உதயமாகி உடலுக்கு மென் சூட்டை தினிக்கும் ஒரு காலைப்பொழுது சிலர் சூரியன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கக் கூடும்,சிலர் சூரிய உதயத்தைக்கண்டு தொழுகின்ற இஷ்றாக் தொழுகையில் ஈட்பட்டைருக்கக்கூடும்.
நான்..வேண்டப்பட்ட ஒரு நண்பனின் மகனைப்பார்ப்பதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருக்கிறேன்.
“இன்று லீவு போல”
”ஏன் சைக்கிளில் செல்கிறீர்கள்..”
“மோட்டார் சைக்கிளுக்கு ஏதாவது பழுதா..”
இப்படியான கேள்விகளுக்கு கட்டாயம் பதில் சொல்லவேண்டியவனாக சென்று கொண்டிருக்கிறேன்,கேள்விக்குரியவர்கள் எனக்கு நன்கு அறிமுகமான ஊரார்கள் என்று சொல்வதைவிட நான் கடைமையாற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் என்று சொல்வதே மிகவும் பொருத்தமாகும்.இவர்கள் என்மீது கொண்ட அக்கறையால் கேட்கின்றார்களா,சொந்த அல்லது ஊர்க்காரர்கள் என்ற தோறனையில் கேட்கிறார்களா, என்று அறிவதற்கு இன்னும் மனிதர்களைப்பற்றி நிறயப் படிக்கவேண்டியிருக்கும்.
இலக்கை அடைந்து விட்டேன் வாசல் கதவு பூட்டிக்கிடந்தது “வீட்டில் யாரு..” கேற்றில் ஒரு தட்டுத்தட்டி கூப்பிட்ட குரலுக்கு ஒரு ஜந்து அல்லது ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஓடோடி வந்து “சலாம்” சொல்லி விட்டு ”யாரைத்தேடுகிறீர்கள் உள்ளே வாங்க வாப்பா தொழுகின்றார்கள்” எனது பதிலைக்கூட எதிர்பாராமல் அந்த சிறுவன் நடந்து கொண்ட விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்த்து,இந்த வயதில் நன்றாக வழக்கப்பட்டிருக்கின்றான் அல்ஹம்துலில்லா அல்லாவுக்கே புகழனைத்தும் என மனதிற்குள் நினைத்துக்கொண்டு உள்ளே ஒரு நாற்காலியில்அமர்ந்து கொள்கின்றேன்,
“அஸ்ஸலாமு அலைக்கும் சார் நான் இஷ்ராக் தொழுகை தொழுதுகிட்டு இருந்தேன்”
“வ அலைக்குமுஸ்ஸலாம் கபூர் இப்ப எப்படி சுகம் எக்சிடன் பட்டு மூனுமாதமாவது இருக்கும் என்ன..”
“இப்ப பரவாயில்ல சார் நடக்கக் கூடியதாக இருக்கு நாளையோட மூனுமாசமும் பத்து நாளுமாகிது நின்று தொழமுடியாவிட்டாலும் இருந்து தொழக்கூடியதாக இருக்கு அல்ஹம்துலில்லாஹ்”
“அப்படியா..விஸ்னஸ் எல்லாம் எப்படி”
’”கொஞ்சம் கஷ்டம்தான் சார் வங்கியிலயும் அந்த ஒடிய (மேலதிகப்பற்று) வேளைக்கு போடஏலாமல்போய்யிற்று இன்ஸா அல்லாஹ் அடுத்தமாதம் போட்டிடுவன் சார்”
“நான் அதற்கு வரவில்லை எல்லோருக்கும் தெரிந்தவிசயம்தானே வருத்தம் பாக்கத்தான் வந்தநான் கஷ்ட்டம் யாருக்கும் சொல்லிப்போட்டா வரும் அதப்பத்திகவலைப்படவேண்டாம் உயிர்பிழைத்ததே பெரிய விசயம் அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்தினாலே போதும்”
நலம்கள்..ஊர்நிலைமகள்…அரசியல் அலசல்கள்……இப்படி ஒரு காலைப்பொழுதே விடைபெற்றது.
“அவசரமாக விடியக்காலையில எங்கேபோயிற்று வாறீர்கள்..”
இது என் மனைவியின் கேள்வி
“நம்மட காசிம்காக்காட மகன் கபூர் மூன்றுமாதத்திகுமுன் எக்சிடன் பட்டானே அவனபாக்கப்போனேன்”
“அதற்கு இப்பதான ஒங்களுக்கு டைம் கிடைச்சிச்சி”
அடுத்த வசனம்… ”மனுசன வருத்தம் பாக்கபோறதெண்டா நேரகாலத்தோட போகனும் இல்லாட்டி விட்டிடனும்”இப்படி அவள்சொல்வதற்கு முன் நான் வாத்றூமுக்குள் சென்று கதவை மூடிக்கொள்கிறேன்.
இனி சாப்பட்டு பரிமாறும்போது அவகளை மறந்திருப்பாள்.
சூரியன் உதயமாகி பதினைந்து நிமிடங்களுக்குப் பின் தொழுவதுதான் இஷ்ராக் தொழுகை இதை தொழுதுவந்தால் ஹஜ்,உம்றா செய்த நன்மை கிடைக்ப்பதுடன் அன்றைய தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றி வைக்கிறான் என சொல்லப்படுகிறது
இந்தத் தொழுகையைத்தான் கபூரின் வீட்டுக்கு நான் சென்றவேளை தொழுது கொண்டிருந்தான்.
வங்கிக்கு வரும் வாடிகையாளர்களில் குறிபிட்டு சொல்லக்கூடிய ஒரு சிலர் அவர்களின் நடைமுறைகளை பொறுத்து வங்கி நிர்வாகம் அவர்களை ”குட்கஷ்டமர்”அதாவது சிறந்த வடிக்கையாளர்கள் என இனம் கானும்,அப்படி ஒருவராகத்தான் கபூர் இனம்கானப்பட்டிருந்தார்.
இன்னும் சில குட்கஷ்டமர்கள் இருக்கின்றார்கள் முகாமையாளர்களிடம் நன்கு நெருக்கமாக இருப்பார்கள் ,அந்த நெருக்கத்தைப்பற்றி பலகருத்து வேறுபாடுகளும் ஊழியர்களிடையே ஏற்படுவதும் உண்டு ,சிலவேளை அவைகள் கருத்துவேறுபாடுகளுக்கப்பால்…அவன் நல்லா முகாமையாளரை கவனிக்கான் என்ற ஒத்தகருத்தாகவும் இருப்பதும் உண்டு.
இதில் கபூர் இரண்டாவதுக்குள் இடப்பெற்றாலும் நேற்றிலிருந்து நான் அந்தக்கருதை நீக்கிக்கொண்டேன்.
இதில் வேடிக்கை என்ன வென்றால் கபூர் குட்கஷ்டமர் என்று தெரிந்தபிந்தான் எனக்கு காசிம் காக்காடமகந்தான் கபூர் என்றே தெரியவந்தது,
சிலவேளை கபூர் தனது தொழிலை அனேகமாக வெளிஊரில்செய்வது ஒருகாரணமாக இருக்கக்கூடும்.,
தனது மூத்தமகன் வெளிஊரில் நகைக்கடை போட்டிருப்பதாகவும் ஊரில் அநேகமாக அவரைத்தெரியாது என்று என்றோ ஒரு நாள் காசிம்காக்கா என்னிடம் சொன்ன ஞாபகம்.
ஆனால் ”கபூர்” தான் என்று ஒரு போதும் அவர் சொன்னதுமில்லை எனக்கும் பெயரைக்கேட்கவேண்டும் என்ற அவசியமும் இருக்கவிலை, கபூர் வெளிஊரில் தொழில் செய்வதால் நான் வேலை செய்யும் வங்கிக்கு தொடர்பில்லாதவராக இருக்கக்கூடும் என்றகணிப்புத்தான்.
நேற்று…காலை கபூர் நடந்து கொண்ட விதம் அதை விட அவனது சிறியமகனின் பழக்கவழக்கம் எல்லாமே எனக்குள் கபூரைப்பற்றி நல்ல அபிபிராயத்தை ஏற்படுத்தி இருந்தமை தவிர்க்கமுடியாமையே.
நான் இடமாற்றம் பெற்று ஒரு வருடமாக வெளிஊரில் வேலை பார்ப்பதால் கபூர் பற்றிய நடவடிக்கைகளை தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
காலையில் ஜந்து மணிக்கு எழுந்தால் தான் காலை எட்டு மணிக்காவது வேலை செய்யும் இடத்திற்கு செல்லலாம்.அதே மாதிரித்தான் மாலையில் ஜந்து மணிக்காவது வெளியானால்தான் குறைந்தது ஏழு மணிக்காவது வீட்டுக்கு வரலாம்,
நேரத்தைப்பார்க்கிறேன் மாலை ஜந்தை தாண்டி விட்டது,
கைபேசி அலறியது… இந்த நேரம்.யாராக இருக்கும்….
ஊரில் இருந்து சக ஊழிய நண்பன் எடுத்திருந்தான்
வீட்டுக்கு செல்லும் அவசரத்தில் அதிகமாக பேசுவதை தவிர்த்துக்கொண்டபோதும்
“மச்சான் ஒனக்கு விசயம் தெரியுமா அவன் கபூர் ..’
“யாரு..”
“அவன்… நீ அடிக்கடி சொல்வாயே குட்கஷ்டமர் ..”
“ஆமா..என்ன நடந்தது..”
”மச்சான் கிட்டத்தட்டபல மில்லியன் பெறுமதிக்கு கரட் குறைந்த நகைகளை ஈடுவைத்துவிட்டு ஆள் தலைமறைவாம் ,ஒக்ஷன்ல (ஏல விற்பனை) கூட சாமான்திரும்பிட்டாம் கொழும்பில இருந்துவந்த ”ஓடிற்” கூட கைவிரித்திட்டாங்களாம் ,நகைகளை மூண்றுமாதத்திற்கள் மீளப்பெறாதவிடத்து சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும் என சொல்லிவிட்டார்களாம் மச்சான் நீ ஒருக்கா அவன் கபூர்ர வீட்டபோய்பாரு..பொலிசும் தேடுவதாக கேள்வி”
”ஓ கே மச்சான் நான் இன்றைக்கே பாக்கன்”
இந்தக்காலத்தில யாரைத்தன் நம்புவது கபூரா இப்படி …நான் நேரடியாக அவனது வீட்டுக்கே செல்கின்றேன்,
அன்று காலை சலாம் கூறி என்னை வரவேற்ற கபூரின் கடைசி மகன்
இன்று…”யார் வேணும் வாப்பா வீட்டில இல்ல….” எவ்வளவு மாற்றம்…
சொல்லி விட்டு ஓடப்போனவனை “மகன் வீட்டில் யாரு இருக்காங்க கொஞ்சம் பேசவேணும் வரச்சொல்றீங்களா “
உள்ளே போனவன் “வாப்பா உம்மா இருக்காங்க என்ன விசயம் என கேட்டாங்க’
“அப்படியா கொஞ்சம் பேசவேணும் என்று சொல்லுஞ்க மகன் ”
”சரி”
“என்ன தம்பி என்ன விசயமா பேசவேணும்”இது அவனின் வாப்பா கபூரின் உம்மா ,
“வந்து நான் வங்கியில இருந்து வாறன் ஒங்கட மகன் நகை அடகுவச்ச விடயமாக….”
நான் சொல்லிமுடிப்பதற்குள்…
“நான் தெரியாமல்தான் கேக்கிறேன் நகைககள அடகுவைக்கும்போது உரஞ்சிப்பார்க்கத்தேவையில்லை என்று சொல்லி இருக்காங்களா.. தரமானநகை என்றுதானே கொடுத்திருக்கீங்க இப்பவந்து நீங்க சொல்றத்த நாங்க ஏத்துக்கொள்ளமாட்டம்,நீங்க எடுக்கிற நடவடிக்கைகளஎடுங்க…”
எனக்கு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை
தங்கத்தை விட ஒங்கட மகனை தங்கம் என நினைத்ததுதான் தவறு என எனக்குள் முணுமுணுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்கின்றேன்.
வீட்டில்..”ஏன் இவ்வளவுலேட்” எனது மனைவிக்கு…குட்கஷ்டமரை சந்திக்கபோனதாக விளக்கம் சொல்லவேண்டி இருக்கும்.