நான் கற்று கொடுத்த தவறு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 6,484 
 
 

கதிர். விடுமுறையில் ஊருக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.நான்கு வருடங்களாக விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது ஜேம்சை சந்திக்க வேண்டும் என்று நினைப்பான். ஆனால் அவனை எப்படி சந்திப்பது என்ற தயக்கத்திலேயே விடுமுறையை கழித்து பணிக்கு சென்று விடுவான்.ஜேம்சும் இது வரை கண்ணுக்கு தட்டுப்படவே இல்லை.இந்த வருடம் அவனை பார்க்க முடியுமா? என்ற எண்ணம் இருந்தது. அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும், இந்த முறை இதற்கு வாய்ப்பு கிடைத்தால் ! மனதுக்குள் நினைத்தவன், இந்த முறை என்னவானாலும் நாமே அவனை ஏன் போய் பார்க்க கூடாது? இவ்வளவு நாள் இந்த தைரியம் வராததற்கு மனதுக்குள் வருத்தப்பட்டான்.

எதிரிபாராவிதமாக இவன் யாரை பார்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தானோ அவனே அன்று பார்க்கவந்து விட்டான். கதிரு என்று வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டான். எப்படி இருக்கே? நான் நல்லா இருக்கேன். எங்க உன்னைய பாக்கவே முடியலை? கதிரின் கேள்விக்கு ஜேம்ஸ் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு அடிக்கடி கேரளாவுக்கு போயிருவேன் வேலை விசயமா. இன்னைக்குத்தான் வீட்டுக்கு வந்தேன் ஒரு வாரம் அங்கேயே தேங்காய் ஏத்திட்டு வர்ற வேலை அதான் நீ லீவுக்கு வரும்போது எல்லாம் பாக்க முடியறதில்லை. உண்மை சொல்கிறானா, பொய் சொல்கிறானா தெரியவில்லை. நீ ரொம்ப மெலிஞ்சிட்ட ஜேம்ஸ். கதிர் வருத்தத்துடன் சொன்னவன் இப்பவும் ரொம்பவும் குடிக்கிறியா? அதெல்லாம் ஒண்ணுமில்லை, எப்பவாச்சும் குடிக்கிறேன். அதுவும் உன்னைய மாதிரி முக்கியமான ஆளுங்க கூப்பிட்டா போவேன்.

அவன் எங்கு வருகிறான் என்பதை உணர்ந்து கொண்ட கதிர், இப்பவெல்லாம் குடிக்கறதை நிறுத்திட்டேன். நம்பிக்கையில்லாமல் பார்த்தான் ஜேம்ஸ். ஏம்ப்பா மிலிட்டரியில இருக்கறே. வந்து ஒரு வாரம்தான் ஆச்சு. எப்படியும் சரக்கு இல்லாம இருக்காதே.

ஒரு வாரமாய் காணாமல் போன ஜேம்ஸ் இப்பொழுது எப்படி தன்னை பார்க்க வந்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டான் கதிர். ஊருக்குள் வந்தவுடன் நண்பர்கள் கதிர் வந்திருக்கிறான் என்று சொல்லியிருப்பார்கள். மிலிட்டரியில இருந்து வந்திருக்கான், எப்படியும் சரக்கு வச்சிருப்பான், வாங்கலாம் அப்படீன்னு நினைச்சுத்தான் வந்திருக்கான்.

ஜேம்சை இந்த நிலைக்கு தள்ளியவன் தான்தானே என்று நினைத்த கதிருக்கு மனசு வலித்தது. அப்ப சரக்கு இருக்கும்னுதான் என்னை பார்க்க வந்திருக்கே? அவனின் கேள்வியில் சற்று சுதாரித்த ஜேம்ஸ் இல்லையில்லை, அதெல்லாம் அப்படியில்லை, அவன் குரலில் இருந்த பிசிறு அவன் அதற்குத்தான் வந்திருக்கிறான் என்று சொன்னது.

வீட்டில எப்படி இருக்காங்க? பேச்சை மாற்ற நினைத்தான். ம்..நல்லாத்தான் இருக்காங்க.

குழந்தைங்க? இவனின் கேள்வி ஜேம்சுக்கு அலுப்பூட்டுவதாக இருந்தது. அவன் வந்த நோக்கமே வேறு. ஆனால் பிடி கொடுக்கமாட்டேனெங்கிறானே. ஒரு பெண் குழந்தை. நாலு வயசு ஆகுது. சரி வா ஏதாவது சாபிடலாம், என்று பக்கத்தில் இருந்த ஓட்டலுக்கு கூட்டி போனான். விருப்பமில்லாமல்தான் வந்தான் ஜேம்ஸ்.

நாயர் புன்சிரிப்புடன் கதிர் டீ போடவா? ஜேம்ஸை பார்த்து உனக்கு லைட்டா, ஸ்ட்றாங்கா? எப்படியோ கொடு சலிப்புடன் சொன்னான் ஜேம்ஸ். நாயர் மெல்ல சிரித்து அன் கதிர் இந்நேரத்துக்கு ஜேம்ஸுக்கு டீ கொடுத்தா குடிப்பானா ! நாயரின் நக்கல் கதிருக்கு புரிந்தது. ஜேம்சுக்கு புரிந்தும் புரியாதது போல அவசர அவசரமாய் நாயர் கையில் கொடுத்த டீயை குடித்தான். அவனுக்கு இங்கு ஒன்றும் பெயராது என்று தெரிந்து விட்டது.வேறு எங்காவது போயிருந்தால் ஏதாவது கிடைத்திருக்கும்.

சரி உன் வீட்டுக்கு போலாம் வா, கதிர் அழைக்கவும் திடுக்கிட்டான் ஜேம்ஸ். வீட்டுக்கா? ஆமா ஏன் நான் உன் வீட்டுக்கு வரக்கூடாதா?அதுக்கில்லை, அப்புறமா வாயேன்

வீட்டுக்கு போலாம், இப்ப எனக்கு அவசர வேலை ஒண்ணு இருக்கு, போய்ட்டு வந்து உன்னை வீட்டுகு கூட்டிட்டு போறேன். அவசரமாய் பிரிந்தான்.

நாயர் சிரித்துவிட்டு விடு கதிர், அவன் நிக்க மாட்டான். இந்நேரம் குடிச்சுட்டு ஏதாவது ரோட்டுல படுத்து உருண்டுகிட்டு இருப்பான். உன் கிட்ட வந்தா நல்ல சரக்கா கிடைக்கும்னுட்டு வந்திருக்கான். ஒண்ணும் பெயரல. அந்த கண்றாவி சரக்கை அடிக்கறதுக்கு ஓடறான் பாரு.

கதிருக்கு வருத்தமாக இருந்தது. ஜேம்ஸ் நான் இந்த ஊரைவிட்டு போகும்போது சாதாரணமாத்தான் இருந்தான். நான்தான் அவனை குடிக்கறதுக்கு கூப்பிடுவேன். ஆளை விடு, அந்த மாதிரி இடத்துக்கு என்னை கூப்பிடவே கூப்பிடாதே அப்படீன்னு வரவே மாட்டான். அப்புறம் அவன் மனசை கொஞ்சமா மாத்தி கொஞ்சம் ஊத்தி கொடுத்து பழக்கினேன். இப்ப இப்படி ஆயிட்டானே. குற்ற உணர்ச்சியில் மனசு கனத்தது. எதுவும் பேசாமல் வீட்டை நோக்கி நடந்தான்.

வீட்டுக்குள் நுழைந்தவனை வாசலிலே வரவேற்றார் அப்பா. எங்கடா போயிட்டே, உன்னைய பாக்கறதுக்கு நம்ம சொந்தக்காரங்க வந்திருக்காங்க, அவரின் கேள்விக்கு சும்மா கடை வரைக்கும் போயிட்டு வந்தேன், உள்ளே நுழைந்தவன் முன்ன்றையில் உட்காந்திருந்த தம்பதிகளை பார்த்தான். அதற்குள் அருகில் இருந்த அம்மா, இவங்க என்னோட ஒண்ணு விட்ட அண்ணாடா, நீ ஊருல இருந்து வந்திருக்கேன்னு கேள்விப்பட்டு உன்னைய பாத்துட்டு போலாமுன்னு வந்திருக்காங்க.

அம்மாவின் பதிலில் சும்மா பார்த்துட்டு போறதுக்கு வந்த்து மாதிரி தெரியலை, மனதுக்குள் நினைத்துக்கொண்டாலும் வந்தவர்களுக்கு வணக்கம் சொன்னான். அவர்கள் முகத்தில் புன்னகையுடன் அவனுக்கு வணக்கம் சொன்னார்கள். அந்த பெண் தம்பி, நாங்க சிங்காநல்லூருலதான் இருக்கோம். அடிக்கடி தண்டு மாரியம்மன் கோயில்ல எல்லாம் பாத்துக்குவோம்.அண்ணி சொன்னாங்க, நீ இந்த மாசம் லீவுல வீட்டுக்கு வருவேன்னு. அதான் உன்னைய பாத்துட்டு போலாமுன்னு வந்தோம்.

இவன் புன்னகையுடன் அவர்கள் அருகில் உட்கார்ந்து அவர்களை விசாரித்தான். அவர் சாந்தோசமாக அங்கு ஒரு மில்லில் வேலை செய்வதாகவும், ஒரு பொண்ணு, பையன் இருக்காங்க. பொண்ணு இப்ப டிகிரி முடிச்சு வீட்டுல இருக்கா, பையன் பத்தாவது படிச்சுகிட்டு இருக்கான். மள மளவென ஒப்பித்தார்கள்.அரை மணி நேரம் கழிந்து அவர்கள் கிளம்பினர்.

இவன் அவர்களை சாப்பிட்டு போகும்படி கேட்டான், தம்பி இன்னொரு நாள் விருந்தே சாப்பிடறோம், அவர்கள் சங்கேதமாய் ஏதோ சொலவதாய் இவன் மனசுக்கு பட்டது.

அவர்கள் சென்ற அரை மணி நேரம் கழித்து அப்பா மெல்ல இவனிடம் வந்து கதிர் நாம ஒரு நாள் அவங்க வீட்டுக்கு போயிட்டு வரலாம். அவனுக்கு சிரிப்பு வந்த்து. என்னப்பா அவங்க வந்துட்டு போனா நாம உடனே அவங்க வீட்டுக்கு போகணுமா? கேட்ட அவனை வித்தியாசமாய் பார்த்த அப்பா கதிரு அவங்க எதுக்கு நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்கன்னு உனக்கு தெரியுமா? அவன் ஏதோ எதிர்பார்த்து நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்கன்னு தெரியுது.

ஒண்ணுமில்லை உன்னை அவங்க பொண்ணுக்கு கட்டி வைக்கணும்னு விருப்பபடறாங்க. அதனாலதான் நம்ம வீட்டுக்கு வந்து உன்னைய பாத்துட்டு போக வந்திருக்காங்க.

ஜம்மு காஷ்மீர் பார்டரில் தற்போது வேலை செய்து கொண்டிருப்பதை நினைத்தவன்,

அப்பா, இப்ப என் கல்யாணத்துக்கு ஒண்ணும் அவசரமில்லை.நான் வேலை செய்யற இடத்தை பத்தி ஏற்கனவே உங்களுக்கு சொல்லியிருக்கேன், அங்கிருந்து வேற இடம் மாத்தும்போது கல்யாணத்தை பத்தி பேசலாம், அம்மா அங்கிருந்தே எகிறினாள். நீ பேசாம இருடா, நல்ல காரியம் பேச்சை எடுக்கும்போது அபச குனமாட்டம் எதையாவது பேசாத. ஏற்கனவே உனக்கு வயசாயிட்டு போவுது, காலா காலத்துல கல்யாணத்தை முடிச்சிருந்தா, இந்நேரம் குழந்தை ஸ்கூலுக்கு போயிட்டு இருக்கும்.

அவனுக்கும் அது கொஞ்சம் மன வேதனையை கொடுத்தது. வேலை தேடி அலைந்த காலத்தில் ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்பட்டவன்தான். இவன் விருப்பபட்ட பெண்ணைத்தான் கல்யாணம் செய்வேன் என்று ஒற்றைக்காலில் நின்றான். இவனின் பெற்றொர் ஆரம்பத்தில் சொல்லி பார்த்தனர், அது பெரிய இடம், நமக்கு தரமாட்டார்கள் என்று. இவந்தான், ஒரே ஜாதி அதனால பொண்ணு கேட்டா கண்டிப்பா கொடுத்துடுவாங்க என்று மனமாற நம்பினான். ஆனால் பெண்ணின் வீட்டார்கள் வரப்போகிறவனின் தகுதியையும் பற்றி யோசிப்பார்கள் என்பது அந்த பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாகும்போதுதான் தெரிந்தது. அந்த பெண்ணுக்கு பார்த்த பையனுக்கு நல்ல வசதியும், கூடவே படிப்பும் இருந்தது. பிறகென்ன கொஞ்ச நாள் வாழ்க்கையை வெறுத்து சுற்றினான். அப்பொழுதுதான் குடிப்பதற்கு கற்றுக்கொண்டான். ஏதோ பெரிய காதல் தோல்வி ஏற்பட்டு விட்டதாகவும் அதனால் குடித்து தன் மனதை ஆற்றிக்கொள்வதற்காக குடிக்கிறேன் என்று இவனாக மனதுக்குள் ஒரு வாதத்தை வைத்துக்கொண்டு தினமும் குடிக்க ஆரம்பித்தான். அப்பொழுதுதான் பாவம் அப்பாவியாய் இருந்த ஜோசப்புக்கும், அந்த பழக்கத்தை கற்றுக்கொடுத்தான்.

மீண்டும் ஜேம்சின் நினைவுகள் வந்து இவனை அழுத்த, சற்று வெளியே போனால் இந்த நினைவுகளில் இருந்து விடுபடலாம் என்று வெளியில் விடப்பட்டிருந்த செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினான். இவனின் கல்யாண பேச்சுக்கு எந்த பதிலும் சொல்லாமல் வெளியே செல்பவனை பார்த்து இவ்னின் அம்மா பெருமூச்சு விட்டாள். இன்னும் அந்த பெண்ணையே நினைத்துகொண்டிருக்கிறான் என்று நினைத்துக்கொண்டாள்.

வெளியே வந்து விட்டாலும், ஜேம்சின் நினைவுகள் அவனை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அன்றை நாள் நடந்தது இவனுக்கு ஞாபகம் வந்தது. அந்த பெண் தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற வெறியில் முதலில் கொஞ்சமாக ஆரம்பித்து இப்பொழுது அது இருந்தால்தான் நிம்மதியாக இருக்கமுடியும் என்ற நிலையில் இருந்தான்.

ஒரு நாள் ஜேம்சை வழியில் பார்த்தான். அவன் பொதுவாகவே அமைதியானவன். ஜேம்ஸ் என் கூட கொஞ்சம் வாயேன், இவனின் அழைப்பை ஆளை விடுப்பா என்று எப்பொழுதுமே மெல்லிய தலையாட்டல் மூலம் தள்ளி விடுபவன், அன்று அவனின் கெட்ட நேரமோ தெரியவில்லை,இவனுடன் வர சம்மதித்து வந்தான். நேராக மது பான பாருக்குள் நுழைந்தவர்கள் இருட்டான பகுதியில் போய் உட்கார்ந்து கொண்டார்கள். இவனுக்கு மட்டும் ஆர்டர் செய்தவன், ஜேம்ஸிடம் தன்னுடைய காதல் தோல்வியை பற்றி சொல்ல ஆரம்பித்தான். இதோடு எத்தனையோ முறை கேட்டு புளித்து போன இவனின் காதல் கதை மீண்டும் அந்த மதுபான பாருக்குள் இவன் வாய் வழியாக ஜேம்சின் காதுகளை இம்சை படுத்தியது. அதன் காரணமாக கூட இருந்திருக்கலாமோ, அவன் அந்த பழக்கத்தை இறுக பற்றிக்கொள்ள காரணமாயிருக்கலாம்.

நீயும் கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பாரு கதிரின் கேள்விக்கு இவன் தலையை ஆட்டி மறுப்பு தெரிவித்தவன் மீண்டும், மீண்டும் வற்புரறுத்தியதால், கொஞ்சமா கொஞ்சமா..என்று ஒரு மடக்கு குடித்தான். ஆரம்பத்தில் முகத்தில் ஆயிரம் சேஷ்டைகளை காண்பித்தவன் மீண்டும் ஒரு முறை ஒரு மடக்கு குடித்தான். அவன் முகம் சிவப்பாய் ஆனதாக இவனுக்கு நினைவு.இப்பொழுது அவனை மேலும் குடிக்க வைக்க கதிர் தன்னுடைய பங்கையும் சேர்த்து ஊற்றி கொடுத்தான். இப்பொழுது தன்னால் ஒருவனை குடிகாரனாக்கி விட்டோம் என்ற திருப்தி இவனுக்கு ஏற்பட்டது. தன்னுடைய காதல் தோல்விக்காக இவனும் குடித்தான் என்ற வீம்பும் வளர்ந்தது.

இப்பொழுது இதை நினைத்து பார்த்தவனுக்கு சிரிப்புத்தான் வந்தது. என்ன ஒரு தவறான எண்ணத்தை வைத்துக்கொண்டு பாவம் அதுவரை கட்டுப்பாடாய் இருந்தவனை குடிக்க வைத்திருக்கிறோம்.வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வரும்போது ஜேம்சை பற்றி நண்பர்கள் சொல்ல சொல்ல இவனுக்கு குற்ற உணர்ச்சி காரணமாக அவனை பார்க்காமல் தப்பித்து வந்தான். இந்த முறை ஜேம்சே தன்னை பார்க்க வந்து விட்டான். அதுவும் குடிக்க சரக்கு கிடைக்குமா என்றுதான் பார்க்க வந்திருக்கிறான்.

இப்படி யோசித்து யோசித்து நடந்து கொண்டிருந்தவன் திடீரென “இப்படி செய்தால் என்ன” என்று ஒரு தீர்மானத்தை முடிவு செய்தான். நாம், செய்த தவறை நாமே சரி செய்தால் என்ன? அவனுக்கு தன்னுடன் பணிபுரிந்து வந்த நண்பன் ஆனைமலையில் இருப்பது ஞாபகம் வந்தது. அவன்தான் தன்னையும் இராணுவத்தில் இருந்த போது குடிப்பதை மறப்பதற்கு ஒரு சில பயிற்சிகள் கொடுத்து மாற்றியவன். அவர்கள் ஊர் ஆசிரமம் ஒன்றில் இந்த பழக்கத்தை ஒழிப்பதற்கென்றே பிரத்யேகமான பயிற்சியும் உண்டு என்று கேள்விப்பட்டான். அந்த இடத்துக்கு ஜேம்சை ஏன் அழைத்து செல்ல கூடாது. எப்படியாவது இந்த லீவு முடிவதற்குள் ஜேம்சை அந்த ஆசிரமத்துக்கு அழைத்து சென்று இந்த பழக்கத்தில் இருந்து விடுபட வைத்து விடவேண்டும்,அதுவரை நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்ள கூடாது. முடிவு செய்து கொண்டான்.

இப்பொழுது அவன் கால்கள் ஜேம்சின் வீட்டுக்கு தானாக நடந்தன. ஜேம்ஸ் வீட்டுக்கு சென்று நான்கு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டன. தான் அவனை குடிக்க பழக்கிய பின்

அதிகமாக அவன் வீட்டுக்கு செல்லவில்லை. ஆனால் அவன்தான் இவனை தேடி தினமும் வர ஆரம்பித்தான். அடுத்த வருடமே தனக்கு இராணுவத்தில் வேலை கிடைத்து கிளம்பியபின், இங்கிருந்து ஜேம்சின் நடவடிக்கைகளை நண்பர்கள் சொல்ல தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டு வந்திருக்கிறோம் என்று புரிந்தது. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தவனை இந்த பழக்கத்தில் இழுத்து விட்டு விட்டோம். இடையில் அவனுக்கு கல்யாணம் ஆகி விட்டது கூட நண்பர்கள் தெரிவித்தனர். ஒரு வேளை கல்யாணம் ஆனால் திருந்தி விடுவான் என்று அவன் பெற்றோர் அவனுக்கு மணம் முடித்து வைத்திருக்கலாம்.

அதன் பின் மூன்று முறை ஊருக்கு வந்தபோதும் அவன் எங்காவது படுத்து உருண்டு கொண்டிருப்ப்பான் என்றுதான் நண்பர்கள் சொன்னார்கள். இவனுக்கு ஏற்பட்ட குற்ற உணர்ச்சி அவனை பார்க்க கூட விடாமல் செய்து விட்டது.

வீட்டில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. ஜேம்ஸ் மெல்ல கூப்பிட்டான். அவன் பேரை சொல்லி கூப்பிட்ட்தும் ஒரு சிறு பெண் எட்டி பார்த்தாள். நல்ல சுருள் முடி, அவள் அம்மாவை கொண்டிருக்கலாம், ஜேம்சுக்கு சுருள் முடி கிடையாது. யாரு வேணும்?

குரலில் கொஞ்சம் மலையாளம் இருந்தது.

அப்பா இருக்காராமா? உள்ளிருந்து யாரானு? என்ற குரல் கேட்டது.

இந்த பெண் அச்சனை விளிச்சிட்டு யாரோ வந்திருக்கினு, அந்த பெண் குழந்தை அவள் அம்மாவிற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

யார் வேணும்? இப்பொழுது அந்த பெண் வெளியே வந்தாள். நல்ல சிவப்பாய் இருந்தாள்,

மலையாளம் என்பது தெரிந்தது. நான் ஜேம்ஸ்சோட பிரண்டு, ஜேம்சை பாக்க வந்திருக்கேன்.

அவன் சொன்னதும், அவளின் கண்களில் ஒரு கோபம் எட்டி பார்த்து சட்டென மறைந்தது,

அவர் இல்லீங்களே, எப்ப வீட்டுக்கு வருவாரு? கதிர் விடாமல் அடுத்த கேள்வியை வீசினான்.

அதெல்லாம் சொல்ல முடியாது, எப்ப வருவாரு, போவாருன்னு. குரலில் இகழ்ச்சி தெரிந்தது.

ஜேம்ஸ் வந்தா கண்டிப்பா என்னை பாக்க சொல்லுங்க, கதிர் உன்னைய் தேடிகிட்டு வந்தான்னு சொல்லுங்க. இவன் சொன்னதும் அந்த பெண் யோசிப்பது போல் நின்றாள்

இவனுக்கு மனசு பட படத்தது. ஒரு வேளை நான் இப்படி சீரழிந்த்தற்கு இவன்தான் காரணம் என்று சொல்லியிருப்பானோ ?

நல்ல வேளை அந்த பெண், சரிங்க, நான் வந்தா சொல்றேன்.இவனுக்கு அப்பொழுதுதன் உறைத்த்து, சே குழந்தை இருக்கும் வீடு, ஏதாவது வாங்கிக்கொண்டு வந்திருக்க வேண்டும்.

தனக்குத்தானே திட்டிக்கொண்டான்.

மறு நாள் காலை ஆறு மணி அடித்தவுடன் ஜேம்சின் வீட்டு வாசலில் நின்றான். வீட்டுக்குள் சண்டை இடும் சத்தம் கேட்டது. இவன் ஜேம்ஸ் என்று கூப்பிட்டான். சத்தம் கேட்டு அந்த குழந்தையே மீண்டும் எட்டிப்பார்த்த்து. இப்பொழுது முகத்தில் சிநேகித பார்வையை காட்டியது. என்றாலும் அவர்கள் அப்பா, அம்மாவின் சண்டை நடந்து கொண்டிருந்த்தால், முகத்தில் கலவரமும் காணப்பட்டது. அச்சா யாரோ விளிக்குன்னு.

திட்டிக்கொண்டே வெளியே வந்த ஜேம்ஸ் இவனை பார்த்தவுடன் சிறிது அதிர்ச்சி ஆனான். இவன் எப்படி இங்கு வந்தான் என்ற கேள்விக்குறியை கண்களில் காண்பித்தான். நான் நேத்தே வந்தேன், வீட்டுல யாரும் சொல்ல்லையா? இந்த வீட்டுல யாரு என்னை மதிக்கறா?

விரக்தியாய் சொன்னவன், சரி என்ன விசயம், நான் கொஞ்சம் வெளியே போகணும்,

வந்தவனை உள்ளே வான்னு கூப்பிட மாட்டியா? கதிரின் கேள்வியால் சற்று சங்கடப்பட்ட ஜேம்ஸ் சரி வா, என்று உள்ளே அழைத்தான். கையில் நிறைய பிஸ்கட்டுகள் வாங்கி வைத்திருந்த்தை எல்லாம். உள்ளே வந்தவுடன் அந்த குழந்தையிடம் கொடுத்தான்.

அந்த குழந்தை அதை வாங்க தயங்கி அப்பொழுது வெளியே வந்த அவள் அம்மாவை பார்த்தது. வாங்கிக்கோ, என்று அம்மா சாடை காட்டியவுடன் முகத்தில் மகிழ்ச்சி வர பெற்றுக்கொண்டது. இதெல்லாம் இப்ப எதுக்கு? என்று சம்பிரதாயமாக ஜேம்ஸ் சொன்னாலும், இவன் எதுக்கு இங்கு வந்து இருக்கிறான் என்ற எண்ணமே அவன் மனதில் தொக்கி நின்றது.

சரி இப்ப எங்க கிளம்பிட்டே? கதிர் ஜேம்சிடம் கேட்க கொஞ்சம் வெளியில வேலை இருக்கு அதுதான், கிளம்பிகிட்டு இருக்கேன். சரி வா நானும் உங்க்கூட வர்றேன், கூடவே கிளம்பினான். ஜேம்ஸ் நெளிந்தான், நீயா நீ எதுக்கு, நான் வேலை விசயமா போறேன்.

கதிர் சிரித்துக்கொண்டே நீ எங்க போறேன்னு எனக்கு தெரியும். உன் சம்சாரத்தோட சண்டை போட்டுகிட்டு இருந்ததை கேட்டுகிட்டு தான் இருந்தேன். காலையிலயே போய் குடிக்கலியின்னா உன்னால முடியாதா? இவனின் கேள்வியை பார்வையால் எதிர்த்தான் ஜேம்ஸ். இங்க பாரு கதிர், நீ எனக்கு ஒண்ணும் தரலையின்னாலும், என் விசய்த்துல தலையிடாதே, குரலில் காட்டம்.

கதிர் நினைத்து பார்த்தான், ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஜேம்ஸ் குரலை உயர்த்தி பேச கூட தயங்குவான். இப்பொழுது எப்படி மாற்றி இருக்கிறது, தான் கற்று கொடுத்த பழக்கம்.

சரி நான் உன்னை தொந்தரவு பண்ணலை.உனக்கு ஒரு பாட்டில் எடுத்து வச்சிருக்கேன்.

முகம் மிளிர எங்க வச்சிருக்கே, நான் வரட்டுமா? அவன் குரலில் இருந்த அவசரம் அவனின் நிலையை எடுத்து சொன்னது.

இப்பவெல்லாம் கொடுக்க மாட்டேன், எங்கூட ஆனைமலை வரைக்கும் வரணும், அங்க மூணு நாள் தங்கணும், எனக்கும் அங்க ஒரு வேலை இருக்கு, அது முடிஞ்சு வந்த பின்னால உனக்கு ஒண்ணென்னே இரண்டாவே கொடுப்பேன், என்ன சொல்றே? ஜேம்ஸ் இரண்டு மூணு நாள் தங்கணுமா? குரலில் தயக்கம், ஒண்ணுக்கு இரண்டு என்று இவன் சொன்னது வேறு மனதில் ஆசையை தோற்றுவித்து விட்டது. சரி எப்ப கிளம்பறோம்? நாளைக்கு கிளம்பறோம் உன் வீட்டுல சொல்லிடு. கதிர் அவனிடமிருந்து விடை பெற்றான். வீட்டுக்கு வந்ததும், தன்னுடன் மிலிட்டரியில் இருந்து கூட வந்த நண்பனுக்கு போன் செய்து ஆனைமலைக்கு நண்பனுடன் வருவதாக தெரிவித்தான்.

கதிர் ஜேம்சின் வீட்டுக்கே வந்து ஜேம்சின் மனைவியிடம் உங்க கணவரோட மூணு நாள் ஆனைமலை வரைக்கும் கூட்டிட்டு போறேன், உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லையே என்று கேட்டான். அந்த பெண் இங்க எங்கயாவது குடிச்சுட்டு ரோட்டுல கிடக்கரதுக்கு வெளியில போனா கூட பரவாயில்லை, என்று கண்களில் நீர் எட்டி பார்க்க சொன்னது இவன் நெஞ்சில் ஏதோ செருகியது போல் இருந்தது.கவலைப்படாதீங்க, பத்திரமா எந்த தப்பும் பண்ண விடாம கூட்டிட்டு வந்திடுறேன்.

ஆனைமலையில் நண்பன் இவர்களை வரவேற்றான். ஜேம்ஸ் அவர்களுடன் பேசி பழக தயங்கினாலும், நண்பன் தோளில் கை போட்டு, பேசினான். ஜேம்சையும், கதிரையும், எல்லா இடங்களுக்கும் கூட்டி சென்றான். ஒரு ஆஸ்ரம்ம் போல் இருந்த இட்த்தில் அன்று இரவு இவர்கள் இருவரையும் தங்க வைத்து விட்டு நண்பன் காலையில் பார்ப்பதாக கூட்டி சென்றான்.

அன்று இரவு படுத்த பின்தான் ஜேம்சுக்கு தான் இன்று காலையில் இருந்து குடிக்கவே இல்லை என்று தெரிந்தது. நினைத்தவுடன் மனது அலைந்தாலும் எப்படி காலையில் இருந்து

அந்த ஞாபகமே நமக்கு வராமல் இருந்த்து என்று ஆச்சர்யப்பட்டான். அவனின் முகத்தையே பார்த்துகொண்டிருந்த கதிர் இப்பொழுது அவன் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவன் போல் என்ன ஜேம்ஸ் காலையில் இருந்து எப்படி குடிக்காமல் இருந்திருக்கோமுன்னு ஆச்சர்யமா இருக்கா? இப்ப தெரியிதா, உனக்கு மனசு எல்லாம் நல்லாத்தான் இருக்கு, அங்கிருக்கற சூழ்நிலைதான் உன்னைய அந்த ஆசையை தூண்டி விட்டுகிட்டே இருக்கு. உன்னைய கூட்டிட்டு வந்த்துக்கு காரணமே இந்த குடியை விட வைக்கணும்னுதான். நாளையில இருந்து இந்த ஆஸ்ரமத்துல உனக்கு ஒரு சில வேலைகள் கொடுப்பாங்க. உன்னைய நல்லபடியா பாத்துக்குவாங்க, தயவு செய்து என் மேலே கோப்படாதே, உனக்காகத்தான் இங்க நான் வந்திருக்கறதே.இது ஏன்னு உனக்கு புரியும்னு நினைக்கிறேன். என்னாலதான் நீ இந்த பழக்கத்துக்கு அடிமையாயிட்டே. அதை நானே சரி பண்ணாத்தான் எனக்கு நிம்மதி அப்படீன்னு தோணுச்சு. உருக்கமாக, ஜேம்சின் மனதில் படியும் வண்ணம் பேசினான்.

ஜேம்ஸ் அப்படியே கண்களை மூடி கிடந்தான். அன்று நன்றாக உறங்கினான்.காலை இவர்கள் எழுந்ததும் ஆஸ்ரமத்தின் ஒரு சில வேலைகளை இருவரும் சேர்ந்து செய்தனர். பின் இருவருக்கும் ஒரு நடை பயிற்சி தரப்பட்டது. ஜேம்சுக்காக தானும் தவமாய் செய்ய ஆரம்பித்தான் கதிர். மூன்று நாட்கள் ஓடியிருந்தன. கதிர் மட்டும் இப்பொழுது போகலாம் என்றும், ஜேம்ஸ் இன்னும் ஒரு வாரம் இருக்கவேண்டும் என்று ஆஸ்ரம நிர்வாகி சொன்னார்.

கதிர் ஜேம்சின் முகத்தை பார்த்தான்.

நீ போய்ட்டு வா கதிர், எனக்கு பயமொண்ணும் இல்லை. ஒரு வாரத்துல நான் வந்துடுவேன்னு வீட்டுல சொல்லிடு.தன் மனைவியையும், மகளையும் நினைத்து சொல்கிறான் என்பது புரிந்தது.

ஜேம்ஸின் வீட்டில் அவன் மனைவியிடம் இன்னும் ஒரு வாரம் கழித்துத்தான் வருவான் என்று சொன்னதும் அவள் முகத்தில் பய ரேகைகள் வந்துவிட்டன. கதிர் அவளிடம் எல்லா விவரங்களையும் சொன்னான். இந்த குடி பழக்கத்தை மறக்க வைக்கத்தான் நான் அவனை அங்கு கூட்டி சென்றதாகவும் என்னை மன்னிச்சுங்குங்க என்று வேண்டினான். இன்னும் ஒரு வாரத்துல அவன் வந்துடுவான்.

இதை சொல்ல அந்த பெண்ணின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக ஆரம்பித்தது.

எங்கள் வீட்டில் நல்ல விசயங்கள் பேசியது இப்பொழுதுதான். என்றவள், திருமணமானால் சரியாகி விடுவான் என்று இவனிம் பெற்றோர் சொந்த ஊருக்கு வந்து இவளை பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்கள். அதன் பிறகு குடிதான் அதிகமானதே தவிர திருந்திய பாட்டை காணோம். இதை பார்த்து பார்த்தே, ஜேம்சின் அப்பா, அம்மா இறந்து போனார்கள். அவர்கள் இருந்தவரை இருவரும் அரசு உத்தியோகத்தில் இருந்ததால் பென்சன் தொகை வந்துட்டு இருந்துச்சு.. அவங்க போன பின்னாடி இவனுக்கும் வேலை இல்லாமல், நான் ஒரு கம்பெனியில் வேலைக்கு போய் குடும்பத்தை ஓட்டிக்கொண்டிருந்தேன். இந்த பழக்கத்தினால் வீட்டுக்கு நிம்மதி அப்படீங்கறதே இல்லாம போச்சு.

இந்த ஒரு வாரம் இவன் தினமும் ஜேம்சின் வீட்டுக்கு வந்து ஆறுதல் சொல்லிவிட்டு சென்றான். ஒரு நாள் வீட்டுக்குள் நுழைந்த கதிரை தடுத்து நிறுத்திய அவன் அம்மா கதிர் நீ பண்ண்றது உனக்கே நல்லா இருக்கா?

அவளின் கேள்வி புரியாமல் அம்மாவை பார்த்தான்.

நீ யாரோ வீட்டுக்கு தினம் தினம் போயிட்டு இருக்கியாம், அவ புருசன் கூட விட்டுல இல்லையாம்,இதெல்லாம் என்னடா மூக்கை சிந்தி அழுதாள். அப்பா ஒன்றும் பேசாமல் இருந்தாலும் முகத்தை பார்த்தால் அவரும் கேபமாக இருப்பதாகத்தான் தோன்றியது.

இவன் அம்மாவின் தோள்களை தொட்டு அம்மா நீ அதை எல்லாம் நம்பறியா?

எனக்கு இன்னும் பத்து நாள் லீவுதான் இருக்கு, அதுக்குள்ள நான் ஒரு காரியத்தை முடிக்கணும் நினைச்சிருக்கேன். அதுக்கோசரம்தான் அவங்க வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்.

மத்ததை எல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காதே. சொல்லிவிட்டு வெளியே கிளம்பினான்.

அம்மாவின் கோபம் நியாயம்தான் என்று மனசு சொன்னது. தொடர்ந்து ஒரு வீட்டிற்கு ஒரு ஆண் மகன் சென்றால் அதுவும் ஆம்பிளை வெளியூர் சென்றிருக்கும் போது பலரும் பலவிதமாக பேசத்தான் செய்வார்கள்.

இப்பொழுது அவனுக்கு ஒரு விசயம் ஞாபகம் வந்தது, சிங்காநல்லூரிலிருந்து வந்து வலுகட்டாயமாக இவனை பார்த்து சென்ற அந்த தம்பதியர் அதற்கு பின் எந்த ஒரு தகவலும் தரவில்லை. இவனை பற்றி சுற்றியுள்ள உறவுகள் போய் சொல்லி இருக்கும். அதுதான் அமைதியாகி விட்டார்கள். சட்டென்று தன்னை உதறிக்கொண்டான். வேண்டாம், ஆயிற்று ஜேம்ஸ் போய் பத்து நாட்கள் ஆகி விட்டன. இப்பொழுது அவனுக்கு குடித்தே ஆகவேண்டும் என்ற எண்ணங்கள் குறைந்து விட்டதாம். போனில் சொன்னான். அவனுக்கு நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மனதுக்குள் முடிவு செய்து கொண்டான்.இந்த நேரத்தில் நம்மை பற்றியும் நம் கல்யாணத்தை பற்றியும் நினைக்க கூடாது.

“கதிர்” “கதிர்” குரல் கேட்டு கதிரின் அம்மா வெளியே எட்டி பார்த்தாள். மகனின் வயதை ஒத்த ஆள் ஒருவர் நின்று கொண்டிருப்பதை கண்டவள் யாரு வேணும் கண்ணு என்று கேட்டாள்.

கதிர் இருக்காருங்களா, ஒரு நிமிசம் பொறு கண்ணு புழக்காடைக்கு போனான், வந்துடுவான்.

நான் இங்கேயே வெயிட் பண்ண்றேன்.

வெளியே ஏன் நிக்கணும், இப்படி உள்ளார வந்து உக்காரு. அம்மாளின் உபசரிப்பில் தடுமாறினான் வந்தவன். அதற்குள் வெளியே வந்த கதிர்

ஜேம்ஸ் எப்ப வந்தே? எப்படி இருந்துச்சு உன்னுடைய ஆனமலை டிரிப்.?

ரொம்ப நல்லா இருந்துச்சு, கதிர். உனக்கு நன்றி சொல்லிட்டு போகலாமுன்னுதான் வந்தேன்.

நன்றியா ! எதுக்கு? நாந்தான் உங்கிட்ட மன்னிப்பு கேட்கணும், என்னாலதான் இத்தனை வருசம் உன் குடும்பம் சீரழிஞ்சது. இனி அந்த மாதிரி விடக்கூடாது. சரி நாளைக்கு பொள்ளாச்சி போறோம், உன் சம்சாரம் குழந்தை, எல்லாம் ரெடியா இருங்க, ஒரு வேன் வரும், அதுல போயிடலாம்.

நல்ல இட வசதியுடன், ஒரு குடும்பம் இருக்கலாம், இந்த வீட்டை ஒரு வருசத்துக்கு ஒத்தி எடுத்துருக்கேன். உனக்கு ஒரு வேலையும் ஏற்பாடு பண்ணிட்டேன். நாளை காலையில நான் கொடுக்கற அட்ரசுல போய் பாரு. அன்னைக்கே ஜாயிண்ட் பண்ணிக்கலாம். தைரியமா இரு. இனிமேல் உன்னால எதையும் சாதிக்க முடியும். நீ நம்மூருல இருந்தியின்னா மறுபடி உன்னை பழைய ஜேம்சாத்தான் பார்ப்பாங்க, அதனால உனக்கு மனசுக்கு சங்கடம் தான் வரும். அதுக்கோசரம்தான் நீ கொஞ்ச நாள் இடமாறனும்னு சொன்னேன்.

தன்னை உற்சாகப்படுத்தி பேசிக்கொண்டிருந்த கதிரை நன்றியுடன் பார்த்தான் ஜேம்ஸ்.

அவன் மனைவியும், அந்த குழந்தையும் புதிய வீட்டையும் இடத்தையும், பார்த்த பிரமிப்பில் இருந்தனர். அதை விட ஆனைமலையிலிருந்து வந்த மூன்று நாட்களாக தெளிவாக பேசும் ஜேம்சை பார்த்து அவன் மனைவியும், குழந்தையும் ஆச்சர்யப்பட்டனர். இனி நாம் சந்தோசமாக இருக்கலாம் என்ற எண்ணமே அவர்களுக்கு ஒரு முகமலர்ச்சியை கொடுத்திருந்தது.

இரயில் வேகமாக சென்று கொண்டிருந்தது. நிம்மதியாய் கண்ணை மூடி உட்கார்ந்திருந்தான் கதிர். இனி அடுத்த வருட விடுமுறைக்குத்தான் ஊர் வரமுடியும். இந்த விடுமுறையில் ஐந்து வருட குற்ற உணர்ச்சி மறைந்து ஒரு மன நிறைவு மனதுக்குள் வந்திருப்பதை உணர்ந்தான்.

அம்மாவுக்கும், அப்பாவுக்கும்தான் வருத்தம் இந்த விடுமுறையிலாவது கல்யாணத்தை முடித்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தவர்கள் அது நிராசையாய் போனதில் வருத்தம்.

இருந்தாலும் மகன் முன்னால் அதனை காட்டாமல் “போய்ட்டு வா கதிர்” சொல்லிவிட்டு இந்த புறம் திரும்பி கண்களை துடைத்துக்கொண்டாள் அம்மா.

Print Friendly, PDF & Email

1 thought on “நான் கற்று கொடுத்த தவறு

  1. குடியின் தீமையும் நண்பனுக்காக அந்த குடிப்பழக்கத்தை மாற்ற கதிர் எடுத்துக் கொண்ட முயற்சியும் சிறுகதை அருமை

    பூ.சுப்ரமணியன், பள்ளிக்கரணை சென்னை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *