(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“அன்னம்மா! இந்த அதிசயத்தைக் கேட்டியா? என்னமோ எங்க வீட்டுக்காரி ரெண்டு மாசமா முழுகாம இருக்காளாம். அதுக்கு அவ பண்ணுற அட்டகாசத்தைப் பார்த்தா எனக்கு என்னமாத்தான் இருக்குது, தெரியுமா? தலையைச் சுத்தறதாம், மயக்கம் வரதாம், வாந்தி வரதாம் இன்னும் என்னவெல்லாமோ சொல்றா; ஏன்னா, வீட்டு வேலையைச் செய்வதற்கு நான் ஒருத்தி இருக்கிறேனோ இல்லையோ?” என்றாள் கங்கம்மா.
“என்னம்மோ அறியாதது! உன்னுடைய குழந்தை மாதிரி நினைச்சுக்கிட்டுப் போயேன்!” என்றாள் அன்னம்மா.
“போயும் போயும் நான் உங்கிட்டெ நியாயம் கேட்க வந்தேனே” என்று அவள்மேல் எரிந்து விழுந்துவிட்டு அடுத்த வீட்டு ஆண்டாளிடம் மேற்சொன்ன அநியாயத்தைத் தெரிவித்தாள் கங்கம்மா.
அவள் அதை கேட்டுவிட்டு “வீட்டு வேலைக்கு வேறே ஆளு இருந்தா, அவள் அப்படியா இருப்பா, இதுக்கு மேலேயும் இருப்பா! எல்லாம் அவனுங்க கொடுக்கிற செல்லம்!” என்று கங்கம்மாவுடன் ஒத்து ஊதினாள்.
கங்கம்மாவுக்குப் பொழுது விடிந்தால் இதே வேலை தான். அவளுக்குத் தன் தம்பி கந்தசாமியைப் பற்றியும், அவன் மனைவி வஞ்சியைப் பற்றியும் எவரிடமாவது ஏதாவது குறை சொல்லவில்லை என்றால் பொழுது போகாது. பட்டணத்தில் வாழ்ந்து வந்த அவள், தன்னுடைய கணவன் சண்டைக்குப் போய்விட்டதால் தம்பியின் வீட்டுக்கு வந்திருந்தாள்.
முதன் முதலில் அக்காளின் வருகையை அறிந்தபோது கந்தசாமி எவ்வளவோ சந்தோஷப்பட்டான். அக்கா வந்தால் வஞ்சிக்குத் துணையாக இருப்பாள் என்று அவள் நினைத்தான். தான் இருக்கும் நிலையில் அவள் வருவதைப் பற்றி வஞ்சிக்கும் முதலில் எவ்வளவோ சந்தோஷமாய்த் தானிருந்தது. அதெல்லாம் இப்பொழுது பகற் கனவாகி விட்டது. அவள் வந்ததன் பயனாகத் தங்கள் வாழ்க்கையில் அவர்கள் அனுபவித்து வந்த தித்திப்பு, கசப்பாக மாறியதுதான் மிச்சம்!
கங்கம்மாவுக்குக் கபாலி என்றொரு பிள்ளை. பிள்ளை என்றாலும் பிள்ளை, மணியான பிள்ளை. வாய் ஒரு நிமிஷங் கூட அசையாமல் இராது.
அன்று வஞ்சி கூழுக்காகக் கம்பு மா அரைத்துக் கொண்டிருந்தாள். யந்திரத்திலிருந்த மா கொஞ்சங் கொஞ்சமாக விழுந்து கொண்டிருக்கும் போதே கபாலி அவற்றை யெல்லாம் கபளீகரம் செய்து கொண்டிருந்தான். தன் வேதனையை எவ்வளவோ தூரம் சகித்துக் கொண்டு, அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாள் வஞ்சி. மனித இதயம் மண்ணாங்கட்டியா, மாறுதல் இல்லாமலிருப்பதற்கு? அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
“பச்சை மாவை இப்படித் தின்னா வயித்துக்கு என்ன ஆகும்?” என்று கேட்டபடி, அந்தப் பிள்ளையின் கையைப் பிடித்துத் தள்ளினாள்.
உடனே அது அழுதுகொண்டே அம்மாவிடம் சென்று முறையிட்டது. இந்த மாதிரி ஒரு நல்ல சந்தர்ப்பத்தைக் கங்கம்மா நழுவ விடுவாளா? திடுதிடுவென்று ஓடிவந்து, ஏண்டி உங்க அப்பன் வீட்டுச் சொத்து என்னடி கெட்டுப் போச்சு? அந்தக் குழந்தை தன் மாமன் வீட்டிலே அத்தனை மா எடுத்துத் தின்னச் சொந்தமில்லையா?” என்று அவள் வஞ்சியின் தாடையில் ஓர் இடி இடித்தாள். அந்த இடியில் வஞ்சி கீழே சாய்ந்து விட்டாள்.
அடுத்த கணத்தில் அங்கே வந்த கந்தசாமி, “அக்கா! அந்தப் பெண்ணு என்னத்துக்கு அப்படிப் படுத்துக் கிடக்குது!” என்று கங்கம்மாவை விசாரித்தான்.
“அது என்னத்துக்கோ?” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டுச் சென்றாள் அவள்.
இந்தச் சமயத்தில் தன் கணவனின் குரலைக் கேட்டு முக்கி முனகிக் கொண்டே எழுந்தாள் வஞ்சி.
“என்னா உடம்புக்கு? என்று வஞ்சியை விசாரித்தான் கந்தசாமி.
“உடம்புக்கு ஒண்ணுமில்லே; கூழுக்கு இந்த மாவை அரைச்சிக்கிட்டு இருந்தேன். என்னமோ தலையைச் சுத்தறாப்போல இருந்தது; கொஞ்ச நேரம் படுத்துக்கிட்டேன்!” என்றாள் வஞ்சி.
வஞ்சி எப்பொழுதுமே இப்படித்தான். அவள் வீட்டில் நடக்கும் சண்டை சச்சரவுகளைப் பற்றித் தன் கணவனிடம் ஒன்றுமே சொல்ல மாட்டாள்.
“அக்கா! நீதான் அந்த மாவைக் கொஞ்சம் அரைச்சுக் கொடுக்கக் கூடாதா?” என்றான் கந்தசாமி.
“அரைப்பேண்டா, அரைப்பேன்! ஏன் அவளைக் கூடக் கொஞ்சம் தூக்கி உன் பக்கத்திலே உட்கார வைக்கட்டுமா?” என்றாள் கங்கம்மா.
கந்தசாமி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டான். அவன் மனத்தை மாற்றுவதற்காக “வெய்யில்லே அலைஞ்சிட்டு வந்தாயே, கொஞ்சம் தயிரைப் போட்டுக் கூழைக் கரைச்சுக்கிட்டு வரட்டுமா?” என்று கேட்டாள் வஞ்சி.
“எடுத்துக்கிட்டு வா!” என்றான் கந்தசாமி.
உள்ளே போய்ப் பார்த்தால் தயிரைக் காணோம். அதைக் கபாலி காலி செய்துவிட்டிருந்தான். ‘கேட்டால் பூனையின் மேல் பழியைப் போடுவார்கள். கேட்காமல் இருப்பதே நல்லது’ என்று தீர்மானித்து, வெறும் கூழைக் கரைத்துக் கொண்டு வந்தாள் வஞ்சி.
“என்னா வஞ்சி! தயிரு இல்லையா?”
“இருந்தது; இப்போது பார்த்தாக் காணோம். பூனை குடிச்சிட்டாப் போல இருக்குது” என்று தன் நாத்தனார் சொல்லப் போவதைத் தானே சொல்லி வைத்தாள் வஞ்சி.
அப்பொழுது “இல்லை, மாமா! நான்தான் குடிச்சுட்டேன்!” என்று சமர்த்தாகச் சொல்லிக் கொண்டே வந்தான் கபாலி.
“அட, என் கண்ணு! குடிச்சிட்டியா? – போ!” என்று தன் வயிற்றெரிச்சலை வெகு லாவகமாக வெளியிட்டான் கந்தசாமி.
“சேர்ந்து வாழ்வது தான் சிறந்தது என்கிறோம். ஆனால், வாழ்க்கையில் பார்க்கப்போனால் அதைப் போன்ற தொல்லை வேறு ஒன்றும் கிடையாது என்று தோன்றுகிறது. நமது சுற்றத்தாருடன் நாம் பிரிந்து வாழும்போதோ, அல்லது பிரிந்து செல்லும்போதோ இருக்கிற ஆசையும் அன்பும் சேர்ந்து வாழும்போதோ, அல்லது சேர வரும் போதோ எங்கே இருக்கிறது?
அன்று வஞ்சியைப் பிரசவத்துக்காக அழைத்துச் செல்ல அவளுடைய அம்மா வந்திருந்தாள். அப்பொழுது “நீங்க என்னாத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போறீங்க? இங்கேயேதான் இருக்கட்டுமே; எல்லாம் நான் பார்த்துக்கிறேன்!” என்றாள் கங்கம்மா. அவள் போய்விட்டால் வீட்டு வேலைக்கும் சண்டைக்கும் ஆள் கிடைக்காதே என்ற கவலை அவளுக்கு!
இது தெரியாத வஞ்சி, “ஆமாம், அம்மா எனக்குக் கூட அவரை விட்டுவிட்டு வரத்துக்கு என்னமோ மாதிரியாயிருக்குது இங்கேயேதான் இருக்கிறேனே, எல்லாம் இந்த அம்மா பார்த்துக்கிறாங்க!” என்றாள்.
“என்ன இருந்தாலும் நாலுபேர் நாலு சொல்லுவாங்க!” என்று சொல்லி வஞ்சியைத் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டாள் அவளுடைய அம்மா.
அவள் வாழ்க!
வஞ்சி பிரசவித்து மூன்றாவது மாதம் நடந்து கொண்டிருந்தது. கந்தசாமி தன் மனைவியை அழைத்துப்போக வந்தான். அவனுடன் செல்ல வஞ்சிக்கு எவ்வளவோ ஆசை. ஆனால் கங்கம்மாவை நினைத்தபோது, அங்கே சென்று அவளுடைய வம்புக்கு ஆளாவதைக் காட்டிலும் இங்கேயே இன்னும் இரண்டு மாதங்களாவது தொல்லையில்லாமல் இருக்கலாமே என்று அவளுக்குத் தோன்றிற்று. இதைக் குறிப்பாகக் கந்தசாமியின் காதிலும் போட்டு வைத்தாள். அவனுக்கும் அவள் சொல்வது ஒரு விதத்தில் நல்லதென்றே பட்டது.
மறுநாள் கந்தசாமி தான் மட்டும் ஊருக்குச் செல்வதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்த போது அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் எழுதியிருந்தது இதுதான்;
சிரஞ்சீவி கந்தசாமிக்கு, ஆசீர்வாதம்.
சண்டைக்குப் போனவர் திரும்பி வந்துவிட்டார். நேரே பட்டணத்திற்கு வந்த அவர், அங்கே தனக்கு வேலை பார்த்துக் கொண்டு, இங்கே என்னை அழைத்துப்போக வந்திருக்கிறார். இந்தக் கடிதம் கண்டவுடன் நீங்கள் உடனே வந்து எங்களை அனுப்பி வைக்கவும்.
கங்கம்மா.
இதைப் படித்ததும், “வஞ்சி! இப்பவே நீயும் என்னுடன் புறப்பட வேண்டியதுதான்!” என்று துள்ளிக் குதித்தான் கந்தசாமி. அவனுடைய தோள்களை ஆசையுடன் பிடித்துத் தொங்கிக் கொண்டு, “ஏன், அந்தக் கடிதாசியிலே அப்படி என்ன எழுதியிருக்கு?” என்று கேட்டாள் வஞ்சி.
விஷயத்தைச் சொன்னான் கந்தசாமி. அதைக் கேட்ட வஞ்சியின் வதனம், காலதேவனைக் கண்ட கமலம் போல் பூத்தது!
இந்தக் காட்சி எந்த நாத்தனாருக்கும் பிடிக்காத காட்சிதான்; ஆனால் ஏன் பிடிக்கவில்லை என்றுதான் தெரியவில்லை!
– 1944-06-25
– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.
– முல்லைக் கொடியாள், மூன்றாம் பதிப்பு: 1952, ஸ்டார் பிரசுரம், சென்னை.