நானும் மனைவியானேன். ஒரு நல்ல மனைவியானேன். ஒரு கணவனைப் புரிந்து நடந்துகொள்ளக்கூடிய ஓர் அன்பான மனைவியானேன். கணவன் என்பவன் எப்படிப்பட்ட குணமுடையவனாக இருந்தாலும் அதை மனதார ஏற்றுக்கொள்ளும் மனைவியானேன்.
பதின்ம வயது வாழ்க்கையை என்னவென்று அறிந்துகொள்ளாமலேயே அடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி நகர்த்தப்பட்டுவிட்டேன். அதுக்குள்ள என்ன கல்யாணம் என்ற தோழிகளின் கிண்டலையும் உறவுக்காரர்களின் பார்வையையும் நான் பெருசாக எடுத்துக்கொள்ளவில்லை. சொல்பவர்கள் எப்போதும் ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அது அவர்களின் தன்மை. அவர்களின் பார்வையின் சுமையைவிட என் தோளில் நிற்கும் சுமை எனக்கானது மட்டுமே. அதை அவர்களால் உணரமுடியாது.
அன்றும் எப்பொழுதும் உட்கார்ந்துகொள்ளும் அத்தாப்பு வீட்டின் அஞ்சடியில் போடப்பட்டிருந்த வரண்டாவில் சாய்வாக உட்கார்ந்துகொண்டு எப்போதும் இந்நேரத்தில் என்னோடு பேச வரும் பக்கத்து வாசல் வசுந்தரா அக்காவோ, முன்வீட்டு வாசல் சித்ரா அக்காவோ யாராவது வருவார்களா எனப் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னும் யாரும் வரவில்லை. சில வேளைகளில் அம்மா சீக்கிரமாக வந்தாலும் என்னிடம் எதையாவது புலம்பிக்கொண்டிருப்பார். அம்மா வீடு வீடாகச் சென்று துணி வியாபாரம் செய்து வருகிறாள். நேற்றைய புலம்பலில் பலர் இன்னும் கடனாக வாங்கிய துணிகளுக்குக் காசு கொடுக்கவில்லை என்ற புலம்பலே பிரதானமாக இருந்தது. இன்று அந்த வீடுகளுக்குப் போயிருக்கலாம்.
இன்று நான் மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறேன். ஓஓஓ இல்லை. என் வயிற்றில் எட்டு மாதக் குழந்தை இருக்கிறது. அடிக்கடி அது எனக்கு மறந்து போகிறது. வீங்கியிருக்கும் வயிற்றை என் விரல்களால் தடவிப் பார்த்தேன். என் வயிற்றின் சதைப்பகுதிகளுக்கு உள்ளேயிருந்து உதைப்பதுபோல் இருந்தது. அப்படியே மரப்பலகைகளில் சாய்வாக உட்கார்ந்து மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியில் விட்டேன். மார்பு மேலெழுந்து கீழிறங்கியது. கையில் பின்னுவதற்காக வைத்திருந்த ஊசியையும் பிங்கும் வெள்ளையுமாக இருந்த நூல்களையும் பார்த்தேன். மனத்துக்குள் ஏதோ நெளிந்து சென்றது. ஊசிக்குள் நூலைக்கோர்த்து பின்னலிடும்போது மனித தலைக்குள் ஏதோ ஒன்று நுழைவதுபோன்ற ஓர் பிரமை எழுந்ததை என்னால் தவிர்க்க இயலவில்லை. ஒவ்வொரு தடவையும் ஊசியின் துவாரத்திற்குள் நூலை நுழைக்கும்போதெல்லாம் எனக்குள் ஏற்படும் சிலிர்ப்புகளின் அர்த்தங்களைத் தேடித் தேடி நானே தொலைந்துபோவேன். சில தொலைதல்களில் நானே என் இதயத்தைத் தைத்துக்கொள்வதுபோல் இருக்கும். தனிமையினால் கிழிந்துபோன என் இதயத்தைத் தையலிட்டுக்கொள்வேன். அவரில்லாமல் கழியும் ஒவ்வொரு நாளும் விழையும் வேதனைகளைத் தையலிட்டுக் கொள்வது இப்போதெல்லாம் எனக்கும் வழக்கமாகிப் பழக்கமாகிவிட்டது.
என்னைவிட அவருக்கு வயது சற்று அதிகம்தான். அப்பா இருந்திருந்தால் அவருக்கு ஒத்த வயதாகத்தான் இவருக்கும் இருக்கும். அது ஒரு புறம் இருக்கட்டும். வயது என்ன பெரிய வயது? மனசுதானே அனைத்திற்கும் காரணம். வயதானாலும் என் கணவர் என்றும் எனக்குக் கணவர்தான். முகம் அழகில்லாமல் இருந்தாலும், முகம் முழுக்க பருக்களின் வீக்கங்கள் மேடும் குழியுமாக இருந்தாலும் என் அம்மா எனக்காகத் தேர்ந்தெடுத்த என் கணவர் எனக்கு என்றும் கணவர்தான்.
அம்மாவுக்காக இக்கல்யாணத்தை ஏற்றுக்கொண்டேன். அம்மா கஷ்டப்படுவதைப் பார்க்க எனக்கு விருப்பமில்லை. அப்பாவின் புறக்கணிப்பும் இகழ்தலும் அம்மாவைத் துன்பத்தில் ஆழ்த்தியபோதும் எனக்காகத் தன் சுகத்துக்கங்களைத் தூக்கிப்போட்டுவிட்டு என்னோடு சேர்த்து தன் சுமைகளையும் சுமந்தவள் அம்மா. அம்மாவுக்கு உறவென்று சொல்லிக்கொள்ள யாருமில்லைதான். ஆனாலும் எங்காவது இருப்பார்கள். தோட்டத்து கங்காணியின் மகளான அம்மா, அதே தோட்டத்தில் பால்மரம் வெட்டிக்கொண்டிருந்த அப்பாவைக் காதலித்து வீட்டைவிட்டு ஓடிவந்து கல்யாணம் செய்துகொண்டவள். அம்மாவின் சொந்தம் இருந்தும் இல்லாமல் போனது. அப்பாவின் உறவும் அப்படித்தான் அறுந்துபோனது. போராக்கிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து பாசீர் பாஞ்சாங் அஞ்சரை மைலில் ஒரு கம்பத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்க்கையை ஆரம்பித்தனர் அப்பாவும் அம்மாவும்.
ஆனால் அம்மாவின் வயிற்றில் ஏழு மாதக் குழந்தையாக நான் இருக்கும்போது அப்பா இன்னொரு பெண்ணுடன் எங்கோ ஓடிப்போய் விட்டாராம். அதுவும் அம்மாவின் சிநேகிதியோடு. அம்மா இரவு நேரங்களில் ஹோட்டல்களில் துப்புரவு செய்யும் வேலையிடத்தில் பழக்கமானவளாம் அந்தச் சிநேகிதி. கணவனை இழந்து வாழ்ந்த அவளுக்கு அம்மா தன் வீட்டில் புகலிடம் தந்தாளாம். சிங்கப்பூரின் சரித்திரத்தில் கறுப்புப் பக்கங்களாக உள்ள ஓர் இனக்கலவரத்தில் அவள் கணவன் தவறுதலாகத் தாக்கப்பட்டு இறந்துபோனதாக அம்மா சொல்லியிருக்கிறாள். மனிதம் மரித்துப்போன மனிதர்களுக்கு மத்தியில் நாம் வாழ்வதாக அம்மா அடிக்கடி சொல்வாள்.
அந்தச் சிநேகிதியை உடன்பிறவா சகோதரியாக நினைத்தாளாம் அம்மா. கிடைக்கும் சொற்ப ஊதியத்தில் அவளுக்கும் உணவு எல்லாம் சமைத்து ஒரு காசுகூட வாங்கமாட்டாளாம். அப்படிப் பார்த்துப் பார்த்து உபசரித்த அந்த சிநேகிதி, அப்பாவுடன் கள்ள உறவை வளர்த்துக்கொண்டு அப்பாவை எங்கோ இழுத்துக்கொண்டு ஓடிப்போய் விட்டாள் என அம்மா முன்பெல்லாம் நிறைய புலம்புவாள். சில சமயங்களில் பைத்தியம் பிடித்தவள்போல் தானாக எதை எதையோ பேசி, அழுதுகொண்டேயிருப்பாள். தோட்டத்துத் தமிழ்ப்பள்ளியில் ஆறு ஆண்டுகள் படித்த அம்மா, அங்குப் படித்ததைவிட அதிகமாக வாழ்க்கையின் பாடத்திலிருந்து நிறைய வலிகளோடு கற்றுக்கொண்டிருக்கிறாள் என்பது அவள் பேச்சிலும் புலம்பல்களிலும் புரிந்துகொள்ளமுடிந்தது.
அம்மா எது செய்தாலும் என் நல்லதுக்குத்தான் செய்வாள் என்ற அதீத நம்பிக்கை அம்மா மேல் என்றும் எனக்குண்டு. அப்பா விட்டுச் சென்ற பிறகு, வேலையிடத்துக் கேலிப் பேச்சுகளிலும் அவமானத்திலும் சிக்கித் தவித்து அந்த வேலையையும் விட்டுவிட்டு தனித்திருந்த அம்மா தனக்கிருந்த சமையல் திறறைப் பயன்படுத்தி, வடை, கறிபாப் போன்ற பலகாரங்களைச் செய்து காலையில், பக்கத்தில் இருக்கும் ஆவூன் காப்பிக்கடையில் விற்கத்தொடங்கினாள். ஆவூன் மனித நேயமிக்கவர். அம்மா, கணவன் இல்லாமல் நிறைமாதக் கர்ப்பிணியாய் கஷ்டப்படுகிறாள் என்பதை உணர்ந்தவர். தன் கடையின் சிறு பகுதியை அம்மாவுக்கு ஒதுக்கிக் தந்து மாத வாடகை பத்து வெள்ளிதான் வாங்கினார்.
பக்கத்து வீட்டில் இருக்கும் மாச்சிக் மீடா, அம்மாவுக்கு நாசி லெமாக் செய்யும் முறையைச் சொல்லிக்கொடுத்தாள். சில நாட்கள் மாச்சிக்கே அம்மாவுக்குத் துணையாக இருந்து நாசி லெமாக் சமைத்துக் கொடுப்பாள். அதில் கிடைக்கும் சிறு வருமானத்தைக் கொண்டு அம்மா என்னைப் பெற்றெடுத்தாள். எனக்குப் பிரசவம் பார்த்த கம்பத்து மருத்துவச்சிக்கும் பணம் கொடுத்தாள். என் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அம்மா கஷ்டங்களோடுதான் நிறைந்திருந்தாள்.
அம்மாவின் அந்தச் சின்ன கடைப் பகுதியில்தான் நான் வளரத்தொடங்கினேன். தரையில் தவழ்ந்து, மண்டியிட்டு, பல்முளைத்து, நடைபழகி, பேச ஆரம்பித்து பின் பள்ளிக்குச் சென்றது எல்லாம் அங்கிருந்துதான். பள்ளியில் படிக்கும் போதுகூட எனக்குப் பெரிய ஆசைகளெல்லாம் எதுவுமில்லை. அம்மாவைப்போல் ஒரு சாதாரணப் பெண்ணாக வாழ்ந்தாலே போதும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. இதற்குப் படிப்பு எனக்கு ஏறாததும் ஒரு காரணமாகக்கூட இருக்கலாம். அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்பட்டதும் இல்லை.
ஒரு நாள் நானும் வயதுக்கு வந்தேன். அப்போதுதான் அம்மாவின் முகத்தில் இனம்புரியா ஓர் அச்ச உணர்வு ஓடுவதை அறிந்தேன். அவளின் வாழ்க்கையின் அனுபவம் என்மேல் கீறலாக விழ ஆரம்பித்திருந்தது. என்னிடம் கண்டிப்பாக நடந்துகொள்ள ஆரம்பித்தாள். என் வயதொத்த பையன்களிடம் நான் பேசுவதையும் பழகுவதையும் முற்றாகத் தடை செய்தாள். நான் செய்யும் சின்னச் சின்ன தவறுகளையும் பெருசாகக் குறைகூற ஆரம்பித்தாள். அம்மாவைச் சிறுவயது முதலே பார்த்து வளர்ந்ததால் அம்மாவுக்குப் பிடிக்காத எதையும் முடிந்த அளவிற்குத் தவிர்த்தே வந்திருக்கிறேன்.
நானும் மகிழ்ச்சியாகத்தான் இருந்து வந்தேன். அம்மாவின் விருப்பப்படி முடிந்தளவு இருந்தும் வந்தேன். அப்பா இல்லாத ஒரு சூழலில் என்னை வளர்த்து ஆளாக்கி எனக்கு எந்தக் குறையும் வைக்காமல் பார்த்துக் கொள்ளும் அம்மாவிற்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என்பதை நான் நன்கு உணர்ந்திருந்தேன். பல நூறு தடவை அம்மா தன் வாழ்க்கையின் வலிகளை என்னிடம் சொல்லியிருக்கிறாள். அக்கம் பக்கத்து குடியிருப்பாளர்களிடம் அம்மா தன் சுகத் துக்கங்களைப் பகிர்ந்துகொண்டதையும் பல தடவை நான் கேட்டு அழுதிருக்கிறேன். வாழ்க்கை இவ்வளவு துன்பம் நிறைந்ததா? என என்னையே நான் பலமுறை கேட்டுக்கொண்டு தவித்துள்ளேன். அம்மாவின் கஷ்டங்களைப் பார்த்துப் பார்த்து வாழ்க்கையின்மேல் எனக்கு ஒருவித பயம் ஏற்பட்டுப் போனது. அந்தப் பயமே வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களில் நான் எனக்கான எந்த முடிவையும் எடுக்க முடியாத ஒரு சூழலையும் எனக்காக உருவாக்கிவிட்டதை நீண்ட நாட்களுக்குப் பிறகே அறிந்துகொண்டேன்.
அம்மா சொல்லும் அனைத்தும் எனக்கு வேதமாகிவிட்டிருந்தது. அம்மா ஒன்றை கறுப்பென்றால் நானும் கறுப்பு என்பேன். அம்மா அதையே வெள்ளை என்றால் நானும் வெள்ளை என்பேன். சிறுவயது முதல் அம்மா கூறி வந்த அனைத்தும் பசுமரத்தாணிபோல எனக்குள் பதிந்துவிட்டிருந்தது.
இப்போது எனக்குக் கணவராக வந்தவரும் அம்மாவின் விருப்பப்படியே எனக்கு அமைந்தவர்தான். நானாகத் தேடி இவரைக் கல்யாணம் செய்துகொள்ளவில்லை. அம்மா சொன்னாள். கல்யாணம் செய்துகொண்டேன். அவ்வளவுதான். அம்மா, வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை நிறைய பார்த்தவள். அனுபவித்தவள். எனக்காக வாழ்பவள். எனக்கு என்றும் நல்லதைத்தான் செய்வாள். என்மேல் இவளைவிட வேறு யாருக்கு அதிக அக்கறை இருந்துவிடப்போகிறது.
எனக்குக் கணவரான கண்ணன் டிரைவர் என்பவரைத் திருமணத்திற்கு முன் நான் பார்த்ததுக்கூட இல்லை. என் கனவிலும்கூட அந்தப் பெயரைக் கேள்விப்பட்டதுகூட இல்லை. அம்மாவுக்குத்தான் அவரைத் தெரியும். ஆவூன் கோப்பிக்கடை இருந்த இடத்தை ஒரு மேம்பாட்டு நிறுவனம் வாங்கிய பிறகு அங்கு இருந்த அம்மாவின் சிறிய கடையும் காணாமல் போனது. ஆவூன் ஹாலண்ட் வில்லேஜ் பக்கத்தில் புதுக்கடை திறந்தபோது அம்மாவை அழைத்து, அந்தப் பகுதிகளில் கடை வாடகை அதிகம் என்பதால் முன்புபோல் அம்மாவுக்கு உதவமுடியாத சூழலில் இருப்பதைச் சொன்னார். அதன்பிறகுதான் அம்மா வீடு வீடாகச் சென்று துணிகளை விற்கும் வியாபாரத்தில் இறங்கினார். அப்போதுதான் துணிகளைத் தேக்காவில் இருந்து வாங்கிவரும்போது வாடகை வண்டி ஓட்டுனர் கண்ணன் டிரைவர் அம்மாவுக்கு அறிமுகமாகியிருக்கிறார். அம்மாவின் வியாபாரத்தின் வருமானம் பெரும்பாலும் தவணை முறையிலேயேதான் இருக்கும். பெரும்பாலோர் மாதத் தவணையில்தான் காசு கொடுப்பார்கள். சில சமயம் துணிகளை வாங்கியவர்கள் தவணை முறைகளை இழுத்தடிப்பதும் உண்டு. இன்னும் சிலர் சொல்லிக்கொள்ளாமல் வேறு வீடு மாறிப்போவதும் உண்டு. இப்படிப் பல சமயங்களில், இந்தக் கண்ணன் டிரைவர் அம்மாவிற்குப் பணம் கொடுத்து உதவியிருக்கிறாராம். எப்படியோ கண்ணன் டிரைவர் அம்மாவுக்குப் பிடித்துப் போய் எனக்குக் கணவராக வரத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.
எனக்குப் பிடிக்குதோ இல்லையோ, அம்மாவுக்குப் பிடித்திருக்கிறது. மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக்கொண்டேன். என்னைவிட அதிக வயது என்பது ஆரம்பத்தில் என்னை அதிகம் உறுத்திக்கொண்டிருந்தாலும் அம்மா சொன்னதும் அடிக்கடி நினைவுக்கு வந்தது.
‘வயது ஒத்த உங்க அப்பனை நம்பி ஒடியாந்து நான் கஷ்டப்பட்டதுதான் மிச்சம். இவருக்கு என்ன குறைச்சல்? வயது கொஞ்சம் அதிகம்தான். ஆனா, நல்ல வருமானம். பணம் இருக்கு. உன்னை நல்லா வச்சிருப்பார். நீ ஆயுசுக்கும் மகிழ்ச்சியா இருக்கலாம்.’
ஆனால் அவர் வாடகை வண்டி நெடுந்தூர ஓட்டத்தில் பயணிப்பதால் வீட்டில் தங்குவதும் குறைவாகத்தான் இருந்தது. சிங்கப்பூர், ஜொகூர், மலாக்கா, கோலாலம்பூர், பினாங்கு என பெரும்பாலும் நெடுந்தூரம் ஓட்டமாகத்தான் இருந்தது. ஒரு வாடகை வண்டி ஓட்டுனராக கல்யாணம் செய்து கொண்டதிலிருந்து அவர் அப்படியேதான் இருக்கிறார். வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே என்னோடு இருக்கிறார். இந்த ஓராண்டு காலக்கட்டத்தில் எந்த வித மாற்றமுமில்லாமல் வாழ்க்கை அப்படியே அதன் போக்கில் போய்க்கொண்டிருக்கிறது.
தனிமை என்னை முழுமையாக அட்கொள்ளாவிட்டாலும்கூட, அவர் இல்லாத அந்த இரவுகள் எனக்கு வேதனையும் ஏக்கங்களும் மிஞ்சியதாகவே இருந்தன. பல இரவுகள் தலையணை மட்டுமே எனக்குத் துணையாகிப் போனது. தனிமையோடு சில வேளைகளில் பயமும் என்னோடு ஒட்டிக்கொள்ளும். எனக்குத் திருமணம் ஆனதிலிருந்து அம்மாவும் முன்புபோல் வீட்டில் அதிகம் தங்குவதில்லை. சிங்கப்பூரில் வாங்கும் துணிகளை ஜொகூருக்குக் கொண்டு சென்று விற்கும் அளவிற்கு முன்னேறிவிட்டாள். நானும் உன்னோடு வருகிறேனே என்றால்,
‘வேண்டாம் வேண்டாம். உம்புருஷன் எப்ப வருவார்னு தெரியாது. அவர் களைச்சி போய் வீட்டுக்கு வரும்போது நீ இல்லனா நல்லா இருக்காது. வீட்டுக் கதவ யார் திறந்து விடுவா? சாப்பாடெல்லாம் யார் கொடுப்பா’
என்பாள். அவருக்கு என்மேல் பெரிதாக ஈர்ப்பு எல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. வரும்போது வருகிறார். கட்டியணைக்கிறார். இரண்டு நாளில் போய்விடுகிறார். திரும்ப எப்போது வருவார் என்பது அவர் வாசலில் வந்து நிற்கும்போதுதான் உறுதியாகும். இப்போதெல்லாம் அடிக்கடி வயிறு வேறு வலிக்க ஆரம்பிக்கிறது. அப்போதெல்லாம் தீபரசத்தை எடுத்துத் தேய்த்து கொள்கிறேன். சில சமயங்களில் பக்கத்து வாசல் வசுந்தரா அக்காவும், முன்வீட்டு வாசல் சித்ரா அக்காவும் வலி அதிகமாக இருக்கும்போது எண்ணெய் தேய்த்து விடுவார்கள். இரவு வேளைகளில் அவரும் இல்லை. அம்மாவும் இருப்பதில்லை. திடீரென்று வலி வந்தால் என்னால் என்ன செய்ய முடியும்? இதை அவரும் இந்த அம்மாவும் ஏன் புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறார்கள்?
‘உன் புருஷன் இன்னும் வரலியா?’
பக்கத்து வாசல் வசுந்தரா முன்னால் நின்றாள். அவளைப் பார்த்ததும் எனக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. உதட்டோரம் சின்னதாகப் புன்னகையைத் தவழவிட்டு,
‘இன்னைக்குக் காணோம்’கா’
‘உங்கம்மா?’
‘இன்னைக்கு வர்றதா சொன்னாங்க, ஆனா இன்னும் காணோம், நீங்க எங்கக்கா, இந்த நேரத்துல?’
‘காக்கா கடைக்குப் போய் வெங்காயம் வாங்கிட்டு வந்திடுறேன்’
எனச் சொல்லிவிட்டு கடைப்பக்கம் நோக்கி நடந்தாள் வசுந்தரா அக்கா. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமெல்லாம் நல்ல பெண் என்ற பெயர் எடுத்திருந்ததால் அனைவரும் என்னிடம் அன்போடுதான் பழகுகிறார்கள். கணவன் அடிக்கடி வீட்டில் இருப்பதில்லை என்று தெரிந்திருந்து அன்போடு நலம் விசாரித்துவிட்டுச் செல்வார்கள். அவர்கள் வீட்டில் சமைத்ததைக்கூட சாப்பிடச் சொல்லிக் கொடுப்பார்கள்.
அம்மாவை இன்னும் காணவில்லை.
உடம்பு என்னவோ செய்தது. அசதியாக வேறு இருந்தது. அப்படியே பலகைகளில் மெதுவாகச் சாய்ந்து அடிவயிற்றில் கைகயை வைத்து எழுந்து நின்றேன்.
தூரத்தில் என் அம்மா வயது ஒத்த ஒரு பெண்மணி வீட்டை நோக்கி வந்துகொண்டிருப்பது தெரிந்தது. அந்தப் பெண் புதியவளாக இருந்தாள். இந்தக் கம்பத்தில் இதுவரை நான் அவளைப் பார்த்ததேயில்லை. அவளுடன் ஒரு பத்து வயது பையனும் நடந்து வந்துகொண்டிருந்தான். என்னருகே வந்த அந்தப் பெண்மணி,
‘இங்கே முன்பு நாசி லெமா, குவே எல்லாம் எல்லாம் விப்பாங்களே கனகம். அவுங்க பொண்ணு பேருகூட சாந்தி. அவங்க வீடு எங்கிருக்கு?’
‘நீங்க யாரு?’ நான்தான் கேட்டேன்.
‘நா கண்ணன் டிரைவரோட மனைவி’.