கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 4,248 
 
 

ஜோதிடர் சொன்னது அடிக்கடி ரகுபதி மனதில் நிழலாடிச் சென்றது.

”இன்னைக்கு நம்ம திட்டத்த எப்படியும் நிறை வேத்திடனும்” என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டான்.

இப்பொழுதெல்லாம், தனது மகன் விக்னேஸ்வரனை வெறுப்புடன் பார்க்கத் தொடங்கியிருக்கிறான், ரகுபதி.

அவனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. ஹோட்டலில் ஏற்கனவே வேலை செய்த அனுபவம் இருந்ததால், திருமணத்திற்குப் பின் அவன் வசிக்கும் பகுதியிலேயே சிறிய உணவகம் ஒன்றைச் சொந்தமாக தொடங்கி நடத்தி வந்தான்.

தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் மூலதனமாக்கி நடத்தி வந்த ஹோட்டலில் இலாபம் இல்லாவிட்டாலும், நஷ்டம் வராமலாவது இருந்திருக்கலாம். ஆனால். விலைவாசிப் பிரச்சனையில் எத்தனைப் பேர் ஓட்டலுக்கு வரப்போகிறார்கள்?. அதற்கு மேல் ஆடம்பரமாக்கவோ மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்திற்கு உணவகத்தை மாற்றவோ லட்சக்கணக்கில் பணம் தேவை. கணவனும் மனைவியும் இரவு பகல் பார்க்காமல் உழைப்பை செலுத்தியும் நஷ்டத்தை சரி செய்ய இயலவில்லை.

கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் தனது கஷ்டத்தை சொல்லி ஆறுதல் தேட முயன்றான். அந்த வாடிக்கையாளர் தந்த தகவல் தான் ஜோதிடரை பார்க்கும் ஆலோசனை பிறந்தது, ரகுபதிக்கு.

ரகுபதியின் கைக்குழந்தையால் அவனுக்கு ஆபத்து வரப்போவதாகவும், அவனது தொழிலில் மேலும் மேலும் நஷ்டம் அடைந்து வருவதற்கு, மகன் விக்னேஸ்வரன் தான் காரணம் என்றும் கூறினார், ஜோதிடச் சாமியார். அந்த காட்டேஸ்வரனுக்கு விக்னேஸ்வரனை நரபலி கொடுப்பது தான் உங்கள் குடும்ப கஷ்டத்திற்கும், தொழில் நஷ்டத்திற்கும் ஒரே பரிகாரம் ஆகும். வேறு வழியே இல்லை என்றும் ஜோதிடர் வெற்றிலையைப் பார்த்தும் நாடிப் பார்த்தும் ஏடு பார்த்தும் கணித்தார்.

மனைவியின் காதில் அணிந்திருந்த கம்மலை அடகு வைத்த பணத்தைத் தான் ஜோதிடருக்கு காணிக்கையாகச் செலுத்தினான்.

ரகுபதியின் மனதில் யார் யாரோ வந்து சென்றார்கள். ஆசிர்வாதம் வாங்கச் சென்ற பிரதமரை வாசலில் காக்க வைத்த பெரியவர். முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்ள யாகம் நடத்த ஆலோசனை வழங்கிய சாமியார்கள். தேர்தலில் ஜெயிக்க ஜோதிடம் பார்த்த அரசியல் பிரமுகர்கள். தனது கட்சித் தலைவி மீண்டும் முதல்வராக வேண்டி தனது கைப்பெருவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய போலிஸ்காரர்… என்று அவன் மனதில் அணிவகுத்து வந்தார்கள்.

”இவர்களுக்கெல்லாம் நல்வழி காட்டிய ஜோதிடம், நம்ம விசயத்தில் மட்டும் பொய்த்து விடுமா? என்ன?” தனக்குள் கேட்டுக்கொண்டவனுக்கு அவன் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கை குடியேறியது.

”கண்ணு … செல்வம்… என் செல்லமே… என்றெல்லாம் கொஞ்சி மகிழ்ந்த மகன் விக்னேஸ்வரனை அவன் மனம் வெறுக்கத் தொடங்கியது இப்படித்தான்.

அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியின் முன் குழந்தையை திட்டித் தகராறு செய்யத் தொடங்கினான்.

ஒரு ஞாயிற்றுக் கிழமையை ஜோதிட சாமியார் நாள் குறித்துக் கொடுக்க, அன்றே குழந்தையை நரபலி கொடுக்கும் நோக்கத்துடன் வீட்டுக்கு வந்தான்.

”குழந்தையை மோட்டார் சைக்கிளில் வைத்து வெளியே ரவுண்ட் அடிச்சிட்டு வர்றேன்”என்று சொல்லிக் கொண்டே மனைவியிடம் குழந்தையைத் தூக்கிவர முயன்றான்.

அவனது முகத்தில் எதைக் கண்டாளோ என்னவோ, அவளுக்குக் தன் கணவனிடம் அப்போது குழந்தையை தர மனம் வரவில்லை.

”தே… குழந்தைக்கு கண்ணுல தூக்கம் சொக்குது. குழந்தை கொஞ்ச நேரம் தூங்கட்டும்” சொல்லிக் கொண்டே குழந்தையுடன் வீட்டிற்குள் போய்விட்டாள்.

வீட்டிற்குள் விக்னேஸ்வரனைப் படுக்க வைத்து, அவளும் படுத்தபடி மகனை தன் கையால் தட்டிக் கொடுத்தபடியே குழந்தையை தூங்க வைக்க முயன்று கொண்டிருந்தாள்.

இன்னும் சிறிது நேரத்தில் தாயும் மகனும் தூங்கி விடுவார்கள். அப்புறமென்ன நைசாக விக்னேஸ்வரனைத் தூக்கிக் கொண்டு போய் நரபலியை நிறைவேற்றி விடலாம் என்ற தனது திட்டத்தை மனதிற்குள் ஒரு முறை ஓட்டிப் பார்த்துக் கொண்டான்.

வானம் தூறலில் தொடங்கி மழையாக முற்றியிருந்தது.

சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனை நாய் குட்டிகளின் ஊளைச்சத்தம் உசுப்பியது.

வீட்டு வராண்டாவில் இவன் வீட்டு நாய் போட்ட குட்டிகள் மழையில் நனைந்து கொண்டிருந்தன. மழையில் நனைய நனைய குட்டிகள் இன்னமும் அதிக சத்தமாய் குரைத்தன.

அந்த நாய் குட்டிகளின் தாய் இந்த முனைக்கும் அந்த முனைக்குமாய் அலைந்து கொண்டு ஏதோ தேடியது. அனேகமாக தனது குட்டிகளை மழையிலிருந்து பாதுகாப்பாக வைக்க இடம் தேடுவது போல் தெரிந்தது.

அந்த நாய் சமீபத்தில் தான் குட்டிகள் போட்டது. மொட்ட மாடிக்கு ஏறும் படிகட்டுகளுக்கு இடையே தான் தனது குட்டிகளோடு பாதுகாப்பாக படுத்திருக்கும்.

அது தனது குட்டிகளை அவ்வப்போது இடம் மாற்றிக் கொண்டே இருந்தது.

ஒரு முறை குடித்தனக்காரர்கள் குளிக்கும் பாத்ரூமுக்குள் எல்லா குட்டிகளையும் பாதுகாப்பாக படுக்க வைத்திருந்தது. யாரையும் பாத்ரூமுக்குள் நுழைய விடவில்லை. கதவைத் திறந்தாலே கடிக்க வருவது போல் உர்ர் என்று தனது நரநர பற்களை காட்டி அனைவரையும் விரட்டியடித்தது.

அந்த குட்டிகளை அதுவாக வேறு இடத்திற்கு மாற்றும் வரை குடித்தனக்காரர்கள் யாரும் குளிக்க முடியாமல் போனது.

அந்த நாய், தனது குட்டிகள் அருகில் கோழிக் குஞ்சுகளைக் கூட அனுமதித்ததில்லை!.

குட்டிகள் குரைக்க… குரைக்க… அந்த தாய் நாய்க்கு இடம் தேடி அலைவதில் வேகம் வேகமாய், இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தது.

”ச்சே… இந்த நாய் குட்டிக ஏன் இப்படி கத்தித் தொலையுதுங்க?” பக்கத்து வீட்டிலிருந்து பவுனு வெளிப்பட்டாள்.

”என்னங்க அண்ணே நாய் குட்டிக மழையில நனையுதே, அதுங்கள நனையாத இடத்துக்கு எடுத்து வைக்கக் கூடாதா? அது வாய்யில்லா ஜீவன் தான? வெளியில உட்கார்ந்து வேடிக்கை பாத்துக்கிட்டிருக்கீங்க….”

”இல்லம்மா அந்த நாய் கடிக்க வருமேன்னு தான் பயந்துகிட்டிருந்தேன்” என்று சமாளிக்க முயன்றான்.

”குட்டிகள மழையிலிருந்து காப்பாத்த வரவங்களையும், தூக்கிட்டு போறதுக்காக வரவங்களையும் இத்தன குட்டிக போட்ட நாய்க்கு அடையாளம் தெரியாதா என்ன?” என்றாள் பவுனு. அவள் சாதாரணமாகத்தான் சென்னாள். அதிசயத்துப் போனான் ரகுபதி.

பவுனு நாய் குட்டிகளை குடை பிடித்தபடி ஒவ்வொரு குட்டியாக எடுத்துச்சென்று அந்த படிகட்டுகளுக்கு அடியில் உள்ள சிறிய இடைவெளியில் குட்டிகளை நனையாமல் வைத்து விட்டு வருவதையும், தாய் நாய் தனது வாலை ஆட்டிக்கொண்டு, பவுனு கூடவே போய் திரும்புவதையும் பார்க்க… பார்க்க… ரகுபதியை கன்னத்தில் யாரோ ஓங்கி அறைந்தது போல் உணர்ந்தான்.

”ச்சே… நாயை விட கேவலமா நான் நடந்துகிட்டேனா? அந்த ஜோசியன் அவன் பிழைப்புக்காக நம்மை இப்படி ஒரு காரியத்தை ஏவிவிட்டு குளிர்காயப் பார்கிறானா? அது தெரியாம நானும் சம்மதிச்சிட்டேனே…”

மழை பெய்து இப்போது ஓய்ந்திருந்தது.

அந்த நாயையும், குட்டிகளையும் மீண்டும் பார்க்க வேண்டும் போலிருந்தது, அவனுக்கு.

படிகட்டுகளுக்கு கீழே அந்த பாதுகாப்பான இடம் அருகே சென்றான்.

தாய் நாய் அமைதியாக கண் மூடி தூங்கிக் கொண்டிருந்தது. அதன் குட்டிகள் அனைத்தும் காம்புகளில் பால் குடித்துக் கொண்டிருந்தன. தன்னைப் பறி கொடுத்தவனைப் போல் பார்த்துக் கொண்டி ருந்தவனை, குழந்தையின் அழுகுரல் அவனை வீட்டை நோக்கி இழுத்தது.

மனைவி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

விக்னேஸ்வரன் படுக்கையில் அழுது கொண்டிருந்தான். மெல்லத் தட்டிக் கொடுத்தான், ரகுபதி!.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *