நான் ஒரு அரிஸ்டாக்ரட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 498 
 

‘நான் யார்’ என்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் ஆசைப்படலாம். நான் யார் என்கிறதைப் பற்றி உங்களுக்கு ரொம்பச் சொல்ல வேண்டியதில்லை. எங்க பூர்வோதரம் ரொம்ப ரொம்ப சிரேஷ்டமானது. ‘கரிமங்கலம் ஃபேமிலி’யைத் தெரியாதவா மெட்ராஸிலே மட்டுமென்ன டெல்லியிலே கூட இருக்க முடியாது. கரிமங்கலம் கணபதி சாஸ்திரிகள் குமாரர் சம்பு சாஸ்திரி – ஹைகோர்ட் நீதிபதியாயிருந்து ‘ரிடயர்ட்’ ஆனதை யார்தான் மறந்திருக்க முடியும்?

அந்த சம்பு சாஸ்திரியின் திருக்குமாரன்தான் நான். என் சிற்றப்பன் ஓர் ஐ.எபி.எஸ். என்னுடைய மாமாக்கள் எல்லாம் அட்வகேட்டுகளும், டாக்டர்களுமாக மாதம் இரண்டாயிரத்துக்கு மேல் மூவாயிரத்துக்குக் குறையாமல் சம்பாதிக்கிறாளாக்கும்.. எங்க தாத்தா கணபதி சாஸ்திரிகள் இருந்தாரே, அவர் வேதங்களையும், சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்தவராம். இந்த மைலாப்பூரிலே கரிமங்கலம் கணபதி சாஸ்திரிகளைப் பற்றிச் சொல்லிப் பெருமைப்படாத ஆஸ்திகாள் எங்குமே கிடையாது. எங்க தாத்தா கணபதி சாஸ்திரிகள் செய்திருக்கிற தர்மங்களுக்குக் கணக்கு வழக்கே இல்லையாம். தாத்தா செய்திருக்கிற தருமங்களுக்காக எங்க அப்பாவுக்குத் ‘தர்ம சிந்தாமணி’ என்று போன மாதம் ஏதோ ஒரு விழாவிலே யாரோ பெரிய மனிதர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கெளவரப் பட்டம் வழங்கியிருக்கா. யாராவது பள்ளிக்கூடத்து விழாவிலே, பேசறதுக்கோ, பரிசு வழங்கறதுக்கோ எங்க ஃபாதரை ‘இன்வைட்’ பண்றதுக்கு வந்தான்னு வச்சுக்குங்கோ – அப்போ எங்க ஃபாதர் அந்த ‘இன்விடேஷன்’லே தர்ம சிந்தாமணி ஆஸ்தீக ரத்தினம்-சம்பு சாஸ்திரிகள் -ரிடயர்ட் ஹைகோர்ட் நீதிபதி-ன்னு இவ்வளவு பட்டமும் போடணும்கிறதிலே ரொம்ப ரொம்பப் பர்டிகுலரா இருப்பார். எங்க ஃபாதருக்கு சங்கீதத்திலே அபார டேஸ்ட் உண்டு. சங்கீத அகாடெமியிலே கூட வைஸ் பிரஸிடெண்டாவோ என்னவோ இருக்கார். சங்கராச்சாரிய சுவாமிகள்னா எங்க ஃபாதர் உயிரை விட்டுடுவார் போங்க! அத்தனை பக்தி அவருக்கு. இப்படிப்பட்டவருக்கு பிள்ளையாப் பிறந்த நான் பெருமைப்படறதுக்கு எவ்வளவோ நியாயமிருக்கு. ஆனாலும் என்னாலே பெருமைப்பட முடியலே. என்ன காரணங்கிறேளா? காரணம் எத்தனையோ இருக்கு. ஒண்ணு ரெண்டை மட்டும் இங்கே சொல்றேன். எங்க அம்மா… இருக்காளே… ஒரு மாதிரி, அப்பா மட்டும் என்ன?… அவரும் ஒரு மாதிரித்தான்..; ‘ஒரு மாதிரின்னா’ என்ன அர்த்தம்? ‘அவா ரெண்டு பேரும் எதிலே ஒரு மாதிரின்னு நீங்கள் கேட்பேள்!’ ஆனால் உங்க கேள்விக்குப் பதில் சொல்ல நேக்குத் தெரியாது. ‘அம்பீ’ன்னுகொஞ்சம் உரத்துக் கூப்டுட்டேள்னாலே நா. அழுதுப்பிடுவேன். நா அத்தனை பயந்தாங்கொள்ளி போங்கோ. ஒரு மாதிரின்னா- ஒரு மாதிரின்னுதான் நேக்குச்சொல்லத் தெரியும். நான் சொல்லப்போறதுலேருந்து எந்த மாதிரியின்னு நீங்க புரிஞ்சிக்க முடியும்.

எங்க அம்மா இருக்காளே. அவளுக்குத் திமிர் அதிகம். இது நேக்கு எப்படித் தெரியும்னு கேட்பேள். அதைத்தானே சொல்லப் போறேன் இப்போ. எங்கம்மா. தினம் தினம் சாயங்காலம் ஷோக்கா டிரஸ் பண்ணிட்டு ராமாயணம் கேட்கப் போவா. அம்பத்திரெண்டு வயசுக்கு மேலே பட்டுப் புடவையும், நகையும், பவுடர் பூச்சும், சந்திரப் பிறை மாதிரி மல்லிகைப் பூவைச் சுற்றி விட்டுக் கொண்டை போட்டுக்கறதும் நேக்கே பிடிக்கலை. இதைப் பற்றி எங்க வீட்டுக் கார் டிரைவர் ஒரு நாள் தனக்குத் தானே பேசிக்கிறாப்பிலே எங் காதுலையும் கேட்கும்படி சொன்னான் : அவன் சொன்னதைக் கேட்டு நேக்குக் கோபம் வரலை.

“பல்லெல்லாம் பொக்கையாயித் தலை நரைச்சுப் பேரன் பேத்தி எடுத்தாச்சு ஆனா. மனசிலே என்னமோ இன்னும் ரதி கணக்காகத்தான் எண்ணிக்கிட்டிருக்கா…” – டிரைவர் இப்படிச் சொன்னது கேலியா, குத்தலா, கிண்டலா – என்னன்னு நேக்குத் தெரியாது. ஒரு பெரிய மனுஷாள் வீட்டுக் கார் டிரைவர், அவா மேலே கொஞ்சம் கூடப் பயபக்தி இல்லாமே இப்படி எல்லாம் பேசலாமோன்னு நீங்க சந்தேகப்படுவேள். ஆனா, எங்காத்து நிலைமை வேறே. டிரைவரைக் கண்டா அம்மாவுக்குப் பயம். அப்பாவுக்கும் பயம். ரெண்டு பேருமே அவனை எதிர்த்துப் பேச மாட்டா. அவா ரெண்டுபேரும் ஓரளவுக்கு அவன் கிட்டப் பயப்படறதும் நேக்குத் தெரியும். அம்மா இருக்காளே அம்மா; அவ தன்னையொத்த பணக்காரர் வீட்டுலே கொழந்தை பொறந்தா – அந்தக் கொழந்தைக்குத் தொட்டில் இடற நாள்லே போய்ப் பார்த்துட்டு வருவா.வெள்ளிக்கிண்ணம் ‘எவர்ஸில்வர்ப் பாலாடைன்னு’ ஸ்டேட்டஸ்க்குத் தகுந்த மாதிரிப் பிரஸன்டேஷனும் எடுத்திண்டு போயிட்டு வருவா. டிரைவர், தோட்டக்காரன், இவாள் வீட்டுலேயும் கொழந்தை பிறக்கும். ஆனா அதுக்கெல்லாம் தொட்டில் கிடையாது. அம்மாவும் போக மாட்டா. எப்பவாவது டிரைவரையோ, தோட்டக்காரனையோ பார்க்கறப்போ, “ஏண்டா! நோக்குக் கொழந்தை பெறந்திருக்காமேடா? என்னது? ஆணா? பொட்டையா?” என்று விசாரிப்பதோடு நிறுத்திண்டுடுவா அம்மா. எங்க ஸ்டேட்டஸுக்குத் தகுந்த மத்தப் பணக்கார வீடுகளிலே நடக்கிற கலியாணம், இழவு, எல்லாத்துக்கும் அம்மாவும், அப்பாவும் காரிலே தவறாமல் போயிட்டு வந்திடுவா. மத்தப் பணக்காராளும் அதே மாதிரி எங்க வீட்டுக்கு வருவா. கார் டிரைவர் ஒருநாள் அம்மாவுக்கு முன்னாலே (அம்மா வந்து நின்னது தனக்குத் தெரியாதுங்கிறது டிரைவரோட வாக்குமூலம்) சிகரெட் பிடிச்சான்னு அம்மா தாறுமாறாக் கத்திண்டிருந்தா, டிரைவரோ “உங்களுக்குப் பிடிக்கலேன்னா என்னை வீட்டுக்கு அனுப்பிசிடுங்கம்மா! ஆனா வார்த்தை செலவழிச்சிப் பேசாதீங்க. நான் ரோஷக்காரன். பதிலுக்கு எதைக் கேட்பேன்? எப்படி வாயிலே வரும்னு தெரியாது…” என்று டிரைவர் முறைச்சதும் அம்மா, அப்பா ரெண்டு பேருமே அவனைத் தன்னைக் கட்டிக்கிண்டு சாந்தமாப் பேச ஆரம்பிச்சா. அதான் எனக்குப் புரியலை.

டிரைவர் தனக்கு முன்னாலே சிகரெட் பிடிச்சான்னு கோவிச்சிக்கிற இதே அம்மா முந்தா நாள் பிரமீளா ஆத்துக்காரர் (அவர் ஒரு வெள்ளைக்காரன் கம்பெனியிலே மாசம் மூவாயிரம் ரூபாய்க்கு மேலே சம்பளம் வாங்குகிறவர். பிரமீளா அம்மாவின் தங்கை பெண்) வந்திருந்தப்போ அவர் சிகரெட் பிடிக்கிறதுக்காக ஆஷ்டிரேயைத் தானே எடுத்திண்டு போய் மேஜை மேலே வச்சாளே! அது மட்டும் ஏனாம்? நான் ஒரு நாள் அம்மாவைக் கேட்கவே கேட்டுப்பிட்டேன். “ஏம்மா! மோட்டார் கம்பெனி டைரக்டர் மோகனராவ் வீட்டுலேயும், சார்ட்டர்ட் அகெளண்டண்ட் சாரநாத ஐயர் வீட்டுலேயும், சோனியும், சூம்பலுமாப் பெறக்கிற கொழந்தையைப் போய்ப் பார்த்துக் கொஞ்சித் தொட்டிலிடறதுக்கும் போயிட்டு வரயே…? நம்மாத்துக் கார் டிரைவர் கன்னையனுக்கும், தோட்டக்காரச் சுப்பனுக்கும் குண்டு குண்டா அழகான குழந்தை பொறந்திருக்கு. அதைப் பற்றிக் கேட்கறப்போ மட்டும் தோட்டக்காரனிட்டயும், டிரைவரிட்டவும், ஏதோ மாடு கன்னு போட்டதைப் பற்றி விசாரிக்கிற மாதிரிப் பரம அலட்சியமா விசாரிக்கறயே. அது ஏன் அப்படி?”ன்னு நான் கேட்ட கேள்விக்குப் பதிலே சொல்லாமே, மூஞ்சியைச் சுளிச்சிட்டுப் போயிட்டா அம்மா. அப்பாவிடம் கேட்டேன். “போடா அசடு! உன் வேலையைப் பார்த்திண்டு போ…” என்று பதில் வந்தது அப்பாவிடமிருந்து. எனக்கு நல்லது கெட்டது தெரியற வயசாகலேன்னு அப்பாவும், அம்மாவும் சொல்றா. ஆனா அது பொய். அப்பா செய்யற கெட்டதும் எனக்குத் தெரியறது. அம்மா செய்யற கெட்டதும் எனக்குத் தெரியறது. ஆனா நான் அதை எல்லாம் சொல்றதுக்கு முடியாது. ‘எனக்குச் சித்த ஸ்வாதீனமில்லே’ன்னு அப்பாவும், அம்மாவும் எல்லாரிட்டயும் சொல்லியிருக்கா. ஏதோ ‘டெலீரியம்’னு ஒரு பைத்திய வியாதியாமே! அது எனக்கு வந்திருக்காம்.

”நான் பண்ண பாவம்! பிள்ளையாப் பெறந்தது ஒண்ணு! அதுவும் இப்படி டெலீரியத்தோடப் புத்தி இல்லாமே வந்து வாய்த்தது” என்று அப்பா அடிக்கடி என்னைப் பற்றிக் குறிப்பிட்டுக் குறைப்பட்டுக் கொள்வார். ஆனாலும் எனக்கு அப்பாவைப் பிடிக்காது. காரணம் என்னங்கிறேளா? அப்பாவோடரகசியமெல்லாம் நேக்குத் தெரியும். பகல்லே சங்கராச்சாரியார் படத்தை வச்சிப் பூஜை பண்றவர், ராத்திரிலே கிளப்புக்குப் போய்ச் சீட்டாடறார். காசு வச்சிச் சீட்டு விளையாடறார்னு டிரைவர் சொல்றான். இன்னொரு விஷயம்-அப்பாவோட பெட்ரும்லே ஒரு ரகசிய அலமாரி இருக்கு. அதை மறந்து கூட அப்பா திறந்து வைக்க மாட்டார். ஒரு நா, தப்பித் தவறி திறந்து போட்டுட்டார். நா அடக்க முடியாத ஆசையோடு போய்ப் பார்த்தா, அலமாரிலே பாட்டில் பாட்டிலா இருந்தது. பாட்டில் மேலே எல்லாம் விஸ்கி, பிராந்தின்னு அழகான இங்கிலீஷ் எழுத்திலே எழுதியிருந்தது. விஸ்கி, பிராந்தின்னா என்னன்னு நேக்குப் புரியலே. டிரைவர்தான் இதுலே எனக்குக் குரு. அவன்கிட்டப் போய் கேட்டேன். “உங்கப்பன் ஒரு குடிகாரண்டா!”ன்னு அவன் ஆத்திரத்தோடு, ஆனால் இரகசியமான குரலில் என் காதருகே வந்து முணுமுணுத்தான். எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்தது.

கரி மங்கலம் கணபதி சாஸ்திரி குமாரர் ஆஸ்திக ரத்தினம் சம்பு சாஸ்திரி ஒரு குடிகாரர்னு அவர் பிள்ளையாகிய நானே கோவில் கோபுரத்தின் மேலே ஏறிச் சொன்னாக் கூட யாரும் கேட்க மாட்டாளே. அப்புறம் இன்னொரு ரகசியத்தை நானே என் கண்ணாரக் காணும்படியாச்சு. எங்க வீட்டுலேயிருக்கிற அத்தனை பாத்ரூமையும் கழுவறத்துக்காக ஒரு ஒட்டச்சி – சின்ன வயசுக் குட்டி அவ பேரு மாரியாத்தாளோ, காளியாத்தாளோ, என்னவோ-வருவா, ஒருநா, அவ இருட்டோட இருட்டாக் காலம்பற அஞ்சு மணிக்கு வந்துட்டா, அப்பாவோட பாத்ரூமைக் கழுவறதுக்காக மாடிக்குப் போனா. நான் அடுத்த ரூமிலே தூக்கம் கலைந்து முழிச்சிண்டே படுக்கையில் புரண்டுண்டிருந்தேன். ஒட்டச்சி ஏதோ தேளோ, பாம்போ பிடுங்கிட்ட மாதிரி கூப்பாடு போட்ட குரலைக் கேட்டு நான் எழுந்திருந்து ஓடிப் போய்ப் பார்த்தேன். பார்த்தா..? என்ன அநியாயம் இந்த ஒட்டச்சி வாஷ்பேசினைக் கழுவறதுக்காக அதுக்கிட்ட நிண்டிருந்தவளை எங்கப்பா ஆஸ்திகரத்தினம் தர்மசிந்தாமணி சம்பு சாஸ்திரிகள் – முந்தானையைப் பிடிச்சி இழுத்துப் பலத்காரமா என்னமோ பண்ணிண்டிருந்தார். அதைப் பார்த்திண்டு அங்கே இன்னமும் நிற்கிறது பாவம்னு நேக்கு தோணித்து. இதை இப்படியே அம்மா கிட்ட ஓடிப் போய்ச் சொன்னா என்னன்னு தோணித்து. அம்மாவோட ‘பெட்ரூம்’ பக்கத்திலே தனியாயிருந்தது. பத்து நிமிஷத்துக்கு மின்னாலேதான் சமையற்காரர், அம்மா பெட்ருமுக்குக் காபி எடுத்திண்டு போனதைப் பார்த்தேன். அதிலேருந்து அம்மா எந்திருந்தாச்சுனு தெரிஞ்சுது. ஓடினேன். அம்மா பெட்ரூம் கதவு சாத்தி உள் பக்கமாத் தாழ் போட்டிருந்தது. இப்பத்தானே சமையற்காரர் காபி எடுத்திண்டு வந்தார். அதுக்குள்ளே காபியைக் கொடுத்திட்டு அவர் எப்படித் திரும்பியிருக்க முடியும்னு எனக்குச் சந்தேகமாயிருந்தது. அடைச்சிருந்த கதவின் நடுவே சாவித் துவாரத்து வழியா உள்ளே எட்டிப் பார்த்தேன். ஐயையோ…! எனக்கு ஒரே அசிங்கமாயிருந்தது. சமையற்காரரும், அம்மாவும். நினைக்கவே ஆபாசமாயிருந்தது. அங்கே அப்பா ஒட்டச்சியை கஷ்டப்படுத்திண்டிருந்த மாதிரி, இங்கே அம்மா சமையற்காரரைக் கஷ்டப்படுத்திண்டிருந்தாள். நான் எங்கேயாவது ஆத்துலே, குளத்துலே, குதிச்சுத் தற்கொலை பண்ணிக்கனும் போலத் தோணிடுத்து.

எனக்கு என்ன இரசாபாசம்? உயர்ந்த சாதி, உயர்ந்த ஆசாரம், உயர்ந்த அனுஷ்டானம்னு ஊரை ஏமாத்திண்டு புருஷனுக்கு மனைவியாயிராத அம்மாவும், மனைவிக்குப் புருஷனாயிராத அப்பாவுமாக வாய்த்ததுக்காக நான்தான் தற்கொலை பண்ணிக்கணும். டிரைவர் கன்னையனிடம் அப்பாவும், அம்மாவும் ஏன் பயப்படறான்னு இப்பத்தான் தெரியறது. டிரைவர் கன்னையன் அடிக்கடி சொல்வானே, அதுக்கும் அர்த்தம் இப்பத்தான் புரியறது. அர்த்தம் என்னான்னு ரொம்ப நன்னாப் புரியறது இப்போ. “மானங் கெட்டுப் போனவன்லாம் டீக்கா டிரஸ் பண்ணிண்டு கார்லே போயிண்டிருப்பான். இங்கே உள்ளார எப்படி வாழறாங்கன்னு பார்த்துட்டா அப்புறம் ஊர் சிரிச்சிப்பிடும்” என்று அம்மா அவனைக் கோபித்துப் பேசிய ஒரு தினத்தில் வீட்டுக்குத் திரும்பும் போது, தனக்குத் தானே முனகிக் கொண்டு போனான் டிரைவர். அவன் அப்படி முனகிண்டு போனதை நானும் கேட்டேன். அதுக்கு என்ன அர்த்தம்னு அன்னிக்கு நேக்குப் புரியலே. ஆனா இன்னிக்குப் புரிஞ்ச மாதிரி இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. இந்த மாதிரி ஒரு விஷயத்தைப் பற்றித் தோட்டக்காரனும், டிரைவரும் ஒரு நாள் பேசிண்டிருந்தா. நானும் கூட உட்கார்ந்திருந்தேன். எனக்கு இதெல்லாம் புரியாது. நான் சித்த ஸ்வாதீனமில்லாத பிள்ளைன்னு நம்பி அவா ரெண்டுபேரும் ரொம்ப ஃப்ரீயா பேசிண்டா. அந்தப் பேச்சை முடிக்கிற போது டிரைவர் சொன்னான். ‘இன்னைக்கு இந்த மாதிரி ‘அரிஸ்டாக்ரடிக்’ ஃபேமிலியிலே இதெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணம் அண்ணே. பத்து இடம் பார்த்தா அதிலே ஒன்பது இடத்திலே இப்படித்தான் இருக்குது; விட்டுத் தள்ளு’ என்று கூறி விட்டு வேஷ்டியைத் தட்டிக் கொண்டு எழுந்திருந்தான். அதை இப்ப நினைச்சுப் பார்த்தா எனக்குப் புரியறது. நா வேதனைப்படறேன்.

கரிமங்கலம் கணபதி சாஸ்திரிகள் குமாரர் ஆஸ்திக ரத்தினம் சம்பு சாஸ்திரிகளுக்கு மகனாகப் பிறந்து, தொலைந்ததை விட டிரைவர் கன்னையனுக்கோ, தோட்டக்காரச் சுப்பனுக்கோ மகனாகப் பிறந்திருந்தால் கூட நான் மானத்தோடே நிமிர்ந்து நடக்க முடியும். அம்மா இராமாயணம் கேட்கப் போற அழகு நாளுக்கு நாள் சூர்ப்பனகையா மாறிண்டு வரா. அப்பா சங்கராச்சாரியரைப் போய்ப் பார்த்துப் பேசிப்பிட்டுப் பஞ்சகச்சம் கட்டிண்டு கிருத்திகை விரதம், ஏகாதசி விரதம், துவாதசி பாரணை எல்லாம் இருந்து உலகத்தை மருட்டிப்பிட்டுச் சூதாட்டமும், குடியும் கூத்துமாக இருக்கார். நல்ல ‘அரிஸ்டாக்ரஸி’ இது! என்னையும் நாளைக்கி உலகம் இப்படித்தானே ஓர் ‘அரிஸ்டாக்ரட்’னு சொல்லும், ஐயையோ! வேண்டவே வேண்டாம்.நா செத்துப்பூட்டாக் கூடத் தேவலை, இந்த அப்பா, அம்மாவுக்குப் பிள்ளையாப் பொறந்ததுக்காகப் பெருமைப்படறதுக்கு ஒண்ணுமில்லை. கோபத்துலே ஒருநாள் டிரைவர் கூட, ‘ஏலே! அம்பீ! நீ யாரை அப்பான்னு கூப்பிடறே? சமையற்கார ஐயரை அப்பான்னு கூப்பிடுடா, பொருத்தமா யிருக்கும்’னு ஒரு தினுசாச் சிரிச்சிண்டே சொல்லிப்பிட்டான். எனக்கு ரோஷம் வரலை. கோபமும் வரலை. ரோஷமும், கோபமும் வராப்பிலேதான் எங்க அப்பா, அம்மா என்னைப் பெறலையே? நா எண்ண பண்ணட்டும்?

– 1967-க்கு முன், நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *