நட்சத்திர பங்களா

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2023
பார்வையிட்டோர்: 8,169 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10

ராணியை இரவில் தனக்குத் துணையாய் இங்கு வந்து தங்கச் சொன்னால் என்ன?

பங்களாவின் பின்வாசல் வழியே சமையல் அறைக்குள் நுழைந்தாள் பரணி.

“ராணி…” குரல் தந்தாள்.

“ஆங்…வா…ஏதும் வேணுமா?”

ராணியின் முகம் இருகியிருந்தது – குரலும் சகஜமில்லை.

தன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டாளே என்ற கோபமோ?

“எம்மேல கோவமா ராணி?”

“உம்மேல எதுக்கு? மொத்தமா ஏதோ எரிச்சல்…”

அகண்ட பாத்திரத்தினுள் கெட்டித் தயிரை ‘சொத்’தென கொட்டி, தண்ணீர்விட்டுக் கடைய ஆரம்பித்தாள்.

வேலை அதிகம் போல… முகத்திலும் சகஜமில்லை.ஆக ‘ஜகா’ வாங்கிவிட வேண்டியதுதான் என்று நினைத்த நேரம் ராணி பேசலானாள்.

“மூணு நாளாய் நா இங்கு பாதி நேரந்தான் வேலைக்கு வர்றது. எந்தம்பிக்கு மேலுக்கு முடியல…”

“என்னாச்சு… ராணி?”

“காச்சலு. அனத்திட்டே கிடக்கான். டாக்டரு ‘டைபாயிடு டெஸ்ட்’ பாருங்கறாரு. மூத்தவனைக் கூட்டிட்டு போகச் சொல்லியிருக்கேன். அங்கதான் நிலமை சரியில்லைன்னா இங்கேயும் திருப்தியில்லை”.

‘சர்சர்’ரென மோர் நுரை தெறிக்க சிலும்பியது.

“ம்ம்… ஏன்?” தயக்கமாய் கேட்டாள்.

“வூட்டுல ஏறுறவங்க நல்ல மனசுக்காரங்களா இருக்கணும் பரணி. கண்ட கழுதைகளும் ஏறினா வூடு விளங்குமா? இந்த மாரிமுத்து வேல என்ன?”

கைகளின் வேலையோடு பேச்சின் மும்முரமும் கூடியது.

“யாரு? நம்ப வீட்டுக்கு வர்ற மாரிமுத்துவா?”

“அவனேதான்? அவன் வீடு மதுரப்பக்கம். அவங்க அதான் தாரிணியோட ‘பாக்டரி’க்கு போவான். போற வழியில நமக்கு உதவி செய்ய ஐயா ஏற்பாடு செய்தாரு. நல்ல ஏற்பாடுதான். ஆனா, பய சரியில்லாதவன்…”

“எலும்புந் தோலுமா இருப்பான். அவன் அதிர்ந்து பேசிக்கூடக் கேட்டதில்லியே?”

“குடிகாரன். குடிக்கப் பணம் வேணுங்கறதுல மத்த எல்லா வேண்டாத பழக்கமும் சேரும்ல…?”

இப்படித் தூண்டித் துருவுவது பரணியின் சுபாவமில்லை. ஆனால், எதுவுமே தெரியாமல் இருப்பது நல்லதல்ல என்று தோன்றிய பிறகு இது பாவமாய்படவில்லை.

“மூணு நாள் முன்னே சமையல முடிச்சுட்டு ஹாலைப் பெருக்கலாம்னு போனா… இந்தப் பய அங்கே நிக்கறான்! அவனுக்கு வீட்டுப் படியேற வேண்டிய அவசியமென்ன? ஒண்டியா ‘திருதிரு’ன்னு நிக்கறான்- விரட்டியடிச்சேன். நேத்து இங்க எங்கிட்ட வந்து பேச்சு வளக்கான்… வூட்டுக்குள்ள என்ன வேலை? எதுவோ சரியில்லை. முதல்ல அந்த அர்ச்சனா பொண்ணு… இப்ப இந்தக்குடிகாரப் பய…”

அரிந்து வைத்திருந்த பச்சை மிளகாய், இஞ்சி துண்டுகளை மோரில் இட்டாள். அளவாய் உப்பிட்டு, தம்ளர்களில் ஊற்றினாள்.

அர்ச்சனாவைப் பற்றி எப்படிக் கேட்க?

“நிறைய ஆளுங்க வரப்போகன்னு இருக்காங்க…”

“ம்ம்… உனக்கு வேலைதான்.”

“ஆங்… என்ன விசயமா வந்தே? இத எடுத்துட்டுப் போகணும்.”

“சும்மாமதான். உந்தம்பிக்கு சீக்கிரஞ் சரியாயிடும். வரட்டா…”

ராணிக்கு இருக்கும் பிரச்சினைகள் போதாதென அவளை இங்குமா இழுக்க? என் வீட்டில் பேயிருக்குது- நீயும் வந்து அச்சத்தை அனுபவி என்பதா?

ஆனால், இரவை நினைத்தால் வயிறு சுருண்டது.


அன்று மதியம் அவளுக்கு நட்சத்திரம்மாவின் கடிதம் கிடைத்தது. அதை நெஞ்சோடு அணைத்துக்கொண்டதே பெரும் ஆறுதல். பிரித்து ‘மளமள’வென்று வாசித்தவள், மீண்டும் மீண்டுமாய் கடிதத்தில் விழியோட்டினாள்.

விஷயம் பெரிதாய் எதுவுமில்லை. சவுகரியமான பயணம் பமீலாக்காவின் வீடு; பேரன்- பேத்தியின் பேச்சு, விளையாட்டுகள் அங்குள்ள ஆலயம், மக்களின் மொழி சரிவர புரியாத பிரச்சினை, சீதோஷ்ணம் என்று பொதுவான பல செய்திகள்தான்.

இவளையும், அனுவையும் பற்றின அன்பான விசாரிப்பு.

‘பாஸ்கரன் அங்கு வந்திருப்பானே? அவன் அங்கிருப்பது உங்களுக்கு நல்ல துணை’ என்பதாய் ஒரு வரி – இப்படி சாதாரண கடிதம். ஆனால், அது அவளது மனபாரத்தைத் துடைத்தே போட்டது.

பாஸ்கரனது வரவு நல்லது அல்ல – பாதகம் என்பதைத் தவிர மற்றதெல்லாம் சரி!

இருட்ட இருட்ட மனதில் பயத்தின் மருட்டல் கூடியது.

ஆனால், அன்றிரவு பயந்தாற் போல ஏதுமில்லை!

அன்று பங்களா வளாகம் முழுக்க விளக்குகள் எரிந்ததும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

அனுவை ரிக்க்ஷாவிற்கு அழைத்துச் செல்லும்போது, அவன் வேலையில் மும்முரமாய் நின்றான். தூங்காதவை போல சிவந்த கண்கள்.

“எதுக்கு அங்கிள் இத்தனி லைட்?”

“ஷெட் கட்டறோமில்லையா, அனு? பகலில் மட்டும் வேலை நடந்தாப் போதாது. ராவும், பகலுமாய் வேலை நடந்தாத்தான் இயந்திரங்கள் வந்து இறங்க முடியும். அதுக்குத்தான் விளக்கு…”

“நல்லாக்கு…”

பங்களாவின் மறுபுறம் செங்கல் சுவர்கள் மளமளவென உயர்ந்தன. தூண்களும், அதன்மேல் ‘ஆஸ்பெஸ்டாஸ்’ கூரையும் அலட்டலே இல்லாமல் தோன்றின.

இத்தனை அரவம் இருப்பது பரணிக்கு நல்லதாயிற்று.

நாட்கள் தையல் இயந்திரத்தோடு கழிந்துகொண்டிருந்தன. அனுவிற்கு தேர்வு நேரம் என்பதைச் சாக்குவைத்து, பெரும்பாலும் வீட்டினுள்ளேயே கிடந்தாள்.

அன்று மாலை வெண்பொங்கலுக்குச் சேர்க்க அவள் நெய்யில் மிளகு, சீரகம், கருவேப்பிலை தாளித்த நேரம்… பாஸ்கரனது குரல் கேட்டது.

“பரணி” -மிக சன்னமான அழைப்பு.

“இதோ வரேன்.”

இவனைப் பார்த்த ஒருகணம் அயர்ந்து போனாள்.

இவன் வந்து ஒரு மாதம்கூட இல்லை. அதற்குள் எத்தனை மாற்றம்! மெலிந்திருந்தான்.

மழிக்காத முகம்- கண்கள் இருண்டு, சற்றே குழிக்குள் இறங்கியிருந்தன. உதடுகள் வறண்டு.. புன்னகை மறந்து…

“ஒரு நிமிஷம் உக்காருங்க. பொங்கலை கிளறிட்டு வந்துடறேன்.”

“ஹை… பொங்கலா?” என்று தட்டுடன் அவள் பின்னே வரவில்லை அவன். வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மவுனமாய், அந்நியனாய் அவன் ஹாலில் நின்றது உறுத்தியது. இனி உறவு, உரிமையாய் ஒட்டித் தொந்தரவு செய்யமாட்டேன் என்பது போல இருந்தது.

அவசரமாய் கேசத்தை, சேலையைத் தடவி சீராக்கிக்கொண்ட பிறகே பொங்கலைக் கிளறினாள்.

வாழை இலை வடிவில் இருந்த தட்டில் இரண்டு கரண்டி பொங்கலும், சிறிது மல்லிச் சட்னியும் வைத்து நீட்டினாள்.

“இல்லை பரணி…வேண்டாம்- சாப்பிட நேரமில்லை. நாளை ‘மெஷின்’கள் வந்து இறங்குது. கூடவே, அதை இயக்கும் சிலரும் வருவாங்க. அவங்க நம்ப ஆட்களுக்கு விபரம் சொல்லி தரணும். ‘என்ஜினியரிங்’ முடிச்ச ரெண்டு பையன்களையும் வேலையில் சேர்த்திருக்கேன். ஓரளவு அவங்களுக்கும் ‘மெஷின்’ பற்றி புரிஞ்சாச்சுன்னா, சின்ன வேலைக்கெல்லாம் பதற வேணாம். எனக்கும் ஓரளவு விபரம் புரிஞ்சால் நல்லது, அவசியமும் கூட…”

“ரொம்ப சீக்கிரம் ‘ஷெட்’ போட்டுட்டீங்க…”

“இன்னைக்கு ஓலைங்க வந்து இறங்கியாச்சு. தொழிலாளிங்க ஓய்வு எடுக்க, மதியம் சாப்பிட ரெண்டு கீத்துக் கொட்டகையும் போடணும்.

“முதல்ல ஒண்ணு போதாது…?

“ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியா போட்டுட்டா பிரச்சினை இல்லை…”

“ம்ம்… பின்னாடியும் ஏதோ வேலை நடக்குதே?”

“அதெல்லாம் கழிவறைகள். இத்தனை பேரை வேலைக்கு அமர்த்தும்போது அவர்களுடைய அடிப்படைத் தேவைகள் எல்லாம் சரியாய் இருந்தா நல்லது.”

“உண்மைதான். ஒரு மாசத்துக்குள்ளே இந்த இடமே மாறிடுச்சு…”

“வருத்தமா இருக்கா?”

“இல்ல. இடம் பொலிவா இருக்கு. சுறுசுறுப்பான வேலை.”

“தாங்க்ஸ்” -புன்னதைத்தான். “தேவை இருக்குது. சீக்கிரம் ஐஸ்கிரீமைக் கண்ணிலே காட்டுங்க. நல்லாயிருந்தா விற்பனை பிய்க்குறாங்க. இப்படி வாங்கறவங்க ஆர்வமாய் இருக்கிற போதுதானே நாமும் விக்கணும்? அதான் கஷ்டம்பாராம செய்திட்டேன்.”

“நல்லது.”

“ஆஹ்… ஒரு வாரத்துக்குள்ளே வேலை ஆரம்பிச்சாகணும். முதல் நாள் ‘கோன்’ தயாரிப்பு மட்டுந்தான். தொடர்ந்து ஐஸ்கிரீம். அதன் விற்பனை ஏற்பாடுகளையும் பக்காவாய் செய்யணும்”

“ஆமா! அது முக்கியம். எடுத்த எடுப்பில் ஆயிரம் லிட்டர் பாலோட மற்றதையும் கொட்டி செய்தால்…அத்தனையும் விற்கணுமே…”

“ஆரம்பத்தில் நூறு லிட்டர் ஊற்றி ஒரு ‘ஷிப்ட்’ வேலை நடக்கும். அதை வாங்க ஆட்களை தயார் பண்ணிட்டேன். அவர்கள் தேவை கூடி, நமக்கும் பேர் கூடக்கூட உற்பத்தியைப் பெருக்கலாம்”.

“புரியுது. வாழ்த்துகள்.”

“வர்ற வியாழக்கிழமை மாலை ஆறு மணிக்கு பங்களாவுக்கு வந்திடு பரணி. இன்னும் வேண்டிய சிலரைக் கூப்பிட்டிருக்கேன். சின்ன விருந்து போல… அதலே நீயும், அனுவும் கலந்துக்கணுங்கறது என் ஆசை.”

குரலில் வழக்கமான அவனது உல்லாசத் துள்ளல் இல்லை. வறண்ட அக்குரலைக் கேட்க விசனமாய் இருந்தது. நம்ப முடியவில்லை.

இவனா தன்னைப் பயமுறுத்தி இந்த வீட்டைவிட்டுக் கிளப்ப முயற்சித்தது?

ஆனால் திடுதிப்பென்று-

பங்களாவினுள் குடியேறு. புருஷன் – பெண்சாதியாய் வாழலாம் என்றானே…!

அதையும்தான் நம்ப முடியவில்லை.

அது மாதிரியான பேச்செடுக்காதே என்றது தவறா என்ன? எந்தப் பெண்ணும் இதையேதான் சொல்லியிருப்பாள். அதாவது நியாய உணர்வுள்ள எந்தப் பெண்ணும்!

“வரேன்”- நடந்துபோனவனை வெறித்து நின்றாள்.

ஆளின்றி வனாந்தரமாய் கிடந்த பங்களாவின் இரண்டு ஏக்கர் சுற்றுப்புறம் இப்போது பஸ் நிலையம் போலிருந்தது.

‘பாத்து ஏத்துப்பா…’

‘ஏ பெண்ணு, பராக்கு பாக்காத! செங்கலப் போடு’.

‘செக்யூரிட்டிக்கு சொல்லி இருந்தீங்களாமே? ரெண்டு பேரை அனுப்பியிருக்காங்க ஸார்.’

‘ஏய்… ஜீப்பு எங்கே போவுது! மதுரைக்கா? நானும் வரேம்ப்பா..’ என்று கலவையான கூச்சல்கள், பேச்சுகள்.

கணக்கு வழக்கின்றி ஆட்கள் வந்து போனதில், வேலை ராணியின் மென்னியைப் பிடித்தது.

குவியும் பாத்திரங்களைக் கழுவ ஒரு பையனை நியமித்திருந்தான் பாஸ்கர். பயல் அப்பப்போது தலைமறைவாகி பீடி நாற்றத்துடன் மீண்டான்.

ஆனால், இன்னும் இரண்டு பேருக்கான வேலை இருந்தது அங்கே!

இவள் ராணிக்குக் கைகொடுத்தாள்.

பக்கத்தில் உணவகம் ஏதும் இல்லாததால், ஐம்பது- அறுபது பேருக்கேனும் தினம் சமையல் ஆகவேண்டியிருந்தது. ‘எல்லாருக்கும் செய்ற தயிர் சாதமோ, எலுமிச்சைச் சாதமோ எனக்கும் போதும் ராணி’ என்றிருந்தான் பாஸ்கர்

ஆனாலும், ஏழெட்டுப்படி சாதம் வடித்துக் கலப்பதும் லேசில்லையே! பெரியம்மா நிறைத்து வைத்திருந்த ஊறுகாய் ஜாடிகள் அத்தனையும் காலி. அவ்வப்போது மாங்காய் அரிந்து தாளித்தார்கள்.

அன்று, சாம்பாருக்கான கத்தரிக்காய்களை இவள் அரிந்து உதவிக்கொண்டிருந்த வேளையில்- சமையலறைக்குள் பாஸ்கர் வந்தான். இவள் அருகே அடுத்ததாய் அரியவேண்டிய பத்து பெரிய மாங்காய்கள்.

சொல்ல வந்ததை முழுதும் மறந்தாற்போல நின்றவன், வெகு அரிதான காட்சியினை மனதில் பதித்து வைப்பது போல அவளையே உற்றுப் பார்த்தான்.

விழிகளை வெகு சிரமப்பட்டு மீட்டு, வெளியேறினான்.

வீட்டில் தங்களுக்காக சமைத்திருந்த கீரையோடு வடகம் வறுத்து அவனுக்காய் ராணியிடம் தந்துவிட்டாள்.

கூடவே பன்னீர் மணத்த இனிப்புத் தயிர்.

“நல்லது பரணி- ஐயா மெலிஞ்சு தெரியறாரு இல்ல? நானும் அவருக்குன்னு ஏதாச்சம் ஸ்பெசலாகச் செய்யணும்னு நினைக்கறதுதான். ஆனா, வேலை ஜாஸ்தியாப் போச்சு… நீ இருக்கதால் பிழைச்சேன் போ…”

ராணி நன்றி பாராட்டினாள்.

“பெரியம்மா இருந்திருந்தா இப்படி ஏதும் செஞ்சிருக்க மாட்டாங்களா? அந்தக் கடமைக்கு என்னாலானதைச் செஞ்சேன்.”

‘ஆஹா…. அது மட்டும்தானா காரணம்?’ -நக்கலாய் நகைத்தது பரணியின் புத்தி.

– தொடரும்…

– ராணிமுத்து மார்ச் 1, 2009

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *