நிர்மலாவின் கனவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 4,622 
 
 

நிர்மலாவுக்கு கல்யாணமான புதிது. அவளது கணவனின் அம்மா, அத்தை சியாமளா , அவளை தாங்கு தாங்கு என தாங்கினாள். இருக்காதா பின்னே ?. தலையில் சொட்டை விழுந்த, சுமாரான சம்பளத்தில் இருக்கும் 34 வயதான மகனுக்கு, நல்ல வேலையிலிருக்கும் , முப்பதே வயதான நல்ல குடும்பத்து பெண் கிடைப்பது என்பது, குதிரைக் கொம்பாச்சே ! பெண் பார்க்க சுமார் தான்.

ஆனால் என்ன, தேடி தேடி அலைந்து, நொந்து நூடுல்ஸ் ஆன பிறகு அமைந்த வரன். அதனால் பெண்ணுக்கு எந்த வித சிரமமும் கொடுக்காமல் , சியாமளா, நிர்மலா ஆபிஸ் கிளம்பும் வரை எல்லா வேலையும் அவளே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தாள் .

நிர்மலா வேலை முடிந்து வீடு வந்த பிறகும், டிபன், காபி, சாப்பாடு என்று அவளை ஒரு வேலை பண்ண விடவில்லை நிர்மலாவும், அத்தை பேரில் , “ அத்தை அத்தை” என்று கொள்ளை பிரியமாக இருந்தாள். இந்த மாதிரி மாமியார் யாருக்கு கிடைக்கும்?

***

ஆறு மாதம் போனதே தெரியவில்லை . இருந்தாலும், நிர்மலாவுக்கு ஒரு ஆசை. தனிக் குடித்தனம் என்பது வாழ்வில் ஒரு சுகமான கால கட்டம் தானே ?

சொட்டைத்தலையானாலும் , கணவனுடன், எப்போதும் தனிமையாக இருக்க , கூட்டுக் குடித்தனம் ஒரு தளைதானே?

அதனால், கல்யாணமான ஆறாவது மாதத்திலேயே , நிர்மலா கணவனுக்கு தூபம் போட்டாள். அவளது ஆபிசில், போட்டுக் கொடுக்கும் எத்தனை பேரை அவள் பார்த்திருக்கிறாள் ? அவளுக்கு தெரியாத டெக்னிக்கா? நாடகம் ஆட அவளுக்கு தெரியாதா என்ன?

ஒரு நாளைப் போல கணவனிடம் புலம்பல்! “இதை பாருங்க! என் கை புண்ணாய் போயிடுச்சி! அத்தை, க்ரைண்டரில் அரைக்க சொன்னாங்க. என்பாள் ஒரு நாள். “இதோ பாருங்க, அத்தை தன் குணத்தை காட்டறாங்க, பாத்திரமெல்லாம் கழுவசொல்றாங்க! நானே ஆபீஸ்லேருந்து அலண்டு போய் வீட்டுக்கு வாரேன்! இதிலே இவங்க பிடுங்கல் வேறே!” என்று இன்னொரு நாள்.

“இப்பவே தனி குடித்தனத்திற்கு ஏற்பாடு பண்ணுங்க. இல்லாட்டி, நான் என் அம்மா வீட்டிற்கு போய்விடுவேன்” என்று அரித்தாள்.

வேறு வழியின்றி, மனைவி சொல்லே மந்திரம் என்று, நிர்மலாவின் கணவன் மணியும், ஆபிஸ் தூரம் என காரணம் காட்டி, தன் அம்மாவையும் அப்பாவையும் விட்டு, புரசைவாக்கத்திலிருந்து பல்லாவரத்திற்கு ஜாகை மாற்றினான்.

மணியை விட நிர்மலாவுக்கு சம்பளம் அதிகம். அவள் பேச்சை கேட்டுத்தானே ஆகவேண்டும். “பணம் பேசும்” காலம் தானே என்றும்?

புதுக் குடித்தனம் ஆரம்பம் நன்றாகவே இருந்தது. கணவன் மனைவி சொன்ன சொல்லுக்கு தப்பாமல் தாளம் போட்டான். இதற்கு நடுவில், ஒரு பெண் குழந்தையும் பிறந்து விட்டது.

ஆண் குழந்தையாக இருக்குமோ என பயந்த எல்லோருக்கும் பெண் குழந்தை பிறந்தவுடன் “பெண் குழந்தை பெண் குழந்தை ” என கொள்ளை சந்தோஷம். யாருக்கு இருக்காது, இந்த காலத்தில்! வரதட்சினை, கல்யாண செலவு எல்லாம் பிள்ளை வீட்டுக்கு தானே!

கொஞ்ச நாள் ஆனது. நிர்மலாவுக்கு தனி குடித்தனம் கசந்து விட்டது. கணவனுக்கு சாமர்த்தியம் போதாது. அவன் சமையல் சகிக்க வில்லை. ஹோட்டல் சாப்பாடு அலுப்பு தட்டி விட்டது . குழந்தையையும் சரியாக பார்த்துக் கொள்ள தெரியவில்லை. என்ன ஆனாலும், நிர்மலாவும் ஒரு தாய், தாய் தாய் தானே!

அதனால், அவள் கணவனிடம் கறாராக சொல்லி விட்டாள். இனி தனிகுடித்தனம் வேண்டாம். பேசாமல் அத்தைக்கு போன் போடச்சொன்னாள். தங்களுடன் இனி எப்போதும் கூட இருக்க சொல்லி மனைவி சொல்லி மாற முடியுமா மணியால்? அத்தையும் தன் கணவனுடன் உடனே புறப்பட்டு வந்து விட்டாள்.

குடும்பம் மீண்டும் இனிக்க ஆரம்பித்து விட்டடது நிர்மலாவுக்கும் மணிக்கும். அத்தை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டாள். ஒரு பிரச்னையும் இல்லை. சமையல் சூப்பர்.

***

“அத்தை, இன்னும் ஒரு தோசை போடுங்க ! வெங்காய தோசை பிரமாதம்” என்று மணி சமையலறை பக்கம் பார்த்து கூவினான். “இதோ வரேன்” என்று மணியின் அத்தை, தோசையுடன் வெளியே வந்தாள்.

எப்போது மணியின் அம்மா. நிர்மலாவுக்கு அத்தையோ, அப்போது, நிர்மலாவின் அம்மா,மணிக்கு அத்தை தானே!

***

இருபத்து ஐந்து வருடங்களுக்கு பிறகு . நிர்மலாவின் மகளுக்கு கல்யாணம் ஆகி விட்டது. அவள் அவளது கணவன் சொல்லிற்கேற்ப தனி குடித்தனம் போய்விட்டாள். இப்போதெல்லாம் ஆண்களுக்கு தான் மவுசு. வேலை வாய்ப்பு அவர்களுக்கு தான். பெண்களுக்கல்ல !

உலகம் உருண்டை! கால சக்கரம் உருள்கிறது!

நேற்று சியாமளா!

இன்று நிர்மலா!

நாளை யாரோ?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *