நாலாவது பொண்ணு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 5,744 
 
 

நாந்தாங்க எங்க வூட்ல நாலாவது பொண்ணு.., மூத்தவளுக்கு மட்டுந்தான் மொறப்படி கல்யாணம் ஆச்சி.., அடுத்தவ ரெண்டாந்தாரமா கட்டிக்கிட்டா ‘சிம்பிளா’ கல்யாணம். இட்லி,கேசரி,சட்னி,சாம்பார் இதுக்கு வாங்குன கடனையே எங்கப்பனால அடைக்க முடியல..! இதுல மூத்தவ புருசனுக்கு எடுத்துவச்ச ‘டிவிஎஸ்’ வண்டிக்கு..,

“ரெண்டுமாசந்தான் ‘டீவு’ பணம் கட்டிருக்கிங்க..,நாலுமாசமா தொடந்து கட்டல அதனால வண்டிய தூக்கிட்டு போறோம்”னு சொல்லி வண்டிய எடுக்கவந்த சாருகிட்ட கையில காலுல வுழுந்து நாளக்கி காலைல கட்டுறம்னு சொல்லி அசமடக்கிருச்சி எங்கப்பன்.

‘எங்கப்பன்’ ,அந்தாள நெனச்சாதான் நெருப்பா எரியுது.., அதுசரி அந்தாளு மட்டும் என்ன பண்ணுவாரு? பொண்ணா பொறக்கும்னு தெரிஞ்சா பெத்தாரு..?எங்கள பெத்துட்டு ஒத்த ஆம்பளையா இன்னும் ஒழச்சி ஓடா தேஞ்சி போறாரு பாவம்..,

எனக்கு மூத்தவ கணக்குப்படி மூணாவதா எங்கக்காக்காரி ஒருத்தி இருக்கா..,அவளும் நானும் ரொம்ப

ஃபிரண்டாதான் பேசிக்குவோம். அவளுக்கு சின்ன வயசிலேர்ந்தே எங்க மாமம்மொவன் மேல ஆச.., அவனுக்கும் எங்கக்காமேல ஆசதான்.,ஆனா அவன் காலேஜ்லாம் படிச்சிருக்கான் அதனால கல்யாணமெல்லாம் வேணாம் எனக்கு புடிச்சிருக்கு, நான் கடைசிவரைக்கும் ஒம்மேல பாசமா இருப்பேன் அதேபோல நீயும் இருக்கணும்னு எங்கக்காகிட்ட சத்தியம் வாங்கிட்டான்.,மத்தபடிகட்டிக்கிற ஆசையெல்லாம் இல்ல அவனுக்கு..,இந்த லூசும் அவனப்பாத்தா பல்லையிளிச்சிக்கிட்டு திரியிது.

இந்த சந்துல எங்க ரெண்டாவது அக்காவ ரெண்டாந்தாரமா கட்டுன மாமா வேற அப்பப்ப என் மூணாவது அக்காவ முன்னாடி விட்டு பின்னாடி பாப்பாரு..,அப்படி என்னாதான் தெரியுமோ கருமம் நானும் அந்தாள தெனம் முன்னாடிவுட்டு பின்னாடி பாக்குறேன் ஒரு கருமாதியும் புரியல..,வாத்து நடக்குற மாதிரி அதக்கி அதக்கி நடக்குறான் புள்ளத்தாய்ச்சி மாறி வயிருவீங்கி குனிய நிமிரமுடியாம கெடக்குறான்.., இதுல எங்களுக்கு வேற ‘ரூட்டு’ உடுறான்.

அப்புறம் இப்போ மணி ராத்திரி ஒன்னு ஆவுது தூக்கமா வருது ஆனா நான் தூங்கமாட்டேன் ஏன்னா ஒங்களுக்கெல்லாம் தெரியாது.., விடியகால மூணு மணிக்கெல்லாம் என் ஆளு வரேன்னு சொல்லியிருக்கான்.., அவன் வர வரைக்கும் தூக்கம் வராது., என் ஆளு எங்க மாமன மாறியெல்லாம் இருக்கமாட்டான்., முடில்லாம் ‘மாடலா’ வெட்டிக்கிட்டு பந்தாவா இருப்பான். சிமெண்ட் மூட்டைய தானா தூக்கிக்கிட்டு மூணாவது மாடிவரைக்கும் போவான் எனக்கும் தூக்கிவுடுவான் நானும் தூக்கிக்கிட்டு அவன்கூடயே மூணாவதுமாடிக்கு போவேன்..,பாரமே தெரியாது..,

ஆமாங்க,

எங்கப்பன் இந்த அலுப்பகாசு ஆயிரம் ரூவா கட்டணும்னு சொல்லி என்ன பள்ளிக்கொடம் போவவாணாம்னு சொல்லிட்டான். அப்ப ஆரம்பிச்சதுதான் இந்த கட்டடத்து சித்தாளு வேள.., ஒரு நாளு ஓய்ச்சல் இல்லாம ஓடிக்கிட்டிருக்கு.., எங்கம்மாக்காரி இருக்காளே அவ ‘ஒரு _________’., எங்கப்பன் பள்ளிக்கொடம் போவவாணாம்னு சொன்னதும் அவகூடயே வேலக்கி கூப்ட்டுப்போய்ட்டா.,

“ஒங்கப்பனால பெரியாளு வேல பாத்து ஒங்களுக்கு சோறுதான் போடமுடியும் படிக்க வைக்க முடியாது..,நீங்க சம்பாரிச்சி ஆளுக்கு ரெண்டு பவுனு சேந்ததும் கல்யாணம் பண்ணிவச்சிடுறோம்”னு சொல்லிட்டா.!!

எங்கப்பனும் என் சின்னவயசுலேர்ந்தே பாக்குறேன் இன்னும் ‘பெரியாளு’ வேலதான் பாக்குது., இன்னும் கொத்தனாரா ஆகல.., நான் ஆம்பளையா பொறந்திருந்தா கொத்தனார் ஆயி மேஸ்திரி ஆயிருப்பேன்..,எங்கப்பன் ஒரு தெண்டம்..,அதுக்கு எங்கம்மாகிட்ட பேச்சி வாங்குறதுக்கே பொழுது சரியாயிடுது.

நானும் பள்ளிக்கொடம் போயி என்னாத்த கிழிக்கப்போறேன்? போனாலும் பத்தாம்ப்பு பெயிலுதான் ஆவேன்.இத அந்த கணக்கு வாத்தியே நாளக்கி நாப்பதுதடவ சொல்லிட்டிருப்பான்.அவனுக்கு என்ன எங்க ஊட்டு கஷ்ட்டமா புரியபோவுது..!?

படிப்ப நிறுத்துனவரைக்கும் சந்தோசந்தான் இருந்தாலும் வெளில சோகமா காட்டிக்கணும். ஆரம்பத்துல சித்தாளு வேலக்கி போவும்போது கொத்தனார பாத்தாலும் மேஸ்திரிய பாத்தாலும் ஒரே பயமா இருக்கும் இந்த ‘பெரியாளு’ வேல செய்யிற ஆம்பளையாளுங்கவேற மெரட்டிக்கிட்டே இருக்குங்க..,அதவிட ஊட்டு ஓனர பாத்தா ஈரக்கொல நடுங்கிரும்..,எல்லா பயலுவளும் எங்கிட்டயே வந்து அது சொட்ட, இது நொட்ட,மயிரு,மட்ட,மங்கான்னு நச்சரிப்பானுங்க எனக்கு அழுவையா வரும்.., அப்புறம் ரெண்டு மூணு பில்டிங் வேல முடிஞ்சதும் சும்மா வெளுத்து வாங்குவேன்..,ஒருத்தரும் என்கிட்ட பேச்சிகுடுத்து மீறமுடியாது. முன்னெல்லாம் சம்பளபாக்கி வைப்பானுங்க எப்பகேட்டாலும் இன்னக்கி நாளக்கின்னு இழுத்தடிப்பானுங்க..,ஆனா இப்போல்லாம் நான் காச வச்சிட்டு மறுவேலபாருன்னு கணக்குப்பண்ணி வாங்கிட்டு வந்திடுவேன்.

நான் பள்ளிக்கொடத்த நிறுத்தினதும் எங்கூடவே அமலாவும் நின்னுட்டா அப்புறம் ரெண்டுபேரும் சேந்து ‘காங்கிரேட்டு’ வேலக்கி போவ ஆரம்பிச்சோம்.ஆரம்பத்துல வெத்துபாண்டு வாங்கிப்போட்டுகிட்டு ‘மெலுக்கான’ வேலயா செஞ்சிக்கிட்டிருந்தோம் அப்புறமா மேஸ்திரி,

“இதுகள இனிமே கூட்டிட்டு வராதிங்க.., வேலையும் ஓடல சம்பளமும் முழுசா வாங்கிட்டு போவுதுங்க” னு எங்கப்பங்கிட்ட மூஞ்சிலடிச்சாமாறி பேசிட்டான்.., அதுலேர்ந்து மூணாவது மாடிக்கு மணல்மூட்ட கொண்டுபோவேன், ஜல்லி அள்ளிவுடுவேன்,சாரத்துல நின்னு கலவபாண்டு தூக்குவேன்.., வேல முடிஞ்சி கையப்பாத்தா ரெண்டுகையும் தேஞ்சி சிமிண்டு அரிச்சி ஓட்டபோட்டுரும். சோத்துல கைய வச்சா எரிச்சலா எரியும்.தூங்கும்போது தேங்காயென்ன தடவிட்டு அடுத்தநாளு துணியசுத்திக்கிட்டு வேலபாப்போம்.

நான் எங்க அப்பா அம்மா மூணாவது அக்கான்னு எல்லாரும் ஒண்ணா வேலபாப்போம்.., ஊருசனங்களுக்கு பொறாம கண்டுடும் நாலு சம்பளம் வருதுன்னு.,

வந்து என்ன செய்ய..?

கட்டிக்கிட்டு போனவளுங்க ரெண்டுபேரும் அடிக்கிறான்,ஒதைக்கிறான்னு சொல்லியே வாராவாரம் அரிசிவாங்க,காய்கறிவாங்கன்னு வந்து சுருட்டிக்கிட்டு பூடுவாளுங்க, அதுலயும் ரெண்டாவது அக்காகாரி இருக்காளே அவ வந்து தங்குனா அவ்ளோ சீக்கிரம் கெளம்பமாட்டா.., அவபுருசன் ஒரு சொரணகெட்டபய வந்துட்டா ஊட்டுக்குள்ளேயே அடஞ்சிகெடப்பான் அசையமாட்டான்.., ஒரு வேலைக்கும் போகாம எங்கக்காகிட்ட பணம்கேட்டு சண்ட போட்டு தெனம் குடிச்சிட்டேகெடப்பான்..,

அவ பெத்த புள்ளைங்க வேற என்உயிர வாங்கித்தொலையும் சனியனுங்க..,

மூத்தவளுக்கும் இவளுக்கும் செஞ்சி செஞ்சே ஒட்டாண்டியாயிடுச்சி எங்கப்பன்.

‘காங்கிரேட்’ வேலக்கி போனா ‘பெண்டு’

நிமிந்திடும் “சாரத்துல நிக்காதடி”ன்னு எங்கம்மா கத்திக்கிட்டே இருக்கும். ‘பில்டிங் ரூஃப் காங்கிரேட்’ போடும்போது சிமெண்ட் கலவபாண்ட நமக்கு மேல நிக்கிறவங்கிட்ட தூக்கி கொடுக்கணும் மாறி மாறி மேல போவும் அப்படி போவும்போது சாரத்துல ஜாக்கிரதையா நிக்கணும் கொஞ்சம் பெசகுனாலும் கீழவுழுந்து ஒடையவேண்டியதுதான்..,

அப்படி சாரத்துல நின்னு கலவபாண்ட மல்லுகட்டி தூக்கிகுடுக்கும்போது அப்பிடியே பின்னாலவாட்டத்துல சாஞ்சி கீழவுழுந்து இடுப்பெலும்பு நழுவி குச்சிவச்சிக்கிட்டு நடக்குறாரு எங்கமாமா ஒருத்தரு.., அதான் எங்கம்மாவுக்கு பயம்.

நானும் அமலாவும் சளைக்காம வேல செய்வோம். ‘காங்கிரேட்’ வேலக்கிபோயிட்டா எடையில டீ, வடையெல்லாம் வாங்கித்தரமாட்டாங்க வேலமுடியிறவரைக்கும் ஒண்ணுக்குப்போவ கூட எறங்கமுடியாது குனிஞ்சி நிமிந்து குனிஞ்சி நிமிந்து பாவாட சட்டையெல்லாம் வேர்வையில நனஞ்சி ஊத்தும். வேல முடிஞ்சதும் ஆம்பளையாளுங்கலாம் கை,காலு கழுவிட்டு போயிருவாங்க நாங்க பாண்டு,மம்முட்டி,கலவமிஷினு எல்லாத்தையும் கழுவிவச்சிட்டுத்தான் போவோம். எத்தனை மணியானாலும் வேல முடிஞ்சாதான் சாப்பாடு..,நேத்தெல்லாம் மத்தியான சாப்பாடு சாப்பிடும்போது மணி சாயங்காலம் ஆறு.., ஆனா கறிகொழம்பு கண்டிப்பா போடுவாங்க.,பசங்களுக்கெல்லாம் ஆளுக்கு ஒரு பாட்டிலு..,

ம்.. பசங்கன்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது.., அவனபத்தி சொல்றேன் அவன்பேரு அருளு, ஆளு கருப்பா குள்ளமா இருப்பான்.எங்களுக்கு பக்கத்து ஊருதான். அமலாவுக்கு பெரியம்மா பையன் எங்கக்கூடதான் வேலக்கி வர்றான்..,வந்த புதுசுல யார்கிட்டயும் பேசமாட்டான்.

“வோடபோன் கார்டு வாங்கிட்டு வா அருளு..,”

“எத்தன மணிக்கி கெளம்பனும் அருளு?”

“அமலாவ பாத்தியா அருளு?”

“எங்கப்பாவ வரசொல்லு அருளு”

அய்யோ…, அருளு..,அருளு..,அருளு…,

அவம்பேர சொல்லிகிட்டே இருக்கணும் போலிருக்கு., அவன நெனச்சாலே ஒடம்பு கரண்ட்டு மாறி விர்ருன்னு ஆவுது.., அவங்கிட்ட ஏதாவது காரணத்த வச்சி தெனம் பேசிக்கிட்டேயிருப்பேன். அவன் பசங்களோட பேசிட்டிருக்கும்போது அவனையே பாத்துட்டிருப்பேன்.செல் நம்பர்லாம் குடுத்துட்டு பேச ஆரம்பிச்சதும் அமலாவுக்கு தெரிஞ்சிப்போச்சி அப்பா அம்மாகிட்ட சொல்லிடாதடின்னு நான் அவகிட்ட கெஞ்சினேன் அவளும் சொல்லல..,

நான் அவனத்தாண்டி போவும்போது பசங்க எல்லோரும் அவம்பேர சத்தமா சொல்லிட்டு சிரிப்பானுங்க எனக்கு வெக்கமாயிருக்கும். எங்க மூணாவது அக்காகிட்ட பேசிட்டிருக்குற என் மாமம்மொவனுக்கு தெரிஞ்சி என்கிட்ட வந்து கோவமா கேட்டான்.அது என் இஷ்டம் எனக்கு அவன புடிச்சிருக்கு ஒன்வேலைய மட்டும் நீ பாருன்னு சொன்னதும் அக்காகிட்ட சொல்லிட்டேன்..,

“உங்க ரெண்டுபேரப்பத்தியும் நான் அம்மாகிட்ட சொல்றேன்”னு சொன்னதும் எங்கக்காவும் பயந்துபோயி கண்டுக்காம வுட்டுட்டா.., எனக்கு அருளுன்னா ரொம்பபுடிக்கும் அவனுக்கு சிமெண்டு மூட்டையத்தூக்கிவிடும்போது என்விரல தொடுவான்.நான் பாக்காதப்ப என் நெஞ்ச பாப்பான் எனக்கு அப்பிடியே கூச்சமா இருக்கும்.

வீட்டுல யாரும் இல்லாதப்போ போன் பேசும்போது

“தனியாதான் இருக்கேன்”னு சொன்னா

“நானும் வரட்டுமா?”ன்னு கேப்பான்.

“வந்து என்னா செய்வ?”ன்னு கேட்டா

“வந்து வட சுடுவேன் போடி”னு கோவிச்சிக்குவான். நானும் ஒன்னும் தெரியாதமாறி நடிச்சிடுவேன்.அமலா வூட்டுல யாருமில்லாதப்போ நான் போயிட்டா ஓடி வந்து கட்டிப்புடிச்சிக்குவான் நான் அவன தள்ளிவுட்டுட்டு ஓடியாந்துருவேன்..,

அப்புறம் அவன நெனைச்சி மனசு கஷ்ட்டமா இருக்கும்

‘ப்ச்’..,பாவந்தானே அவன்..!!

அவன ஏமாத்தக்கூடாதுன்னு தோணும்..,அதோட எனக்கும் ஆசையாஇருந்ததால எங்களுக்குள்ள இதுவரைக்கும் ‘ரெண்டுதடவ’ முடிஞ்சிருச்சி.

முன்னாடில்லாம் வேலக்கி போனா வீட்டுக்கு வந்து குளிக்கமாட்டேன் அசதியாஇருக்கும் அப்படியே தூங்கிடுவேன்.மறுநாளு விடிஞ்சதும் அதே துணியோட கெளம்பிடுவேன்.அருள மனசுல நெனச்சத்துக்கப்புறம் தெனம் குளிச்சிட்டு தலசீவிடுவேன். எனக்கு கிப்ட்டெல்லாம் வாங்கிதந்திருக்கான் கண்ணாடிடப்பாவுல ரெண்டுபொம்மைங்க முத்தம் குடுத்துட்டு இருக்கும்.அது நாங்கதான்னு நெனச்சிக்குவேன்.

வேல இல்லாத நாள்ல எங்க அக்கா லெகின்ஸ போட்டுக்கிட்டு கடைக்குப்போவேன்.பின்னாடியே வந்து சிகரெட்டு வாங்கி குடுடின்னு கேப்பான் லெகின்ஸ பத்தி எதுவுமே சொல்லமாட்டான் நானா கேட்டதுக்கப்புறம் நல்லாருக்குன்னு ஒரே வார்த்தைல முடிச்சிடுவான்.

“எனக்கு லெகின்ஸ் வாங்கித்தா”ன்னு கேட்டா,

“உனக்கு லெகின்ஸ் முக்கியமா இல்ல நான் முக்கியமா”னு கேப்பான்.

எனக்கும் அவந்தான் வேணும்.

வேல முடிஞ்சி எங்கயாவது போய்ட்டான்னா அவன பாக்காம மனசு கஷ்ட்டமா அவனையே தேடிட்டிருப்பேன்.அவன பாத்துக்கிட்டே இருக்கணும்போல தோணும்.எங்க ரெண்டு பேரையும் தனியா எங்கயாவது விட்டுட்டா போதும்னு நெனப்பேன்.அவன் மடியில நான் படுத்துக்கணும்.அவன் குடிச்சிட்டு வந்தான்னா சோறு ஊட்டிவிட்டு ட்ரெஸ்லாம் மாத்திவிட்டு தூங்கவைக்கணும்.ரெண்டுபேரும் வேலக்கிப்போயி பெரியவண்டி வாங்கிடனும்.’டச்சு’ செல்லு வாங்கி ரெண்டுபேரும் சேந்துநின்னு நெறைய ‘செல்பி’ எடுத்துக்கணும்..,இதப்போல இன்னும் நெறைய ஆச இருக்கு..,இப்போ எல்லாமே நிறைவேறப்போவுது..,

நேத்து வேலமுடிஞ்சதும் தனியா கூப்பிட்டு,

“நாளைக்கி ராத்திரி விடியிறநேரம் நாலே முக்கால் மணிக்கு குறுக்குரோட்டுல பஸ் இருக்கு.,அத புடிக்கணும்னா நீ காலைல மூணு மணிக்கு கிளம்பி ஏரி பக்கமா வந்திடு.., நாம மெட்ராஸ் போறோம்”னு சொன்னான்.

எனக்கு அதுலேர்ந்து தூக்கம்புடிக்கல ஒரே படப்படப்பா இருக்கு.., மெட்ராஸ் போகுரத நெனச்சா ஜாலியாதான் இருக்கு.அமலா சொல்லியிருக்கா அவங்க சொந்தக்கார பொண்ணு மேல்சாதிப்பையனோட போயிருச்சாம்.அவன் கொஞ்சநாளு கூடவச்சிருந்து மாசமாக்கிட்டு அறுத்துக்கொன்னு போட்டுட்டானாம்.,

பொணத்தக்கூட ஏழுநாளுகழிச்சி கெணத்துலேர்ந்து அழுகிப்போயிதான் எடுத்தாங்களாம்.., அத நெனச்சாதான் கொஞ்சம் பயமாயிருக்கு..,

ஆனா என் அருளு அப்பிடியெல்லாம் இருக்கமாட்டான்.நம்மசாதிதான் பக்கத்து ஊருவேற..,

அதோட எம்மேல பாசமாவும் இருப்பான்.அவங்கமாமா எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லிருக்காறு.’மெட்ராஸ்’ போயி பீச்சுக்கு கூட்டிட்டு போறேன் கர்ணானிதி, அம்மா சமாதிய காட்டுறேன்னு சொல்லிருக்கான்.

எனக்கும் ரொம்ப ஆசையாதான் இருக்கு,அவனோட மாமா ‘மெட்ராஸ்’ல பெரிய பில்டிங்ல கான்ட்ராக்ட்டா கொத்தனார் வேல செய்யிறாரு அந்த பில்டிங்கிலேயே தங்கிட்டு வேல பாக்கலாம்னு சொல்லிருக்கான். எங்கக்கா பையில துணியெல்லாம் எடுத்து வச்சிருக்கேன் அவ ‘லெக்கின்ஸ்’ ரெண்டும் சேத்துதான்.எங்கப்பா பக்கத்துவூட்டு மோதரத்த கடன் வாங்கி அடகுவச்சி வண்டிக்கு ‘டீவு’ பணம் கட்ட நாலாயிரம் வச்சிருந்தாரு அதையும் எடுத்துக்கிட்டேன்.

அவன நம்பிதாங்க போறேன்., நேரம் ஆயிடுச்சி எல்லாரும் நல்லா தூங்குறாங்க.

“தோ…,அருளுதான் மிஸ்டு கால் குடுக்குறான்..,செல்லு சைலண்ட்டுலதான் இருக்கு..,

“வரட்டுமாங்க…,

என்னங்க..?

எம்பேரு தான கேக்குறீங்க..?

நாளக்கி எங்க ஊர்ல வந்து கேளுங்க நெறைய சொல்லுவாங்க…, ”

அப்புறம்..,

“நாந்தாங்க எங்க வூட்டுல நாலாவது பொண்ணு”.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *