கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 24, 2021
பார்வையிட்டோர்: 5,373 
 

அந்த முதல் அனுபவத்தையும், முதல் இரவையும் அவனால் மறக்க முடியவில்லை. 28 வயதில் முதன்முறையாக அவன் ஒரு பெண்ணை ஸ்பரிசித்தான்.

அந்தப் பெண் அவனுடைய மனைவி இல்லை என்பதோ, அவர் ஒரு பாலியல் தொழிலாளி என்பதோ அவனுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. அவனது பாலியல் விருப்பங்கள் நிறைவேறியது ஒரு பாலியல் தொழிலாளியிடம் என்றாலும் அவனுக்கு எந்தவித குற்ற உணர்ச்சியோ வருத்தமோ ஏற்படவில்லை. அந்த முதல் அனுபவம் ஒருவாரம் வரை அவனைப் பரவசத்தில் வைத்திருந்தது.

ஏதோ பெரிதாகச் சாதித்து விட்டது போலவும், சொர்க்கத்தில் இருப்பது போலவும் ஓர் அரசனைப் போலவும் உணர்ந்தான். எட்டாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தான். வீட்டின் மூத்த மகனான அவனது திருமணத்திற்கு பெற்றோர் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர்.

குஜராத் மாநிலத்தில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கை குறைவு எனவே இங்கு பெண் கிடைப்பது சிரமமானது. திருமணம் செய்து கொண்டால்தானே சமூகத்தில் மதிப்பும் கிடைக்கும், ஒருவருடைய பாலியல் விருப்பங்களும் நிறைவேறும்? ஆனால் இயல்பான ஆசை கொண்டவர்களுக்கு திருமணம் ஆகாவிட்டால் என்னவாகும்?

அவன் ஒரு தனியார் நிறுவனத்தில் சிறிய சம்பளத்தில் வேலை பார்த்ததால் பலர் அவனை ஒதுக்கினர். கால் காசு சம்பாதித்தாலும் அரசாங்க உத்தியோகம் உசிதம் என்று மக்கள் நம்பிய காலகட்டம் அது. அந்த நம்பிக்கை இவனை பெரிதும் பாதித்தது. தவிர குடும்பச் சொத்து என்று எதுவும் பெரிதாகக் கிடையாது.

உங்களுக்கு சொத்து என்று எதுவும் பெரிதாக இல்லையே? என அவனுக்குப் பெண் கேட்கச் செல்லும்போது அவனது பெற்றவர்கள் பல கேள்விகளை எதிர் கொண்டனர். ஆனால் அவனைவிட குறைவாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவனது நண்பனுக்கு திருமணமானது. ஏனென்றால் அவனது அப்பாவிடம் இருபது ஏக்கர் நிலம் இருந்தது.

பொதுவாக அவனும், நெருங்கிய நண்பர்கள் மூவரும் சேர்ந்து மது அருந்துவார்கள். ஒருநாள் அவர்கள் மது அருந்திக் கொண்டிருந்தபோது, “ஏண்டா கல்யாணம் ஆகலை என்றால் என்ன குடியா மூழ்கிவிடப் போகுது? பொண்ணு கிடைக்கிற வரைக்கும் வாழ்க்கையை அனுபவிக்காம ஏன் தள்ளிப் போடற? அதுக்கு வேற வழியா இல்லை?” என்று அவனது துக்கத்தைப் போக்கும் வழியைச் சொன்னார்கள் நண்பர்கள்.

“டேய் உலகம் ரொம்ப அழகானதுடா, வா உனக்கு அதைக் காட்டுகிறோம்..” என்று கூறி அவனை ஒரு பரத்தையர் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கே உடலை முருக்கேற்றும் வகையில் ஆபாசப் படங்களைப் பார்க்க வைத்த நண்பர்கள், திருமணம் செய்து கொள்வதும் இதற்குத்தான் என்று சொன்னார்கள். அங்குதான் ஒரு பாலியல் தொழிலாளியைச் சந்தித்தான். முதல் அனுபவமே நன்றாக இருந்தது. ஒருவாரம் கழித்து மீண்டும் ஆசை கட்டுக்கடங்காமல் பொங்கியது. எனவே பாலியல் தொழிலாளிகளை அணுகுவதைத் தொடர்ந்தான்.

வயிற்றுப் பசிக்கு ஹோட்டலுக்கு போவதைப்போல், உடலின் தேவைகளை தணித்துக்கொள்ள பரத்தையர்களிடம் செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டான். ஐந்து ஆண்டுகள் தொடர்ந்த அவனது இந்தப் பழக்கம் வீட்டிற்கு தெரிய வந்தபோது, அவன் அப்பாவின் கோபம் அணுகுண்டாய் வெடித்தது.

தோளுக்குமேல் வளர்ந்த அவனை அவரால் அடிக்க முடியவில்லை. எனவே அவனை திட்டி தன்னுடைய ஆத்திரத்தை தணித்துக்கொண்டார். “அவமானமாக இல்லையா? அம்மா சகோதரிகளைப் பற்றி சிறிதாவது நினைத்துப் பார்த்தாயா? இனிமேல் சமூகத்தில் அவர்கள் எப்படி நடமாடுவார்கள்? யாரையாவது தலை நிமிர்ந்து பார்க்க முடியுமா?” என்று விளாசினார். அவன் ஏதோ கொலைக்குற்றம் செய்தது போன்ற உணர்வை அவனுக்கு ஏற்படுத்தியது.

உடனே அப்பா ஒரு பெண்ணை திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு, “கணவனை இழந்த பெண்; ஐந்து வயதில் மகன் இருக்கிறான். நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண். உனக்கு அவளைத் திருமணம் செய்து வைக்கலாம்.. பெண்ணின் தந்தைக்கும் உன்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் சொல்லிவிட்டேன்..” என்றார்.

“இப்போது நன்றாக சம்பாதிக்கிறாய்.. அவளுடன் நல்லபடியாக குடும்பம் நடத்து..” என்று அப்பா அறிவுரை சொன்னார்.

ஆனால் இந்த காலகட்டத்தில் அவனுக்கு வேறு ஒரு பெண்ணை பிடித்துப் போய்விட்டது. அவன் வழக்கமாகச் செல்லும் ஹோட்டலில் அந்தப் பெண் வேலை செய்தாள். ஹவுஸ் கீப்பிங் பணியில் இருந்தாள். பார்க்க நன்றாக இருப்பாள்.

அவன் பாலியல் உறவுக்குக்காகவே ஹோட்டலின் வாடிக்கையாளராக இருப்பதை தெரிந்து கொண்ட அவள், திருமணம் செய்து கொள்ளக் கோரிய அவனது வேண்டுகோளை நிராகரித்துவிட்டாள். அந்தப் பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டது அவனுக்கு மிகுந்த வருத்தமளித்தது. விரக்தி ஏற்பட்டது. பிறகு அவனது வாழ்க்கையே தனிமையாகிவிட்டது.

திருமணம் இல்லாமல் தனியாக வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்ந்தான். பிரச்சினைகளையும், அவமானங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. வேறு வழியில்லாமல் வீட்டிலிருந்து வெளியேறி விட்டான். பெற்றவர்கள் அவனை வீட்டிற்கு மறுபடியும் அழைத்து வந்தனர். அவர்கள் அவனால் எதிர்கொள்ளும் அவமானங்களை காணச் சகிக்கவில்லை.

சமூகத்தில் உள்ளவர்களக்கு அவன் ஏகடியம் பேசும் பொருளாகிவிட்டான்.

இப்போது அவன் தன் மனதிற்கு பிடித்தாற்போல் வாழ்கிறான். பாலியல் தொழிலாளிகளிடம் செல்கிறான். சிலமுறை அவன் முதலாளியும் அவனுடன் அந்த இடங்களுக்கு வருவார். திருமண பந்தத்தைத் தாண்டி உறவு வைத்துக்கொள்ளும் பெண்களிடமும் தொடர்பு வைத்திருக்கிறான்.

கட்டுப்பாடான நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவன் இன்று குடும்பமே இல்லாமல் வாழ்கிறான். ஆனாலும் தனிமையில் வாடவில்லை. திருமணம் என்பது அவன் வாழ்க்கையில் எட்டாக கனியாகிப்போனதால், அவன் பாலியல் இச்சைகளை பல பெண்களிடம் தீர்த்துக் கொள்கிறான்.

வாழ்க்கை இயல்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது அவன் ஒரு நாடோடி. திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே போய்விட்டது. மாதம் அறுபதாயிரம் சம்பாதிக்கிறான். எந்தவொரு குறையும் இல்லை; குற்ற உணர்ச்சியும் இல்லை.

ஒருவேளை அவனுக்குத் திருமணமாகி இருந்தால் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று தெரியாது. ஆனால் இன்று சமுதாயத்தில் அவன் நேர கோட்டில் வாழாமல் சுதந்திரமாக, ஒரு நாடோடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *