வாஜி வாஜி சிவாஜி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 27, 2012
பார்வையிட்டோர்: 11,931 
 

சிவாஜி படம் ரிலீஸ். தனக்கு தெரிந்த ஒரு விஐபி உறவினர் மூலமாக முதல் நாள் ஈவினிங் ஷோவுக்கே தனக்கும் தன் கல்லூரி தோழிகள் பத்து பேருக்கும் டிக்கெட்ஸ் வாங்கிவிட்டாள் கல்பனா.

தியேட்டருக்குள் நுழைந்து அமர்வதற்கும் ‘சூப்பர் ஸ்டார் ரஜ்னி’ என்று ஸ்கிரீனில் பெயர் போடுவதற்கும் சரியாக இருந்தது. விசில் சத்தம் காதை பிளந்தது. குறிப்பாக முன்னாடி, தூரத்தில் மூன்று பேர் நின்று கொண்டும் கத்தி கொண்டும் ரகளை பண்ணிக்கொண்டிருந்தார்கள். தீவிர ரசிகர்கள் போலும்.

ரஜினியின் ஓப்பனிக் டயலாக்கையே இவர்களால் கேட்ட முடிவில்லை. அதற்குள் ஆயிரம் விசில், ஆயிரம் ‘தலைவா’க்கள். அதில் முக்கால்வாசி அந்த மூன்று பேரிடமிருந்து.

படம் முடியும் வரை அந்த மூன்று பேர் ஓயவில்லை.

‘கலக்கிட்ட தலைவா’, ‘சூப்பரு தலைவா’, ‘ஓய் இன்னா! பொண்ணு கேட்டா எங்க தலைவரையே போ’ங்கிறியா’, டாய் எங்க தலைவர் மேலயே கையை வைச்சிட்டியா..மவனே நீ காலிடா’ இதெல்லாம் அந்த மூன்று பேர் கத்திய பல பஞ்ச் டயலாக்குகளில் சில.

தியேட்டரை விட்டு வெளியே வரும் போது அந்த மூன்று பேரை பார்த்ததும் அதிர்ந்து விட்டார்கள் கல்பனா அண்ட் கோ. காரணம், அந்த மூன்று பேரும் அவர்கள் காலேஜை சேர்ந்தவர்கள்தான். அதுவும் அவர்கள் டிபார்ட்மெண்டை சேர்ந்தவர்கள்.

‘படத்தையே ஒழுங்கா பார்க்க விடலை. இருடீ அவங்களை நல்லா நாலு கேள்வி கேட்டுட்டு வர்றேன்’ என்று தன் நண்பிகளிடம் சொல்லிவிட்டு ‘திடுதிப்பென’ அவர்கள் முன்னால் போய் அதிரடியாக நின்றாள் கல்பனா.

தன்னைப் பார்த்ததும் சற்றே திகைத்து நின்ற அந்த மூன்று பேரை பார்த்து கல்பனா சொன்னாள் “நீங்கள்ளாம் இப்படியா சத்தம் போடறது. தெரிஞ்சவங்க யாராவது பார்த்தா நம்ப காலேஜை பத்தி என்ன நினைப்பாங்க? நீங்க இப்படியெல்லாம் கத்தினதை யாராவது பிரின்சிபாலிடம் போட்டுக்கொடுத்தா நல்லாயிருக்குமா, சொல்லுங்க?”

“ஹி ஹீ..இல்லைம்மா கல்பனா. நாங்கெள்ளாம் ரஜினி ரசிகர்கள். கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டோம்” என்று வழிந்தார்கள் ஹெச்ஓடி ராஜப்பாவும், புரபஸர்கள் ரங்கநாதனும், கனகசபையும்.

– ஜூலை 19 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *