நாலணா சில்லரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2017
பார்வையிட்டோர்: 7,211 
 
 

அது ஒரு சிறிய வீடு. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டிய இடத்தில் கனகச்சிதமாகவே இருந்தன. வாழைப்பழமும் திராட்சையும் ஒரு பிளாஸ்டிக் பையில் அடைபட்டு கிடந்தன. அந்த வீட்டில் ஒற்றைக் கட்டில் மட்டும் போடப்பட்டிருந்தது. கட்டிலின் முன்னால் வெற்று நாற்காலி. ஆனாலும் கட்டிலில் மன இறுக்கத்தோடு படுத்திருந்தார் காசி தாத்தா. கண்களில் வழியும் நீரை துடைத்துக்கொள்ள கூட மனம் வரவில்லை. வழியட்டும் விடு என்று விட்டுருந்தார். வயசில் எப்படியெல்லாம் இருக்க முடியுமோ அப்படியெல்லாம் இருந்தாச்சு. இந்த உலகத்துல என்னன்ன தப்பெல்லாம் பண்ணக்கூடாதோ அதுவெல்லாம் பண்ணியாச்சு. அதனால கல்யாணம் கூட தாமதமாகத்தான் நடந்தது. அவளும் என் கையில ஒரு பொண்ண பெத்துக் கொடுத்துட்டு போய் சேந்துட்டா. என் மனைவி வந்த அப்புறம்தான் நான் என்னையே உணர்ந்தேன். என்ன பன்ன? கடவுள் அதுக்குள்ள அவளை என்கிட்ட இருந்து பறிச்சிக்கிட்டாரு. அவ போனதுல யாருக்கு வருத்தமோ இல்லையோ, கண்டிப்பா எனக்கு மிகுந்த மனவருத்தத்தை கொடுத்தது. நானும் என் மகள் மஞ்சுளாவும் அநாதையாகவே உணர்ந்தோம். என் பொண்ண நல்லா படிக்க வைச்சன். அவ பெரிசான பிறகு கடனவுடன வாங்கி நல்ல இடத்துல கல்யாணமும் பண்ணி வைச்சுட்டேன். மாப்பிள்ள கூட நல்லவருதான். எனக்கு அப்புறம் என்பொண்ண நல்லா வைச்சிப்பாரு என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.

கல்யாணம் ஆகி ரெண்டு வருசமாச்சு. ஒரு ஆம்பள கொழந்தை இருக்கு. என் பொண்ணு வர போறப்பல்லாம் என்கிட்ட இருக்கிற ஏதாவது ஒன்ன கொடுத்துபுடுவேன். இப்பல்லாம் முன்னமாதிரி வேலைக்கு போவ முடியறதுல்ல. கையிலயும் காசு இல்ல. இங்க ஊருக்காரங்ககிட்ட அப்பப்ப கடன் வாங்கி செலவு பாத்துகிட்டேன். கல்யாண கடன் வேற அப்பப்ப கண்ணு முன்னாலேயே நிக்குது. இன்னிக்கு காலையில வேற கடன் கொடுத்த பைனான்சியர் வீட்டுக்கு முன்னால நின்னு கத்திட்டு போனாரு. இப்பத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மஞ்சுளா வந்துட்டு போனா… நினைத்துப் பார்க்கிறார் காசி தாத்தா.

“அப்பா… அப்பா….” என்று சொல்லிக்கொண்டே தான் வாங்கி வந்த பழங்களை ஒர் ஓரமாக வைத்தாள் மஞ்சுளா.

“வாம்மா மஞ்சுளா… மாப்பிள்ள எப்படி இருக்காரு? வாடா… வாடா… என் செல்லக்குட்டி” என்று தன்னோட பேரனை தூக்கி தோளோடு சாய்த்துக் கொண்டார் காசி தாத்தா.

“அவரு நல்லாயிருக்காருப்பா… நீங்க எப்படி இருக்கீங்க…” என்றாள் மஞ்சுளா

“ம்ம்… நல்லாயிருக்கம்மா.. ” என் ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டார்.

“என்னாப்பா வீடு இப்படி அலங்கோலமா வைச்சிருக்கீங்க” என்று அப்பாவின் பதிலை எதிர்ப்பார்க்காமலே வீட்டை சுத்தப்படுத்த தயாரானாள். அப்பாவின் அழுக்கு துணிகளையும் துவைத்து காயவைத்தாள். கொஞ்சம் அரிசி போட்டு சமைக்கவும் செய்தாள். அதற்குள் பையன் ஆய் போய்விட, காசிதாத்தா அவனை வெளியில் கொண்டுபோய் உட்காந்து பிடித்துக்கொண்டார்.

“மஞ்சுளா… மஞ்சுளா… குழந்தைக்கு ஆய் கழுவி விடும்மா… என்று காசி தாத்தா மகளை அழைத்தார். மஞ்சுளாவும் மகனை நன்றாக கழுவிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றாள். தந்தையும் மகளும் சாப்பிட அமர்ந்தார்கள்.

“அப்பா… அப்பா….”

“என்னம்மா சொல்லு”

“ஒன்னுமில்ல… உங்க பேரனுக்கு வர வெள்ளிக்கிழமையோட ஒரு வயசாகுது. அத கொண்டாடனுமின்னு அவரு ஆசைப்படரார்”

“அதுக்கென்னமா சந்தோசம்தானே! கொண்டாடிடுவோம்!

“அதுக்கில்லப்பா புகுந்த ஆத்துல நீங்க ஏதாவது பேரனுக்கு நகை போட்டிங்கன்னா நல்லாயிருக்குமின்னு அவர் நினைக்கிறார். அதுமட்டுமில்லாம எனக்கும் அது பெருமைதானப்பா.. அதனால…. இந்தாங்கப்பா பணம். இதவச்சு ஏதாவது நகை எடுத்துட்டு வாங்கப்பா… என்று விக்கி முக்கி சொல்லி முடித்தாள் மஞ்சுளா.

“கல்யாணம் பண்ணி கொடுத்ததுக்கு அப்பறம் பொண்ணுகிட்ட காசு பணம் வாங்குறது தப்புமா! எனக்கு வேண்டாம் நீயே வச்சுக்க…”.

“உங்க மாப்பிள்ளதான் கொடுத்துட்டு வரச்சொன்னாருப்பா”

“வேணாம்மா நானே பாத்துக்கிறேன்”

“எப்படிப்பா உங்காளால முடியும். சொன்னா புரிஞ்சுக்கோங்கப்பா. புடிவாதம் புடிக்காதிங்க”

“நான் என் பேரனுக்கு பவுணு எடுத்துட்டு வருவேன். பெரிய கேக்கும் வாங்கிட்டு வருவேன். “டே பேராண்டி உன்னோட முத பொறந்தநாள நாம சூப்பரா கொண்டாடிடுவோம். ஏன்னா அடுத்த பொறந்தநாளைக்கு நான் உங்க பாட்டிக்கிட்ட போனாலும் போயிடுவேன்” என்றார்.

“அப்பா அப்படியெல்லாம் சொல்லாதிங்க… நீங்க எனக்கு வேணும்பா… சாப்பிடுங்க” என்றாள்.

மஞ்சுளா போன பிறகு கட்டிலில் படுத்த காசி தாத்தாவுக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. காலையில் கடனுக்காக பைனான்சியர் திட்டியது, இப்போது பேரனுக்கு பிறந்தநாள் செலவு மனசு குழம்பியிருந்து. வீட்டில் சுத்தமாக காசே இல்லையே! யாரிடம் பணம் கேட்பது. இந்த வயதான கிழவனை நம்பி யார் பணம் கொடுப்பார்கள். தலை கிறுகிறுத்தது.

அன்று காலையிலேயே காசி தாத்தா எழுந்து கொண்டார். எப்பாடுபட்டாவது காசப் பொரட்டி பேரனுக்கு பவுணு எடுத்துட வேண்டியதுதான். இன்னிக்கு காசுதான் எல்லாமே. பணம் இருந்தாத்தான் மதிப்பு. ஒரு மனுசன் நல்லவனா கெட்டவனான்னு யாரும் பார்ப்பதில்லை. பணம் இருக்கான்னுதா பார்க்கிறாங்க… என்று மனசோடு புலம்பிக்கொண்டே நடையைக் கூட்டினார். கோபாலன் டீக்கடைக்கு வந்து சேர்ந்தார்.

“தாத்தா டீ போடட்டுமா?” என்று கோபாலன் கேட்டான்.

“ம்ம்… போடு கோபாலு” என்றார். கோபாலு அப்பா காலத்துல இருந்தே தினமும் இந்த டீக்கடைக்கு வந்து டீ சாப்பிடரது காசி தாத்தாவுக்கு வழக்கம். ஒருசில நேரங்களில மறந்துபோய் காசு கொடுக்காம வீடு வரைக்கும் போயிட்டு அப்புறம் ஓடி வந்து கொடுத்துட்டு போவாரு. அதெல்லாம் ஒரு காலம். கையில் சூடான டீ டம்ளரை கொடுத்துவிட்டுப் போனான் கோபாலன்.

“தம்பி கோபாலு! கொஞ்சம் நில்லுப்பா…”

“என்ன தாத்தா…”

“எம்பேரனுக்கு முதபொறந்தநாளு… ஏதாவது செய்யலாமுன்னு இருக்கன். இப்ப என்கிட்ட காசு சுத்தமா இல்ல. இன்னும் ஒரு மாசத்துல நான் குடியிருக்கிற வீட்ட வித்துட்டு மக வீட்டுக்கே போயிடலாமுன்னு தோனுது. அதான் நீ ஒரு ஐயாயிரம் ரூபா கொடுத்தின்னா… நானு ஒரு மாசத்துக்குள்ள திருப்பிக் கொடுத்துடுவேன் கோபாலு” என்றார் காசி தாத்தா. சிறிது நேரம் மனப்போராட்டத்திற்குப் பிறகு சரி என ஒத்துக்கொண்டான் கோபாலன். கடை உள்ளேச் சென்று வெளியே வந்த கோபாலன் எட்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை காசிதாத்தாவிடம் கொடுத்தான்.

“தம்பி… நாலாயிரம்தான் இருக்கு! இன்னும் ஒராயிரம் இருந்தா கொடேன். இது பத்தாது தம்பி”

“தாத்தா என்கிட்ட அவ்வளவுதான் இருக்கு. இதுகூட சீட்டுக்கு வைச்சிருந்த பணம்தான். நீங்க கேட்டதால கொடுத்தேன். நான் வேற எங்கேயாவது ஏற்பாடு பண்ணிக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே குடித்த டீ டம்ளரை எடுத்தபடியே உள்ளேச் சென்றான் கோபாலன்.

பேரனுக்கு கால்பவுணுக்கு மோதிரம் எடுத்தாச்சு. “மூவாயிரத்து ஐநூறு ரூபாய்க்குள்ள முடிக்கணுமுன்னு பாத்தா மூவாயிரத்து எழுநூறு ஆயிடுச்சி” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். மீதி இருக்கிற காசுக்கு பழம், பூ, அழகான பூப்போட்ட சட்டை எல்லாம் எடுத்துட்டு கையில வெறும் ஐந்து ரூபாதான் இருந்தது. இந்தக்காச வச்சிட்டுதான் பொண்ணு ஊருக்கு போவனும். ஊருக்கு போனபின்னாடி திரும்பி வர்ரதுக்கு……. பாத்துக்கலாம்….. போ….. என்று நினைத்துக் கொண்டார்.

அன்று மதியம் நாலு மணிக்கே பஸ் ஸ்டாப்பிற்கு வந்து விட்டார். “இங்கேயிருந்து 12ம் நம்பர் பஸ்ஸ புடிச்சமின்னா ரெண்டே முக்கால் ரூபா ஆகும். அந்தப்பக்கம் 1B பஸ்ஸ புடிச்சமின்னா ரெண்டே காலுரூபா ஆகும். ஒன்னும் பிரச்சனை இல்ல. பேரனோட பொறந்தநாளுக்கு போயிரலாம்” என்று கணக்கு போட்டுக்கொட்டிருந்தார். பஸ்சு வர்ர திசையே வெறித்துப் பார்த்து சலித்துப் போனார். நாம சீக்கிரம் வரும்போது பஸ் லேட்டா வரும். நாம லேட்டா வரும்போது பஸ் சீக்கிரமா வந்துரும். அதுபோலத்தான் அன்னிக்கும் நடந்தது. அந்த ஊருக்கு முன்னால ஊருல ஏதோ சாதி பிரச்சனைனால மக்கள் எல்லோரும் ரோட்டுல வந்து உக்காந்துட்டாங்க. அதனால நாலு பத்துக்கு வரவேண்டிய பஸ் ஐஞ்சரைக்குத்தான் வந்தது. காசி தாத்தாவுக்கு மனசு படபடத்தது.

“ஆறு மணிக்கு பொறந்தநாள கொண்டாடுறோம்ன்னு மஞ்சுளா சொல்லிச்சே. இப்பவே ஐஞ்சரை ஆயிடுச்சி. நாம எப்ப ஊருக்கு பொறதுன்னு தெரியலையே”

அனைவரும் பஸ்ஸில் ஏறினார்கள். காசிதாத்தா தன்னோட கையில் இருக்கிற ஐந்து ரூபாயையும் கையில் பிடித்துக்கொண்டிருந்த கட்டை பையையும் ஒருமுறை பார்த்துக் கொண்டார்.

“எல்லோரும் சில்லரையை கையில் எடுத்துக்கோங்க.. என்கிட்ட சுத்தமா சில்லரையே கிடையாது. ஐஞ்சு ரூபா டிக்கெட்டுக்கு நூறு நூறு ரூபாவா கொடுத்து என்கிட்ட சில்லரை வாங்க நினைக்காதிங்க” என்று கத்திக்கொண்டே காசிதாத்தாவிடம் வந்தார். கண்டக்டரிடம் மூன்று ரூபாயைக் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டார்.

கண்டக்டர் டிக்கெட் கொடுத்துவிட்டு “டிக்கெட்… டிக்கெட்… டிக்கெட்…” என்றபடியே பஸ்ஸின் அடுத்தப்பகுதிக்கு செல்ல முயன்றார்.

“கண்டக்டர் தம்பி…. எனக்கு நாலணா சில்லரை பாக்கி இருக்கு தம்பி” என்றார்.

“வெயிட் பண்ணுங்க… நான் என்ன அச்சா அடிக்கிறன். டிக்கெட் கொடுத்துட்டு வந்து தரன்” பேருந்து கொஞ்ச தூரம் சென்றது. ”இப்பவே ஐஞ்சே முக்கால் ஆயிடுச்சி. இன்னேரம் எல்லோரும் வந்திருப்பார்களே! இன்னும் தாத்தா வரலன்னு பேரன் நினைப்பானே! மஞ்சுளாவ அவுங்க வீட்டுல உள்ளவங்க தப்பா பேசுவாங்களே! மாப்பிள்ள என்ன நினைப்பாரு! தெரியலையே…. ஐயோ….இந்த பேருந்து வேற நத்தை போல ஊருதே.

கண்டக்டர் டிக்கெட் எல்லாம் கொடுத்துவிட்டு காசிதாத்தாவை கடந்தார். ”தம்பி என்னோட நாலணா சில்லரை பாக்கி இருக்குபா” என்றார்.

“யோ… பெரியவரே உன்னோட நாலணாவா நான் வச்சிட்டு மாடி வீடா கட்டப்போறேன். இருய்யா தரேன்” என்று கோபத்துடன் காசிதாத்தாவை முறைத்து பார்த்துவிட்டு சென்றான். தற்போது வானம் வேறு இருட்டிக்கொண்டு வந்தது. மழை பொத்துக்கொண்டு ஊத்தும் போலிருந்தது. காத்து தூக்கி அடிக்க தயாராகயிருந்தது. பேருந்தில் கூட்டம் கொஞ்சகொஞ்சமாக அதிகமாகிக்கொண்டே போனது. பேய் மழை கொட்டியது. பஸ்சிலும் ஆங்காங்கே ஒழுக ஆரமித்தது. அந்தக்காற்றிலும் குளிரிலும் காசிதாத்தாவுக்கு முகம் வேர்த்துதான் போயிருந்தது. சீக்கிரம் பொண்ணு வீட்டுக்கு போவனும். இன்னொருபுறம் கண்டக்டர் கொடுக்குற நாலணா இருந்தாதான் அந்தாண்ட பஸ்ஸ புடிக்க முடியும். என்கிட்ட காசு இல்ல… அந்த நாலணா சில்லரை எனக்கு வேணும்முன்னு எப்படி கேட்குறது. வயசும் ஒத்துக்கல. கௌரவம் வேற தடுக்குது. ஆனா கேட்கனுமுன்னுதான் காசிதாத்தா கண்டக்டர்கிட்ட போறார். அதுக்குள்ள அவர் இறங்குற இடமும் வந்திருச்சு.

“எல்லாரும் இறங்குங்க… எல்லாரும் இறங்குங்க… ”

கொட்டுற மழையில் படியிலிருந்து ஏறிய ஒருவரை, “யோவ் நில்லுய்யா… இறங்கட்டும். அப்புறம் ஏறிக்குவ… இறங்குய்யா…” ஆனால் அடிக்கிற மழையில அவர் கண்டக்டர் சொன்னத காதுலயே வாங்கிக்கல… அடிச்சு புடிச்சு பஸ்சுல ஏறிக்கிட்டார்.

“கண்டக்டர் தம்பி என்னோட பாக்கி நாலணா சில்லரையை கொடுப்பா.. என்னோட இடம் வந்திருச்சு…”

“யோவ் என்னய்யா உன்னோட ரொம்ப ரோதனையா போச்சு… வயசான காலத்துல என் உயிர வாங்கவே வரீங்களா!” என்று பையைப் பார்த்துவிட்டு என்கிட்ட நாலணா சில்லரையே இல்ல. அப்புறம் வாங்கிக்கோ… இப்ப கீழ இறங்கு” டிரைவர் ஹார்ன் அடித்துக்கொண்டிருந்தான்.

“என்ன அப்பறம் வாங்கிக்கிறதா…. எனக்கு இப்பவே வேணும்”

“ஐயோ நாலணா இல்லையன்னா எப்படி ஊருக்கு போறது. முழிக்கிறார் காசி தாத்தா.

“தரமுடியாது… கீழ இறங்குய்யா…”

“சில்லரைய வாங்காம நான் இந்த இடத்த விட்டு இறங்கமாட்டேன்”

“என்னய்யா போராட்டம் பன்றியா? உன்ன என்ன பன்றன் பாரு” என்று காசி தாத்தாவின் கையைப் பிடித்து பேருந்தில் இருந்து இறக்க முயற்சித்துக்கொண்டிருந்தான் கண்டக்டர்.

“ஏப்பா… அவரோட காச கொடுத்தின்னா அவரே இறங்கிடுவாருல்ல” என்று பஸ் கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுத்தார்.

“உனக்கென்ன… உங்க வேலைய மட்டும் பாருங்க… எல்லாம் எனக்கு தெரியும்!

மீண்டும் வலுக்கட்டாயமாக காசிதாத்தாவை வெளியே தள்ள முயன்றான். முடிந்தவரை தம்கட்டிப்பார்த்தார். முடியவில்லை… ஓய்ந்து போனார். படிக்கட்டில் கால் வைத்தவரை கண்டக்டர் ஒரு தள்ளுதள்ளினான். கால் வழுக்கியது. கையில் வைத்திருந்த சில்லரை சிதறியது. பை ஒரு பக்கமாக பறந்தது. நேராக மழைத் தண்ணீர் தேங்கியிருந்த குட்டையில் தலைக்குப்புற விழுந்தார். மழை துளியானது அவரை விழுங்கியது. மனதில் தோன்றிய எண்ணப் போராட்டங்களைக் கண்ணீரோடு சேற்றால் அப்பியிருந்தது. பேருந்து கண்டக்டரின் விசிலுக்கு முன்னே நகர்ந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *