நாளை வரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 5,969 
 

ராஜசேகர் அந்தப் பிரபல நிறுவனத்தின் நேர்முகத் தேர்விற்கு ஆயத்தமானான். கிளம்பும்போது தாத்தா ஜம்புநாதனின் காலைத் தொட்டு வணங்கினான். அவரின் கண்கள் லேசாக ஈரமானது.

ஜம்புநாதன் சுதந்திரப் போராட்ட வீரர். போராட்டத்தில் தனது ஒரு காலை இழந்தவர். அதற்காக கலங்கி விடாமல், தனது எண்பது வயதிலும் உற்சாகமுடன் மகன், மருமகள், பேரன், பேத்திகள் என்று அமோகமாக இருப்பவர்.

“ராஜா இந்த வேலை உனக்குக் கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும்…” தாத்தா ஜம்புநாதன் சொன்னார்.

அப்போது சமையற்கட்டில் ஒரு பாத்திரம் பெரிய சப்தத்துடன் கீழே விழுந்து உருண்டது. தொடர்ந்து ஜம்புநாதனின் மருமகள் மாலதியின் சீற்றமான குரல் கேட்டது…

“வெறும் வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் வச்சிகிட்டு வயசான கிழங்கள் வேண்டுமானால் வாழ்க்கை நடத்தலாம். ஆனா உனக்கு வேலை கிடைக்க அது உதவாது ராஜா. பணம்தான் இப்ப எல்லா இடத்திலேயும் பேசுது… அதை சேர்த்து வச்சித்தர இந்த வீட்ல வயசானவங்களுக்கும் வழியில்லை, அவங்க வம்சத்தில் வந்தவருக்கும் துப்பில்லை. ‘அப்பா வழி என் வழின்னு’ பள்ளிக்கூட வாத்தியார் உத்தியோகம் பார்த்துக்கிட்டு நீதி, நேர்மை, நியாயம்ன்னு உன்னத குணங்களை மட்டும் சம்மாதிச்சு என்ன பிரயோசனம்? டேய் ராஜா, நீயாவது உங்க தாத்தா, அப்பா போல பிழைக்கத் தெரியாம இருக்காதடா. கொஞ்சம் அப்படி, இப்படி நடந்துகிட்டு நாலு காசு சேத்து வெச்சிக்க ஆமாம், சொல்லிட்டேன்.”

ஜம்புநாதனுக்கு மருமகளின் இந்த ஜாடைப் பேச்சு கோபத்தை வரவழைக்கவில்லை. காரணம் முப்பது வருடங்களுக்கு மேலாக பழகிவிட்ட ஒன்று என்பதைவிட, அறியாமையில் அவள் உணர்ச்சி வசப்பட்டு பேசுவதில் அவருக்கு பரிதாபம்தான் ஏற்படும்.

மனிதர்களில் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று அவருக்குத் தோன்றும். லட்சியத்துடன் வாழ்ந்து பீனிக்ஸ் பறவைபோல உயிர்த்தெழும் உத்வேகம் கொண்டதுதான் உயர்ந்த வாழ்க்கை. சுயநலத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் தியாக மனப்பான்மையுடன் வாழ்ந்து மடிதல் வேண்டும்… என்கிற ரீதியில் சிந்திப்பவர் அவர்.

சுதந்திரப் போராட்டத்தில் அவர் இழந்தது ஒரு காலைத்தான்; ஆனால் அவர் கண்ட கனவு பலித்தது. தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது. ஒன்றை இழந்து ஒன்றைப் பெற்று விட்ட பிறகு அங்கு ‘இழப்பு’ என்பதற்கு பொருள்தான் ஏது?

ராஜசேகருக்கு தன் தாயின் பேச்சு எரிச்சலை மூட்டியது. ‘இந்த அம்மா என்றைக்குத்தான் திருந்தப் போகிறாள்?’ என்று எண்ணிக் கொண்டான்.

மகனின் மெளனம் மாலதிக்கு வெறுப்பைக் கிளப்பியது… “எல்லாம் அதே ரத்தம், ஒரே வம்சம்தானே! அதான் வாயை மூடிகிட்டே காரியத்தை நடத்திக்க வேண்டியது! சரியான அமுக்கினிக் குடும்பம்…” முணு முணுத்தாள்.

ஜம்புநாதன் சிரித்தபடி “நீ புறப்படு ராஜா” என்றார்.

“தாத்தா, இந்த வேலை கிடைத்தவுடன் என் முதல் சம்பளத்தில் உங்களுக்கு நிச்சயமா அழகான ஜெய்ப்பூர் கால் ஒன்று வாங்கித் தருவேன்..” என்றான்.

“இந்த வயசில் அதெல்லாம் எதற்கப்பா? மனசு இயல்பா இயற்கையா இருக்கிறதுனால இந்த ஊனம் என்னைப் பாதித்ததே இல்லை ராஜா. செயற்கைக் கால் பொருத்திக் கொண்டால் என் நடையில்கூட ஒரு செயற்கைத்தனம் வந்துவிடும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் பல வருஷங்களாக என் மனம் இந்த ஊனத்திற்குப் பழகிவிட்டது ராஜா…” சிரித்தார்.

ராஜசேகர் தாத்தாவைப் பற்றிப் பெருமையுடன் மனதில் நினைத்துக்கொண்டான். கிளம்பிச் சென்றான்.

அவன் சென்றதும் மாலதிக்கு சீறிப் புலம்புவதற்கு இன்னமும் சலுகை கிடைத்தது. மாமனாரின் ஏழ்மையை; மறைந்த மாமியாரின் அசட்டுத் தனத்தை; நடைப் பிணமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கணவனின் அப்பாவித்தனத்தை என்று வரிசையாய் அனைவரையும் அமில வார்த்தைகளால் சாட ஆரம்பித்தாள்.

மாலதி இவ்விதம் அடிக்கடி பொருமுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை… ராஜசேகரைத் தவிர மாலதிக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் அகல்யாவிற்கு இருப்பதை வைத்து கட்டும் செட்டுமாக கல்யாணத்தை சிறப்பாக முடித்து விட்டாள்.

ஆனால் இளையவள் ரேவதிக்கு கல்யாணம் பண்ணுவதற்குள் மாலதிக்கு முழி பிதுங்கி விட்டது. அவளுக்கு ஏராளமாகக் கடன் வாங்கிக் கல்யாணம் செய்து வைத்தாள். அந்தக் கடன்கள் வட்டிக்கு மேல் வட்டியுடன் இன்னமும் தொடர்கிறது.

கணவர் மகேசன் தன் பள்ளிக்கூடத்தில் சக வாத்தியார்களிடம் ஒரு இருபதினாயிரம் ரூபாய் மட்டும்தான் கடனாகப் புரட்ட முடிந்தது. . இன்னொரு ஐம்பதினாயிரம் ரூபாய் புரட்டிவிட்டால் பிள்ளை வீட்டார் கேட்ட சீர் செனத்தி செய்து திருமணத்தை சிறப்பாக நடத்திவிடலாம் என்கிற நிலைமையில்தான் அந்தச்செய்தி வந்தது…

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுப்பதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதை ஜம்புநாதன் உடனே நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் பொதுவான செய்தி கூறியது, தவிர அவருக்கு அது பற்றி அரசாங்க கடிதமும் வந்தது.

செய்தி கேட்ட மாலதிக்கு வாயெல்லாம் பல்லானது…

“மாமா, தெய்வமாப் பார்த்து உங்க பேத்திக்கு உங்க மூலமா கொடுத்திருக்கிற கல்யாணப் பரிசு இது! சீக்கிரமாப் போய் ஐம்பதாயிரத்தை வாங்கிட்டு வாங்க…!” என்று அன்பும் உரிமையுமாய் விரட்டினாள்.

ஜம்புநாதன் மருமகளைப் பரிதாபமாகப் பார்த்தார். மகன் மகேசன் மெளனம் காத்தான். பிறகு மெலிந்த குரலில், “மாலா, நாட்டுக்காக நான் செய்த சின்ன தியாகத்துக்குக் கிடைத்திருக்கிற பரிசை நான் வாங்கித்தான் ஆகணுமா?” என்று கேட்டார்.

மாலதி உடனே, “ஆமாம் மாமா… இதை நம்பித்தான் ரேவதியின் கல்யாணமே இருக்குது. போயி சட்டு புட்டுன்னு பணத்தோட வீட்டுக்கு வாங்க…நிலைமையை புரிஞ்சுக்குங்க.” என்றாள்.

ஜம்புநாதன் தனது ஊனமுற்ற காலை வலது கையால் தேய்த்தபடி நிமிர்ந்து உட்கார்ந்தார். பிறகு, “பின்னாட்களில் அரசாங்கம் இப்படியெல்லாம் தரப்போகுதுன்னு நெனச்சிக்கிட்டு நான் அன்னிக்கு சுதந்திரப் போராட்டத்துல கலந்துக்கல. நம்ம தேசத்துக்காக என்னுடைய ஒரு காலை அந்த வெள்ளைக்காரங்களுக்கு தானமா கொடுத்த்ததாகத்தான் இன்னிவரைக்கும் நினைச்சிட்டுருக்கேன். என் கால் ஊனத்தை காரணமாக் காட்டி அரசு கிட்டே இப்போ பணம் வாங்கிட்டா, அப்புறம் எனக்கும் பஸ் ஸ்டாண்டில் பிச்சையெடுக்கும் அந்த நொண்டிப் பிச்சைகாரனுக்கும் என்ன வித்தியாசம் மாலா?”

ஜம்புநாதன் இப்படிப் பேசி முடிக்கவும், “சபாஷ்!” என்று கையைத் தட்டியபடி ஒருத்தர் உள்ளே நுழைந்தார்.

“அட நீங்களா! வாங்க, வாங்க உட்காருங்க..” ஆச்சர்யத்துடன் வரவேற்றான் மகேசன்.

“எல்லாம் போச்சு, இந்தக் கிழம் பேசியதை ரேவதியின் வருங்கால மாமனார் கேட்டுட்டார். இனிமே இந்தக் கல்யாணம் நடந்த மாதிரிதான்..” என்று ராஜசேகர் காதோரம் ரகசியமாகப் புலம்பினாள் மாலதி.

“பெரியவர் பேசினதை எல்லாம் நான் கேட்டேன். வரதட்சினை, சீர் செனத்தி என உங்களை நான் கேட்டதற்கு இப்போது வருந்துகிறேன். பெரியவர் மாதிரி நாட்டிற்காக ஒரு காலை இழக்கும் அளவிற்கு தியாகம் செய்யும் மனது எனக்கு இல்லையென்றாலும்; பெண்ணைப் பெற்று கஷ்ட நிலையில் இருக்கும் ஒரு வீட்டிற்காக நான் பெருந்தன்மையாக நடந்து கொள்வதுதான் விவேகம் என்கிற முடிவிற்கு வந்து விட்டேன்.” உணர்ச்சி வசத்தில் அவர் குரல் உடைந்தது.

அதன்பிறகு ரேவதியின் கல்யாணம் நல்லபடியாக நடந்ததென்றாலும், மாலதிக்கு தன் மாமனார் அந்த ஐம்பதாயிரத்தைப் பெற்றுக் கொள்ளாமல் விட்டதில் இன்றைக்கும் பெரிய மனக்குறைதான். அதை நினைத்து நினைத்து அடிக்கடி புலம்பித் தீர்ப்பாள்.

“அந்தப் பணம் இருந்திருந்தால் படிச்சி முடிச்சும் வேலை கிடைக்காத ராஜசேகர் சொந்தமாய் ஒரு சின்ன தொழில் ஆரம்பிச்சிருக்கலாம். ஒண்ணுத்துக்கும் துப்பு இல்லாமல் கிழம் இப்படி செய்துவிட்டது…” என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் இடித்துரைப்பாள்.

அதனால்தான் இன்றும் ஜம்புநாதனுக்கு அர்ச்சனை ஆரம்பமானது.

ராஜசேகர் மாலை வீடு திரும்பினான். அவனது தளர்ந்த நடையும், சோர்ந்திருந்த பார்வையுமே மாலதிக்கு ஏதோ விபரீதத்தை உணர்த்தின.

“என்னடா இந்த வேலையும் ஊத்திக்கிச்சா?”

ராஜசேகர் மெளனமாய் இருந்தான்.

“நினைச்சேன். நம்மை மாதிரி ஏழைகளுக்கு பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது அவ்வளவு சுலபமா என்ன? கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வாங்க வேண்டியதை வாங்கிக்கிற சாமர்த்தியம் இந்தக் குடும்பத்துக்குத்தான் கிடையாதே!”

“அம்மா ப்ளீஸ் கொஞ்ச நேரம் வாயை மூடு… அப்படி எந்த ஒரு கீழ்த்தரமான காரியத்தையும் செய்து வேலை வாங்க நான் தயார் இல்லை அம்மா.”

“ஆமாண்டா, இது நீ பேசலை… உன் ரத்தம் பேசுது. வம்சாவழி பேச வைக்குது. நியாயம், தர்மம், நேர்மைன்னு போனவங்க நல்லா வாழ்ந்ததா சரித்திரம் கிடையாதுடா.”

“ஆனா அப்படி வாழ்ந்தவங்களே ஒரு சரித்திரம்தான் அம்மா!”

“எப்படியோ நாசமாப் போ… உன்கிட்ட யார் பேசறது?” சமையலறைக்குள் நுழைந்தாள்.

ராஜசேகர் சோர்வுடன் தாத்தாவின் அருகே கயிற்றுக் கட்டிலில் போய் அமர்ந்தான். வெளியே இருட்டிக்கொண்டு வந்தது, அவன் மனதைப் போல.

தயக்கமுடன் “தா த் தா” என்றான்.

ஜம்புநாதன் புன்னகையுடன், “கலங்காதே ராஜா! மேன்மைப் படுவாய் மனமே கேள்! விண்ணின் இடி நம் முன் விழுந்தாலும், நிலை தவறி நடுங்காதே, பயத்தால் ஏதும் பயனில்லை’ என்கிற பாரதியார் வரிகளை அடிக்கடி நினைத்துக்கொள். இன்று இனி இல்லை; மறையத்தான் போகிறது, ஆனால் நாளை வரும்! நம்பிக்கையுடன் இரு!” என்றார்.

ராஜசேகர் சற்று தெளிவானது போல வாசலுக்கு வந்து, சுதந்திரக் காற்றை உள்ளிழுத்தபடி மேலே வானத்தைப் பார்த்தான்.

அங்கே கருத்த மேகங்களினூடே கீற்றாய் நிலவின் ஒளி தெரிய ஆரம்பித்தது.

Print Friendly, PDF & Email

நெகிழ்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

சகுனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

கற்பனைக் கணவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *