நட்சத்திர பங்களா

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2023
பார்வையிட்டோர்: 7,421 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-10 | அத்தியாயம்-11

“மன்னிச்சிரு பரணி. அத்தனை பேர் நடுவே அர்ச்சனா அப்படி கூசாமல் பேசினது தப்புதான்”

“நீங்க பேசினதுதான் தப்புன்னு நினைச்சேன்”

“தேவதைகளுக்குத்தான் இந்தச் சோளி பொருத்தம்னு சொன்னேனே அதுவா?” குனிந்து பாவமாய் கேட்டான்.

பழைய குறும்பு… ஆனாலும் அவள் சிரிக்கவில்லை.

“இல்லை! இனி பரணிதான் இந்த பங்களாவின் முதலாளி அம்மான்னு நீங்க உளறினது”

“இன்னிக்கு நீ நடந்துகிட்ட முறை எனக்குச் சம்மதம் சொல்லுச்சுன்னு நினைச்சேன்…”

“கொஞ்சம் யோசிங்க…”

“யோசிச்சுத்தான் முடிவு கட்டினேன். வெட்கத்தால மறைமுகமாய் சம்மதம் சொல்றேன்னு…”

இதழ்கள் நகைத்தாலும் அவன் விழிகள் அவளை ஊடுருவித் தைத்தன. ஓடிவிட வேண்டும் போலிருந்தது. அந்தப் பார்வை தன் மனதைப் படித்துவிடக்கூடுமே!

ஆனால், இது தான் பேசித் தெளிய வேண்டிய விஷயம்.

“பெரியம்மா சார்பிலே இது நான் செய்த உதவி… கடமைன்னு வைங்க. அனு பிறந்த நாளின்போது நீங்க எங்களுக்கு ஒத்தாசை செய்யலை?”

“அது நாளை நான் அவ சித்தப்பா ஆகப்போறேன்ற உரிமையில்!”

“பிளீஸ்… விளையாட்டு விஷயமில்லை இது.”

“கல்யாண விஷயம் – சரி, இப்போ அர்ச்சனாவுக்கு வருவோம். விஷம் தடவின நாக்கு அந்தப் பொண்ணுக்கு…”

“அர்ச்சனா பேச்சிலிருந்து என்னைக் காப்பாத்த அப்படி பேசினீங்க. நோக்கம் நல்லதுன்னாலும் எப்படியும் பேசலாம்னு அர்த்தமில்லை.”

“சொல்ல வேண்டியதைச் சொல்லத் துணியாமத்தான் இப்படி சுத்தி வளைக்கிறேன்…”

இவனுக்கா துணிவில்லை?

குழப்பமாய் ஏறிட்டாள்.

வீட்டை ஓரளவு சீர்படுத்தவே நடுநிசி ஆகிவிட்டிருந்தது. நாளை பெருக்கி அள்ளினால் ஒரு கூடை குப்பையும், தூசியும் தேறும்.

களைத்து சோபாவில் சுருண்டு தூங்கியிருந்தது அனு.

இத்தனை நேரம் பேச்சு, சிரிப்பால் நிரம்பியிருந்த கூடம் காலியாய் நின்றது.

காலிப் பள்ளிக்கூடம் போலொரு அமைதி.

விழா மாலை நேர கனவல்ல என்பதற்கு சாட்சி போல மலர்களின் மணம்.

அவன் தவிப்பாய் நின்றான்… நகர்ந்தான்.

“உக்காரு பரணி, பெரியம்மா கடிதத்தை நீ முழுசாய் படிக்கறது நல்லது.”

“நேரமாயிடுச்சு.”

“காலையில தூங்கிக்கலாம். உங்கிட்ட முழு விவரமும் சொல்லாம் இனி முடியாது…”

உள்ளே போனான்.

உடம்பு சில்லிட காத்திருந்தாள்.

திரும்ப வந்து அவன் நீட்டிய கடிதத்தை வாசித்தாள்.

முழுக்க மனதில் பதியவில்லை.

புத்தி நம்ப மறுத்தது.

மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டியதிருந்தது.

அதிலிருந்த விவரம் அப்படி! பெரியப்பா எழுதியிருந்தார்.

“பாஸ்கர், உன் கடிதம் எங்கள் இருவருக்குமே ஓர் இனிய ஆச்சரியம்! உன் சித்தி சுகமாய் படபடக்கிறாள்”.

‘இத்தனை நாள் எங்கிட்ட பயல் சொல்லவே இல்லையே… பரணியக் கூப்பிட்டு கேட்டிருவோமா…?’ என்று என்னை நச்சரிக்கிறாள்.

நான்தான் அவளைச் சற்று பொறுமையாய் இருக்கச் சொல்கிறேன்.

நீ இங்கு வரும் போதெல்லாம் பரணியைச் சீண்டுவதையும், அவள் இல்லாத நேரங்களில் ஆர்வமாய் அவளைப் பற்றி விசாரிப்பதையும் நான் கவனித்ததுண்டு.

அது, அழகான பெண்ணிடம் வழியும் ஆணின் இயல்பு என்றுதான் நினைத்தேன் ! கோபித்துக் கொள்ளாதே…. இங்கேயே இப்படி என்றால், கூட பெரியவர்கள் யாருமற்ற சென்னையில் பயல் ஏக அமர்க்களம் செய்துகொண்டிருப்பான் என்று கூட நினைத்ததுண்டு…!

போனமுறை பரணியைப் பற்றிய பேச்சை நீ எடுத்தபோது உனக்கு சென்னையிலிருந்து அவசர அழைப்பு வந்து, நீ கிளம்பியதும்கூட இப்போது புது அர்த்தங்களுடன் நினைவிற்கு வருகிறது.

வாய்விட்டுச் சொல்வது உனக்கு சங்கோஜமாக இருந்ததோ…? எப்படியோ,

‘பரணியைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்று நீ பண்பாய் எழுதிக் கேட்டிருப்பதில் சந்தோஷம்.

எங்களுக்குப் பரணி மகள் போலத்தான்.

ஆனாலும், இவ்விஷயத்தில் நாங்கள் உன் சார்பில் சம்மதம் கேட்பதைவிட- நீயே அவள் மனதை அறிவது அல்லது மனதை மாற்றுவது சுவாராசியமாய் இருக்கும்.

பெரியவர்களின் முழு சம்மதத்தோடு மலரட்டும் உங்கள் காதல்! எங்களுக்காக, எங்கள் திருப்திக்காக பரணி சம்மதம் சொல்ல வேண்டாம். உனக்காக உன்னை நேசித்து சம்மதிக்கட்டும் அப்படி ஆரம்பிக்கும் வாழ்வில் இனிப்பு அதிகம்- அனுபவஸ்தன் சொல்கிறேன். நான் நட்சத்திரத்தைக் கைப்பற்றினது அப்படித்தான்…! அதே வழியில்தான் என் மகள்களும் வாழ்வை அமைத்துக்கொண்டனர்.

எங்கள் சீதனமாய் பரணிக்கு முப்பது பவுன் நகைகளும், அவள் தங்கியுள்ள ‘அவுட்ஹவுசு’ம், அதைச் சுற்றியுள்ள கால் ஏக்கரும் ஏற்கெனவே உண்டு.

இப்போது அவளைப் போற்றி நேசிக்கும் மாப்பிள்ளையைத் தேடிப் பிடிக்கும் வேலையும் எனக்கு மிச்சம்.

நீயும், பரணியும் கணவன்- மனைவியாய் பங்களாவில் வாழ்வதைத் தவிர வேறெது எங்களுக்கு சந்தோஷம்?”

கடிதத்தின் கடைசியில், பங்களாவை அவன் பெயருக்கு மாற்றுவது குறித்த சட்டபூர்வமான தகவல்கள்….

கடிதத்தை மடித்தாள்.

வெகு அருகேதான் நின்றாள்.

ஆனாலும், நிமிரத் திராணியில்லை.

விரல்கள் வேறு தந்தியடித்தன….

பாஸ்கர் தன்னை மணக்க விரும்பி கோரிக்கை வைத்த பின்புதான் ஐயா இந்தப் பதிலை எழுதியிருக்கிறார்…!

செய்தியில் தேனின் தித்திப்பு.

ஆனால், காய்ச்சல் கண்ட நாவில் தேன் தித்திக்குமா? அதிர்ச்சியில் மனம் மரத்திருந்தது.

“நான் உன்னை விரும்புகிறேன் பரணி… என்னைப் பார்த்தால் நம்புவது சிரமம்தான்… ஆனால், அதை வெளிப்படையாய் உடைத்துச் சொல்ல வெகு கூச்சமாக இருந்தது… உதறிடுவியோன்ற தயக்கம். ஆரம்பத்தில் இந்த ஈர்ப்பு என்னு எனக்கே புரியலை. உன்னைப் பார்க்க நெருங்கறப்ப எல்லாம் மனசுல திரியிட்டு பற்ற வச்ச பரபரப்பு … சீண்டுவேன்; வம்பிழுப்பேன்… நிலவறையிலே பல வருஷங்களுக்கு முன்னே நான் கேட்டது நினைப்பிருக்கா?”

குனிந்திருந்த அவள் முகம் குங்குமக் குழம்பானது.

அவள் நினைக்கக் கூசிய, மறக்க முயற்சித்தது அல்லவா அது…!

“சரியா இல்லை… பயந்து ஓடிட்டேன்…”

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா ?’ன்னு கேட்டேன். கேட்ட பிறகுதான் என் உள்மன நோக்கம் எனக்கே அர்த்தமாச்சு. அப்ப எனக்கு வயசு இருவதுதான். பிறகு வெளிநாட்டுப் படிப்பு… அம்மா இறந்ததுன்னு வாழ்க்கை என்னை புது வெள்ளமாய் இழுத்துட்டுப் போச்சு. அடிக்கடி இங்க வரமுடியலை. பல பெண்களைச் சந்திச்சேன். ஆனா, மனசு காமிரா மாதிரி. அதிலே ஆரம்பத்திலேயே நீ பதிஞ்சிட்டே. காரணம் புரியலை… ஆனா, உள்ளே உன் பிம்பன்னு புரியது. அதுக்கு மேலே வேறெதும் பதியாதுங்கறதும் புரிஞ்சி போச்சு. உங்கிட்ட ஏதோ ஒரு வசியம்… வலையாப் போட்டு என்னை அமுக்கிடுச்சு…”

“நான்…நான் ஏதும்…”

“எதுவும் செய்யலைதான். ஆனா, கடவுள் என் வாழ்க்கை உன்னோடுதான்னு முடிச்சைப் போட்டுட்டாரே!”

“எனக்கு பயமா இருக்குது பாஸ்கர்… ரொம்ப பயமா…”

“என்னன்னு சொல்லு பரணி. வேற யாராவது உன் மனசுல…உண்டா?”

கேட்டவனின் குரல் நடுங்கியது.

“அர்ச்சனாகிட்ட பெரும்பாலும் நான் பேசியது உன்னை பற்றிதான். அதில் எம்மனசை யூகிச்சவ, உனக்கு மதுரையில் ஒரு காதலன் இருப்பதாயும், அவரைப் பார்க்கத்தான் நீ அடிக்கடி அங்கே போறதாயும் சொல்ல… நானும் ரொம்பவே பயந்துட்டேன். அதனால்தான் எனக்கு உன்னில் இடமில்லைன்ற நினைப்பு என்னை உருக்க, முழுவேகமாய் வேலையில் இறங்கினேன். இல்லைன்னா அந்த ஏமாற்றத்தை என்னால் சமாளிக்கவே முடியாதே…”

“நான் மதுரைக்கு சைக்கிள் மிதித்தது என் வயிற்றுப் பாட்டிற்காய்…”

“ராணி சொன்னா. ‘பரணி பொண்ணுக்கு சின்ன அனுவைத் தவிர யார் மேலேயும் நோக்கமில்லை. அது வாழுறதே அதுக்காகத்தான்’னு. அது ஆறுதல்னாலும் நீ சிடுசிடுப்பாகவே என்னைப் பார்த்தது, பழகினது- உன்னோடு இங்கே நான் வாழ முடியும்ன்ற நம்பிக்கையை அழிச்சிடுச்சு…”

பரணிக்கு வற்றி, வாடிய அவன் தோற்றத்திற்கான காரணம் புரிந்தாலும்- பணம், பவிசு, பார்வைக்குப் பாந்தமான ஒருவன் தனக்காய் ஏன் ஏங்கினான் என்பது புரியவில்லை!

“ம்ஹும்… பணம். பணந்தான் நமக்கிடையே பெரிய பள்ளம்… என்னால அதைத் தாண்ட முடியாது.”

பதற்றம் குறைந்த பாஸ்கர், அவள் மோவாயை விரல்கொண்டு நிமிர்த்தினான்.

தீ போன்ற தீண்டல்- வெம்மையான சுகம்…

அவள் கண்களில் சொன்னது போல பயமிருந்தது… அதைவிட வருத்தம் அதிகமிருந்ததே…!

எதனால் வருத்தம்…?

தங்களுக்கு இடையே இருந்த இடைவெளியினாலா.?

இன்னும் கன்னங்களில் நாணச் செழுமை. மிக மிருதுவாய் சொன்னான்:

“வாழ்க்கையின் வசந்தங்கள்
மனதில் அரும்ப வேண்டியவை.
பணம் கொண்டு
பயிராவதில்லை.”

“கவிதை போலிருக்குது.”

“எப்பவோ வாசித்த கவிதைதான். ஒத்த எண்ணங்கள்னும் போது வரிகள் மனதில் ஒன்றிப் போயிடுது. எனக்கு இருப்பதெல்லாம் இனி உன்னுதும்தான். பங்களாவின் பெயரைக்கூட மாற்ற வேணாம் பாரு”

அவள் விழிகளில் கேள்வி மின்னியது.

“பெயர் பொருத்தம் வெகு கச்சிதமாய் அமைஞ்சிருச்சே. பரணி…பரணி நட்சத்திரமில்லையா?”

“அந்தஸ்தும் அகல சுவர்தான். தாண்டறது சிரமம்… இந்த அவசர முடிவுக்கு, நீங்க பிறகு வருத்தப்படக் கூடாதில்லையா?”

“அவசர முடிவா? பத்து வருஷமாய் என்னைச் சுற்றி இறுக்கின இனம் புரியாத வலையைப் பிரிச்செடுத்து, முழுக்க புரிஞ்ச பிறகுதான் இந்தக் கடிதம் எழுதினேன். பரணி, சின்னவயசிலேயே வாழ்க்கையிலே எத்தனை அடி உனக்கு…? தைரியமாய் தாங்கி நின்ன உன் நெஞ்சுரம் பிடிச்சிருந்தது. அனுவை எல்லாமுமாய் நின்று நீ வளர்க்கிற நேர்த்தி, தன்னிலமில்லாத அன்பு, நாந்தான் முதலாளின்னதும் எங்கிட்ட வாடகையைக் கொண்டுவந்து நீட்டின நேர்மையான சுறுசுறுப்பு…!” கண்சிமிட்டினான்.

“ஆனா உங்ககிட்ட அந்த நேர்மை இல்லியே.”

அடக்க முடியாமல் சொல்லிவிட்டாள்.

சிரித்த அவன் கண்கள் சினம் காட்டின.

“நேரே உன்னோடு வந்து ‘டூயட்’ பாடாம பெரியவங் மூலமாய் என் விருப்பம் தெரிவிச்சது கள்ளத்தனம்ங்கிறிய பரணி? வேண்டிய தனிமை இருந்தும் உங்கிட்ட அடாவடித்தன பண்ணாம, இப்படி கொஞ்சறது தப்புங்கறியா?”

“என்…. என்னை அவுட்- ஹவுசைவிட்டுக் கிளப்ப நீங்க முயற்சி செஞ்சமுறை நேர்மையாய் இல்லையே?”

“இதென்ன புதுக்கதை?”

“பேய் உலாவற மாதிரி பயங்காட்டினீங்க… நான் நடுங்கி இங்கே… பங்களாவிலேயே தங்க சம்மதிப்பேன்ற குறுக்கு யோசனை…”

அவன் முகம் மாறியது.

சிரித்தான். சந்தோஷமற்ற சிரிப்பு.

“பரணி, உனக்கு எம்மேல ரொம்ப நல்ல அபிப்ராயம் போல. ஆனா, ஏன் அதுன்னு எனக்கு முழுசா புரியலை. தூங்கலாம்.விடிஞ்சப்புறம் இன்னும் தெளிவாப் பேசலாம்… இப்ப கிளம்பு…”

அனுவைத் தூக்கிக்கொண்டு நடந்தான்.

அவள் வேறு வழியின்றி அவனைத் தொடர்ந்தாள்.

வெளியே முளைத்திருந்த விளக்குகளால் வேண்டிய வெளிச்சமிருந்தது.

மழை வருவதற்கான அறிகுறியாய் குளிர்காற்று…

மரங்கள் வளைந்து ஆடின.

ஓரக் கண்ணால் மொட்டை மரத்தைப் பார்த்தாள்.

விரைந்து நடக்க முடியவில்லை.

உடலெங்கும் சோர்வு பரப்பிய ஒருகனம்.

இருவரும் மவுனமாய் நடந்ததின் இறுக்கம் வேறு.

இவளுக்கு முன்பாய் வீட்டை அடைந்தவன் காத்து நின்றான். கால்களை சற்று எட்டிப் போட்டபடி பர்ஸினுள் வீட்டு சாவிக்காகத் துழாவினாள்.

“ஷ்..” மிக மென்மையான எச்சரிப்பு.

திடுக்கிட்டுப் பார்த்தாள்.

விரலை உதட்டில் சமிக்ஞையாய் வைத்திருந்தான். குழந்தையை மெள்ள அவள் தோளுக்கு மாற்றினான்.

இப்போதும் பரணிக்கும் அந்தச் சத்தம் கேட்டது.

வீட்டின் பின்புறச் சுவரில் ஏதோ உராய்வது போல…

அரவமின்றி காலடி வைத்து பின்பக்கமாய் போனான்.

என்ன நடக்கிறது, யார் அது?

திருடனோ?

திகில் படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. கால்கள் அசைய முடியாதபடி இரும்பாகியிருந்தன. கைகள் அனிச்சையாய் அனுவை இறுக்கின. வாய் வறண்டு இதயத்தின் துடிப்பு கேட்க ஆரம்பித்திருந்தது.

“யம்மா…!”

இரண்டாம் நிமிடம் ஒரு அலறல்- இருட்டை வெட்டிக் கிளம்பியது.

“ஐயோ… பாஸ்கர்… என்னாச்சு?” இவளும் வீட்டின் பின்புறம் ஓடினாள்.

அங்கு போதிய வெளிச்சமில்லை.

ஆனால், தரையில் மங்கிய இரு நிழல் உருவங்கள் கிடப்பதும், உருளுவதும் தெரிந்தது.

“ஐயோ… யாரு…யாரது?”

“தொம்… தொம்… தும்…” -யாரோ யாரையோ குத்தும் சத்தம் கேட்க, அலறினாள்.

“யாராவது வாங்களேன்… கடவுளே…”

விசில் சத்தம். கூடவே, காவலாளியின் காலடி ஓசை கேட்டது.

கீற்றுக் கொட்டகையே வசதி என்று வேலையிடத்திலேயே தங்கிவிட்டிருந்த இரண்டு இளவட்ட தொழிலாளிகளும் வந்துவிட்டனர்.

“வீட்டைவிட வசதியா கழிவறை எல்லாம் கட்டி வுட்டிருக்கீங்கய்ய. இங்கே இருந்தா அம்மாவோட நொச்சுமில்ல? கலியாணமாகற வரைக்கும் ஒரு ரெண்டு வருஷம் ஐயா தயவில் நிம்மதியா இங்க கழிச்சுடறோமே?” – என்று கெஞ்சி இங்கேயே குடியேறிவிட்ட இரு இளைஞர்கள்.

“வீட்டைத் திறந்து, பின்பக்க விளக்கைப் போடு பரணி?”

அவன் உத்தரவின்படியே செய்தாள். அரைகுறையாய் விழித்த அனுவைக் கட்டிலில் கிடத்தி போர்த்திவிட்டு, மறுபடி வெளியே ஓடினாள்.

“யாரு பாஸ்கர்… உங்களுக்கு என்னாச்சு?”

“குத்தினதுதான் நான்”

“யாரை?”

“மாரிமுத்து”

“இவன்… இவனா… எதுக்கு இந்நேரம் இங்கே வந்தான்?”

கீழே மாரிமுத்துவுடன் படுத்திருந்தது ஒரு ஏணி.

மெலிந்த மாரிமுத்து மேலும் பரிதாபமாய் தெரிந்தான்,

“எழுந்திருடா”

காவலாளி அதட்ட- எழுந்தவன் தள்ளாடியதன் காரணம் குடியா? அல்லது வாங்கிய அடியா? என்று தெரியவில்லை.

“இனி அடிச்சா தாங்காது” -கை குவித்தான்.

“அப்ப சொல்லு. இந்நேரம் இங்க உனக்கென்னவேலை?”

“சொல்றேன். தண்ணி…” விரல்களால் சைகை செய்தான்.

“ஏற்கெனவே போட்டிருக்கியே. பிறகென்ன?”

“ஐயா… அதைப் பாருங்க. மூங்கில் கூடை… மூடி அசையுது.”

சொன்ன இளவட்டம் சுவரோரமாகக் கிடந்த கூடையின் மூடியை விலக்க- உள்ளே பளபளவென்று சுருண்டிருந்தது… ஒரு பாம்பு!

“ஐயோ… பாம்பு!”

“பரணி… உள்ளே போ. மூடுப்பா செல்வம், பெட்டிய”

சுகமாய் சுருண்டு கிடந்த சர்ப்பம் அசைந்தது. வெள்ளிச்சரமாய் நெளிந்தது.

“நீ கொண்டு வந்ததுதானா இது?”

தலையசைத்தான் மாரிமுத்து.

“நாஞ் சொல்றேங்கய்யா- ஏணியப் போட்டு ஏறி, அந்த மேல் சன்னல் வழியா பாம்ப உள்ளே விடப் போனாரு. ஏன்டா களவாணிப் பயலே…அதானா?” இளவட்டம் அறைந்தான்.

“ஐயா அடிக்க வேணாம்னு சொல்லுங்க…”

“நீ உங்கதைய முதல்ல சொல்லுடா”

“அதுக்குத்தான்…”

“எதுக்குடா நாயே?”

“பாம்ப வீட்டு உள்ளார விடத்தான்”

“அப்படிச் சொல்லு. ஏணி எங்க உள்ளது?”

“சமையலறை ஓரமாக் கிடந்துச்சு. ராணிய ஏமாத்திட்டு எடுத்துக்கிட்டேன்”

“அப்போ… முன்னே அந்தக் காகிதத் துண்டுகளை உள்ளே போட்டதும் நீதானா மாரிமுத்து?”

மெள்ள கேட்டாள்.

“ஆமாம்மா.”

“அதென்ன பரணி?”

கேட்ட பாஸ்கரனிடம் விவரம் சொன்னாள்.

கவனமாய் கேட்டுக் கொண்டான்.

“ஏன் மாரி? எதுக்கு அப்படிச் செய்தே?”

தயங்கினான்… செருமினான்.

“நீங்க உள்ளாரப் போங்கம்மா. பெண்டை நிமுத்தினாத்தான் பய கக்குவான்.”

இளைஞர்களின் ஓங்கின கைகளைப் பார்த்ததுமே மாரி கக்கிவிட்டான்.

“அர்ச்சனாம்மா சொல்லித்தான் செஞ்சேன்.”

“எளவே… என்னடா சொல்லிச்சு? முளுசா சொல்லித் தொலை.”

காவலாளி அதட்டினார்.

தன்னை மீறி இந்தச் சோனிப் பயல் பாம்பும், ஏணியுமாய் பரமபத தினுசில் இங்கு விளையாட நுழைந்துவிட்டானே என்ற கடுப்பு அவருக்கு!

“பரணி பொண்ணு இந்த வீட்ட காலி பண்ணணும்ங்கறது அர்ச்சனாம்மா நோக்கம். பயங்காட்டி தொரத்திடுன்னுச்சு. அது தந்த வெள்ளைச் சல்லாத் துணிய ராத்திரியில் மொட்ட மரக்கிளையில் கட்டி வச்சேன்…”

“தினைக்குமா?”

“இல்லைல்ல… ஒரு நாளுதான்… சன்னலைத் தட்டி முழிப்பு வரச் செஞ்சேன். சன்னலு வழியே பரணிம்மா பாத்தாங்க… பிறகு ஒரு நாளு இதே போல ஏணியில ஏறி, காகிதத் துண்டுகளை போட்டேன்…”

“வெறும் காகிதமா?”

“இல்ல. அர்ச்சனாம்மா கிழிச்சு அதுல ஏதோ எழுதித் தந்தாங்க. அதைத்தான் போட்டேன். காகிதத்தை குழலாகச் சுத்தி ‘மைக்’காட்டம் பிடிச்சுகிட்டு – போ… போயிடு… நச்சத்திரா’ அப்படி இப்படின்னு குரல் கொடுத்தேன். பரணி பொண்ணு அசரலை. இன்னைக்குங் கூப்பிட்டு அர்ச்சனாம்மா சத்தம் போட்டுச்சு. ‘என்னடா மாரி… என்ன செய்றே?’ன்னு. அது தர்ற ஐநூறு ரூவா காசுக்கு உயிரயா எடுக்க முடியும்? வீட்டுக்கு வரச் சொல்லி இரண்டாயிரம் ரூவா தந்தாங்க… கூடவே இந்தப் பெட்டியும்…”

“உள்ளார பாம்புன்னு தெரியுமில்ல?”

“தெரியும்-வாய் தச்ச பாம்புன்னுச்சு…”

“பயங்கர ‘கிரிமினல்’ புத்தி அந்த அர்ச்சனாவுக்கு. பாம்பு எப்படி கிடைச்சுதாம்?”

“நேத்து அவங்க மில்லுல புதருங்களை வெட்டினாங்களாக ஐயா. அதுல அடைஞ்சி கிடந்த பாம்புகளைப் புடிக் இன்னிக்கு பிடாரன் வந்தானாம். அவன் தந்த பாம்பு..”

“கடவுளே…! மாரியை ‘ஷெட்’ல வைங்கப்பா- அடிக்க வேணாம். நாளைக் காலையில் போலீஸ் ஸ்டேஷஸ் போகணும்…”

“ஐயா… ஐயா… வேணாங்க, வுட்டிருங்க. நாலு பேருக்கு தெரிஞ்சா அசிங்கமாப் போகும்…”

“நாலு பேருக்குத் தெரிஞ்சவனாடா நாயி நீ ? நாப்பது பேருக்குத் தெரிஞ்ச அந்த அம்மணி பேரு நாறுறதுக்குத்தான் புகார் தர்றது. உங்கழுத்துல இந்தப் பாம்பச் சுத்திவிட்டு நாளைக்கு பரமசிவக் கோலத்துல ஊர்வலமாப் போறோம் ஸ்டேஷனுக்கு…”

நெட்டித் தள்ளியபடி போனார் காவலாளி.

பரணிக்கு கண்களை இருட்டியது.

வீட்டினுள் இத்தனை நீளசர்ப்பம் ‘சொத்’தென விழுந்துபில் நெளிந்து நடமாடியிருந்தால்…? ஐயோ… உடல் உதறியது தனிமையில் அலறி உயிரே போயிருக்கும். அது தீண்ட விட்டாலும் கூட!

வாய் கட்டிய நாகத்தையா அர்ச்சனா அனுப்பியிருப்பாள்?

ஒருவேளை குழந்தைக்கு ஏதும் நேர்ந்திருந்தால்…

தலைச் சுற்றியது. நிற்க முடியவில்லை.

பாஸ்கரன் அவளைத் தூக்கிக் கட்டிலில் கிடத்தியது- சிறுபிள்ளை போல தனது தோளில் சாய்த்து வைத்து சூடான பாலை பருகச் செய்தது… அத்தனையும் கனவான மசமசப்பில்…

மறுநாள் கண்விழித்த நேரம். அவன் இன்னும் அருகேதான் இருந்தான். ஆனால், நாற்காலியில் சரிந்த… ஆழ்ந்த உறக்கத்தில்: மெல்ல எழுந்து முகம் கழுவப் போனாள்.

‘குப்’பென்று நேற்றைய இரவின் நினைவுகள் மறுபடி தலைதூக்கின.

கீழே பாம்பு ஊர்கிறதோ என்று அச்சமாய் பார்த்துக் கொண்டாள். இன்னும் அதே சேலை – ரவிக்கையில்தான் இருந்தாள். மாற்றலாமா என்று யோசிக்கையில் அவன் குரல்…

“எப்படி இருக்கே பரணி?” இதமாய் விசாரித்தது.

“ம்ம்… இப்ப ஒண்ணுமில்லை. எல்லாம் ஏதோ கெட்ட கனவு போல…”

“நானுமா? எங்காதலும்கூட கெட்ட கனாத்தானா?”

ஓரிரவின் தாடியும், தூக்கக் கண்களுமாய் நின்றவனை முழுதாய் பார்த்தாள். தனக்காய் உறக்கம் கெடுத்துக்கொண்டு இவன் ஏன் இங்கே அல்லாட வேணும்?

அவன் விழிகளில் அதற்கான பதிலிருந்தது.

‘காதல் பெண்ணே… காதல்!’ என்றன அவை.

வெட்கமின்றி காந்தமாய் ஈர்த்தது பார்வை.

நெருங்கினாள்.

“ம்ஹும்…”

“அப்படின்னா?”

“அது கெட்ட கனவில்லை… சந்தோஷமான நிஜம். அப்படித்தானே?”

“அப்படியேதான்” என்றவளை இழுத்து – இறுக அணைத்துக் கொண்டான்.

இருவர் கண்களிலும் நீர்… விவரிக்கவொண்ணா மகிழ்வில் தெறித்த நீர்… நட்சத்திரங்களாய்!

(முடிந்தது)

– ராணிமுத்து மார்ச் 1, 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *