கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 7,810 
 
 

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மானேஜ்மென்ட், அகமதாபாத்.

ஸ்ரீநிவாசன், ஜெயராமன் மற்றும் நடராஜன் ஆகிய மூவரும் அதில் ரிசர்ச் அசிஸ்டெண்ட்.
கடந்த ஒரு வருடமாக ஆர்கனிசேஷன் டிவலப்மென்ட் டிபார்ட்மெண்ட்டில் புரொபசர் பிரமோத் வர்மாவிடம் வேலை செய்கிறார்கள்.

அவர்கள் தமிழர்கள் என்பதால் ஐ.ஐ.எம் அருகிலேயே ஆஸாத் சொஸைட்டியில் ஒற்றுமையுடன் ஒரு நல்ல வீட்டை எடுத்துக்கொண்டு வாடகையை பகிர்ந்து கொள்கிறார்கள். ஸ்ரீநிவாசன் ஸ்ரீரங்கம். அவன் தாத்தா புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திவான் பகதூராக இருந்தவராம். மற்ற இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். மூவருக்கும் திருமணமாகவில்லை.

ஐ.ஐ.எம்., அகமதாபாத் பிரபல பிரெஞ்ச் கட்டிடக்கலை நிபுணர் லூயிகான் என்பவரால் மிகப் பிரம்மாண்டமாக வடிவமைக்கப் பட்டது. கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு. காம்பஸின் உள்ளேயே ஷாப்பிங் வசதி, பெரிய விக்ரம்சாராபாய் நூலகம், அதுதவிர மூன்று வேளையும் தரமான சாப்பாடு கிடைத்துவிடுவதால் அவர்கள் மூவரும் காம்பஸின் உள்ளேயே சுற்றி சுற்றி வந்தார்கள். காம்பஸ் உள்ளே திரியும் இளம் பெண்களை கலாய்த்துக்கொண்டு ஜாலியாக இருந்தார்கள்.

அன்று காலை புரொபசர் பிரமோத் வர்மா மூவரையும் அழைத்து, புதுப்புது ப்ராஜெக்ட் கன்சல்டன்சி அதிகமாக வருவதால் மேலும் புதிதாக இருவரை ரிசர்ச் அசிஸ்டெண்ட்டாக எடுத்திருப்பதாகவும், அடுத்த மாதம் மூன்றாம் தேதி அவர்கள் வேலைக்குச் சேருவார்கள் என்று சொல்லி அந்த இருவரின் பயோடேட்டாவை அவர்களிடம் கொடுத்தார்.

அதில் ஒன்று அனீஷ். மற்றொன்று காயத்ரி.

காயத்ரியின் பயோடேட்டாவை மூவரும் அவசர அவசரமாக ஆர்வத்துடன் படித்தனர்.

ஜெயராமன், “மச்சி தமிழ்ப் பொண்ணு… வயசு 24, ஊரு திருச்சி” என்று துள்ள, மூவரும் சந்தோஷம் அடைந்தனர்.

அவளைப்பற்றியே அடிக்கடி பேசிக் கொண்டிருந்தனர். நடராஜனுக்கு அவள் ஐ.ஐ.எம் வந்து வேலைக்குச் சேரும்வரை பொறுமையில்லை.

“மச்சி அவகிட்ட பேசி அவ எப்ப அகமதாபாத் வரான்னு கேட்டு நாம மூவரும் ஸ்டேஷனுக்கு போயி அவளை ரிஸீவ் பண்ணலாம். அவளுக்கு லேடீஸ் ஹாஸ்டல் வேணுமின்னா, மணிநகர்ல ஏற்பாடு பண்ணிடலாம்” என்றான்.

மூவரும் குதூகலமாக அவள் பயோடேட்டாவில் இருந்த மொபைல் நம்பரைப் பார்த்து அதை தங்கள் மொபைலில் சேமித்து வைத்துக் கொண்டனர். நடராஜன் சற்று தைரியசாலி என்பதால் அவன் காயத்ரியிடம் பேசுவது என்பது முடிவாயிற்று.

அவன் காயத்ரியின் நம்பருக்கு அடித்தான். மற்ற இருவரும் அவன் முகத்தையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மூன்று ரிங் போனதும், “ஹலோ, காயத்ரி ஹியர்” என்றாள்.

“மிஸ் காயத்ரி, என் பெயர் நடராஜன், ஐ.ஐ.எம். அகமதாபாத்திலிருந்து பேசுகிறேன்”

“ஹலோ நடராஜன் ஸார்… சொல்லுங்க”

“நானும் ரிசர்ச்லதான் புரொபசர் வர்மாகிட்ட ஒர்க் பண்ணுகிறேன்….நீங்க மூன்றாம் தேதி ஜாயின் பண்றதா புரொபசர் சொன்னார். எந்த ட்ரெயின்ல என்னிக்கு வரீங்க… எங்க தங்குவீங்க? லேடீஸ் ஹாஸ்டல்ல ஏற்பாடு பண்ணட்டுமா?”

“ஒண்ணும் சிரமப்பட வேண்டாம் சார். நான் ஒரு வாரம் முன்னாடியே ப்ளைட்ல வந்துடுவேன். என்னோட மாமா அகமதாபாத் ரிசர்வ் பாங்க்ல ஒர்க் பண்றாரு. அவர் ஏர்போர்ட் வந்து கூட்டிட்டுப் போவாரு. அவங்களோடயே பாங்க் குவாட்டர்ஸ்ல தங்கிடுவேன். தாங்க்யூ சார்…ஸீ யூ ஆன் த தேர்ட்”

பேசி முடிந்ததும், “மச்சி அவ பெரிய ஆளுடா…ப்ளைட்ல வராளாம், அவளோட அங்கிள் ரிசர்வ் பாங்க்ல ஒர்க் பண்றாராம். பாங்க் குவார்ட்டர்ஸ்ல அவரோட தங்கிப்பாளாம்” என்றான்.

மூவருக்கும் சப்பென்று ஆகிவிட்டது.

மூன்றாம் தேதி. காலை பத்து மணிக்கு காயத்ரி வந்தாள்.

அழகென்றால் அப்படி ஒரு தெறிக்கும் அழகு. சிவந்த நிறம், அமைதியான முகம், அளவான சிரிப்பு, எடுப்பான அங்க லட்சணம் என்று ஜொலிக்கும் அவளைப் பார்ப்பதே ஜென்ம சாபல்யம். அடிக்கடி புரொபசர் வர்மாவைப் பார்க்கும் சாக்கில் நிறைய பி.ஜி.பி ஸ்டூடன்ட்ஸ் அங்கு வந்தார்கள்.

காயத்ரியின் வரவினால் இரண்டு வாரங்களிலேயே ஐ.ஐ.எம் அதகளப்பட்டது.

ஸ்ரீநிவாசன், ஜெயராமன், நடராஜன் மூவரும் சிரத்தையாக வேலை செய்து காயத்ரியுடனேயே இருந்தனர். அவள் பி.ஹெச்டி படித்துக் கொண்டிருக்கிறாளாம். இரண்டு வருடங்களில் டாக்டரேட் வாங்கியதும் சென்னையில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்று ஆசையாம்.

மூவருக்கும் அவள் மீது தீராக்காதல். எனவே மூவரும் அவளின் அன்பைப்பெற முயற்சி செய்வது எனவும், யார் வெற்றி பெற்றாலும் அவனை மற்ற இருவரும் வாழ்த்தி விலகிக்கொள்வது எனவும் முடிவு செய்தனர். அதேசமயம் வேறு எவரும் காயத்ரியை நெருங்கி விடாதபடி பார்த்துக் கொள்வது என்றும் சபதமேற்றனர்.

ஆனால் காயத்ரி அனைவரையுமே ஒரு குறிப்பிட்ட எல்லையில் தள்ளியே வைத்திருந்தாள். இந்தக் காதல், கத்திரிக்காய் என்பதெல்லாம் அவளுக்கு அறவே பிடிக்கவில்லை. விக்ரம்சாராபாய் லைப்ரரிக்கு அடிக்கடி சென்று புரொபசர் வர்மாவுக்கு நிறைய குறிப்பெடுத்துக் கொடுத்து அவரிடம் நல்ல பெயர் வாங்கினாள்.

ஸ்ரீநிவாசன், ஜெயராமன், நடராஜன் மூவரும், முழுத்தேங்காயை நாய் சுற்றி வருவதைப்போல சுற்றி சுற்றி வந்தார்களே தவிர அவளிடம் ஒன்றும் பலிக்கவில்லை. காயத்ரி, காயத்ரி என்று ஜெபம்தான் செய்து கொண்டிருந்தார்கள்.

இவர்களில் ஸ்ரீநிவாசன் அதிரடியாக ஒரு காரியம் செய்தான். தன் பெற்றோர்களைப் பார்க்க ஸ்ரீரங்கம் சென்றபோது, அவர்களிடம் காயத்ரியைப் பற்றிச் சொல்லி, அவர்களை அழைத்துக்கொண்டு நேராக திருச்சி ஆண்டாள் தெருவில் இருக்கும் காயத்ரியின் வீட்டிற்கே சென்று அவளைப் பெண் கேட்டான்.

வரதட்சணை போன்ற ஜபர்தஸ்து எதுவும் வேண்டாமென்றும், தங்களுடைய ஒரே பையனின் ஆசைதான் தங்களுடைய விருப்பம் என்று ஸ்ரீநிவாசனின் பெற்றோர்கள் உருகினர்.

ஸ்ரீனிவாசனின் ராவ்பகதூர் குடும்பப் பின்னணி, அவர்களின் நல்ல பண்பு பற்றி நன்கு விசாரித்து தெரிந்து கொண்டவுடன், காயத்ரியிடம் பேசியபோது அவளும் சமர்த்தாக பெற்றோர்களின் விருப்பமே தனது விருப்பம் என்றாள்.

அடுத்த இரண்டு மாதங்களில் திருச்சியில் ஸ்ரீநிவாசன்-காயத்ரி திருமணம் இனிதே நடந்தது. ஐ.ஐ.எம் அருகிலேயே வஸ்தராபூரில் இருவரும் தனிக்குடித்தனம் ஆரம்பித்தனர். இருவரும் ஒன்றாக வேலைக்குச் சென்று வந்தனர்.

அடுத்த வருடமே அவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஸ்ரீராம் என்று பெயரிட்டனர். நடராஜன் வேறு வேலை கிடைத்து மும்பை சென்றான். காயத்ரி பி.ஹெச்டி முடித்து டாக்டர் பட்டம் வாங்கினாள்.

இரண்டாவது வருடம் ஒரு ப்ராஜெக்ட் விஷயமாக ஸ்ரீநிவாசன் டெல்லி சென்றபோது அவன் சென்ற விமானம் பெரிய விபத்துக்குள்ளானது. பலர் இறந்து சிலர் மட்டும் பிழைத்தனர். காயத்ரியும் ஜெயராமனும் விபத்து நடந்த இடத்தில் ஸ்ரீநிவாசனைத் தேடினர். பல உடல்கள் அடையாளம் காணமுடியாது எரிந்து போனதால் அவனது உடலையும் கண்டுபிடிக்க முடியவில்லை. வேறுவழியின்றி டெல்லியில் அரசாங்கம் பிணக்குவியல்களுக்கு நடத்திய மாஸ் க்ரிமேஷனில் கலந்து கொண்டுவிட்டு அகமதாபாத் திரும்பினர்.

காயத்ரி ஸ்ரீராமுக்காக தன் வேலையைத் தொடர்ந்தாள். அழகாகத் தொடங்கிய தன் மணவாழ்க்கை இப்படி சோகமாகி விட்டதே என உள்ளுக்குள் அழுதாள். வருடங்கள் ஓடின.

ஸ்ரீராமுக்கு நான்கு வயது. அவனை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்தாள்.

அலுவலகத்தில் அன்று அவளுக்கு தமிழில் ஒரு ஈ மெயில் ஜெயராமனிடமிருந்து வந்தது.

காயத்ரி,
நாம் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தாலும் என்னால் கோர்வையாக உங்களிடம் இதை பேச முடியாது. அதனால்தான் இந்த மின்னஞ்சல். உங்களுக்குத் தெரியும் ஸ்ரீநி, நடராஜன், நான் மூவரும் உற்ற நண்பர்கள் என்று. துரதிருஷ்டவசமாக ஸ்ரீநி தற்போது நம்மிடையே இல்லை. நான் தங்களை மணந்துகொள்ள விரும்புகிறேன் காயத்ரி. என்னால் உங்களுக்கு ஒரு நல்ல கணவனாக, ஸ்ரீராமுக்கு நல்ல தந்தையாக இருக்க முடியும். ஏதோ நான் நண்பனுக்காக செய்யும் தியாகம் என்றோ, உதவி என்றோ இதை எண்ண வேண்டாம். நான் தங்களை மிகவும் விரும்பிதான் இதை கேட்கிறேன்.

தாங்கள் சரியென்று சொன்னால், நம் பெற்றோர்களை இங்கு வரவழைத்து மணிநகர் முருகன் கோவிலில் நம் திருமணத்தை எளிமையாக நடத்தலாம். ஒரு நல்ல வாழ்க்கையை உங்களுடன் அமைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் காயத்ரி.

ஆவலுடன்,
ஜெயராமன்

அடுத்த மாதமே மணிநகர் முருகன் சந்நதியில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டு புது வாழ்க்கை தொடங்கினர். அவர்களின் பெற்றோர் உடனிருந்து ஆசீர்வதித்தனர்.

ஜெயராமன் காயத்ரியிடமும், ஸ்ரீராமிடமும் மிகவும் பாசமாக பிரியமுடன் இருந்தான். அடுத்த வருடம் காயத்ரிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஹரிணி என்று பெயரிட்டு சீராடடினர்.

மேலும் நான்கு வருடங்கள் ஓடின….

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. காலை பத்து மணிக்கு காயத்ரி-ஜெயராமன்; குழந்தைகள் ஸ்ரீராம் ஹரிணி நால்வரும் வீட்டிற்குள்ளேயே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது யாரோ காலிங் பெல் அடிக்க, ஸ்ரீராம் ஓடிச்சென்று கதவைத் திறந்தான்.

அங்கு இரண்டுபேர் நின்றிருந்தனர். ஒருவர் வெள்ளையும் ஜொள்ளையுமாக வழுக்கைத் தலையில் வயதானவராக இருந்தார். மற்றொருவர் ஒடிசலாக ஏராளமான மீசை தாடியுடன் காணப்பட்டார்.

தாடியுடன் காணப்பட்டவர், ஸ்ரீராமிடம் “காயத்ரி இருக்காளா?” என்றார்.

“அம்மா உன்ன தேடிண்டு யாரோ வந்துருக்கா” ஸ்ரீராம் உள்ளே ஓடினான்.

ஜெயராமன் வெளியே வந்து அவர்களிடம் “நீங்க யாரு? என்ன வேணும்?” என்றான்.

வயதானவர் அழகான ஆங்கிலத்தில் “என் பெயர் டாக்டர் நிரஞ்சன் கோயல், இவர் மிஸ்டர் ஸ்ரீநிவாசன்…ஏழு வருஷத்துக்கு முன்னால ஒரு விமான விபத்துல தப்பிச்ச ஒரு பயணி இவர தன்னோட கார்ல என்னோட ஜெய்ப்பூர் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்து அட்மிட் பண்ணாரு. அப்பலர்ந்து இவரு அம்னீஷியாவில் இருந்தாரு. நாங்க நம்பிக்கை இழக்காம இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தோம். போன வாரம்தான் இவருக்கு தன் நினைவு திரும்பிச்சு….உள்ளபோய் பேசலாமா?” என்றார்.

உடனே புரிந்துகொண்ட ஜெயராமன், “உள்ள வாங்க” என்று அவர்களை அழைத்துச்சென்று “டேய் ஸ்ரீநி எப்படிடா இருக்க?” என்று குரல் தழுதழுக்க அவனை கட்டிக் கொண்டான்.

அப்போது அங்கு வந்த காயத்ரியும் ஸ்ரீநிவாசனை பார்த்ததும் புரிந்துகொண்டு வெடித்து அழுதாள்.

ஹரிணியைப் பார்த்ததும் ஸ்ரீநிவாசன் நிலைமையை ஊகித்துக் கொண்டான். .

தன் கடமை முடிந்த திருப்தியில் டாக்டர் கோயல் விடை பெற்றார்.

ஸ்ரீநிவாசனுக்கு காயத்ரி சுடச்சுட காப்பி கொண்டு வந்தாள். ஜெயராமன் நடந்தவைகள் அனைத்தையும் அவனிடம் விவரித்தான். குழந்தைகள் குழப்பத்துடன் தாடியில் மிரட்டிக் கொண்டிருந்த ஸ்ரீநிவாசனை அதிசயமாகப் பார்த்தனர்.

குழந்தைகளைவிட அதிகம் குழம்பியது காயத்ரிதான்.

காயத்ரி ஒன்றும் பேசாது சோகத்துடன் படுக்கை அறையினுள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.

“டேய் ஸ்ரீநி வாழ்க்கை நம்மை எப்படி புரட்டிப் போட்டுவிட்டது பார்த்தியா?”

“பரவாயில்லைடா….காயத்ரிக்கு நீ ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்து என் மகன் ஸ்ரீராமனையும் உன் மகள் ஹரிணியையும் பார்த்துக்கொண்டு எவ்வளவு பொறுப்பா இருக்க? நீ உடனே நடராஜனுக்கு போன் பேசு. அவன் எனக்கு ஒரு நல்ல வேலை மும்பையில் ஏற்பாடு பண்ணுவான்.
நான் நாளைக்கு நைட்டு குஜராத் மெயிலில் மும்பை போகிறேன். நீங்க நல்லபடியா இருங்க”

ஸ்ரீநி உயிருடன் திரும்பிவிட்டான் என்பதை கேள்விப்பட்ட நடராஜன், மிகுந்த சந்தோஷத்துடன் உடனே அவனை மும்பை கிளம்பி வரச் சொன்னான்.

அன்று இரவு முழுவதும் தூங்காது நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

மறுநாள் திங்கட்கிழமை. காயத்ரி ‘ஒர்க் ப்ரம் ஹோம்’ என்று சொன்னதால் குழந்தைகளை ஸ்ரீநியும், ஜெயராமனும் ஸ்கூலில் விட்டுவிட்டு ஐ.ஐ.எம் சென்றனர். பரட்டைத்தலை, மீசை, தாடியுடன் ஒடிசலான ஸ்ரீநிவாசனை எவருக்கும் அடையாளம் தெரியவில்லை. அவன் நேராக விக்ரம்சாராபாய் லைப்ரரி சென்று அமர்ந்தான்.

மாலை நான்கு மணியளவில் திடீரென காயத்ரியிடமிருந்து ஒரு ஈ மெயில் ஜெயராமன் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.

என் உயிரானவருக்கு,
நம் வாழ்க்கையில் நாம் எவருமே தவறு செய்யவில்லை. நேர்மையாகத்தான் அனைவரும் நடந்து கொண்டோம். ஆனால் எனக்கு மட்டும் தண்டனை. ஆம்..டாக்டர் காயத்ரி என்று படிப்பில் ஜெயித்துக் காட்டிய நான் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன். ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள் சாத்தியப்படலாம். ஆனால் ஒரு பெண்ணுக்கு எப்படி இரண்டு கணவர்கள் இருக்க முடியும்? பெண்மை என்கிற இலக்கணமே அங்கு அடிபட்டுப் போய்விடுமே.

உங்களுக்குப் பிறந்த ஹரிணியும், அவருக்குப் பிறந்த ஸ்ரீராமும் என் குழந்தைகள். அதை நம் குழந்தைகளாக பாவித்து நம் மூவரும் புரிதலுடன் வாழ முடியும். ஆனால் எனக்கு எப்படி நீங்கள் இருவரும் கணவர்களாக…! இதற்கு ஒரே தீர்வு என் இறப்புதான் ஜெய்.

வஸ்தராபூரில் எங்கும் தூக்க மாத்திரை கிடைக்கவில்லை. எம்.ஜி.ரோடு சென்று வாங்கி வந்தேன். அதனால்தான் சற்று தாமதம். என் பிம்பங்கள் இரண்டையும் நீங்கள் இருவரும் நன்கு வளர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு. கண்ணை சுழட்டுகிறது…என்னை மிக நன்றாக அன்புடன் கவனித்துக்கொண்ட உங்களுக்கும், அவருக்கும் என் நமஸ்காரங்கள். விடை பெறுகிறேன். காயத்ரி

பதறியடித்துக்கொண்டு லைப்ரரி ஓடினான்.

ஸ்ரீநியை இழுத்துக்கொண்டு வீட்டிற்கு காரில் பறந்தான்.

அனால் அதற்குள் காயத்ரி கண்களை மூடி மீளாத தூக்கத்திற்குச் சென்றுவிட்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *