நாதங்கள் கோடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 2,493 
 

‘ஹால்டிங் பிளேஸ்’ அல்லாத இடத்தில் வந்தும் வராததுமாகப் ‘பஸ்’ திடீரென்று நின்றது. சிறிது அமைதியாக இருந்த பிராணிகளிடையே தம்மையறியாத பரபரப்பு ஏற்பட்டது. ‘பெல்லை அமுக்கி , அமுக்கி அடித்தாலும் உரிய இடத்தில் நிற்பாட்டாத சாரதி யாருக்காகவோ பரிந்து இடையிலே நிற்பாட்டியது சிலருக்கு வியப்பை அளித்தது.

முன் சீட்டில் அமர்ந்திருந்த கருணாகரன் தனது யோசனை வெள்ளத்துக்கு ஒரு கையணை இட்டவாறே மெல்லத் தலையைத் திருப்பி வாசற்புறமாக வெளியே பார்த்தான். ஒருவரும் இறங்கவில்லை . நேரமுஞ் சிறிது கழியவே இயந்திரப் பாகத்தை உற்றுப் பார்த்தான். சாரதியின் முகம் விகாரக் கடலில் தோய்ந்து நிமிர்ந்தது தெரிந்தது.

“என்ன பாருங்கள் – ஏன் நிற்பாட்டிப் போட்டியள்”

“பிறேக் டவுனாப் போச்சு” சாரதி மிகவும் தன்மையாகப் பதிலளித்து விட்டு அமைதியானார்.

சாவகச்சேரிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த பஸ் நாவற்குழி வெளியிலே பாலத்தருகில் தவஞ் செய்யத் தொடங்கியது. நிரம்பி வழிந்த சனக்கூட்டம் தொப் தொப் பென்று பஸ்ஸை விட்டுக் குதித்தது. இறங்கிய ஒவ்வொருவரும் ஏதேதோ முனகிக் கொண்டார்கள்.

‘இவங்கள் என்னவாவது சொல்லித் துலையட்டும்! நான் இப்ப வீட்டை போறத்துக்கு வழி?’

கருணாகரனுடைய நினைவுத் தொடரைத் தொடர்ந்து அவனுடைய இடது கரம் சட்டைப் பையைத் தடவியது. ‘கொண்டக்டர்’ கொடுத்த பஸ் டிக்கட் மாத்திரமே கிடந்தது.

வைத்த கை வாங்கும் போது இதயம் பலமாக அடிப்பதை உணர்ந்து கொண்டான் கருணாகரன். அத்தனை அனையதுறைகளிலும் தோல்வி கண்டவனின் நெஞ்சம் இளகித் துடியாமல் வேறு என்ன செய்யக்கூடும்?

‘இங்கிருந்து நுணுவில் மட்டும் போறதெண்டால் நடக்க வேணுமே! வான் காரிலை போறதெண்டால் – ம்..!”

“என்னப்பா! என்ன செய்யுங்கள்? இத்தினை சனங்களையுங் கொண்டு போறத்துக்கு வேறை வழியில்லையா?” அடுத்த பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போகின்ற புதிய தெம்பில் ஒருவர் கேட்டார். கூட்டம் அவரை ஆதரித்தது.

“கொஞ்சம் பொறுங்கள். நாங்கள் வேணுமெண்டு பஸ்ஸை நிற்பாட்டயில்லை. எங்களை ஓடச் சொல்லித் தந்த பஸ் தானாக நிண்டு போச்சு. எங்களை அதுக்கு என்ன பண்ணச் சொல்லுறியள்? வேறை பஸ் ஏதும் வந்தால் பாப்பம்.”

கொண்டக்டர் பலவித உணர்வுகளை மனத்திற் கொண்டவராகச் சொல்லி முடித்தார்.

“சேச்சே! யாழ்ப்பாணத்துக்கு மனுஷன் வருவானா ? உலகத்திலையுள்ள வசதிகளிலே போகங்களிலை ஒண்டுமே இல்லாத கஞ்சபூமி.” பத்திரிகை மூலமாக உலகைச் சுற்றி வந்த ஒருவர் சொன்னார்.

கருணாகரன் சொற்பதூரந் தள்ளித் தெரிந்த பெரிய பாலத்தை நாடி நடந்தான்.

‘விமலா இண்டைக்கு வெள்ளைணையாக வரச் சொல்லிச்சுது. பாவம் ! வருத்தக்காறக் குழந்தையும் அவளும் என்ன பாடுபடுகுதுகளோ?

மேற்குவானம் குருதி பரப்பி ஓய்ந்தது. அதன் வெட்டிடங்களில் காய்ந்த புண்ணைச் சுற்றிய கருமை கவ்வத் தொடங்கியது. விழிகள் உயர்ந்து மேற்றிசையைப் பார்க்க, பார்க்கக் கருணாகரனுடைய மனமும் வேதனையில் துடிதுடிக்கத் தொடங்கியது.

அவனுடைய கண்கள் அப்படியே வனத்தினின்றும் பூமியிற் படிந்து கிடந்த தார் வீதியிற் படிய – தூரத்தில் வந்து கொண்டிருந்த வாகனத்தின் கூட்லைட்’டின் மூலம் பஸ்தான் என்று தெரிற்து கொண்டாள். மள மளவென்று பஸ் நின்ற இடத்தை நோக்கி நடை போட்டான்.

“எல்லோரும் நிரையாக வாருங்கள்!” வந்த பஸ்ஸின் கொண்டக்டர் உத்தரவிட்டார். வெள்ள அகதிகளுக்கு மா மூடைகளையும், பாண்பட்டர் சரைகளையும் விமானங்களிலிருந்து உருட்டிவிட்ட அமெரிக்கர் ஒருவர் இப்படிச் சொல்லியிருப்பாரோ என்னவோ?

கருணாகரன் ஒருவாறு தொத்திக் கொண்டு வீடு வந்து சேர்ந்து விட்டான் . இந்த பஸ்ஸை விட்டால் வேறு கிடைக்காது என்பது அவனுக்குத் தெரியும். எனவே, கொண்டக்டருக்குப் பற்களை அடகுவைத்து முதலாவதாக ஏறினான். அதனால் தான் பயணத்தைத் தொடர்ந்தவர்களிற் பாதிப்பேரை விட்டுவிட்டு அவனும் சிலரும் வந்துவிட்டனர்.

“சிச்சிச்சி – கண்டறியாத உத்தியோகம் – நாளாந்தமாக பஸ் பயணம் செய்யிற தெண்டால் முடிஞ்ச காரியமா?” கருணாகரன் அலுத்துக் கொண்டதைக் கேட்ட அவனுடைய மனைவி விமலா, “என்ன, வந்ததும் வராதுமாகப் புறுபுறுக்கிறங்கள்” என்றபடி வந்தாள்.

“ஒண்டுமில்லை. இந்த பஸ்காரங்கடை திருவினையாட்டை நினைச்சன்.”

“அட! அது தெரிஞ்ச விஷயமாச்சே!” விமலா அலட்சியமாகச் சொன்னாள்.

“மம் ! மம்! பிள்ளைக்கு எப்படியிருக்கு?”

தான் பஸ்காரரைப் பற்றிச் சொன்னதை. டிப்போ மனேஜர்’ மாதிரியே அலட்சிய பாவத்துடன் தன் மனைவியும் எடுத்து கொள்வாள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஏமாற்றத்தைச் சுமந்தபடி பிள்ளையைப் பற்றி விசாரித்தான்.

“என்னை செய்யிறது? நம்ம தலையெழுத்து! யாழ்ப்பாணப்பரியாரி ஆரட்டையு மெண்டாலும் கொண்டு போகாமல் ஏலாது போலிருக்கு. ஒருக்கா ஜுரம் கூடுது. பிறகு ஒருக்கா குறையது. புது மருந்துச் சாமானையாவது வாங்கலாம் எண்டால் ஆளில்லை. கையிலை ஒரு சதமும் இல்லை.”

விமலா இயல்போடு அடுக்கிக் கொண்டே போனாள். கருணாகரன் காதைப் பொத்தாத வரையில் கேட்டுக் கொண்டிருந்தான்.

“இஞ்சேருங்கோ, உங்களாலை முடியாததும் இருக்குமா? தம்பித்துரை கடையிலை, குடிநீர்ச் சாமானையாச்சும் வாங்கியாங்களன். அவன் பூட்டியிருக்க மாட்டான்.”

“மண்ணாங்கட்டி” வெறுப்போடு கூறினான் அவன்.

“மத்தியானம் ஒரு கப் ரீயோடை காலங்தள்ளிப் போட்டு கிடந்த முப்பது சதத்தையும் பஸ்ஸுக்குக் கொடுத்தன்; கிடக்கிறது பஸ் டிக்கட்தான். வேணுமெண்டால் எடு! ம்!”

‘என்ன பகிடியோ பண்ணுறியள்?”

“அப்ப என்னை என்னதான் செய்யச் சொல்லுறாய்?”

“போய்க் கேட்டுப் பாருங்களன்.”

“என்னாலை ஏலாது!”

“அப்ப பிள்ளை?”

“செத்துத் தொலையட்டும்.”

“ஆங்!” அவள் விம்மி விசும்பினாள்.

கருணாகரன் உடுப்புக்களைக் களைந்து அங்கங்கே எறிந்து விட்டு, சாரத்தை உடுத்தபடி வெளியே வந்தான். தான் வெறுப்போடு சொன்ன வார்த்தைகள் மறுபடியும் திரும்பி வந்து இதயத்திற் சம்மட்டியாக அடித்த வேதனையுடன் நடந்தான்.

கருணாகரன் பத்திரிகாலயம் ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருந்தான். பட்டதாரியாக இருந்தும் அதற்குரிய வேலையோ, அன்றி சம்பளமோ இன்னும் அவனுக்குக் கிடைக்கவில்லை. நெடுநாள் வேலையில்லாமல் இருந்தவன், இருந்த எழுத்தார்வத்தை முன் வைத்து ‘கலாபூமி” பத்திரிகையிற் போய்ச் சேர்ந்தான்.

அவனுக்குக் கிடைக்கும் நூற்றி நாற்பது ரூபாவைக் கொண்டு ஒரு தாய், ஒரு மனைவி , ஒரு பிள்ளை, தான் என்ற நான்கு உயிர்களுக்குச் சோறு போட வேண்டிய சங்கடமான நிலைமை. அதைவிடப் பட்டதாரி என்ற அந்தஸ்தைக் காப்பாற்ற வேறு, வேறு தொல்லைகள்.

கருணாகரனைப் பொறுத்த வரையில் இந்த உலகம் அவ்வளவு இனிப்பாகத் தோன்றவில்லை. நாளுக்கு நாள், மணிக்கு மணி கவலைகளும் தொல்லைகளும் அவனைச் சூழ்ந்தன.

“இனியும் இனியும் உயிரோடை இருப்பதே ஆபத்து. எனக்கு மட்டும் ஒண்டும் வராது. வேலையும் நல்லதாயில்லை வாழ்க்கையும் – ம்! உப்பைவிடக் கொஞ்சம் இனிப்பு…நான் சாக வேண்டியதுதான். எண்டைக்காவது ஒருநாள் சாகப் போறவன்….ஆமாம் இண்டைக்கே போயிட வேண்டியதுதான்.”

தன்னையும் மீறி வார்த்தைகளை உதிர்த்தபடி நடந்து கொண்டிருந்தான் கருணாகரன். அது அங்கொடைப் பல்கலைக்கழக’ வீதியில் நடந்தாற் போலிருந்தது.

நினைவுகள் சூழ்ந்தன.

“பெத்த பிள்ளையை….அதுகும் ஒண்டே ஒண்டெண்டு வந்ததைச் செத்துப் போகட்டும் எண்டு சொன்ன பாவி…நான் செத்தாத்தான் தீரும். சே! விமலா என்ன பாடுபட்டிருப்பாள்.”

“ஆரட்டைப் போய்க் கேக்கிறது! கடன் தண்ணியெண்டு வாங்கினால் குடுக்கவும் வழி வேணுமே. நூற்றுநாற்பது ரூபாவோடை முப்பது நாட்களை ஒட்ட வேணுமே…”

“எட சேமிப்புத்தான் இல்லை. திருப்தியோ இல்லையா – காப்பிட்டண்டாவது. இருக்க விதி இல்லையோ ? குழந்தையொன்டு அதுக்கெண்டு வருத்தம் பிணி வேறு…?”

கருணாகரன் நினைவுச் சுமையுடன் சந்திக்கு வந்து விட்டான். சந்தியின் திருப்பத்தில் கண்ணுக்குப் புலப்பட்ட படிப்பகத்தின் போர்ட் பலகை கண்ணில் விழுந்தது. கண்களின் திருஷ்டிப் பாதையில் கால்கள் நடக்க எத்தனித்த வேளை. மனம் தண்டவாளப் பாதைக்கு இழுத்தது. அவனுடைய மனத்தின் துன்பச் சுமைகளை அங்கேயே இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாகக் கண்ணை மூடிவிடலாம் என்ற நினைப்பு அறுத்துக் கொண்டிருந்தது.

வாசிகசாலைக்குள் நுழைந்தால் அங்கேயிருந்து அரட்டையடிப்பவர்களுடைய பேச்சின் லயிப்பில் சிறிது மூழ்க ஒரு வேளை மனம் மாறலாம் என்ற கருத்தும் அவனைக் குடைந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் பாதை விளம்பரத்துடன் சாய்ந்தான்.

சந்தியின் மின்சார விளக்கு அவனுடைய முகத்திற்படிந்திருந்த கறையையும் கழுத்துப் புறமாக வடிந்தோடிய வியர்வையையும் ஏனையவர்களுக்கும் காட்டிக் கொடுத்தபடி காற்றில் இங்குமிங்கும் ஆடியது. அது தன்னுடைய அந்தரந்தெரியாமல் மற்றவர்களைப் பற்றிச் சிலாகிக்கும் சில பிறவிகளின் நினைப்பை அவனுக்குக் கொடுத்தது.

கருணாகரன் ஏதோ முடிவுக்கு வந்தவனாகப் படிப்பகத்துள் நுழைந்து வெறுமனே கிடந்த வாங்கில் அமர்ந்தான். யாரையோ கொடுக்க, கொலை செய்யத் திட்டமிட்டிருந்தவனின் பாவங்கள் கருணாகரனின் முகத்திலும் நிழலாடின. பற்களை அழுத்தியவாறே சுவர்க்கடிகாரச் சங்கிலி முள்ளைப் போன்று கண்களை அங்குமிங்கும் அடிக்கடி அலயவிட்டான்.

பத்திரிகையைக் கையில் வைத்திருந்த ஒருவர், “காதலியை இழந்து நான் மட்டும் வாழ்வதா? பிரிவு தாங்காமல் இளைஞன் பொலிடோல் அருந்தி மரணம்” என்று வாசித்தார்.

“இல்லையண்ணை தெரியாமல் கேக்கிறான். இவங்களுக்கென்னவாம்? ஆ? ஆம்பிளைப் பிள்ளையள் எங்கையன் நாடுபெரிய தேசங் காணப் போய்ப் பிழைக்கிறதுதானே! ம்! காதலியாம் – அவள் செத்திட்டாள் எண்டால் இவனும் சாகவேணுமே?…”

படித்ததை நிறுத்திவிட்டு விமர்சனஞ் செய்தார் அவர்.

“உதுக்கை உந்தத் தீவுச் சனங்கள் மெத்த மோசம். சொல்ல வேண்டாம். மனிசிக்கு அடிச்சுப்போட்டு தாங்கள் பொலிடோல் குடிப்பாங்கள்…அவங்களுக்கெண்டு பொலிடோலும் வந்து கிடக்கு…”

“எண்டாலும் தன்னைத்தானே கொலை செய்கிறது பாவம் மட்டுமில்லை. அப்பட்டமான சுயநலமுங் கூட, ஏனெண்டால் சாகிறதாலை தன்ரை பிரச்சினைகளை கஷ்டநஷ்டங்களைச் சமாளிக்கலாம் எண்டு நினைக்கிறாங்கள். அது முட்டாள்தனம். இருக்கிறதுக்களுக்குக் கவலையையும் கஷ்டத்தையும் உண்டாக்க தானஞ்செய்யிறாங்கள் இப்பிடித் தற்கொலை செய்யிற ராஸ்கல்கள்…”

கருணாகரனுக்கு என்னவோ போலிருந்தது. அப்படியே எழுந்து வெளியே போனான். “என்ன தம்பி பேசாமல் போறியள்” என்று அலுவர் கேட்டதும் அவனுடைய காதுகளுக்குக் கேட்டதாகத் தெரியவில்லை.

“இவங்களுக்கென்ன சும்மா இருந்தண்டு அலட்டுறாங்கள். தலையிடியுங் காய்ச்சலும் தனக்குத் தனக்கு?”

“ஆருக்குத்தான் வாழ ஆசையில்லை. எனக்கு மட்டுமென்ன? படித்த போதெல்லாம் எத்தனை கனவுகள்? எத்தனை கற்பனைகள்!! பல்கலைக்கழகத்தாலை வெளிக்கிட்டதும் இந்தப் பத்திரிகைத் தொழிலையா செய்வன் எண்டிருந்தன்? கார் என்ன? பங்களா என்ன? சேச்சே! அத்தனையுங் கனவு!”

‘நான் முட்டாள் ! பந்தங் கிந்தம் எண்டு பிடிச்சிருந்தாலாவது ஒரு மாதிரி உயர்ந்திருப்பன் , இப்ப அதுகுமில்லை காதலிச்சதுக்குத் தண்டனையாக விமலா எனக்கு மனைவி. அவளோடை வாழ்ந்ததுக்குத் தண்டனை வருத்தக்காறக் குழந்தை?

‘நான் இல்லாட்டி இவை வாழமாட்டினமா ? அம்மாவுக்கு நான் மட்டுமா பிள்ளை. இன்னும் ஐஞ்சு பேர் நல்லாத்தானே இருக்கினம். அவையோடை போய் இருக்கட்டுமன். விமலா – ? ம்! என்ன நினைவிலை பிள்ளைப் பெறுகிறவையாக்கும்! மாமா மாமியவை பென்ஷனோடை சுகமா இருக்கினம். மகளையுங் கூட்டி வைச்சிருக்கலாம் தானே.’

‘மொத்திலை நான் ஒண்டிக்கட்டை. போதும் போதாததுக்கு ஆயிரம் தெரிஞ்ச மனிசர்கள். ஒவ்வொருத்தரும் குசலம் விசாரிக்கிறதோடை’

கருணாகரனுடைய கால்கள் சிலிப்பர்க் கட்டைகளைத் தாவித்தாவித் தாண்டிக் கொண்டிருந்தன. அந்த நடைக்கு ஒத்திசையாக நினைவுகளும் விட்டு விட்டுத் தொடர்ந்து கொண்டிருந்தன. மனஉளைச்சல் மிஞ்சிப் போனதால் தொடர்ந்து தீர்மானிக்க அவனால் முடியவில்லை.

‘ஏன் வீண் யோசனை? யாழ்ப்பாணத்திலையிருந்து இப்ப மெயில் கோச்சு வரும். ஸ்டேஷனை விட்டு இன்னுங் கொஞ்சந் தள்ளிப் போனால் விஷயம் சரி. என் கதையும் சரி – ‘

தீர்க்கமான முடிவுடன் நடந்து கொண்டிருந்தான் கருணாகரன். அவனுடைய கண்கள் நேரே நோக்கிய வண்ணம் இருந்தன. மெயில் வருவது போலவும், தான் அசையாமற் படுத்திருப்பது போலவும் கற்பனை செய்து பார்த்தான். அடுத்தடுத்த நினைப்புக்களில் மனம் வைரமாகிக் கொண்டேயிருந்தது.

கருணாரன் ஒரு மைல் தூரத்தைக் கடந்து விட்டான். புகையிரதப் பாதையின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்து காட்டுக் கற்றைகள் புதிய உலகை அடிக்கடி நினைவுபடுத்தின. பாதையெங்குங் கவிந்திருந்த காரிருட் போர்வை அகலாத கண்களை மேலும் விரிய வைத்தது. ஒன்றுமே புரியாத உணர்வில் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.

கண்டி வீதியிற் சென்று கொண்டிருந்த வாகனங்களின் வெளிச்சம் அவன் நிற்பதைக் காட்டிக் கொடுத்தது. உயர்ந்து வளராத பற்றைகளின் தோற்றத்துக்கமைய, தண்டவாளத்தில் இருந்தான் அவன்.

அருகே, சிறிது தூரத்தில் முனகல் கேட்டது. கருணாகரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அது ஒரு பெண்ணின் விசும்பல் ஓசை என்ற உணர்ந்ததும் ஒலியை நாடி விரைந்தான்.

“யாரது?”

கருணாகரன் கேட்ட அதிர்ச்சியில் துடித்துப் பதைத்து எழுந்த அப்பெண்ணுருவம், அவனை அந்த இருட்டில் அடையாளங் கண்ட வேகத்திற் பாதை வழியே ஓடத் தொடங்கியது.

“இந்தா! உன்னைத்தான் நில்…நில்…” கருணாகரனுடைய அழைப்புச் சென்ற வேகத்தில் அவளுடைய ஓட்டமும் மெயில் வண்டியைப் பார்த்து அதிகரித்தது.

கருணாகரன் தன் முழுப் பலத்தையும் பயன்படுத்தி ஓடத் தொடங்கினான். தண்டவாளப் பாதையை ஊடறுத்த தார் வீதிச் சந்தியைப் பெண்ணுருவங் கடப்பதற்கும், கருணாகரன் ‘லபக்’ கென்று அவளைப் பிடிப்பபதற்குஞ் சரியாக இருந்தது .

முகத்தை மூடியிருந்த தாவணியை விலக்கினான் .

“ஐ..ய்..யோ!”

தெய்வமாக அவனுக்கு கொடுத்த படிப்பினையோ என்னவோ? ஒருநாளுங் கலங்காத அவனுடைய கண்கள் வெடித்த இதயத்து இரத்தத்தைப் பெருக்கத் தொடங்கின.

“ஐயோ விதியே – இதுவம் ஒரு சோதனையோ?”

“என்னை மன்னிச்சிடுங்கள்! அழாதீர்கள் என்னாலே தாங்க முடியுதில்லை,”

“அழாமல் என்ன செய்ய? நீயே இப்பிடித் துணிஞ்ச பிறகு”

“நானா துணிஞ்சேன்! நீங்கள் எண்டு சொல்லுங்களன். பொருளில்லாட்டி உலகத்திலை இருக்கக் கூடாது எண்டு ஆரு சொன்னான்? பிறக்கையிக்கை பணத்தைக் கட்டியாண்டா பிறக்கிறாங்கள்? பிள்ளைக்குக் குடிநீர் வாங்கித்தரச் சொன்னது எங்களுக்குப் பெருங் கஷ்டமாய்ப் போச்சு. கடன்படக் கூடாதெண்டீங்களே! அரசாங்கமே நாட்டுக்கு நாடு பிச்சை எடுக்கிற மாதிரிக் கடன் படுகுது. நீங்கள் பட்டால் என்னவாம்? அரசாங்கக் கடன் திருப்பிக் கொடுக்காமல் விடலாம். நீங்களும் திருப்பிக் கொடுக்க மாட்டிங்களா?”

“வி…ம…லா?”

“அன்பாக ஆசையாக இரண்டு பேருடைய இளமையின் ஆசைகளை , கனவுகளை உருவமாக்கி வந்த பிள்ளையை…… ஐயோ அத்தான் ! எந்த மனசோடை செத்துப் போகட்டும் எண்டு சொன்னீங்கள். அதுதான் போகட்டும்… காதலோடு காதலாக நாங்களாவது மிஞ்சியிருக்கிறம் எண்டு மனமாறலாம். றோட்டிலை வந்தப்போ உங்களுடைய எண்ணத்தைக் கடவுள் எனக்குக் கேட்க வைச்சார். எங்கை போறீங்கள் எண்டு எட்டிப் பாத்தன். அப்பா..அப்பா…” என்று விமலா விக்கி விக்கி, விம்மி விம்மி அழுதாள் !

“என்ன விமலா?”

ஒரு பெண்ணுக்கு இந்த உலகத்திலை புருஷன்தான் கடவுள். அவனுடைய இன்பந்தான் அவளுக்கு இன்பம். அப்படியிருக்க நீங்கள் உங்களுடைய துன்பத்தைச் சுமந்து கொண்டு சாகத் துணிந்தபோது நான் மட்டும் இருக்க வேண்டுமா….? உங்களை உயிரோடு பலி கொடுக்கவா உங்களை அன்று முதல் நேசித்தேன்? ஒன்றாகப் படிக்கும் போதும் என் உயிரையே மானசீகமாகத் தந்தேன! இல்லை! இல்லை!”

“நீங்கள் போன பிறகு, உங்களுடைய அன்பு போன பிறகு நான் உயிரோடை இருக்கிறதிலை கொஞ்சமும் பொருளில்லை. அறுதலி என்று காதில் விழாமலும், விதவை எண்டு காதில் விழவும் என்னைக் கொல்லாமற் சொல்வார்களே? எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு நான் இருப்பேனா?”

“பைத்தியக்காரி! நான் சும்மா ஏதாவது கதையெழுதப் புளட்’ கிடைக்கும் எண்டு வந்தால்…. நீ”

கருணாகரன் சாமாளிக்க முயன்றான். மனச்சாட்சி உறுத்தியது. தம்மைத் தாமே மென்றபடி கண்கள் நீர் பெருக்கின.

அவன் அழுதான்!

“விமலா…விமலா…உன்னை உயிரோடு பிணமாக்கி இருந்தேனே….உன்னை உயிரோடு…என்னை மன்னிச்..”

விமலா அவனுடைய வாயை மூடினாள். “மன்னிக்க வேண்டியவர் நீங்கள். நானில்லை ! உங்களை நீங்கள் மன்னிப்பீங்களா?……… அது முடியுமா?”

“அதுக்காகத்தான் உங்களுக்கு முந்தியே நான் போய்விட நினைச்சன். தோட்டங்களுக்காலை வந்து….வந்து….” அவள் மறுபடியும் வெதும்பத் தொடங்கினாள். கருணாகரனுடைய கைகள் நீண்டன. விமலா ஓடி முன் பெயர்ந்தாள்.

இரவும் பகலும் மறுபடியுஞ் சந்தித்தன.

“விமலா…என் உயி…” வார்த்தைகளிற் சொல்ல முடியாமல் கைகளாற் சொல்லி அணைத்தான் அவளை.

அவனுடைய நினைவில் பஸ்ஸில் நடந்த நிகழ்ச்சி தான் முதலில் விழுந்தது.

“ஆமாம்! பயணந் தொடர்ந்தவர்கள் ஒரே நேரத்திலே தொடங்கினாலும், ஒரே நேரத்திலும் ஒன்றாகப் போய்ச் சேர்வதில்லை. வாழ்க்கையென்ற பஸ்’ தான் இடையிலே நிற்கும். காலமென்ற வீதி நெடுகலும் போய்க் கொண்டேயிருக்கும்.”

கருணாகரன் வாய்விட்டுச் சொன்னான் .

“என்னங்க புளட் கிடைச்சுட்டுதா?” என்றபடி சிரித்தாள் விமலா.

“வாயைப்பாரன்’ என்று கொண்டே அவளை அணைத்த கை நெகிழாமல் சீண்டப் போனான் கருணாகரன்.

ஒளிவெள்ளத்தைத் தள்ளிக்கொண்ட வந்த மெயில் வண்டி “பூம் பூம்” என்ற ஓசையுடன் அவ்விருவரையுந் தாண்டிச் சென்றது. அது அவர்களையே எள்ளிய நாதமா? – அவையேன்ன ஒன்றா – இரண்டா?

– அங்கையன் கதைகள் (சிறுகதைத் தொகுதி), முதற்பதிப்பு: 2000, அங்கையன் பதிப்பகம், கொழும்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *