’ என்று கருதவில்லை . அப்படிச் செய்ய அவளுக்குத் திராணி இல்லை. தன்னிடமில்லாத ஆத்மபலத்தை அழகு மறைத்ததனால், அந்த அழகு நிறைந்த உடலை அர்ப்பணிப்பதன் மூலம் தன்னை வளர்க்கலாம் என்ற எண்ணமும் அவளுக்கு இல்லாமல் இல்லை. அதனால் பிச்சை ‘பிஸினஸுக்கு ஒரு லைஸன்ஸ்’ என்ற அவள் கருதியதில் தவறில்லை.

சாரதி மெல்ல மெல்ல நடந்து அவளை அணுகி வந்தான். மத்தியான வேளை கடந்து விட்டதால், மறுபடியும் ஐந்து மணிவரை அந்த வீதியில் சனநெருக்கடி இருக்காது என்பதை மெய்ப்பித்தபடி, வந்தவர்கள் எல்லோரும் விரைந்து போய்கொண்டிருந்தார்கள்.

அவனுக்கு அது ஆறுதலை அளித்தது. ஒரு கையில் மடக்கியிருந்த பத்து ரூபாவை இலக்கந் தெரிய மடிய வைத்து விட்டு, கையில் சில சதக் குற்றிகளை எடுத்தான் அவன்.

சாரதியின் நெஞ்சு அடிப்பு அதிகரித்துக் கொண்டிருந்ததை விரல்களின் நுனியின் நடுக்கம் வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருந்தது. முகத்தின் அடிவாரங்களில் ‘ஷேட் கொலர்’ வரை வியர்வை வழியத் தொடங்கியது, அவன் அசாத்தியத் துணிவில் அவளைக் கேட்டான்.

“இந்த வெய்யிலுக்குள்ளே ஏன் சும்மா கிடக்கிறாய், ஏறன் காரிலை. நல்ல இடத்துக்குப் போவம்.”

“உம்…..” கமலி முறைத்தாள்.

சாரதியின் துணிவு சற்று அதிகரித்தது. கையிலிருந்த பத்து ரூபாவைச் சரக்சரக்’ கென ஒலியெழுப்பியபடி மெதுவாக அவள் பக்கமாகக் குனிந்து “இதோடை இன்னும் ” என்றான்.

நீண்ட நாட்களுக்குப் பின்பு பெரிய இலக்கத்தை கண்டது ஏதோ ‘மகிழ்ச்சியாக இருந்தாலும், மீண்டும் அதே பிழையைச் செய்யக் கூடாது என்று உள்ளிலிருந்து ஏதோ சொல்வது போன்றிருந்தது அவளுக்கு. பழமை நினைவில் ஆவேச நினைவு வந்ததும், தன்னுடைய புது நோக்கு திணற அவனுடைய கன்னத்தில் அறைய எத்தனித்தவள், மறுபடியும் பெண்ணாகித் தலை சாய்ந்தாள். ஆத்மாவுக்குப் பலம் கிடைக்காத வரையும் அவளுடைய அழகு வென்று கொண்டே இருக்கும். அதனை உணர்கின்ற அளவுக்கு கமலி வளர்ச்சியடைந்திருந்தாள்.

இவை எல்லாவற்றையும் அவளுக்கு எதிர்ப்புறமாக இருந்த கடையின் பணப்பெட்டியருகில் அமர்ந்திருந்தவன் கண்டு என்ன செய்கிறான் என்பதை கண்களைத் தீயாக்கி விறைத்துப் பார்த்தாள் கமலி.

அவன் சாரதியையும், கமலியையும் சுட்டுப் பொசுக்குமாப் போல் பார்வையைச் செலுத்தியிருந்து விட்டு, கமலி தன்னைப் பார்த்தும் வேடிக்கை உணர்வில் கடையின் மேற்பகுதியையும், சுற்றிவர தொடங்கினான்.

“துரோகி”

கமலி கத்திய சத்தம் சாலையைக் கலக்கியதுடன் சந்தேகத்தையும் அளிக்கவே, அவன் அவளை விட்டு விலகி, தன்னுடைய கார் நின்ற இடத்துக்கு வந்தான். புதிய நிலையில் இருந்த இருப்பில், இன்னொருவன் தன்னை வென்றுவிட்டான் என்ற ஏமாற்றத்தின் பழியுணர்ச்சியுடன் காருக்குள் அமர்ந்து, முன் கண்ணாடி மூலம் கடைக்காரனையும் கமலியையும் பார்த்தபடி இருந்தான் சாரதி.

கடைக்காரனுக்கு சமயம் சரியாகவே பட்டது. தான் இருந்த இடத்துக்கு தன்னுடைய வேலையாளைக் கூப்பிட்டு அமர்த்திவிட்டு, படிகளில் இறங்கி விரைந்து வந்தான். அவனுடைய நடையில் இருந்த வேகம் அவளைக் கொலை செய்யும் நினைப்புடன் வந்தாற் போல் சற்று விறைப்பாகவே தெரிந்தது.

சாரதி இதனைப் போல் எத்தனையோ கேஸ்களைக் கண்ட அனுபவசாலி. இந்தக் கடைக்காரனைச் சும்மா’ விடுவதான எண்ணம் அவனிடம் இருந்ததாகத் தெரிவில்லை.

“அடிபாவி! உனக்கு வெக்கமில்லையோ? உன்னை மாதிரிப் பெம்பிளையளை ஏன் அவமானப்படுத்தியண்டு, என்ரை உயிரையும் வாங்குகிறாய்? என்னைத் தெரிஞ்சவங்கள் இந்தப்பக்கமாக இல்லை. அல்லாட்டி என்ரை மானமே போயிருக்கும். இன்னும் உன்ரை குணம் மாறவில்லையே. எங்கேயாவது போய்ச் செத்துத் தொலையேன். பிள்ளையை வேணுமெண்டா நான் வளர்க்கிறான்…”

சாரதிக்குக் கேட்காமல் இருக்கவேண்டும் என்ற உந்தலில் அவன் பற்களை நறும்பித் தன்னுடைய ரௌத்திரத்தைத் தீர்த்தபடி, பேசிக் கொண்டிருந்தான்.

கமலி கண்கள் தாரையாகப் பொழிய மகனை மடியில் சாத்தி , இருந்த நிலை குலையாமல், விழிகளை உயர உணர்த்தி அவனைப் பார்த்தபடி இருந்தாள். அவளுடைய அடங்காத அழுகைக்கு ஒத்தாசையாக இதழ்கள் விநாடிக்கு விநாடி துடித்துக் கொண்டிருந்தன. கண்டக் குழியில் வரண்டு போகும் நாவை நனைக்க மிடறு எடுக்கும் சத்தம் பெரிதாகக் கேட்டது.

“கிளிநொச்சி ராச்சியமிருந்து கடையையும் மாத்தியண்டு இஞ்சை வந்தனான், இந்தக் கண்ணராவியைப் பார்க்கத்தானே? உன்னாலை போக முடியாட்டிச் சொல்லு. நானாவது இந்த உலகத்தை விட்டுப் போறன். எனக்கு இதல்ல….இன்னும் வேணும்…”

கடைக்காரன் குழந்தையாகி வாய்விட்டு அழத்தொடங்கினான்.

சாரதியின் கண்கள் கண்ணாடியூடாகப்பார்வையிலிருந்தன. ஒலிகள் காதுகளுக்கு எட்டவில்லை . அவன் காரைவிட்டு இறங்கி நடுவீதி நீளம் நிறுத்தியிருந்த கார்ச்சாரதிகள் சிலரிடம் ஏதோ சொல்ல, இரை’ கிடைக்கப் போகும் ஆனந்தத்தில் அவர்கள் அனைவருமே கூட்டாக நடைபோட்டு வந்து கமலியையும், கடைக்காரனையும் வளைத்துக் கொண்டார்கள்.

கமலியின் கண்களிலிருந்தும், கடைக்காரனின் கண்களிலிருந்தும் நீர் பெருகிக் கொண்டிருந்ததைக் கண்ட சாரதிகள் சற்றுப் பின் வாங்கினர். ஏமாற்றத்தால் அடிபட்ட அவன் மட்டும் வெறியிடித்தவனாகி, கடைக்காரனைப் பிடித்து உலுக்கினான்.

“என்னாய்யா! இதென்ன ஆஸ்பத்திரிறோட்டா , இல்லை உன்னுடைய வீடா? என்ன பிச்சைக்காரி எண்டாப் போலை….. அவளை ஷேப்’ பண்ணுறியா? உங்க தரவளியள் வெலிக்கடையிலே இருக்க வேணுமடா.”

கடைக்காரன் பயந்து ஓடி விடுவானென எதிர்பார்த்தான் சாரதி. அவன் கண்ணீரைத் துடைத்தபடி சாரதியயிடம் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, ‘பளீர்’ என்று கன்னத்தில் விழுந்தது.

கமலிக்கு அறிவு கலங்கியது. “அட பாவி….ஏன் சும்மா நிண்டவரை அடிக்கிறாய்?” என்று அலறிக்கொண்டு, மகனைத் தூக்கியபடி கடைக்காரனை ஒரு கையால் தாங்கினாள்.

“ஊக்! விஷயத்துக்கு முந்தியே இவ்வளவு ஒற்றுமையா?” என்றபடி கமலிக்கு அடிக்க ஓங்கிய சாரதியின் கையை, அவர்களின் ஒருவன் தடுத்து நிறுத்தினான். “அவளைத் தொடாதே!” கடைக்காரன் உணர்ச்சியைப் பலமாக்கிக் கத்தினான்.

“நீ ஆரடா..அதைக் கேட்க…?”

“நான்..ம். அவளுடைய…கடைக்காரன் ஏதோ நினைத்தவனாய் மௌனியானான்.

“இவர் என்னுடைய புருஷன்….. உங்களைப் போல ஆக்களாலே தான் நாங்கள் இப்படியானோம்!”

கமலி விக்கி விக்கி அழுதாள்.

அவன் அழுதான்.

நல்ல வீதிகளில் மாத்திரம் தங்களுடைய காரைச் செலுத்த விரும்பும் மனம் படைத்த அவர்கள், மனத்தையும் அப்படிச் செலுத்த முடியாது கண்ட தோல்வியில் தலை கவிழ்ந்தனர்.

கமலி வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டு, “நான் உங்களோடை வாறன். எத்தினை காயிதம் போட்டன்.. ஒண்டுக்கும் பதிலிலை, பிறகு நானேவந்தன். என்னை பிடிச்சு வெளியே விட்டீங்கள். அதுதான் இப்படிச் செய்தனான். அது வேறையாய் முடியபாத்தது. சாக நினைச்சன். மறுகாலும் வாழ்வு தந்திட்டிங்கள்!” என்று கூறினாள்.

மேலங்கியற்றுக் கிடந்த பின் புறத்தேகங்களில் அணைத்திருந்த கைவிரல்களினால் ஸ்பரிசித்து குழந்தையை ஒரு கையாலும் மனைவியை மறுகையாலும் தாங்கியபடி நடந்தான், அவளுடைய கணவன்.

“பிழைவிட்டு வருந்துகிறவர்களை மன்னிச்சு அவர்களுக்கு வாழ்வு கொடுக்கிறவர்கள் உண்மையிலை கடவுள் அண்ணே ” என்ற படி, தான் காஷியர் பெட்டியருகில் முதலாளிக்கும் கமலிக்கும் இடம் விட்டு நகர்ந்து நின்றான் அந்த ஒருவன்.

புதிதாக ஏற்பட்ட வாழ்வில் புதிதாக ஏற்பட்ட நாணத்தில் உடல் குறுக, தனது மேலாடையை எடுத்துப் போர்த்தியபடி குசினியை நோக்கி நடந்தாள் கமலி.

– அங்கையன் கதைகள் (சிறுகதைத் தொகுதி), முதற்பதிப்பு: 2000, அங்கையன் பதிப்பகம், கொழும்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *