தீப்பூக்கும் வாகை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 9,356 
 

குமார் தின்று எரிந்த அந்த கொட்டை குப்பைத் தொட்டியில் விழுந்து சப்தமெழுப்பி ஓய்ந்தது. எச்சங்களை தனக்குள் எரிந்து கொண்டிருக்கும் என் வீட்டாரிடமும் சப்தமெழுப்பி, சப்தமெழுப்பி ஓய்ந்து போனதை நினைத்துக் கொண்டபடி சாப்பிட்டு முடிந்தவைகளை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தாள் தீபா. மேசை சுத்தமாகிக் கொண்டிருந்தது மீண்டும் அழுக்காகப் படவென்று மேல் வீட்டின் தளத்தில் நடந்து கொண்டிருந்த வேலைகள், கட்டிடம் பிரசவ வலிகளாய் சப்தமெழுப்பி கொண்டிருக்க, சில பேரால் எதையும் லட்சியம் செய்யாது என் மாமியை போல் தூங்க முடிவதை வியந்தபடி செங்களில் விழுந்த ஒவ்வொரு அடியும் , தட்டலும் அதிர்வலைகள் என்னுள் தோற்றுவித்துக் கொண்டிருக்க, பூச்சு வேலைகளின் தீவிரம்,எதையும் பூசி விட முடியாது அவளுள்ளும் உறைந்து கிடைந்த நிகழ்ச்சிகள் வந்து போயின.

கண் மூடிக் கிடந்த சூரியன்,மேகம் தன் கனத்த மனத்தையெல்லாம், துளிகளாக்கி புவியோடு பகிர்ந்து கொண்டிருக்க, காங்கிரீட் போடவெண்று வாசலில் நின்ற கூலி ஆட்கள் குளிருக்கும், இன்று சம்பளமில்லாது போகக் கூடுமோ என்கிற பயத்துளுள்ளும் நின்று கொண்டிருக்க வந்திருந்த ஆட்களில் அவள் மட்டும் விடைத்து க் கொண்டு கற்பாறைகளுக்கு நடுவே வேர் விட்டிருந்த ஆல் செடியாய் தலையுலுக்கி க் கொண்டு நின்றாள்.

” என்ன செய்ய? தண்ணி செமக்க வேண்டியதில்லை என்று சந்தோசப்படவா? சித்திக்காரி சம்பளப் பணமெங்கேன்னு கேட்பான்னு வருத்தப் படவா? ….சே இன்னிக்கு சம்பாத்யத்தை மழை வந்து அடிச்சுட்டு போகுதே,”

சலித்தபடி நின்றிருந்த அவள் தோற்றம் தந்தது சந்தோசமா இல்லை ஏக்கமா? விதிர்த்து விறைத்து நிற்கும் அவளை வியந்து, பற்றிக் கொள்ளும் சந்தோசம்,பணிந்து பணிந்து பயந்து , நயந்து பேசிக் கடக்கும் எனக்கான ஏக்கமும்

ஆக மொத்தத்தில் ரெண்டு பேரும் ஒரே இடத்துல முளையடிச்சு வைச்ச கன்னுக் குட்டிதானோ சந்தோசம் கரைந்து போக நடந்து கொண்டிருந்த வேளையில் என்றல்லாது அவள் மேல் கவனம் பயணிக்க ஆரம்பித்திருந்தது.

தூரல் விட்டிருக்க வந்திருந்த வேலையாட்களில் இவள் ஒருத்திதான் பெண் என்றாலும் பெண் என்பதை மறந்து, மறுத்து நின்று கொண்டிருந்தாள். கைகளில் உறையிட்டு சிமெண்ட் கலவைத் தட்டுகள் காற்று வேகத்தில் பறக்க, பிடித்து திரும்ப அடுத்த ஆள் கை பார்த்தெறிந்து வேகத்திற்கு ஈடு கொடுக்கவென்று காலகட்டி நின்றிருந்தாள்…

அன்றொரு நாள் அடுப்படி வேலையில் மும்முரமாக நானிருந்த நேரம்…எட்டி பாத்திரம் சாமான் எடுக்கவும்….அடுப்பு வேலைகளை துரிதமாக பார்க்கவும் என்று காலகட்டி நின்றிருந்த போது குமார் வந்து என் காலுக்குள் தன் காலால் தட்டி விட்டு ” பொம்பளை நிக்கிற லட்சணத்தை பாரு” என்று விரட்டியதும் தடுமாறி , கொதித்து கொண்டிருந்த எண்ணைக்குள் விழப்பார்த்து சுதாரித்து கொண்டதும் கண்ணுக்குள் வந்து போக தூத்தெறி” என்ன ஆம்பி¨ளைங்க நீங்க” எறிந்த தட்டுகளோடு தெறித்து விழுந்த அவளது வார்த்தைகள்….. என் மனதுக்குள் ஓடிய நிகழ்வுக்கா பதில் சொல்கிறாள்..

“ம்ம் …ம்ம் வரிசை பின்னாடி போகட்டும்”, கூவிய ஆள் அவளை குறிப்பாகக் காட்டி

“ஏம்மா முனிமா பின்னாடி போ”, என்றதும், தொடத் தொட சிணுங்கும் செடிகளைப் பார்த்ததுண்டு, இவளோ சீறும் பாம்பாக, ” பின்னால வைப்பிரேட்டர் இருக்கிறது தெரியலை அது கிட்ட நிக்கிறதும் உங்கிட்ட நிக்கிறதும் ஒன்னு, அதுவும் சேலையை உருவிப்பொடும்….போய்யா நகர முடியாதுய்யா, ” ஒழுங்கா ஈஸ்வரின்னு கூப்பிடு , பாத்துக்க” அவள் அதட்டலில் வீழ்ந்து கொண்டிருந்த சாரல் மூர்ச்சித்து நின்று, இடியோசைக்கு பயப்படாத நானா இவளோசைக்கு பயந்தேனென சுதாரித்து மீண்டும் தூறத் துவங்கியது.

எலும்புக்கூடாய் இருந்த தளம் மெல்ல மறைத்து முழுதாக்கும் பிரம்மாவாய் இருந்தனர் ஆட்கள்.

கலவை வரும் வேகம் குறைய,

” யோவ் வேகமா அனுப்புங்கய்யா….சும்மா நின்னா கூதலடிக்குது ….புகையிலையை குதப்பிய வாயுடன் பேசிக்கொண்டேயிருந்தாள் ஏதாவது. அவளின் முரட்டு முகம் தந்த எரிச்சல் நேரம் போகப் போக எனையறியாது மனதில் ஏறி உட்கார்ந்து கொண்டது ஆச்சர்யமே.

சரிவான கூரை பிடிமானமில்லாதிருந்ததை விட ஒற்றைக் கால் பலத்தில் நின்று வேலை செய்ய வேண்டிய இடம் .அதோடு கலவையும் வாங்கி கடத்தணும். நான் மாட்டேன், நீ மாட்டேன்னு போட்டி

“சரிதான் தள்ளுங்க ஆம்பிள்ளைகளா, நான் நிக்றேன்”,

தள்ளி விடாத குறையாக முன்னேறிச்சென்று நின்றாள்.

“தங்கச்சி விழுந்திடப் போற, பிறகு தாங்கிப் பிடிக்க நாந்தேன் வரணும்”, எகத்தாளமாய்

ஒரு பதில் தன்னால் இயலாததை அவள் செய்துவிட்டாளே என்று.

”சரிடா அண்ணா ..எறிந்த தட்டுடன் எறிந்த அந்த வார்த்தைகள்.

” அப்படித்தான் போன வாரம் உந் தங்கச்சி விழுந்திட்டா நாந்தான் பிடிச்சு தூக்கி விட்டேன்”.

சிரிப்பில் சில்மிசம் தெரிந்தது. தவிர்க்க எண்ணி என் பார்வை அங்கிருந்த வேப்ப மரத்தில் விழுக, காத்துக்கு மரம் அசையுதா, மரம் அசையிறனால காத்து அங்கு தோன்றியதா குழப்பமாகத்தான் இருந்தது……..

“அப்படியா அண்ணா யாரடா அவ என் சக்களத்தி என எறிந்த தட்டோடு அவனையும் எறிந்து இறங்கி வந்தாள்.

சூரியன் மெல்ல மறைய, அவளும் கூரையை விட்டு இறங்கி வர சரியாக இருந்தது.

கால் கை கழுவ நின்ற கூட்டத்திலிருந்து தனித்து நின்றிருந்தாள்.

“என் சித்திக்காரி என்ன அழகா துவைச்சு கொடுத்த சேலை இப்படி அழுக்கா

போயிடுச்சே.யாரடி இது?” ன்னு கேட்கும். தானாய் பேசிக் கொண்டு சென்றவளை என் கேள்வி நிறுத்த

” உன் பேர் என்ன ஈஸ்வரியா, முனியம்மாவா?”

“முனீஸ்வரிக்கா, ஈஸ்வரின்னு கூப்பிடுவாங்க”

“அப்படியா, கழுத்திலே காதுல ஏன் ஒன்னையும் காணோம்?”

அதுவரை எரித்துக் கொண்டிருந்து எட்டா உயரத்தில் பறந்து கொண்டிருந்த அவள் கண்களும் செய்கையும் தரை இறங்குவதை சகிக்க முடியா உணர்வுடன் நான் உணர்ந்து கொண்டிருக்க,

வீட்டுக்காரர் இல்லைக்கா” அதிர்ந்த என் மனது நிலைக்குவர நேரம் பிடித்தது.

“உனக்கு வயது என்ன?”

“இருவத்தஞ்சு”

“என்ன்னாச்சு உன் வீட்டுக் காரருக்கு? குழந்தைகள்?” கேள்வியை முடிக்காது நிற்க அவள் தொடர்ந்தாள்.

“பொண்ணு ஒன்னு இருக்குக்கா வீட்டுக்காரரை போலீஸ் பிடிச்சுட்டு போயிட்டாங்க..”..

“ஏன்?”

“கொலை பண்ண முயற்சி பண்ணினதா, செயில்ல இருக்குக்கா”

“ஏன்? நீ போய் அதைப் பார்க்கலையா?”

“சீ……அதையாரு போய்ப் பார்ப்பா..எனைய வேண்டாமுண்ன்னு 40 பவுனு ரொக்கம் தரான்னு அவ அத்தை மகளை இழுத்துட்டு ஓடிப்போச்சே… அதை ஏன் நான் போய் பாக்கனும்?

“சும்மாவா விட்டே?”. விடுகிற ஆளாய் அவளில்லையே என்று என் மனதில் பட கேள்வி வந்து விட்டது.

“ஓடுன ஆள என்ன செய்ய சொல்லுறீங்க? கால்லேயா விழுக….’

அவளுக்குள் மௌனமாய் ஒன்று கொதித்துக் கொண்டிருந்ததை ஒரு குரூர முகமூடி போட்டு , முகமூடி ரணத்தில் அவள் வலி மறைக்கப் பார்த்திருந்தாள். ஆனால் இங்கு எல்லோரும்

அப்படித்தனோ? என்னையும் சேர்த்து. ஓடும் நினைவுகளோடு,வலியை வலியால்

மறைப்பதா?…புரியாது பார்க்கிறேன். மனதுக்குள் விழுந்த அழுத்தங்களில்

கணங்களில் மூழ்கிய மனது வார்த்தையை வெளியெ விடாது தகர்க்க..

“பிறகு ஏன் ஒண்ணும் போடாம இருக்க?”

“போட்டா சித்தி வையும் எவன மயக்கன்னு எதுக்கு இந்த பல்லு போட்டு பேசுற ஜோலி? ன்னு விட்டுட்டேன்.”

“யாருக்காகவும் எதையும் ஏன் விடனும்? உனக்கு பிடிச்சா போட்டுக்கிட வேண்டியதுதானே?”

என் கேள்வி எனையே பார்த்து சிரித்தது… நான் என் நாத்தனாருக்கு போடக்
கொடுக்காததுனால என் நகை அடகுக் கடையில் வைக்கப் பட்டு இன்னும் கேட்க
முடியாமல்…..

ஒரு வித குற்றவுணர்வு அழுத்த அவள் முகம் பார்த்தேன் பதிலுக்காக
அவள் வெறுமனே உச்சு கொட்ட

“ஆமா சித்தியா யாரது?”

“எங்கப்பா புதுசா ரெண்டாம் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கு “…

” அது சரி உனக்கு கல்யாணம் பண்ணும் நினைப்பு இல்லையாக்கும் உங்கப்பாவிற்கு/”

“அப்பாவை விடுங்கக்கா…எவனுக்கு அந்த நினைப்பு வரும்?…எல்லாம் பச்சிலையா

தலைவலிக்கு கசக்கித் தடவி போட்டு போற ஆட்கள்கா …அவன் வலி தீர்ந்தவுடன் நாம உதிர்ந்திடனும்ன்னு நினைப்பான்களே ,ஒழிய, யாரு நம்ம வலிக்கு மருந்தா இருக்கப் போறா?…..பிள்ளைகளோட எவன் கட்டிக்கிறேங்கறான்

பிறகெதுக்கு இப்படி அகராதியா பேசுறேன்னு நினைக்கிறீங்க…அன்பாவும் ஆசையாவும் பேச நினைப்பு இருக்குதான்.எவன் மனுசியாப் பாக்கிறான் .எல்லாம் பொம்பிளையாய் பாக்குற கூட்டம், கொஞ்சம் அசந்தா ரோட்டோரத்தில மல்லாத்திப்பொடுவான்க..போகச்

சொல்லுங்க”
மனசுக்குள் கேல்வி எழுந்தது.. ..உண்மை சொல் கௌதமா? நீதான் கல்லாய் போக

சாபமிட்டாயா , இல்லை, இவளைப் போல அகலிகையும் தானே கல்லாகினாளா?..

நிகழ்கால நிஜம் தோளைத் தொட விழித்தெழுந்தேன்

மழை பார்த்து காத்துக் கிடந்த செம்மண் வரிகளாய் அவள் ரணப்பட்டு கிடப்பது தெரிந்தது…
என்ன செய்ய ?ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு படியிலிருந்து அடுத்த படிக்கு போக போராடிக்கிட்டு இருக்கோம். படிகள் இருந்தும் அடுத்த படி ஏறுவதற்கு சண்டையடிக்க வேண்டியிருக்கு…

.மெல்ல அவள் மனது சிந்தனைக்குள் ஆழ…தன் பேரில் இருக்கும் பணத்தை கேட்டு, பிள்ளைகள் பேரில் டெபாசிட் செய்ததுக்காக இன்னும் அம்மா வீடு அனுப்பாது இருப்பதைத் தண்டனையாய் தந்திருக்கும் தன் வீட்டாள்களின் நினைப்பு வர……முகமூடிகளின் உணர்வுகள்தான் வேறயே ஒழிய…..மொத்தத்தில் எல்லாரும் ஒழிந்து கொண்டிருப்பது வெளிச்சமாக…அவளுக்குள்ளும் ரணங்கள்

முகமூடி பேசியது……

“சொல்ல முடியாது ஈஸ்வரி உன் மனசுக்கு திருப்தியா யாராவது தென்பட்டா தயங்காத…..அதுக்காக துணையில்லேன்னு மருகவும் செய்யாத. கழுத்து காதுல
போட்டுக்க…உனக்கான வாழ்க்கையை நீயே அமைச்சுக்கிட்டேன்னு சந்தோசமா இரு. அடிக்கடி எனை வந்து பாரு

எனக்கு அதிக எதிர்பார்ப்பைத் தந்து கொண்டிருக்கும் வாசலில் நின்ற வாகை மரம் தீப்பற்றி அது பூப்பூக்க ஆசைப்பட்டு கன்று வாங்கி வைத்தேன். ஆண்டுகள் பலவாகியும்
இன்னமும் பூக்க மனமில்லாது, முதிர்ந்து பழுத்து கொப்புகளில் தாளாது காற்றுக்கு ஊசலாடி தரை பூராவும் விரிப்பாகிக் கிடக்க , தனித்து நின்ற கொப்புகளில் புதிய தளிர்கள்
நம்பிக்கையாய் வந்திருந்ததை கவனித்த மாலைப் பொழுதில் மீண்டும் வந்தாள் ஈஸ்வரி. புன்னகையோடு கொஞ்சம் பொன்னகையும் தாங்கியிருந்தாள்…

“என்ன ஈஸ்வரி சித்தி வையலையா……?”

“ஒரு மாதிரி பார்த்துச்சு. ப்ரெண்ட் வீட்டுக்குபோறேன்னு கடுப்பாக்கி விட்டு
வந்திருக்கிறேன்…உங்ககிட்ட காமிக்கனும்ன்னு.”

” சந்தோசம் ஈஸ்வரி” வேறு என்ன பேசலாம் என்று வார்த்தைகளைத் தேடியபடி வாகை செந்தணலாய் தீப்பற்றி பூப்பூக்கும் நாளும் வரும் என்று உதிர்ந்தும் , துளிர்த்தும் இருக்கும் வாகை மரத்தைப் பார்த்தபடி …..பரணிலிருந்து என் பெட்டி எடுத்தேன் ..அம்மாவை பார்த்து வரவென.

எங்கே என்பதாய் விழியுயர்த்திய குமாருக்கு

“அத்தை வந்தா சொல்லிடுங்க,அம்மா வீட்டுக்கு போயிட்டு வருகிறேன்னு.”

– ஆகஸ்ட் 2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *