தொப்புள் கொடி உறவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 28, 2023
பார்வையிட்டோர்: 2,595 
 

”ஏழாம் நெம்பர் ரூம் அம்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு. தாயும் சேயும் நலம்” செவிலி  அஞ்சலி தன் சக செவிலி பானுவிடம் குதூகலத்துடன் கூறினாள்.

சென்னையில் நங்கநல்லூரில் வசந்தா நர்சிங் ஹோம் பலர் அறிந்த  பெரிய  ஆஸ்பிட்டல். இருபது படுக்கைகள் கொண்ட அந்த நர்சிங் ஹோமின் பிரதான டாக்டர் பவித்ரா புகழ் பெற்ற கைனகாலாஜிஸ்ட். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். கை ராசியான டாக்டர் என பெயர் வாங்கியவர். அவருக்கு எப்பவும் கோபமே வராது என்பது கூடுதல் விஷயம்.

பிரசவ அறையிலிருந்து டாக்டர் பவித்ரா சிரித்துக் கொண்டே வெளியே வந்தவள். தன்னுடைய கன்சல்டிங் அறைக்குள் நுழைந்தாள். அங்கிருந்த  செவிலி  மேரியிடம்,   மோகனாவுக்கு ஆண் குழந்தை. நார்மல் டெலிவரி. தாயும் சேயும் நலம்” என்றாள்.  

”கங்கிராட்ஸ் டாக்டர்” என்றாள் மேரி. டாக்டருக்குத் தொடர்ந்து மூன்று பாராட்டுப் போன்கள்  வந்ததைப் பார்த்து அவளுக்கு முன்னால் அமர்ந்திருந்த பேஷண்ட் திவ்யா, ”ஒரு நார்மல் டெலிவரி பிரசவத்துக்கு இவ்வளவு பாராட்டா?” என்று திகைப்பும் வியப்பும் அடைந்தாள். பார்த்தாள்.

”என்ன டாக்டர் விஷயம் ?” என்று வினவினாள்.

”என்னுடைய பேஷண்ட் மோகனாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு. அதுல ஆச்சரியபடுவதற்கு என்ன இருக்கு என்று கேட்கலாம். பிறவியிலே கர்ப்பப்பை இல்லாமல் சினைப்பையுடன் இருப்பதற்கு ஆங்கிலத்தில் மேயர் ரோக்கி டான்ஸ்கி குஷ்தர் ஹாசர் சின்ரோம்        ( எம்.ஆர். கே. எச், சின்ரோம் )என்று பெயர். 5000 பெண்களில் ஒருவருக்கு இப்பிரச்சனை இருக்கும். தாய்க்குக் கருப்பப்பை இல்லாததால் குழந்தையை சுமப்பது இயலாத காரியம். மூன்று ஆண்டுகள் குழந்தைகள் இல்லாத தம்பதியினர் நிரஞ்சன், தீப்தி தற்போது அமெரிக்காவில் பிலடெல்பியாவில் வசிக்கின்றனர். பரிசோதனைக்கு எங்களிடம் வந்தனர். ஸ்கேன் செய்தபோது தீப்திக்குக் கர்ப்பப்பை இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டது. இரண்டு சினை முட்டைகளும் நல்ல திறனுடன் செயல்பட்டு வந்ததை ரத்த ஹார்மோன் மூலம் உறுதி செய்யப் பட்டது. நிரஞ்சனின் கசின் உறவுடைய 30 வயது இளம்பெண் மோகனா வாடகைத் தாயாக  இருக்க சம்மதித்தாள். 39வது வாரம் ஆண் குழந்தை பிறந்து விட்டது. தாயும் சேயும் நலம். என்றார் சீதா.

”கிரேட் டாக்டர்” என்று தன் வியப்பைத் தெரியப்படுத்தினாள் திவ்யா.

செவிலி மேரி பிரசவ அறைக்குள் நுழைந்த போது  கட்டிலில் படுத்திருந்த  மோகனா இவளை பார்த்து “வாங்க நர்ஸ். எனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு!” என்று பூரிப்புடன் மொழிந்தாள்.

”டாக்டர் சொன்னாங்க. கங்கிராட்ஸ் மேடம். பையனின் அப்பாவுக்கு விஷயத்தை சொல்லி விட்டீங்களா?

”உங்களுக்குத் தெரியாதா? நான் வாடகைத் தாயாகத்தான்  இந்த குழந்தையைப் பெத்தேன். பையனின் அப்பா அமெரிக்காவில் இருக்கார். வாட்ஸ் அப் அனுப்பியிருக்கேன். இப்போது உலகமெலாம்  கொரோனா வைரஸ் பிரச்சனை இருக்கிறதலே அவர் எப்போது இந்தியா வர முடியும் என்று தெரியலை. அது வரை நான் காத்திருக்கணும்.”

தொட்டிலிலே போட்டிருந்த குழந்தையை பார்த்த செவிலி, குழந்தை அழகா இருக்கு. நல்ல வெயிட்டாகவும் இருக்கும் போலிருக்கு.

”குழந்தையின் அப்பா கொடுத்து வைச்சவர்” நீண்ட பெருமூச்சை விட்டாள் மோகனா.

அப்போது மோகனாவின் அலைபேசி சிணுங்கியது. மோகனா போனை எடுத்தாள். அமெரிக்காவிலிருந்து நிரஞ்சன்தான் பேசினான்.

”டெலிவரி ஆயிடுத்தா?”

“ஆண் குழந்தை பிறந்திருக்கு”.

“ரொம்ப சந்தோஷம். ஆனால் என்னால் உடனே வரமுடியாது. இப்போது அமெரிக்காவிலிருந்து இந்தியா வர விமானம் எதுவுமில்லை. கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோயால் எல்லாவற்றையும் முடக்கி வைத்திருக்கிறார்கள். நிலைமை சரியானதும் நானும் தீப்தியும் இந்தியா வருகிறோம். அதுவரை நீங்க குழந்தையைப் பார்த்துங்க.  உங்க வங்கி கணக்குக்கு ரூபாய்  ஐம்பதாயிரம் அனுப்புகிறேன். குழந்தையை ஜாக்கிரதையாக பார்த்துகோங்கோ. போனை வைக்கிறேன்” என்று அலைபேசியை அணைத்தான் நிரஞ்சன்.

 குழந்தை அழுதது.

”குழந்தையை எடுங்க. பாலுக்கு அழறான் ” என்று மோகனா சொன்னதும் செவிலி மேரி குழந்தையைத் தொட்டிலிருந்து எடுத்து அவளிடம் கொடுத்தாள்.

மோகனா பச்சிளங் குழந்தையை தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். குழந்தை இடப்புற மார்பைக் கவ்வி பால் குடிக்கத் தொடங்கியது.

மோகனாவின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.


மோகனாவுக்கு இருபத்து ஐந்து வயசிலே கல்யாணம் ஆகி விட்டது. அவள் நிரஞ்சனின் அத்தையின் நாத்தநாரின் சித்தி பெண். கல்யாணமாகி அடுத்த வருடமே அவள் கையில் குழந்தை. ஆனால் கணவன் கார் விபத்தில் மரணம்  அடைந்தான். இரண்டு மாசம் கழித்து திடீரென்று குழந்தையும் வயிற்றுப் போக்கு வந்து ஒரு நாள் இறந்து விட்டது. கடவுள் ஏன் இப்படி தன்னைச் சோதிக்கிறார் ? என்று வருத்தத்துடன் இருந்தாள் மோகனா.

அவளுக்கு ஒரு தனியார் கம்பெனியில் வேலை கிடைத்தது.  கிடைத்த வருமானத்தில் தன் அன்னையுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாள். அப்போதுதான் நிரஞ்சனுக்கு வாடகைத்தாயாக இருக்க முடியுமா? என்று அவனுடைய அத்தை கேட்டாள். மோகனாவும் சரி என்று சம்மதித்தாள். இப்போது குழந்தையும் பிறந்து விட்டது. இன்னும் ஒரு மாசமோ அல்லது இரண்டு மாசமோ நிரஞ்சன் வந்தவுடன் அவனிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டால் அவள் பொறுப்பு முடிந்தது” என்று நினைத்தாள் மோகனா.

குழந்தை சிணுங்கியது. குழந்தையை வலப்புற  மார்பகத்துக்கு மாற்றினாள். கொஞ்ச நேரம் கழித்துக் குழந்தை சிரித்தது பிறகு பாலைக் குடிக்க ஆரம்பித்தது. . 

மோகனாவுக்குத் துணை அவளுடைய அம்மா மட்டும்தான். வேறு யாரும் வந்து குழந்தையைப் பார்க்கவில்லை. குழந்தையை மேரியிடம் கொடுத்துத் தொட்டிலில்  போடச் சொன்னாள்.

ஓரிரு நாட்கள் கழித்து ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். நிரஞ்சன் சீக்கிரம் வந்து குழந்தையை வாங்கிண்டு போய் விடுவான் என்னும் நினைப்புடன் குழந்தையைத் தாய்ப்பாலூட்டி பேணி வளர்த்தாள். நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாவும் கழிந்தன. மூன்று மாசம் ஆகி விட்டது. குழந்தை வளர்ந்தது கொண்டே வந்தது,

நாட்டில் கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டே போய்க்கொண்டிருந்தது. ஊரடங்கு உத்தரவு, முகக்கவசம் என்று கட்டுப்பாடுகள் அதிகரித்தன. மோகனா பொறுமையுடன் நிரஞ்சனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.


வடஅமெரிக்கக் கண்டம்…

உலகின் மூன்றாவது பெரிய பரப்பளவும் ஜனத்தொகையும் கொண்ட அமெரிக்க நாடு…

பென்சில்வேனியா மாகாணத்தின்

பிலடெல்பியா நகரத்தில்

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் நிரஞ்சனும் அவன் காதலித்து மணம் செய்து கொண்ட தீப்தியும் சோகமே உருவாக உட்கார்ந்திருந்தனர்.  நிரஞ்சனுக்குக் குழந்தை பிறந்திருக்கும் சமயத்தில் அவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சமயத்தில் துக்கத்தோடு உட்கார்ந்திருக்க வேண்டிய காரணம் என்ன?

நிரஞ்சன் திருச்சியில் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது தன்னுடன் படித்த தீப்தியைக் காதலித்தான், அவனுடைய தாய்மொழி தமிழ். தீப்தி தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவள். ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவள். அதனால் இருவர் வீட்டிலும்  திருமணத்துக்குத் தடை விதித்தனர்.  எதிர்ப்பை மீறி நிரஞ்சன் தீப்தியை மணம்  செய்து கொண்டான். அமெரிக்கா வந்து விட்டான். நிரஞ்சனுக்கு அப்பா கிடையாது. தாயார்  தங்கம் மிகவும் பொல்லாதவள். நல்ல மனசு கிடையாது. பையனோடு பேசுவதை விட்டு விட்டாள்.

தீப்திக்குப் பெற்றோர் சிறு வயதிலேயே மாண்டு விட்டனர். மாமா வீட்டில்தான் வளர்ந்தாள். அவர்களும் தீப்தி நிரஞ்சனை மணம் செய்ததும் அவளை கை கழுவி விட்டனர்.

தீப்திக்குக் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதில் அளவு கடந்த ஆசை. அவளால் அது முடியாதென்பதால் நிரஞ்சன் அவள் ஆசையை தீர்க்க முயற்சி  செய்தான். சென்னைக்கு இருவரும் போயிருந்தபோது  வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற ஏற்பாடு செய்தான். குழந்தை பிறந்து விட்டது. உடனே சென்னை போய் குழந்தையை எடுத்து வர முடியாமல் இந்த பாழாப் போன கொரோனா வைரஸ் அமெரிக்காவை புரட்டிப் போட்டு விட்டது. ஒரு இலட்சம் பேர்களுக்கு மேல் பாதிப்பு. எங்கும் வெளிநாடு போக முடியாதபடி விமானங்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு விட்டன. ஐ டி கம்பெனியில் வேலை என்பதால் வீட்டிலிருந்தபடியே இருவரும் வொர்க் ஃப்ரம் ஹோம் செய்து கொண்டிருக்கின்றனர்.  

”தீப்தி, நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறதே.. எப்போ நம்ம  குழந்தையை எடுத்து வருகிறது?”

“கொஞ்ச நாள் தள்ளிப் போடுவதைத் தவிர  வேறே வழியே இல்லை. எனக்கு உடம்பு சரியில்லை. கொரோனா அறிகுறி மாதிரி தெரிகிறது” கண்களில் கண்ணீர் பெருகத் தழுதழுத்த குரலில் கூறினாள் தீப்தி.

அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு நிரஞ்சன் மொழிந்தான்.

”அன்பே, என்னை விட்டுப் போய் விடாதே. என் உயிர் நீதான்.. நான் டாக்டருக்குப் போன் செய்கிறேன்” என்று சொல்லி உடனே டாக்டரை தொடர்பு கொண்டான்.

டாக்டர் வந்து பார்த்து தீப்தியைப் பரிசோதித்து  பாசிடிவ் என்று கன்பர்ம் பண்ணியதும் இருவரும் அதிர்ந்து போயினர்.

யார் அறிவார் சாநாளும், வாழ்நாளும்?

தீப்தியின் உயிரைக் காக்க முடியவில்லை. கொரோனாவுக்கு பலியானாள்.

நிரஞ்சனுக்கு என்ன செய்வதென்று தெரியலை. தானும் கொரோனாவுக்கு பலி ஆகிவிடுவோம் என்று அவனுக்குத் தோன்றியது,  தன் அம்மாவிடம் ஒரு முறை பேசினான். சென்னையில் உள்ள மோகனாவிடம் பேசி நிலைமையைச் சொல்லி கொரோனாவால் மனைவி இறந்து விட்டாள். நானோ இன்னைக்கோ அல்லது நாளைக்கோ என்று இருக்கேன்.  ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டேன். உங்க வங்கி கணக்குக்கு ரூபாய் இருபத்து ஐந்து இலட்சம் அனுப்பியிருக்கேன்.. குழந்தையை நீங்களே வளர்த்து ஆளாக்குங்கள்” என்று சொல்லி போனை வைத்தான். வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்பினான். அடுத்த நாள் அவனுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. டாக்டருக்குப் போன் பண்ணினான். அவர் வருவதற்குள் அவன் உயிர் பிரிந்தது. அந்தோ கணவன், மனைவி இருவரும் கொடிய கொரோனா வைரஸ் நோய்க்குப் பலியாகி விட்டனர்.


மோகனாவுக்கு குழந்தையின் மேல் தாய்ப்பாசம் மிகுதியாயிற்று.  குழந்தைக்குக் கண்ணன் என்று பெயர் வைத்தாள். குழந்தை இனிமேல் தன்னிடம் தான் இருப்பான் என்று எண்ணி நெஞ்சம் பூரித்தாள். நிரஞ்சன் குழந்தையை தன்னிடம் விட்டுவிட்டுப் போனது ஒரு விதத்தில் நல்லதென்று நினைத்தாள். கடவுளுக்கு நன்றி கூறினாள்.

நம்முடைய சந்தோஷம் எல்லாம் சிறிது காலத்துக்குத்தான். நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது எவ்வளவு சரியானது.

ஒரு நாள் அவள் குழந்தையிடம் கொஞ்சிக் கொண்டிருக்கும்போது காலிங் பெல் சப்தம் கேட்டது.

குழந்தையைத் தரையில் விட்டுவிட்டு போய் கதவைத் திறந்தாள். அறுபது வயசு மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி வாசலில் நின்றிருந்தாள்.

”இங்கு மோகனாங்கிறது…”

நாந்தான். உள்ளே வாங்கோ. உட்காருங்கோ.

”என் பெயர் தங்கம். நான் நிரஞ்சனின் அம்மா ….., “ அவள் குழந்தையை ஆசையோடு பார்த்ததும் மோகனாவுக்கு பகீரென்றது.

”என் பேரனா? பேர் என்ன?”

”கண்ணன்”.

தங்கம், குழந்தையை எடுத்து கொஞ்சி விட்டு மீண்டும் குழந்தையைத் தோளில் சாய்த்து வைத்துக் கொண்டார்.

 ”ஏதாவது சாப்பிடறீங்களா அம்மா?”

நான் சாப்பிடறதுக்கு வரலை. என் பையன் நிரஞ்சன், அவன் மனைவி தீப்தி இரண்டு பேரும் அமெரிக்காவில் கொடிய நோயான கொரோனாவுக்கு பலியாயிட்டாங்க. அவன் வேலை செஞ்சுண்டு இருந்த கம்பெனியிலிருந்து எங்களுக்குத் தகவல் வந்தது. நிரஞ்சன் சாகரத்துக்கு முன்னால் கடைசியாய் என்கிட்டே ஒரு தடவை பேசினான்.அதுவரைக்கும் பேசாமல் இருந்த நானும் பேசிட்டேன். எங்களுக்குள்ளிருந்த வெறுப்பு போய் விட்டது. என் பேரனை எடுத்துட்டு  போகலாம்னு வந்தேன்.”

”நிரஞ்சன் என்கிட்டேயும் பேசினார். குழந்தையை என்னையே வளர்க்கச் சொன்னார். வாட்ஸ் அப்பிலும் மெசேஜ் அனுப்பினார்.”

”குழந்தை நிரஞ்சனின் வாரிசு. எங்க கிட்டே வளருவதுதான் நியாயம். குழந்தையை பெத்து கொடுத்ததும் உன் கடமை தீர்ந்து போச்சு. எங்களுக்கு  சொத்து இருக்கு. நாங்க குழந்தையை போஷாக்கா வளர்ப்போம். அது உன்னாலே முடியாது.” என்று சொல்லிவிட்டு  அவர் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

”நில்லுங்க. குழந்தையை வைச்சுட்டு போங்க.. எனக்கும் நிரஞ்சனுக்கும்தான் பேச்சு. உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நான் குழந்தையைத் தர மாட்டேன்” என்றவள் குழந்தையைக் கிழவி கையிலிருந்து பிடுங்க முயற்சி செய்தாள்.

”என்னம்மா பேசறே நீ? உனக்கு குழந்தையை வளர்க்க என்ன உரிமை இருக்கு? நீ வாடகைத் தாய் தானே? குழந்தை பிறந்தவுடன் அதன் உடைமையாளரிடம் கொடுத்து விடுவதுதானே உன் கடமை.”

”என்ன உரிமைன்னா கேட்கறீங்க ? குழந்தையின் பெற்றோர் நீயே குழந்தையை வளர்த்துக் கொள்ளலாம் என்று  எனக்கு  அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ் இருக்கு.. அதோடு மட்டுமில்லாமல் எனக்குத் தொப்புள் கொடி உறவு இருக்கு. வாடகைத் தாயா என்னை ஒப்பந்தம் செய்தவர் நிரஞ்சன். அவர் கேட்டால் நான் குழந்தையைக் கொடுத்திருப்பேன். ஆனால்அவர் இந்த உலகத்தை விட்டே போய் விட்டார். அவருக்குப் பதிலா நீங்க குழந்தையைக் கேட்கறதிலே எந்த நியாயமும் இல்லை. நான் வாடகைத் தாய்தான். ஆனாலும் குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்ற தாய். என்னை மீறி எப்படி குழந்தையை எடுத்துட்டுப் போறீங்கன்னு  பார்க்கிறேன்.” என்று கத்தினாள் கோபமாக. அவள் கை குழந்தையை இறுக்கிப் பிடித்தது.

பத்ரகாளி போல் தோன்றும் அவளைத் தங்கம் திகைப்புடன் சிறிது நேரம் உற்று நோக்கினாள். அவள் சொல்வதில் நியாயம் இருப்பது போல் அவளுக்குத் தோன்றிற்று.

ஒரு நிமிடம் யோசித்து விட்டுக் குழந்தையை கீழே வைத்து விட்டுக் கூறினாள்.

“ஆமாம், நீ சொல்வது சரிதான். எனக்கும் நிரஞ்சனுக்கும் எப்படி தொப்புள் கொடி உறவு இருக்கோ அது போல் உனக்கும் கண்ணனுக்கும் தொப்புள் கொடி உறவு இருக்கு என்பதை மறந்து விட்டேன்.  நான் நிரஞ்சனிடம் கடுமையாய் நடந்து கொண்டேன். அவன் போனபிறகுதான் எனக்குப் புத்தி வந்தது. அதுக்கு பிராயச்சித்தமா என் பேரனை நான் வளர்க்கலாம்னு நினைத்தேன். உன் அன்புக்குத் தலை வணங்குகிறேன். அவனை நீயே நல்லா பார்த்துக்கொள்.. நான் வருகிறேன். உனக்குப் பணம் தேவையானால், ஏதாவது உதவி வேண்டுமானால் என்னைத் தொடர்பு கொள்.” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.

அவள் அகன்றதும் மோகனா நிம்மதி பெருமூச்சு விட்டுவிட்டுக் குழந்தையைத் தன்  கைகளால் அன்புடன் தடவிக் கொடுத்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *