நலியும் நவீனம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 7, 2023
பார்வையிட்டோர்: 1,682 
 
 

குந்தவைக்கு உடம்பு புண்ணாக வலித்தது. காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்து, அரைத்தூக்கத்தில் உடம்பு சோர்வால் மறுத்த போதிலும் தேவை, எதிர்காலம் பற்றி அறிவு நினைவூட்ட, அணைத்துறங்கிய குழந்தையை அலுங்காமல் விலக்கி, போர்வையை போர்த்தி விட்டு கட்டிலை விட்டு இறங்கியபோது மாமியாரின் இருமல் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க, ‘தண்ணீர் கொடு’ என்றார் கைசாடையில்.

எடுத்து கொடுத்து விட்டு, கணவனை எழுப்பி பால் வாங்க அனுப்பிவிட்டு, வீட்டை பெருக்கி,பாத்திரம் கழுவி, சமையல் முடித்து, பறிமாறி, குளித்து ஈரத்தலை காயாமல் குழந்தைக்கு ஊட்டிய மிச்சத்தை அவசரமாக அள்ளிப்போட்டு, ஓடிச்சென்று பேருந்தைப்பிடித்து, கூட்டத்தில் நசுங்கி நின்றே கால்கடுக்க பயணித்து அலுவலகம் சென்றாள்.

“ஏம்மா ஒரு நாளாவது நேரத்துக்கு வர மாட்டியா?” என்ற அலுவலக மேலாளரின் கேள்விக்கு முகஸ்துதியால் வருத்தம் தெரிவித்து, வேலையை வேகமாய் செவ்வனே செய்து முடிக்கும் தருணம் கணிணியில் இணையமும் தாமதம் காட்ட, மதிய உணவும் மறந்து போக, தலையில் பாரமும் ஏறி தலைவலியாக அமர, ஓடி வந்து பேருந்து பிடித்து வீடும் வந்தாள் ஓய்வெடுக்கும் நோக்கில்.

வந்தவுடன் தயாராக நின்றிருந்த கணவன் “உறவில் இழவு போகலாம் புறப்படு” என்றவுடன், தலை வலிக்கு தைலம் தடவி மாத்திரையைப் போட்டுக்கொண்டு, குழந்தையை மாமியாரிடம் விட்டு விட்டு, இரண்டு சக்கர வாகனத்தில் கணவன் பின் அமர்ந்து வேகமாக ஓட்டச்சொல்லிச்செல்லி சென்று சேர்ந்தனர்.

கூட்டத்தில் பல பேர் இருப்பதையும் யோசிக்காமல் ஒரு வயதான உறவுப்பெண் குந்தவையைப்பார்த்து “எடுத்தகடைசில வராபாரு. எல்லாம் வேலைக்கு போற திமிரு” என ஏச, காதும் கூச, சற்று நேரம் செயற்க்கையாக கண்ணீரை வர வைத்து, சோகமாக முகத்தை நடிக்க வைத்து ,திரும்பி வீடு வந்து குளித்து, அவசரகதியில் உணவை சமைத்து, படுக்கும் போது மணி பனிரெண்டு காட்ட, உடலும், மனமும் சோர்வு கொள்ள, உறங்கிப்போனாள் என்பதை விட முடங்கிப்போனாள்.

மறுநாள் காலையில் அலாரம் அடிக்க ,கண் விழித்து எழ முற்படும் போது அவளது உடல் மறுத்தது.

‘லட்சியம்,கனவுகள்,கற்பனைகள் எல்லாமே நமக்காகவே தவிர, அதற்க்காக நாமில்லை. உருவமில்லா அவற்றிற்காக உருவமுள்ள உடலை சீரழிப்பதா? விலை மதிக்க முடியாத மனித உடலை சாதாரண காகித பணமெனும் சம்பளத்துக்காக கசக்குவதா? முதுமைக்கான, நோயிற்கான மாத்திரைகளுக்காக சேமிக்க கூட முடியாமல், கார்பரேட் கம்பெனிகள் ஆடம்பர அடிமையாக்கி, மாத சம்பளத்தை வாங்கிய நாளிலேயே செலவழித்து, கடனடைத்து, உடலையும், உள்ளத்தையும் கசக்கிப்பிழிந்து காசாக்கி செலவழிக்கவா பிறந்தோம்?’ என ஆழ்ந்து சிந்தித்தாள்.

“ஏங்க நான் இனி வேலைக்கு போகாம உங்களையும், உங்க அம்மாவையும், நம்ம குழந்தையையும், அப்படியே என்னையும் சேர்த்து கவனிச்சுக்கப்போறேன் ” என்றாள் உறுதியாக.

“அப்ப அபார்ட்மெண்ட் வீடு? கார் கனவு? அந்த பெரிய ஸ்கூல்ல குழந்தையை படிக்க வைக்கனங்கற நம்ம லட்சியம்? என்னோட சம்பளம் நம்ம குடும்ப செலவுக்கே போதாதே…?” என்றான் கணவன் ஒருவித பதட்டத்துடன்.

“உங்க அப்பா கட்டின இந்த கடனில்லாத சிறிய வீடே போதுங்க. பெரிய பணக்காரங்க படிக்கிற ஸ்கூல்ல குழந்தையை சேர்த்துனா என்னோட சம்பளமே பத்தாமப்போகும். சேர்க்கும் போதே டொனேசனா இரண்டு லட்சம் கேட்ப்பாங்களாம். அதுக்கு வீட்டு மேல லோன் போட வேண்டியது வரும். அந்தக்கடன வட்டியோட அடைக்கனம்னா ஒரு வேலை சாப்பிடறதை கட் பண்ணனும். அதுக்கு அரசு பள்ளில குழந்தைய கட்டணமே இல்லாம சேர்த்துட்டு, நான் வேலைக்கு போகாமலேயே அவளுக்கு டியூசன் சொல்லிக்கொடுத்திடறேன். வயதான காலத்துல பணம் சேமிக்கிறதை விட, நோயில்லாம உடம்பை காப்பாத்தி வச்சுக்கனம்னு எனக்கு தோணுதுங்க” என்றாள் உறுதியாக.

“உடலைக்கெடுக்கிற கடினமான வேலை செஞ்சு சம்பாதிச்சு ஆடம்பரமா செலவு பண்ணறதை விட, உங்க சம்பாத்தியத்துல சிக்கனமா வாழ்ந்திடலாம்னு தோணுதுங்க” என்ற மனைவி குந்தவையை கவலையுடன் பார்த்தான் கணவன்.

‘நவீன கால வாழ்க்கை முறைகள் எப்படியெல்லாம் உடலையும், உள்ளத்தையும் நலிந்து போகச்செய்துள்ளது? என்பதை எண்ணி, உலகில் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் தன் மனைவி குந்தவையின் மனநிலை தானே இருக்கும்?’ என எண்ணியவனாய் மனைவியின் விருப்பத்துக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் அவளை ஆதரவாக அணைத்து, அவளது யோசனைக்கு தனது மனப்பூர்வமான சம்மதத்தை உறுதிப்படுத்தியதோடு, பூரண அன்பையும் வெளிப்படுத்தினான் கணவன் சிபிச்சக்ரவர்த்தி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *