தொலைந்து போன உறவுகள்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,089 
 
 

ஆச்சரியத்துடன், அம்மாவைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். நான் பிறந்த, 24 ஆண்டுகளில், பார்க்காத ஒரு புது அம்மாவை, இப்போது பார்ப்பது போல் தோன்றியது. அம்மாவின் முகத்தில், இதுவரை பார்த்திராத ஒரு சந்தோஷம், நிறைவு எல்லாம் தெரிந்தது.
தந்தை வழி உறவினர்களிடம், அம்மா இன்முகத்தோடு பழகித்தான் பார்த்திருக்கிறாள். மற்ற சித்திகள், பெரியம்மாக்களும், அத்தைகளோடு நல்லுறவு வைத்துக் கொள்ளாத போது, அம்மா மட்டும் எல்லாருடனும் நல்லுறவே வைத்திருந்தாள்.
தொலைந்து போன உறவுகள்!அம்மா அடிக்கடி தன் இளமைப் பருவத்தைப் பற்றிச் சொல்லி இருக்கிறாள். தன்னுடைய பெரியப்பா, சித்தப்பா, அத்தை குழந்தைகள் மட்டுமல்லாமல், அவர்களுடைய பேரன், பேத்திகளுடனும், அம்மா சிறு வயதில் சேர்ந்து, நிறைய இனிமையான பொழுதுகளைக் கழித்ததாகச் சொல்லி இருக்கிறாள்.
திருமணம் ஆன பின், ஆளுக்கு ஒரு பக்கமாக சிதறுண்டு போனதை எண்ணி, சில நேரங்களில் வருத்தப்பட்டும், அதே நேரம், அந்தக் கணங்களை மறக்காமல், தன் நினைவுகளில் பொக்கிஷமாக பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள் என்பது, இப்போது அம்மாவைப் பார்க்கும் போது, புரிந்தது.
எனக்கு – என் பெயரைச் சொல்லவில்லையே – நித்யா. திருமணம், கடந்த ஆண்டு நடந்தது. மாப்பிள்ளை அமெரிக்காவில், நியூஜெர்சியில் இருப்பதாகச் சொன்ன போது, அம்மா சொன்ன முதல் வாக்கியம், “என் சின்ன அத்தை பேத்தி, ராதிகா அங்குதான் டாக்டராக இருக்கிறாள். அவள் ஒரு அமெரிக்கனைத் தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் என்று கேள்விப்பட்டேன். நீ அங்கு போனால், அவளைக் கண்டுபிடிக்க முடியுமா…’ என்று கேட்ட போது, அப்பா கூட, “வெறும் பெயரை வைத்து, எப்படி கண்டு பிடிப்பது?’ என்று கூறி, சிரித்தார்.
ஆனால், அசரவில்லை அம்மா.
“ஏன் முடியாது… அங்கிருக்கும் இந்திய டாக்டர்களைப் பற்றி விசாரித்தால், தன்னால் தெரிந்து விடப் போகிறது…’ என்றாள் நம்பிக்கையுடன்.
என்னுடைய திருமணத்திற்கு, அவள் தன்னுடைய பால்ய காலத்து உறவினர்கள் அனைவருக்கும், பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள், அத்தைகள் ஆகியோரின் குழந்தைகள் மற்றும் பேரன், பேத்திகளுக்கு பத்திரிகை அனுப்ப விரும்பினாலும், அவர்களுடைய முகவரிகள் கிடைக்காததோடு, பேரன், பேத்திகள் பலரும், அமெரிக்காவில் இருந்ததால், அவள் விருப்பப்படி அனுப்ப முடியவில்லை.
திருமணமாகி, நியூஜெர்சி வந்தவுடன் ஒருமுறை தொலைபேசியில் பேசும் போது, வழக்கமான பேச்சுக்களைத் தொடர்ந்து, ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்து, “நித்யா… இது என் சின்ன அத்தை பேத்தி, ராதிகாவின் போன் நம்பர். அவள் ஒரு மகப்பேறு நிபுணராகத்தான் இருக்கிறாள் என்று எனக்கு தெரிய வந்துள்ளது. இப்போது நாள் தள்ளிப் போயிருக்கு என்று சொல்கிறாய். ராதிகாவுக்கு தொலைபேசி மூலம் பேசு. அவளிடம் பேச தயங்காதே; அவளுக்கு பந்தாவெல்லாம் கிடையாது. அப்போதே நல்ல வசதி இருந்த போதும், நன்றாக படித்த போதும், எங்களிடம் நட்புடன் தான் இருப்பாள்…’ என்று, சொல்லி விட்டாலும், எனக்குள் என்னவோ தயக்கம் இருந்தது.
என் வீட்டுக்காரர் விசாரித்ததில், டாக்டர் ராதிகா ஜான்சன் என்ற பெயரில், அவள் பெயர் பதிவாகியிருந்தது. ராதிகாவின் கணவன், டாக்டர் ஜான்சன், இதய நோய் நிபுணர் என்றும், இருவரும் நியூஜெர்சியைப் பொறுத்தவரையில், பிரபலமாக இருப்பதாகவும் தெரிய வந்தது.
லேசான தயக்கத்தை தூரத் தள்ளி, அம்மா கொடுத்த நம்பருக்கு போன் போட்டேன். அந்தப்புறம் சுத்தமான அமெரிக்க தொனியில், “மார்னிங்… டாக்டர் ராதிகா ஜான்சன்…’ என்ற இனிமையான குரல் கேட்டது. நான் சற்று தயங்கி, பின், அவளிடம், “நான் உங்கள் சின்ன மாமா தாத்தா பேத்தி, (அம்மா தான் இந்த உறவு முறையைச் சொல்லிக் கொடுத்தாள்) நித்யா பேசுறேன். என் அம்மா பெயர் ஜெயா… இரட்டைச் சகோதரிகளுள் ஒருத்தி; உங்களுக்கு நினைவு இருக்கிறதா?’ என்றேன்.
சின்ன மவுனத்திற்கு பிறகு, “ஓ… ஜெயாவின் மகளா நீ… உன்னை, மூன்று மாதக் குழந்தையாகப் பார்த்தது. அதுதான் நான் ஜெயாவைக் கடைசியாக பார்த்ததும் கூட…’ குரலில் சின்னக் குழந்தைக்கான உற்சாகம் தெரிந்தது.
“ஜெயா எப்படி இருக்கிறாள்?’ என்றவள், என்னைப் பற்றி எல்லாம் விசாரித்தாள். நான் கர்ப்பம் என்று சொன்னவுடன், குரலில் உற்சாகம் கொப்பளிக்க, “ஓ… ஜெயா, பாட்டியாகப் போகிறாளா… சரி… நீ என்னைப் பார்க்க வா… என்னுடைய வீட்டு முகவரியைக் குறித்துக் கொள். நான் தற்சமயம் ஐ.வி.எப்., (சோதனை முறைக் குழந்தை பிறத்தல்)பில் சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்தாலும், நீ எனக்கு முக்கியம். இந்த சண்டே உன் கணவரோடு என்னை வந்து பார்…’ என்று சொல்லி, போனை வைத்து விட்டாள்.
அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தை சொன்ன போது, அம்மாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. “ராதிகாவோடு பேசினாயா… என்ன சொன்னாள்… எப்படி இருக்கிறாள்? அவள் மாறவே மாட்டாள். உங்களுக்கு வேண்டுமானாலும், அவள் எனக்கு தூரத்து சொந்தமாக தெரியலாம்; ஆனால், நாங்கள் கூட பிறந்த சகோதரிகளை விட நெருக்கமாக பழகியுள்ளோம். உன் டெலிவரிக்கு வரும் போது, அவளை நேரில் பார்க்க வேண்டும்…’ என்ற அம்மாவின் குரலைக் கேட்கும் போது, என்னுடைய டெலிவரியை விட, ராதிகாவைப் பார்ப்பது, அவளுக்கு அதிக முக்கியமாக இருப்பதை, என்னால் உணர முடிந்தது.
இதைக் கேட்டு என் கணவர் கூட, லேசாக ஆச்சரியப்பட்டார்…
“அப்பாவுடைய மாமா பேத்தி, அத்தையோட பேத்தி, என்ன உறவு இது… எனக்கெல்லாம், என் சொந்த மாமா பையனும், அத்தை பெண்ணும் எங்கிருக்கின்றனர் என்று கூட தெரியாது; ஆனால், உன் அம்மாவின் குடும்பம் வித்தியாசமாக இருக்கிறதே…’ என, வியந்து போனார்.
மறுவாரம் ராதிகாவைப் பார்க்க போன போது, நியூஜெர்சியில் குறிப்பிட்ட மிகப் பெரிய பங்களாக்களில் ஒன்றாக இருந்தது, ராதிகாவின் பிரமாண்டமான பங்களா.
ராதிகா, நடுத்தர உயரம். தலைமுடியை குட்டையாக வெட்டியிருந்தாள். மாநிறம் தான் என்றாலும், முகம் வசீகரமாக இருந்தது. ஜீன்ஸ் பேன்டும், டீ-ஷர்ட்டும் அணிந்திருந்தாள். அவளுக்கு, 40 வயதிருக்கும் என்று அம்மா சொன்னாள்; ஆனால், அவளைப் பார்த்தால், அவ்வளவு வயது தெரியவில்லை; நித்யாவை பரிசோதித்தாள்.
தன் கணவனையும், மகன், மகள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள். அன்று மதிய உணவு கொடுத்து உபசரித்ததோடு, அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி நிறைய சொன்னாள். அதோடு மறக்காமல், என்னுடைய அம்மாவின் போன் நம்பரையும் வாங்கிக் கொண்டாள். என்னிடம் பேசும் போதே, தன்னுடைய பெரியம்மா பேத்தியும், என்னுடைய அம்மாவின் தாய் வழி சொந்தங்கள் சிலரும், இதே நியூஜெர்சியில் இருப்பதாகச் சொன்னாள்.
“அம்மாவின் அப்பாவழி சொந்தம் இந்த ராதிகா; ஆனால், இவளோ அம்மாவின் தாய் வழி சொந்தத்தைப் பற்றியும் சொல்கிறாளே…’ என்று, அவள் கூறிய உறவு முறைகளைக் கேட்டு, எனக்கு தலை சுற்றியது.
இதை அம்மாவிடம் சொன்ன போது, “நாங்கள் அவ்வளவு அன்யோன்யமாக இருந்தோம். உங்கள் காலம் மாதிரி இல்லை அது; உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த காலம் அது…’ என்றாள் சிரித்துக் கொண்டே.
அம்மா கடந்த வியாழனன்று தான் நியூஜெர்சி வந்தாள். எனக்கு டெலிவரி தேதி, ஒரு மாதத்துக்குப் பிறகு குறித்துக் கொடுக்கப்பட்டிருந்தது. அம்மாவை இந்த தேதியில் வரச் சொன்னதே ராதிகா தான். அம்மா வந்திறங்கியதும், என்னையும், என் கணவரையும், குசலம் விசாரித்து, எனக்காக வாங்கி வந்திருந்த பொருட்களை எல்லாம் கொடுத்த போது, இன்னொரு பெரிய பார்சல் இருந்தது. அவள் சொல்லாமலே தெரிந்தது… அது, அவளுடைய பால்ய காலத்து உறவுகளுக்கு என்று.
அம்மா வந்திறங்கிய அன்று மாலையே, ராதிகாவிடமிருந்து போன் வந்தது. அம்மா எடுத்த எடுப்பிலேயே, “சொல்லுடி பாப்பா… எப்படி இருக்கே? எத்தனை நாளாச்சுடி உன் குரலை கேட்டு… நீ ரொம்ப சிலிம்மா இருக்கிறதா என் பெண் சொன்னாள்… நான் தாண்டி ரொம்ப ஊதிப் போயிட்டேன். அப்புறம் வந்துடி…’ என்று, அம்மா சர்வ சாதாரணமாக பேசுவதை பார்த்து, நான் ஆச்சரியப்பட்டது என்னவோ உண்மைதான்.
காரணம், 24 வருடங்களாக பார்க்காத ஒரு சொந்தத்திடம், எடுத்த எடுப்பிலேயே இவ்வளவு சர்வ சாதாரணமாக பேச முடியும் என்றால், அந்த உறவின் அஸ்திவாரம், எவ்வளவு பலமாக இருந்திருக்க வேண்டும் என்று புரிந்தது. அதுவும் ராதிகா ஜான்சன் இப்போது இருக்கும் நிலையில், அம்மாவுக்கு ஈடு கொடுத்து பேசுவதை பார்க்கும் போது, எனக்கு அந்த எண்ணம் இன்னும் பலமாயிற்று.
அன்று காலையே, குழந்தை போல் குதூகலமாகி விட்டாள் அம்மா. காரணம், ராதிகா இங்கு வரப் போவதாக, இரண்டு நாட்களுக்கு முன்பே அறிவித்து விட்டதுதான். ராதிகா மட்டுமில்லை . அமெரிக்காவில் இருக்கும், அம்மாவின் கசின்கள் அனைவரையும், ராதிகா அழைத்து வருவதாகச் சொல்லி இருந்தாள். அவர்கள் சர்வ சாதாரணமாக, உறவு முறைகளை ஒருவருக்கொருவர் புரிந்துக் கொண்டாலும், எனக்கு தான் புரியவே இல்லை.
“சின்னம்மாவின் மகன் வயிற்று பேரன்…’ என்கின்றனர். “அம்மாவின் ஜானா சித்தியின் மகள்…’ என்கின்றனர், “அம்மாவின் மாமா ராமனாதனின் பேரன்…’ என்கின்றனர். “அத்தை பேத்தி, அத்தை மகள்…’ என்று. எனக்குதான் ஒரு பக்கம் குழப்பமாகவும், ஒரு பக்கம் வேடிக்கையாகவும் இருந்தது.
அம்மா சிரித்துக் கொண்டே, “”உங்களுடைய அமெரிக்க பாஷையில் சொல்வதானால் இவர்கள் எல்லாம், எனக்கு பர்ஸ்ட் மற்றும் செகண்ட் கசின்ஸ். அதோடு அப்போதெல்லாம் அம்மா வழி சொந்தம், அப்பா வழி சொந்தம் என்ற பிரிவினையெல்லாம் கிடையாது. வருடந்தோறும் கல்யாணம், சீமந்தம், வளைகாப்பு எல்லாம் வரும்; நாங்கள் அனைவரும் ஒன்று கூடி, மகிழ்ச்சியாக இருப்போம்.
“”அப்போதெல்லாம் எங்களுக்குள் பண ரீதியாக, புத்திசாலித்தனம் ரீதியாக இப்படியெல்லாம் எந்த வித்தியாசமும் கிடையாது. ராதிகாவும், நானும் ஒன்றாக இந்தி படித்தோம். நான் பெயிலாகி விட்டேன்; ஆனால், ராதிகா சாகித்திய ரத்னா வரை போனாள். அவளும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள்; நானும் அவளைப் பார்த்து பொறாமைப்பட்டது கிடையாது. இப்போது கூட, ராதிகா பெரிய டாக்டர்; நான் சாதாரண எஸ்.எஸ்.எல்.சி., தான். ஆனால், நாங்கள் பேசும் போது, அந்த வித்தியாசம் எல்லாம் எங்களுக்குள் வரவே வராது,” என்றாள்.
சொன்னது போலவே, ராதிகா தன்னுடன் இன்னும் மூன்று பெண்களை அழைத்து வந்திருந்தாள். அவர்களை பார்த்ததும், ஓடிப்போய் சேர்த்து அணைத்துக் கொண்டாள் அம்மா. அப்புறம் என்னிடம், “”இது என் சின்ன மாமாவின் கடைசி பெண், இது என் பெரிய மாமாவின் பெரிய மகள் வயிற்றுப் பேத்தி, இது என் பெரிய அத்தைப் பேத்தி,” என்று, அறிமுகம் செய்ய, நான் உறவு முறைகளில் குழம்பிப் போனேன்.
ஆனால், அவர்கள் அனைவரும் தங்கள் தற்போதைய வயதை மறந்தவர்களாக, ஒருவருக்கொருவர், “வாடி, போடி…’ என்று படு யதார்த்தமாக பேசிக் கொண்டிருந்தனர்.
அம்மாவும் அன்று பிரத்யேக தென்னிந்திய சமையல் செய்து, அசத்தியிருந்தாள். அரைத்துவிட்ட சாம்பார், அரைத்து விட்ட மோர் குழம்பு, கத்தரிக்காய் ரசவாங்கி, எலுமிச்சை ரசம் என்று, ஒரு பெரிய லிஸ்டே இருந்தது.
அம்மா காபி போட உள்ளே போன போது, பானு என்ற பெண், “”ஏய் ஜெயா… பார்த்துடி, நம்ம விஜயாவை பெண் பார்க்க வந்தன்னைக்கு, சர்க்கரைக்கு பதிலா ரவையைப் போட்டியே… அந்த மாதிரி செய்து விடாதே…” என்று சொல்ல, அந்த நிகழ்வை நினைவு கூர்ந்து, அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.
அதே போல் அம்மாவும், ராதிகாவை, “பாப்பா’ என்றே அழைத்தாள்; காரணம், அதுதான் அவள் வீட்டுப் பெயராம். அதே போல், என் அம்மாவையும், அவர்கள் அனைவரும், “பேபி’ என்றே அழைத்தனர்.
அவர்கள் அனைவரும் சேர்ந்து, மாங்காடு கோவிலுக்கு போன போது, பஸ்சில் ஏற்பட்ட நிகழ்வுகள், “கற்பகம்’ என்ற படத்துக்கு போகும் போது, கூட்ட நெரிசலில், ஒருவர் மாற்றி, ஒருவர் தொலைந்து போய், ஒரு வழியாய் சினிமாவும் பார்க்காமல், இரவு, 8:00 மணியோடு வீடு வந்து சேர்ந்து, பெரிய அத்தையிடம் செம டோஸ் வாங்கியது… 10 பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது, மோர் பற்றாமல் போக, ஒருத்தி மட்டும் நிறைய மோரை ஊற்றிக் கொண்டு, மற்றவர்களிடம் நீரை விட்டு மோரை பெருக்கிக் கொள்ளவும் என்றது… என, கணக்கில்லாமல் அவர்களுடைய மலரும் நினைவுகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. அதை பார்க்க, எனக்கு சுவையாக இருந்தது.
எனக்கு, ஒரு விஷயம் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. இங்கு குழுமியிருந்த பெண்கள், ஒரு காலத்தில், அதாவது, கால் நூற்றாண்டுக்கு முன்னால், பொருளாதார ரீதியாக ஒரே மட்டத்தில் இருந்திருக்கலாம்; அப்போதே எல்லாருமே வெவ்வேறு வகுப்புப் படித்துக் கொண்டிருந்திருக்கலாம். அதனால், அப்போது அவர்களிடம் போட்டி, பொறாமை எல்லாம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், இப்போது அப்படியில்லை…
என்னுடைய அம்மாவுக்கு, ஆங்கிலமே தெரியாது; ஆனால், ராதிகா, அமெரிக்க ஆங்கிலத்தை அச்சடித்தாற்போல் பேசுகிறாள். அம்மாவிடம் ஒரு ஆங்கில சொல் கூட கலக்காமல், அம்மாவின் மட்டத்துக்கு வந்து பேசியது, எனக்கு அதிசயமாக இருந்தது.
அதே போல்தான், அங்கு வந்திருந்த மற்ற இரண்டு பெண்களில் ஒருவர், அங்குள்ள பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், மற்றொரு பெண்மணி தனியார் வங்கியில் உயர் பதவியிலும் இருந்தனர். இருந்தும், அவர்கள் அனைவருமே தங்களுடைய தனித் தன்மையை மறந்து, மற்றவர்களுடன் கலந்து பேசியதைப் பார்க்கவே, சந்தோஷமாக இருந்தது.
உடனே என்னால், இந்த காலக் கட்டத்தை நினைத்து பார்க்க முடியாமல் இருக்க முடியவில்லை. இதே ஊரில்தான் என் சொந்த அத்தை பெண் இருக்கிறாள், என் சித்தி பையன் இருக்கிறான், பெரியப்பா பெண் ணும் இருக்கிறாள்; ஆனால், அவர்களோடு எனக்கு சரியான உறவு கிடையாது. ஏன்… என் சொந்த சகோதரியிடம் கூட, என் அம்மா தன் ஒன்று விட்ட, இரண்டு விட்ட சகோதரிகளிடம் காட்டும் வாஞ்சையில் ஒரு துளி கூட காட்டியதில்லை. எப்போதும் எங்களுக்குள் போட்டியும், பொறாமையும் தான். “நீ பெரிய ஆளா… நான் பெரிய ஆளா…’ என்பதில் தான், எங்கள் உறவின் அஸ்திவாரமே இருப்பதால், அங்கு உறவே இல்லாமல் நாங்கள் நிற்கிறோம்.
“”அப்பா… ரொம்ப வருஷம் கழிச்சு சிரிச்சு, சிரிச்சு வயிறே வலிக்குதடி ஜில்லு… இதே மாதிரி நாம எல்லாரும் எங்க வீட்டிலே ஒரு நாள் பார்த்துக்கணும்,” என்று சொன்ன போது, எனக்கு அவர்களைப் பார்த்து, பொறாமையாக இருந்தது.
இந்த மாதிரியான உறவுகள், இனி வரும் சந்ததியினருக்குக் கிடைக்குமா என்ற ஏக்கம் என்னுள் ஏற்பட்டது.

– கிரிஜா ஜின்னா (அக்டோபர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *