கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 18, 2021
பார்வையிட்டோர்: 5,628 
 

பக்கத்திலிருந்த வங்கிக்குப் போகலாமென்று கிளம்பினார் ராமதுரை.

ஒன்பது மணிக்கே நல்ல வெயில் வந்து விட்டது. குடை எடுத்துக் கொண்டு போவதென்பது அவர் வாழ்க்கையிலேயே செய்திராத ஒரு செயல். அவருக்கு மறதி அதிகம் என்பது இதற்கு ஒரு காரணம் என்றாலும், இதை விட முக்கியமான காரணம், குடையை அவர் நடுத்தர வகுப்பு பாதுகாப்பு உணர்வின் ஓர் அடையாளமாகப் பார்த்ததுதான். பார்வதி, இருந்தபோது, கோபத்துடன் சொல்வாள், ‘ஆமா… நடுத்தர வகுப்பு, ஃபிலிஸ்டின் அது இதுன்னு சொல்லிண்டு நாம என்ன பெரிசா சாதிச்சுட்டோம்? நான் ஒருத்தி இல்லாட்டா, என்ன பண்ணி இருப்பேளோ!’

அவள் இல்லை; அவரே வங்கிக்குப் போக வேண்டியிருக்கிறது!

வாசலில் அவருடைய பேத்தி அபூர்வா தனக்குத்தானே பேசியவாறு, நின்று கொண்டிருந்தாள். எட்டே முக்காலுக்கே அவள் அப்பாவுடன் பள்ளிக் கூடம் போகக் கிளம்பியவள் ஏன் இன்னும் போகவில்லை ?

அவள் அப்பா எங்கே?

“வெயில்லே எங்கே கிளம்பினேள், தாத்தா?” என்றாள் அபூர்வா .

நாலு வயதாகவில்லை , அதற்குள் பாட்டி மாதிரி பேசத் தொடங்கி விட்டாள் அவள்.

“நீ பள்ளிக் கூடம் போகலே…?”

“கார் கோவமா இருக்கு… வர மாட்டேங்கிறது. அப்பா அதெ கொஞ்சிண்டிருக்கா!”

“நீ அதுக்காக ‘ஸ்பாட்டி’யைக் கொஞ்சிண்டிருக்கியா?” “கொஞ்சலே. அதுக்குக் கதை சொல்லிண்டிருக்கேன்.”

‘ஸ்பாட்டி, ‘ ஒரு நாய் பொம்மை. அது, அவள் உடம்பு அவயங்களில் ஒன்று போல் ஆகிவிட்டது. அவளை விட்டு அது பிரிந்ததேயில்லை. தூங்கும் போது கூட அதைக் கட்டிக் கொண்டு படுப்பதுதான் அவள் வழக்கம்.

“என்ன கதை?” “உங்களுக்கெல்லாம் புரியாது; இல்லையா, ஸ்பாட்டி…?”

‘ஆமாம்’, என்று சொல்வது போல், அவளே அதன் தலையை ஆட்டினாள்.

”ஸ்கூட்டர்லேதான் போகணும், கார் கிளம்பலே… வா, முன்னாலே நில்லு” என்று சொல்லிக் கொண்டே அபூர்வாவின் அப்பா அவளருகில் ஸ்கூட்டரைக் கொண்டு நிறுத்தினான்.

ராமதுரையைப் பார்த்து அவன் கேட்டான், ”நீங்க எங்கே போகணும்?”

”பாங்க்.” |

“பணம் வாங்கணுமா, போடணுமா? என்கிட்டே கொடுங்க, நான் பள்ளிக் கூடத்திலேருந்து வரபோது…”

“பரவாயில்லே, பாங்க் பக்கத்திலே தானே இருக்கு…”

”வெயில்…?” என்று சொன்னவன், அபூர்வாவின் கையில் ஸ்பாட்டியைப் பார்த்ததும், ”அபூர்வா, ஸ்பாட்டியைத் தாத்தா கிட்டே கொடு… புஸ்தகப் பை, வாட்டர் பாட்டில், ஸ்பாட்டி, நீ அத்தனை பேரும் ஸ்கூட்டர்லே போக முடியாது” என்றான்.

அபூர்வா சிணுங்கினாள்.

“நோ… தாத்தா கிட்டே கொடு பொம்மையை” என்று அதட்டினான் அவள் அப்பா.

“அது பொம்மையில்லே” என்று சீறினாள் அபூர்வா.

“சரி… ஓகே.. ஸ்பாட்டி.. நீங்க இதை உள்ளே வச்சிட்டுப் போக முடியுமா?” என்றான் அவன் ராமதுரையிடம்.

அவர் அதை வாங்கிக் கொண்டார்.

“தாத்தா… ஜாக்கிரதை… ஸ்பாட்டி உங்களை ஏமாத்திட்டு எங்கேயாவது ஓடிப் போயிடும், என்ன சரியா?” என்றாள் அபூர்வா.

அவர் புன்னகை செய்தார். ஸ்கூட்டர் போய் விட்டது.

ஸ்பாட்டியை உள்ளே கொண்டு போய் வைத்துவிட்டு வங்கிக்குப் போவதா, இல்லாவிட்டால், வங்கி பக்கத்தில்தானே இருக்கிறது, கையில் கொண்டு போனால் என்ன என்று அவர் யோசித்தார்.

அவர் வீட்டுச்சாவியை எடுத்துக் கொண்டு வர மறந்து விட்டார். மணி அடித்தாக வேண்டும். அவர் மகள் குளித்துக் கொண்டிருக்க கூடும். அவர் சாவியை எடுத்துக் கொண்டு போக மறந்தது, ஒரு சிறிய விவாதத்துக்குரிய பிரச்னை ஆகும்.

ஒரு கிழவர் கையில் நாய் பொம்மையுடன் தெருவில் போவது, பார்க்கின்றவர்களுக்கு வியப்பைத் தரலாம், ஆனால் யாருக்கு நேரம் இருக்கின்றது இதைப் பற்றியெல்லாம் யோசிக்க?

எங்கு பார்த்தாலும் பள்ளம் தோண்டி வைத்திருக்கிறார்கள். கவனமாகப் போக வேண்டும்.

‘ஸ்பாட்டி, நீதான் என்னை அழைத்துக் கொண்டு போக வேண்டும்’ என்று அவர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். அபூர்வாவுக்கும் அவருக்கும் இது ஒரு முக்கியமான விளையாட்டு, ஸ்பாட்டி பேசுவது போல் அவர் பேசியாக வேண்டுமென்பது அபூர்வாவின் கட்டளை. ஸ்பாட்டி குட்டி நாய் என்பதால் அவர் குட்டிக் குரலில் பேச வேண்டுமென்பதும் ஒரு முக்கியமான நிபந்தனை. அபூர்வாவுடன் விளையாடி விளையாடி ஸ்பாட்டி பொம்மை என்பதை அவரும் சில சமயங்களில் மறந்து விடுவதுண்டு.

“தாத்தா, பள்ளம்” என்று ஸ்பாட்டி கூறியது. அவர் கவனமாக ஒதுங்கினார். எதிரே வந்த ஐயர் அவரைப் பார்த்துப் புன்னகை செய்தார். ஐயர் எதிர்த்த வீட்டுக்காரர். ராமதுரை வயதுதான் இருக்கும். ராமதுரை அவரைப் பார்த்ததும், “சௌக்கியமா?” என்றார்.

“தாங்க் காட்… இப்பொ சரியாயிடுத்து,” என்றார் ஐயர் புன்னகையுடன்.

“என்ன சரியாயிடுத்து?”

“ஏதோ கீச்சுக் குரல்லே பேசிண்டு வந்தேளே, எனக்கு பயமா போச்சு, உங்க குரலுக்கு என்ன ஆச்சுன்னு.”

நான் பேசவில்லை, ஸ்பாட்டி பேசிற்று என்று சொல்லலாமா என்று ஒரு கணம் யோசித்தவர், அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.

“பேத்தியோட பொம்மையா?”

”ஆமாம்…’ என்று சொல்லிக் கொண்டே அவர் மேலே நடந்தார்.

வங்கியில் நல்ல கூட்டம். பவர் கட். ஜெனரேட்டர் உதவியில் மங்கலான வெளிச்சம். ஓரிரண்டு மின் விசிறிகள், ஓடிக்ெ காண்டிருந்தன. புழுக்கம் தாங்க முடியவில்லை .

ராமதுரை, செக்கைக் கொடுத்து, டோக்கன் வாங்கிக் கொண்டு, ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார்.

காஷியர் கௌன்டரில் இருந்த பெண் அவரிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தாள் என்பது அவருக்குத் தெரியும். டோக்கனைக் கொடுத்து விட்டு, அவரால் பணத்தை வாங்கிக் கொண்டு போக முடியும். ஆனால் இத்தனைப் பேர் காத்துக் கொண்டிருக்கும் போது, அப்படிச் செய்வது அவருக்கு உசிதமாகப் படவில்லை .

சிறிது நேரம் காத்திருந்த பிறகுதான் அவருக்கு உறைத்தது, மின்சார வெட்டின் காரணமாக, டோக்கன் நம்பர், சிவப்பு வண்ணத்தில் ஒளிராது என்று கௌன்டருக்குப் போய்தான் கேட்டாக வேண்டும். கேட்டால், அந்தப் பெண் அவர் முறை வந்ததோ இல்லையோ, டோக்கனை வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்து விடுவாள். அவருக்கு இதனால் மனச்சாட்சித் தொந்தரவு அவ்வளவாக இருக்காது.

அவர் போய் கௌன்டர் எதிரே நின்றார். அந்தப் பெண் புன்னகையுடன், கையை நீட்டினாள்.

வங்கியிலிருந்து வெளியே வந்ததும், தாம் செய்தது சரியாதப்பா என்ற சந்தேகம் அவரை அரிக்கத் தொடங்கியது. அவருக்கு முன் வந்தவர்கள், அக் கூட்டத்தில் பலர், நிச்சயம் இருந்திருக்கக் கூடும். மின்சாரம் இல்லை என்று சமாதானப்படுத்திக் கொண்டு அவர் தம் மனச்சாட்சியை ஏமாற்றி விட்டார்.

‘ஸ்பாட்டி… நான் செஞ்சது சரியா?”

பள்ளத்தருகே அவர் திடுக்கிட்டு நின்றார். கேள்வி அநாதையாய் நின்றது. ஸ்பாட்டி எங்கே?

வங்கியிலிருந்த போது, தம் கையில் தானே இருந்தது? இருந்ததா? |

செக்கில் கையெழுத்திட்டு கொடுத்த போது, அந்த கௌன்டரருகே, பக்கத்தில் எங்காவது வைத்திருக்க வேண்டும்.

பிறகு, மின்சார வெட்டு, புழுக்கம், மனச்சாட்சிப் பிரச்னை, இவை பற்றிய மனச் சலனங்களிலே ஸ்பாட்டியைப் பற்றிய நினைவு இல்லாமலேயே போய்விட்டது!

ராமதுரை திரும்ப வங்கிக்குள் நுழைந்தார். சேவிங்ஸ் கௌன்டர் அருகே சென்று பார்த்தார். ஸ்பாட்டி இல்லை.

“என்ன சார் வேணும்?” என்றான் கௌன்டரில் உட்கார்ந்திருந்த கண்ணாடி போட்ட இளைஞன்.

“ஸ்பாட்டி…” “என்ன து?”

”ஐ ஆம் ஸாரி… ஒரு நாய் பொம்மை கொண்டு வந்தேன்” இங்கே வச்சேனா?”

அவன் எழுந்து நின்று பார்வையை இரண்டு, பக்கத்திலும் செலுத்திப் பார்த்து விட்டு, “இல்லியே சார்…’ என்று குரலில் அக்கறை தொனிக்கச் சொன்னான்.

அவர் தாம் உட்கார்ந்திருந்த நாற்காலி அருகே சென்றார்.

அடர்த்தியான மீசையுடன் ஆஜானுபாகுவாக ஒருவன் உட்கார்ந்திருந்தான், அவர் சற்று முன்பு அமர்ந்திருந்த நாற்காலியில். அவன் வியாபாரி என்று தோன்றிற்று. அவன் மடியில் தடிமனான தோல்பை இருந்தது. அதற்குள் நிறைய கரன்ஸி நோட்டுகள் இருக்கலாமென்று அவருக்குத் தோன்றிற்று. அவன் கையில் வைத்திருந்த கால்குலேட்டரில் ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான்.

அவன் அவரை ஏறிட்டு நோக்கினான்.

“ஐ ஆம் ஸாரி… இங்கே ஏதாவது ஒரு நாய் பொம்மை பாத்தீங்களா?” என்றார் ராமதுரை.

“வாட்…?” மிகக் கடுமையான, அனுதாபம் சிறிதும் இல்லாத கரகரத்த குரல்.

அவர் தமது கேள்வியை மறுபடியும் கேட்கவில்லை .

“என்ன பொம்மையா? இல்லியே சார்…” என்றான் அவனருகில் உட்கார்ந்திருந்த ஓர் இளைஞன்.

அவன் வெகு நேரமாக அங்கு உட்கார்ந்திருக்கிறான் என்று அவருக்குப் பட்டது. அவர் உட்கார்ந்திருந்த போதும் அவன் உட்கார்ந்திருக்க வேண்டும். தம் முறை வருவதற்கு முன்பே அவர் பணத்தை வாங்கிக் கொண்டு போனதை அவன் பார்த்திருக்கக் கூடும்.

“ஐ ஆம் ஸாரி ‘ என்று சொல்லி விட்டு, அவர் வங்கியை விட்டு வெளியே வந்தார்.

ஸ்பாட்டி, அபூர்வா, அவர் – மூவரையும் பிணைத்து ஒரு பிரபஞ்சமே இயங்கிக் கொண்டிருந்தது.

இப்பொழுது ஸ்பாட்டி இல்லை…

அபூர்வாவை அவரால் எந்த முகத்துடன் இனி பார்க்க முடியும்? அவளிடமிருக்கும் மற்றைய பொம்மைகள் எல்லாமே, ஸ்பாட்டி யுடன் தொடர்பு கொண்ட நிலையில்தான் அர்த்தம் கொண்டிருந்தன.

பொம்மை ஃபோன், ஒலிக்கும். அபூர்வா அதை எடுப்பாள். ‘எஸ்… யார் வேணும்? ஸ்பாட்டியா? ஸ்பாட்டி… பிஸியா இருக்கு. நோ… அப்புறம் பேசு…’ ஃபோனைக் கீழே வைத்து விடுவாள்.

அவர் அவளுக்குச் சொல்லுகின்ற கதைகள் எல்லாவற்றையுமே, அவள் நாடகமாக ஆக்கி விளையாடுவாள்.

‘பார்பி பொம்மைதான் சீதை… போலீஸ்காரர் பொம்மை, இராவணன். கொரில்லா பொம்மை, ஹனுமான். ஸ்பாட்டிதான் ராமன். கொரில்லா, ஸ்பாட்டியின் காலில் விழுந்து வணங்கும், ஸ்பாட்டி போலீஸ்காரனுடன் சண்டை போட்டு பார்பியை மீட்டு வரும்.

“லுக்… ஸ்பாட்டி ஒரு நாய் அதைப் போய் ராமன்னு சொல்லிண்டு அவ விளையாடறா, பார்த்திண்டிருக்கேளே அப்பா …?” என்பாள் அவர் மகள்.

“எந்த உருவம் நமக்குப் பிடிச்சிருக்கோ , அதுதான் பகவானோட உருவம்னு திருவாய் மொழியிலே சொல்லியிருக்கு. உகந்த உருவம் அவன் உருவம்! பகவத் கீதையிலே…”

“போறும்… போறும்…” என்று காதைப் பொத்தியவாறு சிரித்துக் கொண்டே போய்விடுவாள் அவர் மகள்.

கதை மூலத்தை அப்படியே நாடக மாக்க வேண்டுமென்ற அவசியத்தையும் ஒரு நிர்ப்பந்தமாக அபூர்வா எல்லாச் சமயங்களிலும் கொள்வதில்லை. அவளுடைய மூடுக்குத் தகுந்தபடி கதைப்போக்கு மாறுவதுமுண்டு. ராமாயணக் கதையில், கார்ட்டூன் நெட்வொர்க் கதாபாத்திரங்களையும் இணைத்து, கதையை ஒரு ‘போஸ்ட் மாடர்ன் இலக்கியமாகவும் அவள் மாற்றி விடுவாள். ஆனால் எந்தக் கதையாக இருந்தாலும், சரி, எந்த வடிவத்தில் சொல்லப்பட்டாலும் சரி, கதையின் கதாநாயகன் ஸ்பாட்டி! ஸ்பாட்டிக்குப் பூனையைக் கண்டால், பிடிக்காது என்ற ஒரே காரணத்துக்காக, பார்பி பொம்மைக்குப் பதிலாக, போலீஸ்காரன் பொம்மை, ஒரு பெரிய பூனை பொம்மையை எடுத்துக் கொண்டு போன போது, ஸ்பாட்டி, ‘சீதையை மீட்டு வரப் போகவேயில்லை. அவளுடைய எல்லா விளையாட்டுகளிலும், போலீஸ்காரர் பொம்மைதான் வில்லன். பிற்காலத்தில் தீவிர வாதியாக அவள் மாறக் கூடுமென்று ராமனுக்கு தோன்றிற்று. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத கதாபாத்திரங்களை மனம் போனபடி ஒன்றிணைத்து அவள் விளையாடுவது, அவளை பின்னொரு காலத்திலே ஒரு பெரிய ‘போஸ்ட் மாடர்னிஸ்ட்.” எழுத்தாளராக அடையாளம் காட்டியது.

“சாமி பாத்துப் போங்க, பள்ளம்” என்றாள் சென்னை வீதியை அலங்கரித்துக் கொண்டிருந்த ஓர் இளம் பெண் தொழிலாளி.

‘கீச்சுக் குரலில் எச்சரிக்க ஸ்பாட்டி இல்லை ; இது அவருக்கு ஒரு பெரிய இழப்பாகத் தோன்றியது.

இதுதான் யதார்த்த உலகம். ஒன்றை இழந்து, மற்றொன்றைப் பெற வேண்டும்.

அவர் வீட்டுக்குச் சென்று மணியை அடித்தார்.

கதவைத் திறந்த அவர் மகள் கேட்டாள், “வழக்கம் போல, சாவியை மறந்துட்டேனா?”

சாவி மட்டுமில்லை என்று அவர் சொல்ல நினைத்தார். ஆனால் சொல்லவில்லை. பேசாமல் போய் சோபாவில் உட்கார்ந்தார்.

அவர் மகள் விசிறியைப் போட்டாள்.

“எதுக்காக இந்த வெயில்லே போனேள்? வயசை ஒப்புத்துக்க மாட்டேன்னு என்ன அவ்வளவு பிடிவாதம்? எங்கே பாத்தாலும், பள்ளத்தை வேற தோண்டி வச்சிருக்கான்…” என்று சொல்லிக் கொண்டே அவள் உள்ளே போனாள்.

ஹாலில், ஒரு மேஜையில் அபூர்வா அடுக்கி வைத்திருந்த எல்லா பொம்மைகளும் அவரைப் பார்த்து ‘ஸ்பாட்டி எங்கே?’ என்று கேட்பது போல் அவருக்குப்பட்டது.

போலீஸ்காரன் பொம்மை, மன நிம்மதியுடன் புன்னகை செய்வது போல் இருந்தது.

‘வில்லன் யாரு, நீயா, நானா? ஸ்பாட்டியைத் தொலைச்சது யாரு?’ என்று கேட்டது அந்த போலீஸ்காரன் பொம்மை புன்னகை யுடன்.

வங்கியில் பொம்மையைத் திருடுவார்களா? பணத்தைக் கொள்ளையடித்தால் அது ஓர் இயல்பான விஷயம். ஸ்பாட்டியை அதுவும் அதிகமான புழக்கத்தின் காரணமாக, வெள்ளை நிறம் பழப்பேறி இருந்த ஒரு பழைய பொம்மையை யார் எடுத்துக் கொண்டு போயிருக்க முடியும்?

ஸ்பாட்டியை வேறு யாரும் குளிப்பாட்டக் கூடாது; அபூர்வாதான் அதை ஒரு வாளி தண்ணீரில் போட்டு முழுக்காட்டி எடுப்பாள். அபூர்வாவுக்கு சோப் பிடிக்காது என்பதால், அவளுடைய ஸ்பாட்டி விஷயத்தில், அவளுடைய விருப்பு, வெறுப்புகள்தாம் மேல் வரிச்சட்டமாக இருக்க வேண்டுமென்பது அவள் வாதம்.

‘நீ என்னோட அம்மா, நீ சொல்ற படி நான் கேட்டாகணும். நான் ஸ்பாட்டியோட அம்மா, நான் சொல்ற படிதான் ஸ்பாட்டி கேட்டாகணும்’ – குட் லாஜிக்.

‘கேட்டாகணும்’ என்று அவள் சொல்லும்போது, ஒரு புரட்சி வாதியின் தொனியும், ஒரு சர்வாதிகாரியின் தொனியும் ஒரே சமயத்தில் ஒலிப்பது போல் அவருக்குத் தோன்றும். அம்மா சொல்கிறபடி அவள் ‘கேட்டாகணும் எனும் போது, அதை அடிமனத்தில் ஏற்றுக் கொள்ள மறுக்கிற ஒரு புரட்சி வாதியின் குரல். ஸ்பாட்டி, அவள் சொல்கிறபடி ‘கேட்டாகணும்’ எனும் போது, அதிகாரம் கை மாறிய நிலையில் புரட்சிவாதியே சர்வாதிகாரியாக | மாறி விட்ட தோற்றம்.

பிஞ்சுக் கைகளினால் குளிப்பாட்டப் படும் காரணத்தினால், ஸ்பாட்டி, அதனுடைய இயல்பான வெள்ளை நிறத்தை மீண்டும் பெறவேயில்லை.

‘இந்த அழுக்கு பொம்மையை பள்ளிக் கூடத்துக்கு எடுத்திண்டு போகாதே… எனக்கு வெட்கமா இருக்கு!’ என்பாள் அவள் அம்மா.

‘அது பொம்மை இல்லே…’ அபூர்வாவின் குரல் ஓங்கி ஒலிக்கும்.

உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்டே உன் கௌரவந்தான் முக்கியமான விஷயமா, குழந்தையோட ‘சென்டிமென்ட்டுக்கு, ஏன் மதிப்பு கொடுக்க மாட்டேங்கிறே…?’ என்பார் ராமதுரை.

‘என்ன சென்டிமெண்ட் வேண்டியிருக்கு? ஸ்மெல்லி லிட்டில் டாக்!’ என்பாள் அவர் மகள் புன்னகையுடன்.

‘ஸ்மெல்லி லிட்டில் டாக்’ எனிட் ப்ளைட்டன் எழுதிய கதைகளில் ஒன்று. அக்கதையில் அந்த நாய்தான் குழந்தையையும் அதன் பொம்மையையும் தண்ணீரில் மூழ்காமல் காப்பாற்றும்.

அபூர்வா வெற்றி எக்களிப்புடன் இந்தச் செய்தியை எடுத்துக் கூறி இருகைகளையும் தட்டிச் சிரிப்பாள். உடனே ஸ்பாட்டியை எடுத்துத் தழுவி முத்தம் தருவாள்.

யாதார்த்தம் இதுதான். அந்த ஸ்பாட்டி இப்பொழுது இல்லை. பள்ளிக் கூடத்திலிருந்து வந்ததும், அபூர்வா கேட்கப் போகிற முதல் கேள்வி, ‘தாத்தா ஸ்பாட்டி சமத்தா இருந்ததா?’

அவளுக்கு என்ன பதில் சொல்வது? அப்பொழுதுதான் அவருக்கு திடீரென்று நினைவுக்கு வந்தது. அவருடைய நண்பர் ஒருவர் வீட்டிலே ஸ்பாட்டியைப் போலவே ஒரு பொம்மை இருந்தது என்பது… யார் அவர்?

எஸ்… சிவராம ஐயர். அபிராமபுரத்திலே இருக்கிறார். பக்கத்தில்தான். ஆட்டோவில் போய் வந்து விடலாம். அவருடைய பேத்தியின் பொம்மையாக இருக்கக் கூடும். பேத்திக்கு இப்பொழுது பத்து வயது. |

அந்த பொம்மையை வைத்துக் கொண்டு விளையாடும் நிலையைத் தாண்டிய வயது.

ஃபோனில் பேசிவிட்டுப் போகலாமென்று ஃபோனருகே சென்றவர் அந்த யோசனையைக் கை விட்டார்.

அவர் மகளுக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால், ‘இதென்ன பைத்தியக்காரத் தனம்?’ என்று கிண்டல் செய்வாள்.

அவர் மகளைக் கூப்பிட்டார். “என்னப்பா?” என்று உள்ளிருந்து கேட்டாள் அவர் மகள்.

“வந்து… நான் சிவராம அய்யர் வீட்டுக்குப் போய்விட்டு உடனே வந்துடுவேன்…”
“இந்த வெயில்லியா?”

“ஒரு புஸ்தகம் வேணும் முக்கியமா… நான் சாவியை எடுத்துண்டு போறேன்.”

அவர் பதிலுக்குக் காத்திருக்கவில்லை , கதவைச் சாத்திக் கொண்டு புறப்பட்டார்.

“என்ன ராமதுரை, இந்த வெயில்லே?” என்றார் சிவராம ஐயர்.

ராமதுரை சோபாவில் உட்கார்ந்தார். வியர்வையை கைக்குட்டையினால் துடைத்துக் கொண்டே சுற்று முற்றும் பார்த்தார்.

“நானே உங்களப் பார்க்கச் சாயங்காலம் வரலாம்னுருந்தேன்” என்றார் சிவராம ஐயர்.

“என்ன விஷயம்?”

“யோக வாசிஷ்டாவிலே…”

“யோக வாஷிடா’ இருக்கட்டும். நான் எதுக்காக வந்தேன்னு முதல்லே சொல்லிடறேன்.”

“என்ன ?”

“உங்க வீட்டுல ‘டால்மேஷியன் பப்பி’ பொம்மை ஒன்று இருந்தது, நான் பாத்திருக்கேன்… அது எனக்கு வேணும்.”

சிவராம ஐயர் அவரை ஏற இறங்கப்பார்த்தார். “எனக்குன்னா எனக்கு இல்லே … என் பேத்தி அபூர்வாவுக்கு…”

“அது ரொம்பப் பழசுன்னா… ரமா சின்னக் குழந்தையா இருக்கச்சே விளையாடின பொம்மை… புதுசா கிடைக்கிறதே, என்னோட ‘கிஃப்டா’ வாங்கித் தரட்டுமா”

“புதுசு என்னாலே வாங்கிக்க முடியும். ஆனா அவளோட பொம்மையை நான் தொலைச்சுட்டேன். அதே பழசா இருக்கிற மாதிரி, ஒண்ணாலே ‘ரீப்ளேஸ்’ பண்ணா , அவளுக்குத் தெரியாது…”

“பொம்மையிலே என்ன வந்தது?”

“அபூர்வாவைப் பொருத்த வரைக்கும், அவளோட ஸ்பாட்டி, அதான் அந்த நாய் பொம்மை, அவளுக்கு ஒரு உயிருள்ள சிநேகிதன். அவளோட ஆல்டர் ஈகோ. நான் தொலைச்சுட்டேன்னு தெரிஞ்சா, அவளுடைய உலகமே ஸ்தம்பிச்சு போகும்… அந்த சென்டிமென்டை நீங்க புரிஞ்சுக்கணும்.”

“வாட் கிராப்?” என்றார் சிவராம ஐயர் சிரித்துக் கொண்டே .

“இதான் ப்ராப்ளம், யோக வாசிஷ்டா படிக்கிறவா கிட்ட, ஸ்பிரிட் சுவல் ரோபாட்ஸ்… சரி அந்த பொம்மை இருக்கா, இல்லையா சொல்லுங்கோ…”

“அதான் ரமாவோட ரூம்… அங்கே போய் அந்த பொம்மை இருக்கா பாருங்க…” என்றார் சிவராம ஐயர் ஓர் ஏமாற்ற உணர்வுடன்.

பத்து நிமிஷத் தேடலுக்குப் பிறகு அந்த பொம்மை கிடைத்தது.

ஸ்பாட்டி மாதிரியே இருந்தது. கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியவில்லை .

“யுரேக்கா” என்று கத்திக் கொண்டே ராமதுரை அந்த பொம்மையைக் கையில் எடுத்துக் கொண்டு வந்தார்.

“யு ஆர் பிகமிங் செனைல்…” என்றார் சிவராம ஐயர்.

“யதார்த்தம் என்னை இன்னும் கெடுத்துடலே… என் குழந்தைப் பருவம் என்னோட இன்னும் ஒட்டிண்டிருக்கு… அதனால்தான், என்னாலே, யோக வாசிஷ்டாவும் படிக்க முடியும், ஆலிஸ் இன் வொண்டர்லான்டையும் ரசிக்க முடியும். ஓகே… நான் அப்புறம் வரேன், ஆட்டோகாத்திண்டிருக்கு…”

ராமதுரை வீட்டுக்குப் போனபோது, நல்ல வேளை, அவள் மகள் ஹாலில் இல்லை . புஸ்தகம் வாங்கப் போவதாகச் சொன்னவர், கையில் ஸ்பாட்டியுடன் வருவது அவளுக்கு ஆச்சர்யத்தைத் தந்திருக்கக் கூடும்.

அவர், அந்தப் பொம்மையை உற்றுப் பார்த்தார். ஸ்பாட்டிக்கும் அதற்கும் எந்த வித்தியாசமுமில்லை. அதே அழுக்கடைந்த பழுப்பு நிறம். கண்களில் தீட்சண்யம், வாலில் பிடிவாதமாக ஒட்டிக் கொண்டிருந்த கறை.

‘ஸ்பாட்டி’யினுடைய ‘க்ளோன்’ போல் அது தெரிந்தது. இது எப்படி சாத்தியம்?

அல்லது, அவர் அதை ஸ்பாட்டியாகப் பார்க்க வேண்டுமென்ற தீவிர உணர்வினால் அது அப்படி தெரிகின்றதா?

அவர் மகள் அப்பொழுது அங்கு வந்தாள். “என்ன, அவள் ஸ்பாட்டியை எடுத்துண்டு போகலியா?”

“இல்லே… அவாகார்லே போகலே. ஸ்கூட்டர்லே போறபோது எடுத்துண்டு வரக் கூடாதுன்னு அவளோட அப்பா, சொல்லிட்டார்.”

அவள் ‘ஸ்பாட்டி’ என்று குறிப்பிட்டது அவருக்கு நிம்மதியைத் தந்தது. இது தன்னுடைய பிரமை இல்லை, இது ஸ்பாட்டிதான்.

அப்பொழுது வாசல் மணி ஒலித்தது.

அவர் மகள் திறந்தாள்.

“தாத்தா… ஸ்பாட்டி எங்கே?” என்று கேட்டுக் கொண்டே வந்த அபூர்வா அவர் கையிலிருந்த பொம்மையை வாங்கிக் கொண்டு முகத்துடன் இணைத்து வைத்துக் கொண்டாள்.

அவள் திடீரென்று அழ ஆரம்பித்தாள். “எதுக்காக அழறே?” என்றாள் அவள் அம்மா.

“இது ஸ்பாட்டி இல்லே. இது என்னோட பேச மாட்டேங்கிறது” என்று கேவினாள் குழந்தை.

ராமதுரைக்கு உலகம் ஸ்தம்பித்து நின்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *