கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 12, 2021
பார்வையிட்டோர்: 7,233 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜனவரி 1, 1993:

அப்பா! இந்த சுமித்ராவின் முகம்தான் எவ்வளவு வசீகரம் நிறைந்தது! அழகும், புத்திசாலித்தனமும் ஒருங்கே அமைந்ததனால் வந்த வசீகரமது. நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவளுடைய சுபாவமும் இனிமையானது. எல்லோரிடமும் சகஜமாகப் பழகுகிறாள். வேலையில் கெட்டிக்காரி. எத்தனை சீக்கிரம் முடிவெடுக்கிறாள்! இவ்வளவு தெளிவாக சிந்தித்து. தைரியமாக செயல்படும் பெண்ணை நான் இதுவரை கண்டதில்லை. இந்த சிறுவயதிலேயே அஸிஸ்டெண்ட் மானேஜர் பதவிக்கு வந்து விட்டாள். அவள் கோயம்புத்தூர் கிளையிலிருந்து இங்கு வந்து ஒரு சில மாதங்களே ஆகியிருந்தாலும், நான் அவள்பால் ஈர்க்கப்படுவது எனக்குத் தெரிகிறது. ஆனால் அவள்? ஒப்புக்கொள்வாளா? பயமாக இருக்கிறது. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுகிறேனோ!

மார்ச் 15, 1993:

பழகப் பழக நிச்சயமாகத் தோன்றுகிறது. சுமித்ரா எனக்கு தகுந்த வாழ்க்கைத் துணையாக இருப்பாள். நான் அவளுக்கு தகுதியானவனா என்பதுதான் என் சந்தேகம். எங்கள் இருவருடைய கருத்துக்களும் பல விஷயங்களில் ஒத்துப் போகின்றன. ஆனால் அவளுக்கு என் மேல் ஈடுபாடு உள்ளதா? தெரியவில்லையே! ஊரில் இருந்து அம்மா வேறு கடிதம் போட்டிருக்கிறாள். “எத்தனை நாளைக்குத்தான் நீ இப்படியே இருப்பே, ஒண்ணு, ஓம் மனசுக்குப் பிடிச்ச பொண்ணா பாத்து பண்ணிக்கோ, இல்ல, என்னையாவது பாக்க விடு. தவிர, என் அக்கா பெண் சங்கீதாவுக்கு என் ஆஃபீஸிலேயே யாராவது நல்ல பையனாக பார்க்கச் சொல்லி எழுதியிருக்கிறாள். அவளுடைய இரண்டாவது கோரிக்கைக்கு தான் ஏதாவது செய்யலாம். ஆனால் முதலாவது? சுமித்ராவை பற்றி ஒன்றுமே தெரியவில்லை. பார்த்தால் பிராமணப் பெண் மாதிரிதான் இருக்கிறாள். ஆனால் இந்தக் காலத்தில் எதையும் நிச்சயமாக சொல்ல முடியாது. ஜாதியில் உயர்ந்தது. தாழ்ந்தது என்பதெல்லாம் அபத்தம் என்பது என் சித்தாந்தம். ஆனால் கலப்புத் திருமணத்தில் எனக்கு உடன்பாடில்லை. வாழ்நாள் முழுவதும் ஒன்றாக குடித்தனம் நடத்துவதென்றால் இருவருடைய பழக்க வழக்கங்களும் ஒத்துப்போவது அவசியம். சுமித்ராவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாமல், அவள் மனதில் என் பொருட்டு இருக்கும் எண்ணத்தைத் தெரிந்து கொள்ளாமல் அம்மாவுக்கு என்ன எழுதுவது? எழுதினேன். “என்னுடைய கல்யாணத்தைப் பற்றி அப்புறம் பார்க்கலாம். சங்கீதாவுக்கு தகுந்த பையன் எங்கள் ஆஃபீஸில் இருக்கிறான். பிரபாகர் என்று பெயர். நல்ல களையான முகம். என்னை விட இரண்டு மூன்று வயது சிறியவன். கெட்டிக்காரன். ஒரு கெட்டப் பழக்கமும் கிடையாது. முன்னுக்கு வருவான். நான் மெதுவாக பேச்சு கொடுத்து பார்க்கிறேன்.”

ஏப்ரல் 1, 1993:

பிரபாகர் விஷயத்தில் ஏமாந்து விட்டேன். அவன் வேறு ஜாதி. நல்ல வேளை! கல்யாணப் பேச்சை எடுப்பதற்கு முன் விஷயம் தெரிந்தது. ஆனால் இன்று இதைவிட முக்கியமான விஷயம் ஒன்று நடந்தது. ‘லஞ்ச்’ டயத்தில் நானும், சுமித்ராவும் காண்டீனில் சந்தித்துப் பேசும் போது தெரிய வந்தது. அவளுடைய அப்பாவின் பெயர் ராகவாச்சாரியாம்! பிறகு என்ன! சீக்கிரமாக அவள் மனதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 2, 1993:

அம்மாவிடமிருந்து மறுபடியும் கடிதம் வந்திருக்கிறது. ஒரு பள்ளிக் கூட வாத்தியாரின் நான்காவது பெண்ணின் ஜாதகம் பொருத்தியிருக்கிறதாம். பெண் நன்றாக இருக்கிறாளாம். பத்தாவது பாஸ் செய்து விட்டு, டைப்ரைட்டிங் பாஸ் பண்ணியிருக்கிறாளாம். அம்மா எழுதுகிறாள், “நீ படிச்சு பெண்ணுக்கு ஆசைபடுவேன்னு தெரியும். என்ன செய்யறது! இப்பொழுதெல்லாம் இரண்டாந்தாரம்னா எல்லாரும் தயங்கறா.” ஏற்கனவே எனக்கு இருந்த பயம் இப்பொழுது அதிகமாகி விட்டது. சுமித்ராவை போன்ற பெண்ணுக்கு எத்தனையோ நல்ல வரன் கிடைக்கும். என்னை என்ன தான் சின்ன வயது என்றாலும் தாரம் இழந்தவனை அவள் ஏற்றுக் கொள்ளுவாளா? எப்படியோ கேட்டு விட வேண்டும். கடவுளே! அவள் சம்மதிக்க வேண்டும்!

ஏப்ரல் 4, 1993:

இன்று நல்லதோர் சந்தர்ப்பம் கிடைத்தது சுமித்ராவிடம் பேச. இருவரும் ஆஃபீஸ் வேலையாக வேறொரு கம்பெனிக்கு சென்றோம். வேலை முடிந்து வெளியில் வருகையில் அவளை காபி சாப்பிட ஹோட்டலுக்கு அழைத்தேன். ஏ.ஸி. ரூமில் அமர்த்து நிறைய பேசினோம். நான் என்னைப் பற்றின விவரங்களை கூறினேன் – திருமணமான மூன்றாம் வருடம் என் மனைவி சாலை விபத்தில் மரணமடைந்தது. என்னுடைய நான்கு வயது மகள் தாற்காலிகமாக என் மாமியார் வீட்டில் வளருவது. ஆழ்ந்த அனுதாபத்துடன் கேட்டுச் கொண்டாள். சற்று நேரம் பொது விஷயங்களை பேசிய பிறகு கேட்டாள், “நீங்கள் மறுமணத்தைப் பற்ற சிந்தித்துப் பார்க்கவில்லையா?”. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சிரித்தபடி கூறினேன், “நான் செய்து கொள்வது இருக்கட்டும். உங்கள் திருமணக் கனவுகள் நான் தெரிந்து கொள்ளலாமா?”. அவள் புன்னகைக்கவில்லை. சலன மற்ற முகத்தோடு கூறினாள், “நான் இன்னும் மறுமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை. ஐ ஹாவ் தாட் ஃபவுண்ட் த டயம் ஸோஃபார்”, நான் அதிர்ச்சியை முகத்தில் காட்டாமல் மறைத்தேன். பிறகு அனுதாபத்துடன் கூறினேன், “ஸாரி, நீங்கள் கணவரை இழந்தவர் என்று எனக்குத் தெரியாது”. அவள் காபியை குடித்தபடி சொன்னாள். “இழக்கவில்லை, விவாகரத்து செய்து விட்டேன்.” எனக்கு மேலும் அதிர்ச்சி. வெட்கம் வேறு. அவசரப்பட்டு விதவையென்று கணித்துவிட்டோமே என்று. மறுபடியும் ‘ஸாரி’ சொல்லக் கூட நா எழவில்லை. மௌனமாக வெளியே வந்து பிரிந்தோம்.

எனக்கு இன்று இரவு தூக்கமே வராது போலிருக்கிறது. மனம் சஞ்சலப்படுகிறது. சுமித்ரா விவாகரத்து பெற்றவளா? என்ன நடந்திருக்கும்? சற்று முன்பின் இருந்தாலும் அவள் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டு போயிருக்கக் கூடாதா? இவளுக்குப் பொறுமை குறைவோ? ஆஃபீஸில் கூட மிகவும் கறாராகத்தான் இருக்கிறாள். அது எனக்கு பிடித்து இருக்கிறது. ஆனால் அவள் மனைவி ஆன பிறகு வீட்டில் எடுத்ததற்கெல்லாம் சட்டம் பேசினால் எனக்கு ஒத்து வருமா? என் முதல் மனைவி சித்ரா இவள் அளவுக்கு கெட்டிக்காரி இல்லை. ஆனால் அவளை பேசி வழிக்கு கொண்டு வர முடியும். சுமித்ரா மிகவும் பிடிவாதக்காரியாக இருப்பாளோ? ஆஃபிஸில் நன்றாக பழகுகிறாளே! வீடு வேறு. ஆஃபீஸ் வேறு. ஏன் இவள் திருமணம் முறிந்தது. விவாகரத்து வாங்கிக் கொண்டு தனித்து வாழ எவ்வளவு தைரியம் வேண்டும்? அப்படிப்பட்டவள் தன்னிச்சையாக நடந்து கொள்ள மாட்டாள் என்பது என்ன நிச்சயம்? மனம் குழம்புகிறது.

ஜூன் 6, 1993:

இப்பொழுதெல்லாம் சுமித்ராவிடம் அதிகம் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் அவன் இன்னமும் என்னை ஈர்க்கிறாள். ஆனாலும் அவளை மணம் செய்து கொண்டால் சரிபட்டு வருமா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. பேசாமல் அம்மா சொன்ன பெண்ணையே மணந்து கொண்டு விடலாமா என்று கூட ஒவ்வொரு சமயம் தோன்றுகிறது.

ஜூன் 10, 1993:

என்னுடைய சித்தப்பாவின் பெண் இந்து இன்றைக்கு கோயம் புத்தூரிலிருந்து வந்திருக்கிறாள். அவள் ஒரு பிரபல வக்கீல். ஏதோ கேஸ் விஷயமாக வந்திருக்கிறாள். வேலையை முடித்துக்கொண்டு என்னை மாலை என் ஆஃபீஸ் வாசலில் சந்திப்பதாக சொல்லியிருக்கிறாள். அவளுக்காக காத்திருக்கையில் சுமித்ரா ஆஃபீஸ் வாசலிலிருந்து பஸ் ஏறுவதை பார்த்தேன். அதே சமயம் இந்து ஆட்டோவில் வந்து இறங்க. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டு கை ஆட்டினர். அதற்குள் சுமித்ராவின் பஸ் கிளம்பி விட்டது. எனக்கு ஒரே ஆச்சரியம். இந்துவுக்கு சுமித்ராவை தெரியுமா? ஆமாம், சுமித்ரா கோயம்புத்தூரில் இருந்தாளே! இந்துவை விசாரித்தேன், “அந்தப் பெண் எங்கள் ஆஃபீஸில்தான் வேலை செய்கிறாள். உனக்கு எப்படி தெரியும்? உன் ஃபிரெண்டா?”. “நன்றாகத் தெரியும். அவள் என்னுடைய கட்சிக்காரி. அவளோட விவாகரத்து கேஸ்ல நான்தான் அவ வக்கில்” என்றாள் இந்து. எனக்கு அந்த கேஸ் பற்றின விவரங்களை தெரிந்து கொள்ள ஆவல். ஆனால் கேட்க என்னவோ போலிருந்தது. தவிர, கேட்டாலும் இந்து கூற மாட்டாள். தன் கேஸ் விவுயத்தைப் பற்றி அவள் தன் கணவரிடம் கூட மூச்சு விட மாட்டாள்.

இருவரும் ‘பீச்’சில் காற்று வாங்கு கையில் மெதுவாக பேச்சைத் தொடங்கினேன். “சுமித்ரா மிகவும் ஸ்மார்ட் கால் இல்லையா?” இந்து உடனே கூறினாள், “நாட் ஒன்லி ஸ் மார்ட். ஷீ இஸ் எ வெரி நைஸ் கர்ல். மிக தைரியசாலி. ஒரு மோசமான கணவரோடு எப்படியாவது குடித்தனம் நடத்த முயன்று, தோற்றுப் போய் கிளம்பி வந்தவள். அப்படி இருந்தும் அவள் தன் மனசுல கசப்பு உணர்ச்சிகளை தங்க விடல. அதுக்காகவே அவளை நான் அட்மையர் பண்றேன்”. இந்து போடும் எடை நாற்றுக்கு நூறு சரியாக இருக்கும் என்று எங்கள் குடும்பத்தில் பிரசித்தம். அவ்வளவுதான் என் மனம் மறுபடியும் தள்ள ஆரம்பித்து விட்டது.

ஜூன் 13, 1993;

இன்று சுமித்ராவிடம் கேட்டேன், “இன்னிக்கு சாயங்காலமா எங்கேயாவது மீட் பண்ணலாமா? நாம் ரெண்டு பேரும் ரிலாக்ஸ்டா பேசி ரொம்ப நாளாயிடுத்து.” அவள் சொன்னாள், “இன்னிக்கு பிரபாகர் தன் வீட்டிற்கு கூப்பிட்டிருக்கார். ஒண்ணு பண்ணலாம். நாளைக்கு சாயங்காலம் என் வீட்டிற்கு வாங்களேன். அங்கேயே சாப்டுடலாம். நாம ரெண்டு பேரும் ஆஃபீஸ்லேயிருந்து ஒண்ணா என் வீட்டுக்குப் போயிடலாம்.” நான் ஒப்புக் கொண்டேன்.

ஜூன் 14, 1993:

அவளுடன் போனேன். மனதினுள் உற்சாகம். கலக்கமும் கூட. அவள் ஒப்புக் கொள்வாளா? ஒப்புக் கொள்வாள். விவாகரத்து ஆனவளுக்கு என்னைப் போல ஒருவன் கிடைப்பதே பெரிதுதான். தவிர அவளுக்கு என்னை பிடித்திருப்பது அவளுடைய பேச்சிலேயே தெரிகிறது. இவ்வாறு மனம் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது.

வாசல் கதவை ஒரு வயதான மாது திறந்தாள். சுமித்ரா முன்னே சென்று திரும்பி என்னை வரவேற்றாள். வீடு சிறியது. படு நேர்த்தியாக வைத்திருக்கிறாள். “மாதவி, மீனா எங்கே?” என்றாள். “மீனா யாரு? ஒங்க தங்கையா?” என்று கேட்டேன். “இல்ல, என்னோட பொண்ணு. இருங்கோ, மொதல்ல காபி கலந்துண்டு வரேன்” என்று உள்ளே சென்றாள். மாதவி ஒரு சின்னஞ்சிறு மலரை தூக்கிக் கொண்டு வந்தாள். அது அரை தூக்கத்தில் முகம் முழுவதும் ஆக்ரமிக்கும் கொட்டாவியை விட்டு விட்டு தன் கொட்டை பாக்கு விழிகளால் என்னை உற்று நோக்கியது. சுமித்ராவின் கை சமையல் பிரமாதமாக இருந்தது. எனக்குத்தான் பசியில்லை.

ஜூன் 18, 1993:

அம்மாவுக்கு எழுதிவிட்டேன் பள்ளிக்கூட வாத்தியார் பெண்னை பார்க்கச் சொல்லி.

ஜூலை 30, 1993:

இன்று காலை என் திருமண பத்திரிகைகளை எடுத்து பையில் வைத்துக் கொண்டிருந்தேன் ஆஃபீஸில் எல்லோருக்கும் கொடுப்பதற்காக, வாசலில் மணி சப்தம் கேட்டது. கதவைத் திறந்தால் சுமித்ராவும், பிரபாகரும்! சட்டென்று மடித்து கட்டிய வேட்டியை உதறிப் பிரித்துவிட்டு, ‘வாங்க’ என்றேன். உள்ளூர வியப்பு. எதற்கு இவர்கள் வந்திருக்கிறார்கள்? என் முகத்தில் தெரித்த கேள்விக் குறி உச்சஸ்தாயியில் இருந்தது போலும். பிரபாகர் சிரித்துக் கொண்டே சொன்னான். நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம், ஸார். உங்க கிட்ட மொத்தல்ல சொல்லணும்னு சுமித்ரா ஆசைப்பட்டா”. எனக்கு வியப்பா? அதிர்ச்சியா? இரண்டும் கலந்த உணர்வு. அதனுடன் இனத் தெரியாத ஒரு மெல்லிய வருத்தம். ஒரு க்ஷண நேர மௌனத்தை தாண்டி பின் புன்னகைத்து சொன்னேன். ‘கங்க்ராட்ஸ்! என்னிக்கு கல்யாணம்? எந்த பார்ல?” சுமித்ரா சொன்னாள், “அடுத்த மாதம் பதினைந்தாம் தேதி, கோயம்புத்தூர்ல எங்க வீட்ல மாலை மாத்திண்டு அப்புறம் ரிஜிஸ்டர் பண்ணிடலாம்னு இருக்கோம்”.

இருவரும் கிளம்பி விட்டனர். நான் பிரபாகர் முகத்தை கவனித்தேன். அவன் சுமித்ராவைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வையில் திருப்தி, கொஞ்சம் பெருமை…இல்லை, பெருமிதம். நான் வழி அனுப்பிவிட்டு உள்ளே வந்து உட்கார்ந்தேன். மனதில் ஏதோ நெருடல்.

அடுத்த வீட்டு பையன் ஓடி வந்தான். “என்ன மாமா இது? நீங்க போட்டு கொடுத்த கணக்கு தப்பு. ஒங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் லாபம்னு விடை வந்தது. ஆனால் ஐயாயிரம் ரூபாய் நஷ்டம்ங்கறதுதான் சரியான விடை” என்றான்.

– டிசம்பர் 1993

Print Friendly, PDF & Email

1 thought on “நஷ்டம்

  1. ஆணாதிக்க மனப்பான்மை எனும் ஈகோவால் ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டதை உணரும் கழிவிரக்கக் கதை. விடோயர், டைவர்ஸி காம்பினேஷனை எதிர்பார்த்த நான் இந்த எதிர்பாரா முடிவில் அதிர்ந்தேன்.
    நல்ல சிறுகதை
    சிறுகதை எழுத்தாளர் வத்ஸலா வாழ்க வளமுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *