நண்பனுக்காக

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 5,721 
 
 

கமலா அக்கா பரபரப்பாய் இருப்பதாய் குமரப்பனுக்கு பட்டது. ஆனால் எதுவும் கேட்கவில்லை.கொண்டு வந்திருந்த ரேசன் பொருட்களை கமலா அக்காவிடம் கொடுத்தான்.

எப்பொழுதும் டீ சாப்பிட்டுட்டு போ குமாரு என்று கேட்கும் கமலாக்கா சரி குமாரு என்று அவனிடம் சொன்னது, அவனுக்கு நீ போலாம் என்று சொல்வதாக பட்டது.

சட்டென்று மனதில் வந்தது கோபமா துக்கமா, தெரியவில்லை. கூப்பிடாவிட்டால் என்ன? இது நண்பன் சோமயைனுக்காக நாம் செய்யும் கடமை. மனதை தேறுதல் படுத்திக்கொண்டான். கமலா அக்காவிடம் ரேசன் பொருட்களை கொடுத்துவிட்டு சைக்கிளை எடுத்து திரும்பியவன் எதிரில் சோமையனின் அப்பா தலையில் சோளக்கதிர் கட்டுடன் வந்து கொண்டிருந்தார். என்னலே! ரேசன் சாமான் கொண்டியாந்தியா? உன் பிரண்டு நாளான்னக்கி வரபோறான் தெரியுமாலே?

எனக்கு தெரியாதே, இப்ப அக்காட்டதா சாமான் கொடுத்தன், அக்கா ஒண்ணும் சொல்லலியே, மெல்ல சொன்னவனுக்கு, விடுலே, மறந்திருப்பா, உன் பிரண்ட பாக்க வந்திருலே நாளானக்கி. ம்ம்..பார்ப்போம் விட்டேத்தியாய் பதில் சொல்லி சைக்கிளை திருப்பி கோபத்தை காட்ட வேகமாக சென்றான். அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தவர் திரும்பி “ஏ கமலா” என்று இரைந்தார்.இந்த அப்பனுக்கு வேற வேலையென்ன? எப்ப பார்த்தாலும் இரைச்சல்தான், முணு முணுத்தவாறு வெளியே வந்து எதுக்குப்பா இப்ப கூப்பாடு போடறே.அந்த பய கிட்ட அவன் பிரண்டு வர்றான்னு சொல்லலியா? க்கும் இதை கேக்கறதுக்குத்தான் ஊருக்கே கூப்பிடற மாதிரி கூப்பிட்டயாக்கும், என்று சலித்தவள், மறந்துட்டேன். என்று சொன்னவளை உறுத்துப்பார்த்த தகப்பன், வேணாத்தா அந்த பையந்தான் ஐஞ்சு வருசமா நாம குடும்பத்துக்கு உதவியா இருக்கான். இப்ப உன் தம்பி சீமையிலே இருந்து வர்றான்னு தெரிஞ்சவுடனே இந்த பய உனக்கு வேண்டாதவனா போயிட்டானோ, கேட்டவருக்கு இதா எதையாவது பேசிட்டிருக்காத, முதல்ல ஆத்தா எங்க? பேச்சை மாற்றினாள். அவ மாட்டை பத்திட்டு பின்னால் வாறா. என்ற கிழவர் சோளத்தட்டை கீழே போட்டுவிட்டு வீட்டு திண்ணையில் உடம்பை சாய்த்தார்.

சைக்கிளை ஓட்டிக்கொண்டு இருந்த குமரப்பனுக்கு மனசெல்லாம் எரிந்தது. ஏன் இப்படி இருக்கிறார்கள்? இது நாள் வரை எனக்காக கையில் காப்பி வைத்து குமாரு குமாரு என்று அன்பொழுக கூப்பிட்ட கமலாக்கா,தம்பி துபாயிலிருந்து வருகிறான் என்றவுடன் அலட்சியமா நடந்துக்கறாங்களே, சோமையன் போகும்போது சொன்ன வார்த்தைகள் இன்றும் மனசில் இருக்கிறது.குமாரு வயசான அப்பன், ஆத்தாளை விட்டுட்டு போறது கூட எனக்கு இப்ப கஷ்டமா தெரியல, வீட்டுல அக்கா ஒருத்தி இருக்கா,அவளுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்கற வரைக்கும், அங்க மனசு இருக்காது. நீ எதுனாலும் எங்க வீட்டு வெளி வேலையெல்லாம் செஞ்சு கொடுத்துடுடா. சொன்னபடி இதுவரை ரேசன் கடையிலிருந்து, இவன் தோட்டத்திலிருந்தும், அவர்கள் தோட்டத்திலிருந்தும் காய்கறிகளை சந்தைக்கு எடுத்துச்சென்று வியாபாரியிடம் கொடுத்து ஒரு பைசா கூட தவறாமல் நாணயமாய் கொடுத்து வருகிறான். அவன் நினைத்திருந்தால் இவ்வளவுக்குத்தான் வியாபாரி கொடுத்தார் என்று சொன்னால் அவர்கள் நம்பி விடுவர். ஆனால் அப்படியெல்லாம் செய்ய இவனின் மனம் இடம் கொடுத்ததில்லை.

இடையில் குமரப்பனுக்கு கல்யாணம் ஆனது. அங்கிருந்து நண்பன் சோமையன் வாழ்த்து அனுப்பி, கல்யாணம் ஆனதால் எங்கே தன் குடும்பத்தை மறந்து விடுவானோ என்ற பயத்தில், தன்னுடைய குடும்பத்துக்கும் ஏதாவது உதவிகள் செய்துட்டு இரு ! என்று கடிதம் மூலம் கேட்டுக்கொண்டான்.

சோமையனும், குமரப்பனும் அந்தக்கிராமத்திலே ஆரம்ப பள்ளியிலிருந்து ஒன்றாக படித்தவர்கள். குமரப்பனுக்கு அவ்வளவாக படிப்பு ஏறவில்லை, சோமையன் தட்டு தடுமாறி பக்கத்து டவுனில் உள்ள் மேல்நிலைப்பள்ளி வரை படித்துவிட்டான். அந்த டவுனிலேயே ஒரு வேலை தேடிக்கொண்டாலும், அவன் குடும்பத்துக்கு என்று இருந்த தோட்டத்திலும், வேலை செய்தான். குமரப்பன் முழுத்தொழிலாக விவசாயத்தில் புகுந்துவிட்டான்.

இப்படியே நானகைந்து வருடங்கள் ஓட சோமையன் ஒரு ஏஜண்டை பிடித்து துபாய் போவதற்கான ஏற்பாடுகளை செய்து ஐந்து வருட விசாவில் கிளம்பிவிட்டான். குமரப்பன் கூட கேட்டான், ஏண்டா, அக்கா கல்யாணத்த முடிச்சுட்டு போலாம்ல? இல்லே குமாரு எங்க தோட்டம் அடகுல தான் இருக்கு, எங்க அக்காளுக்குன்னு கல்யாணத்துக்கு ஒரு குண்டுமணி நகை கூட கிடையாது. நான் போய்தான் ஏதாவது செஞ்சு அக்கா கல்யாணத்துக்கு வழி பண்ணனும், வேற வழி இல்லை, என்று சொன்னான்.

முதல் வருடம் போய் இவனுக்கும் ஒரு சில கடிதங்கள் போட்டவன் போகப்போக கடிதப்போக்குவரத்து குறைந்துவிட்டது. அவர்கள் வீட்டுக்கும் வருடத்திற்கு நான்கைந்து கடிதங்கள்தான் வரும்.அதிலும் நான் நல்ல இருக்கேன், நீங்க எப்படி இருக்கறீங்க? என்று நான்கைந்து வரிகளுடன் முடித்துக்கொள்வான்.

வீட்டில் மனைவியிடம் ரேசன் பொருட்களை கொடுத்தவன், டீ போட்டு கொண்டா? கேட்டவனை அதிசயமாய் பார்த்தாள் குமரப்பனின் மனைவி, என்னய்யா எப்ப கேட்டாலும், அக்கா அங்க டீ கொடுத்துடுச்சு அப்படீம்ப, இன்னைக்கு என்ன அதிசயமா இருக்கு, அவளாக சொல்லிக்கொண்டே குசினிக்குள் நுழைந்தாள்.

மனைவி வருவதற்குள் அப்பனையும், ஆத்தாளையும் பார்த்துவிடுவோம் என்று பக்கத்திலிருந்த குடிசைக்குள் நுழைந்தான். என்னடா குமாரு உன் பிரண்டு வராணம்ல என்று கேட்ட அப்பனை முறைத்து பார்த்தான். அவன் அப்பந்தான் எங்கிட்ட சொன்னான். எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது, எனக்கு மட்டும் தெரியவில்லை, சொல்லக்கூடாது என்று நினைப்பவர்களை என்ன செய்ய முடியும் என்று நினைத்தவனை வெளியே டீ எடுத்து வந்து அழைக்கும் மனைவியின் குரலை கேட்டு வெளியே சென்றான்.

சோமையன் வந்துவிட்டதாய் தகவல் அரசல் புரசலாய் காதில் விழுந்தது. இவன் கண்டு கொள்ளவில்லை, அவனாக தேடி வரட்டும், இனியும் வேலைக்காரனாய் அவர்கள் வீட்டுக்கு செல்ல மனம் வரவில்லை.தோட்டத்திலிருந்து வீடு திரும்பும் ஒரு சில நேரங்களில் சோமையன் கடைத்தெருவில் நண்பர்களுடன் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை பார்ப்பான். ஆனால் இவனாக தேடிச்செல்லக்கூடாது என்று முடிவு செய்தவனாக அவர்களை பார்க்காதவாறு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்துவிடுவான். ஒரு முறை குமரப்பனின் அப்பன் குமாரு உன் பிரண்டு உன்னை ரொம்ப கேட்டுட்டு இருந்தாம், நாந்தான் உரம் வாங்கறதுக்கு டவுனுக்கு போயிருக்கான்னு சொன்னேன். நான் மறுபடி வாறேன்னு சொல்லிட்டு போனான்.அப்பன் சொன்னதை காதில் வாங்காதது போல டவுனிலிருந்து வாங்கி வந்த உரங்களை ரகம் வாரியாக பிரித்து வைத்தான்.

ஒரு வாரம் ஓடியிருந்தது.விடியற்காலை, ரொம்ப நேரமாய் தூங்கிவிட்டோமோ பதட்டத்துடன் அவசர அவசரமாய் எழுந்து பால் கறக்க பால் குண்டாவுடன் கிளம்ப போனவன் ‘குமாரு” என்ற குரல் கேட்டதும் வெளியே வந்தான். அங்கே தோள்பையுடன் சோமையன் நின்று கொண்டிருந்தான்.”வா சோமையா” வாய் அனிச்சையாய் கூப்பிட்டாலும், மனம் அதனுடன் ஒன்றுபடாமல் இருந்தது. சோமையன் செருப்பை கழட்டி வைத்துவிட்டு தோள் பையுடன் உள்ளே வந்தான்.சத்தம் கேட்டு வெளியே வந்த குமரப்பனின் மனைவி வாங்கண்ணே, என்றவள் இவன் கையில் இருந்த சொம்பை வாங்கி நான் கறக்க போறேன் நீங்க பேசிக்கிட்டிருங்க, என்று சொல்லிவிட்டு அண்னே சித்த உட்காருங்க, பால் கறந்துட்டு வந்துடறேன் என்று இங்கிதமாய் சொல்லிவிட்டு சென்றாள்.இருக்கட்டும் என்று சொன்ன சோமையன் மெல்ல கீழே எடுக்காமல் இருந்த பாயிலே சாவதானமாய் உட்கார்ந்தான். குமரப்பனும் வேறு வழியில்லாமல் அந்த பாயிலே உட்கார வேண்டியதாயிற்று.

இருவரும் ஐந்து நிமிடங்கள் ஒன்றும் பேசவில்லை, சோமையன் மெல்ல கணைத்து ரொம்ப நன்றி குமாரு, இந்த ஐஞ்சு வருசம் எங்க வீட்டை பாத்துக்கிட்டதுக்கு, என்றவனை ஒன்றும் பேசாமல் பார்த்தான் குமரப்பன். அவன் முகத்தை பார்த்த சோமையன் அக்கா அப்படி உங்கிட்ட நடந்துகிட்டதுக்கு நான் ரொம்ப மன்னிப்பு கேட்டிக்கறேன் என்று சொல்லவும், அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல என்று அவசரமாய் மறுத்தான் குமரப்பன். இல்லே குமாரு, அப்பன் வந்த அன்னைக்கே சொல்லுச்சு, நாந்தான் உன்னைய அப்புறம் பார்த்து பேசிக்கறேன்னு சொல்லிட்டேன். என்றவன் ஐந்து நிமிடங்கள் அமைதியாய் இருந்தான்.குமரப்பன் அவன் முகத்தையே பார்த்தவாரு இருந்தான். குமாரு நான் ஒண்ணு சொல்றேன் நீ யார்கிட்டயும் சொல்ல மாட்டியே என்று பீடிகை போட்டான். குமரப்பன் மனம் இவன் பேச பேச மெல்ல கரைய ஆரம்பித்தது. என்ன சோமையா என்னென்னவோ பேசற, என்று சமாதானப்படுத்தினான். இல்லே குமாரு உண்மைய சொல்லனும்ணா நான் துபாயே போகல, என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தான் குமரப்பன்.

ஆமா குமாரு, அந்த ஏஜண்ட் எங்களை ஏமாத்திட்டான். பாம்பே வரைக்கும் போன பின்னாலதான் தெரிஞ்சது எல்லாமே டிராமா அப்படீன்னு, எங்களை ஹோட்டல்ல விட்டுட்டு அவன் எங்கேயோ போயிட்டான். குரல் கரகரக்க சொன்னவனை எதுவும் பேசாமல் பார்த்துகொண்டிருந்தான் குமரப்பன். அங்கேயே தங்கி எங்கெங்கெல்லாம் அலைஞ்சு, ஒரு வேலைய தேடி ஐஞ்சு வருசம் ஊருக்கு வரக்கூடாதுன்னு, ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.இந்த இரண்டு வருசத்துலதான் ஒரு நல்ல வேலையில உட்கார்ந்திருக்கேன். ஊருக்கெல்லாம் நான் துபாயிலிருந்து வந்ததாகவே இருக்கட்டும்.உனக்கு மட்டும் உண்மைய சொல்லிடுவோம்னு இங்க வரும்போதே முடிவு பண்ணிட்டேன். அதனால தான் உன்னைய உடனே பார்க்க வராம இருந்தேன். அக்கா வயசுல இருக்கறவங்க எல்லாம் பிள்ளை குட்டியோட இருக்கறத பாக்கறப்ப எனக்கு நெஞ்சு பதறுது. அக்கா எங்கிட்ட வாய் திறந்து எதுவும் சொல்லலையின்னாலும், எனக்கு புரியாதா? குமாரு. அதுதான் அதுகிட்ட நான் எதுவும் சொல்லிக்கிடல.என் குடும்பத்து சார்பா நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். இன்னும் ஒரு வருசத்துல அக்கா கல்யாணத்த முடிச்சுடலாம்னு இருக்கேன். அதுவரைக்கும் எனக்கு உதவி செய்வியா குமாரு, கேட்டவனின் கைகளை ஆதரவாய் பற்றிக்கொண்டு, நீ ¨தரியமா போ, உங்கக்காளுக்கு நானும் ஒரு தம்பிதான்ங்கறதை மறக்க மாட்டேன்.

உள்ளே வந்த குமரப்பனின் மனைவி கடைசியாக பேசிய பேச்சுக்கள் காதில் விழுந்ததை,காட்டுவதற்காக நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்கண்ணே, நாங்க இருக்கோம் என்றவள் இருவருக்கும் காப்பி போடுவதற்காக குசினிக்குள் சென்றாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *