ராசிகா தனது இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு சிறிது நேரம் வானொலி நிகழ்ச்சியை செவிமடுத்தவாறு, பக்கத்து மேசைமீதிருந்த பழைய, புதிய புத்தகங்கள் சிலவற்றை வாசித்துவிட்டு, கடிகாரத்தைப் பார்க்க அது பத்து மணி நாற்பது நிமிடத்தைக் காட்டியது.
அவ்வேளை, ராசிகாவின் கண்களை தூக்கமும் இறுக்கமாக மூடிக்கொள்ளச் செய்தது. என்றாலும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு படுக்கையறைக்குச் சென்று கட்டிலில் அமர்ந்தவாறு தனது கடந்தகால வாழ்வில் நடந்து முடிந்த இனிமையான நினைவுகளை உள்ளத்திரையிலிட்டு ரசித்துக்கொண்டிருந்தாள்.
அத்தோடு, கசப்பான சம்பவங்கள் பற்றியும் சிறிது நேரம் சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
எங்கும் நிசப்தம் நிறைந்த வேளை, அப்பொழுது, தூக்கமும் மிதமிஞ்சிவிடவே, ராசிகா கட்டிலில் அங்குமிங்குமாக புரண்டு படுத்தாள்.
சொற்ப நேரத்துக்குள் கண் அயர்ந்துவிடவே ராசிகா கனவுலகில் நுளைந்துவிட்டாள்.
எங்கு பார்த்தாலும் பல புதுமையான காட்சிகள். அவளது வாழ்வில் என்றுமே கண்டிராத நிகழ்வுகள்.
பல வண்ண வண்ண புத்தாடை அணிந்த நிலையில் பல்லாயிரக் கணக்கான ஆண்களும் பெண்களுமாக ரெயில் வண்டிகளிலும் பஸ் வண்டிகளிலும் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். ராசிகாவும் அவர்களோடு சேர்ந்து சுவாரஷ்யமான பல சம்பவங்களைப் பற்றி சம்பாஷித்துக் கொண்டு செல்கின்றாள்.
இடைக்கிடையே நறுமணம் கமழும் அழகழகான பூந்தோப்புக்கள். கண்களைக் கவர்ந்திடும் மலைச் சாரல்கள். பச்சைப் பசேலென தோன்றிடும் செடி கொடிகள் அனைத்தையும் கண்டு களித்தவாறு சென்றுகொண்டிருக்க; சில வருடங்களுக்கு முன்னர் இவ்வுலகை விட்டும் பிறிந்து சென்ற தனது உறவினர்களையும் சந்தித்து உரையாடி மகிழ்கிறாள்.
அவர்களும் ராசிகாவை கண்ட மாத்திரத்தில் வியப்போடு அவளது அருகில் வந்து ஏதோ புரியாத வார்த்தைகளைச் சொல்லி அழுகிறார்கள். ராசிகாவும் அவர்களோடு சேர்ந்து தேம்பித் தேம்பி அழுதுகொண்டே அந்த இடத்திலிருந்து விடுபட்டு மீண்டும் வேறொரு இடத்தை சென்றடைகிறாள்.
அது கடற்கரையோடு இணைந்து காணப்படும் மரங்கள் நிறைந்த ஒரு காட்டுப் பகுதி. அவ்விடத்திலிருந்து எண்ணற்ற மிருகங்களும் பறவைகளும் வேறிடத்துக்கு நகர்ந்துகொண்டிருக்க; திடீரென்று மனிதக் கூட்டமொன்று கூக்குரலிட்டவாறு அவ்விடத்தை வந்தடைந்தது.
எதையும் புரிந்துகொள்ள முடியாமல் தட்டுத் தடுமாறிய நிலையில் ராசிகா அங்குமிங்கும் நோக்கிட:
எதிர்பாராதவிதமாக கடலிலிருந்து மேலெழுத்தவாறு சுழன்றி வந்த பேரலைகள் அம்மனிதக் கூட்டத்தை அப்படியே அள்ளிக்கொண்டு செல்கிறது.
அப்பயங்கர காட்சியைக் கண்ட மாத்திரத்தில் ராசிகா உரக்கக் கத்துகிறாள். அந்த இடத்தில் யாருமே இல்லை! மனம் கலங்கிய நிலையில் தன் உடையை கைகளால் பற்றிப் பிடித்துக் கொண்டு தலை தெறிக்க ஓடோடி களைத்துப் போய் ஓரிடத்தில் தடுக்கி விழுந்துவிடுகிறாள்.
அச்சமயம் திடுக்கிட்டவள் போல் கண் விழித்துக் கொண்ட ராசிகா சுற்று முற்றும் பார்த்திட அது தனது படுக்கையறை என்பதை உணர்ந்துகொண்டதும் இன்னும் சற்று ஆழமாக சிந்திக்கின்றாள்.
உண்மையிலேயே அது கடந்த ‘சுனாமி’ அனர்த்தத்தின் போது தனது உறவினர் பலரின் உயிரைப் பறிகொடுத்த ராசிகா, தான் கண்டது கனவுதானா என்பதை நினைத்துப் பார்க்க சிறிது நேரம் சென்றது.