நம்பிக்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 11, 2024
பார்வையிட்டோர்: 1,046 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிகாலைப் பொழுது..! விடியற்காலை ஐந்து மணி ஆகியிருக்கும். மாதவன் வீட்டில் மின்விளக்குகள் பிரகாசிக்கத் தொடங்கியிருந்தன. மாதவனின் மனைவி ஜானகி தன் வீட்டில் தலைவாயிற் கதவைத் திறந்து வைத்துவிட்டு, அடுக்களைப் பக்கம் செல்ல அடியெடுத்து வைத்தபோது, *காலை வணக்கம்” (குட் மார்னிங்) என்று, ஆங்கிலத்தில் கூறிய அந்தச் சொற்கள் பனித் தென்றலுடன் இணைந்து வந்து, கனியமுதாய் ஜானகியின் செவிகளில் தோய்ந்தது. அது கேட்டு அதிர்ச்சியோ ஆச்சரியமோ அடையாத நிலையில், முகமலர்ச்சியுடன் ஜானகியும் பதிலுக்குக் காலை வணக்கம் சொன்னாள்.

அதிகாலைச் சந்திப்பின் இயல்பொலியும் எதிரொலியும் ஒருசேரத் தொடர்ந்து ஒலித்தது. எது முன்னம்? எனப் பிரித்துணர முடியாத நிலை…! உதயத்தில் தோன்றும் பணிவன்பின் பிரதிபலிப்பு: பரிணமிப்பு..

அன்றாடத் தொடர் நிகழ்ச்சியாக அமைந்திடும்போது, அதிசயத்துக்கும் ஆச்சரியத்துக்கும் இடமிருப்பதில்லை. அடுக்குமாடி வீடுகளில் வாழ்வோருக்கு அதிகாலைப் பொழுதை அறிவிக்கும் “சேவற் குரல்’ கேட்கும் வாய்ப்பு இருப்பதில்லை. அங்கே “அலாரம்”தான் சேவல்….! அதன் மணியொலிதான் “கொக்கரக்கோ கோ” என்னும் குரலோசை..!

அந்த வட்டாரத்து அடுக்குமாடி வீடமைப்புத் தொகுதிகளுள் ஐந்து அறை வீடமைப்பு மனையொன்றில் மூன்றாவது மாடியொன்றில் அமைந்துள்ள, எதிரும் புதிரும்” ஆக அமைந்த அடுக்கமைப்பு வீடுகளில் வசித்துவரும் மாதவன்-லியாவ் குடும்பத்தார் மிகவும் நெருக்கமாகப் பழகிக் கொண்டு வருபவர்கள்.

இருவேறு இனத்தைச் சேர்ந்த இவ்விரு குடும்பத்தாருக்கும் இடையே இத்தகையதொரு நெருக்கமும், பாசப் பிணைப்பும் எவ்வாறு ஏற்பட்டிருக்கக் கூடும்…? காலத்தின் முதிர்ச்சியில் கனிந்து வந்த அன்போ…?

மாதவன் லியாவ் குடும்பத்தினர் தத்தம் வீடுகளுக்குரிய திறவுகோல்களை வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தாரிடமிருந்து பெற்றது ஒரே நாளில்…! வீட்டில் சீரமைப்புப் பணிகள் தொடங்கியது, தொடர்ந்தது, நடைபெற்று முடிந்ததும் ஒரே காலக்கட்டத்தில்…! அலங்கரிப்புப் பணிகளைப் பார்வையிட வரும்போது ஏற்பட்ட அவ்வப்போதைய சந்திப்பில் தொடங்கிய பழக்கம்….! சம்பிராதயச் சடங்கு பூர்வ அமைப்புகள்: மற்றுமுள்ள வீடு மாறும் வசதி வாய்ப்புகளின் பொருட்டு ஓரிரு மாதங்கள் முன்பின் என்பது மட்டும்தான் ஓர் இடைவெளி. “புதுமனை புகுவிழா” -அழைப்புகள் பரிமாற்றம்.

பொதுப்படையாக எண்ணிப் பார்த்தால் மனித குலத்தின் எதிர்பார்ப்பெல்லாம் “அன்புமயம்” என்ற ஒன்றுதானே…? அன்பின் பிறப்பிடம் மனம்… மனித குலம் என்ற மாசற்ற அடிப்படையில் மலர்ந்து தோன்றும் அந்த அந்த அன்பு மகத்தானது. இயல்பெழு மாந்தர் இருங் குணத்து அடிப்படையில் எழுந்து தோன்றும் இல்லறத்தின் நல்லறம் ‘இணை மாட்சிமை” என்பதுதானே… நல்லறிஞர் கூற்றுக்கு நல்லிலக்கணமாய் அமைந்து, சிறந்த அண்டை அயலார் என்பதற்கோர் எடுத்துக்காட்டாய் மாதவன், லியாவ் குடும்பத்தினர் திகழ்ந்து விளங்கினார்கள்.

ஜானகி தன் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு இறைவழிபாடு செய்த பின்னர் மஞ்சள் குங்கும மங்களத்தோடு சென்று, மாதவனைத் தட்டி எழுப்பும்போது சுவர்க் கெடிகாரம் ஆறுமுறை ஒலித்து ஓய்ந்தது. அப்போதும் ‘பிகு’ பண்ணிக்கொண்டிருந்த தன் கணவன் மாதவனுக்குத் தான் குளித்துவிட்டு வந்திருந்த நிலையினைக் குறிப்பால் உணர்த்தி எழச் செய்தாள். “பெட் காப்பி” கொடுத்து எண்ணங்களைத் திசைமாற்றிப் பேச்சு கொடுத்தாள். மென்மையாகக் கரம் பற்றி இழுத்துச் சென்று பற்பசை, நா வழிப்பு. துண்டு ஆகினவற்றைக் கையில் திணித்துக் குளியலறைக்குள் அனுப்புவதற்குள் அவளுக்குப் போதும் போதும் என்றாகியது.

எதிர்வீட்டிலும் இத்தகைய இன்பப் போராட்டமும், எழில் சுக அமைதியும் தானோ…? நடமாட்டம் எதுவும் இல்லை: அதனால் அப்படி எண்ணிக் கொள்ளத் தோன்றுகிறது. ஒருசில மணித் துளிகள் ஓரமைதியாய் ஒடுங்கிச் சென்றன. சற்று நேரத்திற்குப் பிறகு லியாவ் வீட்டின் தொலைபேசி அலறியது. ஜானகியின் நினைவூட்டல் சாதுரியம் அது என்பது திருமதி லியாவ் மெங் அறிவாள். இருவரும் தொலைபேசியில் ஒரு நிமிடம் பேசிக் கொண்டார்கள்.

விடிகாலைப் பொழுதில் அலாரம் ஒலிக்கத் தவறினாலும், அல்லது முன்பின் ஆனாலும் ஆகலாம்; லியாவ் வீட்டின் மின்விளக்குகள் பிரகாசிக்காதிருந்தால்-தலைவாயிற் கதவு திறக்கப்படாதிருந்தால் விடிகாலை ஐந்தேகால் மணிக்கு லியாவ் வீட்டின் தொலைபேசி அலறும். அத்தகைய வாய்ப்புகளில் காலை வணக்கப் பரிமாற்றம் தொலைபேசியிலேயே நிகழ்ந்து விடும்.

ஜானகியின் விடிகாலைப் பொழுது “விழிப்பு” லியாவ் குடும்பத்தார்க்கும் ஏன் மாதவனுக்கும் கூட ஒரு வியத்தகு செயலாகவே இருந்தது. ஒருசில சந்தரப்பங்களில் குறிப்பாக விழாக் காங்களில் காலம் கடந்து உறங்கச் சென்றாலும் ஏதோவொரு மின்சார இயக்கம்போல் அலாரத்துடன் போட்டி போடுபவள் போல அலாரத்தின் மணியொலி முதலிலா ஜானகியின் கண்மலர்ச்சி முதலிலா? என்று பிரிந்துணர முடியாத நிலையில் ஒரு நொடிப் பொழுதும் வித்தியாசமின்றி எழுந்து இயங்கத் தொடங்கும் ஜானகியின் இயல்பு குறித்து லியாவ் மெங் எப்போதும் வியந்து போவாள். அத்தனை மணிவரை அன்பு இன்ப அரவணைப்புப் போராட்டத்துக்கு ஈடு கொடுத்து நின்றவள் அவ்வளவு அதிகாலைப் பொழுதில் அலாரம் ஒலிப்பதன் முன் எழுந்து விடுகின்றாளே… அது எப்படி? என்று எண்ணி வியந்து போய்த் தன் மனைவியின் தார்மீக மரபுப் பண்புக்கு மாதவன் மானசீகமாகத் தலைவணங்கிக் கொள்வான்.

சுவர்க் கெடிகாரம் ஆறே முக்கல் மணி என்று முழங்கியது. முன்னர் எல்லாம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கும் அதாவது அரை மணி நேரத்துக்கும் ஒரே ஒரு மணியோசை ஒலிக்கும். காலவோட்டத்தின் கண்டுபிடிப்புச் சுவர்க் கெடிகாரங்கள் ஒவ்வொரு பதினைந்து நிமிடம் அதாவது கால்மணி நேரத்தையும் சுட்டிக் காட்ட இசையமைப்பு ஒலிக் குறிப்பின் மூலம் உணர்த்தும்… அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. மாதவன் வீட்டில் மணி ஆறே முக்கால் என்று சுவர்க் கெடிகாரத்தின் இசையொலி நினைவூட்டி ஓய்ந்தது.

மாதவனும் லியாவும் சொல்லி வைத்தாற்போல்ப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஜானகியும், லியாவ் மெங்கும் இரண்டாவது மாடியிலிருந்து படியேறி வந்து மூன்றாவது மாடி வீட்டின் தலைவாயிலைக் கடந்து வெளியேறும் தத்தம் கணவரை எதிர்கொண்டு சிரித்த முகப் பொலிவுடன் “டாட்டா” சொல்லி வழியனுப்பி வைத்தார்கள்.

மலேசியப் பிரதமர் டாக்டர் முகமது மகாதீர் அவர்கள் தென்கிழக்காசிய நாடுகளில் நேரத்தின் ஒருமைப்பாட்டுக்காகத் தத்தம் நாடுகளில் அரைமணி நேரம் முன்னோக்கிக் கெடிகாரத்தின் முள்ளை நகர்த்தி வைப்பது என்றொரு தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது அதனை ஆதரித்துப் பின்பற்றிய நாடுகளுள் சிங்கப்பூரும் ஒன்று. மனிதன் தன் வசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்பக் கெடிகாரத்தின் முள்ளை வேண்டுமானால் நகர்த்தி வைத்துக் கொள்ளலாம். ஆனால், சூரியனைச் சுற்றிவரும் பூமிக் கோளம் தன் சுழற்சியில் “எட்டி நடை போடும்” என்று எதிர்பார்க்க முடியுமா? இயற்கை இயற்கைதான்; செயற்கை செயற்கைதான்…!

இயற்கைக் கூற்றை எவராலும் மாற்ற இயலாது… என்பதுபோல. இயல்பாக ஆகியிருக்கும் ஆறேகால் மணியளவில் “கருக்கிருட்டு” புலர்ந்திடாப் பொழுதாக இருக்கும் பனி மழையின் தூறலில் தததம் இல்லத்தரசர்கள் பணிமனைகளுக்குப் பயணப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும் நிலை குறித்து ஒருசில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். இரண்டு வீட்டு இசைக் கெடிகாரங்களும் ஏழுமணி ஆகிவிட்டதை உணர் ஒலி இசையெழுப்பி ஒலித்து ஓய்ந்தன.

ஜானகியும் லியாவ் மெங்கும் தத்தம் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டுமே..! ஆம்; அவர்கள் இருவரும் வேலைக்கு வேளை தவறாமல் செல்ல வேண்டியவர்களே. ஜானகி “செம்பவாங் தாய் சேய்நல விடுதியில்” தாதிமையாகப் பணி புரிபவள்…..! லியாவ மெங் “ஈ சூன் சூப்பர் மார்க்கெட்டில் கேஷியர் ஆகப் பணியாற்றுபவள்…!

அவர்கள் இருவரும் தத்தம் அலுவலகங்களுக்கு ஒன்பது மணிக்கெல்லாம் சென்றுவிட வேண்டும். அதற்கு ஆயத்தமாகத் தொடங்கினார்கள். தலைவாயிற் கதவின் முன் உள்ள இரும்பு ‘கேட்டுக்கு மட்டும் பூட்டு போட்டுப் பூட்டிவிட்டு, தலைவாயிற் கதவைத் திறந்துவிட்டுச் செல்வது அவர்களின் வழக்கம்.

அதிகாலைப் பொழுதில் தலைவாயிற் கதைவைத் தாழிட்டு வைப்பது நல்லதல்ல; சீதேவி வீட்டைத் தேடிவரும் நேரம் காலைப்பொழுதுதான்…! அப்போது வீட்டின் தலைவாசல் அகலத் திறந்திருக்க வேண்டும் என்பது ஜானகியின் ஆத்மார்த்த பூர்வமானதொரு நம்பிக்கை…! அதனையே அடியொற்றி நடப்பவர் லியாவ் மெங்…!

இரண்டு குடும்பத்தினரும் இளைய தம்பதிகள்..! அண்மையில் திருமணம் கொண்டவர்கள். பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். திடுமெனத் தனித்து விடப்பட்டவர்களைப் போல் தனிக்குடித்தனம் மேற்கொண்டிருப்பவர்கள். பெற்றோர்களுடன் பெரிது வந்து வாழ்ந்துவர நினைத்தாலும் இயலாத நிலை….! வசதியும் வாய்ப்பும் இல்லாததொரு அமைவு…! தங்களுக்குப் பின் உள்ள சகோதரர்கள் திருமணம் ஆகாதிருக்கும்போது ஒரே வீட்டில் அடைபடுவது தர்ம நியாயமல்ல..! இது ஒரு காரணம் என்று கொள்ளலாம். தனக்கும் மற்றும் உள்ள சகோதரர்கள் அனைவருக்கும் திருமணமாகி ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கவும் முடியாது. அது ஒருபுறம் இருக்க. இப்போதெல்லாம் ஆங்கிலேய நாகரிகப்படி திருமணம் செய்துகொள்ளும் வரைதான் பிள்ளைகள்- பெற்றோர்கள்…! திருமணத்திற்குப் பிறகு நீ யாரோ…? நான் யாரோ…? என்ற அமைப்பில் உறவுகளில் – உணர்வுகளில் புதிய மாற்றங்கள் ஏற்படுகின்ற மாதிரியில் தனக்குடித்தனங்கள்…!

இத்தியாதி இத்தியாதிக் காரணங்களால் இளம் தம்பதிகளாய் “ஈ சூன்” வட்டாரத்து எழில்மிகு வீடமைப்புகளில் ஐந்து அறை வீடுகளின் தொகுதியில் “முன்பின் முகப்பு” என்ற அமைவில் இல்லம் பெற்று வந்து இனிது இல்லறம் ஏற்றுவரும் இரு தம்பதியினரும் ஒருமனக் களிப்புடன் உவகையோடு வாழ்ந்து வருகின்றனர்…! மனித குல மாண்பின் மகத்துவம் போற்றி வரும் மலர்ச்சியின் எழுச்சியாக இதனைக் கொள்லாம்.

ஜானகி-லியாவ் மெங் இருவருக்கும் இருவருக்கும் ஏறக்குறைய நான்கைந்து வயது வித்தியாசம் இருக்கலாம். லியாவ் மெங் மூத்தவள்: ஜானகி இளையவள்… இந்தத் தம்பதியினருக்குத் திருமணம் நடைபெற்றிருப்பதிலும் ஏறத்தாழ மூன்று நான்கு ஆண்டுகள் வித்தியாசம். அந்த அடிப்படையில் மூத்த தம்பதியினர் லியாவ் குடும்பத்தினர்: இளைய வாழ்விணையர் மாதவன் குடும்பத்தினர்…!

ஓர் இனத்திற்கே பெருமையும், பீடும் தரத்தக்கவை அவ்வினம் போற்றும் கலை, கலாச்சார, பண்பாட்டுப் பெருமிதங்கள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகத் திகழ்ந்தாள்… எனக் கூறலாம். ஜானகியின் நடை, உடை, பாவனைகளை உற்றுக் கவனிக்கும் அவ்வட்டாரத்துக் குடியருப்போரில் ஆன்றமை சான்றோர்கள்: பண்பாட்டில் பெருமிதங்களைப் போற்றிப் பின்பற்றுவோர் முற்றாக இல்லாமல் ஆகிவிடவில்லை..; இதற்கு இவளே சான்று..! என்று, தத்தம் நெஞ்சுக்குள் பாராட்டிக் கொள்வதுண்டு.

இயற்கையின் “விலக்காக அமையும் ஒருசில செவ்வாய்- வெள்ளிக் கிழமைகளைத் தவிர ஏனைய எல்லா செவ்வாய்- வெள்ளிக்கிழமைகளிலும் அந்த வட்டாரத்தில் அருள்மிகு தெய்வமாய் எழுந்தருளியிருக்கும் புனிதமரம் ஸ்ரீ பால சுப்பிரமணியர் ஆலயத்தில் வேலை வாய்ப்புகளுக்கேற்பக் காலையில் அல்லது மாலையில் நிச்சயம் சந்திக்கலாம். ஜானகி தன்னுடைய பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஒருநாள் வியாழக்கிழமையன்று சென்று, எப்போதும்போல் எல்லாச் சாமிகளுக்கும் அர்ச்சனைகள் செய்துவிட்டு வந்திருந்தாள். வெள்ளிக்கிழமையும் வழக்கம்போல் வழிபாட்டுக்காகக் கோயிலுக்குப் போனாள். ஆலய அர்ச்சகர் அர்ச்சனைச் சீட்டுகள் எதுவும் இல்லாமலேயே வழக்கம்போல் “மாதவன் குடும்பம் நாம தேசி..” என்று அர்ச்சனை செய்து அர்ச்சனைப் பிரசாதம் வழங்கும்போது முதற் பெயராக அழைத்துக் கொடுத்தார்; ஜானகிக்கு அது வியப்பாக இருந்தது…! ஜானகி மிகுந்த தயக்கத்துடன், “நான் அர்ச்சனக்குத் கொடுக்க வில்லையே…” என்று கூறியபோது ஆலய அர்ச்சகர் இது ‘தெய்வாதீனம்”; வாங்கிக்குங்க.. என்று கூறினார். எது எப்படியோ… இந்த நிகழ்ச்சியிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். ஜானகி வாய்ப்பமையும் நாட்களில் ஆலயத்திற்குச் செல்லத் தவறுவதில்லை; அந்த அளவுக்கு இடைவிடாப் பழக்கம்; வழக்கம்…!

இயல்பினதாய் அமையும் அனைத்துச் செவ்வாய்- வெள்ளிக் கிழமைகளில் ஆகம நெறிகளுடன் வீட்டிலும் ஜானகி வழிபாடு செய்வாள். தனக்கு இளையவர்.. ஆயினும் தன் இனக் கலாச்சாரப் பின்னணிகளைப் பின்பற்றிப் போற்றுவதில் எத்துணையளவு ஈடுபாடுடையவளாய் இருக்கின்றாள் என்பதை எண்ணிப் பார்த்து லியாவ் மெங் வியந்து போவதுண்டு.

ஒருநாள் பேச்சு வாக்கில் ஜானகி கருவுற்றிருக்கும் செய்தியறிந்து லியாவ் மெங் வாழ்த்து கூறினாள். தாய்மைப் பேறு தனக்கு அமையவில்லையே என்ற தணியாத தாகத்தோடுதான் அந்த வாழ்த்து அமைந்தது.

ஜானகிக்கு இது இரண்டாவது குழந்தை…! ஆம்; மூத்தவன் முத்துவேலன் திருமணமாகி ஒன்றரை ஆண்டுக்குள் பிறந்தவன். ஜானகி – மாதவன் இருவரும் வேலக்குச் செல்வதனால் மாதவனுடைய பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்து கொண்டிருக்கின்றான். ஆகியிருக்கும் குழந்தை பெண் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்று ஜானகி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்…! ஆஸ்திக்கொரு ஆணும் ஆசைக்கொரு பெண்ணும் இருந்தால் போதும் என்று ஜானகி தனக்குள் தீர்மானித்துக் கொண்டிருந்தாள். ஆகவே தன் அன்றாட வழிபாட்டின் ஆத்மார்த்த பிரார்த்தனையாக இந்த வேண்டுகோளைக் குறிப்பாகக் கொண்டிருந்தாள். தெய்வத்தின் திருவிளையாடல் எப்படியிருக்குமோ…?

இப்போதெல்லாம் லியாவ் மெங் அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதில்லை. எப்போதும் ஏதோ ஓர் ஏக்கத்தடன் ஏமாற்றம் நிறைந்த கலக்கத்துடன் இருந்து கொண்டிருக்கின்றாள் என்பதை மாதவன் உட்பட எல்லாரும் உணர்ந்து கொண்டிருந்தனர். ஜானகி தன்னைவிட இளையவள்… தனக்குப் பின் திருமணம் ஆனவள்… இரண்டாவது குழந்தைக்குத் தாயாகிக் கொண்ருக் கின்றாள்….. ஆனால் தனக்கு…? என்று, தாய்மைப் பேற்றுக்காகத் தவித்துக் கொண்டிருக்கும் லியாவ் மெங்கிற்கு ஏக்கமும். ஏமாற்றமும் இயல்பாகவே ஏற்படும்தானே…? இதனைப் புரிந்து கொள்வதற்கு மனோதத்துவம் கற்றுக் கொண்டிருக்க வேண்டுமா என்ன…?

மாதவன்-ஜானகி இருவரும் லியாவ் மெங்கின் மனோநிலைக்காக மனத்துக்குள் வருந்திக் கொண்டிருந்தார்கள். ஐந்தாவது முறையாக அண்மையில்தான் “கருச்சிதைவுக்கு” ஆளாகியிருந்தாள் லியாவ் மெங். அதனால் “மலட்டுத் தனம்” அவர்களிருவருக்குமே இல்லை என்பதை மருத்துவ மதிநுட்பத்தோடு ஜானகி எண்ணிப் பார்த்துக் கொண்டாள். ஆறுதல் அல்லது ஆலோசனை எந்த அடிப்படையில் அமைந்திட வேண்டும் என்று ஜானகியும், மாதவனும் குழம்பிக் கொண்டிருந்தார்கள்.

ஆன்மீக நெறியிலும் லியாவ் மெங் ஆத்மார்த்தத்தோடு இருப்பவள்தான். இயல்பாகத் தன் வீட்டில் எப்போதும் வழிபாடு செய்கின்றாள். ஆலயங்களுக்கும் செல்வாள்.

ஜானகி அறிமுகமாகி அணுக்கத் தொடர்பு அமைந்த அந்த அடிநாளில் லியாவ் மெங் ஜானகியிடம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டாள். செவ்வாய்க்கிழமையன்று உனது வீட்டின் சிறப்பு வழிபாட்டுக்கு நான் வாங்கித் தரும் மலர்களே பூஜையில் இடம்பெற வேண்டும் வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழா சிறப்பு வழிபாடுகளுக்கு நீ வாங்கிவரும் பூக்கள் பூஜைக்கு ஆகட்டும் என்பதுதான் அந்த உடன்படிக்கை. ஜானகி ஏற்றுக்கொள்வாளோ என்னவோ என்ற தயங்கித் தயங்கித்தான் லியாவ் மெங் தன் மனக் கருத்தை அபிலாசையை வெளியிட்டாள். “அதற்கென்ன அப்படியே ஆகட்டும்…” என்று, ஜானகி அகமும் முகமும் மலர்ந்து அந்த அவளின் வேண்டுகோளை அங்கீகரித்துக் கொண்டபோது லியாவ் மெங் நெஞ்சுக்குள் ஆனந்தக் கூத்தாடி மகிழ்ந்தாள்.- என்றே சொல்லவேண்டும். இதற்கு எத்தனை முறை அவள் ‘நன்றி’ ?தேங்ஸ்: சொன்னாள் என்பதைக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது.

இப்போதெல்லா ஜானகி தன் இறைவழிபாட்டின்போது, இறைவா…! இந்த நல்லவள் லியாவ் மெங்கிற்கு ஏன் இந்தச் சோதனை?” எனக் கேட்டு, அவளுக்கு அருளுமாறு வேண்டிக் கொள்வாள். பிரதி செவ்வாய்-வெள்ளிக்கிழமைகளிலும் ஆலயத்திற்குச் செல்லும் அரும்பேறு இருப்பதனால் எப்போதும் கருவுற்றிருக்கலாம் என்றொரு விசித்திரச் சிந்தனை அவள் மனத்துக்குள் ஏற்பட்டபோது ஜானகி தன்னுடைய பேதமைக்காகத் தனக்குள் மிகவும் மென்மையாகப் புன்முறுவலித்துக் கொண்டு மென்று விழுங்கிக் கொண்டாள்.

ஈசூன் புது நகரப் பேரங்காடி சூப்பர் மார்க்கெட்; எல்லா நாட்களும் இயங்குவதால் வாரத்தில் ஒருநாள் ஊழியர்களுக்கு விடுமுறை என்ற அமைப்பு…! தெய்வாதீனமாக அவளுக்கு விடுமுறைநாள் அமைந்தது வெள்ளிக்கிழமை… மகப்பேறு மருத்துவ விடுமுறை அனுசரிப்பில் இருந்துவரும் ஜானகி லியாவ் மெங் ஆலயத்துக்கு வரக்கூடிய சாதகமான ஒரு வெள்ளிக்கிழமையின் முதல்நாள் வியாழக்கிழமையன்று இரவு:மறுநாட் காலையில் ஆலயத்திற்குச் செல்வது பற்றியும். “நேர்ந்து” கொள்ளும் அமைப்பு குறித்தும் விளக்கிக் கூறினாள். லியாவ் மெங் அறிவுரை கேட்கும் சிறு குழந்தை போலக் கன்னத்தில் கையூன்றிக் கருத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஒர சந்தர்ப்பத்தில்-குறிப்பாக லியாவ் மெங் பிறந்த நாள் விழாவின்போது ஜானகிக்கு ஓர் ஆசை பிறந்தது; அதை அவளிடம் சொன்னபோது, “எனக்கு ஆட்சேபனையில்லை; பண்பாடுகளில் எனக்கு எதுவும் சம்மதமே; உன் விருப்பம் என் பாக்கியம்..” என்று சொல்லிச் சிரித்தாள். ஜானகி தன் குடும்பத்தின் சார்பாகப் பிறந்தநாள் அன்பளிப்பாய்க் கொணர்ந்த பட்டுச் சேலையை உடுத்திவிட்டு: அதிகம் சொல்வானேன்… ஓர் இந்தியப் புதுமணப் பெண் போல் அலங்கரித்துக் கொண்டு வந்து நிறுத்தி “கேக்” வெட்டச் செய்தாள். மாதவனும் போட்டி போட்டுக்கொட்டு லியாவை இந்திய மணமகனாக உருவாக்கினான்.

இவ்வாறு கோலாகலமாக நடைபெற்றது அவ்வாண்டு லியாவ் மெங் பிறந்தநாள் கொண்டாட்டம். அன்றைய அந்தப் புகைப்படங்களைத் தங்கள் வாழ்நாளில் வரலாற்று முக்கியத்துவமாய்ப் போற்றும் சாதனங்களில் ஒன்றாய்க் கருதி நிலைப் பேழைக்குள் மிகவும் பத்திரமாக நிலைப்படுத்தி வைத்திருந்தார்கள். அதற்குப் பிறகு லியாவ் மெங் கணிசமான அளவுக்குச் சேலைகளையும், ஒப்பனைப் பொருட்களையும் வாங்கிச் சேகரித்து நிரல்படுத்தி வைத்திருந்தாள். அந்த ஆடைகளில் அவள் தன் ஒரு மெருகோடு காட்சியளிப்பதை நிலைக்கண்ணாடி முன் நின்று தனக்குத்தானே பெருமிதத்துடன் இரசித்துக் கொள்வாள். ஓய்வு நேரங்களில், விடுமுறை நாட்களில் ஜானகி-லியாவ் மெங் இருவருக்கும் இதுதான் பொழுது போக்கு. “கை தேர்ந்த ஒப்னையாளர்’ என்றே ஜானகியை லியாவ் மெங் வியந்து பாராட்டிக் கொள்வாள்.

லியாவ் மெங் படித்தவள்: பண்பாட்டுச் சிரத்தையுள்ளவள். ஜானகியைப் போல் அலங்கரித்துக்கொண்டு தான் பணிபுரியும் பேரங்காடிக்குச் சென்றபோது முதலாளி உட்பட ஊழியர்கள் அனைவரும் மிகுந்த மரியாதையோடு வரவேற்றதைப் பார்த்து லியாவ் மெங் மெய்சிலிர்த்துக் கொண்டாள். அதன்பின் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டதையும், ஈசூன் வட்டாரத்தில் இந்தியர்கள் இந்தியர்கள் கணிசமான அளவுக்கு இருக்கிறார்கள்: ஆகவே, இந்திய வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு நீ எப்போதும் இந்த மாதிரியான ஒப்பனையில் வருவதை நான் ஒப்புக் கொள்கின்றேன் என்று முதலாளி பாராட்டிக் கூறியதையும், அன்றைய வர்த்தக நடைமுறையின் போது வாடிக்கையாளர்களில் ஒருவர் தன்னை ஒரு தமிழ்ப்பெண் என்று எண்ணிக்கொண்டு தமிழில் பேசத் தொடங்கி விட்டதையும், தான் நிலை கலங்கிப்போய் சமாளித்ததையும் ஜானகியிடம் கதைகதையாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போது மாதவனும், லியாவும் சேர்ந்துகொண்டு கெக்கலிக் கொட்டிச் சிரித்தார்கள். அன்று லியாவ் மெங்கன்னங் குழியச் சிரித்து மகிழ்ந்ததால் அவள்தம் முகம் இரத்தச் சிவப்பாய்க் கன்றிப் போயிருந்தது.

ஜானகி மிகவும் நுட்பமாக ஒன்றைக் கூறி, ஏனைய மூவரையும் சிந்திக்க வைத்தாள். லியாவ் மெங் தமிழ்ப் பெண்கோலம் பூணும்போது அவள் ஏதோ ஓர் இந்தியக் குடும்பத்தின் வளர்ப்புப் பெண்” போலக் காட்சியளிக்கின்றாள். எனக்குக் கூட அத்தகைய உணர்வுதான் தோன்றும். இவ்வாறு ஜானகி கூறியபோது அப்படியோரு பூர்வீகம் சீங்கப்பூரிய சமுதாயத்தில் நிலவிக்கொண்டிருப்பது பற்றிச் சிந்தித்துக் கொண்டார்கள். இருதரப்புக் குடும்பத்தாரும்-நான்கு பேரும் ஒருசேரக் கூர்ந்து ஆலோசித்து, ஜானகியின் கருத்தை ஆதரித்தார்கள். ஆம்; மகப்பேறு அமையாத இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் சீனப் பெண் பிள்ளைகளத் தத்து எடுத்துக்கொண்டு வளர்ந்து வந்திருக்கின்றார்கள். இது பரவலாகக் காணப்படும் உண்மை நிலையேயாகும். ஆகவே, லியாவ் மெங் தமிழ்ப் பெண் போல் ஒப்பனை செய்துகொண்டு போனபோது அந்தத் தமிழர். அவ்வாறாகிய ஒரு “தமிழ்ப் பெண்ணாக” இருக்கலாம் என்று எண்ணிப் பேசியிருக்கலாம் என்று கூறிய ஜானகியின் மரபுவழிக் கருத்தில் நுட்பத்தை வியந்து போற்றினார்கள்.

வெள்ளிக்கிழமை…! விடிகாலைப் பொழுதில் எழுந்து. வழக்கம்போல் ஆராதனைகள் செய்து கொண்டிருக்கும்போது எதிர்வீட்டின் நடமாட்டங்களும் இருக்கக் கண்டு, ஆலயம் செல்வதற்குரிய ஏற்பாடுகளிலும், மாதவனை வேலைக்கு அனுப்பும் துரிதத்திலும் ஒருசேர முனைந்து ஜானகி செயல்பட்டுக் கொண்டிருந்தாள் அண்டை -அயல் ஆண்மக்கள் இருவரும் வழக்கம் போல் அலுவலகங்களுக்குச் செல்ல ஆயத்தமானார்கள் ‘மஹாலெட்சுமிகளின்” எதிர்கொண்ட வருகையும் இனிது நடந்தேறியது.

ஜானகியும் வியாவ் மெங்கும் முதல் நாளின் திட்டப்படி, செம்பவாங் பகுதியில் எழுந்திருளிக் கோயில் கொண்டிருக்கும் புனிதமரம் ஸ்ரீ பால சுப்ரமணியர் ஆலயத்திற்குச் சென்றார்கள். முன்னறிவிப்பின்படி ஆலய அர்ச்சகரால் அபிசேக ஆராதனைகள் சிறப்பு வழிபாடாகச் செய்விக்கப்பட்ட பின்னர் ஜானகியின் வழிகாட்டுதலில் லியாவ் மெங் ” பிரசாதம்” வழங்கினாள். அப்போதும் உறுத்தல் பார்வைகள் இருந்தன.

ஜானகியும் லியாவ் மெங் பிரசாதம் வழங்குதலில் உதவினாள். அப்போது ஜானகியைப் போல் வழக்கமாகக் கோவிலுக்கு வந்து கொண்டிருக்கும் பெண்கள் அனைவரும் இன்றைக்குப் புதிதாக வந்திருக்கும் இவள் ?லியாவ் மெங்க ஈசூன் வட்டாரத்தில் புதிதாகக் குடியேறியிருக்கும் ஓர் இந்தியப் பெண்ணாக இருக்கலாம் என்ற உறுத்தலோடு பார்த்தார்கள். ஜானகிக்கு அறிமுகமான பெண்கள் பலரும் விசாரித்து அறிந்துகொள்ள நினைத்தார்கள். ஜானகி பிரசாதம் வழங்குவதில் தீவிரமாக இருந்தால் அடுத்தபடி ஆலயத்திற்கு வரும்போது கேட்டுக் கொள்ளலாம் என் அரைகுறை மன நிறைவோடு சென்று கொண்டிருந்தார்கள். இதனையும் ஜானகி தன் ஓரக்கண்ணால் கவனிக்கத் தவறவில்லை. ஆலயத்தின் வெள்ளிக்கிழமை கூட்டம் குறைந்து நிசப்தம் நிலவும் வரை இருவரும் கூடத்துள் அமர்ந்திருந்தார்கள். ஜானகியும் லியாவ் மெங்கும் நிசப்தமாக இருந்த நேரத்தில் மீண்டும் ஒருமுறை “நேர்ந்து” கொண்டு ஆத்ம நிறைவோடு இல்லம் திரும்பினார்கள்.

எதிர்பார்ப்புகளின் இயக்கம் இதயத்துள் அலைமோதிக் கொண்டிருக்கும்போது காலத்தின் கரைசல் மிகவும் மெதுநடை போடுவதாகத் தோன்றுவது இயல்புதான்…! ஆலமரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளும் பேதமை” என்று, ஆத்திகத்தில் நம்பிக்கையில்லாதோர் கூறுவது போல, லியாவ் மெங்கின் உடனடி எதிர்பார்ப்பும். ஜானகியின் அவ்வப்போதைய விசாரிப்பும் இருந்து வந்தது. “பருவத்தாலன்றிப் பழா’ என்பது போல இருந்து வந்தது, பின் காலத்தால் அவர்களின் எதிர்பார்ப்பும் கனிந்தது.

விளைநிலத்தில் பசுமை எழில் பார்த்து நிறைவுபெறும் விவசாயி, அகமகிழ்வோடு அறுவடைக்கு நாட்களை எண்ணிக் கொண்டும், வரவதனின் பூரிப்பை எண்ணிக் கொண்டும் இருப்பது போன்று, லியாவ் மெங்கும், ஜானகியும் “எண்ணிக் கொண்டு” இருந்தார்கள்.

ஒரு சில மாதங்கள் முன்பின் என்பதுதான்…! இறைவன் திருவருளால் இருவருமே மகப்பேறு மருத்துவ மனை சென்று ‘கருப் பிணி” நீங்கிக் கரையேறி இல்லம் திரும்பியிருந்தனர்.

எதிர்பார்ப்பது நடக்காமல் வேறொன்று நடப்பதும் எதிர்பார்ப்பதே நடந்தேறுவதும் உண்டு; எதிர்பாராதது நடப்பதும் உண்டு…! நடப்பவையெல்லாம் நல்லிறைவன் செயல்…! இஃது ஒளவையாரின் அரிய பொன்மொழி.

ஜானகிக்கு நினைத்தது நடந்தது. லியாவ் மெங்கிற்கு “நினைக்காதது” நடந்தது. யார் யாருக்கும் எப்படியெப்படி அருள்பாலிக்க வேண்டும். என்பது இறையருளின் ‘படியளப்பாக” இருக்கும்போது இயற்கையின் தீர்ப்பை ஏற்கவேண்டும்தானே…! விரும்பியோ விரும்பாமலோ விளைச்சலை” எதிர்கொண்டு ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

ஜானகிக்கு இரட்டை மகிழ்ச்சி…. அல்ல: அல்ல… “முப்பேறு’ மகிழ்ச்சி… ஆம்; தனக்குத் தான் நினைத்ததே நடந்தது ஒரு மகிழ்ச்சி: லியாவ் மெங் தாய்மைப் பேற்றினை எய்தினாள் என்பது ஒரு மகிழ்ச்சி; அவளுக்கு ஒரே பிரசவத்தில் ஆணும் பெண்ணும் கிடைத்து விட்ட இருமகவுப் பேறு மகிழ்ச்சி…!

“நம்பி கை தொழுதாரை நல்லிறை நாளும் காக்கும்” என்ற நான்குமறைத் தீர்ப்பின் நன்னயம் எண்ணியெண்ணி இறுமாந்து மகிழ்ந்தாள் ஜானகி. நம்பிக்கையூட்டிய தன்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை என்பதிலே ஜானகிக்குப் பேரானந்தம் என்று சொல்லலாம்.

மகப்பேறு மருத்துவ மனையிலிருந்து திரும்பிய லியாவ் மெங் ஜானகியை நன்றியொளிருங் கண்மலர்ச்சியோடு பார்த்துக் கலங்கினாள்; ஆனந்தக் கண்ணீரின் அதிசயத் தொகுப்புகள் கன்னங்களின் கதுப்புகளிடையே முத்துமுத்தாகக் கசித்து நெகிழ்ந்தது. ஜானகியும் ஆனந்தக் கண்ணீரை முத்து முத்தாய் உதிர்த்த வண்ணம் லியாவ் மெங்கின் நன்றிக் கண்ணீரை இதழ்க் கடையோர நெகிழ்ச்சியோடு இதமாகத் துடைத்துவிட்டாள்.

செம்பவாங் வட்டாரத்தில் காப்பொரா சாலையில் அமைந்திருக்கும் புனிதமரம் ஸ்ரீ பால சுப்பிரமணியர் ஆலயத்தின் தனிப்பெரும் திருவிழா “பங்குனி உத்தரத் திருவிழா” சீரும் சிறப்புமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவ்வாண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமையன்று அமைந்து நடைபெற்றதால் “எள் போட்டால் எண்ணெய் ஆகும்” அளவு பெருங் கூட்டம்…! லியாவ் மெங் மஞ்சள் சேலை சகிதம் நெற்றிச்சுட்டி அலகு -நாவலகு போட்டுப் பாற்குடம் ஏந்திப் பக்தி சிரத்தையோடு நடந்து வந்தாள்.

ஜானகியின் ஏற்பாட்டில், குழுமியிருந்த அவள் தம் உற்றார் உறவினர் காவடிச் சிந்து பாடிக்கொண்டு வர. ‘கண்ணியமானதொரு பக்திப் பாற்குடமாக ஆலயத்தின் மூலஸ்தானத்தை வந்தடையச் செய்தாள். இடையில் நாலாந்தர ஆர்ப்பாட்ட இசைஞர்கள் ஆடிப் பாடிக் கொண்டுவர இசைந்து வந்துபோது-முனைந்தபோது இடைமறித்து. ஊர்க்காவலரிடம்; இதற்கும் எங்களுக்கும் சமபந்தமில்லை என்று கூறி ஒப்படைத்தபோது, மாதவன்- லியாவ் உள்ளிட்ட அனைவரும் வியந்து போனார்கள்; விக்கித்துப் போனார்கள்.

லியாவ் மெங் மெய்மறந்து பாற்குடம் ஏந்திச் சென்று, புனிதமரம் ஸ்ரீ பால சுப்பிரமணியர் தம் மூலஸ்தானத்தை யடைந்து பாலாபிஷேகம் செய்யப்பட்டு, அலகுகள் அகற்றப்பட்டபோது மயங்கிவிட்டாள். அவளைத் தாங்கிப் பிடித்து வந்து அமரச் செய்து விரதம் முறித்து ஆசுவாசப்படுத்தினாள்.

மாதவன்-லியாவ் குடும்பத்தினர் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போதும் காவடிகள் அலையலையாய் வந்துகொண்டிருந்தன. “வேல் வேல்” என்னும் பக்திப் பரவச ஒலி மண்ணகத்தின் எதிரொலியாய் விண்ணொலியாய் விதிர்த்து ஒலித்துக் கொண்டிருந்தது.

– கற்பனை மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 1995, தமிழவேள் நாடக மன்றம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *