தொடுதிரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 17, 2023
பார்வையிட்டோர்: 2,736 
 
 

ஒப்பந்தக்காரர் முகாமில் இருந்த சிறிய பெட்டிவீடுகளின் அறையின் மேல்கூரை தகரத்தில் கற்களை வாரி இறைப்பதுபோல சத்தத்தோடு பனிக்கட்டி மழை பெய்தது.

குணசேகரன் பால் கலக்காத, புதினா இலைகள் கலந்த தேநீரை சுவைத்தப்படியே சமையல் அறையில் இருந்து தனது அறைக்கு வந்தான்.

கண்ணாடி ஜன்னல் திரைச்சீலையை விலக்கி வாசலைப் பார்த்தான். குண்டுமல்லி பூக்கள் உதிர்வதுபோல சிமெண்ட் களத்தில் பனிக்கட்டி மழை. ஆக்ரோஷமும் வன்மமும் கலந்த வேகம். அறைந்து வீழ்த்திவிடும் வெறி. வெளியில் தலைக்காட்டினால் தலை சிதறிவிடும். சில பனிக்கட்டிகள் கண்ணாடி ஜன்னலில் மோதி தெறித்தபோது கண்ணாடி உடைந்து விழுந்துவிடும் பதற்றம்.

தேநீர் கோப்பையை மேசைமேல் வைத்து, நாற்காலியில் உட்கார்ந்தான். புளியம்பூ தேன்போன்ற வண்ணம் மின்னும் தேநீரில் இருந்து எழுந்த ஆவி புதினா நறுமணத்துடன் கோப்பையினுள் நடனமாடியது.

இது தும்பை இலைபோல இருக்கும் புதினா வகை. பாடம் செய்த அந்த புதினா நறுக்குகளை, தேநீரில் தூவி, மிகாத இனிப்பு கலந்து கலக்கி சுவைக்கும்போது பாதம்முதல் உச்சம்தலைவரை சுவையரும்புகள் மலர்ந்து உடம்பே நாவென மாறிவிடும். அதுவும் குளிர்காலத்தில் தம்மீஸ் குப்பூசை, டாலும், ப்பூலும் கலந்து தொட்டுசாப்பிட்டுவிட்டு அருந்தினால் அப்ப அது ராஜபானம். ஒவ்வொரு உறுஞ்சும், சுகம். பரமசுகம். இந்த பனிக்கட்டி மழை நேரத்தில் இந்த தேநீர் தேவசுகமாக இருந்தது.

மேசைமேல் இருந்த அவனுடைய சாம்சங் கைபேசி தொடுதிரை இசையுடன் மின்னியது. வாயில் இருந்த தேநீரை விழுங்கிவிட்டு குனிந்து கைப்பேசி திரையைப் பார்த்தான். தொண்டைக்குள் இளம்சூடு தேனீர் இறங்கும் மகிழ்ச்சி. கைப்பேசி திரையில் இந்திய நாட்டிலிருந்து அழைக்கும் புதிய எண்கள்.

சற்றுமுன் தெளித்த ஏர் பிரஷ்னரால் அறை முழுவதும் ரோஜா மணம். இருமணம் நுகரும் நாசியை சுட்டுவிரலால் உரசிக்கொண்டான்.

காலையில் எழுந்ததுமே அம்மாவின் நினைவு. அம்மாவின் நினைவு எழுந்ததுமே அம்மாவின் வேர்வை மணம் நாசியில். தோசைக்கு தொட்டுச் சாப்பிட்ட சுண்டவைத்த பழைய மீன் குழம்பு மணம் அம்மா நினைவோடு எழுந்தது. சாப்பிடும்போது அவன் கழுத்தில் அரும்பும் வியர்வையைத் துடைக்கும் புடவையில் அம்மாவின் வாசம். அம்மாவிற்கு போன் செய்வதற்காக வெள்ளிக்கிழமை ஓவர் டைம் வேலையை மறுத்து அறையில் இருக்கிறான். மீனோ, கோழியோ, மட்டனோ எதை வறுத்தாலும், வேகுவதற்குள் பதம் பார்க்கிறேன் என்று பாதியை தின்றுவிடும் ஜோஸ் இன்னும் எழுந்திருக்கவில்லை. மலைப்பாம்பு மூச்சுவிடுவதுபோல குறட்டை விட்டுக்கொண்டு போர்வைக்குள் மல்லாந்து கிடந்தான். பனிக்கட்டி மழை கனவில் பொழியும் ரசிப்பு முகத்தில். நைட் குடித்த தண்ணீர் பாட்டில் கள்ளச்சாராய மயக்கம்.

“யார் அழைப்பது? அழைப்பை ஏற்கலாமா? துண்டிக்கலாமா?“ என்று நினைத்தவன். ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டு இருந்த செய்தியைச் சத்தமில்லாத காட்சியில் ஓடவிட்டான். தொலைக்காட்சியில் சைனாவின் கொரனோ பாதிப்பு காட்சிகள். பாம்பு, வௌவால், கரப்பான்பூச்சி திங்கிற பயலுவோ. சிரித்துக்கொண்டான்.

“வருடத்திற்கு ஒரு புதுப்புது வியாதி“ என்று வெறுப்புடன் மனதிற்குள் முனகிக்கொண்டு கைப்பேசியை எடுத்தான். காலதாமதத்தால் கைப்பேசி அழைப்பு தவறவிட்ட அழைப்பானது.

சௌதி அரேபியாவில் வெள்ளிக்கிழமை வாரவிடுமுறை. அறை நண்பர்கள் இருவர் ஓவர் டைம் வேலை பார்க்கபோய் இருக்கிறார்கள். பனிக்கட்டி மழையில் என்ன வேலை இன்று நடக்கும்? சிலநேரம் அங்கு மழை பெய்யாமலும் இருக்கும். எப்ப மழை வரும், எப்ப நிற்கும் என்று சொல்வதற்கு இல்லை. காலையில் எழுந்தபோது வானம் நன்றாகத்தான் இருந்தது. எதிர்பாராத மழை. ஆனால் அதிசயமான மழை.

ஊரில் இருந்து சௌதிக்கு வந்து ஒன்பது வருடம் ஓடிவிட்டது. இந்த ஒன்பது வருடத்தில் ஓவர் டைம் பார்க்காமல் இருப்பது இந்த வெள்ளிக்கிழமைதான். அந்த நினைப்பே ஒரு சரித்திர நிகழ்வுபோல அவன் முகத்தை வெளிச்சமாக்கியது. “சிறைவாழ்வு“ என்று முணுமுணுத்தான். தலையை மெல்ல உதறிக்கொண்டான். இறுக்கம்கூடி உடம்பு பிசுபிசுப்பதுபோல இருந்தது. அறையில் குளிர்ச்சி பத்தவில்லையோ என்று ஏசியைப் பார்த்தான். முழு குளிர் என்ற நிலையில் அது ஓடிக்கொண்டு இருந்தது. மனப் புழுக்கம். “பனிக்கட்டி மழை பொழியும்போது எதற்கு ஏசி?“ என்று நிறுத்தினான்.

“அம்மாவைக் கூப்பிடுவோம். அழைத்தது யாருன்னு அப்பறம் பார்த்துக்கொள்ளலாம்“ என்று கைப்பேசியை எடுத்து சுட்டுவிரலால் தொட்டு உயிர்ப்பிக்கப்போனான். திரையை தொடுவதற்குள் மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு. பச்சை வட்டத்தை தொட்டு அழைப்பை ஏற்றுக்கொண்டான்.

அவன் அம்மா பார்வதியின் முகம் கைப்பேசியின் திரையில் வெளிப்பட்டது. அம்மா அவன் உள்ளங்கையில் ஒளிர்ந்தாள். கைக்குள் வைத்து பொதிந்துக்கொள்ளலாம்போல் உள்ளம் துள்ளியது. இடது கையால் நெற்றியில் விழுந்த முடியை கோதிக்கொண்டான். ஆனந்தம். அவசரம் அவசரமாக படுக்கையின்மேல் கிடந்த ஹெட்போன் ஒயரை எடுத்து போனில் செருகி “அம்மா! அம்மா” என்றான் பரவசமாக.

“குணா!“ என்று அம்மா பார்வதி அவன் உள்ளங்கையில் ஒளிர்ந்து கண்ணீர் சிந்தினாள். உள்ளங்கையில் அவள் கண்ணீர் நிரம்பி தேங்குவதுபோல குளிர்ந்து கனத்து நடுங்கியது. பார்வதியின் முகத்தில் மகிழ்ச்சியும், வேதனையும். முகம் விரிந்தும் சுருங்கியும், அவனின் கை நடுக்கத்தால் திரையில் ஆடியது.

“அம்மா! அம்மா! என்னம்மா!“ என்று குணா பதறினான். நெஞ்சு படப்படத்தது. கால்கள் நடுங்கின. தலையில் பாரம் ஏறி கழுத்து வளைவதுபோல் கனத்தது. நாற்காலில் உட்கார்ந்து இருந்தவன் உட்கார முடியாமல் தவித்து எழுந்துவிட்டான். கைலி காலில் மிதிப்பட்டு தடுக்கியது.

“நல்லா இருக்கியா குணா, நான் நல்லா இருக்கேன். பதறாதே“ என்று பார்வதி கண்ணீரோடு சிரித்தாள்.

தடுக்கிய கால் விழுவதற்குள் சுதாரித்து மேசையைப் பற்றிக்கொண்டு இயல்பானான். மனம் கனமிழந்து மகிழ்சியில் விரிந்தது. அவனும் சிரித்தப்படி நாற்காலியில் உட்கார்ந்துக்கொண்டான். சிரிப்பு உதட்டில் இருக்கும்போதும், அவன் விழி இமையில் கண்ணீர்த் துளிகள். மனம் முழுவதும் மகிழ்ச்சியின் சாரல்.

பனிக்கட்டி மழை ஓய்ந்தது. அறைக்கு வெளியே கற்கண்டை வாரித் தெளித்ததுபோல கணுக்கால் மறையும் அளவு பனிக்கட்டிகள் கரையாமல் கிடந்தன.

வெள்ளைப் புடவை முந்தானையால் கண்ணீரை துடைத்துக்கொண்ட பார்வதி “அழாதே குணா“ என்றாள். வெள்ளையாகிவிட்ட தலைமுடி அருகில் இருந்த மாமரத்தின் காற்றில் மெல்ல அசைந்தது. மாமரத்தில் காய்கள் குலுங்கின. மரக்கிளையில் இரண்டு அணில்கள் ஒன்றை ஒன்று துரத்தும் காட்சி.

குணா சௌதி வந்தபின்பு வைத்த மரம். அதை தொட்டுத் தடவவேண்டும்போல் மன ஏக்கம். . “மா மரத்தை, வேப்ப மரத்தை, அணிலைப் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சி“ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். பெருமூச்சு வெளிப்பட்டது. “இங்கு பெண்களைப் பார்ப்பதுகூட அபூர்வம்தானே. தொலைக்காட்சியில் பார்ப்பதுதான். மருத்துவமனைக்குச் செல்லும்போது நர்சுகளைப் பார்க்கலாம். நர்சுகள் பெண்களின் வரிசையில் வருவதில்லை. நர்சுகள் அம்மா அக்கா வரிசையில் அல்லது அதற்கும்மேல் சென்று நின்றுவிடுகிறார்கள்.

பாலை மணல் சூட்டில் கால் உறைக்குள் வியர்த்து வியர்த்து குணாவின் குதிகாலுக்குமேல் கொப்பளம்வந்து அது காயமாகி, காலை நீட்டிப் படுத்துத் தூங்கவிடாமல் செய்தது. நூறு குண்டூசிகளை ஒரே நேரத்தில் குதிகாலில் ஏற்றும் வலி.

அவன் அழவில்லை. ஆனால் வலியின் கொடுமையில் கண்ணீர் இரண்டு கன்னத்திலும் தானாக வழிந்துக்கொண்டே இருந்தது.

மருத்துவமனையில் அவன் காயத்திற்கு மருந்துப்போட்டுத் துடைத்த பிலிப்பைன்ஸ் நர்ஸ் காட்டிய அன்பு அவன் கண்டிராத தேவலோக அன்பு. அவள் குனிந்து அவன் காயங்களைத் துடைக்கும்போது வலியில் துடித்து துள்ளினான். அவன் தொடை அவள் குமிழ்முலையில் மோதியது மனதில் மென்மையின் ஸ்பரிசம், புத்தியில் அதிர்ச்சி. அவன் வெட்கிக் கலங்கி அவள் விழிபார்த்துத் தவித்து முகம் வெளுத்தபோது “சாரி பிரதர். ரிலாக்ஸ் ரிலாக்ஸ்“ என்று காலை நீட்டிவைத்து காயத்தை துடைத்தாள். அவன் “அம்மா“ என்று உள்ளுக்குள் உடைந்தான். தான் ஆண் என்பதையே மறந்து குழந்தையாகிப் போனான். “நோயில் அடுத்தவரின் தொடுதல் தெய்வத்தின் தீண்டல்“ என்று நினைத்துக்கொண்டான்.

குணா கையினுள் இருக்கும் அம்மாவைப் பார்த்தான். பார்வதி மகனைப் பார்த்த மகிழ்ச்சியில் என்ன பேசுவது என்று தெரியாமல் வியர்த்தாள். உதடுகள் இழுப்பட்டு நீண்டு துடித்தன, கன்றை நக்க நாவு நீட்டித் துடிக்கும் தாய்ப் பசுவின் தவிப்பு.

பக்கத்துவீட்டு ரேவதி அண்ணன் துபாயில் இருந்து வாங்கிவந்த தொடுதிரை கைப்பேசியில் இருந்துதான் பார்வதி பேசுகிறாள்.

“ரேவதிதான் உன்கூட வீடியோவில் பேசச்சொல்லி நம்பரைப் போட்டுக் கொடுத்தாள்“ என்று அம்மா கையை திருப்ப, ரேவதி பச்சை வண்ண சுடிதாரில் சிரித்தாள். தலைகீழ் “ப“போன்ற நெற்றியில் சந்தனம். சுடிதாருக்கு இணையாக சிகப்பு ஸ்டிக்கர்.

“ஹலோ குணா!“ என்று வலது கையை விரித்து வலதுப்பக்க தெத்துப்பல் தெரிய சிரித்தாள். தெத்துப்பல்லும் சதைமிகுந்த குழிவிழும் கன்னமும் அழகில் அழகை கலந்தது. ம.செவின் சிவகாமி ஓவியம். பின்னால் கிடந்த இரட்டைச் சடையை முன்னால் எடுத்து விட்டுக்கொண்டாள். சடை நெஞ்சைத் தொட்ட இடத்தில் கண்கள் குத்த, விழிகளைத் திருப்பிக்கொண்டான்.

“ஹலோ“ என்றான் அவள் கண்களை நோக்காமல். கண்கள் மின்னும் ஒளிப்பூக்கள்.

“எப்ப நாட்டுக்கு வருவ. ஒன்பது வருஷம் கல்ஃபில் சம்பாதித்தும் போதலையா?“ என்றாள். பாவாடை சட்டையில் பார்த்த குட்டிப் பெண், முழுக் குமரியாய் உடல் பூரித்து, மைதா மாவில் மஞ்சள் பொடி தூவிச் செய்த பொம்மைபோல் இருந்தாள். எம்.எஸ்.சி. பாட்டனி படிக்கிறாள். அந்த சிரிப்பும், கன்னக்குழியும் மீண்டும் நெஞ்சில் தோன்றிப் பார் என்றது. அவளைப் பார்க்க வேண்டும்போல் எழுந்த கண்களை தாழ்த்திக்கொண்டான்.

“மார்ச் மாதம் வந்துடுவேன்,” என்ற குணாவின் தொண்டை உலர்ந்தது. காலில் மிதிபட்டுக் கிடந்த கைலியை இழுத்து தொடையில் ஏற்றிக்கொண்டான். உடம்பை ஒட்டிய டிசர்ட்டை தாண்டி தன் நெஞ்சை அவள் பார்ப்பதுபோல் உணர்ந்து, அவள் கண்களைச் சந்திப்பதை தவிர்த்து அம்மாவைத் தேடினான்.

“அத்தையிடம் பேசு. உடம்பைப் பார்த்துக்க, நல்லா சாப்பிடு” என்றவள் அவன் கையினுள் ஆழ மறைந்து போனாள். ஒவியத்தை எடுத்த பின்னும் அங்கு ஒவியம் இருக்கும் மயக்கு. அவன் அம்மாவை அவள் அத்தை என்றபோது நெஞ்சில் சுட்டுவிரலால் தட்டியதுபோனற சிலிர்ப்பு. அவள் கால் கொலுசின் விலகிச்செல்லும் இசையைக் கேட்டான். நெஞ்சு ஏறி இறங்கியது.

“அப்பா குணா! யேன் ராசா இளைச்சிட்ட” என்று அழப்போன பார்வதி. மகன் வருத்தப்படுவான் என்று நினைத்க்ச் சிரித்தாள். முன் பக்க மேல்பல் இல்லாத ஈறு தெரிந்ததில், அவள் முகம் கிழிந்துவிட்டதுபோல் தோன்றியது. திக்கென்று மனம் வலித்து கண்கள் கலங்கியதைக் காட்டிக்கொள்ளாமல் “நல்லா இருக்கேம்மா. நீ சாப்பிடுறியா, யேன் இப்படி கறுத்துபோயிட்ட?“ என்றான் முகத்தை திருப்பியபடி. கண்ணீர் அவன் மடியில் விழுந்தது.

அந்த கேள்வியைக் கேட்டு இருக்கக்கூடாதோ என்று கேட்ட பிறகுதான் நினைத்தான்.

அப்பா, அம்மா, அவன், மூன்று அக்கா, இரண்டு தங்கைகள், உடன் குலதெய்வம் கோயிலுக்கு போனபோது பார்த்த அம்மாவின் முகமும், நிறமும் அழகும் சொல்லுக்குள் கொண்டு வரைய முடியவில்லை. உள்ளுக்குள்ளேயே பூத்துக் கிடக்கு, அனுபவிக்கணும்.

நூறாண்டு நின்று செழித்து படர்ந்த வேம்புதான் சாமி. கிழக்கே உதித்து மேலேறும் சித்திரை மாத முழுநிலா, வானம் குழந்தை முகம்போலத் தெளிந்து ஒளிர்ந்தது, செவ்வந்திப் பூக்கள் சிரித்திருக்கும் வயல், குல தெய்வம் வேம்புக்கு முன்னால் சக்கரைப் பொங்கல், வெற்றிலை பாக்கு, பூ பழம், பொறிகடலை படையல், மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றிவைக்கும் அம்மா, ஆற்று நீரில் தெரியும் மணல்போன்ற அம்மாவின் வண்ணம். இலைவழி வழியும் நிலவு அம்மாவின்மேல் பொன்பொழியும் கணம். இடுப்பு வேட்டியில் இறுக்கிக்கட்டிய துண்டோடு, திறந்த மார்போடு, கற்பூரதீபம் ஏற்ற பனை மரம்போல் நிற்கும் அப்பா. அம்மாவின் தோளை அப்பா தொட்டபோது, புன்னைகையோடு திரும்பிய அம்மா முகத்தில் தோன்றியது அழகா? தெய்வாம்சமா? அது இதயத்தில் மட்டுமே இருக்கும் சிற்பம். அந்த சிற்ப முகத்தை காலம் அரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த சிற்பமுகம் அழியாது, ஆனால் அம்மாவின் நிஜமுகம் அரிக்கப்பட்டு உதிர்ந்துக்கொண்டே இருக்கிறது. அவனும் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறான். எப்படித் தடுக்க? அப்பாவின் இருப்பு அல்லவா அதைத் தடுக்கமுடியும். கரை உடைந்த பின்பு நீர் எப்படி நதியில் நிற்கும்?

அவன் அப்பா காப்புக்காரர் வீட்டில் ஓட்டுனராக வேலைப்பார்த்தார். அவர் ஓட்டும் வண்டியிலேயே அவரைக் கொண்டுவந்து, நான்கு பேரால் தூக்கிவரப்பட்ட நாளில் இருந்து அம்மாவின் முகம் அரிக்கப்படுகிறது. விவரம் தெரிந்த மூன்று அக்காக்கள், விவரம் தெரியாத இரண்டு தங்கைகள். அம்மா எத்தனை இரவுகள் சாப்பிடாமல் கிடந்தாளோ? சௌதி அரேபியா வந்து சொந்தமாக சமைத்து தின்னும்போதுதான் பெற்றவள் பசி தெரிகின்றது. பேரிச்சை பழம் பழுக்கும் காலத்தில் கூட்டாக சமைக்கும் சமையல் அறையில் நிற்பது தண்டனை. விமானம் ஏறிவந்து காசுகொடுத்து வாங்கிய நரகத்தண்டனை.

அப்பா இறந்து முப்பது முடியும்வரை, ஊரு உறவு சுற்றம் நட்பு என்று எல்லா கைகளும் கூடி தாங்கும் வாழ்க்கைதான். ஊரு உறவு சுற்றம் நட்பு கண்ணில் ஒரு கேள்விகுறியை தேக்கி “எப்படி வாழ்கிறார்கள்“ என்று பார்க்கும் நாள் வரும்போது, யாரும் யாருக்கும் இருப்பதில்லை. வாழ்க்கை யாருக்கும் பேசிப்பேசி பாடம் நடத்துவதில்லை. அது தூக்கி எறிகிறது. அது வலிக்கானதா? வாய்ப்புக்கானதா? எல்லாம் செயல்பாடம்தான். அதை புரிந்து படிப்பவர்கள் வெல்கிறார்கள். புரியாதவர்கள் மீண்டும் மீண்டும் அதே வகுப்பில் வலியோடு படிக்கிறார்கள். வலி என்பது இயலாமையின் வடிவம். உயிர்போகும் வலியிருந்தாலும் யானை கண்ணீர்விடுவதில்லை.

அப்பா இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே சென்று அறியாத அம்மா எப்படி வெளியே சென்று இருப்பாள்? அன்று அவள் மனம் பட்டப்பாடு என்னவாக இருக்கும்?. அம்மா களை பிடுங்கி. நாற்று நட்டு, சித்தாள் வேலைக்குப் போய் ஆறு வயிற்றை நிறப்பத் தன் ஒரு வயிற்றைக் காயவைத்தாள் என்பது தெரியும் வயதில்லை அவனுக்கு.

வேலைத்தளத்தில் இருந்து ஒரு நாள் பார்வதி மதியத்திற்கே வீட்டிற்கு வந்தாள். முன்பல் உடைந்து மேல் உதடு கிழிந்து முகம் வீங்கி புடவையெங்கும் காய்ந்த இரத்தம். “மாடிக்கு கல்லு தூக்கிக்கிட்டுப் போகும்போது கால் தடுக்கி விழுந்துட்டேன்“என்றாள் பிள்ளைகளிடம். அம்மா சொன்னால் நம்பிதானே ஆகனும். முகம் இறுகிக் கல்போல் இருந்தது, கண்கள் நெருப்பு கங்கு. சுரம் வந்ததுபோல் உடம்பு நடுங்கிக்கொண்டு இருந்தது. அம்மாவைப் பார்த்ததும் குணா கால்சட்டையில் சிறுநீர் கழித்துவிட்டான். சின்னப் பாப்பா அலறிக்கொண்டு அம்மாவிடம் ஒரு வாரம் போகவே இல்லை.

பார்வதியுடன் சித்தாள் வேலை பார்க்கும் விசாலம் வந்து பார்வதிக்கு ஆறுதல் சொன்னாள். அவள் வரும்போதெல்லாம் கஞ்சி காச்ச அரிசி வாங்கிவந்து கொடுப்பாள். குழந்தைகள் “பெரிம்மா பெரிம்மா“ என்று அவள் கால்களைக் கட்டிக்கொண்டார்கள்.

“மேஸ்திரி மூஞ்ச உடைக்காம, உன் பல்லையா உடைச்சிப்ப, சாக்கடை திங்கிற பன்னி, சம்பா சோறு திங்க அலையுது, நீ சிரிச்சா, ஹீரோயினு மாதிரி சோக்கா இருக்குன்னு சொன்னா? அதுக்காக உன் பல்லை உடைச்சிப்பியா?“

“ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல அக்கா, அவசரத்துக்கு ஒதுங்குற இடத்துக்கெல்லாம் வந்து“ என்று பார்வதி சொல்லி முடிப்பதற்குள், நெஞ்சு அடைக்க, விம்மி விசாலத்தின் மடியில் விழுந்து குலுங்கினாள்.

“சரி சரி அழாத, காயம். வினை வச்சிடப் போவுது“ என்று பார்வதியின் முதுகை தடவிவிட்டு, “வயித்த கழுவவே ஒன்னுமில்ல, அதுல நோய் வந்து படுத்துட்டா என்ன பண்ணுவ, ஏழைக்கு உடம்புதான் மொதலு, அத எதுக்காகவும் தொலைச்சிடப்புடாது. நீ ஒருத்தி மட்டும் இல்ல, போனது போகட்டுமுன்னு சாக, நீ ஆறுகுலை தள்ளிய வாழ. நீ நிக்கனும், வாழனும், தரும ஆஸ்பத்திரிக்குப் போயி மருந்து வாங்கிப்போட்டு காயத்த ஆத்திகிட்டு வேலைக்கு வா“ என்று விசாலம் சொன்னதும், பார்வதி எழுந்து கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள். பார்வை மாறியிருந்தது. குணா பார்த்தான். அது வேறு ஒரு முகம் கொண்ட அம்மா. “ஆறுகுலை தள்ளிய வாழ“ குணா வாயுக்குள் சொல்லிப் பார்த்தான்.

ஒரு மாதம் கழித்துக் காயம் ஆறியதும் பார்வதி வேலைக்குப் போனாள். கல்வாங்கும் சாக்கில் கையைப் பிடித்த மேஸ்திரியை, அவன் கை கரண்டியைப் பிடிங்கிச் சங்கில் வைத்து கண்கள் தெறிக்க முறைத்து “அறுத்துடுவேன்“ என்றாள். அவன் கண்கள் நிலைகுத்தி நிற்க, முகம் வெளிற, நெஞ்சு வேர்த்துவடிய, கைலிக்குள் தொடைகள் ஆடியது அவனுக்கு. கையெடுத்து கும்பிட்டபோதுதான் கழுத்தில் இருந்து கரண்டியை எடுத்தாள். அன்று அவன் வேலையை விட்டுக் கண்ணீர் சொட்டும் கண்ணோடு இறங்கிப் போனான். தழல் பற்றி எரியும் மரத்தின் அடியில் பொசுங்கி விழும் புல்லின் வட்டத் தடம்போல பார்வதி நிற்கும் இடத்தில் ஆண்கள் தள்ளி நின்றார்கள். அவளின் ஓயா உழைப்பு பற்றியெரியும் நெருப்பெனச் செய்தது அவளை. அவள் தாண்டிப்போகும் இடத்தில் அனல்காற்று வீசுவதை அறிந்தார்கள் ஆண்கள்.

பார்வதியின் பெரிய மகள், நடுமகள், சின்னமகள் என்று வளரவளர குடும்பத்தின் சாப்பாட்டு வறுமை குறைந்துபோனது. குணாவும் ஐடிஐ எலக்ட்ரிகல் படித்து, சௌதி அரேபியாவுக்கு வந்து ஒவ்வொரு அக்கா தங்கையாகத் திருமணம் செய்து கரையேற்றினான்.

சௌதி பாலைவனத்தில் பணமாக கிடக்கிறது அள்ளி வந்துவிடலாம் என்று நினைத்துதான் அவனும் வந்தான். வெளிநாடு சென்று வருகின்றவர்கள் எல்லாம் மாப்பிள்ளைபோல முண்டா பனியனும், மைனர் செயினும், மோதிரமும் போட்டு இருப்பதைப் பார்த்து நம்பியது அது.

உழைக்காதவன் கைக்குப் பணம் வருவதில்லை. எல்லா நாட்டிலும் மண் மண்ணுதான். தண்ணி தண்ணிதான். உழைப்பவனுக்குத்தான் மண்ணும் பொன்னு.

நேற்று வீட்டில் இருந்து கிளம்பியதுபோல இருக்கிறது. அம்மாவின் கண்ணீர் இன்னும் வலது தோள்பட்டை சட்டையில் ஈரம் காயவில்லை. சென்னை விமானநிலையத்தில் விட்டுவந்த உறவுகள் முகம் இன்னும் அங்குதான் நிற்கிறது. ஒன்பது வருடம் ஓடிவிட்டது.

முன்வழுக்கை விழுந்துவிட்டது. தண்ணீர் பிரச்சனையோ? சௌதி வெயில் பிரச்சனையோ தெரியவில்லை. பார்வதி மகனைப் பார்த்தே தீரவேண்டும் என்று அழுது அடம் பிடிக்கிறாள். இப்பொழுதெல்லாம் “சாவதற்குள் உன்னைப் பார்க்கவேண்டும்“ என்ற புலம்பல்.

“நாளைக்கு வாழ்வு வந்துவிடும், நாளைக்கு வாழ்வு வந்துவிடும்“ என்று நம்பும் மனிதன், கொஞ்சம் நரையும் மூப்பும் வந்துவிட்டால் நாளைக்கு சாவு வந்துவிடும்“ என்று எப்படி பயப்படுகிறான்?. நம்பிக்கைகளுக்கு என்னதான் பொருள்? இவை எல்லாம் வெறும் சொற்கள் அன்றி வேறு எந்த அர்த்தமும் உள்ளது இல்லையோ?“ இப்பொழுது எல்லாம் தனிமையில் இருக்கும்போதும், தூக்கம்வராத இரவுகளிலும் குணா இப்படிதான் எண்ணிக்கொள்கிறான். எண்ணுவதுகூட இல்லை தானாகவே மனதில் இவை எல்லாம் வந்து அலைபோல எழுந்து ஆடுகின்றன. மனப்பயத்தின் வெளிப்பாடோ? உறவுகளை பிரிந்துகிடப்பதன் தனிமையின் கோர தண்டவமோ?

குணாவின் கையுக்குள் இருந்த பார்வதி “குணா, சின்னவள் சுமதி குழந்தை உண்டாகி இருக்காள், அவளுக்கு நீ வந்த பிறகுதான் சீமந்தம் செய்யனும். சீக்கரம் வந்துடுப்பா“ என்றாள்.

அவனது அக்காக்கள் திருமணம் வெறும் கடித எழுத்துக்களாக மனதில் உள்ளது. எத்தனை முறை அந்தக் கடிதத்தையும், திருமணப் பத்திரிக்கையும் பார்த்து இருப்பான் என்பது பாலைவன மணல்தான் அறியும். பாலைமணலும் பொசுங்கிவிடும் சூடுகொண்ட கண்ணீர் கொட்டிய நாள்கள் அவை. இரண்டு தங்கைள் திருமணம் வெறும் தொலைபேசி சொற்களாக உள்ளது. பழகப் பழகத் துக்கம்கூட சிரிப்பாகத்தான் தெரிகிறது. அக்காக்கள் கல்யாணத்தைப் பார்க்க முடியவில்லையே என்று அழுதவன், தங்கைகள் திருமணம் நல்லா நடந்து அவர்கள் நன்றாக இருந்தால்போதும் என்ற வேண்டுதலாக மாறியது. மனித மனம் பழகிய துன்பங்களைப் பெரிதாக நினைத்துப் பயப்படுவது இல்லை. மனிதனை பயமுறுத்தவே துன்பங்கள் புதிது புதிதாக வருகின்றதோ? அல்லது புதிய புதிய துன்பங்களை உள்வாங்க முடியாமல் மனம் பயப்படுகின்றதோ?

சங்கத் தழிழச்சி நாட்டைக் காக்கப் போருக்கு முதலில் தந்தையை அனுப்பி இழக்கிறாள், பின்பு சகோதரனை, பின்பு மணாளனை, இறுதியில் பால்மணம் மாறாத தனது மைந்தனைப் போருக்கு அனுப்பினாளாம். தனது மைந்தனை அனுப்பியபோது அழுதிருப்பாளா?

“குணா, சின்னவள் சுமதி குழந்தை உண்டாகி இருக்காள், அவளுக்கு நீ வந்த பிறகுதான் வளைகாப்பு செய்யனும். சீக்கரம் வந்துடுப்பா“ என்றாள் பார்வதி மீண்டும்.

“சரிம்மா“

“சின்னப் பாப்பா, சீமந்தத்தையாவது கண்குளிரக் காண்பேனா?. அவள் சீமந்தத்திலாவது ஒருவேளை நல்லசோறு திம்பேனா?“ குணாவிற்கு கேவி அழவேண்டும்போல் இருந்தது. வாழ்க்கை இவ்வளவுதானா? வெறும் எழுத்தும் சொல்லும்தானா வாழ்க்கை?

சின்ன வயதில் நண்பர்களோடு ஊரில் நடக்கும் கல்யாணத்தில் முன்னாடியே போய் உட்கார்ந்துவிடுவான். குழந்தைகளுக்கு என்றே தனியாக ஒரு பந்தி விரிப்பார்கள் அவர்கள் ஊரில். இனிப்பு, பொறியல், சாதம், சாம்பார், ரசம், மோர், வடை, பாயசம் என்று நிறைந்து இருக்கும் வாழையிலையைப் பார்க்கும்போதே வயிறு நிரம்பிவிடும். அக்கா தங்கைகள் திருமண விருந்தில் சாப்பிடாத ஒருநாள் வரும் என்று நினைத்திருப்பானா?

ஒவ்வொருத்தர் திருமணநாள் அன்றும் பாலை வெயிலில் புளித்து நுரை தள்ளிய குழம்பை, பாலித்தீன் பேப்பர் பையில் கட்டிய உணவில் ஊற்றும்போது வீசும் பாலைமணல் காற்று.

“மார்ச் மாதம் வந்துடுறேன் அம்மா“ என்றவன் “கொஞ்சம் லைன்லேயே இரு வரேன்“ என்று கையில் இருந்த அம்மாவை இறக்கி மேசைமீது வைத்து, தனது அறையின் மேற்கூரையைப் பார்க்க விட்டான். கட்டிலுக்கு அடியில் இருந்து சூட்கேஸை அவசர அவசரமாகத் திறந்து தங்கச் செயின் ஒன்றை எடுத்துக் கழுத்தில் போட்டு, போனை தூக்கிப்பிடித்து “அம்மாவுக்கு“ என்றான் நெஞ்சில் கிடந்த தங்கச் சங்கிலியை தூக்கிக்காட்டி.

பார்வதி மெல்ல சிரித்து “எனக்கு எதுக்கு குணா“ என்றாள். பார்வதியின் கண்கள் குழந்தைபோல சங்கிலியை ஆராய்ந்து கண்டுகொண்டு பிரகாசித்தது. குணாவிற்கு ஆனந்தம்.

“எத்தனை பவுனு“ குரல் கம்மி மெதுவாக ஒலித்தது. ஆர்வமும் ஆசையும் வெளிப்பட்டுவிடக்கூடாது என்ற பயம்.

“மூணு பவுனும்மா“ என்று நெஞ்சுக்குழியில் ஆடிய சங்கிலியின் நுனியை உள்ளங்கையில் தாங்கி, தூக்கித் தூக்கிப்போட்டு விளையாடினான். மனம் பறந்து பறந்து ஆடியது.

குணாவிற்கு அது ஒரு லட்சியம். அம்மாவிற்குத் தங்கச் செயின் வாங்கிப் போடவேண்டும் என்ற லட்சியம். ஏழைகளின் லட்சியம் என்பதே இழந்ததை திரும்பப் பெறுவதுதான் அல்லது அன்றாடங்களின் எளியவைகளை அடைவது. அவைகள் தொடமுடியாத தூரத்தில் போய் நிற்கும்போது அதைபோய் இழுத்துவருவது. இழுத்துவரும்போது அவைகள் லட்சியங்களாக இருக்குமா? நாள்பட்ட செய்தித்தாள்கள் குப்பையாகத் தெரிவதுபோல தெரியலாம். இது அம்மா செயின் போட்டுக்கொள்கிற வயதா? ஆனாலும் அவனுக்கு அம்மாவிற்கு செயின் போட்டுப் பார்க்கவேண்டும் என்ற ஆசை.

பார்வதி கல்யாணம் செய்து வந்தபோது தோடு சிமிக்கி மூக்குத்தி இரண்டு பவுனில் செயினும் போட்டு வந்தாள். காது தோடும், சின்ன மூக்குத்தியும் மட்டும் போட்டுக்கொண்டு, வெறும் கழுத்தோடு வாக்கப்பட்டு வந்தவள் பார்வதியின் மூத்தார் பொண்சாதி வடிவு. பார்வதி முன்னாடி பூரிப்பும், சிரிப்பும்தான் அவளுக்கு. கனிக்குள் புழுபோல குடைகின்றது பொறாமை. பார்வதி கல்யாணம் முடிந்து ஆத்தா வீட்டுக்கு மூணுவது வழி போயிட்டுவந்த வெள்ளிக்கிழமை காலையில் தங்கச் சங்கிலி காணமல் போனது. எண்ணெய் குளியலுக்கு கழட்டி வைத்த சங்கிலி, குளித்துவிட்டு வந்து பார்த்தபோது இல்லை. உள்ளூர் சின்னாயாள் சொன்ன குறியும், பக்கத்தூர் கோடாங்கி சொன்ன குறியும் “நகை வீட்டில்தான் இருக்கிறது, கிடைக்கும்“ என்றது.

ஆள் உயர, மூங்கில் குருத்து இருக்கும் வீட்டை தோண்டிப் பார்க்காத இடமில்லை என்னும் அளவுக்கு பார்வதி புருஷன் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. கிடைக்காது என்று நினைத்தபோது நாலு விரக்கடை அளவுக்கு சங்கிலி துண்டொன்று கிடைத்தது. எலி அறுத்திருக்கும் என்ற பேச்சுகள் வீட்டில். சங்கிலி காணடித்த அன்று அழுததைவிட அந்த அறுந்த நாலுவிரல் அளவு சங்கிலி கிடைத்த அன்று பார்வதி அழுதது அதிகம். அந்த சங்கிலியை புடுங்கி குப்பையில் எறிந்த கணவன், சங்கிலியை காணடித்ததற்காக அடிக்காத புருஷன், “அழாதே“ என்று பொண்டாட்டியை அடித்து அழ வைத்தான். சங்கிலியை எடுத்து அறுத்தவர்கள் நெஞ்சில் விழுகின்ற அடிகள். அவர்கள் முன்னால் அழக்கூடாது என்ற வைராக்கியம். பொறாமை கொண்டவர்களுக்கு நெஞ்சென்று ஒன்று இருக்குமா என்ன?

பார்வதி, புருஷன் நினைப்பு வரும்போதெல்லாம் அந்த சங்கிலி காணடித்து அறுந்து கிடைத்த கதையைச்சொல்லி அழுவாள். சில நேரம் சிரிப்பாள். சங்கிலி போய்விட்டதே என்ற வருத்தமில்லை. தனது புருஷன் அன்புச் சங்கிலி அறுந்த கணத்தின் ஆதங்கம் அது. பார்வதி சொல்லிச்சொல்லி அந்த கோதுமை சங்கிலி குணாவின் கண்களில் நிலைத்து நின்றுவிட்டது.

குணா தமாம் கோல்ட் மார்க்கெட் முழுவதும் தேடியும் அந்தச் செயினைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அது முப்பத்தைந்து வருடத்திற்கு முன்பு பாலையில் புதைத்த விதையைத் தேடி அலைவதுபோல இருந்தது. அலைந்து முடிந்த பின்புதான் தெரிந்தது அதெல்லாம் கழிந்த பழமைகள் என்று. அறை நண்பனுக்குத் தெரிந்த பொற்கொல்லர் ஒருவரிடம் சொல்லி செய்யச் சொன்னான். கற்பனையில் கண்ட செயின். அதே செயின்போல இருக்குமா? தெரியவில்லை. ஆனால் பார்வதியின் கண்கள் அதை அடையாளம் கண்டுகொண்டன. குணாவிற்கு அதுபோதும்.

“’குணா! பெரியக்கா மகன் மூணாப்பு படிக்கிறான். இஞ்சினியரா படிச்சிட்டு மாமா மாதிரி நானும் சௌதிக்கு போவேங்கறான்“ என்று பார்வதி மனம் நிறைந்து சிரித்தாள்.

“சரிம்மா நல்லா படிக்கச்சொல்லு. அக்கா வீட்டுக்கு வரும்போது ஏதாவது கைச்செலவுக்குக் கொடுத்து விடு. வாயில்லாதது, எதுவும் கேட்காது“ என்றபோது குணாவின் கண்கள் ஈரமானது.

“சரிப்பா“ என்ற பார்வதி முகத்தைத் திருப்பி முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“குணா, ஒம் பெரிய மாமா அடிக்கடி வரார். பெரிய பொண்ணு காலேஜ் படிப்பை முடித்துவிட்டாள். “மாப்பிள எப்ப வருதுன்னு“ கேட்டுகிட்டே இருக்கார். நான் எதுவும் சொல்லல“ என்றாள்.

குணா மௌனத்தில் நின்றான்.

பார்வதி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெல்லிய குரலில், “ரேவதிக்கு மாப்புள பாக்குறாங்க, ரேவதிக்கு உன்ன புடுச்சிருக்கு. “எப்ப குணா வரும் அத்த“ என்று என்ன கேட்டுகிட்டே இருக்கா“ என்றாள். பார்வதி போனைத் திருப்ப தூரத்தில் ரேவதி மல்லிகைக் கொடிக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தாள். புதிதாகக் கட்டிய மாடிவீடு புதிய வண்ணத்தில் கண்களைக் கவர்ந்து, பண பலத்தையும் காட்டியது. அந்த வீட்டுக்கு ஒரே செல்ல மகள். குணாவிற்கு ரேவதி அண்ணன் வகுப்புத் தோழன்தான்.

குணா எதுவும் பேசாமல் அண்ணாந்து மேலே பார்த்து மூச்சை ஆழமாக இழுத்து மூச்சை நீண்டதாக விட்டான். நெஞ்சு ஏறி இறங்கியது. கன்னக்குழிவிழ ரேவதி மனதில் எழுந்து சிரித்தாள்.

“மாமா புதுசா கார் வாங்கியிருக்கு, நாளைக்கு வீட்டுக்கு வரேன்னு போன் பேசிச்சி. காண்ட்ராக்ட் எடுத்து பள்ளிக்கூடம் எல்லாம் கட்டுது“ என்றாள் பார்வதி.

குணா அந்த பேச்சை விரும்பாமல், “விசாலம் பெரிம்மா எப்படி இருக்கு?“ என்றான்.

“பாவம், காலமெல்லாம உழைச்சி ஓடாத் தேஞ்ச உடம்பு, முட்டிவலி நடக்க முடியாம கிடக்குது, எப்பவும் உன் ஞாபகம்தான், எம் புள்ள எப்டி இருக்கு? எம் புள்ளைய எப்ப பாப்பேனோன்னு பார்க்கறப்பல்லாம் ஒரே அழுகதான். தாயில்லாத புள்ள, அது பேத்தி வசந்திதான், பெட்ரோல் பங்குல எண்ணெய் ஊத்தி, சம்பாதிச்சு பாத்துகிறா. நானும் எப்பவாது எதாவது கொடுப்பேன். வேண்டாமுன்னு சொல்லிடும்.“

“பெரியம்மாவையும், வசந்தியையும் நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுட்டு வந்து வச்சிக்க. இனி அவள வேலைக்கு அனுப்ப வேண்டாம். நீயும் ஏன் தனியா கிடக்கிற“ என்றவன் அம்மாவின் கண்களைப் பார்க்காமல் முகத்தை திருப்பிக்கொண்டான்.

“உங்க மாமாகிட்ட என்னப்பா சொல்றது“ என்ற அம்மாவிடம். கோவமாக “அதான் சொன்னேன்ல“ என்று கத்தினான்.

“குணா“ என்றால் அம்மா அழுதுவிடுவதுபோல. “நாமல்லாம் இன்னைக்கு உசுரோட இருக்குறதுக்கு விசாலம் பெரியம்மாதான் காரணம். இன்னைக்கு காச பாத்ததும் நானுறு பேரு வருவாங்க“ என்று கத்தியவன், “பொங்கலுக்கு எனது கூட்டுக்காரன் ஊருக்கு வரான். அவன் கிட்ட சின்ன பாப்பா மாப்பிள்ளைக்கு ஒரு வாட்சும், சின்ன பாப்பாவுக்கு ஒரு டச்சு ஸ்கிரின் செல்போனும் கொடுத்துவிட்டுருக்கேன். வாங்கிக் கொடு“ என்று சிரித்தான்.

“பொருளெல்லாம் வேண்டாம் குணா! போதும்ப்பா நீ வந்துடு“ என்றாள். கண்களில் கண்ணீர் திரண்டு உதிர்ந்து நெஞ்சை நனைத்தது. .

வேலைத் தளத்தில் இருந்து சூப்பர்வைசர் அழைப்பு, கைபேசித்திரையில் அவர் பெயர் மின்னியது.. அம்மாவிடம் “நாளைக்கு பேசுறேன். அவசர வேலை“ என்று சொல்லிவிட்டு. சூப்பர்வைசர் அழைப்பை ஏற்றான். “

“அட்மின் கான்பரன்ஸ் ரூமில் பவர் கட், வண்டி அனுப்பி இருக்கேன் உடனே வா“ என்றார்.

வேலை எல்லாம் முடிந்து மாலை அறைக்கு வரும்போது சூப்பர்வைசர், “குணா, உனக்கு மார்ச் பதினேழாம் தேதி பிளைட் டிக்கெட் கன்பார்ம் ஆகியிருக்கு“ என்று ஹெட்டாபிஸ் செக்ரட்டரி முகமது ஹபீப் சொன்னார். “நீ சாமானெல்லாம் வாங்கி ஊருக்குப்போக ரெடி ஆயிக்க“ என்றார்.

டிக்கெட் ரெடி என்ற அந்த வார்த்தை குணாவிற்குள் அடிமை விலங்கு ஒடித்த சந்தோஷத்தை கொண்டுவந்து கொடுத்தது. ஒரு கணம் வானில் பறப்பதுபோல் இதமான சுகம். “அப்படி என்றால் இத்தனை ஆண்டுகளாய் சிறையில்தான் இருந்தோமா?“ என்று நினைத்தான். “இது யார் வைத்த சிறை?“ தன்னையே நொந்துகொண்டு முகம் சுளித்து, சத்தமில்லாமல் காரி எச்சிலைத் துப்பினான்.

மார்ச் பதினெட்டாம் தேதி காலை சென்னை விமான நிலையத்தில் அம்மாவைப் பார்த்துவிடலாம் என்ற ஆனந்தத்தில் இருந்தான் குணா. ஜனவரி மாதத்தில் இருந்து தினம் தினம் ஒவ்வொரு நாளாக எண்ணிக்கொண்டு இருந்தான்.

பிப்ரவரி மாதம் கொரானா தீவிரம் உலகத்தை நிலைகுலைய வைத்தது. மார்ச் மாதம் பதினாறாம் தேதி பன்னாட்டு விமானப் பயணம் தடைசெய்யப்பட்டது. குணா இன்னும் வேலைக்குப் போய்க் கொண்டுதான் இருக்கிறான்.

எலக்ட்ரிக்கல் வேலை இல்லாத நாள்களில் பாலை மணலில் சௌதியின் இரத்த நாளங்களெனக் கிடக்கும் எண்ணெய்க் குழாய்களுக்கு வண்ணம் பூசுவதற்கும், மணல் தெளிப்பு கழுவுதலுக்கும் குழி தோண்டுகின்றான்.

பேரிச்சைப்பழம் பழுக்கும் காலம். பாலைவெயில், ஈச்சம்பழம் பழுப்பதற்கு என்று ஒரு புழுக்கம் உண்டு. ராஜதுரோகம் செய்தவர்களை வைத்துக் கொளுத்தும் சுண்ணாம்புக் காளவாய் என்கின்றார்களே அதைவிடப் பேராவி அடிக்கும் மணல் வெக்கைப் புழுக்கம். துணியை நனைத்து முறுக்கும்போது தண்ணீர் வழிவதுபோல புழுக்கத்தில் வேர்த்துக் கொட்டுகிறது. வியர்வையில் நனைந்த ஆடை மணல் அனலில் உடம்பிலேயே காய்கிறது. ஆடை முழுவதும் அலை அலையாய் உப்புப்படலம். காவியத்தில் படித்த கானல்நீர் கண் பார்க்கும் இடமெல்லாம். கானல்நீர் தேடி மான்கள் அலையவில்லை. அங்காங்கே மனிதத் தலைகள்தான்.

சின்னப் பாப்பா வளைகாப்பு இன்று. குணா தனது மதியச் சாப்பாட்டுப் பொட்டல பாலிதீன் உறையைக் குழாயைத் தாங்கும் சிமெண்ட் கட்டை நிழலில் விரித்து வைத்தான்.

சற்று தூரத்தில் கொதிக்கும் குரூடாயில் பாயும் நாற்பத்தெட்டு இஞ்ச் குழாயைத் தாங்கும் மற்றொரு சிமெண்ட் கட்டை நிழலில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த நண்பர்கள் தலையை ஆட்டிச் சாப்பிடு என்றார்கள்.

அராம்கோ ஆயில் நிறுவன பாதுகாப்பு காவலர்களுக்குத் தெரியாமல் உள்ளாடையில் மறைத்து எடுத்துவந்த கைப்பேசியை எடுத்து இயக்கினான்.

நண்பனிடம் வாங்கிக்கொடுத்த தொடுதிரை சாம்சங் கைபேசியில் படம் பிடிக்கப்பட்ட சின்னப் பாப்பாவின் சீமந்த வீடியோவை உள்ளங்கையில் பார்த்தான்.

அரைப் பாவடையில் விட்டுவந்த சின்னப் பாப்பா அம்மாவாகிவிட்டாள். அம்மாவான சின்னப் பாப்பா அம்மாபோல இருந்தாள். இன்னும் நேரில் பார்க்காத மாப்பிள்ளை முகத்தில் அப்பாவான மகிழ்ச்சி. பாப்பாவின் வளையல் காப்பிற்கு ஐந்து வண்ண கலவை சாதம் சாப்பிட்டுகிறது ஊர்.

திடீர் என்று சுழற்றி வீசிய பாலைக் காற்று மணல் அள்ளிப்போட்டது அவன் சோற்றில். தவித்து சாப்பாட்டைப் பார்த்தவன் திகைத்தான். சோறு முழுவதும் மணல். . “இது என்ன புதுசா“ என்று வாய்விட்டுச் சிரித்தான். “பாப்பா நல்லபடியா குழந்தை பெத்துச் சீரும் சிறப்பா வாழணும்” என்று வேண்டியபடியே சாப்பிடத் தொடங்கினான்.

– சொல்வனம், இதழ்-232, அக்டோபர் 11, 2020

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *