நல்லதோர் வீணை செய்தே…

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 11,855 
 
 

பத்து வயது சொல்லலாம் கொடிக்கம்பத்தின் கீழே குப்புறப் படுத்திருந்ததைப்போல் கிடந்த அந்த சிறுமிக்கு. ரெட்டை பின்னல் போட்டிருந்த தலையில் ரத்தம் இன்னும் உறையவில்லை. கால்களில் அங்கங்கே ரத்தம் தோய்ந்திருந்தது. பிஞ்சுக் கைகள் இடம் பெயர்ந்து…

ஹாஸ்பிட்டலுக்கு அள்ளிக்கொண்டு போனார்கள்.

கொஞ்ச நேரத்தில் அந்தப் பள்ளி வெறிச்சோடியது. சாக் பீசால் ஒருத்தன் மார்க் பண்ணிக் கொண்டிருந்தான். ப்ரின்சிபல் ரூம் சாத்தியிருந்தது. ஜன்னல் வழியே போலீஸ் தொப்பி தெர்ிந்தது. எங்கும் நிசப்தம்.

“லலிதா மிஸ் பாவம். ஸ்கூல் ரூல்ஸ்படி பேர் எழுதினாங்க. வேற எந்த தப்பும் பண்ணல. அவங்கள விட்டிருங்களேன், ப்ளீஸ்.” அனன்யா சொன்னதை சம்பவம் நடந்த இடத்துக்கு வந்திருந்த போலீஸ் யாரும் காதில் வாங்கிக்கொண்ட மாதிரி தெரியவில்லை.

” எனக்கு எங்கம்மான்னா ரொம்ப இஷ்டம். அப்பாவும் தான். நான் கேக்கற திங்ஸ் எல்லாம் வாங்கி கொடுத்துருவார் எங்கப்பா.” தன் க்ளோஸ் ப்ரெண்ட் ஸ்வேதா காதில் ரகசியம் போல் சொன்னாள் அனன்யா.

” அம்மாதான் என்னை டெய்லி ஸ்கூலுக்கு ரெடி பண்ணி அனுப்புவாங்க. சில நாள் ஊட்டி விடுவாங்க.வாசல்ல வந்து ஸ்கூல் வேன்ல ஏத்தி விடுவாங்க. நல்லா வாயத்தொடச்சுக்க சொல்வாங்க. அம்மாவோட நைட்டில தொடச்சுப்பேன். லன்ச்சுக்கு எனக்கு பிடிச்ச ரசம் சாதம் தருவாங்க. வெஜிடபிள்ஸ் நெறய வெச்சுறுவாங்க. நீ கூட ஷேர் பண்ணிப்பியே. ஈவினிங் வீட்டுக்கு போறப்ப பசிக்கும். கை கால் கழுவிட்டு கார்ட்டூன் பாத்துக்கிட்டே ஸ்னாக்ஸ் சாப்பிடுவேன். கீபோர்ட் கிளாசுக்கு போயிட்டு வருவேன். அப்பறம் ஹோம் வர்க் பண்ணும்போது செக் பண்ணுவாங்க. டெஸ்ட் வெப்பாங்க. தமிழ் மட்டும்தான் எனக்கு சரியா வராது. டின்னர் முடிச்சதும் ஸ்டேரரி புக் படிக்கணும். நைனோ க்ளாக் தூங்கிடணும். இல்லேனா அடி கெடைக்கும்.”

” அடிப்பாங்களா உன்ன?” கேட்டாள் ஸ்வேதா.

” ஓ. நெறய அடி வாங்குவேன். டெய்லியும் ”

” வலிக்காது?”

” ப்ச். •பஸ்ட் ஸ்டாண்டர்டு வரைக்கும் வலிச்சது. அப்பறம் பலம் வந்துறுச்சு. அப்பா அடிக்கறப்ப மட்டும் வலிக்கும்”

” எங்கப்பா என்ன திட்டவே மாட்டாங்க”

” அடி வாங்கினாத்தான் நீ சரியா வருவேனு எங்கப்பா சொல்லுவாங்க.”

” என்ன பண்ணினா அடிப்பாங்க?”

” பொய் சொன்னா, ரேங்க் பின்னால போச்சுன்னா, விளையாடிட்டு லேட்டா வீட்டுக்கு வந்தா, ரப்பரை தொலைச்சா…”

” நான் நெறைய ரப்பர், பென்சில் தொலச்சிருக்கேனே”

” இரு, இரு, நான் இன்னும் சொல்லி முடிக்கல. எதையாவது போட்டு ஒடச்சா, எதுத்துப் பேசினா, டைமுக்கு கௌம்பலைனா, அவங்க பேசிட்டிருக்கும்போது குறுக்க பேசினா… இது எல்லாத்துக்கும் அடி கெடைக்கும்.”

” வலிக்காது?”

“ப்ச். எனக்கு பழகிருச்சு. எப்ப தெரியுமா ரொம்ப திட்டும் அடியும் கிடைக்கும்? ”

” எப்ப?”

” மிஸ்சோ வேற யாரோ என்னப்பத்தி கம்ப்ளைன் பண்ணினா. அவங்க சொல்றது கரக்டானு கூட எங்கிட்ட கேக்க மாட்டாங்க. பயங்கர அடி கெடைக்கும். ரெண்டு பேரும் சேர்ந்து அடிப்பாங்க. எங்க மானத்த வாங்கறதுக்குனு பொறந்திறுக்கியேனு திட்டுவாங்க. எங்கயாவது ஓடிப்போயிரலாம்னு தோணும்.”

” அச்சச்சோ ”

” நான் விக்கி விக்கி அழுவேன். ஆனா அதுக்கும் அடி கெடைக்கும். அழுதா பக்கத்து •ப்ளாட்டுக்கு சத்தம் கேக்கும்னு”

” அப்பாவையும் அம்மாவையும் ரொம்ப பிடிக்கும்ன?”

” ஆமா ”

” இத்தன அடி வாங்கியுமா?”

” அவங்க எனக்காகத்தான இதெல்லாம் பண்றாங்க. அப்பா ஆ•பீஸ் போயி கஷ்டப்பட்டு ரூபா சம்பாதிக்கறார் இல்ல. அம்மா தான எல்லா வீட்டு வேலையும் பண்றாங்க. எனக்காகத்தான ரூபா சேக்கறாங்க. நான் நெறைய மார்க் வாங்கினாத்தான நெறைய ரூபா சம்பாதிக்க முடியும். மேரேஜ் பண்ண முடியும்.”

” அப்படியா?”

” ஆமா. ஸ்வேதா, நீ பிப்த் போறல்ல. ப்ரமோஷன் லெட்டர் வந்துறுச்சுல்ல?”

” ஆமா அனன்யா. ஆனா நான் வேற ஸ்கூல்ல ஜாயின் பண்ணப்போறேன். டீ சீ கூட வாங்கியச்சு”

” ஏன்?”

” உனக்கு இப்படி ஆயிடுச்சுல்ல. காப்பி அடிச்சனு போர்டுல உன்னோட பேர் போட்டாங்கல்ல, அதான் எங்கப்பா இந்த ஸ்கூல்ல படிச்சது போறும்னு சொல்லிட்டாரு.”

” நான் காப்பியே அடிக்கல. டைம் எத்தனனுதான் ரம்யா கிட்ட கேட்டேன். அவ டைம் சொல்லாம விளயாட்டு காட்டினா. அதான் போய் அவ கையப்பிடிச்சு டைம் பாத்தேன். அதுக்கு போய் பேர் எழுதிட்டாங்க.”

” நீ லலிதா மிஸ் கிட்ட சொல்ல வேண்டியதுதான.”

” சொன்னேனே. அவங்க கேக்காம என் பேர எழுதிட்டாங்க. நோட்டீஸ் போர்டுல போட்டுறுவாங்கல்ல? அடுத்த நாள் எல்லாருக்கும் தெர்ிஞ்சுறும். எங்கப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? அவங்க மானம் போயிறும்ல? நான் எப்படி அவங்க முன்னால நிக்கறது?”

” ஏன்? நான் காப்பி அடிக்கலனு சொல்ல வேண்டியதுதான?”

” எங்க அப்பா அத நம்பணுமே. ப்ச். எங்கம்மாவே நான் காப்பி அடிச்சதா இன்னம் நம்பிட்டிருக்காங்க”

” நான் வேணா இப்ப போய் உங்கம்மா கிட்ட சொல்லட்டா?”

” வேணாம். நம்ப மாட்டாங்க”

” அப்ப உனக்கு வலிக்கல?”

” எப்ப?”

” கீழ விழுந்தப்ப?”

“ கொஞ்சநேரம்தான். அப்பறம் எல்லா வலியும் போயிறுச்சு.”

“நெஜமாவா?”

” ஆனா பெரிய தப்பு பண்ணிட்டேன் ஸ்வேதா. இதுக்கு இங்க ரொம்ப சிவ்யர் பனிஷ்மெண்ட்.”

” அப்டியா?”

“ஆமா. எங்கம்மா கிட்ட போய் சாரி, நான் தப்பு பண்ணிட்டேன்னு சொல்லணும் ”

***

” ஸ்வேதா, டைம் இஸ் எயிட். எழுந்திறு. சம்மர் கிளாசுக்கு போணுமில்ல கண்ணம்மா.”

” அம்மா, அனன்யா காப்பி அடிக்கலம்மா. ”

” சரி சரி. பிரஷ் பண்ணப்போ செல்லக்குட்டி. ”

” அவளே சொன்னா.”

” சரி கண்ணம்மா. அனன்யா இஸ் எ குட் கேர்ல். ஓகே?”

” அம்மா, மானம் போயிறும்னா என்னம்மா அர்த்தம்?”

” இதெல்லாம் அப்புறமா நீயே தெறிஞ்சுப்ப. இப்ப வேண்டாம் கண்ணு.”

” அம்மா, அனன்யா காப்பி அடிக்கலைனு அவ அம்மா கிட்ட போய் சொல்லலாமா? ”

” வேண்டாம் கண்ணு. அவங்களுக்கே அது தெரியும்.”

” இல்லம்மா. அவங்கம்மாவும் அனன்யா காப்பி அடிச்சதா நம்பிட்டிருக்காங்களாம்.”

” அப்டீனு உனக்கு யார் சொன்னா? ”

” இப்பதாம்மா அனன்யாவே என் காது கிட்ட வந்து எல்லாத்தையும் சொல்லிட்டுப்போனா. கனவு இல்லம்மா. நிஜம்மாவே. ” என்ற ஸ்வேதாவை குழப்பத்துடன் பார்த்துவிட்டு அணைத்துக்கொண்டாள் ஸ்வேதாவின் அம்மா.

***

” பென்ச்சு விட்டு பென்ச்சு வந்து பேப்பரை பாத்துட்டு போச்சுங்க.”

” பொண்ணு காப்பி அடிச்சுது, போர்டில அனன்யானு பேர் எழுதினீங்க, சரி. உங்க கண்ணு முன்னால அந்த பொண்ணு ஓடிபோயி மூணாவது மாடியிலிருந்து குதிச்சு தற்கொலை பண்ணிட்டிருக்கு. நீங்க அப்ப என்ன பண்ணிட்டிருந்தீங்க?” வக்கீல் கேட்டார் ”

” பேர் எழுதிட்டு திரும்பி பாக்கறேன், அழுதுக்கிட்டே ஓடுதுங்க. கண்ண மூடி கண்ண திறக்கறதுக்குள்ள எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு சார். இந்த மாதிரி நடக்கும்னு எதிர் பார்க்கலை. நான் என்ன பண்ணுவேன் சொல்லுங்க ” என்றாள் லலிதா மிஸ்.

Print Friendly, PDF & Email

1 thought on “நல்லதோர் வீணை செய்தே…

  1. தங்கள் விருப்பு வெறுப்புகளை குழந்தைகள் மேல் திணிக்கும் பெற்றோர்களுக்கு இது ஒரு சாட்டை அடி.
    உணருங்கள் நண்பர்களே!!
    உங்கள் குழந்தைகள் இந்த பூவுலகில் அடியெடுத்து வைக்க கடவுள் உங்களை ஒரு ஊடகமாகத்தான் பயன் படுத்தியிருக்கிறார். அதனாலேயே உங்களுக்கு உங்கள் குழந்தைகள் மேல் சர்வ அதிகாரமும் இருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். அந்த “சின்னஞ் சிறு மனிதர்களின்” உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *