தெய்வ சங்கல்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 2, 2023
பார்வையிட்டோர்: 2,334 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பம்பாய் – மதராஸ் எக்ஸ்பிரஸ் ‘கூ, குப்’ என்று ஊதி விட்டுத் தாதர் ஸ்டேஷனைவிட்டுக் கிளம்பிற்று. நீலகண்டன் அதுவரையில் அலக்ஷ்யமாக ஸ்டேஷனைப் பார்த்துக்கொண்டிருந்தவன் திரும்பி வண்டிக்குள் பார்த்தான். எதிரில் பதினெட்டு வயதுப் பெண் ஒருத்தியும், பத்து வயதுப் பையன் ஒருவனும் உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பையன் தங்களை அனுப்ப ஸ்டேஷனுக்கு வந்தவருடன் வண்டி நகர்ந்து கொஞ்ச தூரம் போறவரையில் பேசிக்கொண்டே இருந்தான்.

“மாமா! ஊருக்குப் போய்க் கடுதாசி போடுகிறேன்” என்றான் பையன்.

“கடுதாசி என்னடா? தந்தியே கொடுத்துவிடு. என்ன அம்மா, சுதா! போய்விட்டு வருகிறாயா? பத்திரமாகப் போய்விட்டு வருகிறாயா? பத்திரமாகப் போங்கள்” என்று உரக்கச் சொன்னார் வந்தவர். அந்தப் பெண் புன்னகையோடு தலையை ஆட்டி விட்டு, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய பச்சைநிறப் புடைவையும், காதில் அசைந்த லோலாக்கும், பாதியில் ரிப்பனல் கட்டப்பட்டிருந்த வளைந்த பின்னலும் அவளுடைய அழகுக்குப் பொருத்தமாக இருந்தன. முகத்தில் புத்திசாலித்தனமும் குறு குறுப்பும் காணப்பட்டன. பையனும் அவள் ஜாடையாகவே இருந்தான். கையில் வைத்திருந்த ஆங்கிலப் பத்திரிகை ஒன்றைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். சுதாவும் தன் கையில் இருந்த கதைப்புத்தகத்தைப் படிப்பதில் ஈடுபட்டிருந்தாள். அரைமணிக்கு ஒருதரம்மட்டும் கண்களை உயர்த்தி வெளியேயும், உளளேயும் பார்த்துவிட்டுத் திரும்பவும் படிக்க ஆரம்பித்துவிடுவாள். பையனுக்குப் பத்திரிகையைப் புரட்டுவதில் உள்ள ஸ்வாரஸ்யம் குறைந்துவிட்டது. சிறிது நேரம் ஜன்னலில் முகத்தை வைத்துக்கொண்டு வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு கூடையிலிருந்து பிஸ்கோத்துகளை எடுத்துத் தின்ன ஆரம்பித்தான்.

நீலகண்டன் சிறிது நேரம் அவர்கள் இருவரையும் உற்றுப் பார்த்து, “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டான். பையன் மிகவும் மரியாதையோடு, “எங்களைத்தானே கேட்கிறீர்கள், ஸார்? பட்டணத்திற்குப் போகிறோம். ஏன் ஸார் கேட்டீர்கள்?” என்று கேட்டான்.

“ஒன்றுமில்லை. வெறுமனேதான் கேட்டேன். தனியாகப் போகிறீர்களே; பெரியவர்கள் யாரும் இல்லையா?” என்றான் நீலகண்டன்.

“தனி என்ன ஸார்? வண்டியில் வேண்டிய ஜனங்கள் இருக்கிறார்களே!” என்று சாதுரியமாகப் பையன் பதில் அளித்தான்.

“ஓஹோ! அப்படியானால் சரிதான்; கெட்டிக்காரனாக இருக்கிறாயே; எந்த வகுப்பில் படிக்கிறாய்?”

“பஸ்ட் பாரம் படிக்கிறேன்.”

“பஸ்ட் பாரம் படிக்கிறவனா பத்திரிகை படிக்கிறாய்? இங்கிலீஷ் நன்றாக வந்துவிட்டதா?” என்றான் நீலகண்டன் சிரித்துக்கொண்டே.

“வராமல் என்ன? நான் கான்வென்டில் படிக்கிறேன். இங்கிலீஷ் நன்றாய் வரும்!”

“பேஷ், ரொம்பச் சமத்து” என்று நீலகண்டன் அவன் முதுகில் தட்டிக்கொடுத்தான். பையனும் மிகவும் ஸ்வாதீனமாக அவன்பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டான்.

“மறந்தே போய்விட்டேன், உன் பெயர் என்ன?”

“வேணுகோபாலன். ஆத்திலும். ஸ்கூலிலும் வேணு என்றுதான் கூப்பிடுகிறார்கள்”

“சரி,நானும் அப்படியே கூப்பிடட்டுமா?”

“ஓ! கூப்பிடுங்களேன்” என்றான் வேணு.

இதற்குள் சுதா புஸ்தகத்தைவிட்டுத் தன் விழிகளை உயர்த்தி வேணுவைப் பார்த்தாள். அந்தப் பார்வை கோபத்தையும் கண்டிப்பையும் காண்பித்தது. அவனை விழித்துப் பார்த்தபோது நீலகண்டன் பார்த்துவிடவே சட்டென்று வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள். ‘ கண்கள் தாம் எவ்வளவு பெரியவை, அந்தக் கோபப் பார்வையையாவது இன்னும் கொஞ்ச நேரம் செலுத்தக் கூடாதா?’ என்று தோன்றியது அவனுக்கு.

வேணு எழுந்து நின்றான்.

“ஏன் எழுந்துவிட்டாய்?” என்று கேட்டான் நீலகண்டன்.

“எழுந்து எங்கே போகிறது? நாளைச் சாயந்திரம் வரையில் உங்களோடுதானே வரவேண்டும்?’

“பலே கெட்டிக்காரனடா நீ; போ, போ” என்று அவன் தோளைப் பிடித்துக் குலுக்கினான் நீலகண்டன். சிரித்துக்கொண்டே அவன் அக்காபக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டு எதிர்ச் சாரியில் ஓடிய மரஞ் செடிகளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.


அன்று பௌர்ணமிக்கு முந்திய தினமாதலால் கீழ் வானத்தில் சந்திரனின் முழுவட்டம் தெரிந்தது. ஜிலு ஜிலு வென்ற காற்றும் சந்திரனின் இன்பஒளியும் ரெயில் போய்க்கொண்டிருந்த வனப்பிரதேசத்தைக் கண்ணுக்கும், கருத்திற்கும் ரம்மியமாகச் செய்தன. நீலகண்டனும் ஜன்னலின்மேல் கையை ஊன்றியவனாக வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். ரெயிலின் கிடு கிடு சப்தத்தைத் தவிர ஊசி விழுந்தால் கேட்கும்படியான மெளனம் அங்கே நிலவியிருந்தது. அளவுக்கு மீறிய இந்த மௌனத்தை நீலகண்டனால் சகிக்க முடியவில்லை.

“காற்று ரொம்ப அடிக்கிறதுபோல் இருக்கிறதே. ஜன்னல் கதவை மூடிவிடவா?” என்று சுதாவைப் பார்த்தவாறு கேட்டான். அவள் அதற்கு மறுமொழி சொல்லாமல் இருந்தாள். அவனாகவே எழுந்து ஜன்னல் கதவை மூடுவதற்கு வந்தான். அவள் புஸ்தகத்தை மூடியபடியே எழுந்து ஒதுங்கி நின்றாள். அவன் கதவை மூடிவிட்டு வேணுவின் முதுகில் தட்டி, “வேணு! தூங்குகிறாயா?” என்று கேட்டுவிட்டுத் தன் இடத்தில் போய் உட்கார்ந்தான்.

அவள் புத்தகத்தை மூடி வைத்துவிட்டுக் கூடையைத் திறந்து பழமும், பிஸ்கோத்தும் எடுத்தாள். வேணு கூடை அருகில் போய் உட்கார்ந்து கொண்டு, “மணி எட்டுக்குமேல் ஆகிறதே, சாப்பிடவில்லையா, ஸார்?” என்றான்.

“சாப்பிடத்தான் வேண்டும். நான் கொடுப்பதை நீ சாப்பிடுகிறாயா?” என்று கேட்டான் நீலகண்டன். வேணு கூடைக்குள் கையைவிட்டுப் பழங்களும், பக்ஷணமும் எடுத்து நீலகண்டன் பெட்டியின்மேல் வைத்தான்.

“அட போக்கிரி! நான் சொன்னவுடனேயே கொடுத்துவிட்டாயோ? நான் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீ கொடுத்ததைச் சாப்பிடமாட்டேன் தெரியுமா?”

இந்த வார்த்தைகள் பையனைப் பார்த்துச் சொன்னவை அல்ல. சுதா கன்னங் குழையச் சிரித்துக் கொண்டே பழங்களை உரிக்க ஆரம்பித்தாள். சாப்பாடு முடிந்ததும், தம்பிக்கும், தனக்குமாகப் படுக்கையைத் தட்டிப் போட்டுக்கொண்டு, கண்ணாடிக் கதவைத் திறந்துவைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாள். வேணு சிறிது நேரத்திற்கெல்லாம் தூங்கிவிட்டான்.


நீலகண்டன் தூங்கவேண்டுமென்று பிரம்மப் பிரயத்தனம் செய்து பார்த்தான். கண்களை இறுக மூடிக் கொண்டு பார்த்தான். புரண்டு புரண்டு படுத்தான். சுதா சிறிது நேரம் திறந்த விழிகளுடன் படுத்திருந்தாள். பிறகு அயர்ந்து தூங்கிவிட்டாள். நிலா வெளிச்சம் அவள் முகத்தில் விழுந்து அதன் எழிலை மிகுதிப்படுத்தியது. நீலகண்டன் மனத்திற்குள், ‘இந்த இரவில் எவ்வளவு நிர்ப்பயமாக இருவரும் தூங்குகிறார்கள்?’ என்று நினைத்தான். அவன் உள்ளத்தில் சிந்தனை அலைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கிளம்பி நிம்மதியைக் குலைத்தன. வலுக்கட்டாயமாகத் தூக்கத்தை வருவிக்கச் செய்த முயற்சி பயன்படவில்லை. இவ்வாறு தத்தளித்துக் கொண்டிருந்தவன் வெகு நேரம் கழித்து அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டான். கண் விழித்துப் பார்த்த போது சூரியன் உதித்து வெகு நேரம் ஆகியிருந்தது.

“என்ன, ரொம்ப நாழி தூங்கிவிட்டீர்களே? ராத்திரிக் கண் விழித்தீர்களோ?” என்று கேட்டான் வேணு. நீலகண்டனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. சமாளித்துக் கொண்டு, “வண்டியில் இருப்பது மூன்று பேர். எல்லாரும் தூங்கிவிட்டால் நல்லதா?” என்று கேட்டான்.

“ஐயோ பாவமே! எங்களுக்காகக் கண் விழித்தீர்களா? ரொம்ப தாங்ஸ். என்னை எழுப்பியிருக்கக் கூடாதா, ஸார்?” என்றான் வேணு.

“எனக்குத் துணையாக இருந்திருப்பாயாக்கும்?” என்று பிரித்துக்கொண்டே சுதாவைப் பார்த்தான். அவள் அவனைப் பார்க்கக்கூட இல்லை. தினசரிப் பத்திரிகை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தாள்.

மத்தியான்னப் பொழுது வேணுவுடன் தமாஷாகப் பேசுவதிலேயே போய்விட்டது. மாலையில் ஸென்டிரல் ஸ்டேஷனுக்கு அவர்கள் தகப்பனார் வந்திருந்தார். நீலகண்டனுக்கு, சுதா தன்னுடன் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் போவது வருத்தமாக இருந்தது. ‘இந்தப் பெரிய கண்களையும், குழி விழும் கன்னங்களையும் திரும்பவும் எப்பொழுது பார்க்கப்போகிறோம்?’ என்று நினைத்த போது துக்கம் நெஞ்சை அடைத்துக்கொண்டது.

“போய்விட்டு வருகிறீர்களா?” என்று கேட்டான்.

“ஆமாம் ஸார், எங்காத்து விலாசம் சொல்ல மறந்துவிட்டேனே. எலியட்ஸ் ரோட்டில் ‘பாலபவன’த்தில் இருக்கிறோம். அவசியம் வாருங்கள்” என்று வேணு கூப்பிட்டான். அவன் தகப்பனாரும் தம் நன்றியறிதலை ஒரு புன்னகையால் தெரியப்படுத்தினார்.

சுதா கன்னங் குழியப் புன்னகை செய்துகொண்டே காரில் போய் உட்கார்ந்துகொண்டாள்.


‘எலியட்ஸ் ரோட், பாலபவனம்’ என்ற வார்த்தைகள் அவனுக்கு மனப்பாடமாக இருந்தன. டைரியிலும் குறித்துவைத்திருந்தான்.

தினம் அதை ஒரு தடவை எடுத்துப் பார்த்துவிட்டுத் திருப்தியோடு ஜேபியில் போட்டுக்கொள்வான். ‘அந்தப் பாலபவனத்திற்கு எதற்காகப் போவது? பையன் கூப்பிட்டான் என்று போய்விட முடியுமா? போய்த்தான் பார்க்கலாமா?’ என்ற ஆக்ஷேப சமாதானங்களிலேயே பதினைந்து தினங்கள் போய்விட்டன.

சுதாவையும், வேணுவையும் ஸென்டிரல் ஸ்டேஷனில் பிரிந்து ஒரு மாதம்போல் ஆய்விட்டது. ஒரு நாள் மாலை ‘சான்தோம்’ கடற்கரையில் வேணு சொன்ன ‘பால பவன’த்தைப்பற்றியே நினைத்துக்கொண்டு ஆழ்ந்த யோசனையில் உட்கார்ந்திருந்தான் நீலகண்டன்.

“ஸார்! ஸார்!”

நீலகண்டனைச் சொப்பன லோகத்திலிருந்து கீழே யாரோ பிடித்துத் தள்ளியமாதிரி இருந்தது. அவன் பிரமை நீங்குவதற்குள் வேணு எதிரில் நின்றான்.

“என்ன, ஸார், எங்காத்துக்கு வரச் சொன்னேனே வரவே இல்லையே” என்று கேட்டான்.

வேணுவின் கைகளைப் பிடித்துத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, “வேணு, வந்துதான் ஆகவேண்டுமா?” என்று கேட்டான் நீலகண்டன்.

“ரொம்ப அழகாய் இருக்கிறது, நீங்கள் சொல்லுகிறது.வாருங்கள் போகலாம்” என்று கையைப் பிடித்து இழுத்தான் வேணு.

அவன் கால்கள் அவனை அறியாமல் காரை நோக்கி நடந்தன. காருக்குள் அழகிய பெண் ஒருத்தி உட்கார்ந்துகொண்டிருந்தாள். இவனைக் கண்டதும் சிரித்துக் கொண்டே, “உங்களைப்பற்றி ரொம்பதூரம் சொன்னான் வேணு. வருவீர்கள் என்றே எதிர்பார்த்தோம்” என்றாள் அந்தப் பெண். சுதாவைப் போலவே இருந்தாள் அவள். இரண்டொரு வயது சின்னவளாக இருக்கலாம்.

நீல கண்டன் பேசாமல் காரில் ஏறி உட்கார்ந்தான். அவள் காரை ஓட்டிக்கொண்டே, “நீங்கள் சங்கோஜப்படுவீர்கள் போல் இருக்கிறது. விலாசம் சொல்லியிருந்தால் காரையாவது அனுப்பியிருப்போமே” என்றாள்.

“ஓ! அதனால் என்ன? பரவாயில்லை” என்றான் நீலகண்டன்.

“கார் போகும்போது, வேணுதான் என்னைப்பற்றிச் சொன்னான் என்கிறாளே, சுதா என்னைப்பற்றி வாயே திறக்கவில்லைபோல் போல் இருக்கிறதே. இந்தப் பெண் யார்? அவள் தங்கையாகத்தான் இருக்கவேண்டும்” என்று எண்ணமிட்டுக்கொண்டே போனான்.


நீலகண்டன் பாலபவனத்திற்குப் போனபோது அங்கே சுதாவைக் காணவில்லை. ‘அன்று, ரெயிலிலும் நம்முடன் பேசவில்லை. வீட்டிற்கு வந்தாலும் எதிரில் வரவில்லை. என்ன அப்படிப்பட்ட கர்வம்?’ என்று எண்ணினான் நீலகண்டன். காரில் அவனுடன் வந்த பெண் தாராளமாகப் பேசினாள். பாக்கி எல்லோரும், வேணுவின் தகப்பனார் உட்பட, அவனிடம் ஏதோ கவலைபோடு பேசினார்கள். ஆனால் சுதாமட்டும் அவன் அருகிலேயே வரவில்லை. அவளைப்பற்றி நினைத்தபோது ஆத்திரமும் கோபமும் அவனுக்குப் பொத்துக்கொண்டு வந்தன.

நீலகண்டன் கடைசியாக வீட்டுக்குப் புறப்பட்ட போது வேணு அவனைக் கொண்டுவிட வாசல்வரையில் வந்தான். அவனைப் பார்த்து, “ஏன் வேணு, அன்று உன்னுடன் ரெயிலில் வந்தாளே, அவள் உனக்கு அக்கா தானே ஆக வேண்டும்?” என்று கேட்டான்.

“ஆமாம், ஏன்?”

“அவள் உங்களையெல்லாம்போல் இருக்கமாட்டாள் போல இருக்கிறதே. மனிதர்களைக் கண்டாலே பயப்படுவாள்போல் இருக்கிறதே!”

“ஐயோ! உங்களுக்குத் தெரியாதா அவளைப்பற்றி? சுதா ஊமையாயிற்றே! அதனால் தான்..” என்றான். அவன் கண்களில் நீர் நிரம்பிவிட்டது.

“ஹா! நிஜமாகவா?” என்று உரக்கக் கேட்டான் நீலகண்டன்.

“ஆமாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன். அதனால்தான் அவள் உங்கள் எதிரில்வர வெட்கப்படுகிறாள். மனிதர்களைக் கண்டால் பயம் இல்லை; வெட்கந்தான். அதுவும் படித்தவர்களைக் கண்டால் எதிரில் வரவேமாட்டாள்.”

“என்ன துரதிருஷ்டம்!”

“என்ன செய்வது? எங்கள் அப்பா எப்பொழுதும் அவளைப்பற்றித்தான் வேதனைப் பட்டுக்கொண்டிருக்கிறார்” என்றான் வேணு.

நீலகண்டன் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தான். சட்டென்று ஏதோ முடிவுக்கு வந்தவன்போல், “வேணு! அப்பாவை என் வீட்டிற்கு அனுப்பு. இல்லாவிட்டால் நீ வந்து கூப்பிட்டால் நானாவது வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனான்.


வேணுவின் தகப்பனார் நீலகண்டனைத் தேடிக் கொண்டு போனார். அவருக்கு நீலகண்டன் மனத்தை அறிந்ததும், ஆச்சரியமாகப் போய்விட்டது.

“மனப்பூர்வமாகத்தான் சொல்லுகிறாயா?” என்று கேட்டார் அவர்.

“ஆமாம், அன்று ரெயிலில் பார்த்தபோதே என் மனம் அவளுக்கு வசமாகிவிட்டது. அவள் அன்று ஒரு வார்த்தை கூடப் பேசாதபடியால் என்னுடைய அன்பு குறைந்து விடவில்லை. இனிமேல் அவள் பேசாதிருப்பதற்காகவும் குறைந்துவிடாது” என்றான் நீலகண்டன்.

சுதாவின் தகப்பனார் அவன் கைகளைச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு, “சுதாவின் பொறுமைக்காகவே பகவான் அவளுக்கு இரங்கிவிட்டார் என்று நினைக்கிறேன்” என்று தழு தழுத்த குரலில் சொன்னார்.

பத்துத் தினங்களுக்கு அப்புறம் முன்போலவே நிலவு பொழியும் வனப் பிரதேசத்தில் சென்னையிலிருந்து பம்பாய்க்குப் போகும் ரெயிலில் சுதாவும் நீலகண்டனும் ஆனந்தமாகப் பிரயாணம் செய்துகொண்டிருந்தார்கள்.

– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *