தோல்வியில் முறியும் மனங்கள்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 7,065 
 
 

சங்கீதா……சங்கீதா…..ஏய்..சங்கீதா….இன்னும் அங்க என்ன பண்றே……? வா….சீக்கிரம்…..நீட்டி முழக்கினாலும் அந்தக் குரலில் வழக்கம் போல ஒரு கண்டிப்பு இருந்ததை சங்கீதாவால் உணர முடிந்தது.

மாமி…நான் அப்பறமா வரேன்…..அம்மாக் கூப்பிட ஆரம்பிச்சாச்சு …..முதல்லயே சொல்லித் தான் அனுப்பினா கொடியில் காய்ந்த துணிகளை எடுத்தோமா … கட கடன்னு இறங்கி வந்தோமான்னு வா…வீடு… வீடா.. நின்னு கதை பேசாதேன்னு…….அவசர அவசரமாக போற போக்கில் என்னிடம் சொல்லிவிட்டு.. படிகளைத் தாவித் தாவி
சிட்டாக இறங்கினாள் சங்கீதா.

அவளது அம்மா என்ன சொன்னாலும் சரி…காலையில் ஒரு நடை கதவைத் தட்டி…என்னோடு ஒரு சில வார்த்தைகளாவது பேசாவிட்டால் சங்கீதாவுக்கு அந்த நாள் விடிந்தார்ப் போலவே இருக்காது ..எனக்கும் தான். அப்படி ஒரு அன்பு ….. என் வயதென்ன…அவள் வயதென்ன….ஆமாம்…அன்புக்கு ஏது வயசு ? …என்னவோ அவளுக்கு என்னோட பேச பிடிக்கிறது…..எனக்கும் தான் . கள்ளமில்லாத பிள்ளை மனம் சங்கீதாவுக்கு. நினைத்த மாத்திரத்தில் அவளின் முதல் பரிச்சயம் ஆன அந்த நாளை மனது அசை போட்டது.

அது ஒரு விடிந்தும் விடியாத காலை நேரம்…அடிக்கடி மின்வெட்டு….வீட்டுக்குள் இருப்பது கொஞ்சம் கடினம்..பத்து படி ஏறினா…மொட்டை மாடி ஜிலு ஜிலு வென்று வரும்.ப்படித்தான் அன்றும் காலை ஐந்து மணிக்கு மொட்டை மாடிக்குச சென்றேன்..எழுதுவது எனக்குப் பொழுது போக்கு என்பதால் நோட்டும் பேனாவும் என் கூடவே நடக்கும். மொட்டை மாடியில் தனிமையில் எழுத வசதியாக ஓரிடம் பார்த்து அமர்ந்தால் போதும்……நாளடைவில் அதுவே எனக்கும் பழகி விட்டது..

பிளஸ் டூ படிக்கும் அவள் மொட்டை மாடியில் வந்து படிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தாள் போலும்…

என்ன மாமி….போன வாரம் உங்க கதை தின மலர் இணைப்புப் புத்தகத்தில் படித்தேன்….நன்னா எழுதி இருக்கேள்…புன்னகையோடு சொன்னவள்…இப்போ என்ன எழுதறேள்..? கேட்டுக் கொண்டே வந்து அருகில் அமர்ந்தாள்.

நீ என்ன பிளஸ் டூ வாப் படிக்கிறே….அவளது புத்தகத்தைப் பார்த்துவிட்டு….சங்கீதா ..உனக்கு ..நல்ல பேர்….நீ பாடுவியோ..? இதைக் கேட்டதும் அவள் முகத்தில் ஒரு பிரகாசம்.

ஆமாம்…. மாமி நேக்கும் என் பெயர் ரொம்ப பிடிச்சிருக்கு…என் அம்மா தான் செலக்ட் பண்ணினாளாம். அம்மாவுக்கு நடிகை சங்கீதாவை ரொம்பப் பிடிக்குமாம்…சொல்லும்போது அவளுக்குள் ஒரு வெட்கம் வந்து எட்டிப் பார்த்தது.
என்னை அறியாமல் அவளது அந்தத் துடிப்பான அழகை ரசிக்க ஆரம்பித்தேன். இந்த வயதில் தான் பெண்களுக்கு எத்தனை வெள்ளை மனசு…..வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் பஞ்சு மனசு…என்னை அறியாமல் நான்…. கீதா…சங்கீதா…சங்கீதமே…சௌபாக்யமே……! என்று முணுமுணுத்தேன்….அவளுக்கும் கேட்டது….தயக்கத்தோடு “நீங்க நன்னாப் பாடறேள் மாமி..” எங்கம்மாவும் பாடுவா……நானும் கர்நாடிக் கத்துண்டேன்..என்று சொல்லிக் கொண்டாள்.
..
நான் சிரித்தபடியே…..ஆமா…உனக்கு என்ன பரீட்சை…இன்னைக்கு…?.நீ போய் படி..போ..காலை வேளையில் என்னோட வம்பு பேசி உன் .நேரத்தை வீணாக்காதே…..சங்கீதா …என்றேன்.

மாமி…எக்ஸாம் நேக்கு நாளையோட முடியறது….இன்னைக்கு லீவு தான்….இந்த பரீட்சை நேக்கு ரொம்ப ஈஸி தான்….கஷ்டமானதேல்லாம் ஒரு வழியா முடிஞ்சது…சொல்லிக் கொண்டே அவளிடத்தில் போய் அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.

பறவைகள் கூட்டம் கூட்டமாக கிழக்குச் சூரியனை நோக்கி அவசர கதியில் ஒரே சீராகப் பறந்து கொண்டிருந்தது…
முதலில் பறக்கும் பறவைக்கே இரைகள் எளிதில் கிடைத்துவிடும்….அன்றைய எண்ணத்தோடு நானும் எழுதி முடித்து இறங்கி வந்தேன். இது போல் ஆரம்பித்த நட்பு தான்…இன்று வரை தினம் தினம் வளருகிறது.

சன் தொலைக்காட்சி செய்தியில் நாளைத் தமிழகமெங்கும் பிளஸ் டூ தேர்வின் முடிவுகள் வெளியாகும்…என்றும்…..இணையம் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் என்றும்…அறிவித்துக் கொண்டிருக்கும் போதே..டிவி பார்த்துக் கொண்டிருந்த சங்கீதாவுக்கு உள்ளுக்குள் தூக்கி வாரிப் போட்டது.இத்தனை நேரமாக இருந்த இயல்பு நிலை மாறி….நாளைக்குபொழுது விடிந்தால் என்னாகுமோ…பரீட்சை ரிசல்ட் வரப் போகிறது..பகவானே நான் எப்படியாவது பாஸ் ஆயிடணும் இந்த எண்ணம் சங்கீதாவை உள்ளுக்குள் கலக்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கு முன்பிருந்த நிம்மதியான மனம் சட்டென மாறியது.

பக்கத்து அறையில் இருந்த அம்மா செய்தி கேட்டு ஓடி வந்து….” என்னது நாளைக்கு உன்னோட ரிசல்டா?
பாஸாயிடுவேல்ல…என்று ஒரு தோரணையாக…இவளைப் பார்த்து கேட்க…

ஏற்கனவே பயந்து போயிருந்த சங்கீதாவுக்கு சப்த நாடியும் அடங்கியது…பயம்மா இருக்கும்மா…என்னாகும்னு தெரியலையே..இப்பவே எனக்கு என்னமோ பண்ணுது….வயிற்றில் புரட்டுது…ஏன்மா…நான் பாஸாயிடுவேனா..? அம்மாவைத் திருப்பிக் கேட்டாள் சங்கீதா.

என்னது….!என்னையா கேட்கிறே ? என்ன….விளையாடறியா…? என்னாகும்னு தெரியலையாம்.? அம்மா இந்த வார்த்தையை சொல்லும் போது..ஒரு ஏளனம் தெரிந்தது… தொலைச்சுப் புடுவேன்…தொலைச்சு…..நன்னா எழுதினேன்…நன்னா எழுதினேன்னு…அப்போல்லாம்…. பொய்யா….. சொன்னே….? படி படின்னு தலையால…. காலால… அடிச்சிண்டேனே ….பெயில் கியில் ஆனாப் பாரு…அப்பறம் உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன்…

என் மானத்த வாங்கணும்னே கங்கணம் கட்டிண்டு வந்து பொறந்திருக்கு.சொல்லிக் கொண்டே….வெங்கலத் தாம்பூலத் தட்டைத் தரையில் தடாலென்று போட்டாள்.சுழன்று சுழன்று வந்த சப்தத்தில் அவள் அம்மா சொன்ன….படிப்பிலாவது என் குணத்தை கொண்டு வந்து பிறந்திருக்கலாம்….இவளோட இப்படி மாரடிக்க வேண்டியிருக்கு…என்ற சொல் நேராக சங்கீதாவின் இதயத்தில் அடித்தது. அம்மா சமயலறைக்குள் சென்றாள். சங்கீதா பொத்தென்று மெத்தையில் விழுந்தாள். கண்ணீர் ஆறாய்க் கொட்டியது.

தன்னைப் பற்றி அம்மாவும் அப்பாவும் ஓஹோ என்று கனவு கண்டதெல்லாம்…..நாளைக்கு வெட்ட வெளிச்சமாகும்….அம்மா பாணியில் சொல்வதானால்…” உன் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறும்..”என்பாள்..அந்த தண்டவாளம் ஏறும் நாள் வரப் போகிறது…நான் பாஸாகி என் மானம் கப்பலேறாமல் காப்பாத்தப் படுமா ..? ஒண்ணும் புரியலையே……இது வரைக்கும் எந்தக் கடவுள் புண்ணியமோ எந்த வகுப்பிலும் பெயிலாகாமல்…தாண்டி தாண்டி வந்தாச்சு.

இப்போ…பரீட்சை நேரத்தில் கூட படிக்க உட்காரும்போதே அடிக்கடி மின்வெட்டு வந்து உயிரை வாங்கியது…மீண்டும் பரீட்சை நடந்த அந்த காலகட்டத்தை நினைத்துப் பார்த்தாள்….சங்கீதா..எல்லாப் பரீட்சையும் சுமாராகத் தான் செய்தது போலிருந்தது…அவளுக்கே தெரியும்..மற்ற மாணவிகள் அதை எழுதினேன்..இதை எழுதினேன்….அப்படி……இப்படி…என்றெல்லாம் பரீட்சை முடித்து விட்டு வீட்டுக்குக் கிளம்பும் போது…சொல்லிக் கொண்டே வந்ததும்….அதையெல்லாம் இவள் கேட்கும்போதே இவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.நான் அவர்கள் சொன்ன எதையுமே எழுதவில்லையே….எல்லாமே புதுசா இருக்கே….அப்போ நான் பெயில் தான் என்று அன்றே மனசுக்குள் சொல்லிகொண்டாள்..கூடவே மறந்தும் போனாள்.

எனக்கு மட்டும் ஏனோ…என்னத்தப் படிச்சாலும் அந்த நேரத்துக்கு தெரிவது போல இருக்கும் அப்பறம் பரீட்சையில் எழுதும் போது பதில் வெளியே வராமல் அடம் பிடிக்கும். நான் என்ன செய்யட்டும்.. ? அம்மா கிட்ட வந்து இதைச் சொன்னால்….காதில் வாங்கிக்காமல் ..கன்னாப் பின்னான்னு கத்துவா..கன்னத்தில் அடிப்பாள்,

“படிக்கற நேரத்தில் எல்லாம் சினிமா….மொபைல் போன்ல அரட்டை ன்னு இருந்துட்டு…கடைசி நேரத்தில் சாகப் போற நேரத்தில் சங்கரா…. சங்கரா….ன்னு முட்டிக் கொண்டால் அப்படித்தான்…எதுவும் ஏறாது…உன்னோட சோம்பேறித் தனத்துக்கு இப்படி ஒரு சாக்குப் போக்கு…சொல்லாதே….ஒழுங்காப் படிச்சா எல்லாம் ஏறும்…” என்று சள்ளுன்னு விழுவாள்.

நீ இப்படி சள்ளுன்னு படி…. படி… ன்னு மட்டும் சொல்லிச் சொல்லி என்னை ஓட ஓட விரட்டியே..எனக்கு படிக்கப் பிடிக்கலைன்னு ஒரு நாள் தெரியாமல் சொல்லிவைத்தாள் சங்கீதா…அவ்ளோதான்…அன்னிக்கு அதை பிடி பிடின்னு பிடித்துக் கொண்டு….லக்ஷார்ச்சனை செய்தாள். அம்மாத் திட்ட ஆரம்பித்தால் எப்போது நிறுத்த வேண்டும் என்பதையே மறந்து போவாள். அந்த பயம் இன்னும் சங்கீதாவுக்குள் ஆழமாக பதிந்து விட்டது.

இப்படியே..தான் ..சாதாரணமாக ஒரு நாள் “ஏழாம் அறிவு” சினிமா பார்க்கணும் போல இருக்கும்மா…என் பிரெண்ட்ஸ் எல்லாரும் பார்த்துட்டு ரொம்ப நல்ல படம்னு சொன்னாம்மா ன்னு சொன்னதற்கு…உடனே…சங்கீதா… “முதல்ல உன் ஆறாம் அறிவைப் பாரு..” அப்பறமா ஏழாம் அறிவு , எட்டாம் அறிவு எல்லாம் பார்த்துக்கலாம்…..அடுத்த மாதம் பரீட்சையை வெச்சுண்டு …இவளுக்கு ஏழாம் அறிவு கேட்கறது..துளி கூட பரீட்சை பயமே இல்லையே. சங்கீதா…உனக்கு…நான் எல்லாம் எப்படி பயந்து பயந்து படிச்சிருக்கேன் தெரியுமா?…அப்போ தான் ரேங்க் வாங்க முடியும்….நீயெல்லாம் என் முன்னால ஒண்ணுமே இல்லை….சுகவாசியா இப்படி இருந்தால் எப்படி படிப்பு மேல பயம் வரும்..? நீ டிஸ்டிங்ஷன்ல பாஸ் பண்ணு ..நீ நீ …. பா ……சாகணும்…தெரிஞ்சுக்கோ…! பேச்சில் தடுமாறினாள் அம்மா !

எத்தனை அடிச்சுக்கறேன்…நம்மைப் போல நடுத்தர வர்க்கக் குடும்பத்துல படிப்பு ஒண்டி தான் கை கொடுக்கும். பாட்டன்… முப்பாட்டன்… சொத்தாப் பாழாப் போறது…என் அண்ணா பெண் சுஜாதாவைப் பாரு…இன்ஜினியரிங் முடிச்சு இப்போ ஸ்காலர்ஷிப் ல எம்.எஸ் பண்றா அதுவும் எங்கே…அமெரிக்கால..! படிக்கறதோட இல்லாம பார்ட் டைம் வேலை கூட பார்த்துண்டு சம்பாதிக்க வேற செய்யறா…குழந்தைகள்னா அப்படி இருக்கணும். அப்பா அம்மாவோட கஷ்டம் புரிஞ்சுண்டு அவாளுக்குப் பெருமை சேர்த்துத் தராமாதிரி…நீ என்னத்தைப் பண்ணப் போறியோ.எனக்கு இப்பவே வயிற்றில் புளியைக் கரைக்கிறது..

சங்கீதா இப்போவே சொல்லிட்டேன் நீயும் சுஜாதாவுக்கு கொஞ்சமும் குறைவில்லை….புரிஞ்சுக்கோ…நீயும் அமெரிக்காவில் தான் எம்.எஸ் படிக்கணும்னு நேக்கு ஆசை….நான் படிக்கணும்னு ரொம்ப ஆசைப் பட்டேன் …என்னைப் படிக்க வைக்கலை ….கல்யாணம் பண்ணிக் கொடுத்து கண்ணை மூடீண்டா….என்னோட ஆசையை நீயாவது நிறைவேத்துடீ.நீ பாஸ் பண்ணா விட்டால் என் நெஞ்சு வெடித்துப் போகுமடி சங்கீதா !!! அம்மா இல்லாமல் நீ அலைவாய்.

அம்மாவின் புலம்பல்…இன்னும் அடங்கிய பாடில்லை…!

அம்மா …உன்னோட நிறைவேறாத ஆசைக்கெல்லாம் நான் தான் பலியாடா ..? கேட்க நினைத்த வார்த்தைகளை தொண்டைக்குள்ளேயே நிறுத்தி வைத்து விட்டு…அம்மா…..நீ சும்மா….அங்க பாரு…இங்க பாரு…அவளைப் பாரு…இவளைப் பாருன்னு…ஏன்மா இப்படி என்னைத் தொல்லைப் படுத்தறேன்னு ஒரு கத்து கத்தின பின்பு தான் அம்மா நிறுத்தினாள்.

சங்கீதாவின் சிந்தனை ஊசல் ஆடியது ! அம்மாவுக்கு முன் நான் போய் விட்டால் …. ! சேச்சே என்ன கோரச் சிந்தனை ?

காலிங் பெல்லின் சப்தம் வீட்டின் அமைதியை அசைத்தது.
சங்கீதா அப்பா வந்தாச்சு கதவைத் திற…அம்மா அறைக்குள்ளிருந்து குரல் கொடுக்க…
அப்பா உள்ளே நுழைந்ததும்….நாளைக்கு சங்கீதாவுக்கு ரிசல்ட் வருதாம்….நியூஸ் ல சொல்லியாச்சு…அம்மா சொல்ல,

அப்பாவின் பார்வை சங்கீதாவை நோக்கி….”என்னம்மா…கண்ணு….பாஸாயிடுவேல்ல …? கேட்டது.,

தெரியாதுப்பா…..பயம்மா இருக்கு…கூடவே மெல்லிய குரலில் அம்மா ரொம்ப டார்ச்சர் பண்றாப்பா….அப்போலேர்ந்து பாஸாயிட்டா சரி…ஒரு வேலை பெயில் ஆயிட்டா…..ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்குப்பா….தயக்கத்தோடு சொல்ல..

நெட்லயும் மார்க்கோட வருமாம்…நாளைக்கு ஆபீஸ் போகும்போது அவ கிட்ட நம்பர் வாங்கிண்டு போங்கோ அப்போதான் மார்க் எல்லாம் பிரிண்ட் எடுத்துண்டு வர முடியும். காபியை கொடுத்தபடியே அம்மா…

மகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு …” அமைதியாக இரு…முதல்ல ரிசல்ட் வரட்டும்…..நன்னாத்தானே படிச்சே….நன்னாத்தானே எழுதி இருக்கேன்னு சொன்னே…அப்பறம் ஏன் பயம்…கியம் எல்லாம்” காபியை உறிஞ்சியபடியே….அப்பா சொல்ல…கண்கள் டிவி யைப் பார்த்துக் கொண்டிருந்தது.

வெறும் பாசானா மட்டும் போதுமா…..டிஸ்டிங்ஷன்ல வரணும்……அது தான் பாசானதுக்கு அடையாளம்…எங்களுக்கும் பெருமை…”எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்னு தேங்கா மூடியோட வெளில வரப்படாது…”..அம்மாவின் கனவு கர்ண கடூரமாகத் தெரிந்தது சங்கீதாவுக்கு.

“போச்சுடா…” அம்மாவை எனது மார்க்கு கண்டிப்பாக திருப்தி படுத்தாது….அழுத்தமாக நினைத்துக் கொண்டாள் சங்கீதா.

டிஸ்டிங்ஷன்ல எப்படி பாஸ் பண்ணுவது ? பாஸானால் போதும் ….அதுவே இங்கு டப்பா டான்சே ஆடறது..!

ஜெயா டிவி இல் நெஞ்சின் அலைகள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்க…சங்கீதா மனதை அதில் செலுத்தப் பார்க்கிறாள்.
“ஒரே இடம்…நிரந்தரம்….இதோ…உன்..” என்று ஆரம்பமான பாடலைக் கேட்டதும்….

இது…வேற…!சங்கீதாவின் பயம் உச்சதுக்குப் போக பட்டென்று எழுந்து அறைக்குள் சென்று கதவை சார்த்திக் கொண்டாள். கதவுகளைத் தாண்டியும் பாடல் ஒலிக்க…” அம்மா நான் கொஞ்சம் மாடிக்கு போய்டு வரேன்…” என்று சொல்லிக் கிளம்ப….

மணி எழரையாச்சு …இப்போ உனக்கென்ன மாடியில் ஜோலி….எங்கேயும் போக வேண்டாம்…சொல்லும்போதே அம்மாவின் மொபைல்….மணியடித்தது..

அடுத்த முனையில் எப்பவும் போல சித்தி தான்…..கண்டிப்பா இன்னும் அரை மணி நேரம் அம்மா போனில் பேசிண்டு தான் இருப்பா….”நல்ல நாள்லயே நாழிப் பால்….இப்போ குட்டி வேற போட்டிருக்கு…” அதான் என்னோட ரிசல்ட் விஷயம்…அப்போ இன்னும் நேரமாகும் ன்னு..நினைத்தபடி சங்கீதா மெல்ல அப்பாவிடம் சொல்லிவிட்டு…அறுத்துக் கொண்டதாம் கழுதை எடுத்துக் கொண்டதாம் ஓட்டம் என்று மாடிக்கு எஸ்கேப்…!

நேரே மொட்டை மாடிக்கு சென்ற சங்கீதா அங்கே ஏற்கனவே மாமி எட்டுப்போட்டு வளைந்து வளைந்து நடைபயிற்சி செய்து கொண்டிருப்பதைப் பார்த்து…ரொம்ப நேரமா நடக்கறேளா. …இப்படி வேர்த்து விட்டுருக்கு…என்று கேட்க….

சங்கீதாவைக் கண்டதும் நான் எட்டிலிருந்து வெளியேறி வந்து…என்ன இந்த நேரத்தில் மாடிக்கு வந்திருக்கே….
நாளைக்கு உனக்கு ரிசல்டாமே…? என்று நான் கேட்டவுடன் …

சங்கீதாவின் முகம் சட்டென்று மாறி இறுகியதை நான் கவனிக்கத் தவறவில்லை.
இத்தனை நேரமா வீட்டில் அந்த டாப்பிக் தான்….நீங்களும் வேண்டிக்கோங்கோ…நான் எப்படியாவது பாஸாயிடணும்..! நீ கண்டிப்பா பாஸாயிடுவே….கவலையை விடு…நீ தான் உட்கார்ந்து உட்கார்ந்து படிச்சியே…அப்பறம் என்ன….பயம்..? நிம்மதியாச் சாப்பிட்டுப் படுத்துத் தூங்கு…எல்லாம் சரியாகும்..எப்படியும் நீ நாளைக்கு கார்த்தால செய்தியோட என் கிட்டத் தான் ஓடி வருவ …அப்போ இந்த பயம் எல்லாம் தெளிஞ்சுடும்…பாரேன்..நானும் உன்னோட வயசைக் கடந்து வந்தவள் தானே..நாளைக்கு பார்க்கலாம்….நாழியாச்சு….உன் அம்மா தேடுவா…நீ கிளம்பு.

இல்ல மாமி…மனசே சரியில்லை…..அம்மா சித்திக்கிட்ட போனில் பேசிண்ட்ருக்கா…நான் நன்னாத் தான் படிச்சேன்..ஆனால் பரீட்சை எழுதும்போது அவ்வளவும் நியாபகத்துக்கே வரலை..ஏதோ எழுதிட்டு வந்தேன் அவ்ளோதான். அதான் இப்போ நினைச்சால் பயம்மா இருக்கு. எனக்குத் தெரியும் மார்க் வரது கஷ்டம் தான்.
அம்மா ரொம்ப எதிர்பார்க்கிறா…..நான் ஏமாத்திடுவேன்…அதான் வருத்தம்…அம்மாவுக்கு இதெல்லாம் புரியாது.

போடி அசடு…மறைக்கப் பட்ட மனக் கவலைக்கு மருந்தில்லைன்னு சொல்லுவா…வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் வெறும் படிப்பை வைத்து வருவதில்லை. கல்வி.. நம் வாழ்கையின் ஆதாரம் தான்…அடிப்படை அணிகலன் மாதிரி,,,ஆனால் அதுவே வாழ்வாகி விடாது. ஒரு கிளாஸ் லேர்ந்து இன்னொரு கிளாஸ் போகும் தகுதி தான் தேர்வு…இந்த வெற்றி தோல்வி எல்லாம்..உண்மையில் பார்க்கப் போனால்…பரீட்சையின் வெற்றி தோல்வி வாழ்கையின் முற்றுப் புள்ளியும் இல்லை. வாழ்க்கைங்கறது பள்ளியைக் கடந்தது . இது நிரந்தரம் இல்லை.இந்த முறை ஏதோ காரணத்தால் தோற்றுப் போனாலும் …அடுத்த முறை ஜெயித்து விடலாம் .எல்லாத்துக்கும் மனசு தான் காரணம்…சரி..நீ போய் ரொம்ப யோசிக்காமல் சாப்டுட்டு படுத்துத் தூங்கு…நாளைக்குப் பார்க்கலாம்..இப்போ கிளம்பலாம் என்று சொல்லி மொட்டை மாடியை விட்டு இறங்கி அவரவர் கூட்டுக்குள் அடைந்தோம்.

இரவு முழுதும் சங்கீதா கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டு ஏதேதோ எண்ணிக் கொண்டு படுத்திருந்தாள். பாட்டி இருந்திருந்தால் கொஞ்சம் சப்போர்ட்டாக இருக்கும்…இந்த நேரம் பார்த்து பாட்டியும் தாத்தாவும் காசிக்கு டூர் சென்று விட்டார்கள்…அப்பா என்ன சொல்வாரோ..தெய்வமே…எப்படியாவது பாஸ் ஆகி விட வேண்டும்…ஒரு சப்ஜெக்டில் கூட தோல்வி அடையக் கூடாது…நான் பாஸ் பண்ணினாத் தான் யார் முகத்திலும் முழிக்க முடியும்.. அம்மாவும் அப்போ தான் நிம்மதியா இருப்பா….இல்லாவிட்டால் அத்தை, அத்தை பையன் ரகு…சித்தி, சித்தப்பா…எல்லா உறவுகளும் சங்கீதா பாஸா…ன்னு..நாளைக்கு பூரா போன் மேல போன் போட்டுக் கேட்டுக் கொண்டே இருப்பா.
கடவுளே….எனக்கு எந்த அவமானத்தையும் என் படிப்பு கொடுத்து விடக் கூடாது.

ஒரு வேளை நான் அதிர்ஷ்டவசமாக பாஸ் பண்ணிட்டேன்னா….இன்ஜினியரிங் காலேஜில் சேர்த்து விடறேன்னு அப்பா சொல்லிருக்கார். நிறைய காலேஜில் விண்ணப்பம் எல்லாம் வாங்கி வைத்தாயிற்று . ஒரு வேளை பெயிலாயிட்டேன் என்றால் ..என்ன செய்வது? அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது.?..அப்பா கூட பரவாயில்லை சரி மீண்டும் எழுதுன்னு சொல்லிடுவார் ஆனால் மனசுக்குள் வேதனைப் படுவார்…

அம்மா தான் தாங்க மாட்டாள் ….அந்த ஆற்றாமையை கொட்டித் தீர்ப்பாள். அம்மா என்னை மன்னிச்சுடும்மா…நான் என்ன பண்ணட்டும்…படிக்கத் தான் செய்தேன்….நான் படிச்சது எதுவும் வரலை….வந்த கேள்விகள் பலதும் எனக்கு எழுத முடியாமல்…அப்படியே ஒன்றும் நினைவுக்கு வராமல் மறந்து போச்சே…அன்றே நினைத்தேன்…இந்த முறை என்னால் பாஸாக மாட்டேன் என்று..உன்னிடம் சொன்னால் நீ எங்கே காது கொடுத்து கேட்பே…? .நான் ஆரம்பிக்கும் போதே…நீ உன் எட்டுக் கட்டை சாரீரத்தில் என்னை ஏழு ஊருக்குக் கேட்கறா மாதிரி….தாளிச்சுக் கொட்டுவே…..”எப்போபாரு சினிமா…..அரட்டைன்னு இருக்கத் தெரியறது..ஒழுங்காப் படிக்கத் தெரியலையா”ன்னு கத்துவே….நீ…ஆக நினைத்து ஆகா முடியாததெல்லாம் நான் செய்து சாதிக்கணும்னு உனக்கு ஒரு வெறி…அதற்கு நான் என்ன பண்ணட்டும்…என்னால் உனது ஆசைக்கு ஓட முடியலையே….சங்கீதாவுக்குப் பொழுதே விடியக் கூடாது என்று தோன்றியது. அதெப்படி முடியும்…பொழுது விடியும்…ரிசல்டும் வரும்….அதன் பின்பு தான் என்னவெல்லாம் நடக்குமோ….பயத்தில் கண்ணை இறுக்கி மூடிக் கொண்டாள்…

அம்மாவின் கனவெல்லாம் என்னால் நனவாகுமா..? பாவம் அம்மா என்னைப் பற்றி நிறைய கனவுக் கோட்டை கட்டி வெச்சுருக்கா….!

என்னால் முடியுமா,,,? என்ற விஸ்வரூப கேள்விக்கு முடியாது என்று எதிரொலித்தது மனம்.என்ன செய்யலாம்……பேசாமல் நிம்மதியாய் செத்துடு..பிரச்சனையே இல்லை….மனமே வழியும் சொன்னது…

அச்சச்சோ…தப்பு…. தப்பு…. தயங்கினாலும்….சரி நீ சொல்றதைக் கேட்கறேன்…ஆனால் எப்படி சாவது…?
மனசிடம் தன்மானம் சரணாகதி அடைந்தது. தற்காலிகப் போராட்டத்தை நிரந்தரமாக கலைத்து விட்ட திருப்தி அந்த முடிவில் இருப்பது போல உணர்ந்தாள் சங்கீதா.

மாமி சொன்ன எந்த அறிவுரையும் இப்போது அவளுக்கு நினைவுக்கு வரவில்லை. இரவின் அமைதி அவளை தந்து கட்டளைக்கு அடிபணிய செய்து கொண்டிருந்தது.தூக்கம் வரவில்லை … மீளாத தூக்கத்திற்கு வழி தேடியது மனம். விடுதலை வேணும். போதும் இந்த பரீட்சை வேதனைகள். பாஸ் பண்ணி அப்புறம் இன்ஞினிரிங் நாலு வருடம். ஒவ்வோர் வருடமும் அம்மாவோட போராடணும் ! போதும் இந்த வேதனை ! இன்று இதற்கோர் முடிவு ! இதிலிருந்து எனக்கு விடுதலை !

மெல்ல எழுது அடுக்களையில் எதையோ தேடி எடுத்துப் பொட்டலமாகக் கொண்டு வந்தாள் சங்கீதா. அவளுக்குத் தெரிந்த விஷம்…

எலி பாஷாணம்…அதை கலந்து உண்ண வீட்டில் இருந்த ஒரு லட்டு…எடுத்துக் கலந்து பொட்டலமாக பத்திரப் படுத்திக் கொண்டாள்

மனதுக்குள் இன்றோடு எனக்கு இப்படம் கடைசி என்றும் சொல்லிக் கொண்டாள்.ஏதேதோ… யோசித்தபடியே விடியலை எதிர்பார்த்தாள்.

பொழுது விடிந்து…வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்கும் போது படிகளில் கீழ் படிகளில் ஏதோ நிழலாடியது…யாராயிருக்கும்..எட்டிப் பார்த்தேன்…சங்கீதா தான் பேசாமல் நின்றிருந்தாள்….
அவள் முகத்தில் வித்தியாசமான ஒரு வெறுமை இருந்தது….என்ன ரிசல்ட் பயமா….? என்று மிகவும் சாதாரணமாகக் கேட்டு விட்டு சிரித்துக் கொண்டே நானும் உள்ளே வந்து விட்டேன். சங்கீதாவிடம் இருந்து ஒரு பதிலும் வரவில்லை.அவள் மாடிக்குப் போவதாக என்னால் ஊகிக்க முடிந்தது.அடிக்கடி அவள் மொட்டைமாடிக்கு தான் வருவாள்…போவாள்..

குழந்தைகள் அமைதியாக நின்றால் ஏதோ விஷமம் செய்திருப்பார்கள்… என்று அர்த்தம்…
யோசித்துக் கொண்டே என் வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன். என் மகனுக்கும் பரீட்சை நடந்து கொண்டிருப்பதால்…அவனும் படித்துக் கொண்டிருந்தான்.வீட்டுக்குள் காலை வேலைகள் நிரம்பி வழிந்தது.
திடீரென…..தொடர்ச்சியாக அழைப்பு மணியின் சத்தம்…கேட்டதும்…என்னவோ….ஏதோ….என்று..
கை வேலைகளை அப்படியே போட்டுவிட்டு கதவைத் திறந்த எனக்குத் தூக்கி வாரிப் போட்டது…

அங்கே….சங்கீதா…..கண்கள் முட்ட…எச்சில் ஒழுகிக் கொண்டு…தளர்ந்து போய் விழுந்து கிடந்தாள்.. மூளைக்குள் மின்னல் வேகத்தில் எனக்கு எல்லாமே புரிந்து போனது…படித்துக் கொண்டிருந்த மகனிடம்…டேய்…கீழாத்து பொண்ணு சங்கீதா….உடனே அவ அப்பா அம்மாவைக் கூப்பிடு.,..ஆம்புலன்ஸ் கூப்பிடு….சீக்கிரமாப் போ……என்று சொல்லிக் கொண்டே அவள் முகத்தில் குளிர்ந்த நீரைத் தெளித்து…அவளை அப்படியே தூக்கி…மேலே சார்த்திக் கொள்கிறேன்….”இப்படிப் பண்ணிட்டியேம்மா….”…பகவானே….குழந்தை பொழைக்கணும். எங்கிருந்தெல்லாமோ தெய்வங்களை அழைக்கிறேன்….

“மாமி…தப்பு பண்ணிட்டேன்…..சாரி….காப்பாத்துங்கோ….ஈனஸ்வரத்தில் முனக….அம்மா….அம்மா…..என்று சொல்லிக் கொண்டே மயக்க நிலைக்குச் சென்றால் சங்கீதா..

சங்கீதாவும் அவளது அப்பாவும் அலறி அடித்துக் கொண்டு மேலே வந்து..மகளின் நிலைமையைப் பார்த்ததும் தலையில் அடித்துக் கொண்டு கதறிய கதறல்…..இந்த நிலை தன எதிரிக்குக் கூட வரக் கூடாது.

பழத்தை சாப்பிட விரும்புபவர் பூவை பாதுக்காக வேண்டாமா…?.

அடுத்த பத்து நிமிடங்களில்….அசுர வேகத்தில் அனைவரது கூட்டு முயற்சியால் சங்கீதா கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப் பட்டு….முதலுதவி நடந்து கொண்டிருந்தது.

வெளியில் வந்த டாக்டர்..”நல்ல சமயத்தில் கூட்டிட்டு வந்தீர்கள் ….இன்னும் கொஞ்ச நேரம் தாமதமாயிருந்தால் காப்பாத்தறது ரொம்ப கஷ்டம்….” பெண் பிழைத்து விட்டாள்..இனி கவலை இல்லை….பரீட்சை ரிசல்டுக்கு பயந்து இந்த மாதிரி செய்யலாமா…?

இந்தக் காலத்தில் யாரோட மனசு எப்படிப் போகும்னே சொல்ல முடியலை… எல்லாம் தெய்வாதீனம் தான்…..

அமைதியா மகளைப் போய் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தார் மருத்துவர்.

அனைவரது பிரார்த்தனையும் பலித்தது. சங்கீதாவின் அம்மா அதற்குள் இரண்டு முறை மயங்கி விழுந்து விட்டாள்……அவளது கதறலில் ஹாஸ்பிடலே…கூடியது.

அவள் அப்பா…பெண்ணைப் பற்றிக் கவலைப் படுவதா…மனைவியைப் பற்றி கவலைப் படுவதா என்று தவித்துத் துடித்துக் கொண்டிருந்தார்.

அரை மயக்கத்தில் கிடந்த சங்கீதாவை உயிரோடு பார்த்ததும் தான் எங்கள் அனைவருக்கும் உயிர் வந்தது.
தனது மகள் பாஸாக வேண்டும் என்ற ஒரே பார்வை தான் இருந்ததே தவிர… தேர்வின் தோல்வியில் முறியும் வேர்கள் என்று மகளுக்கும் மனதில் பயமும்..வருத்தமும்… இருக்கும் என்று உணராமல்.. அவளை இந்த நிலைக்கு இழுத்துச் சென்று விட்டேனே…. ! என்னருமை மகளை எமனுக்கு இரையாகக் கொடுக்க இருந்தேனே …!

ஓடிச் சென்று மகளின் சோர்ந்து போயிருந்த முகத்தை அனைத்து முத்தமிட்டு என் வயிற்றில் பாலை வார்த்தாய்.. .ஆனந்தக் கண்ணீர் உகுத்தபடி அவளது கன்னங்களை வருடியபோது தனது கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் சங்கீதாவின் கன்னத்தில் பட்டுத் வழிந்தது.

அப்போது பார்த்து அவளது மொபைல் மணி அடிக்க….

நான் எடுக்கிறேன்…கைபேசியின்….எதிர் முனையில் ஒரு பெண்குரல்….இனிய சேதி கொண்டுவந்தது !

“கங்கிராட்ஸ்…நம்ம சங்கீதா பாஸாயிட்டாள்…” முதல் வகுப்பில்… தெரியுமா ? நியூஸ் பேப்பர்ல நம்பர் வந்திருக்கு…!

மெல்ல கைபேசியை சங்கீதாவின் அம்மாவிடம் கொடுத்து விட்டு.. என் கண்களில் வழியும் ஆனந்தக் கண்ணீரை புடவைத் தலைப்பால் ஒற்றியப்படியே..நகர்கிறேன்.தேர்வு முடிவு வருவதற்குள் தன் முடிவைத் தேடினாள் சங்கீதா ! கடவுள் அவளுக்கு வேறு ஓர் நல்ல முடிவை வைத்திருந்தார் என்று அவளுக்குத் தெரியாமல் போனதே..இது தான் . நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்குமோ…?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *