மணமகள், மண்டபத்திலேயே இல்லை என்கிற செய்தி முகூர்த்தத்துக்கு ஒரு மணி
நேரம் முன்புதான் தெரிந்தது. நான்கு ஆண்டுகளாக ரகசியமாகக் காதலித்தவனோடு கிளம்பிப் போய்விட்டாள் என்றார்கள். இடி இறங்கியதைப்போல உட்கார்ந்துவிட்டாள் அம்மா. தம்பிகளும் தங்கையும் அவர்களுடைய குடும்பங்களும் அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல், குழப்பத்தோடு நின்றனர். புதுச் சட்டை அணிந்திருந்த சின்னப் பிள்ளைகள் மட்டும் உற்சாகம் குறையாமல் நாற்காலிக்கு நடுவில் ஒளிந்து மறைகிற விளையாட்டு ஆடினார்கள். முழங்கிக்கொண்டு இருந்த நாகஸ்வரமும் மேளமும் நின்றன. நண்பர்களுடன் பேசியபடி நின்றிருந்த கணபதி, தூணோடு சாய்ந்த நிலையில் சரிந்து தரையில் அமர்ந்தான்.
நெருக்கடியைச் சமாளிக்கும்விதமாக மணமகளின் அப்பா, அடுத்த அரை மணி நேரத்தில் மணமகளின் தங்கையை முகூர்த்தத்துக்குக்குத் தயார்ப்படுத்தினார். திகைத்து நின்ற குடும்பங்கள் ஓரளவு தெளிந்து ஆறுதலாக மூச்சுவிட்டார்கள். தாலி கட்டி மாலை மாற்றிக்கொண்டாலும், தடுமாற்றமும் அதிர்ச்சியுமாகத் தவித்தான் கணபதி. விருந்துச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு, இரண்டு மணி நேரம் பயணம் செய்து, மறுவீட்டுக்கு வந்து கூடத்தில் தொலைக்காட்சி பார்த்தபடியும் செய்தித்தாளைப் புரட்டியபடியும் சின்னக் குழந்தைகளோடு கதை பேசியபடியும் இளைப்பாறிக்கொண்டு இருந்த தருணத்தில் பரபரப்பும் கூச்சலும் நிறைந்ததாக மாறியது வீடு. காலைப் பதற்றம் கொஞ்சம்கொஞ்சமாகக் கரைந்துகொண்டு இருந்த தருணத்தில் “காலையில தலையத் தலைய ஆட்டிட்டு, இப்ப சிறுக்கி எல்லார் கண்லயும் மண்ணைத் தூவிட்டுப் போய்ட்டாளே” என்று ஆத்திரத்தோடும் வேதனையோடும் மாமியார் எழுப்பிய கூச்சல் எல்லாரையும் திகைப்பில் ஆழ்த்தியது. தடதடவென்று சில பேர் வாகனங்களை எடுத்துக்கொண்டு வெளியே பறந்தார்கள். ஒருவரையருவர் பழித்து, அசிங்கமாகத் திட்டிக்கொண்டார்கள். எதுவும் புரியாமல் குழப்பத்தோடு அவர்களையே பார்த்தான் கணபதி. அறைக்குள் கடிதம் எழுதிவைத்துவிட்டு, புதுமணப் பெண் போய்விட்டாள் என்கிற செய்தி அவர்கள் உரையாடலின் மூலம் தெரிந்தது.
அவமானத்தில் கூனிக் குறுகிப்போனான் கணபதி. ஒரு கணம்கூட அந்த இடத்தில் நிற்க முடியவில்லை. உடல் நடுங்கியது. கொண்டுவந்திருந்த கைப்பெட்டியோடு உடனே கிளம்பிவிட்டான். வாடகை வண்டிக்கு ஏற்பாடு செய்து அனுப்புவதாகச் சொன்னார் பெண்ணின் தாய்மாமன். ஒவ்வொரு கணமும் நெருப்பில் நிற்பதுபோல இருந்தது. தலை நிமிர்ந்து பார்க்கவே மனம் கூசியது. மூன்று பேருந்துகள் மாறி, பண்ருட்டிக்கு வந்து நாலு மைல் நடந்து வீட்டை அடைந்தபோது நள்ளிரவைத் தொட்டிருந்தது நேரம். வாசலில் படுத்திருந்த ப்ரீத்தி அவனைப் பார்த்த பரவசத்தில் ஓடோடி நெருங்கி வந்து ஓங்கிக் குரைத்தது. ஒரு சதவிகிதம்கூடக் காதில் விழாதவனாக வாசல் படிக்கட்டில் உட்கார்ந்து தலை குனிந்தான் கணபதி.
தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் நான்கு கல்யாணங்கள் செய்த அனுபவம் அவனுக்கு இருந்தது. எந்த அனுபவமும் அவனுடைய கல்யாணத்தில் துணை நிற்கவில்லை. காலையில் இருந்து உறைந்து குவிந்திருந்த ஆத்திரம் பிடறியைச் சிலிர்த்துக்கொண்டுத் தாவியதில் நெஞ்சம் கொதித்தது. மூச்சுவிட முடியவில்லை. 40 வயது வரை ஒருநாள்கூட எட்டிப்பார்க்காத எரிச்சலும் கசப்பும் குமுறிக்கொண்டு வந்தன. பற்களைக் கடித்தபடி படிக்கட்டின் மீது ஓங்கி ஒரு குத்து குத்தினான். ப்ரீத்தி அவன் கவனத்தைத் தன் பக்கமாகத் திருப்பும் முயற்சியாக, அவனைச் சுற்றிச் சுற்றி வந்து ஒரு கணம்கூட நிறுத்தாமல் குரைத்தது.
“எதுக்கு நாய் கத்துது? யாரு அங்க நாய்கிட்ட?” என்று கேட்டபடியே விளக்கைப் போட்டு தூக்கக் கலக்கத்தில் கதவைத் திறந்துகொண்டு வந்தாள் அம்மா.
பதில் இல்லாததால் “யாருன்னு கேக்கறேன்ல, பெரியவன் வூட்டுல இல்லாத நேரமா வந்திருக்கீங்களே…” என்று முணுமுணுத்தபடி நாலு அடிவைத்தவள், அப்படியே ஒருகணம் உறைந்து நின்றாள்.
சட்டெனத் தூக்கம் அறுந்துபோக “ஐயோ கணபதி, என்னடா திடீர்னு இங்க… இப்பிடி…” என்று பேச்சை முடிக்க முடியாமல் குழறினாள்.
கண்களைத் துடைத்துக்கொண்டே எழுந்த கணபதி வீட்டுக்குள் சென்றான். ப்ரீத்தி அவன் பின்னாலேயே குரைத்துக்கொண்டு ஓடியது. “டேய், பெரியவனே, என்னாச்சிடா? சொல்லுடா…” என்று தடுமாறினாள் அம்மா. கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஒருகணம் தெருப் பக்கமாக திரும்பிப் பார்த்துவிட்டு உள்ளே சென்று கதவைச் சாத்தினாள். நாற்காலிக்கு அருகே அவன் காலடியில் உட்கார்ந்து, இறுகிக்கிடந்த அவன் முகத்தைப் பதற்றத்தோடு பார்த்தாள். அவன் ஒரு சிலையைப்போல அசையாமல் எதிரில் தொங்கிக்கொண்டு இருந்த காலண்டரில் வள்ளி தெய்வானையோடு மயில் மீது உட்கார்ந்து இருக்கும் முருகனின் தோற்றத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தான்.
“என்னாச்சிடா கணபதி? எதுக்குடா இந்த நட்ட நடுராத்திரியில வந்து நிக்கற? என் ஈரக்கொலையே நடுங்குதே. என்னடா நடந்துச்சு?” – அம்மாவின் குரலைக் கேட்டு அக்கம்பக்க அறைகளில் இருந்து வெளியே வந்த தம்பி – தங்கைகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றார் கள்.
“மாமனாரு வூட்ல ஒன்ன ஏதாச்சும் சொல்லிட்டாங்களாப்பா… சொல்லு கணபதி? எல்லாத்துக்கும் ஊமையா இருந்தா எப்படி?” அழுதுவிடும் குரலில் கேட்டாள் அம்மா.
“சொன்னாங்க, சொரக்காவுல உப்பு இல்லன்னு, பேசாம எழுந்து போம்மா…” அவன் வேகம் எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அவன் சொன்ன வார்த்தைகள் எதுவுமே காதில் விழாதவளைப்போல அதிர்ச்சியில் அழத் தொடங்கினாள் அம்மா.
“எதுக்கு இப்ப நீ ஒப்பாரிவைக்கற? இங்க என்ன எழவா வுழுந்துடுச்சி?” அருகில் இருந்த கைப்பெட்டியைக் காலாலேயே ஓங்கி உதைத்தான். அவன் செய்கைகளை அவனாலேயே நம்ப முடியவில்லை.
“எதுக்குண்ணே இப்படிக் கோவப்படறீங்க? என்ன விஷயம்னு சொன்னாத்தான எங்களுக்குப் புரியும்?” சின்னவன் அருகில் வந்தான். அவன் மனைவியும் பிள்ளைகளும் பயந்துகொண்டே நின்றார்கள். ஒருகணம் எல்லோரையும் நிமிர்ந்து பார்த்தான் கணபதி.
“அவ போனா போறா, இவ கழுத்துல தாலி கட்டுனு மணையில உக்காரவெச்சீங்களே, அந்த நாயும் யாரையோ இழுத்துக்கினு ஓடிப்போச்சி, போதுமா?” என்றான்.
“ஐயோ, மாரியாத்தா தாயே! இப்பிடியும் நடக்குமா?” அம்மா தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். அடி வயிற்றில் இருந்து குமுறிப் பொங்கின வார்த்தைகள்.
“இப்ப எதுக்கும்மா ஒப்பாரிவைக்கற? நான் வந்ததுக்கா, இல்ல அவ போனதுக்கா?”- படபடவென்று வெடித்தான் கணபதி.
“சரி விடுங்கண்ணே, உலகத்துல வேற பொண்ணா இல்ல. நம்ம வூட்டுக்கு வந்து வாழறதுக்கு அந்தப் பொண்ணுக்குக் கொடுப்பினை இல்ல. இதைவிட நல்ல பொண்ணு நிச்சயமா கெடைக்கும்ணே” – சுவரில் மோதித் திறந்துகொண்ட பெட்டியில் இருந்து சிதறிய துணிமணிகளை எல்லாம் சேகரித்து மீண்டும் அடுக்கியபடி சொன்னான் நடுத் தம்பி.
“இந்த ஜென்மத்துல எனக்குக் கல்யாணமும் வேணாம், ஒரு கருமாதியும் வேணாம். ஆள நிம்மதியா வுடுங்கடா சாமி.”
“எவளோ ஒருத்தி அப்படி இருந்தாங்கிறதுக்காக எல்லாரும் அப்படியே இருந்துருவாங்களா?”
“ஒலகத்துல எல்லாரும் நல்லவங்கதாம்பா. நான் மட்டும்தான் முட்டாள். மடையன். ஏமாந்த சோணகிரி. எனக்குன்னு வந்து நடக்குதே எல்லாம். அதைச் சொல்லணும். பேசாம அவுங்கவுங்க வேலையைப் பாருங்கடா, போங்க”- கோபமாக எரிந்துவிழுந்தான்.
“நல்லவன்னு நம்பினனே, அந்த கண்டரகோட்டத் தரகன் இப்படி ஒரு பள்ளத்துல எம் புள்ளயக் கொண்டுபோய்த் தள்ளிட்டானே”- அம்மா தூணில் சாய்ந்து மறுபடியும் அழத் தொடங்கினாள். கண்ணீர் அவள் கன்னங்களில் வழிந்தது.
“பைத்தியமாட்டம் அழுது வெறுப்பேத்தாதம்மா. பேசாம உள்ள போ…” கணபதி கத்தினான். “ஒரு தரம் சொன்னாப் புரியாதா ஒனக்கு? ஒன் காதுல மண்ணவெச்சா அடைச்சிருக்கு?”- சொற்கள் முரட்டுத்தனமாக விழுந்தன.
வந்ததில் இருந்து தான் சிறிதளவும் பொருட்படுத்தப்படவில்லையே என்கிற ஆதங்கத்தில் ப்ரீத்தி அவனைச் சுற்றிச்சுற்றி வந்து குரைத்து வாலைக் குழைத்தது. “ஒனக்குக்கூட நா எளக்காரமாப் போயிட்டனா? அடி செருப்பால…” – வெறியோடு பக்கத்தில் தென்பட்ட டம்ளரைத் தூக்கி அதன் மீது வீசினான். அது சரியாக அதன் காலைத் தாக்கிவிட்டு சத்தத்துடன் உருண்டது. அடிபட்ட காலைத் தூக்கிக்கொண்டு சிணுங்கியபடி சுவரோரமாக ஒதுங்கியது ப்ரீத்தி. கண் களைச் சுருக்கிக்கொண்டு கலவரத்தோடு அவனைப் பார்த்துத் திகைத்தது.
“வாயில்லாத ஜீவன் மேல எதுக்குண்ணா கோவத்தக் காட்டற? பாவம்ணா, ஒங்கிட்ட ஆசையாத்தான வந்துச்சி?” உருண்டுபோன டம்ளரை எடுக்கக் குனிந்தான் சின்னவன்.
“ஆமாமாம். ஒலகத்துல எல்லாருமே பாவம். நாய் பாவம், நரி பாவம். மாடு பாவம். மனுஷன் பாவம். நா மட்டும் பாவம் இல்ல…” – குமுறிய குரல் சட்டென்று இடறியது. கண்கள் தளும்பின. ஒருகணம் தரையைப் பார்த்தபடி மௌனமாக நின்றான். பிறகு, மெதுவாக யாரையும் திரும்பிப் பார்க்காமல் படியேறி மாடிக் குப் போய் கதவைச் சாத்திக்கொண்டான்.
விளக்கைப் போட்டுக் கட்டிலில் உட்கார்ந்தான். புது வர்ணத்தின் மணம் வீசும் அறையை ஒருமுறை சுற்றிப் பார்த்தான். திருமணத்தையட்டிக் கட்டப்பட்ட புது அறை. ஜன்னலோரம் தேனருவியின் படம். பக்கத்தில் பனி மூடிய இமயமலைச் சிகரங்களின் தொடர். மின்விசிறியை ஓடவிட்டு அந்தப் படங்களைப் பார்த்தபடி நின்றான். மெள்ள மெள்ள மனம் அடங்கத் தொடங்கியது. கீழே கூடத்தில் இன்னும் பேச்சுக் குரல்கள் கேட்டன. ப்ரீத்தி விடாமல் முறையிடுவதுபோலக் குரைத்தது.
கட்டிலைவிட்டு எழுந்து விளக்கு மேசையின் இழுப்பறையைத் திறந்து பாட்டுக் குறுந்தகடு ஒன்றை எடுத்துப் பொருத்தி கணிப்பொறியை இயக்கினான். இசையலைகளால் அறை நிறைந்தது. மல்லாந்து படுத்தபடி ஜன்னல் வழியே இருண்ட வானத்தைப் பார்த்தான். பார்த்துப் பார்த்து செடிபோல வளர்த்த கனவுகளை அசைபோட்டது அவன் மனம். மலைப் பாதையில் கைகோத்துக் கொண்டு, குயிலோசையைக் கேட்டபடி, துணிப்பொதிகளாக வானத்தில் திரியும் மேகங்களைப் பார்த்தபடி நடக்கிற கனவுகள். அமைதியான நிலவொளியில் ஆற்றில் மெய்ம்மறந்து படகுப் பயணம் செல்வதுபோன்ற கனவுகள். மடியில் படுத்திருக்கும் அவள் புருவங்களையும், இமைகளையும், உதடுகளையும், மூக்கு விளிம்பையும் கழுத்துக் குழியையும் கைவிரலால் ஒரு பூவை வருடுவதுபோல வருடிவிடும் கனவுகள். வெடிகுண்டால் தகர்க்கப்பட்டதுபோல் எல்லாக் கனவுகளும் குலைந்துபோக, தாங்க முடியாத மனபாரத்துடன் அசையும் மரக் கிளைகளைப் பார்த்தான். தடை உடைந்ததுபோலச் சட்டென அழுகை குமுறிப் பொங்கியது. அழுது அழுது களைப்பில் அப்படியே தூங்கிப்போனான்.
ஓர் அசைவில் விழித்து எழுந்து மணியைப் பார்த்தான். மூணே முக்கால். குமுறல் அடங்கி இருப்பதை உணர்ந்தான். வீட்டுக்குள் சத்தமே இல்லை. நிகழ்ந்தவை எல்லாம் படங்களாக நெஞ்சில் அசைந்தன. சங்கடமாக இருந்தது. நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டான். படுக்கையில் இருந்து எழுந்து கழிப்பறைக்குச் சென்று திரும்பினான். குளிர்ந்த நீரில் முகம் கழுவித் துடைத்தான். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து முட்டாள் முட்டாள் என்று முணுமுணுத்தான். நடந்தவற்றை அவமானம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். துரதிர்ஷ்டம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். பக்குவமாகக் கடந்து செல்ல வேண்டும். சேற்றைத் தாண்டுவதுபோல.
கதவை மெதுவாகத் திறந்தான். அறை வெளிச்சம் வெளியே ஒரு பட்டையான கோடு போல விழுந்தது. பூச்சாடி அருகில் அமர்ந்திருந்த ப்ரீத்தி சட்டென எழுந்து அவனைப் பார்த்துத் தலையை திருப்பியது. அதன் கண்களையே ஒரு கணம் பார்த்தான் கணபதி. வெளிச்சத்தைப் பார்த்துத் தூண் ஓரமாகக் காலை நீட்டி உட்கார்ந்திருந்த அம்மா நிமிர்ந்து பார்ப்பது தெரிந்தது. “கணபதி…” எழுந்து நின்று சேலையைச் சரிசெய்தபடி அழைத்தாள் அவள். அதற்குள் படி இறங்கி அவள் அருகில் சோபாவில் உட்கார்ந்தான் கணபதி.
“டேய் கணபதி, மனசைத் தளரவிடாதடா. அந்தக் கழுதைக்கு நம்ம வீட்ல வாழ குடுத்துவைக்கல. அப்படி நெனச்சிக்க. நீ சொக்கத் தங்கம்னு அதுங்களுக்குப் புரியாமப் போயிடுச்சுடா. போனா போவட்டும் போ.”
“ஏதோ வேகத்துல என்னென்னமோ பேசிட்டம்மா, தப்பா எடுத்துக்காத…” குனிந்துகொண்டே சொன்னான். படியிறங்கி வந்த ப்ரீத்தி, அவனுக்கும் அம்மாவுக்கும் நடுவில் நின்று வாலை ஆட்டியது.
“அட, அதெல்லாம் ஒரு பேச்சா, வுடுடா…” என்று உடனே அம்மா பேச்சை மாற்றினாள்.
“பால் இருக்குதாம்மா? சூடாக் காய்ச்சி எடுத்தார்றியா? தலை வலிக்குது…”
அம்மா உடனே சமையலறைக்குள் சென்றாள். ப்ரீத்தி மெதுவாக அடியெடுத்து வந்து அவன் காலடியில் நின்றது. அவன் அதைப் பார்த்துச் சிரித்தான். அவன் சிரித்ததைக் கண்டதும் “க்விக்” என்று விநோத மாக ஒலி எழுப்பியபடி இடுப்பையும் காதுகளையும் வேகமாக ஆட்டியது. கையை நீட்டி அதை இழுத்து கழுத்தையும் முதுகையும் வருடிக்கொடுத்தான். ‘க்வீக்…’ ‘க்விக்…’ ‘க்ரு…’ என்று விதவிதமான ஒலிகளுடன் தலையை அசைத்து அசைத்து அவன் மடியில் சாய்ந்து கொண்டது.
“கோபமா ப்ரீத்தி?”
அது மெதுவாக சோபாவின் மீது தாவி ஏறி அவன் அருகில் உட்கார்ந்துகொண்டு அவன் முகத்தை அப்பாவியாகப் பார்த்தது.
“ஒன்னப் போயி அடிச்சிட்டேனே… நான் பெரிய முட்டாள்…” குனிந்து அதன் காதருகே முத்தம்இட்டான்.
“ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்துட்டனா, அதுல தலையே கொழம்பிடுச்சி ப்ரீத்தி.” அது இன்னும் கொஞ்சம் உடலைச் சுருக்கி அவன் உடலோடு உடலாக ஒட்டிக்கொண்டது.
அம்மா பால் கொண்டுவந்து தந்தாள். ப்ரீத்தி டம்ளரை நிமிர்ந்து பார்த்தது. “நீயும் குடிக்கறியா?” என்று கேட்டபடி சுவரோரமாகக் கவிழ்த்து வைக்கப் பட்டு இருந்த கோப்பையில் சிறிதளவு பாலை ஊற்றி ஊதி ஊதி ஆறவைத்து அதன் முன் வைத்தான். கால் மடக்கி உட்கார்ந்து பாலை நக்கிக் குடித்தது ப்ரீத்தி.
“அந்த கண்டரகோட்டத் தரகன் கண்ணுல மாட்டற அன்னிக்கு, அவன உண்டு இல்லன்னு ஆக்கிடறேன் பாரு. என்ன நெனச்சிட்டான் கழுத, நம்ம குடும்பத்தைப்பத்தி. இவன் கெட்ட கேட்டுக்கு பத்திரிகை வைக்கிற அன்னிக்கே ரெண்டாயிரம் ஓணும்னு புடுங்கினு போயிட்டான்.”
“போவட்டும் விடுமா. அது அவன் பொழப்பு” – ப்ரீத்தி குடிக்கும் நிதானத்தைப் பார்த்தபடியே கணபதி பாலை அருந்தினான்.
“என்னா வழவழன்னு பேசினான் தெரியுமா? அந்த ஜோசியக்காரன் அதுக்கும் மேல. இவன் சொல்றதுக்கெல்லாம் தாளம் போட்டான். பத்துல ஒன்பது பொருத்தம் இருக்குது. தெய்வம் போட்ட கோடு, அது இதுன்னு என்னென்ன அளந்தானுவோ தெரியுமா?”
“இனிமே அந்தப் பேச்சையே எடுக்கக் கூடாதும்மா. ‘கிட்டாதாயின் வெட்டென மற’ன்னு சின்ன வயசுல பாடம் படிச்சதை மறக்கலாமா?”
கோப்பையைக் காலியாக்கிவிட்டு அவன் டம்ளரைப் பார்த்து நாக்கைக் குழைத்தது ப்ரீத்தி. “இன்னும் வேணுமா ப்ரீத்திக்கு?” என்றபடி மேலும் கோப்பைக்குள் ஊற்றி ஆற்றிவைத்தான்.
“எதுக்கும் மனசைத் தளரவிடாதடா கணபதி. ஒனக்குன்னு ஒருத்தி எங்காவது பொறந்து இருப்பாடா.”
“அவ பொறந்தாளோ, பொறக்கலையோ, எல்லாத்தையும் இதோடு விட்ருவம்.”
“நான் சொல்றதக் கேளுடா தம்பி.”
“மதகடிப்பட்டுல ஒரு பொண்ணைப் பார்க்கப் போனமே, அப்ப அதும் தோழிப் பொண்ணுங்க குசுகுசுன்னு இவர அங்கிள்னு கூப்புடுவியா, அத்தான்னு கூப்புடுவியான்னு கேட்டுச் சிரிச்சுதுங் களே, நெனப்பிருக்குதா?”
“அதுக்கென்ன இப்ப? அந்தப் பொண்ணுதான் சரிவரலைன்னு விட்டுட்டமே…”
“அந்த வார்த்தைகளைக் காதால கேட்டும்கூட சொரண கெட்டு கண்டமங்கலம், வில்லியனூரு, புச்சேரினு பொண்ணு பாக்கற விவகாரத்துல இறங்கினனே, என் புத்திய தொடப்பக்கட்டயாலதான் அடிச்சிக்கணும்.”
“சும்மா, இல்லாதத எல்லாம் நெனச்சிக்கிட்டு, எத எதயோ பேசாதடா.”
“இல்லம்மா, அன்னிக்கே இந்த விஷயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சிருந்தா, இவ்ளோ தூரத்துக்கு இது வளர்ந்திருக்காது.”
“இங்க பாரு, ஒண்ணுமில்லாத விவகாரத்துக்கு எல்லாம் உப்பு, புளி, காரம் போட்டுப் பெரிசாக்காத நீ” – அம்மா நெருங்கி வந்து அவன் கையைப்பற்றி வதங்கிய தன் கை விரல்களுக்கு இடையேவைத்து அழுத்தினான்.
“கை காலு தெம்பா இருக்கும்போது யாருமே வேணாம்னுதான் தோணும் கணபதி. கடைசிக் காலத்துக்கு ஒரு தொண வேணும்டா.”
அவன் பேசாமல் பெருமூச்சுவிட்டபடி காலியான டம்ளரைப் பக்கத்தில் இருந்த மேஜையில் வைத்தான்.
“என்னடா கணபதி பேசாம இருக்கற, கோவமா?”
“இப்பிடி சொல்லிச் சொல்லித்தான் என்ன ஒப்புக்கவைக்கற. என்னிக்காவது என் வயசு என்னன்னு யோசிச்சுப் பார்த்திருக்கியா? வர்ற சித்திரை வந்தா, 42 முடிஞ்சிடும்.”
“ஆம்பளை வயசுலாம் ஒரு கணக்காடா கணபதி. நான் உங்கப்பாவக் கட்டிகினு வரும்போது எனக்கு 15. ஒங்கப்பாவுக்கு 30. நாங்கள்லாம் வாழாமயா போயிட்டம்?”
“ஐயோ அம்மா, அதெல்லாம் அந்தக் காலம். எதுவும் புரியாமப் பேசாத”- அருகில் வந்து நின்ற ப்ரீத்தியின் முதுகை வருடிக்கொடுத்தான்.
“அந்தப் பொண்ணு வீட்டுக்காரங்க வந்து, அந்தக் கத இந்தக் கதன்னு ஏதாச்சும் சுத்தி வளைச்சுப் பேச வந்தாலும் வரலாம். ஐயா, உங்க தெசைக்கே ஒரு கும்பிடு… போய் வாங்கன்னு சொல்லி அனுப்பிடு.”
“அது எப்பிடிடா? அந்தப் பொண்ணுக்கு ரெண்டு பவுன்ல தாலி, ஆறு பவுன்ல சங்கிலி போட்டிருக்கம். நாத்தனாரு பட்டம், ஓரவத்தி பட்டம்னு அவளவளுங்க ஏகப்பட்ட காசி வேற கட்டியிருக்காளுவோ…”
“எல்லாம் போனாப் போவட்டும் விடும்மா. இப்ப அவங்க உறவே வேணாம்னு சொல்றேன். இப்ப போயி பவுனு காசின்னு சொல்ல வந்துட்ட.”
பதில் பேச இயலாதவளாக அம்மா அவன் முகத்தையே பார்த்தாள். கொடியில்கிடந்த துண்டை எடுத்து கழுத்துப் பக்கமாக வழியும் வேர்வையைத் துடைத்தான் கணபதி. பிறகு, மாடி அறைக்குச் செல்ல மெதுவாகப் படியேறினான். ப்ரீத்தி அவன் பின்னால் சென்றது.
“கணபதி…” தயக்கமான குரலில் அம்மா கூப்பிட்டாள்.
“என்னம்மா?”
“நான் வேணும்னா உன் ரூமுல தொணைக்கு வந்து இன்னிக்கு ஒரு நாளு படுத்துக்கட்டுமா?”
ஒரு கணம் அம்மாவின் கண்களை ஊடுருவிப் பார்த்தான். “ஏதாச்சும் செஞ்சுக்குவேன்னு பயமா இருக்குதா? அந்த மாதிரிலாம் கோழைத்தனமா எந்த முடிவும் எடுக்க மாட்டேன், நிம்மதியாத் தூங்கும்மா…”
அவன் திரும்பிப் படியேறினான். ப்ரீத்தி பின்புறத்தை அசைத்தபடி தொடர்ந்து படியேறியது. அறைக் கதவைச் சாத்த நினைத்து, பிறகு, அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு கட்டில் அருகே சென்று சாய்ந்தான். அப்போதுதான் ப்ரீத்தி பின்னாலேயே வந்து கதவருகே தயங்கித் தயங்கி நிற்பதைப் பார்த்தான். சைகையால் ப்ரீத்தியை அருகில் வரச் சொன்னான். ஒரே கணத்தில் தாவி ஓடி வந்து பக்கத்தில் நின்றது. அவன் கழுத்துப் பட்டியைப் பிடித்து இழுத்து குனிந்து அணைத்துக்கொண்டான். கதகதப்பாக இருந்தது. பிடியை விடுவித்ததும் வளைந்து நெளிந்து கட்டிலில் உடல் குறுக்கிப் படுத்தது. ஒரு கோணத்தில் அதன் கண்கள் மனிதக் கண்கள்போலத் தெரிந்தன. மெதுவாக, அதன் முன் காலில் நகங்கள் மேல் அடர்ந்திருக்கும் குறுமயிரிடையே விரலால் கோதினான். அது உடலை வளைத்து கழுத்தை அவன் பக்கமாக நீட்டியது. வாயைத் திறந்து நீளமான நாக்கை நீட்டி என்னமோ குழறியது. ‘க்ரீ…’ ‘ம்ரூ…’ ‘க்ரீ…’ ஒரு பாடல் வரியைப்போல மெதுவாக முணுமுணுத்தது. அதன் வெளுத்த ஈறுகளையும் கூம்பிய வாயையும் பார்த்தபடியே இருந்தான். அதன் கழுத்தில் குனிந்து முத்தமிட்டு நெருக்கமாகக் கிடத்திக்கொண்டான். அதன் வாயில் இருந்து பால் வீச்சம் எழுந்தது. அதன் உருவம் அப்படியே புள்ளியாகி மறைந்து விலக, அந்த இடத்தில் ஆயிரம் இறகுகளும் ஆயிரம் கைகளும்கொண்ட தேவதை உறங்குவது தெரிந்தது. அந்தக் கைகள் நீண்டு அவனை ஏந்திக்கொண்டன. அப்படியே உடல் தளர்ந்து உறங்கத் தொடங்கினான்!
– ஜூலை 2010