நகுலனின் இரவு

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 11,365 
 
 

காவலுக்கு நிற்பதிலேயே என் இரவுகள் கழிகின்றன.

நாட்டு மாந்தர். வனமேகியோர். தமையர். தம்பி. அன்னை. அவ்வப்போது மனைவி. அல்லாத பொழுதுகளில் அண்ணி. காவலுக்கு நிற்பதிலேயே என் இரவுகள் கழிகின்றன. காப்பது என் கடன் எனில் எவரிடமிருந்தெல்லாம் இவர்களைக் காத்துக்கொள்கிறேன்? நட்சத்திரங்களிடமிருந்தா? நிலவிடமிருந்தா? பறவைகளிடமிருந்தா? அடர்ந்து பரவிக்கிடக்கும் இரவிலிருந்தா? இரவுக்கு அப்பாலே வேட்டைக்குத் தயாராயிருக்கும் இரை தின்னிகளிடமிருந்தா? கெளரவர்களிடமிருந்தா? சோதரர்களிடமிருந்தா?

அல்லது என்னிடமிருந்தா?

***

நல்ல மனிதர்களைத் தள்ளியே வைத்திருத்தல் சாலம் என்று படுகிறது. அவர்கள் என்னை நெருங்கும்போது நெஞ்சு படபடக்கிறது. அடிவயிறு கனக்கிறது. கால்களுக்கடியில் நெருப்பு சுவாலை பரப்பி எரிகிறது. அவர்களைக் கொன்று குவித்தாலேயே மனம் நிம்மதி அடையும்போலத் தோன்றுகிறது. எட்ட இருக்கும்போது அவர்களையே நினைந்து ஏற்றிக் கொண்டாடி மகிழ்ந்த மனதுக்கு, அவர்கள் கிட்ட வரும்போது மாத்திரம் அப்படி என்ன அழுங்கு? நல்ல மனிதர்கள் என்னைச் சிறுமைப்படுத்துகிறார்கள். அவர்கள் அருகாமையில் என் பிம்பம் மாடிக்கட்டடத்திலிருந்து விழுந்து சிதறும் நிலைக்கண்ணாடியாய் உரு அழிகிறது. விழும்போது அவர்களையும் கூட இழுத்துக்கொள்ளவேண்டும். சிதறித் துண்டு துண்டுகளாகி, உன்னுடல் என்னுடல் எதுவென்று தெரியாவண்ணம் பரவி. பத்தோடு பதினொன்றாகி.

நகுலனாயிருத்தல் எப்போது எனக்குச் சாபமாகிப்போனது?

***

என்னால் என் பலவீனங்களிலிருந்து மீள முடியவில்லை. இறக்கை இருக்கிறது. ஆனால் பறக்க முடிவதில்லை. தீக்கோழிபோல. தீக்கோழிக்கு மாத்திரம் பறக்க இயலுமெனில் அது வானத்தின் நிகரற்ற இராஜ பறவை ஆகியிருக்குமே. பறக்காத இப்பறவைக்கு ஏன் இறக்கை முளைக்கிறது? சாத்தியங்களை அசை போட்டபடி, வெறுமனே சிறகுகளை அடித்துப்பார்த்தபடி, படுக்கையிலேயே கிடப்பது எவ்வளவு வலி தெரியுமா? தினமும் என் இறக்கையைப் பார்த்து, மறுகி, பறக்க முயன்று தோற்று, ஆற்றாமையில் அதனை அவிழ்த்துப்போட்டு, அலைந்து திரிந்து, ஈற்றில் குழிதோண்டித் தலை புதைக்கும் நிலை எனக்கு ஏன் வரவேண்டும்? பூவரசங்கிளையினுள் உருத்தெரியாமல் மறைந்து கிடக்கும் சிறு புள். சாதாரண புலுனிக்குஞ்சு. அதுகூடப் பறந்து திரிகிறது. சின்னஞ் சிறு ஈ. அதுவும் பறக்கிறது.

பறக்கமுடியாத இந்தப்பாவிக்கு ஏன் இறக்கைகளைக் கொடுத்தாய் இறைவ?

உயர்ச்சியும் பறப்பும் என் இயல்பு அன்று. ஆயினும் அருகில் இருப்பவர் எவராவது வீழும் தருணங்களில் நான் உயர்கிறேன். காட்டின் மரங்கள் தறிக்கப்படும்போது பற்றைக்குக் கிடைக்கும் வெளிச்சத்தைப்போல. அது பிடித்திருக்கிறது. பற்றைகள் தாமாக என்றைக்குமே உயரமாய் வளருவதில்லை. அதனாலேயே நான் கோடரிகளைத் தயாரித்து விற்பனைக்கு வைக்கிறேன். மற்றவரின் வீழ்ச்சிக்காய்க் காத்திருந்து, அதுவே பிரார்த்தனையாகி, அந்த எண்ணத்துக்குள் வசப்பட்டு. இது ஒரு நோயாகி, சிந்தை எங்கும் பரவுவதை உணர்கிறேன். என் அருகில் இருப்பவர் என் மீது கோடரி வீசும்போது நெருக்கமாய் உணர்கிறேன். அவரைப் புரிந்துகொள்கிறேன். அவர்மீது பாசம்கூடப் படர்கிறது.

***

ஆண்கள் காதலுறும்போது அளவில்லாமல் களித்துத் தொலைக்கிறார்கள். அத்தருணம் அவர்கள் காட்டின் மிக உயரமான மரத்தின் உச்சிக்கு ஏறிச் செல்கிறார்கள். அப்போது அந்த வழியால் ஏதேனும் ராசாளிப்பறவை பறந்தால் அதன் பாதங்களை எட்டப்பிடித்து வானத்தின் எல்லைக்கும் சென்றுவிடுவார்கள். அங்கிருந்து கீழ்நோக்கிப் பார்த்து உலகம் முழுதையும் எள்ளி நகையாடுவார்கள். அந்த உச்சமும் கணமும் சாசுவதம் என்று நம்பி ஆனந்தக் கூத்து ஆடுவார்கள். அத்தனை உயரத்தை எட்டுவதாலோ என்னவோ, ஆண்களால் தமது வீழ்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடிவதேயில்லை. ராசாளி பிடியை உதறும்போது, ஆகாயம் கடந்து, முகில்கூட்டத்திடை சிக்குண்டு, மரங்களினூடே சிராய்புற்று, புண்பட்டு, ஈற்றில் சகதிக்குழியினுள் விழும்போது சேறு தெறித்து நிலமெங்கும் பரந்து சிதறுகிறது. ஒரு ஆண் விழுகிறான் என்பதைக் காடே தெரிந்துகொள்கிறது. முரசு அடிக்கப்படுகிறது. மொத்தக்காடுமே அந்த வீழ்ச்சியைக் எதிர்பார்த்துக் கிடந்ததுபோல துள்ளி எழுகிறது. மழைக்காகக் காத்துக்கிடக்கும் மரம்போல. காடு வீழ்பவனை இரு கைகளாலும் ஏந்திக்கொள்கிறது. வானத்தினின்று வீழும் ஆண்களால் இலகுவில் மீள எழ முடிவதில்லை. சகதிக்குள்ளேயே மீளாத்துயர் ஒன்றினுள் அவர்கள் தம்மை அமுக்கிக்கொள்வர். இது காலம்முழுதும் தொடரும்.

அல்லது இன்னொரு பெண் வந்து அவனை மீட்டு, மீண்டும் மரத்தில் ஏற்றும்வரை.

***

இலக்குவனனைச் சந்தித்தேன்.

சில வனங்களுக்கு அப்பால் காவல் புரியும் அவனை அவ்வப்போது ஆற்றுப்படுக்கையில் சந்திக்கும் பொழுதுகள் மனதுக்கு இதமானவை. என் வயதுதான் இருக்கும். சக பற்றையோடு உரையாடுதல் என்பது விடுதலை. காட்டினை நாம் இருவரும் சேர்ந்து எள்ளி நகையாடுவோம். வைவோம். காட்டின் பலவீனங்களைக் கோடிகாட்டுவோம். அதன் அதிட்டத்தின்மீது பொறாமை கொள்வோம். காட்டை இகழ்தல் வேண்டும். அதுவே பற்றைக்குக் கிடைக்கும் இன்பம். மழை காட்டுக்கு மாத்திரம் பெய்கிறதே, ஏன்? சூரியன் காட்டில் மாத்திரம் உதிக்கிறதே, ஏன்? யானையும் யாளியும்கூட அங்கேயே வாழ்கிறதே, ஏன்? ‘நானும்தானே மிதிலைவீதியில் நடந்துபோனேன், என் அழகுக்கு என்ன குறை?’ என்பான் அவன். உண்மைதான். ‘சுயம்வரத்தில் எதற்கு வாற்போரினை வைக்கவில்லை?’ என்பேன் நான். பகவத்கீதைகூட பார்த்தனுக்குத்தானே கூறப்படுகிறது?

பற்றைகளின் சரசரப்புக்கு முடிவே இருப்பதில்லை.

இலக்குவன் தொடர்ந்து புலம்புவான்.

‘என் நிலையை என்னவென்பது? மிதிலையில் என் மனைவி ஊர்மிளை சதா தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்க நானோ இங்கே விழித்திருந்து அண்ணனுக்கும் அண்ணிக்கும் காவல் இருக்கிறேன்’

விரக்தியோடு சிரித்தேன்.

‘உள்ளே அண்ணனோடு உன் மனைவி இல்லையே என்றமட்டில் ஆசுவாசப்படு இலக்குவா’

இலக்குவன் என்னைச் சற்றுப் பரிதாபத்தோடு பார்த்தான். அப்போது அவன் கண்களில் பட்டென்று ஒரு பெரு ஒளியின் சலனம் தோன்றி மறைந்ததைக் கண்டேன். ஒரு பற்றை தன் சக பற்றை தன்னிலும் அதிகமாக வாடிக்கிடையில் அடையும் குரூப திருப்தி அது. பற்றைகளின் அன்றாடப் பேரின்பங்களில் அதுவும் ஒன்று. கள்ளிக்குக் கிடைக்கும் ஒரு துளி மழைபோல. தெருப்பிச்சைக்காரருக்குக் கிடைக்கும் வெள்ளி நாணயம்போல. ஏழைக்குப் பிறக்கும் இன்னொரு குழந்தைபோல. குழந்தைக்கு மிட்டாய்போல. இந்தக் கணத்தைத் தேடியே அவன் என்னிடம் வருகிறான். அவனுக்கு என் நிலைமை அவனுடையதைவிட பரிதாபகரமானதாக இருப்பது கொடுக்கும் குரூர திருப்தி. இதனைக் குரூரம் என்று எப்படிச்சொல்வது? நம்மிலும் அதிகம் சபிக்கப்பட்டவர்களோடு கூட இருக்கையில் வாழ்க்கை இதமாகிறது. நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகிறோம். பெருங்கோட்டுக்கு அருகிலான சிறு கோடு ஆகிறொம். அப்போதே மனம் சாந்தியடைகிறது.

இது வெறுமனே இருத்தலின் ஒப்புநோக்கிய நியாயம் மட்டுமே. நகுலனாயிருத்தல், இலக்குவனாயிருத்தல் இரண்டுமே சாபம்தான். இயற்கையோ, விதியோ, இறையோ, இயல்போ எல்லாமே ஆதிக்கச் சக்திக்குப் பின்னாலேயே நகருகின்றன. அந்தப்பயணத்தின் வெறும் வழிப்பயணிகள்தான் நாம். வழிப்பயணிக்கு அதிகம் என்ன கிடைத்துவிடப்போகிறது? வெயிலுக்கு நிழல். ஆங்காங்கே அன்ன சத்திரங்கள். நாம் வதம் செய்வதாய் இருந்தால்கூட நரியைத்தான் வதம் செய்யமுடியும். அரிகளை எலாம் அதிகாரத்திற்கு தாரைவார்த்துக் கொடுத்துவிடவேண்டும். நாமோ ஒரு இந்திரஜித், ஒரு சகுனி, இவர்களை வதம்செய்வதோடு ஒதுங்கிவிடவேண்டும். உப்பரிகையில் சீதை தெரிந்தால் கைகூப்பி வணங்கவேண்டும். மனைவியேயானாலும் உதிட்டிரன் அருகில் அமர்ந்திருக்கையில் மகாராணி என்று விளித்து முண்டிபோடவேண்டும். இவையெல்லாம் இயல்பாகவே நிகழும். ஒரு ஆதிக்கசக்திக்கு முன்னே அடிமைக்குணம் பீறிட்டுக்கொண்டு வெளிப்படுகிறது. அதில் போலித்தனங்கள் எதுவும் இருப்பதில்லை. காதலாகிக் கசிந்து நெட்டுருகிய மனநிலை அது. அதிலிருந்து மீள்வது என்பது இயலாதது. அடிமைகள் அதனை விரும்புவதேயில்லை. தரையெல்லாம் புல் பரந்து கிடக்கையில் செம்மறிகள் எதற்காகத் தலை தூக்கவேண்டும்? தலையைத் தூக்காதவரையிலும்தான் அதற்கு நிம்மதியான வாழ்வு. என்றாவது ஒருநாள், சிறு பிரக்ஞை, அருட்டல், அனிச்சை, அசந்தர்ப்பம், தற்செயல், எதனாலாவது அது தலை நிமிர்த்துமேயானால் கதை முடிந்தது. அன்றுமுதல் அது சபிக்கப்பட்ட ஐந்து ஆகிவிடும். கசாப்புக்கடைக்காரரின் முதல்தெரிவாகிவிடும். ஓநாயின் கண்களில் அகப்படும். அதன்பின்னர் தலை குனிந்தாலும் அதற்குப் புற்றரை தெரியப்போவதில்லை. துரத்தும் ஓநாயும். கத்தி தீட்டும் கசாப்புக் கடைக்காரரும் சதா அதன் கண்களில் நிழலாடுவார்கள். ஒரேயொருமுறைதான் அது தலை நிமிர்த்திப்பார்த்தது. அதுகூடச் சில கணங்கள்தான். ஆயினும் அன்றிலிருந்து அந்த செம்மறியின் வாழ்வே மாறிப்போனது. அதற்கு இனி இருப்பே கொள்ளப்போவதில்லை. சக ஆட்டுக்கு அது தன் கதையைச் சொல்லித்திரியும். பட்டிக்கு வெளியே கத்தி தீட்டப்படும் சத்தத்தையும் ஓநாயின் காலடி ஓசையையும் அது எடுத்துச்சொல்லும். நாம் ஏதாவது செய்தாலேயே இனிப் பிழைக்கமுடியும் என்று அது மற்றைய ஆடுகளை நச்சரித்துக்கொண்டே இருக்கும். உண்ண உணவு. குடிநீர். இனப்பெருக்கம். இதைவிட செம்மறிகளுக்கு வேறென்ன வேண்டும்? அவை அந்த ஆட்டின் கதையைச் செவிமடுக்கப் போவதேயில்லை. அவற்றின் தலைகளும் நிமிரப்போவதேயில்லை. ஆனால் அந்த ஒரு ஆட்டுக்கு இனி நிம்மதி என்பதே கிடையாது. கசாப்புக்கடைக்காரரால். ஓநாயால். அல்லது சக ஆடுகளால் ஒருநாள் அது கொல்லப்படும்வரை.

***

எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். ஆனால் இலக்குவனனுக்குப் புரிவதேயில்லை. புலம்புவான். அவ்வளவுதான். அவன் ஒரு முட்டாள். என்னைவிட முட்டாள். மனைவியை நாட்டில் தூங்க வைத்துவிட்டுக் காட்டில் அண்ணனுக்குக் காவல் புரிகிறான். அண்ணனும் அண்ணியும் குடிலுக்குள் குலாவுகிறார்கள். அவளுக்கு மான் கேட்கிறது. அதுவும் தங்கமான். எங்கிருந்து இந்தத் துணிச்சல் அவளுக்கு வருகிறது? அதிகாரம் கொடுப்பதா? அல்லது அதிகாரத்தின் நிழல் கொடுப்பதா? செய்வதை எல்லாம் செய்துவிட்டு அண்ணனைத் தேடிச்செல்லுமாறு ஒரு புலுனிக்குஞ்சு தீக்கோழிக்கு ஆணை இடுகிறது. இது ஒரு கோழை, வில்லை எடுத்துக்கொண்டு கிளம்பிச்செல்கிறது. ஆசிரமத்து வெளித் தூணில் சாய்ந்தபடி சீதை. அவன் போவதையே பார்த்தபடி நிற்கிறாள். அதிகாரம். ஆணவம். பேரழகு. எல்லாம் பறக்கமுடிகின்ற தைரியம். இவளைக் கடத்திப்போனால் என்ன தவறு? குருவிச்சையை ஆலத்தினின்று அறுத்து எறிவதில் என்ன பிழை? அதிகாரத்தைச் சுரண்டிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கையில் விடலாமா? இலக்குவனனுக்கும் மீட்சி. உபரியாக இந்தப் பற்றைக்கு ஒரு காட்டு மரம். சபலத்துக்கு ஒரு ஆண் சொல்லும் சாக்குப்போக்குகள்தாம் எத்தனை? நான் நெருங்கிப்போகிறேன். அவளைப் பறித்துக்கொண்டு பறந்து தொலைவே சென்றுவிடலாம். யாருமே அறியாத ஒரு அழகிய கானகத்து நடுவே குடில் அமைத்து அவளை அங்கே இருத்தி வைக்கலாம். தீக்கோழி படபடவென இறக்கையை அடித்துப் பார்க்கிறது. பாதங்கள் ஒரு இம்மிகூட தரையிலிருந்து எழுவதாயில்லை.

மீண்டும் மீண்டும் இறக்கைகளை அடித்தபடி, கானகத்தில் அது கட்டப்போகும் குடிலை நினைத்தபடி, அவளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும்? பாலைப்பழம் உண்பாளா? மான் பிடிக்கும் என்று தெரியும். மரை வற்றல்? நிலக் கிழங்கு அவளுக்கு நிச்சயம் பிடிக்கும். தீக்கோழி தரையினுள் குழிதோண்டி நிலக்கிழங்கை அகழ ஆரம்பித்தது. தலைமுழுதும் மண்ணுள் புதைந்தபின்னர்தான் சற்று வெளிச்சம் பரவியது. என்ன மனிதன் நான்? என் எண்ணம் ஏன் இப்படிச் சிதறுகிறது? நான் எப்படிப் புழுவிலும் சிறியனானேன்? எப்போது இது நிகழ்ந்தது? சீதை தனித்திருந்த அக்கணத்திலா? அல்லது எப்போதுமே நான் இப்படித்தானோ? அறம் பேசுதல் என்பதே அதிகாரத்தை அடைவதற்கான இச்சையில்தானோ? இறக்கை மாத்திரம் இருந்திருக்குமெனின் நான் இன்னபிறவெலாம் செய்திருப்பேனோ? என் இறக்கைகளுக்குப் பறக்கும் சக்தி வருகையில் நானும் அக்குழுவினுள் இணைந்துவிடுவேனோ? அச்சம் பரவியது. நான் என் பறக்கமுடியாத இறக்கைகளை அறுக்க ஆரம்பித்தேன். இரத்தம் சொட்டியது. இறக்கைகள் என்ன செய்யும் பாவம்? வாள் இப்போது கழுத்தை நெருங்கியது. நிமிர்ந்து நின்று வானத்தை நோக்கித் தலையை சரித்துப்பார்த்தபடி வாளினை வீசினேன்.

சீதை வானத்திலே புட்பகவிமானம் ஒன்றில் பறந்து சென்றுகொண்டிருந்தாள்.

***

மழை கதைகளைச் சுமந்து வருகிறது. காதலில் தோல்வியுறாத ஆண்கள் ஆகாயத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற கதைகளை. சமயத்தில் மழை கொணரும் கதைகளையும் ஆகாயத்தில் உள்ள அந்த ஆண்களே எழுதியிருக்கவும் கூடும். அவர்களுக்கு இங்கிருக்கும் பெண்களின் கதைகளைச் சுமந்துசெல்வது யார்? பெண்களின் கதைகளை ஒரு கண்ணாடிப்போத்தலுக்குள் முடிந்து கடலில் விட்டுவிடலாம். கடல் கதைகளை வானத்துக்குச் சுமந்துசெல்ல வல்லது. அல்லது மரணத்துக்கும் அந்தச் சக்தி உண்டு.

பெண்கள் அனுப்பும் கதைகள் எல்லாம் ஒரே செய்தியையே கொண்டு செல்கின்றன.

“வானிருக்கும் ஆண்களே. உங்கள் பெண்டிர் எல்லாம் காட்டிடை காத்துக்கிடக்கின்றனர். விழுக.”

***

புத்தகங்களை ஏன் நான் முழுமையாக வாசித்து முடிப்பதில்லை என்பது தெரியவில்லை. வாசித்து முடியாத நூலகம் ஒன்றினை வயிற்றினுள் சுமப்பது சிரமமாக இருக்கிறது. அதே சமயம் குழந்தை இறந்து பிறந்துவிடுமோ என்ற அச்சம் பரவுகிறது. பயணங்களின்போது நான் வழிகாட்டிகளை நடு வழியிலேயே அடித்துத் துரத்திவிடுகிறேன். புத்தகங்களையும்தான். ஒரு வாசகர் புத்தகங்களின் பின் அரைப்பாதியை வாசிக்காமலேயே கிழித்து எறிந்துவிடல்வேண்டும்.

வாசற்படிக்கட்டில் வைத்து எல்லோராவும் வின்சென்டும் முத்தம் கொடுத்தார்களே, அதற்குப்பின்னர் என்ன ஆயிற்று? அன்றைக்கு எல்லோரா வின்சென்டை வீட்டினுள்ளே அனுமதித்தாளா? இருவரும் அந்தப் பனிகொட்டும் இரவில் சூட்டடுப்புக்கு அருகாமையில் அமர்ந்திருந்து, திராட்சை மதுவும், பாலாடைக்கட்டியும் அருந்தியபடி கதைகள் பல பேசியிருப்பார்களோ? மெல்லிய ஒலியில் பீத்தோவனைத் தவழ விட்டிருப்பார்களோ? நிலா வெளிச்சத்து சொன்னாட்டா ஒலிக்கையில் வின்சென்ட் எல்லோராவின் தலை முடியைக் கோதிவிட்டிருப்பான். நெற்றிவழி வீழும் தலைமயிரை நீவி, காது மடலிடை அதை ஒதுக்கி, அவள் முகத்துக்கு மிக நெருக்கமாகச் சென்று, சற்றே அவன் தாமதிக்க, அவளோ காத்திருக்கமாளாமல் கண்களை மூடி, அவனோடு கோபித்துக்கொண்டு கடலின் அடி ஆழத்துக்கு மூழ்கி ஒளிந்துகொள்கையில், ஏழு கடல் தேடிச்சென்று வின்சென்ட் அவளைக் கண்டடைந்து ஆக்ரோசமாக முத்தமிடும் அக்கணத்தை, திளைக்கத் திளைக்க ஆர்ப்பரிக்கும் அலைகளோடு அவர்கள் இருவரதும் உடல்கள் இழைய ஆரம்பிக்கும் அத்தருணத்தை, சொன்னாட்டாவின் வேகத்தோடு முத்தம் முகத்தினின்று இறங்கி கழுத்து, மார்பு, வயிறு என்று இறங்கும் அந்த நீள இரவின் பக்கங்களை எப்படி ஒருவர் தவறவிடமுடியும்?

வழிகாட்டிகள் இவற்றையெல்லாம் கவனிப்பதேயில்லை. காதல் கடுகேனும் கிடையாது. நாமே அழுத்திக் கேட்டால், வெற்றிலைக் குதப்பலோடு அவர்கள் சொல்வது இதைத்தான்.

“அன்றைக்கு எல்லோரா வின்சென்டை வீட்டு வாசலில் வைத்தே திருப்பி அனுப்பிவிட்டாள்”

***

பரமபதத்தில் ஏணியும் பாம்பும் வெவ்வேறு உருவெடுக்கும் ஒரே பெண் என்பதை ஆண் அறிய விரும்புவதே இல்லை. அவனளவில் வீழ்த்துவது பாம்பு. ஏற்றுவது ஏணி.

***

இரவும் ஒரு வழிகாட்டிபோலத்தான். அது முழு உலகத்தையும் மறைத்துவைத்துவிட்டு மின்மினிப்பூச்சிகளைக் காட்டிக் கதை சொல்லிக்கொண்டிருந்தது. ஒருநாள் சமுத்திர நீரைத் தாரை தாரையாக வார்த்து இந்த இரவின் சுவர்களைக் கழுவி அகற்றுதல்வேண்டும். ஓவியங்கள்போல ஆங்காங்கே பகலின் கட்டம்போட்ட காட்சிகள் இரவுமுழுதும் விரியட்டும். நினைவுகளோடு இரவுகளைக் கழிப்பது கொலைக்களத்தில் கழுத்தை நீட்டிக் காத்திருப்பதுபோல.

உள்ளே குடிலினுள் சகாதேவனுடன் கூடிக்கிடக்கும் திரவுபதியின் ஞாபகம் வந்தது.

“திரவுபதி. ஒருநாள் வேண்டாம். ஒரே ஒரு கணம், அதுவும் சிறு புள்ளி அளவேனும் என்னை நீ காதலிப்பாயா?”

திரவுபதியுடனான அந்த இரவை என்னால் இலகுவில் கடந்துபோக முடிவதேயில்லை. என் முதலிரவு. இருவருமே விரும்பாத உறவு. அன்று நாம் தீ வளர்க்கவில்லை. சொன்னாட்டா நிச்சயம் இல்லை. அப்போதெல்லாம் புத்தகங்களைக் கிழிப்பதற்கு நான் பழகிக்கொள்ளவில்லை. என்ன பேசிக்கொண்டோம் நாம்? என்னதான் பேசியிருக்கமுடியும்? ‘என்னைக் காதலிக்கிறாயா?’ என்று நான் கேட்டாலும் அபத்தம். ‘உன்னைக் காதலிக்கிறேன்’ என்று அவள் சொன்னாலும் அபத்தம். ஒரு சுவருக்கு அப்பால் பீமனின் முதுகு. மறு சுவருக்கு அப்பால் சகாதேவனின் காத்திருப்பு. அவளுக்கோ கூரையில் அருச்சுனனின் முகம். காடு செல்லும் வழியில் கிடக்கும் வெற்றிலைக்கறை படிந்த பற்றைகள் நாம். பல்லக்குத் தூக்கிகள் எப்போதாவது உள்ளே அமர நேர்ந்தால் என்னாகும்? சதா வெளியே தூக்கிவருபவர்களின் சுமையைப் பற்றி அல்லவா சிந்திப்பர்? அல்லது எப்போது இறங்கவேண்டி வருமோ என்கின்ற அச்சம். இறக்கி விடுவார்களோ என்ற அச்சம். இறக்கிவிடாதபடி நடந்துகொள்ளவேண்டுமே என்கின்ற கவனம். முதல்நாளே முந்நூற்று ஐம்பத்தாறாவது நாள் பற்றிய அச்சமே வந்தது. மல்யுத்தக்காரனும் வில்வித்தைக்காரனும் காட்சிகொண்ட மேடையில் நளபாகன் என்ன செய்யமுடியும்? அழகுதான். நிச்சயம் அது அவளுக்குத் தெரியப்போவதில்லை. பற்றைகளின் அழகு காட்டுக்கு சலனத்தை ஏற்படுத்துவதில்லை. திரவுபதி இயல்பாகவே இருந்தாள். அவளிடம் என் அச்சங்கள் எவையுமே கிடையாது. அவள் பல்லக்கிலேயே வாழ்பவள். என்னைப்பார்த்து ஒரு வணக்கம் வைத்தாள். நானும் வைத்தேன். நீ அருச்சுனனுக்கும் இப்படித்தான் வணக்கம் வைத்தாயா திரவுபதி? அல்லது சிலிர்த்து எழுந்து அவனைச் சென்று கட்டியணைத்தாயா? அவனைக் கண்ணுற்றதும் உடலெல்லாம் அதிர்ந்து இம்மைக்கும் மறுமைக்குமாய்த் துள்ளிக்குதித்து…

பற்றைக்கு ஏன் எப்போதுமே காடு பற்றியே சிந்தனை?

சில கணங்கள் அமைதியானோம். பின்னர் நிமிர்ந்தோம். அவள் கரம் என் கரத்தைப் பற்றியது. எடுத்துத் தன் மடியில் வைத்து மிருதுவாக … so methodical, so calculated. அப்படியே ஒரு வழிகாட்டியைப்போலவே. அடுத்தது என்ன திரவுபதி? என் புறங்கையை மென்மையாக முத்தமிடுவாய், அதுதானே? How Romantic! அவள் கண்கள் நேர்கொண்டு என்னைத் துலாவின. எல்லோராவின் கண்களில் கிடந்த குறும்பு அவளிடம் இல்லை. உதடுகளில் ஈரம் இல்லை. பதட்டம் இல்லை. வின்சென்டின் ஒவ்வொரு அனிச்சைச்செயலுக்கும் அதிரும் உடல் இல்லை. வாடா, இரவின் சுவர்களைக் கழுவியகற்றி அங்கே பகலின் திட்டுகளைக் கொணருவோம் என்கின்ற துள்ளல் இல்லை. திரவுபதி எல்லோரா கிடையாது. என் எல்லோரா கிடையாது. இவள் திமிரில் அழகு இல்லை. ஈர்ப்பு இல்லை. நெருங்கினேன். அவள் கூந்தலை மிக மிருதுவாக நீவி, காது மடலிடை விலக்கி, அவள் முகத்தருகே சென்று. இதுதான், இக்கணம், தவறவிட்டுவிடாதே திரவுபதி. உன் விழிகளை மூடு. யாருமே அண்டாத சமுத்திரத்தின் ஆழத்துக்குச் செல். அங்கு எனக்காகக் காத்திரு. அளவற்ற காதலுடனும் ஆர்ப்பரிக்கும் காமத்துடனும் நீலத்திமிங்கிலமாய் உருவெடுத்து நான் உன்னைத் தேடிவருவேன். யாருமே அற்ற அவ்விடை நீரில், ஒளி கசியும் பாசி விரித்த பாறைப்படுக்கையில் கிடந்து நாமிருவரும் இம்மி இம்மியாய் உலகை அகம் கொள்வோம். தாகத்துக்குக் கடலைக் குடித்துக் குளமாக்குவோம். நீ போய் அங்கே தயாராயிரு திரவுபதி. நான் மிகுந்த அன்புடனும் காதலுடனும் இதை அவளிடம் கூறினேன்.

திரவுபதி என்னைச் சற்று ஏளனமாகவே பார்த்தாள். பல்லக்கு ராணி வழிப்போக்கனைப் பார்ப்பதுபோல. பின்னர் கண்களை கூரையை நோக்கி வெறித்தபடி விட்டேற்றியாகச் சொன்னாள்.

‘Come on, let’s just get over with it’

***

காலையில் தூக்கம் கலைந்து எழுந்திருக்கையில் அருகில் திரவுபதியைக் காணவில்லை. யன்னல் திரைச்சேலையை விலக்கிப்பார்த்தால் அவள் தோட்டத்தில் அரண்மனைப் பெண்டிரின் துணையோடு பூப்பறித்துக்கொண்டிருந்தாள். இரவின் தடங்கள் அத்தனையையும் அழித்துவிட்டு, குளித்து, புத்தாடை பூண்டு அவள் நின்ற கோலத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன். எப்படி முடிகிறது இந்தப்பெண்ணால்? முந்தைய இரவின் மின்மினிகள் இன்னமும் என் வயிற்றில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன. படுக்கையிலிருந்து முதலில் எழுபவர் போர்வையோடு இரவின் தருணங்களையும் அங்கேயே விட்டுவிட்டுச் செல்கிறார். அது அவருக்கு ஒரு விடுதலை. அல்லது தப்பித்தல். நான் மீண்டும் போர்வைக்குள் சென்று முடங்கலானேன். இரவின் தருணங்கள் எல்லாம் என் உடல்பூராவும் அட்டைகளைப்போல ஊர ஆரம்பித்தன. எல்லோரா வின்சென்டை திரவுபதிபோல அப்படி விட்டுவிட்டுச் சென்றிருக்கமாட்டாள். தூக்கம் கலைந்து எழுந்தபின்னர், இருவரும் கதைகள் பல பேசியிருப்பார்கள். எல்லோரா சிகரட் ஒன்றைப் பற்றியிருப்பாள். வின்சென்ட் அறை யன்னலை உயர்த்திக் காற்றையும் ஒளியையும் உள்ளே அனுமதித்திருப்பான். சிகரட் புகையினூடே சூரிய ஒளியின் கீற்றுகள் பரவ, அதனூடான எல்லோராவின் நிர்வாணத்தை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்திருப்பான். தேவதைபோல. கட்டில் தலைமாட்டில் சாய்ந்திருந்து, வலது கை விரலிடுக்குகளில் சிகரட்டினைப் பிடித்தபடி , இடது கையை புறம்மடித்துப் பிடரியைத் தாங்கியபடி, முகவாய் சற்று உயர்ந்து இருக்க, திறந்த மார்புகள் அழகாய்ப் பரந்து கிடக்க, கண்கள் சற்று மூடியபடி, சனியன் பிடித்த இந்த அழகு வின்சென்டுக்கு மாத்திரம் எப்படி வாய்த்தது?

‘அப்படி என்னத்தைப் பார்க்கிறாய்?’

கண்களைத் திறக்காமலேயே கேட்கிறாள். சுருள் சுருளாகப் புகை பரவுகிறது.

“I just can’t get over with it El”

தோட்டத்திலிருந்து சிரிப்பொலி கேட்டது.

***

குப்பைகளை ஒரு எல்லைவரைதான் சகிக்கமுடியும். அன்புக்காக. காதலுக்காக. நட்புக்காக. உறவுக்காக. சமூகத்துக்காக. நாட்டுக்காக. பிழைப்புக்காக. குப்பைகளை ஒரு எல்லைவரைதான் சகிக்கமுடியும். அந்த எல்லை எது என்று முன்னமேயே தெரிந்துதொலைத்தால் எவ்வளவு நல்லது. இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று சிறிது சிறிதாக அனுமதித்ததில் குப்பைகள் இப்போது இமயமாய்க் குவிந்துவிட்டது. இதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியவில்லை. நானும் ஒரு குப்பையாகிய பின்னர் குவியலிலேயே இருந்து இப்படியே தொலைந்துவிடுவது சௌகரியம் என்று தோன்றுகிறது. வெளியில் சென்றாலும் இனி என்னைக் குப்பையாகவே பார்ப்பார்கள். அப்போது அதற்காகவே காத்திருந்ததுபோலவே இந்தக் குப்பைக்குவியல் என்னைப் பார்த்து எள்ளி நகையாடும்.

குப்பைகளின் பிழைத்தல் என்பது சக குப்பைகளைச் சேர்ப்பதிலும் குப்பைகளைக் கொண்டாடுவதிலுமே தங்கியிருக்கிறது.

***

எதேச்சையாகக் காட்டின் மத்தியில் துச்சாதனனைச் சந்திக்க நேரும் என்று நான் நினைத்தேயிருக்கவில்லை. வேட்டைக்கு வந்த இடத்தில் ஒதுங்கியிருக்கவேண்டும். அல்லது திட்டமிட்டு வந்திருக்கவும்கூடும். இதோபார், நீ காட்டுவாசியாகி காவல் செய்கையில் நான் இன்னமும் ரதத்திலேயே பவனிவருகிறேன். அரண்மனையிலேயே வாழ்க்கை நடத்துகிறேன். நான் ஏவல் செய்யின் அதனைச் சிரமேற்கொண்டு செய்ய ஏராளம்பேர் உண்டு. துச்சாதனன் இதனை உணர்த்தவே இவ்விடம் ஏகியிருப்பது புரிகிறது. என் கையாலாகத்தனத்தை கேலி செய்கிறான். உலகம் அதிகாரத்தின் வசமே மண்டியிடும். துச்சாதனனேயானாலும், பெண்ணை அவள் அனுமதியின்றி அனைவர் முன்னிலையிலும் அவலம் செய்தவனேயானாலும், தன் செய்கை பற்றி எந்தக்குற்றவுணர்வுமின்றித் திரிபவனேயானாலும், அதுபற்றிப் பெருமை கொள்பவனேயானாலும், உலகம் அவனை நாட்டுக்கு அதிபதியாக்கிக் கொண்டாடுகிறது. இதுவே இங்கு இயல்பு ஆகிறது. பிழைத்தல் தெரிந்தோருக்கு அறம் ஒருபோதும் கூற்று ஆவதில்லை. பற்றை தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

என் வாள் தீட்டப்பட்டே கிடந்தது. ஒரே ஒரு வீச்சுதான். பகடையாட்டத்தின்போது எம் மனைவியைத் துச்சாதனன் அவமானப்படுத்தியது இன்னமும் என் கண் முன்னே நிழலாடுகிறது. கொன்றுவிட்டால் என்ன? இவனுக்காக ஒரு யுத்தத்தை நிகழ்த்தி என்ன பயன்? ஒரு குறு வாள் போதாதா? ஒரு தீர்மானத்தோடு வாளை எடுத்துவர ஓடினேன்.

வாளோடு திரும்புகையில் நான் கண்ட காட்சியை நம்பவேமுடியவில்லை.

தருமனும் பீமனும் துச்சாதனோடு அளவளாவிக்கொண்டிருந்தார்கள். எதற்கோ சிரித்துக்கொண்டார்கள். திரவுபதிகூட அவர்கள் சம்பாசணையில் இணைந்துகொள்கிறாள். என்ன நிகழ்கிறது இங்கே? எந்தப்பெண்ணை அவன் சபை நடுவே அவமானப்படுத்தினானோ, எந்தப்பெண்ணின் துகிலை அவன் பிய்த்து எறிந்தானோ, எந்தப்பெண்ணின் தலைமயிரைக் கொத்துக் கொத்தாகப் பிடித்து இழுத்தானோ, அந்தப்பெண், எந்த சங்கோஜமுமே இல்லாமல், நிகழ்ந்தது எதுவுமே நிகழாததுபோல, சபதங்கள் எதுவுமே உரைக்காததுபோல. ஒரு சின்னக் குழப்பம்கூட இன்றி, சிறு சலனம் இன்றி அவனோடு பேசுகிறாள். அவன் செய்கை கண்டு அதிர்ந்தவர் எல்லோரும் எந்த நெருடலும் இல்லாமல் அவனோடு இன்முகம் காட்டுகிறார்கள். அவனைத் தோலுரிப்போம் என்றவர் எல்லாம் தோள் கொடுக்கின்றனர். துச்சாதனின் சிரிப்பொலியில் மொத்தக் காடுமே கலகலக்கிறது. குப்பைக் குன்றில் இன்னும்பல குப்பைகள் சேர்ந்ததன் கர்வத்தில் உருவாகும் பெருஞ்சிரிப்பு அது.

என்னை முதலில் கண்ணுற்றவனும் அவனே.

“வா நகுலா… என்ன அங்கேயே நிற்கிறாய்? உனக்கு நான் நாட்டிலிருந்து இனிப்புகள் எடுத்து வந்துள்ளேன். வா, வந்து சாப்பிடு”

அவன் நிமிர்ந்த பார்வையுடன் கேட்க நானோ நான் கூனிக் குறுகிப்போனேன். குறுவாள் உறையினுள்ளே இருந்து படபடப்பதை உணர முடிந்தது. பறக்கமுடியா சிறகுகொண்ட இராஜபறவை என்ன செய்யமுடியும்? எனக்கேன் இப்படி ஒரு வாழ்க்கையைக் கொடுத்தாய் இறைவா? இயலாமை ஒரு கவசம்போல ஒட்டிக்கிடக்கிறது. அறிவுடன்கூடிய இயலாமை, அது என் எதிரிக்கும் வேண்டாம். அழுங்கி அழுங்கிச் சாகும் இந்த மனநிலையும் எவருக்கும் வேண்டாம். Ignorance is such a bliss.

நான் துச்சாதனனைப் பார்த்துக்கூறினேன்.

“வருக சோதரா… உனக்கு நான் நிலக்கிழங்குகளை அறுத்துத் தருகிறேன்.”

தீக்கோழி நிலத்தை அகல ஆரம்பித்தது.

***

துர்கனவின் பின்னரான விழிப்பே தினப்படி வாழ்க்கையாவது கொடுமையானது. எண்ணங்களின் காரணகாரியங்கள் சமயத்தில் விளங்குவதில்லை. அதன் தொடர்புகள் புரிவதாயில்லை. அதன் நீட்சியில் அடுத்தபுள்ளியும் தெரிவதில்லை. அருகில் இருப்பது ஏணியா, பாம்பா, அல்லது வெறும் கட்டங்களா? பிடிபடவில்லை. பெருத்த சத்தத்தோடு அலறி ஓசை எழுப்புகையில் அது நமக்குக்கூட கேட்கமுடியாத நிலையை எப்படி நொந்துகொள்வது? தனிமையின் கொடுமையை எப்படி இயம்புவது? கொடிதிலும் கொடிய தனிமை. திருவிழாக்கூட்டத்தினிடைத் தனிமை. சிரிப்பொலிகளிடைத் தனிமை. குடும்பத்தினில் தனிமை. எண்ணங்களிடைத் தனிமை.

இத்தனை யுகங்கள் இப்பெருவெளியில் எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாமல் தன்னந்தனியே வெறுமனே எம்மைச் சுமந்தபடி ஏன், எதற்காக, அடுத்தது என்ன, வருவரோ, வரம் தருவரோ என்ற ஏக்க மயக்கங்களோடு சுழன்றுதிரியும் பூமியின் தனிமை.

இவன் வேண்டாம் என்கிறீர்களா?

இவன் வேறு என்கிறீர்களா?

எதுவானாலும் வாய் திறந்து பறையுங்கள். கத்தரித்தோட்டத்தில் வெயில் காய்க்கிறது. மழை நெடுநாட்களாய்ப் பொய்த்துப்போனது. இறைப்புக்கூட பயிர்களுக்குத்தான். என் கதைகளின் சுமை தாளவில்லை. எல்லோரையும் விரட்டி அடிக்கும் இந்த வேடிக்கை வேசம் பிடிக்கவில்லை. யாருமேயற்ற இரவுகளில் காவல் காக்கும்போது அச்சமே படருகிறது.

“O, wild birds, come nest in me!”

Print Friendly, PDF & Email

2 thoughts on “நகுலனின் இரவு

  1. மிகவும் நன்றாக உள்ளது.மேலும் இது போன்ற படைய்ப்புகளை படைக்க எனது வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *