இந்த மனம் இருக்கிறதே, இது ஒரு விசித்திரமான பிராணி. இதன் செயல்கள் பகுத்தறிவுக்குட்படாதவை. காரணமற்ற பல உணர்வுகளை கிளறிவிட்டு, அந்த உணர்வுக்கு மனிதனைப் பலியாக்கி, அவனைப் பம்பரமாய் ஆட்டுவிக்கும் ஆற்றலும் இதற்குண்டு. ‘நம்முடைய இந்த செயல் பைத்தியக்காரத்தனமானதுதான்’ என்று அவனால் உணர முடிந்தாலும்கூட, அதன் இயக்கத்திலிருந்து மீள்கிற சக்தியை இழந்து, ஏதோ வகையில் பலவீனனாகி நிற்கிறான். அத்தகையதொரு பலவீனம் என்னையும் ஆட்கொண்டிருப்பதை வெட்கத்துடன் நானும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. அன்பு இருக்க வேண்டியதுதான்; அதன் ஆழம் அதிகமாகும்போது, வாழ்க்கையின் அடிப்படையே பாதிக்கப்பட்டு விடுகிறதே?
ஊரையெல்லாம் சுற்றித் திரிந்துவிட்டு வீடு திரும்பிய நான், அளவுக்கு மீறிய ஆயாசம் உடலை அழுத்தவே, வெளி வராந்தாவில் கிடந்த சாய்வு நாற்காலியில் சோர்வுடன் விழுந்தேன். உள்ளே போக மனமில்லை, எப்படியிருக்கும்? கடந்த மூன்று மாத காலத்தில் வீடே நரகமாகிவிட்ட பிறகு, அலுப்புக்கும் சலிப்புக்கும் அதே வீட்டையே அடைக்கலம் தேட முடியுமா? என்னவோ, வயிற்றுப் பசி என்கிற உணர்வு கிளர்ந்து, கால்களை வீட்டை நோக்கித் திருப்பி விட்டுவிடுகிறது. இல்லாவிட்டால்,கால் போன போக்குத்தான்…
ஏதோ சமையலறைச் சாமானை எடுப்பதற்காக உள்கட்டுக்கு வந்த அம்மா என்னைக் கவனித்துவிட்டாள் போலிருக்கிறது. பரபரப்புடன் என்னை அணுகி வந்து, “ஏண்டா ரவி, வந்தவன் நேராக உள்ளே வருவதில்லையோ? என்னவோப்பா, உன் போக்கோ கொஞ்ச நாளாய் எனக்குப் பிடிபடவில்லை” என்றாள் சலிப்புடன். மூடிய கண்களை நான் திறக்கவில்லை.
‘சொல்ல மறந்துவிட்டேனே, உன் மைத்துனி சரளா வந்திருக்கிறாள் ஊரிலிருந்து. என்ன விழிக்கிறாய்? கோடைக்கானலில் படித்துக் கொண்டிருந்தாளே, மைதியின் தங்கை? அவளேதான். அவளைப் பார்க்க வேண்டுமென்று நீகூட அடிக்கடி சொல்லுவாயே?”
‘மைதிலி’ என்ற அந்த ஒரு சொல்லுக்காக நான் விழிகளை ஒருமுறை திறந்து மூடிக்கொண்டேன். “உம், உம்” என்ற முனகலுடன் மீண்டும் மௌன விரதம் பூண்டுவிட்டேன். என்ன நினைத்தாளோ அம்மா, பேசாமல் போய்விட்டாள். என் மனம் மட்டும் ‘மைதிலி,மைதிலி’ என்று ஜபித்தது. நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து பெருமூச்சொன்று பீறிட, விழிகள் பனித்தன. தன்னுடைய ஒரு வருட கால வாசத்தால், பிறந்து நான் இருபத்தைந்து வருட காலம் வாழ்ந்து வளர்ந்த இந்த வீட்டையே தன் பிரிவால் வெறுக்கச் செய்துவிட்ட அந்த அன்பு மனைவியின் நினைவு வரும்போதெல்லாம், என்னால் செய்ய முடிந்தது இந்தப் பெருமூச்சும், இரு சொட்டுக் கண்ணீரும்தான். அந்த ஈடற்ற இழப்புக்குத் தற்காலிக ஈடு செய்வதெல்லாம் இவைதான்.
‘பிரிவு கொடிது’ என்று இரண்டே சொற்களில் கூறிவிடலாம். அனுபவித்துப் பார்க்கும்போது அது எத்தனை கொடிது என்பதை உணர முடியும். வாய்க்கு ருசியாக, வயிற்றுக்கு நிறைவாக உணவருந்தி நாட்களாகிவிட்டன. எனது அன்றாடக் கடன்களை வேண்டா வெறுப்புடன் நான் கவனிக்க வேண்டியிருக்கிறது. எதிலுமே ஒரு பிடிப்பில்லை, விருப்பமில்லை. எல்லாவற்றிலுமே ஒரு விரக்தி. இந்தப் பரந்த உலகத்தில் நான் மட்டும், அநாதையாகத் தனித்துவிட்டாற்போல் ஒரு பிரமை. என்னுடைய இந்த வேதனைகளையெல்லாம் சற்றும் உணராத அம்மா, என் வாழ்வில் மறுமலர்ச்சியூட்டச் செய்கிற பிரயத்தனங்கள் எத்தனையோ…!
அது தாய்மையின் அன்பு. தடுப்பதற்கு யாருக்குத்தான் உரிமையிருக்கிறது?
“ரவி, இலை போட்டாயிற்று, சாப்பிட வா” என்று அம்மா குரல் கொடுத்தாள். நான் எழுந்தேன். உடலின் எந்த உணர்வை வேண்டுமானாலும் கொஞ்ச காலத்துக்குக் கட்டுப்படுத்தி வைக்கலாமென்றாலும், இந்தப் பசி என்கிற உணர்வுக்கு வேளைக்கு உணவு தராவிட்டால் மனிதனை எப்படி ஆட்டிப் படைத்துவிடுகிறது அது!
இலையின் முன் அமர்ந்தும்கூட, நான் நிமிர்ந்து பார்க்கவில்லை. மூன்று மாதங்களுக்கு முன் நான் எடுத்துக் கொண்ட வைராக்கியத்தின் செயலாக்கும் இது…!
“ரவிக்குச் சாதம் போடம்மா” என்று அம்மா யாருக்கோ கட்டளையிட்டாள். மல்லிகை மொட்டுக்கள் மாதிரி சாதம் இலையில் சரிந்தது. இலையின் நரம்புகளை வெறித்தபடி நிலைகுத்தாய் நின்ற என் விழிகள், ஏனோ கட்டு மீறி மேற்புறம் நகர்ந்தன. துணுக்கென்றது! இது யார்? இந்தக் கமலப்பாதங்கள் யாருடையவை? அழகுக்காக இடப்பட்ட அந்த மருதோன்றிச் செம்மை யாருடைய பாதங்களுக்கு இத்தனை அபரிமித அழகையூட்டுகின்றன? அந்த மெட்டிகள் யாருடைய கால் விரல்களை இத்தனை எழிலோடு அலங்கரிக்கின்றன…?
“இன்னும் கொஞ்சம் சாதம் போடவா?” — ஆலயத்தில் ஒலிக்கிற மணியின் இனிமையை எல்லாம் தேக்கிக் கொண்டு உதிர்ந்த அந்தச் சொல் வன்மை. என் மைதிலியைத் தவிர இன்னொருத்திக்கா உண்டு?
நான் நிமிர்ந்தேன் — எனது வைராக்கியத்தைத் தகர்த்துக் கொண்டு, கருங்குழற் பின்னல் கையிலிருந்த பாத்திரத்தை உராய்ந்து நெளிந்து தொங்க, அவள் குனிந்து நின்ற விதமும், பாத்திரத்தை ஏந்தி நின்ற பாவமும்…அவள்தான்! அவளேதான்..!
என் பகுத்தறியும் ஆற்றலே ஸ்தம்பித்து, உணர்வுகளை ஒரு மயக்கத்தில் கிறக்கி, சிலையாய் வீற்றிருந்தேன்.
“போடவா என்கிற கேள்வி வேறா? போடு சரளா…அவன் வயிறாரச் சாப்பிட்டு வருஷக் கணக்காகிறது..” என்ற அம்மாவின் சொற்களைத் தொடர்ந்து, இலையில் மளமளவெனச் சரிந்த சோற்றுப் பருக்கைகளை வெறித்தேன் நான். ‘சரளா’ என்ற அந்த அழைப்பு என்னை ஓர் உலுக்கு உலுக்கித் தன் நினைவு பெறச் செய்தது. அப்படியானால் என் மைதிலி இல்லை இவள்!
“ஏண்டா ரவி, ஏன் அப்படி உட்கார்ந்திருக்கே?” என்று கேட்டாள் அம்மா.
நான் பதில் சொல்லவில்லை. பதில் சொல்லக் கூடிய மனநிலையும் எனக்கில்லை. எங்கோ ஆகாயத்தில் — இல்லை அதற்கும் அப்பால் — சஞ்சரித்து நிற்கிற உணர்வு. அந்தச் சூனிய வெளியின் வெறுமையில் மரத்துவிட்ட மனநிலை.
“இவ்வளவையும் எப்படிச் சாப்பிடுவது என்ற பிரமிப்போ என்னவோ, மீண்டும் அந்த இனிமையின் ரீங்கரிப்பு. “ஒன்றுமில்லை, ஏதோ யோசனை..” என்று முனகிவிட்டு இலையைக் கவனித்த நான், சற்றே திடுக்கிட்டுப் போனேன். “அடடே, என்ன இது!”
பளிங்குத் தட்டில் சோழிகளை உருட்டிவிட்டாற்போல் ஒரு சிரிப்பொலி. நான் நிமிர்ந்தேன். தோற்றத்தில் என் மைதிலியை உரித்துக் கொண்டு என் எதிரே நின்றவளின் வதன விளிம்பில் புன்னகையின் பொற்கீற்று. போதையூட்டும் அந்த நீள் விழிகளில் குறும்பு. மணிப்புறா சிறகடிக்கிற மாதிரி, இமைகளின் படபடப்பு. இதெல்லாம் அவளுக்கு மட்டும்தான் சொந்தம் என்று இருமாந்திருந்த என் பெருமிதத்தின் உருத்தெரியாச் சிதறல். விழுங்கி விடுவது போன்ற என் பார்வை மற்றவளின் கன்னக் கதுப்புகளில் செம்மையைத் தூவி, தலையைத் தரையில் கவிழச் செய்தது.
”பரவாயில்லை, சாப்பிடு ரவி” என்றாள் அம்மா. நான் சாதத்தைப் பிசைந்தேன். மனத்தினுள் எத்தகையை உணர்ச்சிகளின் இழையோட்டம் என்பதை என்னாலேயே கணிக்க முடியவில்லை. என் கட்புலனில் எனக்கே அவநம்பிக்கை. ஒரு வயிற்றில் பிறந்த தோஷம் உருவத்திலுமா இப்படி ஓர் அதிசய ஒற்றுமையை ஏற்படுத்தும்? நம்ப முடியாத மன நிலையோடு சாதத்தை விழுங்கினேன்.
”அடடே, வெறும் சாதத்தை இப்படி விக்க விக்கத் தின்கிறாயே? சரளா, சாம்பார் போடவில்லை?” என்று அம்மா கடிந்து கொண்ட போதுதான் இலையைக் கவனித்தேன். அசடு வழிந்தது மனத்தினுள்.
இலையில் சாம்பார் ஓடிற்று. என் விழிகள் செம்பஞ்சுக் குழம்பு வரியிட்டிருந்த அந்தப் பங்கஜ பாதங்களையே கவ்வி நின்றது. நான் கையுயர்த்திப் “போதும்” என்ற பிறகுதான் அந்த இளம் வாழைக் குருத்து மேனி என்னை விட்டு நகர்ந்தது. கால்களின் ஒவ்வோர் அடியும் தரையில் பதிந்து எழுகிறபோது ஏற்படுகிற அந்த மெட்டியின் ஓசை, பல மாதங்களைப் பின்னோக்கி, என்னை இழுத்துச் சென்று மைதிலியின் கையால் உணவருந்தும் உணர்வையே என்னுள் ஏற்படுத்திற்று. அவளைப் போலத்தான் எல்லாம். அந்தக் குறும்பு, அந்தப் புன்னகை, அதே தோற்றம். என் நெஞ்சினுள் நிழலாய் நடமாடுகிற அவளுக்கு உயிர்ப்புக் கொடுத்துக் காண்கிற பிரமை தட்டினாலும், அவளில்லையே, இவள்! அவளாகவும் இருக்க முடியாதே!
சீக்கிரம் எழுந்து கையலம்பிவிட்டேன்.
*
இருள் திரண்டு கொண்டு வந்த முன்னிரவு நேரம். வெளிறிக் கிடந்த வானில் ஒளித்துண்டுகள். சந்தடிகள் ஓய்ந்து அமைதி சூழ்ந்து வரும் சூழல் — ஆனால் என்னுள் அமைதியின் சுவடுகூட அற்றுப் போய்க் குழப்பத்தின் பூரணத்துவ ஆதிக்கம்தான். மொட்டை மாடியின் தனிமை என் சஞ்சலத்தைத் தணித்துவிடுமா என்ன?
கடந்த மூன்று மாத காலமாய் துளித்துளியாய் நான் சேர்த்து வைத்த நிம்மதி, இன்று இருந்த இடம்கூடத் தெரியாமலாகிவிட்டது. வேதனையைக் கிளறும் நினைவுகளுக்குக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, அமைதியாக வாழ முயன்று கொண்டிருந்த என்னை, மீண்டும் துயரப் பெருந்தீயில் தள்ளி வேடிக்கை பார்க்கும் விதியை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழி?
“சாப்பிட வா ரவி”. அம்மாவிடமிருந்து இரவுச் சாப்பாட்டுக்கான அழைப்பு. வேளை வந்ததும் சாப்பாடு, தூக்கம், விழிப்பு. இந்த உடலுக்கு ஒரு வரைமுறை வகுத்திருக்கும் கடவுள், இந்த உள்ளத்துக்கும் ஒரு முறை வகுத்திருக்கக் கூடாதா? இரவென்றும் தெரியாமல், பகலென்றும் புரியாமல், துயரம், வேதனை, குழப்பம் — ச்சே, ச்சே! என்ன வாழ்க்கையோ, இயந்திர வாழ்க்கை!
நான் படியிறங்கி வந்தேன். எத்தனையோ இரவுகளைப் போல் இந்த இரவையும் பட்டினியாகக் கழித்துவிட முடியும் என்னால். ஏனோ, சாப்பிட வேண்டும் என்ற, என்றைக்கும் இல்லாத ஆவல். ‘ஏனிந்த காரணமற்ற துடிப்பு?’ என்று அலசிப் பார்த்தேன். சரளாவின் முகம்தான் கண்ணில் நின்றது. நான் மைதிலிக்குத் துரோகம் செய்கிறேனோ என்று ஒரு அச்ச உணர்வு. தோற்றத்தால் சரளா மைதிலியை ஒத்திருப்பதால், அவளைப் பார்க்கும்போது உனக்கு ஓர் ஆறுதல் என்ற உள் மனத்தின் சமாதானம். என்னை நானே ஏமாற்றிக் கொள்வதை நானே உணர்ந்தும்கூட, சரளாவிடம் நான் காண விரும்புவது மைதிலியின் தோற்றத்தைத்தானே என்ற வகையில் ஒரு தேறுதல்.
எனக்கு உணவில் நாட்டமில்லை. நாவில் சுவை படாமல் கவளங்களை விழுங்கினேன். சுவைத்து, ரசித்து, சிரித்து உல்லாசமாய்ச் சாப்பிட்ட நாட்கள் நினைவாற்றலுக்கு அப்பாற்படாதவைதான். ஸ்பரிச உணர்வின் வெம்மை மிகுந்த இன்பத்தை இரண்டு மேனிகளும் ஒன்றுக்கொன்று ஈந்து மகிழ, மகிழ்ச்சியின் எல்லையில் நின்று, குதூகலித்த நாட்களைத் திரும்பவும் நினைவூட்டுகிற நிகழ்ச்சி ஒவ்வொரு வேளை உணவின்போதும் நிகழும்!
”மோர் விடட்டுமா?” அடடா, குரலில்கூட என்ன ஒற்றுமை!
வெண்ணெய் திரண்டு நின்ற மோர் எனக்குச் சுவைக்கவில்லை. ஊற்றிய கரங்களின் அழகை மனம் சுவைத்தது. என் மைதிலி மட்டும் இருந்தால் எனக்கு எல்லாமே சுவைக்குமே.
“ஏண்டா ரவி, ஏன் ஒரு மாதிரி இருக்கே?” என்று கவலையுடன் வினவினாள் அம்மா.
“ஒன்றுமில்லையே” என்ற நான் சிரிக்க முயன்றேன். அந்தச் சிரிப்பு என் முகத்தில் தவழ்கிறபோது, பாலை வனத்தில் பசுமை பொசுங்குகிற மாதிரி மாறுவதை என்னாலேயே உணர முடிந்தது. என் உணர்ச்சிகளின் உயிரோட்டமே ஒடுங்கிவிட்ட மாதிரி. பிறகு எதில்தான் ஜீவனிருக்கும்?
நான் கையலம்பிவிட்டு வந்தபோது தாம்பூலம் காத்திருந்தது. சுண்ணாம்பு தடவிய இரு தளிர் வெற்றிலைகளில் வாசனைப் பாக்கை வைத்து வட்டமாகச் சுருட்டி, பிரித்துவிட்டமலிருக்க, லவங்கத்தையும் செருகிக் கவர்ச்சியான தோற்றத்தில் என்னிடம் நீட்டப்பட்ட அந்தத் தாம்பூலச் சுருள்கூட அவள் சுருட்டுவதைப் போலவே…ஆனால், அதன் மீது தூவப்பட்டிருக்கும் தேங்காய்ப் பூவின் நிறம்…?
வெள்ளை! — என் மைதிலிக்குப் பிடிக்காத அந்த வெண்ணிறம் என் வெறுப்புக்கும் உரியதுதான். அதில் அவள் தூவுவது சிவப்பு நிறத் தேங்காய்ப்பூதான். அவளுக்குப் பிடித்தமான அந்த நிறம்தான் எனக்கும் பிடித்தது. நான் விதியின் வன்மத்தால் ஏமாற்றப் பட்டுவிட்ட பிறகு, என்னைப் போலவே அந்தச் சிவப்பு நிறமும் நிர்க்கதியாகி விட்ட பிரமைதான் ஏற்பட்டது. அதை நான் அனுதாபத்துடன் பார்ப்பதுண்டு.
நான் தாம்பூலத்தை வாங்கி, தேங்காய்ப்பூவைத் தரையில் கொட்டிவிட்டு, வாயில் போட்டுக் கொண்டேன். நீட்டியவளின் உணர்ச்சி எத்தகையது என்பதை அடுத்த கணமே நான் உணர நேர்ந்தது.
தரையில் கிடந்த தேங்காய்ப் பூவைக் கையிலெடுத்துக் கொண்டு அவள் நிமிர்ந்தபோது, நான் வியப்புடன் பார்த்தேன். அது “ஏன்?” என்ற கேள்வியை என் சார்பில் கேட்டதோ என்னவோ.
“எனக்கு வெள்ளை நிறம் என்றாலே உயிர். எங்கள் காலேஜில்கூட வெண்மை நிறம்தான் யூனிஃபார்ம்”.
பொறி கலங்கிய உணர்வு என்னுடையது. நான் ஏறிட்டுப் பார்த்தேன். இந்த முழு நாளைய சந்திப்பில் முதல் முறையாக அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை கூர்ந்து நோக்கினேன். மனம் வெறுப்பில் சுருங்கிச் சாம்பிற்று. தலையில் வெள்ளை வெளேரென்ற மல்லிகைச் சரம். கழுத்தில் வெண்ணிற முத்துமாலை. உடம்பில் வெண்ணிறப் பட்டு ரவிக்கையும் புடவையும். அவளே வெள்ளை வெளேரென்றுதான் இருந்தாள். நான் அவளுடைய வெண்ணிறக் கோலத்தைப் புதுமையாகத்தான் நோக்கினேன். ஆனால் அவளுடைய வதனம்…
அடுக்களை வேலைகளை முடித்துக் கொண்டு உள்ளே வந்த அம்மா, என்னை நோக்கி மெல்லப் புன்னகைத்தாள். அதில் எந்த அம்சம் பொதிந்து கிடக்கிறது என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை.
“கொஞ்சம் மொட்டை மாடிப்பக்கம் வருகிறாயா ரவி?” என்று கேட்டாள் அம்மா. நான் மௌனமாகப் பின்படி ஏறினேன். கைப்பிடிச் சுவரோரமாக நின்று கொண்டு நிர்மலமான வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு நின்றேன். எனக்கு நானே ஒரு புதிராய்த்தான் தோன்றினேன். மைதிலிக்குப் பிறகு நான் எடுத்துக் கொண்ட உறுதிப்பாடுகளில் எத்தனையோ இன்று தகர்ந்துவிட்டன. எந்தப் பெண்ணையும் உணர்ச்சியுடன் பார்ப்பதில்லை என்ற என் வைராக்கியமும் இன்று துகள் துகளாகிவிட்டது. நான் எனக்கே சொல்லிக் கொள்ளலாம் ஆயிரம் சமாதானம். மைதிலியைப் போலவே இந்த சரளாவும் இருக்கிறாள் என்பது உண்மைதான். ஆனால் அவளல்லவே இவள்?
”சரளாவை ஒரு இரண்டு நாளைக்கு இங்கே இருக்கட்டுமென்று அவள் அப்பாதான் காலையில் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனார். அச்சு உரித்த மாதிரி அப்படியே மைதிலிதான். குணத்தில் தங்கம்தான் போ…வேலை வெட்டிகளில் பம்பரமாய்ச் சுழலுகிறாள். படிப்புகூட முடிந்துவிட்டதாம்..”
நான் மௌனமாக நின்றேன்.
“அவளுக்கு ஒரு கல்யாணத்தைச் செய்துவிட வேண்டுமென்று அவள் அப்பா துடிக்கிறார். உன் மாமிக்கும் ஆசைதான். நல்ல வரனாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தால் பித்துப் பிடித்த மனிதன் மாதிரிதான் இருக்கும். மனசை வேறெதிலாவது திருப்பினால் எல்லாம் சரியாகிவிடும். சரளாவை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது…”
நான் நிமிர்ந்து பார்த்தேன். அம்மாவின் முகத்தில் எத்தகைய உணர்ச்சிகளின் நர்த்தனம் என்பதை என்னாலேயே அந்த அரை இருட்டில் கணித்து விட முடியவில்லை. ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. சரளாவை என்னோடு நெருக்கமாகப் பழகுவதற்காக அம்மா ஏற்படுத்தும் சந்தர்ப்பங்கள்தான் என் சலன உணர்ச்சிக்குக் காரணம். அந்த சந்தர்ப்பங்களை விளைவிப்பதில் அம்மாவுக்குத் துணையாக சரளாவின் பெற்றோரும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அதிலும் நியாயம் இல்லாமலில்லை. என்னுடைய அடக்கமான சுபாவத்தையும், சரளமான பழக்க வழக்கங்களையும், மைதிலியின் மீது நான் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பையும் நன்றாக உணர்ந்திருந்த அவர்களுக்கு இழப்பின் துயரத்தால் விரக்திக் கோலம் பூண்டுவிட்ட என் மீது ஒரு கழிவிரக்கம் தோன்றி, என் எதிர்கால வாழ்வில் அக்கறை பிறந்து, அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டியதும் நாம்தான் என்ற கடமையுணர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பில்லைதான். அதை ஏற்க வேண்டியதும் பண்புதான்…ஆனால்…
நோக்கத்தைப் புரிய வைத்துவிட்ட நிறைவுடன் படியிறங்கிக் கொண்டிருந்தாள் அம்மா.
அன்று –
ஊரையெல்லாம் சுற்றி அலைந்து விட்டு வீடு திரும்பினேன். இரவு ஏழு மணிக்கு மேல், அம்மாவும் சரளாவும் அடுக்களையில் ஏதோ வேலையாக இருந்தனர். எனக்கிருந்த அலுப்பிலும், சலிப்பிலும் சட்டையைகூடக் கழற்றத் தோன்றாமல் படுக்கையில் விழுந்தேன். என்னுள் பலவாறான எண்ண அலைகள் அசுரத்தனமாய் எழுந்து இதயக் கரையை மோதிக்கரைத்தன. குழப்பம்! எல்லாமே ஒரே குழப்பம்! இத்தனை நாளும் நான் இப்படிக் குழம்பியதே இல்லை. மைதிலி ஒருத்தியின் நினைவே, நெஞ்சினுள் தெளிந்த நீரருவியாய் அதில் மிதக்கிற ஓடத்தைப் போல எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தது. இப்போது அவளைப் போலவே ஒருத்தி குறுக்கிட்டு மனத்தின் குழப்பத்துக்கே காரணமாகிவிட்டாளே?
நான் மைதிலிக்கு துரோகம் செய்கிறேனா?
இல்லை, அவள் இருந்தாள் இப்படியெல்லாம் நினைக்கவே மாட்டாள். அவள் அன்பு, தியாகம், தூய்மை ஆகியவற்றின் அழகுருவம். இல்லாவிட்டால், தன் இறுதி மூச்சு வெளிப்படும்வரை, “உங்கள் வாழ்க்கை மலர வேண்டும், அந்த மலர்ச்சியில் என் நினைவு மணமாக வீசிக்கொண்டே இருக்க வேண்டும்” என்று கூறிக்கொண்டே இருந்திருப்பாளா..?
சிவப்பு நிறத்தை விரும்புபவர்கள் வெறிக்குணமுடையவர்களாக இருப்பார்கள் என்பது மனோதத்துவமாம். நான் நம்பவில்லை. என் மைதிலியின் மனம் பஞ்சைவிட மென்மையானது. பழத்தைவிடக் கனிவானது. ஆனாலும் அவளுக்கு இப்படியொரு வெறி. நான் அவளை மறக்கவே கூடாதென்று. அவள் அப்படி எண்ணாவிட்டாலும், நான்தான் அவளை மறக்க முடியுமா?
மைதிலிக்கும் சரளாவுக்கும் இடையே பிரமாதமான வித்தியாசங்கள் எதுவும் இல்லைதான். குணாதிசயங்களிலும் சில மாறுதல்களைத் தவிர, அவளை இவளில் காண முடிந்தது என்னால். சரளாவை நான் ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் அவளின் பெற்றோர் காட்டும் ஆர்வத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இல்லாவிட்டால், வயது வந்த ஒரு பெண்ணை — ஆயிரம்தான் யோக்கியனாக இருந்தாலும் மருமகன் என்ற ஒரே முறைக்காக இத்தனை சகஜமாகப் பழகுவதை அனுமதிப்பாரா?
எனக்கே வியப்பாயிருந்தது. பணமும் அழகும் ஒருங்கே நிரம்பிய பெண்களின் புகைப்படங்களை எல்லாம் அம்மா கொண்டு வந்து வைத்துக்கொண்டு, ‘நிமிர்ந்து ஒரு நிமிஷம் பாரடா’ என்று கெஞ்சலாய்க் கெஞ்சியபோதெல்லாம் விசுவாமித்திரர் மாதிரி கையுயர்த்தி மறுத்த நான், இரண்டொரு நாளைய பழக்கத்தால் எப்படி இளகி — எப்படிக் குழம்பி நின்றேன்? மைதிலியைப் போலத் தோற்றமளிக்கும் சரளா என் சலனத்துக்குக் காரணமாக, அடிப்படையாக அமைந்தது எது? மைதிலியின் மீது உள்ள அளப்பரிய அன்பா? அல்லது சரளாவின் மீது எழுந்த தீடீர் மோகமா?
எனக்கு அமைதியே இல்லை. படுக்கையை விட்டு எழுந்து அறையில் முன்னும் பின்னும் உலாவத் தொடங்கினேன். நேற்று காலையில் நிகழ்ந்த சம்பவம் நெஞ்சினுள் நிழலாடிற்று.
குளிப்பதற்கு வெந்நீர் விளாவி வைத்துவிட்டுக் குரல் கொடுத்தாள் அம்மா. சோப்புப் பெட்டி, பற்பசை, துவாலை சகிதம் கொல்லைப் புறம் சென்ற நான், சொம்பைத் தேடுகிற சாக்கில் அடுக்களையில் சற்றே நின்றேன். சொம்பு எங்கே என்று கேட்டேன்.
’கூப்பிட்டீங்களா?” என்று வினவியபடி எனக்கு எதிரே வந்து நின்றாள் சரளா.
சரளாவின் அன்றைய அலங்காரங்கள் அமர்க்களமாயிருந்தன. அவை எனக்காகத்தான் என்கிற மாதிரி நாணி நின்றாள் அவள். ஆனால், உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை எனக்குச் சிறிதும் பிடிக்காத வெண்ணிறக் கோலம். ‘உங்கள் மைதிலி விரும்பாத வெள்ளை நிறம் எனக்கு எத்தனை அழகையூட்டுகிறது, பார்த்தீர்களா?’ என்று என்னைச் சாடுவது போலிருந்தது அது.
“இதென்ன ஒரே வெண்ணிற மயம்?” என்று என்னையும் மீறி வெடித்துவிட்டேன் நான்.
“தூய்மையின் அடையாளமல்லவா வெண்ணிறம்?” என்று கேட்டுப் புன்னகைத்தாள் அவள்.
”தூய்மை உள்ளத்தில் இருக்க வேண்டும். உடையிலல்ல” என்றேன் நான் காரமாக.
“நடை, உடை, பாவனைகளிலெல்லாம்கூட உள்ளத்தின் உண்மையான உணர்வுகள் பிரதிபலிக்கிறது என்பதுதான் சைகாலஜி”. தயக்கமற்ற பதிலடி. கல்லூரி மாணவியல்லவா?
“வெண்மை, பெண்களைப் பொறுத்தவரை அமங்கலப் பொருள்”.
“சூழ் நிலையைப் பொறுத்து அந்த அர்த்தம் மாறுபடலாம். நான் அணிந்திருக்கும் உடை எதைக் குறிக்கிறது, உங்கள் கண்ணோட்டத்தில்?” என்று அவள் திருப்பிக் கேட்டபோது, நான் மௌனமாகிப் போனேன்.
சரளாவை என் திருமணத்தின்போது நான் சந்தித்திருந்தால்கூட, இத்தனை குழப்பத்துக்கும், இடமில்லாது போயிருக்கும். ’பரீட்சை சமயம் , வரமுடியாது’ என்று தந்தி கொடுத்துவிட்டாளாம். பிறகு தமக்கையின் இறுதிச் சடங்கின்போது வந்திருந்ததாகக் கேள்விப் பட்டேன். எனக்கு, அப்போதிருந்த மனநிலையில், அவளைப் பார்க்கவே தோன்றவில்லை. மீண்டும் இப்போது வந்திருக்கிறாள், என்னைத் தீராக் குழப்பத்தில் ஆழ்த்த.
சொம்பைக் கையிலெடுத்துக் கொண்டு நான் பின்புறம் சென்றபோதும்கூட, என் மனம் ஒரு நிலையிலில்லை. சரளா உருவத்தால் என் மைதிலிதான். ஆனால் உணர்ச்சிகளால் எனக்குப் பிடிக்காத எவளோவாக இருக்கும்போது, எப்படி இணைய முடியும் எங்களால்? எந்த வெண்ணிறம் என் மைதிலிக்குப் பிடிக்காதோ, அதே வெண்ணிற ஆடைக்குள் சரளா என்னெதிரே நிற்கும்போது, மைதிலியே தான் விரும்பாத விதத்தில் என் முன் நிற்பது போல் பிரமை தட்டுகிறது. அப்படியிருக்கும்போது, என் மைதிலியின் நினைவைச் சரளாவால் எப்படி நிலை நிறுத்த முடியும்?
மைதிலியும் சிவப்பு நிறமும் எத்தனை அந்நியோன்னியம் என்பதை விளக்கிக் கூறுவது அத்தனை சாத்தியமல்ல. தன் வளைகாப்பு விழாவின்போதுகூட அவள் ஓர் ’அபாய அடையாள’மாகத்தான் காட்சியளித்தாள். இரட்டைப் பின்னலை சிவப்பு ரிப்பன்களால் அலங்கரிக்க, பின்னலுக்கொன்றாக இரண்டு சிவப்பு ரோஜா மலர்களைச் செருகியிருந்தாள். வெள்ளை இழைகள் சேர்ந்த சிவப்புத் துணியில் ரவிக்கை அணிந்து, இளஞ்சிவப்பு நைலக்ஸ் புடவை உடுத்தியிருந்தாள். காலில் சிவப்பு வார்ப்பட்டைகள் உள்ள சூபர்ஸாஃப்ட் ஜப்பான் சப்பல்! போதாக்குறைக்கு, சிவப்புக் கல் பதித்த நெக்லஸ் வேறு.
அன்றிரவு படுக்கையறையில் தனித்திருக்கும்போது, கலகலவெனச் சிரித்துவிட்டுச் சொன்னேன் — “உன்னைத் தொடவே பயமாயிருக்கிறது மைதிலி”.
அவளுக்குப் புரியவில்லை. “ஏன் அப்படி?” என்று கேட்டாள். திகைப்புடன்.
“உன் உடையலங்காரங்களை நீயே உற்றுப் பார்” என்றேன். தன்னைத் தானே ஒரு முறை பார்த்துக் கொண்ட அவள், “எனக்கு சிவப்பு நிறம் என்றாலே பித்தாக இருக்கிறது” என்றாள் மென்முறுவல் பூத்து.
நான் அவளை ஆதுரமாக அணைத்துக்கொண்டேன். “சிவந்த உடலுக்கு சிவப்பு நிற உடை பொருந்தாது என்பார்களே, அவர்கள் உன்னைப் பார்த்தால் தலை குனிவார்கள், போ” என்ற நான், “அது சரி, இன்னும் மூன்று மாதத்தில் உனக்கொரு பையன் பிறப்பானே, அவன் கறுப்பாகப் பிறந்துவிட்டால் என்ன செய்வாய்?” என்று சீண்டிவிட்டேன்.
”கறுப்பாகப் பிறந்தாலும், வெள்ளையாகப் பிறக்காவிட்டால் சரி, வெள்ளை என்னைப் பொறுத்தவரையில் துரதிருஷ்டமானது. இரண்டு மாதிரியாகவும் பிறந்துவிடக் கூடாது என்பதற்காக இதுவரை மூன்று சேர் குங்குமப் பூ தின்றிருக்கிறேனாக்கும்” என்றாள் மைதிலி. நான் சிரித்துவிட்டேன். அப்படியெல்லாம் மகிழ்ந்திருந்த பிறகு, அவள் விரும்பாத ஒன்றை ஏற்பது முறைதானா?
மறுநாள் சரளாவின் தந்தை வந்திருந்தார். அவர் என்னோடு பேசிய முறையும், முக பாவமும் அவர் என் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அனுதாபத்தை எனக்குத் தெளிவு படுத்தின.
“மாப்பிள்ளை! நாளைக்கு மறுநாள் சரளாவின் பிறந்த நாள். அவளை அழைத்துக் கொண்டு போகலாமென்று வந்தேன். நீங்கள் நாளைக்கே வீட்டுக்கு வந்துவிட வேண்டும்..” என்றவர், “மறுபடியும் நீங்கள் அங்கே வந்துவிட வேண்டும் என்பதுதான் எல்லோரது ஆசையும்” என்றார்.
”ஆகட்டும்” என்றேன் நான். சரளா என்னிடம் விடை பெறும்போது, “அவசியம் நீங்கள் வந்துவிட வேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள். நான் மெல்லத் தலையசைத்துவிட்டு, அவளை ஏறிட்டு நோக்கினேன். அந்த அழகிய வதனத்தில் ஏக்கம் செறிந்த இருவிழிகள் மிதப்பதை நான் கவனிக்கத் தவறவில்லை.
வீட்டு வாசலை விட்டு ஜட்கா வண்டி நகர்ந்த பிறகு, மீண்டும் நான் என் அறையில் அடைக்கலமானேன். அந்தக் கருவிழிகள் என் கண்களிலேயே நின்றன. இதே மாதிரி ஏக்கம் நிரம்பிய விழிகளை மைதிலியின் மரணப் படுக்கையில் சந்தித்தேன். என்னைப் பிரியப் போகிறோம் என்று தீர்மானமாக அவளுக்குத் தெரிந்துவிட்ட்தோ என்னவோ? வேதனையால் இற்றுப் போயிருந்தாள்.
’பெண்ணுக்குப் பிரசவம் என்கிற ஒவ்வொன்றும் ஒரு மரண வாசல்’ என்றான் யாரோ ஓர் அறிஞன். என்னைப் போலவே அவனும் தன் மனைவியைப் பிரசவத்தின்போது பறி கொடுத்தானோ என்னவோ? உணர்ந்து சொல்லியிருக்கிறான்.
மைதிலியை ஆஸ்பத்திரியில் சேர்த்த அன்று நள்ளிரவு வேளை, ஸ்பெஷல் வார்டினுள் அனைவரும் அயர்ந்து சுருண்டிருந்தனர். வெளிவாசலில் உறக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்த என்னை, ஈனஸ்வர முனகலொன்று அழைக்கவே, வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உள்ளே ஓடினேன். பேசக்கூடத் திராணியற்று, உடலை அசைக்கக்கூட ஜீவனற்று, நிலைக்குத்தாய் நின்றுவிட்ட விழிகளால் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள் மைதிலி. நான் வேதனையுடன் அவளருகே அமர்ந்தேன்.
இருண்டு கிடந்த அவள் கண்களில் என்னைக் கண்டதும் ஓர் அபரிமிதமான பிரகாசம், தெளிவு.
திக்கித் திணறி, வாய் பேச, கைகள் கழுத்தை வளைத்துக் கொண்டன. “நீங்கள் இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளத்தான் வேண்டும். அவளும் என்னைப்போல உங்களை எல்லா வகையிலும் மகிழ்விக்க வேண்டும். அவளுடைய ஒவ்வோர் அசைவும் என்னை உங்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அதைக் கண்டு நானும் ஆனந்தப் படுவேன், ஆவியாக”
நான் அவள் வாயை அடக்கினேன். அடுத்த சில மணி நேரத்துக்குள் அவள் உடலின் உயிரோட்டம் அடங்கிவிட்டது.
என் மைதிலியின் வேண்டுகோளின்படி பார்க்கப் போனால், நான் சரளாவை ஏற்றுக் கொள்வதை அவள் மனப்பூர்வமாக வரவேற்பாள் என்பது திண்ணம்தான். தனக்குப் பதிலாகத் தன் தங்கையையே தன் ஸ்தானத்தில் இட்டு நிரப்புவதில் அவளைவிட மகிழ்ச்சியடைவோர் யாருமிருக்க முடியாது. ஆனால், என் மைதிலிக்குப் பிடிக்காத அந்த வெண்ணிறம்? அது அவரவர்களின் தனிப்பட்ட ரசனை என்று விட்டுவிட, மைதிலியின் வேண்டுகோளும், அவள் வேண்டுகோளை வேதவாக்காய் மதிக்கிற எனது மனநிலையும் ஒத்துக் கொள்ளாதிருக்கும் பட்சத்தில் வாழ்க்கையின் இனிமை காண்பது சாத்தியம்தானா?
யோசித்து யோசித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன். இந்த முடிவுப்படி சரளா என் விருப்பத்துக்குக் கட்டுப்படுவாளேயானால் அவள் எனக்கு மனைவியாக வருவாள். இல்லையேல் புதுவாழ்வு தேவையில்லை.
சரளாவின் வீடே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. அவள் தந்தை, இருக்கிற இளைய மகளின் பிறந்த நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதில் தனிப்பட்ட தீவிரம் காட்டியிருக்கிறார்.
”வாருங்கள், வாருங்கள்” என்ற ஏகோபித்த வரவேற்புக் குரல்கள்.
“சரியான நேரத்துக்குத்தான் வந்திருக்கிறீர்கள்” என்று மலர்ந்த முகத்துடன் முகமன் கூறினாள் சரளா. வெள்ளை, வெள்ளை, வெள்ளை! அந்தப் பாழும் நிறத்தில் எத்தனை நேர்த்தியாகத்தான் அவள் அலங்கரித்து நின்ற போதிலும், என் மனம் லயிக்கவில்லை.
”இப்படி உட்காருங்கள் மாப்பிள்ளை” என்றார் மாமா. அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். எதிரே அவரும் அமர்ந்து கொண்டார்.
“பிராப்தம் என்ற ஒன்று இருக்கிறதே, அது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதுதான். பாருங்களேன், மைதிலியை நீங்களும் எவ்வளவோ அன்பாகத்தான் நடத்தினீர்கள். நிம்மதியோடுதான் அவளும் வாழ்ந்தாள். அந்தப் பிரமனுக்கே அது பொறுக்கவில்லை. போகட்டும், நம்ம சரளா இருக்கிறாளே, அவளுக்கும் மைதிலுக்கும் குணத்திலோ, அழகிலோ, அதிக வித்தியாசம் எதுவுமில்லை..”
மாமா பேசிக்கொண்டே போனார். பேச்சின் நோக்கம் எனக்குப் புரிந்தது. அது நேரிடையான கேள்வியாக மாறிவிடாதிருக்க வேண்டுமே! எனது சோதனையின் முடிவைச் சரளாவிடமிருந்து அறிகிறவரை எந்தப் பதிலையும் கூறிவிட நான் தயாராக இல்லை.
“நேரமாகிவிட்டது, ஆரம்பிக்கலாமா?” என்ற கேள்வியைத் தொடர்ந்து, பிறந்த நாள் விழாச் சடங்குகள் சம்பிரதாயமாக நிறைவேறின – மளமளவென்று.
பரிசளிப்பு முடிந்துகொண்டு வந்தது. சந்தடிகள் ஓய்ந்த ஒரு தனிமை நிலையில், சரளாவைப் பரபரப்புடன் அணுகிய நான், கையில் கொண்டு வந்திருந்த அந்த அட்டைப் பெட்டியை அவளிடம் நீட்டினேன். “திறந்து பார் சரளா”.
சரளா பெட்டியைத் திறந்தாள். உள்ளே செக்கச் செவேரென்ற நிறத்தில் விலையுயர்ந்த புடவையொன்றும், சிவப்புக் கல் பதித்த ஒரு ஜோடி வைரத்தோடும் மின்னிப் பளபளத்தன.
”உன்னை நான் இனிமேல் இந்தச் சிவப்பு நிற ஆடைகளில்தான் காண ஆசைப்படுகிறேன் சரளா. அது என் விருப்பம் மாத்திரமல்ல, உன் தமக்கையின் கோரிக்கையும்கூட”.
சரளாவின் முகத்தில் மலர்ச்சி இல்லை. கையிலிருந்த அட்டைப் பெட்டியை சற்று நேரம் வெறித்தவள், “தயவு செய்து இம்மாதிரி விஷயங்களில் எனக்குச் சுதந்திரம் தந்துவிடுங்கள். என் ரசனை உணர்ச்சிகளை ஒரு நிர்ப்பந்தத்துக்காக கட்டுப்படுத்தி வாழ்வதை நான் விரும்பவில்லை.”
படித்தவள், தனக்கு உரிய உரிமையை நிலைநாட்டிக் கொண்டாள். நான் அதற்கு மேலும் அங்கே நிற்கவில்லை. என் மைதிலி தெய்வம். சரளா மனுஷி. தெய்வத்தின் விருப்பத்தைப் புறக்கணிப்பவள், அதன் பக்தனுக்கு மனைவியாவது சாத்தியம்தானா?
’நீ செய்தது பைத்தியக்காரத்தனம்’ என்றது மனசாட்சி. சொல்லிவிட்டுப் போகட்டும். சில பைத்தியக்கார உணர்ச்சிகளுக்கு மனிதன் அடிமைப் படுவதனால்தான், பல தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது, இல்லையா?
(ஆனந்த விகடன் முத்திரைக் கதை, 17.10.65)