நான் பீச்சுக்குப் போகணும்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 11,156 
 
 

நீனி ஸ்கூலிலிருந்து வருவதற்காக நான் காத்திருக்கிறேன். பெரிய நீல நிற கேட்டும் பெரிய மரமும் இருக்கும் அந்த ஸ்கூலில் அவள் இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். சுவற்றில் கலர் கலராய் பறவைகளின் படங்களும் மிருகங்களின் படங்களும் வரைந்திருக்கும்.

நீனி வந்ததும், அவள் தன் ஸ்கூல் பையை மேஜை மேல் வைப்பாள். பிறகு ஷூவையும் ஸாக்ஸையும் கழற்றுவாள். வாஷ்பேஸினுக்குப் போய் கையைக் கழுவிக்கொள்வாள். அப்புறம் அதோ அந்த குட்டி சேரில் அவள் உட்கார, நாங்கள் இருவரும் பிஸ்கட்டும் பாலும் சாப்பிடுவோம். சாப்பிட்டு முடித்ததும், இரண்டு பேரும் வெளியே விளையாடப் போய்விடுவோம்.

நேற்று நாங்கள் பக்கத்திலிருக்கும் பார்க்குக்குச் சென்றோம். நீனியும் நானும் அவளுடைய ஆரஞ்சு-கறுப்புப் பந்தை தூக்கிப்போட்டு விளையாடினோம். நிறைய சிறுவர்களும் குழந்தைகளும் கூட விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரே சப்தமாக இருந்தது, கும்பலாகவும் இருந்தது. நாங்கள் இருவரும் வெகுநேரம் ஜாலியாக விளையாடினோம்.

இன்று நீனி என்னை பீச்சுக்குக் கூட்டிக்கொண்டு போனால் நன்றாக இருக்கும். பீச்சில் ரொம்ப சப்தம் இருக்காது. நன்றாக காற்று வீசும். அதோடு இஷ்டப்படி ஓடி விளையாட நிறைய இடம் இருக்கும். நீனி வந்தவுடன் அவளிடம் கேட்க வேண்டும், இன்று பீச்சுக்குப் போகலாமா என்று.

இதோ, ஸ்கூல் வேன் வந்துவிட்டது. வேனிலிருந்து குதித்து இறங்கி. கொஞ்சம் சோர்வாக நடந்து வரும் நீனி, என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் பெரிதாய்ச் சிரிக்கிறாள். நானும் அவளை நோக்கிப் போகிறேன்.

பையை மேஜை மேல் வைத்துவிட்டு, ஷூ-ஸாக்ஸைக் கழற்றிவிட்டு, கைகளை கழுவிக்கொண்டு, அந்த குட்டிச் சேரில் நீனி உட்கார்ந்ததும் நாங்கள் இருவரும் பிஸ்கட்டும் பாலும் சாப்பிடுகிறோம்.

சாப்பிட்டாயிற்று. நான் நீனியையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவள் என் அருகில் வந்து என்னைப் பார்த்து, என் மனதைப் படித்தது போல், “டேய்! இன்னைக்கு நாம பீச்சுக்குப் போகலாமா, வெளையாட?” என்கிறாள்.

தலைகால் தெரியாத சந்தோஷத்தில் வெகு வேகமாய் வாலை ஆட்டிக்கொண்டே, “லொள், லொள்” என்கிறேன் நான்.

Print Friendly, PDF & Email

1 thought on “நான் பீச்சுக்குப் போகணும்!

  1. பரவாயில்லை. குமுதத்தில் வரும் ஒரு பக்க கதை போல உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *